நற்றுணை,லீலை -கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை கொஞ்சம் தாமதமாக வாசித்தேன். இந்தக்கதையை வாசித்தபோது இதற்குச் சமானமான ஒரு தொன்மம் நம் மரபில் எங்காவது இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தக்கதை அப்படியே ஜோன் ஆஃப் ஆர்க் கதையின் பாணியில் அமைந்திருந்தது. ஜோன் தன்னுடைய 13 ஆவது வயதில் தேவதைகளை நேரில் காண ஆரம்பித்தாள்.படிப்பறிவில்லாத பிரெஞ்சு கிராமத்துப்பெண் பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமைவகித்து பலமுறை பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தாள். ஒரு வீரத்தளபதியாக மாறினாள். அவளுடைய நம்பமுடியாத வீரம் அவளுடன் இருந்த தேவதைகளால் அருளப்பட்டது

Joan of Arc

அதன்பின்னர் அவள் சாத்தான் வழிபாட்டாளர் என்று பிரெஞ்சு திருச்சபையாலேயே குற்றம்சாட்டப்பட்டாள். சாதாரணமான ஒரு பெண்ணுக்கு எப்படி இந்த அளவுக்கு ஆற்றல் வரமுடியும்? எப்படி இந்தத் தடைகளை கடக்கமுடியும்? விசாரணையில் ஜோன் தன்னுடன் இருந்த தேவதைகளைப் பற்றி சொன்னாள். அவள் சாத்தான்வழ்பாடு கொண்டவள் என்று குற்றம்சாட்டப்பட்டு மதகுருக்களால் எரித்துக்கொல்லப்பட்டாள். ஆனால் பிறகு அவளை ஒரு தேசியவீராங்கனை என்று அடையாளம்கண்டனர். அவளை கொண்டடினர்.

அம்மிணி தங்கச்சிக்கும் ஆற்றல் வருவது ஜோன் ஆஃப் ஆர்க்கைப்போலவே தான். இருகதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மலைக்க வைக்கிறது.இது ஒரு மனம்சார்ந்த ‘டெம்ப்ளேட்’ ஆக இருக்கலாம். உலகம் முழுக்க இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மகேஷ்

Mangammal

அன்புள்ள மகேஷ்

இஷடதேவதை என்ற கருத்து இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இஷ்டதேவதை தன்னுடன் இருந்து தன்னை வழிநடத்துகிறது என்ற நம்பிக்கை. அது உடையவர்கள் இன்றும் உண்டு.  இங்கும் ராணி லக்ஷ்மிபாய்க்கு அப்படி இஷ்டதேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராணி மங்கம்மாளின் கதையும் ஏறத்தாழ இதுதான். அவர்களுக்கும் இதேபோல இஷ்டதேவதை வழிபாடு இருந்தது. நற்றுணை கதைக்கு மிக நெருக்கமானது ராணிமங்கம்மாளின் கதை. நற்றுணை என்ற தலைப்பே இஷ்டதேவதை, அணுக்கதேவதை என்ற கருத்தையே குறிக்கிறது

அக்கருத்தில் எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. கண்ணகிக்கு அப்படி ஒரு இஷ்டதேவதை உண்டு என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே கவுந்தியை கண்ணகியின் இஷ்டதேவதை- வழித்துணைதேவதை என்று உருவகித்து 1995ல் ஒரு கதை எழுதினேன். அதன் விரிவான வடிவை கொற்றவையில் காணலாம். கொற்றவையில் கவுந்தி நீலியாக வருகிறாள். நற்றுணை ஒருவகையில் கொற்றவை நாவலின்  இன்னொரு வடிவம்

ஜெ

***

வணக்கம் ஜெ

நற்றுணை சிறுகதையை வாசித்தேன். பெண்கள் கல்வி சாத்தியப்பட தாண்டிய பலநூறு தடைகளைக் கண்டறிய முடிந்தது. மரபுகளால் உருவாகியிருந்த  தடைகளை அங்கிருந்தே உருவான யட்சியால் அடித்து உடைத்து வென்ற பெண்ணின் கதை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. பெண்களின் ஆற்றலின் வடிவங்களில் ஒன்றுதான் யட்சியாக உருமாறியிருக்கிறது. தனக்குள் ஒரு யட்சியைக் கண்டடைய செய்யும் கதை.

அரவின் குமார்

***

லீலை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இதுவரை இந்தக் கதைவரிசையில் வந்த கதைகளில் இருந்து முழுக்க மாறுபட்டது லீலை. இதில் கவித்துவமான குறிப்புகள் இல்லை. கதைமுழுக்கமுழுக்க நடைமுறை யதார்த்தத்துடன் நிகழ்ச்சிகள் வழியாகச் செல்கிறது. ஒரு சிறிய முடிச்சுதான். கடைசியில் ஏன் அவன் சிரித்துக்கொண்டே போகிறான்? ஏனென்றால் அவன் பெண்ணின் லீலையை அறிந்துவிட்டான். அந்த வயசில் அது ஒரு பெரிய அனுபவம்தான். அவன் அவள் மேல் கொள்வது ஜூவனைல் லவ். அவன் மனதை அவள் கொள்ளை கொள்கிறாள். எம்ஜிஆர் சிவாஜி எல்லாமாம மாறி அவளுடன் ஆடுகிறான்

அவள் அப்படி ஏமாற்றிவிட்டு ஓடும்போது மனம் சோர்ந்துவிடுகிறான். ஆனால் அவளுடைய சூழ்ச்சிகளை எல்லாம் பெண்ணின் தந்திரங்களாக பார்த்ததுமே அவன் அடல்ட் ஆகிவிட்டான். இனி அவன் பெண்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் செய்வான்

சாரங்கன்

***

ஜெ அவர்களுக்கு,

லீலை சிறுகதையை படித்தேன். நீங்கள் சொல்லியவை தான், வாசகன் கதை முடிவை பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து, அதிலிருந்து முன்னகர்த்தி மேலும் விரிவான கதையை கற்பனை செய்ய வைக்கிறது. அப்படி பார்க்கையில் திருப்பமானது, ஊர் மக்களிடம் வாங்கிய பணத்தை குழுவாக எடுத்து செல்வார்கள் என்று ஊகித்தேன். அது இல்லாமல் தட்சாயிணி  அதை எடுத்து செல்வது, தட்சாயிணியாய் இருந்து ரெஜினாவாக மாறிய கதை,   கடைசியான  லீலா என்பதான திருப்பம் மூலம் சொல்லப் பட்ட துணுக்கு,  அவளுடைய கணவன் எதனால் ஜெயிலுக்கு சென்று இருப்பான் என்று மேலும் கதையை விரிவடைய வைக்கிறது.

இப்படிக்கு

மணி

***

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசித்திரைநிலவு- கடிதங்கள்