நற்றுணை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நற்றுணை கதையைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது நீங்களே எழுதிய ஒரு கட்டுரை. அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. அது மணிமேகலை காவியத்தைப் பற்றியது. அதில் மணிமேகலை ஒரு தாசி என்பதனால் உதயகுமாரன் என்பவன் அவளை தூக்கி வரச்சொல்கிறான். அவனே தேடி வருகிறான். அவள் ஒரு பளிங்கு அறைக்குள் செறு ஒளிந்துகொள்கிறாள். அவளை தேடிவரும் உதயகுமாரன் அவளை கண்டுபிடிக்கமுடியாமல் செல்கிறான்
அவள் வெளிவந்து தன் தோழியிடம் அழுகிறாள். நான் இத்தனை தவம் செய்தும்கூட என்னை ஒரு தாசி என்று எண்ணி தூக்கிச்செல்ல வந்துவிட்டானே என்கிறாள். உடனே அங்கே மணிமேகலா என்ற தெய்வம் தோன்றுகிறது அந்தத் தெய்வம் மணிமேகலையை தூக்கி மணிமேகலந்தீவுக்கு கொண்டுசெல்கிறது. அங்கிருந்து அவள் அமுதசுரபியுடன் திரும்பி ஊருக்கு வருகிறாள். ஊருக்கெல்லாம் உணவு போடுகிறாள்
அந்த மணிமேகலா தெய்வம் எங்கிருந்து வந்தது? அது அவள் மனசுக்குள் இருந்தே வந்தது. அது அவளுக்கு ஆற்றலை அளிக்கிறது. அவளை வெற்றிகொள்ள வைக்கிறது. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு காட்சியளித்த அதே விஷயத்தையே நற்றுணை கதையிலும் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த தரிசனம் நம் மரபிலே இருந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது
ஆர். குமார் முருகேசன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
முதற்கண் நன்றிகலந்த வணக்கங்கள். இதுதான் எனது முதல் கடிதம்.தங்களின் கதைகளை தொடர்ச்சியாக இல்லாவிடினும் ,இயலும்போதெல்லாம் வாசித்து வருபவள் நான். தங்களின் நற்றுணை வசித்து பிரமித்து போனேன்.
ஆம் எனக்கும் இஷ்டதேவதைகள் மீது நம்பிக்கை உண்டு. அயல்நாட்டில் வசித்தபோதிலும் எனது குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்குபவள் .அவள்தான் அம்மிணி தங்கச்சிக்கு கேசினி நற்றுணையாக அமைந்தது போல எல்லாவற்றிலும் எனக்கும் துணையாக இருந்து காக்கிறாள், வெற்றி பெற வைக்கிறாள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நான் வெளி காட்டிக்கொள்வதில்லை.அந்த பெண்தெய்வத்தை எங்கள் வீட்டிற்குள் இருப்பது போலவே நான் உணர்ந்த சமயங்களும் உண்டுஎல்லா காலங்களில் மனசுக்குள் தோழி போல் அவளோடு பேசிக்கொள்வேன்.
நற்றுணை படித்ததும் எனக்கு மனதுக்கு அணுக்கமான ஒருவராய் அம்மணி தங்கச்சியையும் கேசினியையும் உணர்ந்தேன்.அதனாலே இந்த கடிதம் எழுத விழைந்தேன்.வரலாற்று செய்திகளோடு இறை நம்பிக்கையால் கல்வியை கற்று புது வழியை பெண் தலைமுறைக்கே உருவாக்கிய அம்மிணி தங்கச்சிகள் இன்றைய தலைமுறை பெண்களால் கட்டாயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.நன்றி அய்யா
இளவரசி இளங்கோவன்
கனடா
***
கூடு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
கூடு கதை வழக்கம்போல meticulas details களுடன் எழுதப்பட்ட கதை. இந்த details எதற்காக என்றால் கதையின் மையமாக இருப்பது ஒரு spritual fanatacy என்பதனால்தான். இத்தனை யதார்த்தமான செய்திகள், நுட்பமான நில வர்ணனைகளுடன் கதையை படிக்கையில் அந்த யதார்த்ததுக்குள் செல்லமுடிகிறது. ஆனால் கதை இயல்பாக கற்பனைக்குள் செல்கிறது. அந்த கடைசி மொனாஸ்ட்ரி மட்டும் கற்பனை என்று உணரவே முடியவில்லை. அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கிவிடுகிறது.
பௌத்தம் மீண்டகதை, அதன் பல்வேறு அடுக்குகள், திபெத் பௌத்தம் என்று சென்றுகொண்டே இருக்கும் கதை ஒரு அடிப்படையான தரிசனத்தை முன்வைக்கிறது. நாம் என்பது எவ்வளவு பெரியது.அந்த சின்ன குகையிலிருந்து கிளம்பி அந்த மாபெரும் மடாலயமே ஆகி அந்த மடாலயமும் போதாமல் எழுந்து பிறகு சுருங்கிச்சுருங்கி சிறிதாகி மீண்டும் அங்கேயே செல்லும் அந்த வாழ்க்கை ஒரு மகத்தான புராணம் போல இருக்கிறது
மூன்றுமுறை தன்னை திறந்து வெளிவராதவனுக்கு முக்தி இல்லை என்ற நோர்பு டிரக்பாவின் தரிசனத்தின் காட்சிவடிவம் அந்தக் கதை. அவருடைய பயணமும் இருவகை. எழுந்து பெருகுவது. சுருங்கி திரும்புவது. அதிலிருந்து மீண்டும் எழுந்து விஸ்வரூபம் எடுப்பது.
கூடு என்றால் தமிழில் உடல்தான். உடல் உயிரின் ஒரு உலகவடிவம் என்பார்கள். கூடவே கூடு என்பது உயிர் கூடியிருக்கும் இடம். உயிர் அடைபட்டிருக்கும் இடம். அந்த சின்னஞ்சிறு பையனில் எழுந்தது எவ்வளவு பெரிய ஆற்றல். அவனால் உலகையே வெல்லமுடியும். அவ்வளவுபெரிய ஆற்றலே அந்த மடாலயம். ஆனால் அதை அப்படியே உலகுக்கு விட்டுவிட்டு உடல் ஒடுங்கி மறைகிறது. உள்ளிருந்து ஆற்றல் மட்டும் விஸ்வரூபம் கொள்கிறது.
ஜெயக்குமார்
***
அன்புள்ள கதாசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று பிரம்ம முகூர்த்தத்தில் “கூடு” கதையை படித்தேன். வாசிப்பு துவங்கும்போது ஊட்டி அருகில் ஃபேண் ஹில் என நினைத்துக்கொண்டேன்.முக்தானந்தாவின் 28 ஆண்டுகால கதை சொல்லல் நீண்டு தனது அலைச்சல், தேடுதல் தொடர புத்த மத வரலாறே கண்முன்னால் விரிந்தது .
இந்திய பெருநில மண்ணில் கதைக்களம் பரந்து விரிந்து சிம்லா, லடாக்… அடடா… கதை தரும் அனுபூதி என்பது இந்த பதிவிலும் உணர்ந்தேன் .காரணம் உண்டு . இயக்க நடவடிக்கை தொடர்பாக ஹரியானா சென்றபோது சண்டிகரிலிருந்து கல்கா சென்று பேருந்தில் சிம்லா கண்டதும் யாக் மீது ஏறியதும் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இமய மலையொட்டிய எனது அனுபவத்தை உணர இக்கதை உதவியது. சிம்லாவில் இருந்து காணும் இமயமலை வெள்ளி பரப்பின் மின்னல் கண்களை அதிசயிக்க செய்கிறது.முக்தானந்தாவின் வெளிப் பயணம் வாசகரின் அகப்பயணமே என அனுபவிக்க செய்கிறது .
என் சக தோழனின் மகன் ராணுவ வீரர் வேலை நிமித்தமாக லடாக்கிலிருந்து கீழ் நில பரப்புக்கு புறப்பட்டு விட்ட செய்தி கிடைத்து பல நாட்களாகியும் தொடர்பற்ற நிலையில் கதையில் கூறும் மேலிருந்து பொழியும் கல்மழையும் கற்களால் ஏற்படும் பேரருவியும் காரணமாக கீழே இறங்க முடியாமல் தவித்த தெல்லாம் பின்பு தான் அவர் சொல்லி தெரியும். உடன் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது பின்புதான் இவர்களுக்கும் தெரிகிறது.
பெயர்கூட தெரியாத அந்த இமய மலை சரிவில் கூட்டம் இரு பிரிவாக மாறியது என ஒரு பிரிவு கருத பெரும் கற்களாலான பேரருவி தான் காரணம் .இதெல்லாம் தெரிவது பல நாட்களுக்குப் பிறகு . (சக தோழரின் கண்ணீர் கண்டபோது மனிதநேயமிக்க அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணகுரு தங்கிச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஏ. சம்பத் அவர்களை அந்த ஆகஸ்ட் 15-ல் சந்தித்து முறையிட்டோம். உடனே டெல்லி சென்று அப்போதைய ராணுவ அமைச்சர் ஏகே ஆண்டனி அவர்களை சந்தித்து கூறியபின் நள்ளிரவு பத்திரிகையாளர்களை அமைச்சர் சந்தித்து தேடுதல் நடத்த ஆணையிட்டது வெளியுலகே தெரிந்தது.)
சில நாட்களுக்குப் பின்பு ராணுவ வீரர் தொலைபேசியில் அழைத்தார். நடந்த ஏதும் அவருக்கு தெரியாது. பனிப்பாறை இடிந்து கீழே இறங்கி வந்ததால் பலர் மாண்டு போனதெல்லாம் பின்னர் தெரிந்தனர். சில நாட்கள் உயிரைப் பாதுகாக்க வழியின்றி எந்த திசைக்கும் செல்லமுடியாது நின்றதை கூறினார். ராணுவ ஹெலிகாப்டர் அவர்களை சண்டிகருக்கு கொண்டு சேர்த்த போது உடன் வந்த பலர் இல்லை என்பது தெரிந்தது. இமய பாதை எப்படியானது என்றும் இப்பகுதி கற்பனை அல்ல என்றும் உணர்த்திய கதையின் தருணமிது.
கதை நகர்வில் முக்தானந்தா, டென்சின், ஊர்த்தலைவர் ,போடக், துறவி ரிங்டன்,நோர்பு திரக்பா எல்லாம் வந்து செல்பவர்கள் அல்ல .எப்போதும் நம்மோடு இருக்க போகிறவர்கள். இது தமிழின் வஜ்ர கதை மட்டுமல்ல இந்திய கதை என்றே கூறவேண்டும். எல்லா மொழிகளிலும் கொண்டு செல்ல வேண்டிய அருமையான கதை .ஏன் நாளை உலக மொழிகளில் கூட இக்கதை உலாவரும்…!
–பொன்மனை வல்சகுமார்
***