கடிதங்கள்,பதில்கள்

வணக்கம் சார்,

அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும் கனத்தை தந்தது.

சோற்றுக்கணக்கில் நீங்கள் சம்பவங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் எனக்கு ஆத்திரம் அடைத்து கொண்டு வந்தது. அப்படியே நீங்கள்  உங்களது குரலில் என் முன்னாலமர்ந்து சொல்லுகிறீர்கள் நான் கேட்டவாறு இருக்கிறேன் என்று எடுத்துக்கொண்டேன். பின்பு ஓலைச்சிலுவை நீங்கள் சொற்களை பிரவாகமாக கொட்டி கொண்டே போனது மாதிரி இருந்தது.உங்களை பின் தொடர்ந்து வரும் வழியெல்லாம் எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களுக்கு எத்தனை எத்தனை முகங்கள். இந்த கதை தொகுப்பு பழையது தான் தீவிரமாக வாசிப்பவர்கள் தீரத்தீர படித்து முடித்ததை இப்பொழுது தான் நான் வாசித்தே இருக்கிறேன் என்பதில் சிறு குற்றவுணர்வும் இருக்கிறது. நன்றி சார், பின்பு ஒரு சிறு கேள்வி அல்லது தெளிவு தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் உங்களது பிறந்த நாள் போனது, அதற்கு ஏராள ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தது கூடவே காழ்pபுகளும். வாழ்த்து கூறவில்லை எனினும் பிரச்சனையில்லை, கூறுவது மாதிரி ஆரம்பித்து காழ்ப்பை காட்டிகொள்பவர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட பதிவுகள் உங்கள் பார்வையில் பட்டிருக்கும், அதை எவ்வாறு கையாண்டீர்கள். பிறகு சமீபத்தில் பத்து லட்சம் காலடிகள் என்ற கதை எழுதி இருந்தீர்கள் இல்லையா, அதை திரும்ப திரும்ப படித்து மலைத்து போய் இருந்தேன்.

ஆனால் அதற்கும் அத்தனை வசவுகள்,விமர்சனங்கள். இதெல்லாம் எதாவது ஒரு இடத்தில் எழுதுகையில் உங்களை சங்கடம் கொள்ள செய்கிறதா?? அப்படி செய்யுமாயின் அதிலிருந்து எவ்வாறு உங்களை தளர்த்தி கொள்ளுகிறீர்கள்.

நன்றி

செந்தில்.

***

அன்புள்ள செந்தில்

அந்த விமர்சனங்களை வேறுவேலை ஏதும் இல்லை என்றால், வம்புகளில் ஆர்வமிருந்தால், வாசித்துப் பார்க்கலாம். இந்த விமர்சனங்களில் எவையேனும் ஓர் எழுத்தாளன் போகட்டும், இலக்கிய நுண்ணுணர்வுகொண்ட ஓர் அடிப்படை வாசகனால் பொருட்படுத்தும் தகுதி கொண்டவை தானா என்று பாருங்கள்.

மிக எளிய அரசியல்சரிகளுக்கு, கட்சி அரசியலின் நிலைபாடுகள் மற்றும் எளிய காழ்ப்புகளுக்கு, புழக்கத்தில் இருக்கும் சில்லறைக் கோட்பாடுகளுக்கு அப்பால் இவர்களால் எதையாவது சொல்ல முடிகிறதா? ஒரு நல்ல வாசகன் தானே அவதானிக்காத ஒரு சிறு அவதானிப்பையாவது முன்வைக்க இவர்களால் முடிகிறதா?

மிகமிக மேலோட்டமான இரும்புமட்டை வாசிப்புகள். அல்லது சில்லறை தகவல்பிழைகளை கண்டடைவது. தங்களுக்கு தோன்றிய தர்க்கப்பிழைகளை சுட்டிக்காட்டுவது. அதன்பின் ஒரு அசட்டுக் கெக்கலிப்பு. பழிப்புக் காட்டல். இவ்வளவுதானே?   

சென்ற நூறாண்டுகளாக தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கியம் குறித்து பேசப்பட்டிருக்கும் எதனுடனாவது இவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்தக் கதைகளில் ஒரு நல்ல வாசகன் கண்டடையும் அறிவார்த- அழகியல்சார்ந்த தளங்களில் இவர்களால் நுழைய முடியுமா? நம் முழங்காலுக்கு கீழே நின்று புழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை தன்னம்பிக்கை. எத்தனை தெனாவெட்டாக இலக்கியவாதியை வழிநடத்திச் செல்ல, ஆலோசனை சொல்ல, கடைத்தேற்ற முயல்கிறார்கள். இலக்கியம் கற்ற, நுண்ணுணர்வுள்ள எந்த வாசகனும் என்றும் இந்த ‘தன்னம்பிக்கை’யை அடையமுடியாது. அபாரமான அறியாமை இருந்தாலொழிய இதை பிறர்சென்றுசேர்வது கடினம். இவர்களுடன் எவரும் உரையாட முடியாது. அவர்களுக்கு தகுதியான எதிர்வினை என்பது புன்னகையுடன்  ‘போடா டேய்’ என்று சொல்வதுதான். இலக்கியவாதிகள் அனைவருக்கும் நான் சொல்வது அதுவே. இலக்கிய வாசகருக்கும் அதையே சொல்வேன்.

எனக்கல்ல என் முன்னோடி இலக்கியவாதிகளுக்கு இங்கே என்னதான் கிடைத்திருக்கிறது, இதைப்போன்ற அல்லது இன்னும் கேவலமான வசைகள் அன்றி? சுந்தர ராமசாமிக்கு, க.நா.சுவுக்கு, புதுமைப்பித்தனுக்கு? அவர்களைப்பற்றி எழுதப்பட்டவை இங்கே இன்று கிடைப்பதில்லை, ஆகவே கௌரவமாக இருக்கிறது. இது இலக்கியம் என்னும் நுண்மையான இயக்கத்தை புரிந்துகொள்ளமுடியாதவர்களின் பதற்றம். அவர்கள் அடையும் அச்சம். இது எப்போதும் தமிழில் இப்படித்தான் இருந்திருக்கிறது

இந்தப் பெருச்சாளிகளை இந்த அளவுக்கேனும் மிரள வைக்கவில்லை என்றால் நம் பந்தங்களுக்கு என்ன பொருள்?

ஜெ

***

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுக்கு வரும் கடிதங்கள் சொற்றாடல்களிலும், இலக்கியத்தனத்திலும் நீங்கள் உருவாக்கிய குட்டி எந்திரன்கள் போலவே ஜெமோவை பிரதிபலிப்பதாய் உணர்கிறேன். இதனாலேயே உங்களுக்குக்  கடிதம் எழுதுவதையும் முடிந்தவரை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

அது இருக்கட்டும். பலிக்கல் படித்துவிட்டு  நண்பனிடம் பேசும்போது, ஆசான் கொன்னுட்டார் தாயோளி என்று வாய் தவறி சொல்லிவிட்டேன். கடைசியில் சங்கரன் போற்றியின் உள்ளே கேறியது  இறைவன்தான் என்றால் கடைசியில் போனால் போகட்டும், இருவரும் சின்னவர்கள் தானே என்று மன்னித்து முதலிலேயே விடாமல் அந்த நிலத்தை வாங்க முயற்சித்தவனுக்கும் அடி விழுவதை விதி என்று தான் சொல்லமுடியும். ஒருவேளை நிலத்துக்கான முழு பணத்தையும் ஜார்ஜ் தாமஸ் கொடுக்க முன்வந்திருப்பாரேயானால் அவர் தப்பிப் பிழைத்திருக்க வழி இருந்திருக்கும். Leaving lot of loose ends ஒரு மகா கலை.  வாசகன் என்ன வேண்டுமானாலும் யூகிக்கட்டும். எது தேவையோ அது அல்ல தர்மம். எது மற்றவர்க்குத் தேவையோ அதே தர்மம். ஓவுசெப்பச்சன் வரவுக்காக காத்திருக்கிறேன்.  வாழ்க வளமுடன்.

நன்றியுடன்,

பாலு.

மதுரை

***

அன்புள்ள பாலு,

நீங்கள் சொல்வது ஓர்அளவு வரை உண்மை. ஆனால் இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். மீண்டும் நீங்கள் எழுதுவதிலிருந்து நீங்கள் என் தளத்தை படிப்பதில்லை என்று தெரிகிறது.

ஒன்று, நீங்கள் முகநூல் உட்பட இன்று பொதுப்புழக்கத்தில் இருக்கும் நடையைப் பாருங்கள். நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தின் நடையையே பாருங்கள். எல்லாமே அச்சு அசலாக ஒரே நடை. ஆனால் அது தூசி போல எல்லா இடங்களிலும் இருப்பதனால் உங்களுக்கு தெரியவில்லை. இயல்பாக எண்ணுகிறீர்கள்

அந்தப் பொதுநடைக்கு அப்பால் இலக்கியச்சூழலில் பல நடைகள் உள்ளன. அந்த நடைகளில் சமகாலத்தைய முகப்பு எழுத்தாளர்களாக கருதப்படுபவர்களின் நடையாக அவை தொடக்கநிலை வாசகர்களால் கருதப்படுகின்றன. உண்மையில் அவ்வாறல்ல, அவை பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு நடையின் ஒரு பகுதிதான். அவ்வெழுத்தாளர்களில் இன்று வெளிப்படுகிறது.

என் உரைநடை சுந்தர ராமசாமியின் உரைநடையின் நீட்சி. அவர் க.நா.சு மற்று மு.தளையசிங்கத்தின் நீட்சி. அவருக்கு மலையாள முன்னோடிகளும் உண்டு- எம்.கோவிந்தன் போல. அவர்களே என் முன்னோடிகள்.அப்படியே அது மேலும் பின்னால் செல்லும். இந்த நடை சிறுசிறு மாறுதல்களுடன், வளர்ச்சிநிலைகளுடன் இங்கே வந்து சேர்ந்துள்ளது – மேலும் வளர்ந்து செல்லும்.

இந்த நடையின் வட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் நுட்பமான தனித்தன்மையைக் கொண்டிருப்பார்கள். பொதுத்தன்மையையும் கொண்டிருப்பார்கள். உள்ளே புதிதாக நுழைந்து பொதுவாக வாசிப்பவர் எல்லா நடையும் ஒன்றே என்று எண்ணுவார்கள்.  உள்ளே வந்து வாசிக்க வாசிக்க தனித்தன்மைகள் ஓங்கித்தெரியும்.

இதுவே என்னைத் தொடர்பவர்களின் நடையும். அவர்கள் என்னை தொடரவில்லை. என் நடை அமைந்திருக்கும் ஓர் அறிவுச்சூழலை, மொழிச்சூழலைத்தான் தொடர்கிறார்கள். சுந்தர ராமசாமியை, க.நா.சுவை தொடர்கிறார்கள். இந்த பொதுவான வட்டத்திற்குள் வந்து அமைகிறார்கள். புதிதாக வந்தவர்களுக்குத்தான் அவர்கள் என் நடையில் எழுதுவதாக தெரியும்.  இந்த பொதுவான குறைப்புரிதல்கள் எப்போதும் சூழலில் உண்டு.

சென்றதலைமுறையை விட இந்த தலைமுறையில் ஓர் ஆசிரியரின் மொழிநடை பிறரில் செலுத்தும் செல்வாக்கு மிகுதி. ஏனென்றால் இணையதளம் வழியாக ஒவ்வொருநாளும் என்னை படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு முன்பு இல்லை. இச்செல்வாக்கைச் செலுத்துவதற்காகத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். செல்வாக்கு இருந்தால்தான் நான் செயல்படுகிறேன் என்பதற்கு பொருள் இருக்கிறது. அன்றி, செல்வாக்கே இல்லை என்றால் நான் பொருளற்றவன்.

இந்தச் செல்வாக்கு தன்மேல் உருவாகக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன் என் வாசகன் அல்ல. அவன் தன்னை பொதுநடைக்குள் கொண்டு சென்று ஒளித்துக்கொள்வான். முகநூல் நடையில் ,வாரஇதழ் நடையில் எழுதத் தொடங்குவான். அதில் எந்த உள்ளுறைந்த அறிவுத்தளமும் இல்லை. அது தனித்தன்மையே அற்றது. ஆகவே அனைவரும் அதை எளிதில் சென்றடைவார்கள். விளைவாகச் சில்லறை வாசகர்கள் அதை எழுதுபவர்களுக்குக் கிடைக்கும். 

ஆனால் மெய்யான அறிவுத்தேடல் கொண்டவன் அந்த பொதுச் சூழலால் நிறைவடைய மாட்டான். எளிய ஏற்புகளில் மகிழவும் மாட்டான். வலுவான அறிவுச்சூழலுக்குள் நுழைந்து அதன் உச்சத்தை தான் அடைந்து அதை கடந்துசென்று தன் தனித்தன்மையை அதற்குள் நிறுவுவான் நான் அதைச் செய்தேன்.அத்தனை நல்ல எழுத்தாளர்களும் செய்வது அதையே. இலக்கியத்தின் சவாலே அதுதான். 

ஒன்று கவனித்திருக்கிறேன். இந்த அறிவுச்சூழல் – மொழிச்சூழலுக்குள் இருப்பவர்களுக்கே இந்தக் கதைகளும் கருத்துக்களும் சரியாகச் சென்று சேர்கின்றன. அவர்களுக்கே தொடர்ச்சி இருக்கிறது.

என் நடையின் பாதிப்பே இல்லாமல் ஒரு கடிதம் எனக்கு வந்தால் [அதாவது சுந்தர ராமசாமி க.நா.சு என செல்லும் ஒரு பெரியவட்டத்தின் மொழிநடையே இல்லாமல் அக்கடிதம் இருந்தால்] அதில் பெரும்பாலும் பிழையான, குறைவான புரிதலே இருக்கும்.

வரும் கடிதங்களின் நடைகள் பலவகை. முகநூலின் மொழிநடை என்றால் அதில் அந்தரங்கமான வாழ்க்கையின் சுவடு இருந்தாலொழிய அதை பொருட்படுத்தவேண்டியிருக்காது. சுஜாதாபாணி நடை என்றால் பெரும்பாலும் கவித்துவம், தரிசனம் ஆகியவை கருத்தில்கொள்ளப்படாமல் ஒர் உலகியல்தளம் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கும்.  வாரஇதழ்களின் நடையுடன் கடிதங்கள் இருந்தால் பெரும்பாலும் கதைமுடிச்சு, சஸ்பென்ஸ்கள் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கும்.  

ஏன்? நான் என் தொடர்எழுத்து வழியாக ஓர் அறிவுச்சூழலை — நுண்ணுணர்வுச் சூழலை உருவாக்குகிறேன். அந்த அறிவு — நுண்ணுணர்வுச் சூழல் அதற்கான கலைச்சொற்கள், சொற்றொடர்கள் வழியாகவே பரிமாறப்பட முடியும். அறிவுச்சூழல் என்பதும் மொழிச்சூழல் என்பதும் வேறுவேறல்ல. ஆகவே இதற்குள் வருபவர்கள் இந்த மொழிக்குள்தான் வருகிறார்கள். அதுவே இயல்பானது, இன்றியமையாதது

இந்த மொழிச்சாயலே இல்லாத ஒருவர் எப்படிப்பட்டவர்? அவர் வேறு ஒரு மொழிச்சூழலில் இருக்கிறார். அந்த அறிவுச்சூழலில் புழங்குகிறார். நான் உருவாக்கும் அறிவுச்சூழல் — நுண்ணுணர்வுச்சூழல் — மொழிச்சூழல் அவருக்கு முற்றிலும் அன்னியமானது. சும்மா எட்டிப்பார்க்கிறார். புரிந்துகொள்ள முயல்கிறார். இங்குள்ள ஒன்றை கவ்வி கொண்டுசென்று தான் புழங்கும் சூழலில் வைத்து புரிந்துகொள்ள முய்ல்கிறார்

இங்கு இந்த மொழிச்சூழலில் உள்ள எவரும் ஒரே மொழியை புழங்குபவர்கள் அல்ல. இருபதாண்டுகளுக்கு முன்பு சுகுமாரன், நான், யுவன் சந்திரசேகர் என பதினைந்துபேர் சுந்தர ராமசாமியின் மொழியில் எழுதுபவர்கள் என ஒரு மார்க்ஸிய விமர்சகர் எழுதினார். இன்று எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். நாங்கள் முற்றிலும் வேறானவர்களாக ஆகிவிட்டோம். ஆனால் மிக விரிந்த அளவில் நாங்கள் ஒரே மொழிச்சூழலைக் கொண்டவர்களும்தான்.லக்ஷ்மி மணிவண்ண, சங்கர ராமசுப்ரமணியன் என்று அடுத்த தலைமுறை ஒன்று உள்ளது. நீங்கள் பார்ப்பது அதற்கும் அடுத்த தலைமுறை

இந்தக்கதைகளை எவரும் வாசிக்கலாம், எப்படியும் வாசிக்கலாம் அவர்களின் வசதி. ஆனால் இவை நான் இருக்கும், நான் விரித்து உருவாக்கும் மொழி – சிந்தனைச் சூழலுக்குள் வருபவர்களுக்காகவே முதன்மையாக எழுதப்படுகின்றன. அவ்வகையில் இவை ஒரு சிறுவட்டத்திற்குள் நிகழும் உரையாடல்கள்தான்.  ‘வெளியே’ இருந்து வருபவர்களின் திகைப்பைப் புரிந்துகொள்கிறேன்

ஒரு சிறு கடிதத்தில்கூட உங்களால் உங்கள் எண்ணங்களைச் சீராகச் சொல்லமுடியவில்லை. ஒரு புதிய கோணத்தைச் முன்வைக்க முடியவில்லை. உங்கள் நடையில் மிகச்சிறிய தனித்துவம்கூட இல்லை. பொதுப்புழக்கத்தில் இருக்கும் ஒர் உவமையைக் கையாள்கிறீர்கள். சினிமா உவமை இல்லாமல் தமிழகத்தில் பொதுச்சூழலில் எவரும் உரையாடுவதில்லை, நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள். இன்னும் எழுதினால் ஒரு வடிவேலு மீம் போடுவீர்கள்.

நீங்கள் வருந்தவேண்டியது இந்த அடையாளமின்மைக்காக. ஆனால் தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த மொழிச்சூழல் ஒன்றின் சாயலைக் கொண்டவர்களை நீங்கள் ஏளனம் செய்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து எங்கும் செல்லமுடியாது, அவர்கள் மிகச்சிறந்ததில் இருந்து மேலும் எழும் வாய்ப்பு கொண்டவர்கள். நான் உங்களை புண்படுத்தவில்லை, எண்ணிப்பாருங்கள் என்று கோருகிறேன்

என் வாசகர்களில் அவ்வப்போது சிலர் தங்களிடம் இருக்கும் இந்த மொழிச்சாயலைப் பற்றி பிறர் ஏளனமாக ஏதேனும் சொல்வதை சொல்லி வருந்துவதுண்டு. நான் சொல்வேன், அப்படி ஏளனம்செய்பவர்களின் மொழிநடையைப் பாருங்கள் .எவ்வளவு பரிதாபமான பொதுநடை. அந்த நடைகொண்ட ஒருவர் உங்கள் செறிவான தீவிரமான நடையைப் பார்த்து மிரளாமல் இருக்கமுடியுமா, அந்த மிரட்சியே ஏளனமாக வெளிப்படுகிறது என்று.

ஒரு குறிப்பிட்ட மொழிநடை என்பது ஓர் அறிவுத்தரப்பு. அது ஒருவரில் தோன்றி முடிவது அல்ல. அது ஒரு அறிவார்ந்த சூழல்.

ஜெ

***

பலிக்கல்[சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைஇறைவன் ,வனவாசம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநஞ்சு [சிறுகதை]