ஐந்து நெருப்பு[ சிறுகதை]
அன்புள்ள ஜெ,
அந்த எரியும் நிலத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தச் சிறுகதைகளை என்னால் வகைப்படுத்தவே முடியவில்லை. மிக இனிமையான மொழி போன்ற கதையை வாசிக்கும்போது இலக்கியம் இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பிடி கதையை வாசிக்கும்போது இப்படி ஒரு நெகிழ்வுதான் இலக்கியம் என்று தோன்றுகிறது. எழுகதிர் வாசிக்கும்போது இந்த கவித்துவம்தான் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் ஐந்துநெருப்பை வாசிக்கும்போது இதுபோல அப்பட்டமான வாழ்க்கையைச் சொல்லுவதே இலக்கியம் என்று தோன்றுகிறது
அந்தப்பையன் என்னவாக ஆவான்? யோசிக்கவே முடியவில்லை. கொடூரமான கொலைக்காரனாக ஆகலாம். மனசுக்குள் கொஞ்சம் ஈரம் மிச்சம்வைத்திருக்கலாம். மூன்றுபக்கமும் தீ எரிய நாலாவது பக்கம் பாய்ந்து வருகிறான். அவனை எவராலும் தடுக்கமுடியாது. எத்தனை டீடெயில்கள். என்னுடைய சொந்த ஊர். நான் 10 ஆம் வகுப்பு வரை படித்தது உடன்குடியில்தான். பொழிமண்ணில் சைக்கிளை மிதிக்கும் காட்சி. முள் ஸ்டீல்மாதிரி தெரிவது. கோமதிக்கும் அவள் அண்ணனுக்கும் இருக்கும் இனிமையான உறவு. சுடிதாரைப்பற்றி அவள் அண்ணனிடம் சொல்லும் ஒரே சொல்லில் என்ன ஒரு ஆசை. மனசை நெகிழச்செய்த கதை
ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு மாய சக்தி உண்டு. கதை படிக்கும் வாசகனை அந்த தளத்திற்கே கூட்டிச் செல்வீர்கள். கதை படிப்பதைத் தாண்டி அது நம் கண் முன்னே நடப்பதைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள். ‘ஐந்து நெருப்பு’ சிறுகதை படித்த போது அப்படித்தான் உணர்ந்தேன். முட்கள் குத்தி முத்து துடிக்கும் வலியையும், வலியில் துடிக்கும் மகனுக்கு சாராயம் வாங்கித் தரும் தாயின் முரட்டுப் பாசமும் கண்ணெதிரில் பார்த்த காட்சிகள் போல் உணரச் செய்தது.
சுட்டெரிக்கும் அந்த மண்ணில் வாழும் மக்களின் வெப்பத்தை உணரச் செய்தது. அந்த வெப்பத்தை விட்டு விலகி சென்றாலும் அதன் உஷ்ணம் எவ்வளவு தொலைவு சென்றாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் சுட்டெரிக்கும். அதைத் தெரிந்தும் முத்து அர்ஜுனனைப் போல அந்த ஐந்து நெருப்பிற்கு நடுவில் நிற்க போகிறான். ஒரு புரியாத வலியோடு முடிகிறது.
அன்புடன்,
விஜி குமரன்.
***
கரவு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கரவு சிறுகதை வழக்கம்போல ஒரு களவு விவரிப்பு என்றுதான் வாசித்தேன். சட்டென்று கதை அடுத்த தளத்திற்குச் சென்றது. திகைப்புதான் வந்தது. இருட்டிலிருந்து இரண்டு தெய்வங்கள் வருகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்றுதான் கதை முழுக்க உரையாடல் நடைபெறுகிறது என்பதை கதை முடிந்தபின் ஒருமுறை மனசிலே ஓட்டிப்பார்த்தால்தான் தெரிகிறது. சிதாகாசம் பற்றிய பேச்சு, பார்க்கப்பார்க்க நட்சத்திரங்கள் உள்ளே இருந்து எழுந்து வருவது என்று ஏகப்பட்ட குறிப்புக்கள். கதை வேறு ஒரு முழுமையை அடைகிறது
ராஜ் கண்ணன்
***
வணக்கம் ஜெ
கரவு சிறுகதையை வாசித்தேன். கள்ளன் தங்கன் தனது கெஜகில்லி தனத்தால் மாடனாகவும் உருமாறும் கதை. மாயண்டி சாமியும் கள்ளனாக இருக்கிறான். தேன்சீட்டு சிறகை விட்டொழிந்து பூவில் தேன் குடிப்பதைப் போல தன் மனிதச் சிறகை உதறி கந்தர்வனாக இருட்டுக்குரியவனாக மாறுகிறான்.
அரவின் குமார்
***