வரலாற்றின் வண்டலில்:கடிதங்கள்

வரலாற்றின் வண்டலில்…முற்றிலும் மாறுபட்ட தகவல்கள், அதிர்ச்சி அளிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. நல்லதொரு விமரிசனம். புத்தகம் கிடைத்தால் முழுமையாய்ப் படிக்கும் ஆசையைத் தூண்டுகின்றது. நன்றி.

கீதா சாம்பசிவம்

அன்புள்ள ஜெ,

சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை விரிவாக நான் படித்தவனல்லன். ஆனால், அவரது ராணுவ லட்சியங்களின் நடைமுறை சாத்தியக்கூறுகளைக் குறித்த சந்தேகம் எனக்கு இருந்தது. ஹிட்லர் போன்றவர்கள் இவரை எவ்வளவு தூரம் மதித்திருப்பார்கள் என்பதும், போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்கும் பட்சத்தில் எவ்வளவு தூரம் போஸின் சுதந்திரக் கனவுகளுக்குத் துணை இருந்திருப்பார்கள் என்பதும் எல்லாருக்கும் எழ வேண்டிய நியாயமான சந்தேகம். ஆனால், எதையுமே ஒரு சமனிலையோடு பார்க்கப் பழகாத நமது சமூகம் இது பற்றிய சிறிய விவாதங்களையும் கேள்விகளையும் கூட நடக்க விடாமல் பார்த்துக் கொள்கிறது… போஸ் குறித்து மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே நம்முடைய அனைத்து வரலாற்றுக் கட்டுமானங்கள் குறித்தும் ஒரு நேர்மையான மீள்பார்வை அவசியமாகிறது.

தன் சமூகத்தின் மீது ஆழமான வெறுப்பை உடைய என்.என்.பிள்ளைக்கு போஸை மட்டம் தட்டுவது கூட, காறி உமிழ்வதன் இன்னொரு வடிவமாக இருந்திருக்கலாம் அல்லவா?

எதுவாயிருப்பினும், இந்தக் கட்டுரை உண்மையாக இருக்கும் பட்சத்தில் போஸின் மீது என் மதிப்பு அதிகமாகவே ஆகியிருக்கிறது. தன் கனவுகளுக்காக, நமக்காக அவர் மென்று விழுங்கிய அவமானங்கள் அசாதாரணமானவை.

உண்மைகள் பெரும்பாலும் கசப்பானவைதாம்… ஆனால், அந்தக் கசப்பினுள் பொதிந்திருக்கும் சுவையை இனிப்பான பொய்கள் எப்போதும் தரமுடியாது.

….

பெரும்பாலும் கடைநிலையில் இருந்த, குறிப்பிடத்தக்க அறிவு நிலையோ பண்பாட்டு வழக்கங்களோ இல்லாத ஆங்கிலேயர்கள்தாம், துரைமார்களாக உலா வந்திருக்கிறார்கள்.
பிரம்மனின் தலையிலிருந்தும் மார்பிலிருந்தும் பிறந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்ட சாதியினர் இவர்களின் அடிவருடிகளாகத் துதி பாடியது காலம் போட்ட கோலம் தான்…வெள்ளையர்கள் குறித்த ஒரு கனமான தாழ்வு மனப்பான்மை எல்லாரிடமும் இருந்திருக்கிறது என்பதும், அந்தத் தாழ்வு மனப்பான்மையே உலகம் முழுதும் அவர்கள் காலனியாதிக்கத்திற்கு வித்திட்டது என்பதும் என் அனுமானம். இதுகுறித்த உங்கள் பார்வையை அறிய விழைகிறேன்.

அன்புடன்,
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

உங்கள் கடிதம். பதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்.

வரலாற்றுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று உண்மையை உரைப்பது. இன்னொன்று விழுமியங்களை உருவாக்குவது. பள்ளிகளில் கற்பிக்கபப்டும் வரலாறு இலட்சியவாதத் தன்மை கோன்டதாகவும் உயர்ந்த விழுமியங்களின் ஒளியில் காட்டப்படுவதாகவும் இருபதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அதற்கு ஒரு நல்ல சமூகத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கிறது. நல்ல நம்பிக்கைகளை உருவாக்கியாகவேண்டியிருக்கிறது. அடுத்த கட்டத்தில் முதிர்ச்சியான வாசகரகளுக்கு ஆய்வாளர்களுக்கு அளிக்கப்படும் வரலாறு அதன் உண்மைத்தன்மையின் பலத்தாலேயே நிற்கவேண்டும். அப்போதுதான் வரல்காற்றுத்தவறுகள் மீன்டும் நிகழமல் பார்த்துக்கொள்ள முடியும். ஆகவே நாம் உண்மைகளை தேட வேண்டியிருக்கிறது, உடைத்துப் பேசவேன்டியிருக்கிறது
ஜெ

 

வணக்கம் குரு.,
           என் என் பிள்ளையின் சுயசரிதை பற்றிய உங்கள் கட்டுரை பல வரலாற்று பிம்பங்களை கட்டுடைப்பது கசப்பான உண்மை,உடனடியாக ஏற்றுக்கொள்ளவும் மனம் மறுக்கிறது.
             நேதாஜியை ஒரு சேகுவேரா போல் கொடுமைகளை கண்டு கொதித்தெலும் வீரம்,விவேகம் கொண்ட, இளைங்கர்களின் முன்னுதாரமான ஒரு ஆளுமையாக இருந்த இத்தனை வருட நோக்கு சட்டென சிதறுகின்றதே.!!
            சயாம் ரயில்பாதையமைக்கும் திட்டத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் நாஜிப்படைகளால் யூதர்கள் சூறையாடப்பட்ட எண்ணிக்கையும் ஒன்றுபோலத்தானிருக்கிறது.. யூதர்களின் இழப்பு உலகளாவிய துயரக்கவனம் பெற்றதுபோலல்லாமல் சயாம் கொடூரம் எளிதில் மறக்கடிக்கப்பட்டுவிட்டதே.!
             நேதாஜியின் மன்றாடும்,கண்ணீர்மல்கும் தோற்றம் தற்போது நினைவுகொள்வது, ஒட்டுமொத்த  அன்றைய இந்திய மனங்களின் பிரதிபலிப்பாகவே உணர்கிறேன்.
              ஜப்பானியர்கள் பல நாடுகளில் நடத்திய கொடூரமான செயல்கள் அனைத்தும், ஹீரோஷிமா,நாகஸாகி குண்டுவெடிப்பிற்கு பிறகு அவர்கள் மீதுள்ள வெறுப்பை குறைத்து பரிதாபப்பட செய்தது உண்மைதானே?
                                                                                                                        அன்புடன் மகிழவன்

 

 உண்மைதான். வரலாற்றில் நாம் அறியும் உண்மைக்கு பலதளங்கள் உண்டு. அவை அரசியல் காரணங்களுக்காக கட்டப்பட்டவை. அதற்கான நியாயப்படுத்தல்களும் மறைத்தல்களும் மிகைகளும் கொண்டவை. எந்த வரலாறும் அப்படித்தான். நாம் எதிரி வரலாற்றைப் பார்ப்பதுபோல நம் வரலாற்றைப் பார்ப்பதில்லை என்பதே உண்மை
ஜெ

 

வரலாற்றின் வண்டலில்…

முந்தைய கட்டுரைதமிழ்பண்பாட்டை பேணுதல்…இரு கடிதங்கள்…
அடுத்த கட்டுரைதொலைகாட்சி விலக்கம்