போழ்வு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
போழ்வு சிறுகதையை ஒரு குறுநாவலாகவே வாசிக்கவேண்டும். அது ஓர் உச்சத்தில் மையம் கொள்கிறது. அது வேலுத்தம்பியின் ஆளுமைப்பிளவு. ஆனால் கதையில் உள்ள சரடுகள் பல. அவர் ராஜா கேசவதாஸின் ஆளுமையில் மயங்கியவர், அவரைப்போலவே ஆக விரும்புபவர். ஆனால் அவர் அவரை தாண்டிச்செல்கிறார். ராஜா கேசவதாஸை கொல்வதுதான் அவர் மருமகனைக் கொல்வது
திருவிதாங்கூர் சுரண்டப்படுவதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். அவரே திருவிதாங்கூரைச் சுரண்ட ஆரம்பிக்கிறார். மெக்காலேயை பயன்படுத்த நினைத்தவர் மெக்காலேயால் பயன்படுத்தப்படுகிறார். அது இன்னொரு சரடு. அவருடைய உருவாக்கம் முதல் அந்த பிளவுக்கணம் வரையிலான வரலாற்றின் நுட்பங்கள் கதையில் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய பார்வையை கொண்டுவர ஐரோப்பிய கண்களை கொண்டுவந்திருக்கிறீர்கள்
ராஜசேகர்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
போழ்வு கதை ஒரு மாபெரும் வீரனின் வாழ்க்கை சரித்திரத்தை அருகே பார்த்த திருப்தியை அளித்தது. அரசருக்குரிய உடை அவருக்கு கடைசிவரை பொருந்தவில்லை. இரு முஸ்லீம் தையல் கலைஞர்களும் அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாய் மனதிற்குள் உணர்கிறார்கள். மாபெரும் வீரர்கள், அப்படி வீரர்கள் ஆனதில் இருந்தே பயந்துகொண்டு தான் இருப்பார்கள் போல. யானைகள் உடலை கிழிக்கும் போது தளவாய் நடுங்கி கொண்டு இருக்கிறார்.
கேரளாவில் தமிழகத்தை ஒப்பு நோக்கும் போது தலைவர்களுக்கான சிலைகள் மிக குறைவு. வேலுத்தம்பி தளவாயின் கம்பீரமான சிலை திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்திற்கு எதிரில் உள்ளது (அந்த இடத்திற்கு பெயரே “STATUE தான்). தங்களுடைய எல்லா கதைகளுமே கடைசியில் மனித அறத்தையே போதிக்கின்றன.
மிகுந்த வணக்கத்துடன்
பா. சரவணகுமார்
நாகர்கோயில்
***
சீட்டு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பொதுவாக மனதின் விடுதலையை நோக்கியே சென்றுகொண்டிருந்த கதைகள் இப்போது மறுபக்கத்தையும் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. போழ்வு, நஞ்சு போன்றவை அப்படிப்பட்ட கதைகள். சீட்டு அதில் இன்னொரு உச்சம். அற்பத்தனத்தை காட்டும் கதை.
சீட்டு என்ற தலைப்பு இன்னொரு அர்த்தத்தை அளிக்கிறது. ஆளுக்கொரு சீட்டை இறக்குகிறார்கள். ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் ஆண்குறிதான் அழகப்பனின் சீட்டு. அவன் அதை வைத்துத்தான் அவளை தனக்கு அடிமையாக ஆக்குகிறான். காதலிக்கும்போது அவள் இன்னொருவனிடம் கொஞ்சுவதைக் கண்டு பதற்றம். ஆனால் உறவுக்குப்பின் அவள் மனைவி. இனி அவளைச் சுரண்டலாம். அவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து பிறரை சுரண்டலாம்
அந்த அம்மா இன்னொரு சீட்டை இறக்கிக்கொண்டே இருக்கிறாள். வீட்டுக்கு வந்து மகனைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்கிறது என்று அவளுக்கு தெரிவது ஒரு நுட்பமான இடம்
எம்.ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெ,
சீட்டு, பெண்-ஆண் உறவுகளின் சமரசங்களை உள்ளடக்கிய கதை. மனிதனுக்கு உணவும், உறக்கமும் நன்றாக கிடைத்த பின் அவன்/அவள் ஏங்குவது இந்த உறவுக்காகத்தான். இச்சிறுகதை இரு அம்சங்களை மேலே தொட்டு அதன் ஊடே ஒரு பெரிய கலந்துரையாடலை தன்னுள் நிகழ்த்த இட்டுச் செல்கிறது.
உமையாளுக்கும் அழகப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அலுவலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அதை தாங்களே பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்கும் அது மனதிலே இருந்தது. கிட்டத்தட்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது நிச்சயம். இந்த மாத சீட்டுப் பணத்தை உமையாள் எடுக்க வேண்டும் என்று நினைத்தாள். அழகப்பனோ நாராயணன் அதை எடுக்க போவதாக சொன்னான். ஒருவேளை சீட்டு ஏலத்தில், அவர் ரொம்ப கீழே இறங்கி கேட்டால் உமையாளுக்கு நஷ்டம்.
அழகப்பன் தன்னுடைய உயரதிகாரியை சந்தித்துவிட்டு வரும் வழியில் உமையாளும், நாராயணனும் சிறிது பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஒரு விதமான மனச்சோர்வும், ஒவ்வாமையும் அடைகிறான். அது அவனை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு உலுக்கு உலுக்கியது. அவன் மனம் அந்த காட்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. உமையாள் அவனைத்தேடி அவன் வீட்டு வந்ததும், அவளுடன் அவன் உடல் ரீதியாக மிகவும் நெருக்கம் அடைந்த பின்னரே அவனால் சற்று நிம்மதி அடைய முடிந்தது.
சீட்டு பணம் தன் அண்ணண் மனைவியின் அப்பாவின் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்டதால் தான் இந்த மாதமே எடுக்க நினைத்தாள். ஆனால் அவள் அம்மா, தன மருமகளின் சகோதரர்கள் தான் அவர்கள் அப்பாவுக்கு செலவு செய்ய வேண்டும், நாம் எதற்கு செல்வு செய்யணும் என்று சொன்னனதால், அந்த சீட்டு பணத்தை ராமச்சந்திரன் எடுப்பதாக முடிவாகியது. அழகப்பனின் குடும்பத்திற்கு வேண்டியப்பட்டவர் ஒருவருக்கு அவசரமாக பணம் தேவைபட்டதால் அவனின் அம்மா அதை உமையாளிடம் கேட்கச் சொல்லி அவனிடம் சொன்னாள். அவன் அதை உமையாளிடம் கேட்கும் போது, அவள் ராமச்சந்திரனிடம் சொல்லி விட்டதாக சொன்னதரற்கு, அவன் அவளை அவனிடம் ‘நைசாக’ பேசி சீட்டை தனக்கு விட்டுத்தரும்படி சொல்லச் சொன்னான்.
இங்கே இரு நுட்பமான ஆழமான மனித உறவுகளின் சமரசங்களை காண முடிகிறது. அவள் இன்னொருவரிடம் குழைந்து பேசுவதனால் மிகவும் ஒவ்வாமை கொண்ட அவன், இறுதியில் அவனே அவளிடம் அதை செய்யச் சொல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் மனித மனம் எல்லா தருணங்களிலும் வெவ்வேறு வகையாக செயல்படுவதை காணலாம். அவன் முதலில் மனம் சோர்ந்தது, அவன் அவள் மேல் கொண்ட ஒரு வகை obsession என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கு அவள் தனக்கு கிடைக்காமலே போய் விடுவாளோ என்ற பயமும், தன்னால் அவளை கவரவே முடியாதோ என்ற அவநம்பிக்கையினாலே அவனால் நிம்மதி கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உடலால் மிகவும் நெருங்கியபின் அவனுக்கு அது ஒரு மிக பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. அவன் அவளை அவன் ஆட்கொள்ளும் ஒரு பொருளாகவே அவனால் உணர முடிந்தது.
எல்லா உறவுகளுக்கும் ஒரு சாமரம் இங்கே தேவை படுகிறது. முக்கியமாக ஆண் – பெண் உறவிற்கு. அவள் தனக்கு வேண்டிய காரியத்தை நைசாக சாதித்து கொள்ள நினைப்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என அவளை நினைக்க வைத்தது ஒரு சமூகத்தின் செயலே. அது மட்டும் தான் வழி என்று அவள் நினைப்பதும் ஒரு சமூக அவலச் சித்திரமே. அந்த சமரசத்தோடே நாம் வாழ கற்றுக் கொண்டு விடுகிறோம். நாட்கள் செல்ல செல்ல அது ஒரு சமரசம் இல்லை, அது தான் வாழ்க்கை முறை என்றும் நமக்கு பழகி விடுகிறது.
தன் அப்பாவிற்கு மகன் தான் செலவு செய்யணும், மகள் வீட்டார் செலவு செய்ய கூடாது என்று சொல்லும் ஒரு அம்மா. தன் குடும்ப கஷடத்துக்காக மருமகளிடம் பணம் கேட்டு பாரு என்று இன்னொரு அம்மா. இவர்கள் இருவருக்கும் இடையில் தான் இந்த சமூகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை வெறும் குடும்பச் சிக்கலாக இல்லாமல் ஒரு சமூக சிக்கலாகவே எனக்குப் படுகிறது.
சற்றே யோசித்தால், இந்தக் குடும்ப அமைப்பில் தான் நாம் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு வேலை இந்த அமைப்பு தான் மனிதன் தானே அமைத்துக் கொண்ட ஒரு உச்ச நிலையான அமைப்பு. இதில் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள் இருந்தாலும் இந்த குடும்ப சமரசத்தில் தான் மனிதன் ஒரு வகையாக நிம்மதியாக வாழ முடிகிறதோ!
அன்புடன்,
பிரவின்
***