பகுதி ஐந்து : எரிசொல் – 2
அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை இளிவரல் செய்யும்பொருட்டே அவரை அனுப்பியிருப்பதாக அவர்கள் நினைத்தனர்.
“யார் அந்த பித்தன்?” என்று அசுரகுடியைச் சேர்ந்த காவலர்தலைவனான விருஷபன் உரக்க கேட்டான். “யாரோ வேண்டுமென்றே அவனை நமக்கு எதிராக அனுப்பியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். புலர்காலையில் பித்தர்கள் இப்படி கிளம்பி வருவதில்லை” என்றான் துணைக்காவலர்தலைவனாகிய சாகரன். “அவன் பித்தன் அல்ல. பித்தன் பெரும்பாலையை தன்னந்தனியாக எப்படி கடப்பான்?” என்றான் வில்லவர் தலைவனாகிய ஊர்வரன். “வேண்டுமென்றே வருகிறான். புலரியில் நமது முதல்விழி இன்று அவன்மேல் என்று அறிந்திருக்கிறான். மிகச் செருக்குடன் நடந்து வருகிறான்” என்றான் ஒரு வீரன். “அகற்று அவனை” என்று விருஷபன் கூவினான். வாளை உருவியபடி “நான் அகற்றுகிறேன், அக்கீழ்மகனை” என்று எழுந்தான்.
விருஷபன் அவரை நோக்கி சென்று ஒரு சொல்லும் உரைக்காமல் கால் தூக்கி அவர் விலாவில் உதைத்து மையச்சாலையில் இருந்து அப்பால் வீழ்த்தினான். வாளை உருவி அவரை அணுகி முகத்தில் துப்பி “கீழ்மகனே, யார் நீ? இந்த இழிமங்கலத் தோற்றத்தில் ஏன் இப்புலர்காலையில் இப்பெருநகரின் வாயில் முன் தோன்றினாய்?” என்றான். புழுதியில் விழுந்த விஸ்வாமித்ரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “நான் தவம் செய்பவன். இப்புவியிலிருந்து எதை உரிமையெனக் கொண்டாலும் என் தவம் குறைவுபடும். ஆகவே அன்றன்று பெறுவனவற்றையே கொண்டிருக்கிறேன். இப்பாலையில் என்னை பேண எவருமில்லை. ஆகவேதான் இவ்வண்ணம் இருக்கிறேன்” என்று சொன்னார்.
“தவமா? நீயா?” என்று அவன் சிரித்தான். “உன் தேவதை என்ன மூத்தவளா? எனில் அத்தவத்தை நீ காட்டில் செய்யவேண்டும். இங்கு மங்கலமும் அழகும் வெற்றியும் திகழும் நகரில் புலரியில் வந்து உன் இழிமுகத்தை காட்டலாகாது. பாற்கடலின் நஞ்சென உன்னை இங்கே உணர்கிறேன்” என்றான். அவனுக்குப் பின்னால் வந்து நின்ற சாகரன் “பரிமாறப்பட்ட அறுசுவை உணவில் ஒரு துளி மலத்தை வைத்ததுபோல” என்று சொன்னான். அவர்கள் அதைப்போன்ற அணிச்சொற்றொடர்களை சொல்லிப் பழகி அதில் மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். விருஷபன் “உன்னை இங்கு கண்டமையால் நானும் மங்கலம் அழிந்தேன்” என்றான். “ஓடு, எழுந்து திரும்பி ஓடினால் உயிர் பிழைப்பாய்!”
விஸ்வாமித்ரர் “நான் உங்கள் அரசரை பார்க்கவேண்டும்” என்றார். “அரசரையா, நீயா? நீ என்னை சந்தித்ததனாலேயே உயிர்விடும் நிலையை அடைந்துவிட்டாய்” என்றான் விருஷபன். “நரியின் முகத்தில் முயல் காலையில் விழித்திருக்கிறது.” ஊர்வரன் வெடித்துச் சிரித்தான். “நான் அவரை பார்ப்பதற்காக வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசர் இப்பொழுது எவரையும் பார்ப்பதில்லை” என்று ஊர்வரன் சொன்னான். “அதிலும் உன்னைப்போன்ற அழுக்குப்பிறப்பை அவர் சந்தித்தால் இன்று அவர் சொல்லால் உன் தலை மட்டுமல்ல பல ஏதிலார் தலையும் உருளும்.” விஸ்வாமித்ரர் “நான் அவரை பார்க்கும் பொருட்டே வந்தேன். பார்த்துவிட்டே செல்வேன்” என்றார். “செத்து கீழுலகு செல்வதைப் பற்றி சொல்கிறான்” என்றான் ஊர்வரன். சாகரன் வெடித்துச் சிரித்தான்.
“இவனை என்ன செய்வது?” என்று விருஷபன் இன்னொரு காவலனிடம் கேட்டான். “இவனை இன்றைய நிலைமையில் நகருக்குள் நுழையவிட்டால் நம் குடிகளே அடித்துக் கிழித்துப் போட்டுவிடுவார்கள். இன்று இந்திரனுக்குரிய நாள். குடிக்களியாட்டு உச்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குடிக்களியாட்டுக்களில் எவரையாவது தெருக்களில் அடித்து இழுத்துச்சென்று கொல்வது அவ்வப்போது நிகழ்கிறது” என்றான் சாகரன். “இவனை அவ்வாறு அவர்கள் கொன்று விளையாடட்டும்” என்றான் ஊர்வரன். “நம் வீரன் எவனாவது சாவதற்கு இந்த அழுக்குப்பித்தன் சாகட்டுமே.”
பின்னால் நின்ற ஒரு வீரன் “நூற்றுடையோரே, ஒரு செய்தி. இவன் உடலில் இருக்கும் பச்சைகுத்தப்பட்ட குறிகளை பாருங்கள். இவன் அரசகுடியினன்…” என்றான். விருஷபன் கூர்ந்து நோக்கி “ஆம், அழுக்கில் மறைந்துள்ளன அடையாளங்கள்… அரசகுடியினன் என்றே தோன்றுகிறது” என்றான். ஒரு வீரன் குந்தி அமர்ந்து நோக்கி “நூற்றுடையோரே, இவன் குறிகளில் இருந்து இவன் சந்திரகுலத்தவன், புரூரவஸின் மைந்தனாகிய அமரவசுவின் குருதிவழியில் வந்தவன் என்று தெரிகிறது. குசநாபரின் மைந்தர் காதி இவன் தந்தை. அவர் குசகுலத்தை ஆண்டவர், குசநகரியின் அரசர்” என்றான். விருஷபன் “அடேய், நீ அரசகுடியினனா?” என்று கேட்டான். “நான் கௌசிக குடியினனாகிய விஸ்வாமித்ரன்… தவம் பயில்பவன்” என்று அவர் மறுமொழி சொன்னார்.
“என்ன செய்வது இவனை?” என்றான் விருஷபன். “நம் கையிலிருந்து கடத்திவிடுவோம். மேலும் வணிக வண்டிகள் வரும் பொழுது இது” என்றான் சாகரன். “ஐயம் எழுந்தமையால் இவனை சிறைபிடித்தோம் என்று சொல்வோம். முறைப்படி மூடுவண்டியிலேற்றி அரசரிடம் கொண்டு போகலாம். அவர் இவனை உசாவட்டும்” என்றான் விருஷபன். “இவன் அரசகுடியினன். அரசகுடியினர் இப்படி நகர்புகலாமா? உளவறியக்கூட வந்திருக்கலாம்” என்றான் சாகரன். “ஆம், ஆனால் அரசர் இவனுக்குரிய தண்டனையை அளிக்கட்டும்” என்றான் விருஷபன். “காலையில் ஏன் இப்படி ஒரு சிக்கல் வந்து நம் தலையில் விழுகிறது?” என்று விருஷபன் திரும்பிப் பார்த்தான். “இவன் மெய்யாகவே பித்தன்தானா?” சாகரன் “பித்தனல்ல என்றால் அரசகுடியினன் ஏன் இப்படி இருக்கிறான்?” என்றான்.
அவர்கள் விஸ்வாமித்ரரைப் பிடித்து மதுக்கலங்களை கொண்டு செல்லும் கூண்டு வண்டி ஒன்றுக்குள் ஏற்றினார். அது உண்மையில் ஒரு பெரிய பீப்பாய். அதற்குள்ளே இட்டு அவரை மூடி ஒற்றை அத்திரி இழுத்த வண்டியில் நகருக்குள் கொண்டு சென்றனர். அவர் அதற்குள் எந்த ஓசையுமில்லாமல் படுத்திருந்தார். அவரை அரண்மனை முற்றத்திற்கு கொண்டுசென்று இறக்கினர். அவருடன் வந்த ஊர்வரன் “காவலர்தலைவர் விருஷபன் என்னை அனுப்பினார். இந்த வண்டிக்குள் இருப்பவன் ஒரு பித்தன். ஆனால் அவன் உடலில் அரசகுடியினருக்குரிய குறிகள் இருக்கின்றன. ஆகவே இழுத்துவந்தோம். எவரும் பார்க்கவேண்டாம் என்று கூண்டுவண்டியில் கொண்டுவந்தோம்” என்றான்.
துணையமைச்சர் குடிலர் “இறக்கு அவனை” என்றார். விஸ்வாமித்ரர் இறங்கியதும் அவர் வந்து அவரை கூர்ந்து நோக்கி “யார் நீ?” என்றார். “கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். தவம் பயில்பவன். உங்கள் அரசரை சந்திக்கும்பொருட்டு வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை இப்போது சந்திக்க முடியாது. இது முதற்புலரி வேளை. அரசர் இன்னும் மதுத்துயிலில் இருந்து எழவில்லை” என்றார் குடிலர். “அவன் எவ்வண்ணம் இருந்தாலும் அவனை சந்தித்தாகவேண்டும் நான்” என்றார் விஸ்வாமித்ரர். “நெறி மறந்தா பேசுகிறாய், அறிவிலி?” என்று சொல்லி அருகே நின்ற காவலர்தலைவன் விஸ்வாமித்ரரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குடிலர் “இவனை அடைத்து வையுங்கள். நான் என்ன செய்வதென்று சொல்கிறேன்” என்றார்.
அவர்கள் விஸ்வாமித்ரரை இழுத்துச் சென்று அங்கிருந்த சிறிய இருட்டறை ஒன்றில் தள்ளி மூடினர். அதற்குள் அமைச்சர் வக்ரர் குடிலரை அழைத்தார். அவரிடம் துறைநிலைக்குப் போகும்படி சொன்னார். அங்கே பீதர்நாட்டுக் கலம் ஒன்றை துறைக்காவலர்களே இரவில் புகுந்து சூறையாடியிருந்தனர். “அவர்கள் எவரென்று பார். நம் குலத்தோர் என்றால் பெரிதாக தண்டிக்கவேண்டாம்” என்றார் வக்ரர். குடிலர் உடனே கிளம்பி துறைநிலைக்கு சென்றார். அங்கே யாதவர்களும் அசுரர்களும் ஷத்ரியர்களும் இணைந்துதான் அச்சூறையாடல் நடைபெற்றிருந்தது. பீதர் கலத்தின் காவலர்கள் அவர்களில் பன்னிருவரை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். பொருட்களை திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவர்களைக் கொன்று நீரில் வீசிவிடுவதாக அவர்கள் சொன்னார்கள். துவாரகையின் காவலர்கள் பீதர் கலத்தை கொளுத்திவிடுவோம் என்று கொந்தளித்தனர்.
குடிலர் பீதர்களிடம் சென்று பேசினார். அவர்கள் சிறைப்பிடித்திருக்கும் வீரர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் துவாரகையின் அரசர் உசாவி நீதி வழங்குவார் என்றும், பொருட்கள் அரசிடமிருந்து திரும்பக்கிடைக்கும் என்றும் சொன்னார். அவர்களை விடுவித்தார். அவர்களை மற்ற வீரர்கள் தோள்மேல் தூக்கி கூச்சலிட்டு நடனமிட்டபடி சென்றனர். பீதர்களிடம் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பினார். “அவர்கள் அரசரிடம் முறையிடுவார்கள்” என்று அவருடன் வந்த உதவியாளன் சொன்னான். “முறையிட வாய்ப்பளிக்கவேண்டாம். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் இங்கே நிற்கமுடியாது. அவர்கள் செல்வதுவரை எந்தச் சொல்லும் அரசரிடம் வந்துசேரக் கூடாது” என்றார் குடிலர்.
குடிலர் திரும்பி வந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. வக்ரரிடம் அவர் நிகழ்ந்தவற்றை சுருக்கமாக சொன்னார். அப்போதுதான் அவருக்கு விஸ்வாமித்ரரின் நினைவு வந்தது. “மூத்தவரே, இன்று காலை அரசகுடியினன் ஆகிய ஒரு பித்தன் இங்கே தேடிவந்தான்” என்றார். “பித்தனா? அரசகுடியினன் என்றால் என்ன பெயர் சொன்னான்?” என்று வக்ரர் கேட்டார். “அவன் பெயர் விஸ்வாமித்ரன். கௌசிக குடியினன்” என்றார் குடிலர். “எங்கோ கேட்ட பெயர். நன்று, அவனை அழைத்து வா” என்று வக்ரர் சொன்னார். குடிலர் ஏவலனிடம் விஸ்வாமித்ரரை அழைத்துவர ஆணையிட்டார். விஸ்வாமித்ரரை பார்த்தபோது வக்ரர் ஏமாற்றம் அடைந்தார். அவர் அரசகுடியினர் போலவே தோன்றவில்லை. “என்ன வேண்டும் உமக்கு?” என்று கேட்டார்.
“நான் அரசரை பார்க்கவேண்டும்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை அத்தனை எளிதாக பார்க்கமுடியாது” என்று வக்ரர் சொன்னார். “நான் அவரை பார்த்தாகவேண்டும்” என்று விஸ்வாமித்ரர் மீண்டும் சொன்னார். வக்ரர் அதை எப்படி கடப்பது என்று எண்ணி அவைமறுப்பை சாம்பனின் இளையோர் எவரேனும் செய்யட்டும் என்று முடிவுசெய்தார். அவர் ஏவலனிடம் “இவரை அரசவைக்கு அழைத்துச் செல்… அரசரைக் காண விழைகிறார் என்று கூறு. அரசகுடியினர் என்பதனால் அனுப்பினேன் என்று சொல்” என்றார். பின்னர் தாழ்ந்த குரலில் “அவர்கள் இவரைத் தூக்கி வெளியே வீசுவார்கள். அப்படியே இழுத்து நகரிலிருந்து வெளியே கொண்டு வீசிவிடு” என்றார்.
அவன் அவரை “வருக!” என்று அழைத்துச் சென்றான். செல்லும் வழியிலேயே “இப்படி ஒரு தோற்றத்தில் எவரும் அரசரை சந்திக்க முடியாது. உமக்கு நான் வேண்டுமென்றால் என் மேலாடையை தருகிறேன். மேலே உடுத்திக்கொள்ளும்” என்றான். “வேண்டாம்” என்று விஸ்வாமித்ரர் சொன்னார். அவன் அவரை சாம்பனின் அவைக்கு அழைத்துச் சென்றான். சாம்பனின் அரண்மனை முழுக்கவே அசுரகுடியினரின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் கூடி நின்று விஸ்வாமித்ரரைப் பார்த்து சிரித்தனர். சிலர் “பித்தனை எதற்கு கொண்டுசெல்கிறீர்?” என்றனர். “இன்று அவைக் களியாட்டுக்கு ஒரு பித்தன் தேவையாகிறான்” என்று அவன் மறுமொழி சொன்னான்.
சாம்பன் அப்போது தன் உடன்பிறந்தாருடனும் காளிந்தியின் மைந்தருடனும் காப்பிரி நாட்டிலிருந்தும் யவன நாட்டிலிருந்தும் வந்த வணிகர்களுடன் சிற்றவைக்கூடத்தில் களியாட்டில் இருந்தார். அவர் காலையில் எழுந்து சிறுபொழுதே அரசப்பணிகளை நோக்கினார். அவை பெரும்பாலும் அரசி கிருஷ்ணையாலேயே நிறைவேற்றப்பட்டன. அரசர் என அவையில் தோற்றமளிப்பது ஒன்றே அவர் செய்யக்கூடுவது. ஒரு நாழிகைகூட அவரால் அங்கே அமரமுடியாது. பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பார். எழுந்து தன் அறைக்குச் சென்று அவையாடைகளைக் களைந்து வேற்று ஆடை அணிந்துகொண்டால் அதன்பின் நேராக களியாட்டறைக்குச் சென்றுவிடுவார். அங்கே அவருக்காக விறலியரும் பாணரும் பிறரும் கூடியிருப்பார்கள்.
அவர் பின்னிரவு வரை மதுக்களியாட்டில் ஈடுபட்டிருந்தார். மதுக்களியாட்டு அதனுடன் இளிவரலாடலை சேர்த்துக்கொண்டால்தான் கொண்டாட்டமாகிறது. இளிவரலாட்டு மேலும் மேலும் பொருளின்மைகொண்டு முழுப் பித்தாகவே ஆகும்போதுதான் அக்கொண்டாட்டம் உச்சமடைகிறது. அன்று உச்சிப்பொழுதிலேயே சாம்பன் குடிக்கத் தொடங்கியிருந்தார். விறலியர் நால்வரும் பாணர் நால்வரும் நடனமாடினர். பாணர் பெண்ணுருக்கொண்டும் விறலியர் ஆணுருக்கொண்டும் ஆடினர். கீழ்மை நிறைந்த அசைவுகள், சொற்கள். அதற்கு அங்குளோர் சிரித்து கூச்சலிட்டனர்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் சாம்பன் ஓடிச்சென்று ஒரு விறலியின் ஆடையை கிழித்து வீசினார். அங்கிருந்தோர் அனைவரும் பாய்ந்து சென்று அவர்களின் ஆடைகளை இழுத்துக் களைந்து வெற்றுடலாக்கினர். ஆடையில்லாத அவர்கள் அங்குமிங்கும் ஓட மற்றவர்கள் துரத்தினர். சிரிப்பும் கூச்சலும் வசைச்சொற்களும் அறைக்குள் நிறைந்திருந்தன. அந்த அறைக்குள் இருந்த ஏவலரும் காவலரும்கூட மது அருந்தி நிலையழிந்திருந்தனர். மது அருந்தாத எவரும் அங்கே நின்றிருக்க முடியாது. சாம்பன் விறலி ஒருத்தியின் ஆடையை எடுத்து அணிந்துகொண்டார். சுமித்ரன் “மிகச் சரியாக இருக்கிறது, மூத்தவரே! அழகு!” என்று கூச்சலிட்டார். வசுமான் “சாம்பவி! இளவரசி சாம்பவி!” என்று கூவினார்.
சாம்பன் ஆடையின்றி நின்ற விறலியின் முலைக்கச்சையையும் கைவளைகளையும் அணிந்து பெண்போலவே நடந்தார். இளையோர் கைதட்டி கூவினர். அவர் ஆடையை சுருட்டிக் கட்டியிருந்தார். பெரிய குடவயிறு கொண்டவராதலால் அது மேலும் பெரிதாகத் தெரிந்தது. சகஸ்ரஜித் “கருவுற்றிருக்கிறாள்! சாம்பவிக்கு கரு முதிர்ந்திருக்கிறது!” என்று கூச்சலிட்டார். சுருதனும் கவியும் விருஷனும் “ஆம்! கரு! கரு முதிர்ந்துள்ளது” என்று கூவினர். சித்ரகேது எழுந்து கையை குழவியை தூக்குவதுபோல வைத்து ஆட்டி தாலாட்டுப் பாட்டு ஒன்றை பாடினார். அதை விரைவான கைத்தாளத்தால் அவர்கள் ஆடலுக்குரிய பாடலாக மாற்றினர்.
அப்போதுதான் விஸ்வாமித்ரரை ஏவலன் அவை வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான். “என்ன?” என்று வசுமான் கேட்டார். “அரசகுடியினராகிய ஒரு முனிவர்… பித்தன் போலிருக்கிறார். அரசரை பார்க்கவேண்டும் என்றார். அழைத்துவந்தேன்… அரசர் ஆணையிட்டால் பிறகு அழைத்து வருகிறேன்” என்றான் காவலன். வசுமான் உள்ளே நோக்கி “பித்தனாகிய முனிவர் ஒருவர் வந்துள்ளார்!” என்றார். “ஆ! பித்தன்! பித்தனாகிய முனிவன். அவன்தான் நமக்குத் தேவை… அழைத்து வருக!” என்று சுருதன் கூவினார். கவி “பித்தன் வருக! நாமெல்லாம் பித்தர்கள்!” என்றார். விருஷன் விஸ்வாமித்ரரிடம் “உள்ளே வருக” என்றார்.
உள்ளே சென்ற விஸ்வாமித்ரர் அவர்களை பார்த்தபடி எந்த உணர்ச்சியும் எழாத முகத்துடன் நின்றார். “பித்துமுனிவரே, வருக… இதோ சாம்பவி என்ற அரசி நமக்கெல்லாம் அள்ளி வழங்க வந்திருக்கிறாள்” என்றார் சுருதன். “அவள் கருவுற்றிருக்கிறாள்! ஆம்!” என்றார் விருஷன். கவி “நமது முனிவர் இப்போது கணித்துச் சொல்வார், அக்கருவில் எழவிருப்பது ஆணா பெண்ணா?” என்றார். விஜயன் “ஆம், நாம் அறிந்தாகவேண்டும். ஆணா பெண்ணா?” என்றார். சித்ரகேது “ஆண் அல்லது பெண்! ஆகா!” என்றார். சுருதன் “அதற்கு முன் இந்த அழுக்குமுனிவன் அவன் குலத்தையும் குடியையும் சொல்லவேண்டும்…” என்றார்.
கிராது “அரசி, வருக! வந்து தங்கள் மணிவயிற்றை காட்டுக!” என்றார். சாம்பன் ஒசிந்து நடந்து அருகே வந்து வயிற்றைக் காட்டி “என் கருவில் வளர்வது ஆணா பெண்ணா, முனிவரே?” என்றார். விஸ்வாமித்ரர் “நான் கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். இந்தக் கருவில் வளர்வது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல” என்றார். “இதற்குள் வளர்வது ஓர் இரும்பு உலக்கை. இது பிறந்து உங்கள் குடியை ஒரு துளியும் எச்சமின்றி அழிக்கும். இந்நகரை கற்குவியலாக ஆக்கும். நீரில் மூழ்கடிக்கும்… அறிக தெய்வங்கள்!” என்றார்.
ஆனால் அவர்கள் இருந்த நிலையில் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “ஆ! இரும்பு உலக்கை!” என்று சுருதன் சிரித்தார். “முனிவரே, அந்த இரும்புலக்கை ஆணா பெண்ணா?” என்று விருஷன் கேட்டார். சித்ரகேது “இரும்புலக்கைக்கு என்ன பெயரிடுவது?” என்றார். கிராது “பெயரை நான் இடுகிறேன், முசலன்” என்றார். “டேய், அது ஆணல்ல பெண்” என்றார் கவி. “முசலி! முசலி!” என்று பலர் கூச்சலிட்டனர். “அது ஆணுமல்ல பெண்ணும் அல்ல. ஆகவே முசலம்!” என்றார் சுமித்ரன். “முசலம் எழுக! முசலம்!” என்று சகஸ்ரஜித்தும் விஜயனும் கூச்சலிட்டார்கள்.
“முசலத்தின் வரவை அறிவித்த முனிவருக்கு மூன்று வெள்ளிக் காசுகள் பரிசு… தம்பி வசு, இந்த அழுக்குவிலங்கை இட்டுச்செல். இதற்கு மூன்று வெள்ளிக்காசுகளை தரையில் வீசிக்கொடு. இது கவ்வி எடுத்துக்கொண்டால் ஓடவிடு… இல்லையேல் சாட்டையால் இதற்கு தவழ்வது எப்படி என்று சொல்லிக்கொடு” என்றார் சுமித்ரன். சாம்பன் “என் வயிற்றில் இதோ இரும்புலக்கை அசைகிறது! ஆ!” என்று நடிக்க மற்றவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். விஸ்வாமித்ரர் தலைவணங்கி அறையிலிருந்து வெளியே சென்றார்.
சீற்றத்துடன் அவருக்குப் பின்னால் ஓடி “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவிய வசுமான் வாளை உருவி “என்ன சொல்லிவிட்டு செல்கிறீர்கள்? இவ்வண்ணம் ஒரு சொல்லை உரைத்தபின் இந்நகரத்திலிருந்து வெளிச்செல்ல முடியாது உம்மால்!” என்றார். “உங்களில் எவரேனும் துணிவிருந்தால் என் தலையை வெட்டலாம்” என்று கூறி விஸ்வாமித்ரர் நடந்தார். மேலும் பின்னால் ஓடிய வசுமான் வாளை உருவி அவர் தலையை வெட்டினார். ஆனால் அரைக்கணத்தில் திரும்பி அவர் வசுமான் கண்களை பார்த்தார். அந்த நோக்கு அவர் உடலில் ஏதோ நரம்பு ஒன்றை அறுத்ததுபோல் அவர் உடல் விதிர்த்து பக்கவாட்டில் விழுந்தது. அவர் வாயில் நுரை வர இழுத்துக்கொண்டார்.
விஸ்வாமித்ரர் திரும்பி சூழ நின்ற மூன்று காவல்வீரர்களை பார்க்க அம்மூவருமே அக்கணமே நிலத்தில் விழுந்து வலிப்பு கொண்டனர். அங்கிருந்த அத்தனை வீரர்களும் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டு விலகிச்சென்று படைக்கலங்களை கீழே போட்டு சுவரோரமாக நின்றனர். அவர் இறங்கி வெளியே சென்று அரண்மனை நீங்குவது வரை அவருக்கு எதிரே வருவதற்கு எவரும் துணியவில்லை. அவர் மதயானை என நடந்து துவாரகையை வகுந்து வெளியே சென்றார். செல்லச்செல்ல அவருக்கு பின்னால் அந்தத் தீச்சொல் பரவியது.
அன்று நிகழ்ந்தது எதையுமே சாம்பன் அறியவில்லை. களியாட்டுக்குப் பின் அவர் வழக்கம்போல் நிலையழிந்து விழுந்தார். அவரை கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்கவைத்தனர். துயிலில் அவர் ஒரு கனவு கண்டார். அவர் பெண்ணாக பேற்றுநோவு கொண்டு துடித்தார். அவருடைய கால்களுக்கு நடுவே தசை கிழிந்து பிளந்தது. உள்ளிருந்து சலமும் குருதியுமாக ஒரு பொருள் வெளியே வந்தது. அது ஓர் உலக்கை. அவர் அதை தன் காலால் தட்டி அப்பால் வீசிவிட்டு அலறினார். பிறரை அழைத்தார். அது நாகம் என குருதி படிந்த உடலை நெளித்து ஏறி மஞ்சத்தில் அவர் அருகே படுத்துக்கொண்டது.
அவர் அதை தள்ளிவிட முயன்றார். அது கரிய நிறமுள்ள இரும்புத் தடி என்றாலும் நெளிந்து அவரை பற்றிக்கொண்டு சூழ்ந்தது. அவருடைய மார்பில் பால் அருந்த முற்பட்டது. அவர் உரக்க கூச்சலிட்டு கையால் மெத்தையை ஓங்கி தட்டித்தட்டி ஏவலனை அழைத்தார். வெளியிலிருந்து ஏவலர்களும் மருத்துவர்களும் உள்ளே வந்தபோது அவர் எழுந்து அமர்ந்து வியர்த்து மூச்சிரைத்து “கொடுங்கனவு!” என்றார். “கொடுங்கனவு… விந்தையானது” என்று சொல்லி “மது… மது கொண்டு வருக!” என்றார்.
“கூறுக, என்ன கனவு?” என்று மருத்துவர் கேட்டார். சாம்பன் “ஒன்றுமில்லை. பொருளற்றது” என்றார். “மதுவின் மிச்சம் அது…” மருத்துவர் “தங்கள் நோயை கணக்கிட அது உதவக்கூடும்” என்றார். “நான் கருவுற்றிருப்பதாகவும் ஒரு குழவியைப் பெற்றதாகவும் கனவு கண்டேன். ஆனால் ஆணாகவே இருந்தேன். அது குழவி அல்ல, ஓர் இரும்புத் தடி” என்றார் சாம்பன். சூழ நின்ற முகங்கள் வெளிறின. திகைப்புடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். நான்கு நாழிகை நேரத்துக்கு முன்னர்தான் விஸ்வாமித்ரரின் அந்தத் தீச்சொல் அங்கு நிகழ்ந்திருந்தது. அது எவ்வண்ணமேனும் சாம்பனின் செவிகளுக்கு வர எந்த வாய்ப்புமில்லை. அவர் கள்மயக்கில் இருந்தார். அப்படியே துயின்றார்.
“ஆம் அரசே, அது பொருளற்ற கனவுதான். தங்கள் உடலுக்குள் ஒவ்வா உணவு ஒன்றிருக்கிறது. அவ்வண்ணம் இருக்கும்போதுதான் வாய் வழியாகவோ செவி வழியாகவோ பொருட்கள் வெளியேறுவதுபோல கனவு வரும். இது அது போன்ற ஒன்றே” என்று மருத்துவர் கூறினார். சாம்பன் மீண்டும் சற்று மது அருந்தி படுத்துக்கொண்டார். ஆனால் அவர் துயிலில் ஆழ்ந்து கொண்டிருக்கையிலேயே அவ்வாறு கனவொன்றைக் கண்ட செய்தி நகரெங்கும் பரவியது. மறுநாள் புலர்வதற்குள் நகர் முழுக்க அச்செய்தியே திகழ்ந்தது. அந்நகர் அழிய வேண்டுமென்று அரசமுனிவர் வந்து தீச்சொல்லிட்டுச் சென்றார் என்று சூதர்கள் கதை பெருக்கினர். “ஊன்தடி பிறக்கும். வாள் போழ்ந்து புதைப்பர். முளைத்தெழுந்து பெருகும். முற்றழித்து செல்லும்” என்ற சொல் நிலைகொண்டது.