ஐந்து நெருப்பு[ சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள் வந்த வழியைச் சொல்வதில்லை. ஆனால் தீரவிசாரித்துப் பார்த்தால் மனம் கொந்தளிக்கவைக்கும் பலவிஷயங்கள் தெரியவரும். இந்தக் கதையில் வருவதுபோல மூன்றுபக்கம் நெருப்பு. ஆகவே முள்ளில் குதிக்கிறார்கள்
மிக மிக யதார்த்தமான கதை. ஆனால் கதை வாசித்து பலநாட்களுக்கு பிறகு முள்மேல் குதித்து உடம்பெல்லாம் முள்ளாகக் கிடக்கும் முத்துவின் காட்சி ஒரு படிமம் போல மனதில் நின்றுவிட்டது. நாம் இப்படி நெருப்புக்குப் பயந்து முள்ளில் குதிப்பவர்களைத்தான் அடிக்கடி கொடுங்குற்றவாளிகள் கொலைகாரர்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
நான் குற்றவாளிகளைப் பார்த்தவரை இந்த ஐந்துநெருப்பு சூழல் அவர்களின் ஏழு எட்டு வயதுக்குள் வந்துவிடுகிறது. மேலும் இருபது ஆண்டுகள் கழித்துதான் அவர்களை நாம் பார்க்கிறோம். அப்போது அவர்கள் திரும்பமுடியாத இடம் வரை வந்திருப்பார்கள். ஆகவேதான் கிரிமினல் மனம்திரும்பமாட்டார்கள் என்று சொல்கிறோம்
மாரிச்செல்வம்
***
அன்பார்ந்த ஜெ. வணக்கம் நலம்தானே?
ஐந்து நெருப்பு படித்தேன். வாழ்வின் அவலத்தை உரக்கச்சொல்லும் உண்மைக்கதை. பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது முத்துவின் வாழ்வில் நடக்கிறது.
இங்கு வாழஇயலாச் சூழலும் ,முள்காட்டுக்காரனின் தொல்லையும் முத்துவைத் திடீர் முடிவெடுக்க வைக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் பணக்கட்டையும் துப்பாக்கியையும் அவன் எடுத்து வைப்பது.
வறுமை அவனை எப்படியாவது வாழவேண்டும் என்று போ போ என்று துரத்த பம்பாய் செல்ல எங்குமே வெளியில் அதிகமாக வராதவன்முடிவெடுக்கிறான்.
தற்கொலை செய்து கொண்டவரின் வாழ்வு, முத்துவின் அம்மாவின் பழைய கதை இனி நடக்க இருக்கும் முத்துவின் பம்பாய் வாழ்வு எல்லாமே ஒரு நாவல் எழுதும் காரணிகளாக இருக்கின்றன.
கதை படித்துவரும்போதே மனம்கனத்து விடுகிறது. அவ்வப்போது அதை மாற்றவே,”போன சென்மத்துல இவ கோளியாக்கும்” ” கறி வைக்க வச்ச கோளி” என்ற வரிகள் உதவுகின்றன.
அச்சூழலிலும் மாம்பழக்கலர் சுடிதார் என்னும் கோமதியின் வார்த்தைகள் அவளின் வெகுளியைக் காட்டுகின்றன.
எந்தச் சூழலிலும் வறுமைக்கோட்டிலிருப்போர் வாழ ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் மற்றவரைப் பற்றிக் கவலையின்றித் தன் வாழ்வை நடத்திச் செல்வர் என்பதுதான் தூக்கில் தொங்கியவர் பற்றிக் கவலைப் படாமல் முத்து பம்பாய்ப் பயணத்திற்குத் திட்டமிடுவதைக் காட்டுகிறது.
கதையில் மிகை என்பதே இல்லை.அதுவே கதையின் மீது நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
வளவ. துரையன்
***
நஞ்சு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நஞ்சு ஒரு கூர்மையான கதை. மனதின் நஞ்சு எப்படி வெளிப்படுகிறது என்பது. ஒரு உவமை சொல்லத் தோன்றுகிறது. என் சொந்த ஊர் கொடைக்கானல் பக்கம். அங்கே ஒரு பூமுள் உண்டு அது எதிராக கையை வைத்தால் உள்ளே போய்விடும். எடுக்கவே முடியாது. ஏனென்றால் அத்தனை சிறியது. ஆனால் செப்டிக் ஆகும். கட்டியாகி சீழாகி வெளியேவரும். அது உடைமுள்ளை விடகொடியது
இந்தக்கதையில் ஆண்நஞ்சும் பெண் நஞ்சும் வருகிறது. ஆண்நஞ்சு உடைமுள் மாதிரி. பெண் நஞ்சு என்பது பூமுள்மாதிரி, அந்த வேறுபாடு கதை முழுக்க தெளிவாகிக்கொண்டே வருகிறது
கே.பழனிராஜ்
***
வணக்கம் ஜெ
நஞ்சு சிறுகதையை வாசித்தேன். கண்டவுடன் அவளைக் கொல்லவேண்டும் என்ற வரியுடன் செல்கிறவன், அவளைப் பார்த்தவுடன் மனதை மாற்றிக் கொள்கிறான். நஞ்சின் முதற்துளி விழுங்கியப்பின் அதன் மீதான கசப்பு குறைந்துவிடும் தருணம். அவனும் அவளும் பல்லாயிரம் முறை கற்பனை செய்து பார்த்திருந்த தருணம்.
அரவின் குமார்
மலேசியா
***