நஞ்சு [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, அந்த சித்திரத்திற்கு ஒரு அவுட்லைன் வரையப்படுகிறது. அழகப்பன்
உமையாளை ஓரக்கண்ணால் பார்த்து மையல் கொண்டாலும் , அவள்தான் அவனிடம் முதலில் நெருங்குகிறாள். மிகவும் உரிமை எடுத்துக்கொள்கிறாள். தன்னை அவன் குடும்பத்தில் ஒரு அங்கமாக பாவிக்கிறாள். அழகப்பன் அவ்வாறு அல்ல. அவளுக்கு ஒரு நெருக்கடி என்கிற போது உள்ளார விலகுகிறான். ஶ்ரீனிவாசனிடம் அவள் சீட்டு பணத்திற்காக பேசுவதைக் கண்டு, சந்தேகத்தில் சுழல்கிறான். நம்மிடம் வலிய வந்தவள் அவனிடமும் வலியமாட்டாளா? என்ற கேள்வி தான். அவனுடைய கழிவிறக்கமும் , சந்தேகமும் சேர்ந்து நஞ்சாக மாறுகிறது. தக்க நேறும் வரும்போது அவள்மீது உமிழ்கிறான். இந்த ஆண்மனதின் கீழ்மையை நாம் அணுதோரும் சந்தித்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக நஞ்சு சிறுகதை. இக்கதையில் வரும் நாயகிக்கும் அவள் கணவனுக்கும் பெயர் வைக்கவில்லை என்பதை பிறகு தான் கவனித்ததேன். சீட்டு கதையின் பெயரையே வைத்துக்கொள்ளட்டும் என ஆசிரியர் நினைத்துவிட்டாரோ ! இங்கே அழகப்பனுக்கும் உமையாளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. காதலின் போது சிறிதாக உமிழப்பட்ட அழகப்பனின் நஞ்சு , நாளடைவில் பெருகியது. உமையாள் சீண்டப்பட்டதால் , அவளும் தக்க தருணம் பார்த்து நஞ்சை திருப்பி அளிக்க காத்திருக்கிறாள். அதற்கு கல்லட்டி ஜங்ஷனில் அவளுக்கு லிப்ட் குடுத்து இறக்கிவிடும் ஒரு அப்பாவி தேவைப்பட்டடிருக்கறான் . பெண் பாம்பு உமிழப்பட்ட நஞ்சிற்கு வீரியம் அதிகம்போலும். சுற்றி இருந்தவனையும் சேர்த்து நிலைகுழைய வைத்துவிட்டது. உமையாள் தன்னை தற்காத்துக்கொள்ளவே அவனை பலிவாங்கினாலும், அவளிடம் இருந்து வெளிப்பட்டதும் நஞ்சே. இக்கதைகளின் கேள்வியாக எனக்கு எஞ்சுவது, மனித மனம் என்னும் கடலை கடைய கடைய மிஞ்சுவது எனவோ நஞ்சு தானோ ?
இன்னொறு பார்வையாக, ஏதோ ஒரு வகையில் நம் மனம் பிறரிடமிருந்து சிறிதளவேனும் நஞ்சை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. வாழ்வை சுவரசியமாக்க. நாம் எதிர்பார்பது, ஆடகம் சிறுகதையில் வரும் ராஜநாகம் உமிழ்வது போல் சிறு மில்லிகிராம் அளவுதான், அமுதமாக மாறுவதற்காக. ஆனால் நம்மீது உமிழப்படுவதோ !
கார்த்திக் குமார்
***
ஜெ
எப்படி பொளர்னமி பித்து சீனுவிடம் வருவதை மறந்து போனேன்? மற்றொரு பொளர்னமியும் கடந்து போயிற்று – மறுபடியும். காலையில் அந்த நிலவு மறைதலையும் சூரிய உதயத்தையும் இரு திசைகளில் பார்க்கனும் என்பதும் முடியாமல் போயிற்று. பூர்ணசந்திரன்களில் சித்திரையும் கார்த்திகையும் ஒரு போதையான ஈர்ப்பு. அந்த பெயரே அழகு. ”கார்த்திகை பொளர்னமி இல்லம் ”என பெயர் இட வேண்டும் என ஒரு வயதில் நினைத்தது உண்டு. வெயிலின் தொடக்கத்தில் ஒரு முறையும், குளிர் தொடங்கலில் ஒன்றும் பெரிய ஈர்ப்பு. பெண் பெயர் சாயலின் கொண்டதாக கூட இருக்கலாம்.
எத்தனை கதைகள். சிறுகதையில் ஒரு தொடலை, விக்கித்தலை, தவிப்பை, அமைதியை என உச்ச உணர்வுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு தினுசில் ஒவ்வொரு கதைகளும்.
இறைவன் [சிறுகதை]
இறை எனும் மழை
இறைவன் – ப்ரதீப் சொன்னது போல விம்மல். இசக்கி அம்மை கை விரித்து கதறுகையில், மாணிக்கம் இறைவன் ஆகி விட்டான் என நினைத்து கொண்டேன். இல்லாதவைகளை, தெரியாதவைகளை, உருவம் தந்து உயிர் தருபவன் இறைவனே. – வரைந்தால் என்ன, எழுதினால் என்ன? வெறுமையில் வெண்சுவற்றில் தொடங்குகிறது அனைத்தும். அந்த புது இடத்தில் உள் அமர்ந்த பின்னரே கைகளில் அருள் வர தொடங்குகிறது மாணிக்கத்துக்கு. ஆனால் பறக்காமல் காத்து இருப்பவனுக்கு தான் ஆசிர்வாதங்கள். சந்நதம் முடித்து போற்றி வந்த பின் கீழ் வந்து நடக்கிறான். உச்ச உணர்வு தந்த தருணக்கதை.
காக்காய் பொன் – குணங்களில் ஒரு அடைதல் வந்தபின் வருவது ஒரு மின்னல். அதற்கு பிறகு அனைத்தும் மின்ன முடியும் அல்லவா// கல், கனி,மலர், மனிதம் என.. நித்யா சொல்லில் பொன் மின்னியது. எது நெருடலோ அதுவே மீட்பின் வழி போல. அதுவரை அவர் அந்த இடத்தில் இருந்த இருப்பை -ஸ்திரத்தை தெரிந்து தெரியாமல் கலைத்து விட்டு நித்யா சென்று விட, பின்னர் வேறு வகை தவம் சதானந்தர் தொடர்கிறார். அவர் அறியாமல் அவருள் ”தான்’ “துறவு”” பணம் தொடாத’ என்கிறைவை வளர்ந்து விட்டதை கண்டு தடி எடுத்து விரட்டி பின் ஒடுங்கி கண்டு கொள்கிறார். இறுதியில் சதானந்தர் கையில் ஒரு மின்னும் மணி எனபது ஒரு கவிதை.
உலகெலாம்மில் அதுவே. பயமாக ஒரு இருப்பாக அந்த பேஸ்மேக்கர் கருவி அவரை ஆக்ரமித்து பின்னர் அதிலிருந்து ஒரு திறத்தலை ஒரு மீட்பை தந்து விட்டது. சுகுமாரன் நாயருக்கு நெஞ்சில் விடாத கேள்வியாக, தொடர் பயமுறுத்தலாக இருந்தது ஒன்று ஒரு பெரிய மறுபிறப்பின் வாசல் திறப்பாக ஆன்ம விடுதலை ஆகிறது.சற்று வலுக்கட்டாயமாக தொகுத்து கொண்டால் மாயப்பொன்னில் சாராய ‘சொட்’டிலும் ஸ்பைலைசிங் செய்யும் விரல்களிலும் இறைவன் எனும் அடைதலை கர்ம யோக வழி என புனைந்து கொண்டு இருக்கிறீர்கள்.நீங்கள் எழுதி செல்லும் வேகம் விட படித்து தவித்து எழுதுவது கடினம்.
சுய வதை தன்னையும் தின்று பிறரையும் கொன்று வாழும் அட்டை. நஞ்சு தான் அது. வீர்யம் கரையாத , அளவு தீராத நஞ்சு. ”உடலே நடுங்கி”,” அஞ்சி’…அவளின் கணவனை அடித்திருந்தால் முடிந்து போய் இருக்க கூடும். ஒரு தீண்டல் ஒருமித்து நடந்து இருந்திருந்தால் இத்தனை குரூரம் மேலே வருமா? பின்னர், மீண்டும் காரணம் தேடி அந்த தீயை வளர்த்து எடுத்து, .. வரும் வாய்ப்பை விடாத அவளும் பழி தீர்த்து கசந்து திரும்பும் இவனும் .. எனக்கு என்னவோ அந்த மாலை- இரவின் முதல் பயணத்திலேயேஅவனுக்கு உள் அவனுக்கு தெரியாமல், உதற முடியா ஒரு ஈர்ப்பும், பிடிப்பும் அவள் மேல் வந்து விட்டதாக தோன்றுகிறது..ஆனால் அது வளர்வதற்கு தருணம் அமைவதை விட , அந்த தொடக்க ஸ்பரிசங்கள் தொடங்கி வைத்த மின்னலை , அடித்து நடந்த அவமானம் மிக ஆழத்தில் கீழே தள்ளி விட்டு அந்த நஞ்சு உட்கார்ந்து ஆட்கொண்டு விட்டது. அதனால் தான் இறுதியில் அவளும் வந்ததை பற்றி சொன்னவுடன், அந்த நஞ்சு அவளின் அந்த உணர்வை ஒதுக்கி விட்டு கிளர்ந்து நடந்து பின் கசந்து தளர்கிறது….. உங்களின் பெண்அருகாமை வர்ணனைகள் எப்போதும் சிறு குளிரில் மென் நடுக்கம் என சிலிர்ப்பு என ஆழம் தொடும் வகை. ‘இரவு’ அவள் வீட்டுனுள் நுழையும் போது அவன் முதலில் பார்த்தது பற்றியவையும் இன்று இவர்களின் அருகாமை அந்த காட்டில் இருட்டில் தனிமையில் தொடலில் .. அதிகபட்சம் ஒரு பெருமூச்சுடன் ஒரு பேரோசையுடன் உள்ளே செல்லும் – அந்த ததும்பல் வரிகள் … அமரம் படத்தில் மம்மூட்டியும் சித்ராவும் ஒரு கணம் கண்ணில் காதல் வந்து, பேசி, கட்டியபின் ஒரு முத்தம் அமையும் முன் பிரிவதை நினைவு வந்தது.
பிடி [சிறுகதை]
கால ஆற்றின் போக்கில்,..
ஒவ்வொன்றும் ஒரு தினுசு… ஆறு போல பாடியபடி, ‘பிடி” கொண்டு விளையாட்டு முடிந்து தன் போக்கில் பாடி காட்டி விட்டு வானில் சென்ற படி இருக்கும் மேகம் என எதையும் விட்டு செல்லாத ராமையா ஒரு புறம் என்றால், தன்னில் நிகழும் ஆட்டத்தை நின்று பார்த்தபடி வாழ்ந்து விட்டு , இறப்பதற்கு முன் அந்த இரட்டை பெண்கள் வெகு எளிதாக கிழவி ஆகி சில வார்த்தைகளில் விடை பெறுதலாக முடிந்து போனதை சர சரவென வேகமாக சொல்லி முடித்த ‘ஆட்டக்கதை” என்பது ஒரு முழு வாழ்வின் வேறு வகை .. பார்க்க பார்க்க பார்த்தது காணாமல் ஒடும் காலநதி .. மனைவியின் மறைவு ‘அப்படியா” எனும் படியாக அவரின் வார்த்தைகள் . அவரின் அந்த முதல் இரவு வரிகளை அவரே பெரிதாக பேசாமல் கடந்து செல்கிறார். ஆனால் அந்த இரவும் “அனலுக்கு மேல்’ இருட்டில் இருவரும் கவ்வி செல்லும் அந்த இரவின் காட்சியும் ஒரு கோட்டில் என தோன்றியது…ஆனால் “கூடு’ அக்கணத்தில் என ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்ட வாழ்வின் கதை. நின்று விட்ட காலத்தின் – புத்தரின் தரிசனம், அப்படியே அந்த மலைகளில் நடந்து , அந்த மடாலயத்தில் வாழ்ந்து காற்றில் இருக்கும் அந்த ஆசிரியனை காண முடிந்தது, வேற்றுவர் வராத நில வரைபடம் அந்த குளிர் கால வாழ்வின் தினங்கள் என்று விரிந்தபடி சென்றது. \
ஒரு அன்னையின் ஓரு முத்தத்தின் ’ஆயிரம் ஊற்றுகள்’ சட்டென அழுகை என நெகிழ வைத்தது. எத்தனை எத்தனை கண்ணங்கள் சிறு , சில முத்தங்கள் கிடைக்காமல் உதடு படாமல் மரித்து போய் இருக்கும் இந்த கால ஒட்டத்தில்? எண்ணக் எண்ணக் குறைவது தான் வாழ்வின் தினங்கள். வாழ்ந்து முடித்து விட்டு உதிர தயாராக இருப்பதின் அவரின் வரிகள் எந்த தத்துவ வகைகளிலும் இல்லை எனினும் அதுவே உன்னத வாழ்வின் தரிசனம். முதுமையை சாமான்யர்கள் எடுத்து கொள்ளும் வரிகள் சங்கடபடுத்துபவை. வாழ்வு எனும் பயணத்தின் முடிவு அருகில் தெரிய ஆரம்பிக்கும் போது வரும் பார்வைகள், சிந்தனைகள், வார்த்தைகள் எத்தனை சொன்னாலும் பேசினாலும் அங்கு கூடி இருப்பவர்களால் ஏற்க முடியவில்லை. பழுத்து தன் முடிவின் போக்கில் விழுதல் மனிதனுக்கு இல்லை.
இப்படி எல்லா கதைகளையும் ஒரு சில வார்த்தைகளில் சொல்லிச் செல்வது சங்கடப்படுத்துகிறது. சுஜாதா பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவதை ஒரு சந்திப்பில் சொன்னதை அவர் பற்றிக்கொண்டதை போல, சிறுகதை எனும் வகுப்புக்கு இந்த தனிமையில் வந்த அத்தனை கதைகளும் பாடங்கள். கதாபாத்திரங்கள், வட்டார பேச்சு வழக்குகள், நகைச்சுவை, தரிசனங்கள், கவித்துவ கணங்கள், தொடக்க மற்றும் முடிவுகளில் பல வகை மாதிரிகள், நெருப்பு எனும் செம்மண் வாழ்வின் நிலம் oரு புறம் முதலாறு போன்ற உச்ச பச்சை நிலம் மறு புறம் என நில விவரணை, வழக்கம் போல புதிய வார்த்தைகள் (நஞ்சு, அனலுக்கு மேல் – முகம் பற்றிய “அதைத்து ’), கதை சொல்லலில் பெயரின்றி வரும் நஞ்சு வகை கதைகள் முதல் கிராமத்தின் பெரும் மாந்தர் வரை, குட்டி பாப்பாவின் ’மொழி” முதல் கூத்து கலைஞன் வயது வரை மாந்தர்களை தொட்டு எடுத்து காண்பித்தாயிற்று.வெடித்து சிரிக்க வைத்தவை நிறைய.. அதில் இவை சில
அம்புரோஸுக்க அம்மை நல்ல அளகுள்ள குட்டியாக்கும்”
– “அம்புரோஸுக்க அம்மையா?” என்றேன் அம்புரோஸுக்கே அறுபது வயதுக்குமேல் இருக்கும்.
அது முளுக்க இரும்புல்லா? நான் மர ஆசாரி” என்றார் பிரமநாயகம் ஆசாரி. “எங்கிளுக்க வேதம் வேறயாக்கும்… உளியெறங்காப் பொருள் எங்க கணக்குலே இல்ல” “பின்ன நீரு எதுக்குவே அம்புஜத்துக்க வீட்டுக்கு போறீரு?” என்றான் லாரன்ஸ் “அவ மூசாரில்லா?
எழுதிகொண்டே இருக்கலாம், – ஒவ்வொரு கதை போகும் வழியில் வரும் தருணங்கள் அவை தரும் தரிசனங்கள் , திகைப்புகள் என. ஆங்கிலம் போல ஒரு எழுத்துக்கு ஒரு தடவை என டைப் செய்தால் இன்னும் கொஞ்சம் நிறைய எழுதி இருப்பீர்கள் போல
ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
ஜெ,
பீஷ்மர் இறப்புக்கு பின், பதற வைத்து கொண்டு இருக்கிறது வர போகும் இளைய யாதவனின் மரண தினம்>… நீங்கள் கடந்து சென்று விட்டீர்கள் என தோன்றுகிறது.
அன்புகளுடன்,
லிங்கராஜ்
***