‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54

பகுதி நான்கு : அலைமீள்கை – 37

தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன். எனினும் எளியோன், இறையருளால் மட்டுமேதான் காக்கப்படவேண்டும் என்று எண்ணுபவன். என்னைப்போல் ஒருவனுக்கு தெய்வங்கள் இறங்கிவந்தாக வேண்டும். கடையனுக்கும் கடையனுக்குக் கூட கையேந்தி பெறமுடியும் என்ற இடத்திலேயே தெய்வங்கள் இருக்கவேண்டும். பழி சூழ்ந்தவனுக்கு இறங்கி வருகையிலேயே தெய்வங்கள் தம் பெருமையை மண்ணில் நிலைநாட்டிக்கொள்கின்றன.

தாங்கள் எனக்கு கனிவதற்கான அனைத்து வழிகளும் அடைத்திருப்பதாகவே இருக்கட்டும். எனினும் ஒன்றின் பொருட்டு தங்கள் கை நீண்டுவந்து என்னை தொடலாம். நான் இங்கு வந்திருப்பது என் உயிருக்காக அல்ல, என் மைந்தர் உயிருக்காக. என் வாழ்வில் நான் எனக்கன்றி எவருக்காகவேனும் இவ்வுலகையே விழைவு கொண்டேனெனில், என்னை துளிகூட எண்ணாமல் எதன்பொருட்டேனும் போராடுவேன் எனில், எவருக்காவது என்னை முற்றளிப்பேன் எனில் அது என் மைந்தருக்காக மட்டுமே.

மிக மிகத் தொன்மையான உணர்வு அது. மானுடர் வளர்த்துக்கொண்டதல்ல, தெய்வங்கள் மானுடரில் பொறித்து மண்ணுக்கு அனுப்பியது, அனைத்து உயிரிலும் திகழ்வது, அதன் பொருட்டு எனக்கு அதை நீங்கள் அருளலாம். எனக்கு வாழ்க்கையை அளிக்கலாம். தந்தையே, தாங்கள் எண்ணினால் என்னை காப்பாற்ற முடியும், என் மைந்தரையும் மனைவியையும் விடும்படி ஒரு ஆணை பிறப்பியுங்கள். தங்களுடையதென்று ஒரு சொல் எனக்கு அளிக்கப்படட்டும். இங்கிருந்து கிளம்பிச்சென்று என் உடன்பிறந்தார் முன் பணிகிறேன்.

என் குருதியினர் விடுதலை செய்யப்படட்டும். அதற்கு மாற்றாக என் தலையை அளிக்கிறேன். என் மைந்தர் எங்கேனும் சென்று வாழட்டும். யாதவ நிலத்திற்கு அவர்கள் செல்லமாட்டார்கள். ஒருபோதும் என் நினைவை அவர்கள் பேணமாட்டார்கள். யாதவர் என்ற அடையாளத்தையே அவர்கள் சூடிக்கொள்ளமாட்டார்கள். அச்சொல்லுறுதியை அவர்களுக்கும் தங்களுக்கும் நான் அளிக்கிறேன். என் பொருட்டு கனியுங்கள். தந்தையே, யாதவ குலத்தின் அழிவு என்னிலூடாக நிகழ்ந்தது உண்மை, ஆனால் நான் ஒரு கருவி என்று தாங்கள் அறிவீர்கள்.

தன்னை ஒரு கருவி எனக் கருதி விழைவை நாடி படைக்கலம் ஏந்திச்செல்வதல்லவா ஒரு ஷத்ரியன் கொள்ளவேண்டிய நெறி? தாங்கள் எழுதிய ஐந்தாவது வேதம் உரைப்பது அது அல்லவா? நான் குலமழித்தோன் எனில் தங்கள் சொல்கேட்டு வில்லேந்திய தனஞ்சயனும் குலத்தை அழித்தவன் அல்லவா? எவரை கொல்கிறோம்? எவர் கொல்லப்படுகிறார்? கொல்பவன் நான் கொல்லப்படுபவன் நான் என்று தங்களில் எழுந்த விண்பேருருவன் உரைத்தான் அல்லவா? உற்றார் உறவினர் என்று பார்க்கவேண்டாம், புவியில் ஒருவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமை எதுவோ அதை செய்க என்று சொன்னவர் நீங்கள் அல்லவா?

தந்தையே, உங்கள் ஒவ்வொரு சொல்லையும் இங்கு வரும்போது எண்ணிக்கொண்டிருந்தேன். அதன்பொருட்டே நான் நின்றேன் என்று உணர்ந்தேன். ஏனெனில் நான் ஷத்ரியன் என்று தன்னை அறிந்தவன். ஷத்ரியன் மண் விழைவதும் வெற்றியை நாடுவதும் புகழ் தேடுவதும் இயல்புதானே? இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமைய வேண்டும் என்ற உங்கள் சொல் அழிவற்றது அல்லவா?

தந்தையே, பறவைச் சிறகெரித்து, புழுக்குலம் அழித்து, மரங்களில் நா சுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை உங்கள் நூல் அல்லவா உரைத்தது. அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர். இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம். நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப் படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன என்னும் உங்கள் சொற்களையே நான் என் வழிகாட்டி என கொள்கிறேன்.

தந்தையே, இன்று என் குடிக்காக நான் வந்து இரந்து நிற்பதுகூட ஷத்ரிய அறத்தின்படிதானே? தந்தையே, நான் கோழை அல்ல. நானும் நின்றிருந்த தேரில் என் உற்றாரைக் கண்டு ஒருகணம் கைதளர்ந்தவன்தான். உங்கள் சொல்லே என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டவர்கள் என்று நீங்கள் உரைத்தீர்கள். அவர்களை நான் கொல்லவில்லை எனில் எவரேனும் கொல்லப்போகிறார்கள் என்றீர்கள். நான் கொன்றவர்களும் உங்களால் முன்னரே கொல்லப்பட்டவர்கள், அன்றி இனிமேல் கொல்லப்படவிருப்பவர்கள். உங்கள் மைந்தர்களே ஆனாலும்.

விண்ணில் நிறைவையும் மண்ணில் புகழையும் நான் அடைவதற்கான வழி என்பது போரிடுவது. ஆகவே போரிடுக என்ற சொல்லை என் செவியருகே தாங்கள் உரைத்த ஐந்தாவது வேதம் கூறிக்கொண்டே இருந்தது. நான் இயற்றியதெல்லாம் அதன்பொருட்டே. அதன்பொருட்டே அழித்தேன். எனில் அவ் அழிவும் தங்கள் சொல்லிலிருந்து எழுந்தது. இனி நாளை ஒரு ஆக்கம் உருவாகுமெனில் அதுவும் உங்கள் சொல்லிலிருந்தே எழட்டும். என்னிலிருந்து இனி ஒரு ஆக்கம் நிகழாதென்று நான் அறிந்திருக்கிறேன். என் மைந்தர் எங்கேனும் சென்று புகழ்கொண்டு வென்று வந்தார்கள் எனில் அது தங்கள் சொல் முளைத்ததென்றே ஆகுக!

தந்தையே, வேதத்தில் வாழ்பவன், ஐந்தாம் வேதத்தை உரைத்த தலைவன், வாழும் வேதத்தின் விழுப்பொருள் நீங்கள். உங்களால் உரைக்கப்பட்ட அவ்வேதத்தை எண்ணி செயல்சூழ்ந்தவனாகிய நான் உங்களை வணங்கி கோருகிறேன், என்னை காத்தருள்க! எனக்கருள்க! அளிகூர்க!

 

பிரதிபானு இளைய யாதவரின் குடிலின் வெளியே மண் மெழுகிய சிறு திண்ணையில் கைகூப்பி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் அச்சொற்களின் ஒரு பகுதியை உரைத்தான் . ஒரு பகுதியை நெஞ்சில் நிகழ்த்தினான். பிறிதொரு பகுதியை எங்கோ கனவில் தொட்டு பெருக்கிக்கொண்டிருந்தான். பிறிதொரு பகுதி மிக ஆழத்தில் சொல் வடிவே அடையாது நின்று தவித்துக்கொண்டிருந்தது. அனைத்துச் சொற்களும் வழிந்து விலக எச்சமிலாது அகம் முற்றும் வழிந்தொழிய அவ்வெறுமையில் திளைத்தபடி அவன் அமைந்திருந்தான்.

அத்தருணத்தில் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏதுமில்லை என்று தோன்றியது. அத்தருணத்தில் இருத்தலே இன்மை என்று இருந்தது. அங்கு இருந்தது ஒரு பெரும் அடியிலா அகழி. அன்போ கொடையோ அளியோ வந்து பொழிந்தால்கூட அதனூடாக கடுவெளியின் வெறுமை நோக்கியே சென்று சேரும். பின்பு அவன் மீட்டு தன்னை தேற்றிக்கொண்டான். தானென உணர்ந்தான். பெருமூச்சுடன் திரும்பிவந்து தன் உடல் மேல் படிந்து அமர்ந்தான். கண்களிலிருந்து வழிந்து விழிநீர் உலர்ந்து கோடாகியது. நடுங்கிக்கொண்டிருந்த இரு கைகளின் விரல்களையும் கோத்து இறுக்கி அதைத் தூக்கி அதன்மேல் நெற்றியை வைத்து முகம் தழைத்து உடல் குறுக்கி உடல் விதிர்க்க அமர்ந்திருந்தான்.

பின்னர் நெடுமூச்சுடன் நிமிர்ந்து “கூறுங்கள் தந்தையே, ஒரு சொல்லேனும் கூறுங்கள்” என்றான். இளைய யாதவர் அவன் சொற்களை கேட்டவர் போலவோ, அச்சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் போலவோ, அக்குடிலுக்குள் தர்ப்பைப் புல் விரித்த பாயில் கால் மடித்து அமர்ந்து கைகளை மடிமேல் கோத்து வைத்து விழிகள் தழைந்திருக்க ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். “கூறுக தந்தையே, ஒரு சொல்லேனும் கூறுக!” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“தங்கள் சொல் பெறாது இங்கிருந்து நான் எழப்போவதில்லை, வேண்டுமானால் எழுந்து தங்கள் கைகளால் என்னை கொல்லலாம். என் பிழைகளுக்கு அது பொறுப்பாகும். ஆனால் சொல்லின்றி எனை நீங்கள் இங்கிருந்து அகற்றப்போவதில்லை” என்று அவன் சொன்னான். அவர் அவன் சொற்களால் தொடப்படாதவராக தன்னுள் நிறைந்த புன்னகையின் ஒளியுடன் அசைவின்றி அவ்வாறே அமர்ந்திருந்தார். அவரை நோக்கியபடி அவன் அங்கு அமர்ந்தான். அந்தப் புன்னகை முதலில் அவனை துணுக்குறச் செய்தது.

“இப்புன்னகைக்கு என்ன பொருள்? உங்கள் ஒரு சொல்கூட இப்புவியில் இல்லாமல் அழியவிருக்கிறது. உங்கள் சொல்லை நிலைநிறுத்த வேண்டுமெனில் நீங்கள் உரைத்த சொல்லும் உங்கள் நினைவும் ஒரு அரசமரபால் பேணப்படவேண்டும். உங்கள் கொடிவழியினர் இங்கு வாழவேண்டும். துவாரகை அழிந்தால் என்ன ஆகும்? யாதவ மைந்தர் அனைவருமே போரிட்டு சாவார்கள். உண்மை, ஆனால் அவர்களின் மைந்தராவது எஞ்சவேண்டுமல்லவா?”

“தந்தையே, என் மைந்தர் அவர்களால் கொல்லப்பட்டால் அது ஒரு தொடக்கம். அது ஒரு தடையின்மையை உருவாக்கும். ஒவ்வொருவரும் மாறிமாறி துணைவியரையும் குழந்தைகளையும் கொல்லத் தொடங்குவார்கள். என் மைந்தரை காப்பாற்றவேண்டுமென்று இங்கு சொல்ல வரவில்லை. அனைத்து மைந்தர்களும் அவர்களால் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்.”

“முற்றழியும், தந்தையே. யாதவ குலத்தின் குருதி ஒரு துளிகூட இல்லாமல் இப்புவியிலிருந்து மறையும். உங்கள் சொற்களை ஒருபோதும் ஷத்ரியர் நினைவுகூரமாட்டார்கள். அசுரர் நிலைநிறுத்தப் போவதில்லை. அதை தங்கள் குலப்பெருமையென்றும் கொடிவழியின் செல்வமென்றும் கொண்டுசெல்ல வேண்டியவர்கள் யாதவர்கள். அவர்கள் எஞ்சவேண்டும். அதன்பொருட்டு நீங்கள் எழவேண்டும்.”

“தந்தையே, உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்ததெல்லாம் அச்சொற்களை திரட்டி எடுப்பதற்காகவே. அச்சொற்களை நிலைநிறுத்தும்பொருட்டே அப்பெரும்போரை ஒருக்கினீர்கள். அச்சொற்களை குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் விரிந்த குருதிமேல் நிலைநாட்டினீர்கள். அச்சொற்கள் எஞ்சாது அழிந்தால் என்ன பயன்? உங்கள் வாழ்வுக்கு அதன்பின் என்ன பொருள்? உங்கள் சொல்லுக்கு என்ன மதிப்பு? அதை நம்பி அக்குருக்ஷேத்ரத்தில் உயிர்கொடுத்த பல்லாயிரம் பல லட்சம் எளியோருக்கு நீங்கள் உரைக்கும் மறுமொழி என்ன?” என்றான் பிரதிபானு. நெஞ்சில் அறைந்து பெருங்குரலில் “எண்ணுக, தந்தையே! அதன்பொருட்டேனும் எழுக! ஒரு சொல் எனக்கு உரையுங்கள்” என்றான்.

“தந்தையே, சொல் அனைத்திற்கும் அடியில் இருக்க வேண்டியது அளி. உங்கள் மெய்வேதமோ ஏழு முறை கூர் தீட்டிய வாள் போன்றது என்கிறார்கள். அது பேரறத்தின் கையில் அமைந்திருக்கையில் அல்லவா அதற்கு தெய்வத் தகுதி வருகிறது? பேரறம் என்பது நெறிகளால் ஆனது. மாறாத முறைகளால் ஆனது. அனைத்து நெறிகளும் முறைகளும் அமைந்திருக்க வேண்டியது பேரளி என்னும் பீடத்தின்மேல். தந்தையே, இனி எஞ்சுவது அளி மட்டுமே. இங்கு உங்கள் குருதிமைந்தன் வந்து உயிருக்கு இரக்கையில் அவ்வளியை எதன்பொருட்டேனும் நீங்கள் ஒழிந்தீர்கள் எனில் உங்கள் சொல்லுக்கு அடியில் தெய்வமென அமர்ந்திருக்க வேண்டிய ஒன்றை மறுக்கிறீர்கள். உங்கள் சொல் அதன்பின் வாழ்ந்தாலும் அதனால் எப்பொருளும் இல்லை என்றாகும்.”

“தந்தையே, உங்கள் சொல்லின் தகுதியை எண்ணுங்கள். அது இவ்வுலகம் அனைத்தையும் அழிக்கும் கூர் கொண்டது. கருக்குழவியை சென்று தொடும் நஞ்சும் கொண்டது. ஆக்க விசை பொருந்தியது போலவே அழிப்பதற்கும் முந்துவதே வேதம் என்பார்கள். அதிலிருந்து ஆக்கும் விசையை எடுத்து அகற்றுகிறீர்கள். அது அளியற்ற அரசர்கள் தங்கள் ஆட்சிநெறியின் பொருட்டு தன் மைந்தர் கழுத்தறுக்கவும் உற்றார் குருதிபெருக்கவும் உதவும் சொல்நிரையென்று ஆகும். தருக்கி எழும் குடித்தலைவர்களின் கையில் படைக்கலமென சென்று சேருமெனில் இப்புவியில் உங்கள் சொல் எவ்வாறாக பொருள்படும் இனி?”

“ஆயிரம் குருக்ஷேத்ரங்களை இந்த மண்ணில் நிகழ்த்துமல்லவா? பல்லாயிரம் தலைமுறைகளை கொன்றழிக்கும் அல்லவா? விண்ணிலிருந்து விழுந்த தெய்வத்தின் தீச்சொல்லென அது கருதப்படும் அல்லவா? குருதியிலிருந்து குருதிக்குப் பரவி கொன்றழித்துக்கொண்டே இருக்கும் கொடுநோய் என்று அதை மானுடம் கருதும் அல்லவா? இவ்வொரு துளி இரக்கத்தால் நீங்கள் உயிர்க்குலங்களை காக்க முடியும்.”

பிரதிபானு அவரை கூர்ந்து நோக்கினான். பின்னர் சீற்றத்துடன் “நீங்கள் கொண்ட இந்த அமைதி தவமென கருதப்படாது. இந்த அமைதி தன்னிறைவென எண்ணப்படாது. இது தோல்வி என்றே நிறுவப்படும். வஞ்சமென்றே கணிக்கப்படும். கனிந்து இறங்கவேண்டிய இடத்தில் கொள்ளும் விலக்கத்தைப்போல இரக்கமற்றது ஒன்றில்லை. தந்தையே, இத்தருணத்தில் இரங்காவிடில் இப்புவியில் ஒரு தருணத்திலும் நீங்கள் இரங்கப்போவதில்லை. தலைமுறை தலைமுறையென எழுந்து வந்து உங்களை நோக்கி கைநீட்டி அருளை இரக்கும் அடியவர்கள் எவர் கையிலும் ஒரு துளி நீரையோ அமுதையோ நீங்கள் அளிக்கப்போவதில்லை.”

“என்னை நீங்கள் கைவிடவில்லை. என் வடிவில் இங்கு வந்து நின்றிருக்கும் மானுட குலத்தையே கைவிடுகிறீர்கள். நான் பழி சூழ்ந்தவன் என்பதை மறக்கவில்லை. ஆனால் இன்றல்ல, என்றும் உங்களை எண்ணி கையெட்டும் எவரும் பழி சூழ்ந்தவர்களே. பழி சூடாத எவர் புவியில் தெய்வத்தை நினைக்கப் போகிறார்கள்? தன் பழியால், தன்னையே செலுத்திக்கொண்டு திரும்பி வர முடியாத திசைகளுக்குச் சென்ற பின்னர் தான் உணரும் வெறுமையால், அச்சத்தால் தெய்வத்தை எண்ணுகிறார்கள் மானுடர். பழியின் பொருட்டு தெய்வங்கள் மனிதர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருந்தால் இப்புவியில் ஒருதுளி அருள்கூட விழாமல் போகும்.”

“இங்குள மானுடர் அனைவருமே பழி சூழ்ந்தவர்கள் என்பதும், தவிர்க்க முடியாமல் அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதும்தான் இங்கு தெய்வங்கள் கனியவேண்டும் என்பதற்கான தேவை. அவர்கள் இல்லையேல் வாழ்வு நிகழாது என்பதற்கான சான்று அவர்கள் எழுவதே.”

“அளி கொள்க, தந்தையே! அடியவன் பேரில் அளி கொள்க! விண்ணில் மிதந்திருக்கும் தேவரும் தெய்வங்களும் கோடி கோடி என்கிறார்கள். மண்ணில் உயிர்க்குலங்கள் அவற்றுடன் ஒப்பிடுகையில் துளியிலும் துளி என்கிறார்கள். பொருளற்ற திறனற்ற துளிகள். துளியிலொரு துளியாகி நின்றிருக்கும் என் மீது பேருருக்கொண்ட தெய்வமாகிய தாங்கள் எவ்வஞ்சத்தையும் கொள்ள இயலாது. அளிகொண்டே ஆகவேண்டும்.”

“ஆம், ஒருவேளை நீங்கள் உணரலாம். உங்கள் சொல் அழியாச் சொல்லென்பதனால், ஆழ்ந்துசெல்லும் கவிதை என்பதனால் நிலைகொள்ளட்டும் என்று. அரசோ குடியோ அதை முன்வைக்கலாகாது என்று. அது ஓர் இனத்தின், குடியின் சொல் என திகழலாகாது என்று. எனில் நான் அச்சொற்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். இனி உங்கள் பெயரையே சொல்லமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று பிரதிபானு கைகூப்பி கதறி அழுதான். “ஒருசொல் உரையுங்கள், தந்தையே. ஒற்றைச் சொல் மட்டும் உரையுங்கள்.”

அவர் அங்கிலாததுபோல் இருந்தார். அவன் அம்முகத்தை பார்த்தான். அது அவனுடைய ஒவ்வொரு சொல்லாலும் பல்லாயிரம் காதம் தள்ளி கொண்டுசெல்லப்பட்டு எங்கோ எங்கோ எங்கோ என சென்றுகொண்டிருந்தது. இங்கிருந்து ஒரு சொல்லும் ஒரு உணர்வும் அங்கு சென்று சேரமுடியாதென்று தோன்றியது. அவன் திகைப்புடன், தனிமையுடன், மேலும் தனிமையுடன், மேலும் மேலும் பெருகும் தனிமையுடன் அதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை துளியாக்கி, அணுவாக்கி, இன்மையென்றாக்கி நிறுத்திய தனிமையுடன் அங்கிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனுள் ஏதோ ஒன்று அறுந்தது. அவன் அனைத்தில் இருந்தும் வெளியேறினான். எழுந்து தன் மூட்டையை தூக்கிக்கொண்டு திரும்பி நடந்து அச்சிற்றூரிலிருந்து வெளியே சென்றான்.

 

தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் அச்சிற்றூரிலிருந்து பிரதிபானு சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயினூடாக வெளியேறினான். தண்டகாரண்யத்தின் நடுவே நீண்டு அலைகொண்டு மலைகளில் ஏறி இறங்கிச் சென்ற செம்மண் பாதையில் நடந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் ஒருவனை பார்த்தான். அக்கணமே அவனுக்கு தெரிந்துவிட்டது. அசைவிலாது நின்றான்.

அவனுக்குப் பின்னால் படைவீரர்கள் திரள்வதை அவன் கண்டான். முன்னும் பின்னும் படைவீரர்கள் அவனை நெருங்கியவுடன் அவன் தன் கையிலிருந்த பொதியை கீழே போட்டான். மூச்சை இழுத்துவிட்டு அசைவிலாது நின்றான். அவர்கள் அணுகிவந்து சூழ்ந்து நின்றனர். அந்தக் காவல்வீரனை அவன் நன்கு அறிந்திருந்தான். அவனுடைய அணுக்கனாக நெடுங்காலம் திகழ்ந்தவன். அவன் பெயர் சிவகன். அவனை ஒரு வேட்டையின்போது கண்டடைந்தான். அவனுடைய அம்புபட்டு முயல் துள்ளி விழுந்தபோது புரவியில் அணுகிச்சென்று அவன் தோளைத் தொட்டு “என்னுடன் இரு” என்றான். இந்தத் தருணத்திற்காகத்தானா?

சிவகன் “தங்கள் தலைகொய்து வரும்படி ஆணை, யாதவரே. தலைவணங்கி மண்ணில் அமர்க!” என்றான். “என் தலை வணங்காது” என்று பிரதிபானு சொன்னான். “தலைவணங்கினால் தங்களுக்கு இடுகாடு ஒன்று அமையும். இல்லையெனில் ஏழு துண்டுகளாக இக்காட்டில் வீசப்படுவீர்கள். தாங்கள் கொல்லப்பட்ட இடம் எவருக்கும் உரைக்கப்படாது. கொல்லப்பட்ட மண்ணின் புழுதிகூட மறக்கப்படும். நீர்க்கடன் இயற்றப்படாது நீடிருளில் வாழ்வீர்கள்” என்றான் சிவகன்.

பிரதிபானு கண்ணீருடன் கைகூப்பி “ஒன்று கூறுகிறேன்… நான் ஒன்று கேட்கிறேன். அதை உரைத்தால் நான் என் தலைதாழ்த்துவேன்” என்றான். “கூறுக!” என்று சிவகன் சொன்னான். “என் மைந்தர் என்ன ஆனார்கள்? என் துணைவி சிறையில் இருக்கிறாளா?” என்றான் பிரதிபானு. சிவகன் “யாதவரே, நாங்கள் அங்கிருந்து கிளம்பிய அன்றே உங்கள் மைந்தர் அனைவரும் துவாரகையின் தோரணவாயிலுக்கு வெளியே அமைந்த பாடிவீட்டின் முன் முதுகுத்தோல் உரிக்கப்பட்டு எரிவெயிலில் கழுவில் ஏற்றப்பட்டார்கள். உங்கள் துணைவி உயிருடன் நெய்யூற்றி கொளுத்தப்பட்டார். உங்கள் குருதிவழியின் ஒரு துளியும் எஞ்சவில்லை” என்றான்.

பிரதிபானு நடுங்கிக்கொண்டிருந்தான். “மண்டியிடுங்கள், தலைகொடுங்கள். இத்தருணத்தில் இனி நீங்கள் விழையக்கூடுவது ஒன்றே. உங்கள் குருதிவழியில் எவரேனும் எங்கேனும் உங்களை நினைவுகூர்ந்து ஒரு கை நீரள்ளி விடுப்பது. அதனூடாக மூத்தோர் வாழும் விண்ணுலகுக்கு செல்வது” என்றான் சிவகன். “ஆம்!” என்று உரைத்து அவன் நடுங்கும் கால்களை வளைத்து மண்டியிடப்போனான். அக்கணத்தில் தோன்றிய ஓர் உணர்வால் பொருளில்லாது அலறியபடி பக்கவாட்டில் பாய்ந்து மணற்புழுதிச் சரிவில் இறங்கி ஓடினான்.

அவன் சென்ற பாதையில் புழுதி சரிந்து அவனை மேலும் உருட்டி கீழே கீழே என கொண்டுசென்றது. அவர்கள் அவனை துரத்தி வரவில்லை. அங்கிருந்தே நோக்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் தன் நீண்ட வில்லை எடுத்து அம்பு பொருத்தி செவி வரை இழுத்து அவனை நோக்கி எய்தான். அவன் முதுகில் பாய்ந்த அம்பு அவன் நெஞ்சைத் துளைத்து முன்னால் வந்தது. ஒருகணம் மூச்சு திடுக்கிட்டு வலக்கையும் வலது காலும் இழுத்துக்கொண்டது. புழுதி முகத்தில் அறைய பிரதிபானு மண்ணில் விழுந்தான். இரண்டாவது அம்பு வந்து அவன் விலாவில் தைத்து நின்றது. மூன்றாவது அம்பு அவனை புரட்டியது. நான்காவது அம்பு அவன் நெஞ்சில் தைத்தது. ஐந்தாவது அம்பு வயிற்றில் தைத்தது. பிறிதொரு அம்பு அவனை புரட்டி அதற்கப்பால் இருந்த சிறு பள்ளத்திலிட்டது. இறுதித் துடிப்பும் ஓய்ந்து கை தளர்ந்து விண்ணோக்கி விழித்த விழிகளுடன் பிரதிபானு அங்கே கிடந்தான்.

அவர்களில் இருவர் கீழிறங்கி வந்தனர். அவர்களில் ஒருவன் வாளால் அவன் கைகளையும் கால்களையும் வெட்டி வெவ்வேறு திசைகளுக்கு வீசினான். அவன் நெஞ்சைப் பிளந்து குலையை வெட்டி அப்பால் வீசினான். அவன் தலையை வெட்டி தூக்கி மலைச்சரிவில் வீசினான். அவர்கள் மேலே செல்லத் தொடங்கும்போதே கீழே ஓநாய்களின் ஊளை ஒலிக்கத் தொடங்கியது.

முந்தைய கட்டுரைபலிக்கல்[சிறுகதை]
அடுத்த கட்டுரைநற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்