மூன்று வருகைகள்.
அன்பு ஜெ,
நலமா?
இன்று தங்களின் மூன்று வருகைகள் வாசித்தவுடன், தேவதேவன் அவர்களின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது அது,
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுப்பலகையாக மிதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.
*தேவதேவன்*
பிறகு தான் தெரிந்தது இன்று தேவதேவன் அவர்களின் பிறந்தநாள் என்று, அவரின் கவிதைகள் அனைத்தும் நேரடியாக என் ஆத்மாவை தோட்டு எழுப்புவதாக இருக்கும், மற்ற கவிஞர்களின் கவிதைக்கும் இவரின் கவிதைக்கும் ஏதோ ஒரு நூலிழை வித்தியாசம் அந்த இழைதான் பிரபஞ்சமுடன் ‘நான்’ எனும் என்னுடன் அது உரையாட செய்கிறது. அவரின் கவிதைகள் அனைத்தும் மெல்லிய வருடல்கள் போல்வன. அவரை முதலாவதாக விஷ்ணுபுர விழாவில் தான் சந்தித்தேன் அந்த இரண்டு நாட்களும் அவருக்கு அருகில் அமரும் பெரும் வாய்ப்பை பெற்றேன் பெரிதாக எதுவும் உரையாடிக்கொள்ளவில்லை. நான் அறிமுகம் செய்துக்கொண்டேன். ஒரு சிறு புன்னகை. பிறகு மெளனம் தான் பெரும்பாலும். என் ஆத்ம கவியுடன் வெறும் சொற்கள் தாண்டிய மௌன உரையாடல் போதுமே. அந்த இரண்டு நாட்கள் அவ்வப்போது பேசிக்கொண்டோம் சில கவிதைகள் வாசித்துக் காண்பித்தார் அந்த நாட்கள் பெரு மகிழ்வு கொண்ட நாட்கள். இப்பெரு கவியை நீங்கள் அறிமுகம் செய்யவில்லை என்றால் அந்த வெறுமையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை. இந்த வீடுறைவு காலத்தில் அவரின் கவிதைகள் காலம் கடந்து நிற்கும் நதியில் பயணம் செய்பவை போல. எனக்கான கவியை அடைந்தேன் தங்கள் மூலம் அறிந்துக்கொண்ட அப்பெரு கவிக்கு உங்கள் வாயிலாக என் வாழ்த்துகளை சமர்பிக்கிறேன்.
மிக்க அன்பும் நன்றியும்
ரா. பாலசுந்தர்
***
அன்பு ஜெ,
ஆகா. அந்த அடைகலாங்குருவிகள் பார்த்ததும் எனக்கு அத்துனை மகிழ்ச்ச்சி. ஒரு வாரமாக ஒருத்தி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாள். அவள் அடைக்கலாங்குருவியென்றே நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது. அவள் மாடியில் தன் சோடி சகிதம் வந்து அலவலாவுவதுண்டு. படம் எடுக்க முயற்சி செய்யும் அனைத்து தருணங்களும் ஏமாற்றப்பட்டேன். அவள் விர் விர் என ஓடிவிடுவாள். கூடுகட்ட இந்த பால்கனியில் முற்பட்டு தோற்றுப்போயிருந்தாள்.
என் மாமனிடம், கண்டிப்பாக வீட்டில் ஓட்டை மாதிரி ஓர் தங்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறினேன். அவன் உம் போட்டு வைத்தேன். அடுத்ததாக சூழலுக்கு ஒவ்வாத அந்த கண்ணாடிகளை மாற்ற வேண்டுமென்றேன். சற்றே தயங்கிய அவன், ஆத்தா இது நம் வீடு அல்ல, நமக்கான கூட்டைக் கட்டும்போது அப்படி செய்வோம் என்று சொல்லிவிட்டேன். உங்கள் பதிவிற்குப் பிறகு வீட்டிலுள்ள காத்தாடிகளை களற்றச் சொல்லலாமென்றிருக்கிறேன். துரத்தி துரத்தி அடிப்பான் என்பது உறுதி ஜெ.
மன்னரின் இராச்சியத்தில் (பெரிய பல்லி)உங்களைத் தவிர்த்து அடைக்கலாம் குருவிகளும் அடைக்கலமாகியிருக்கின்றன. வாழ்க மன்னர்!
இந்த சிறிது கால லாக்டௌனில் வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பதால், பறவைகள் மற்றும் இயற்கையை இரசித்து எழுதிக் கொண்டிருந்தேன்.
அதை அடுத்தடுத்த என் இமெயிலில் பகிர்கிறேன் ஜெ. குருவிகளின் முட்டை பொறிந்தவுடன் படங்களைப் பகிரவும். பார்க்க ஆர்வமாக உள்ளேன்.
அன்புடன்
இரம்யா.அ
***