நற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

“இறைவன்” — நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது…

ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த  பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது…மெல்லிய படிமமென தேவி எழுந்து விடுகிறாள் அங்கேயே…!!

இசக்கியம்மை இழந்த வாழ்வு, அவளிழந்த பகவதி, அதனாலொரு குற்றவுணர்வு ஆழ்மனதில் நிறைக்க ஆசாரியைச் சுற்றி சுற்றி வருகிறாள்…!!  அறைக்குள் யாரோ இருக்கும் உணர்வினை அடைவது அவள்மட்டுமல்ல….!!

வாயே திறக்காத கெத்தேல் சாகிப்பின் நினைவெழுகிறது…மாணிக்கத்தை எண்ணுகையில்….அன்னமும் ஒருவகை படைப்புதானே …படைப்புக்கிறைவர்கள் எழுந்தவண்ணமிருக்கின்றனர் தங்களில்…!! பிறந்த தொன்னூறு நாட்களில் என் கைகளில் மரித்துப்போன “சாத்விகா” எழுவதை மனதிற்குள் புனைந்து கொண்டே இருக்கிறேன்…!!

அன்புடன்,

இ . பிரதீப் ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை இரண்டு நாளாக தொடர்ந்து வாசித்தேன். அதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாதநிலை. மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது தன்னை ஒரு கட்டுரை என மாயம் காட்டுகிறது. கட்டுரைக்குரிய சரியான தரவுகள் கொண்ட ஒரு நிலம் வழியாகச் செல்லும்போது சட்டென்று மிகப்பெரிய ஒரு எழுச்சியை யக்ஷி வழியாக அளிக்கிறது

அந்தப் பாட்டி சொல்கிறாள். உன் வழியிலே அரசரும் கோட்டையும் இருந்தால் அதை உடைத்துக்கொண்டு போ. உன் வழியில் தெய்வமும் கோயிலும் இருந்தால் அதையும் உடைத்துக்கொண்டு மேலே போ என்று. அந்த வரியில் எழுந்த ஆவேசம்தான் யக்ஷியாக வந்து நின்றிருக்கிறது. அதுதான் வழிநடத்திச் செல்கிறது

நூற்றுக்கணக்கான சின்னச்சின்ன செய்திகளை கோத்து கதையை அமைத்துக்கொண்டேன். அம்மிணி தங்கச்சி சைக்கிள் விடுவது ஒரு சுதந்திரப்பிரகடனம். யக்ஷியும் அவளுடன் சைக்கிளில் செல்கிறாள் என்பது ஆச்சரியமான கற்பனை

குமார் முருகேசன்

***

 

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வணக்கம். நற்றுணை மிக வலிய கதை.  நாட்டுப்புற‌ங்களில் சிறிது காலம் முன்பு கூட இது போன்ற நம்பிக்கைகள் இருந்தன.  ஆனால் அம்மிணி தங்கச்சி போல திண்மையும், நேர்மையும் இல்லாததினால் அவர்களுக்கு அந்த நம்பிக்கையின் துணை கிடைக்கவில்லை.  ஆனால் மிகுந்த நெருக்கடியான நேரங்களில் அவர்கள் தங்கள் குல தெய்வத்தையோ, விரும்பும் கடவுளரையோ துணைக்கு அழைப்பதையும், அந்த வேகத்தில் சவாலான வேலைகளைக் கூட முடிப்பதையும் கண்டிருக்கிறோம்.  ஆனால் அம்மிணி அம்மாள் போல சிறு வயதிலேயே தெய்வம் தன் கூடவே இருக்கிறது என்ற நம்பிக்கையும் துணிவும் யாருக்கும் இருந்ததில்லை.  நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும், நாராயணணே நமக்கே பறை தருவான் என்றும் வாழ்ந்த அருளாளர்கள் போலும், காந்தியடிகள், பரமஹம்சர், பாரதி போலவும் தெய்வம் கூடவே இருக்கிறது என்று நம்பிச் செயலாற்றுபவர்கள் சிலரே.

இத்தனை தடைகளையும் எதிர்த்து, துணிவுடன் போராட, தன்னுடன் ஒரு தெய்வம் இருக்கிறது என்ற நம்பிக்கை அம்மணி அம்மாளிடம் இருந்திருக்கிறது.  நல்லவற்றிற்காகப் போராடுபவர்கள் இத்தகைய ஒரு நம்பிக்கையுடனேயே இருந்திருக்கிறார்கள். நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்

***

இனிய ஜெயம்

பொதுவாக சிறுகதைகளில் மையமான கதாபாத்திரம் எதுவோ அதன் உணர்வுநிலை ஆத்மீகமான ஒரு பெரிய உணர்வு நிலையுடன் உரையாடும்போதுதான் இயல்பிலேயே அக் கதையின் உட்பரிமாணங்களுக்கு  முடிவற்ற ஆழமும் அக் கதையின் இருப்புக்கு காலம் வெளி கடந்த ஒரு சாராம்சமும் கூடுகிறது.

அமியின் பிரயாணம் கதை மானுடத்தை இயக்குவது உயிர் இச்சை மற்றும் வலிமையுள்ளதை மட்டுமே எஞ்ச வைக்கும் வன ஆற்றல் என்னும் பார்வை ஆத்மீக பின்புலம் ஒன்றுடன் உரையாடும் நிலையை கொண்டே மேற்சொன்ன வகைமைக்குள் வருகிறது.

நாஞ்சிலின் யாம் உண்பேம் கதையில் வரும் பசி வெறும் அடிப்படை ஆற்றலின் வெளிப்பாடு அல்ல. அதில் எழுவது வறுமையிலும் செம்மையை இழக்க வைக்காத மான்பை மானுடத்துக்கு கற்றுக் கொடுத்த நமது பண்பாட்டின் குரல்.

உலகம் யாவையும் கதையை இடம் காலம் கடந்த காலாதீதம் கொள்ள வைக்கும் அம்சம் அக் கதை உரையாடும் ஆத்மீக விரிவே. கு அழகிரிசாமியின் ராஜா வந்திருந்தார் போல குறிப்பிட்ட சில கதைகளை இந்த வகைமைக்கு உதாரணம் சொல்ல முடியும்.

அதே சமயம் இது போன்ற கதைகளுக்கு அதன் வெளிப்பாட்டுக் களம் காரணமாகவே அந்தக் கதைகளின் வாசிப்பு இன்ப நிலைக்கு ஒரு வசதி இருக்கிறது. ஒரு பெரிய மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்ற நிலை இது.  இதன் மறு முனையான ஒரு ஆத்மீக சாதகன் அவன் ஆத்மீக தத்தளிப்பு என்னவாக இருக்கிறது அதில் அவன் பெற்றதும் இழந்ததும் என்ன என ஒரு கதை பரிசீலிக்கத் துவங்கினால், அக் கதைக்கு வேறு விதமான சவால் துவங்கி வீசுகிறது. அக் கதையின் வாசிப்பு இன்பம் இன்னும்  நுட்பமானது . மிக சரியாக முதல் அடியிலேயே இலக்கை தைக்கும் அம்பை செலுத்தி வெற்றி பெரும் ஆர்ச்சரி விளையாட்டு அது.

இந்த வில் விளையாட்டில் வெற்றி கண்ட கதைகளில் ஒன்று இந்த காக்காய்ப்பொன் கதை.  சதானந்தருக்கு அவருக்கான மீட்பை எப்போதோ அளித்து விட்டது அந்த காகம்.  அவர் கடக்க வேண்டிய இறுதி இருள் அந்த மீட்பு அவர் கண்ணில் விழாமல் தடுக்கிறது. கதைக்குள் நித்யாவின் சொல்லில் இரண்டு குறிப்புகள் வருகிறது. முதல் குறிப்பு பொன் என்பது மின்னும் பிற பொருட்களைப் போன்றதே எனும் குறிப்பு. அந்த உண்மையை அறியவே சதானந்தர் இத்தனை நாள் தனியறையில் கிடக்க நேர்கிறது. இரண்டாவது குறிப்பு அவர் சமாதி ஆனார் எனும் சொல். இயற்க்கை எய்துதல் அல்ல அது. அது மரணம். இது சமாதி, வேறு நிலை.  அந்தக் காகம் சதானந்தருக்கு அளித்தது அந்த ‘விவேகிக்கான’ விவேக சூடாமணியைத்தான்.  முக்கியமான கதை. 

வேறொரு கோணத்தில் முற்றிலும் ஆத்மீகத் தோல்வி அடையும் சாதகர் ஒருவரின் கதையாகவும் இதை வாசிக்க முடியும். உண்மையில் சதானந்தர் பெற்றவரா? இழந்தவரா?

கடலூர் சீனு

***

அன்புநிறை ஜெ,

இன்றைய நாளை இனிதாக்கியவை  இரண்டு பதிவுகள் – மூன்று வருகைகள் பதிவும் காக்காய்ப்பொன் சிறுகதையும். கருவேப்பிலை கொண்டு வரும் அடைக்கலம்குருவியும், சதானந்தருக்கு ஒளிர்வனவற்றை கொண்டு வந்த காகமும் உங்கள் அறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்திருக்குமோ.

கணந்தோறும் மானுடனை நோக்கிக் கேள்வி எழுப்பும் பறவை – இனி காகத்தை அலட்சியமாகக் கடந்து விட முடியாது. //ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது//

ஒரே ஒரு சரியான வினாவை தவமெனப் பற்றிக் கொள்வதும் அதையே வாழ்நாள் முழுவதும் விரித்தெடுப்பதும் பின்தொடர்வதும்தான் மீட்சிக்கான  வழி. அந்த சரினான முதல் வினாவுக்கே குரு முத்தாய்ப்பாக வணக்கம் சொல்கிறார். அகல் விளக்கின் ஒளி கூட கண்ணைக் கூசும் அளவுக்கு முற்றிருளில் ஒடுங்கி, சதானந்த தீர்த்தர் அந்த மின்னைக் கண்டு கொள்கிறார்.

குருகுலத்தில் இந்த தினங்களில் நிகழ்ந்து முடிந்திருக்கவேண்டிய இலக்கிய முகாம் கூடுகையைப் பற்றி நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று யூகலிப்டஸ் மரங்களின் ஓசையும் குளிர்காற்றுமாக காலை குருகுலத்தில் விடிந்தது. இப்படி ஒரு கதைக்கு மிக்க நன்றி.

மிக்க அன்புடன்,

சுபா

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54
அடுத்த கட்டுரைஇறைவன் ,வனவாசம்- கடிதங்கள்