போழ்வு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
போழ்வு இந்த வரிசையில் நீங்கள் எழுதிவரும் 80 சதவீதம் வரலாறு எஞ்சியது புனைவு வகையான கதைகளில் ஒன்று. விக்கிப்பீடியாவுக்குச் சென்று வேலுத்தம்பி தளவாய் பற்றி வாசித்தேன். அவர் கேரளத்தின் தேசியவீரர். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிட குண்டரை விளம்பரம் என்ற அறிவிப்பில்தான் தேசியம் பற்றிய முதல்குறிப்பு உள்ளது. அந்த நால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அதேசமயம் இந்தக்கதையில் நீங்கள் சொல்லியிருப்பவையும் உண்மை. கிருஷ்ணபிள்ளையை அவர் கொன்ற விதம் வரலாற்றில் உள்ளது. வெள்ளைக்காரர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களைக்கொண்டே திருவிதாங்கூர் ராணுவத்தை ஒடுக்கியவரும் அவர்தான்
இந்தக்கதையின் இன்றைய இடம் என்ன? அச்சு அசலாக, ஒரு சின்ன மாற்றமும் இல்லாமல் அப்படியே நமது இன்றைய மாவீரர்களுக்கும் இது பொருந்துகிறது என்பதுதான். இவர்களும் இதே வார்ப்பில் இருப்பவர்கள்தான். அவர்கள் மாவீரர்கள், மக்கள்தலைவர்கள். ஆனால் சுயமையம் கொண்டவர்கள். மக்களை பொருட்டாக நினைக்காதவர்கள். தங்கள் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் மக்களுக்கு அழிவை கொண்டுவந்தவர்கள். ஆனால் அப்படியிருந்தாலும் மக்களால் கொண்டாடப்படுபவர்கள்.
நெப்போலியன் முதல் எல்லாருமே ஒரே வார்ப்புதான். வீரவழிபாடு என்பதே எந்த வகையிலானாலும் ஒரு பழங்குடி மனநிலை. ஒரு காலாவதியான மனநிலை.வீரவழிபாடு என்பதே அடிப்படையில் வன்முறை வழிபாடுதான்
ராஜசேகர்
***
வணக்கம் ஜெ,
போழ்வு சிறுகதையை வாசித்தேன். வேலுபிள்ளை குரூரமானவர், நீதியுணர்வு மிக்கவர் என்று சித்திரிக்கப்படுகிறார்.அந்தக் குரூரம் நெருப்பைப் போன்றது. ஆனால், அதிகாரத்தில் நிலைப்பதற்காக அனைத்தையும் அள்ளி உண்ண நெருப்பு படர்கிறது. தனக்கு முன்னால் இருந்த பலரின் வீழ்ச்சி அவரை அச்சமடையச் செய்கிறது. அவ்வச்சமே அவரில் பிளவை ஏற்படுத்துகிறது.
அரவின் குமார்
***
முதல் ஆறு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
முதல் ஆறு ஒரு விசித்திரமான கதை. ஒரு கதையில் நிகழ்வுகள் செறிந்துகிடக்கின்றன- உதாரணம் பத்துலட்சம் காலடிகள். இந்தக்கதையில் ஒன்றுமே நிகழவில்லை. இருவர் பஸ்ஸில் போகிறார்கள். பஸ் வழிமாறி செல்கிறது. அவ்வளவுதான்
ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். அவர்கள் என்றென்றுமாக நினைத்திருக்கும் நாள் இது. .அப்படிப்பட்ட சிலநாட்கள் எல்லாருடைய மனதிலும் இருக்கும். அதை இன்னொருவரிடம் சொன்னால்கூட அதற்கு மதிப்பிருக்காது.
ஜெயராணி
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
முதல் ஆறு மிகப்பிரமாதமான காதல் கதை. பேருந்தில் மலரும் காதல்கள் சுவாரஸ்யமானவை. அதிலும் அந்த இளைஞனாகவே நீங்கள் இருந்து அவன் பரிதவிப்பை எழுதியிருக்கிறீர்கள். அவன் பதற்றம் கைகால்கள் தளர்வது, பெருமூச்சுவிடுவது, வீண்கற்பனை செய்துகொண்டு கண் நிறைவது என்று அவனாகவே இருந்து வாசிக்க முடிந்தது.
உள்ளே யாரையும் பார்க்காதது போல பேருந்தின் படிக்கட்டில் ஒற்றைக்கையில் கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியபடி கேசம்காற்றில் அலைபாய பயணிக்கும் இளைஞர்கள் இல்லாத பேருந்துகளே இல்லையே கல்லூரி வழித்தடங்களில், வெகுகாலத்திற்குப்பிறகு ஸ்டெல்லாபுரூசின் அது ஒரு நிலாக்காலத்தின் பேருந்துக்காதலையும் ராம்குமாரையும் நினைத்துக்கொண்டேன். அந்தபெண்ணின் உதடுகளையும் உலர்ந்த பிளாஸ்டிக் தாளைப்போல என்று சொல்லியிருந்தது புதிதாகவும் பொருத்தமாகவும் இருந்தது
2வருட பயணத்தில் அன்றைய இந்து கிறிஸ்தவ சண்டையும் அதன்பொருட்டு சுற்றுவழிப்பயணமும் அது வரையில் காதலியின் தரிசனத்தை மட்டுமே கண்டவனுக்கு இயற்கையின் தரிசனமும் கிடைக்க வழிசெய்கின்றது.. காதலைக்காட்டிலும் பெரியதொன்றை அவன் அன்று காண்கிறான்.
அன்றைக்கு சுற்றுவழியில் செல்லும் பேருந்துக்குள்ளும் அவன் மனதிற்குள்ளுமே ஒளி நிறம் மாறிவிட்டிருக்கிறது, ஒளியே நீர் என ஓடிக்கொண்டிருக்கும் முதலாறும் தெளிந்த வானும் முகிலும் பருந்தும் அதன் நிழலும் சரிவெங்கும்
மஞ்சளாக பூத்திருந்த ஆவாரையும் பட்டாம்பூச்சிகளும் மைனாக்களின் சிறகடிப்புமாக தரிசித்து கொண்டிருப்பவனுக்கு அவள் அழைத்ததே தெரியவில்லை அவளின் தரிசனத்துக்காக அத்தனை வருடம் காத்திருந்தவன் அவன். அவள் இருக்கும் அந்த பேருந்தின் தரிசனமே அவனை படபடக்க வைத்துக்கொண்டிருந்த நிலையெல்லாம் இயற்கையின் தரிசனத்தின்பின்னர் பெரிதாக இல்லாமல் போய்விட்டது, அவனும் அவளும் மட்டுமே பேருந்தில், இவனிடமே அவள் நேராகப்பேசுகிறாள். எந்த படபடப்பும் இன்றி அவளிடம் அவனால் பேசமுடிகின்றது.
அவன் விம்மும் உள்ளத்தில் இனி அவளின் முகத்திலும் கழுத்திலும் விழும் ஒளியும் அவள் காதோரத்தின் மென்மயிர்ச்சுருளும் கூட இயற்கையின் பகுதிதான். கல்லூரியில் இறங்கி அவள் அன்று அவனைப்பார்த்து புன்னகைக்காதிருந்தாலும், தலையசைப்பில் போய்வருகிறேன் என்று சொல்லி இருக்காவிட்டாலும் அவனுக்கு அது பொருட்டல்ல. இனி அவன் அந்த முதலாற்றின் மேல் பறந்துசென்ற பருந்தைப்போல வேளிமலையின் ஒளிரும் முகடுகளையும் நுரைத்துத் துள்ளி சரிவிலிறங்கும் ஓடைகளையும் பின்தொடர்ந்து பறந்து செல்லுவானாயிருக்கும்.
நன்றி
லோகமாதேவி
***