பகுதி நான்கு : அலைமீள்கை – 34
நான் செல்லும் வழி முழுக்க கணிகரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் வந்த முதல் நாள் என்னிடம் அவர் வந்தது இந்நகரை அழிக்கும்பொருட்டே என்று கூறியது துணுக்குறும்படி நினைவுக்கு வந்தது. அவ்வாறு எண்ணும்போது ஒன்று தெரிந்தது, அவர் தனது எந்தச் செயலையும் ஒளித்ததில்லை. தான் செய்யப்போவது அனைத்தையும் பலமுறை கூறவும் செய்கிறார். ஆனால் எவ்வண்ணமோ அது நம்மில் பதிவதில்லை. நம்மிடம் இருக்கும் ஆணவம் கேடயம்போல் அதை தடுத்து வெளியே தள்ளிவிடுகிறது.
மீள மீள அவரைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். மதிப்பிடுகிறேன், வகுத்துக்கொள்கிறேன், நுண்மையாக்கிக்கொள்கிறேன். உணர்வுகளால் அலைக்கழிகிறேன். அச்சூழலில் வைத்தும் ஒட்டுமொத்தமாகவும் புரிந்துகொள்ள முயல்கிறேன். நான் அவரைப்பற்றி மீண்டும் மீண்டும் ஒன்றையே எண்ணிக்கொண்டிருக்கிறேனா? ஒரே சொல்லையே சொல்லிக்கொண்டிருக்கிறேனா? ஆனாலும் அவரை என்னால் கடந்துசெல்ல முடியவில்லை. அவர் சொன்னவற்றை அணுகவே முடியவில்லை.
எவருமே அவரை புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் நமது எளிய ஆணவத்தால் அவர் முன் நின்று அவரை நமக்கு கருவியாக பயன்படுத்திக் கொள்வோம் என எண்ணுகிறோம். அவர் மட்டும் நமக்கு கருவியாக வருவாரெனில் உலகையே நொறுக்கும் பெரும் படைக்கலமொன்றை கொண்டவராவோம் என்று எண்ணிக்கொள்கிறோம். அந்த பெரும்படைக்கலம் நம்மை தன் ஊர்தியாக பயன்படுத்திக்கொள்ளுமோ என்று ஐயம் கொள்ளாதபடி ஆணவம் கொண்டிருக்கிறோம். அவருக்கு மிக நன்றாகவே தெரியும், எவரும் அவரை அணுகமுடியாது. எவரும் அவரை கடக்கவும் முடியாது. அவர் அனைவர் மேலும் ஆட்சி கொண்டிருக்கிறார். அவர் ஆடுவதே மானுடரின் ஆணவத்துடன்தான்.
துவாரகையின் களமுற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் என் அகம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இதை செய்யலாகாது, இக்கணமே இங்கிருந்து விலகிவிட வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். திரும்பி ஓடவேண்டும், என் துணைவியையும் மைந்தரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட வேண்டும். ஆனால் நான் அவர் கூறியவாறே துறைமேடைக்குத்தான் சென்றுகொண்டிருந்தேன். என்னை அப்போது வெளியே இருந்து பார்ப்பவர் எவரும் மிகமிக உறுதியுடன் ஏவப்பட்ட இலக்கு நோக்கி செல்லும் செயல்வீரன் என்றே எண்ணக்கூடும்.
துவாரகையின் அரண்மனை முற்றத்தில் எனது அணுக்கனாகிய படைத்தலைவன் உக்ரனும் அவன் துணைவர்களும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு அரண்மனை முகப்பின் தேர்களை ஒருங்கு செய்யும் பணி அளிக்கப்பட்டிருந்தது. அரண்மனை முகப்பிலிருந்த தேர்கள் அனைத்தும் நிலைகுலைந்திருந்தன. எவ்வண்ணம் அவை நிலைகுலைந்தன என்று எனக்கு தெரியவில்லை. அவை எப்போதுமே மிகச் சீராக அடுக்கி நிறுத்தப்பட்டிருக்கும். மண் அசைந்தபோது அவை நிலைகுலைந்திருக்க வாய்ப்பில்லை. விலங்குகளும் மனிதர்களும் நிலைகுலைந்து அங்குமிங்கும் ஓடியபோது அவை அசைந்திருக்கக்கூடும். எனில் மண்ணின் மீது வெறும் நுரைபோலத்தான் இந்த உயிர்க்குலங்கள் அமைந்திருக்கின்றன. மண்ணிலிருக்கும் மிகச்சிறு அசைவு மேலே வாழும் வாழ்வு அனைத்தையும் சிதறடித்து கலைத்து கொந்தளிக்க வைத்திருக்கிறது.
நான் உக்ரனை கைவீசி அழைத்தேன். என் கையசைவை அவன் உடனே அடையாளம் கண்டு ஓடிவந்தான். நான் அவனிடம் என் கணையாழியை அளித்தேன். “செல்க, உரிய படைவீரர்களை அழைத்துக்கொள்க! இந்தக் கணையாழியைக் காட்டி இது எனது ஆணை என்று என் துணைவியிடம் சொல்க! எனது மைந்தரையும் துணைவியையும் அழைத்துக்கொண்டு துவாரகையைவிட்டுக் கிளம்பி பாலைவனத்தினூடாக கடலுக்குள் சென்று படகு வழியாக சிந்துவுக்குள் புகுந்துகொள்ளுங்கள். அதில் ஏதேனும் இடர் இருந்தால் தேவபாலபுரத்திலேயே தங்கியிருங்கள். இயன்றால் சிந்துவினூடாக பருஷ்ணி வரைக்கும் செல்க!” என்றேன்.
உரக்க “துவாரகையிலிருந்து எத்தனை முடியுமோ அத்தனை கடந்து செல்லவேண்டும். யாதவ நிலத்திலிருந்து எத்தனை அகன்று செல்ல வேண்டுமோ அத்தனை செல்ல வேண்டும்” என்றேன். உக்ரன் “இளவரசே!” என்றான். “இது என் ஆணை!” என்றேன். அவன் தலைவணங்கினான். அவனிடம் “செல்க!” என்று கையசைத்து ஆணையிட்டுவிட்டு புரவியை திருப்பினேன். சரிந்து நின்றிருந்த கட்டடங்கள் நடுவே சுழன்று இறங்கிய கல்பரப்பப்பட்ட பாதையில் துறைமேடை நோக்கி சென்றேன்.
துறைமேடை அந்நேரத்தில் முற்றிலும் ஒழிந்திருந்தது. அது எதிர்பார்த்திருக்கக்கூடியதே. முறத்தில் பாற்றுகையில் கூலமணிகள் துள்ளித் துள்ளி ஒரு பகுதியில் ஒதுங்குவதுபோல துவாரகையின் மக்கள் துறைமேடையிலிருந்து விலகி எதிர்ப்புறமாக சென்றுவிட்டிருந்தனர். ஏனெனில் அந்த நிலஅதிர்வின் மையம் துவாரகையின் துறைமேடையாக இருந்தது. அதை எவரும் கணித்துச் சொல்லவில்லை. அதை மதிப்பிடுவதற்கான நிலஅறிஞர்கள் ஃபானுவால் அப்போதும் அவைக்கு கூட்டப்பட்டிருக்கவில்லை. ஆனால் அதற்குள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
இத்தருணத்தில் பெரும்பாலானவர்கள் துவாரகையின் மறுஎல்லைகளிலேயே இருப்பார்கள் என்று எனக்கு தெரிந்தது. என் துணைவியுடனும் மைந்தருடனும் உக்ரன் கிளம்பிச்செல்வதற்கு அது தடையாக இருக்கலாம். அவர்களின் விரைவு நெரிசலால் மட்டுப்படும். ஆனால் அது உதவியாகவும் இருக்கலாம். ஒருவேளை அவர்களை எவரும் அடையாளம் காணாமலும் இருக்கக்கூடும். காவல்மாடங்களில் எவரும் தடுக்காமல் இருக்கலாம். ஆணை ஓலைகளோ முத்திரை மோதிரங்களோ கேட்கப்படாமலும் இருக்கக்கூடும். அந்தப் பெருந்திரளுடன் அவர்கள் செல்லும்போது ஒருவேளை நகரில் எவரும் அறியாமலேயே அவர்கள் துவாரகையின் எல்லையை கடந்துவிடக்கூடும்.
நன்று, அவ்வாறு நிகழவேண்டும். தெய்வங்கள் என் குடியை காக்கவேண்டும். பிரத்யும்னனோ பிறரோ என் குடும்பத்தை சிறைவைப்பார்களென்று கணிகர் கூறியதும் என் உள்ளில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஏனெனில் அது நிகழும் என்று எனக்கு ஓர் ஐயம் முன்னரே இருந்தது. அவர்கள் அங்கு வந்த நாளிலிருந்தே அந்த ஐயம் என்னுள் துளிர்த்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அவ்வாறு ஒன்று நிகழவேண்டும் என்பதற்காகவே அவர்கள் அங்கே அனுப்பப்பட்டார்கள் என்று என் அகம் ஏதோ ஒரு புள்ளியில் எண்ணியது.
தந்தையே, துவாரகையில் தாங்கள் அரசுகொண்டு இருக்கையில் கடலறிஞர்களும் நிலஅறிஞர்களும் கட்டடச்சிற்பிகளும் மற்றும் அடிப்படைத் திறனோர் அனைவரும் ஒவ்வொரு நாளும் அவைக்கு வந்துசெல்ல வேண்டும் என நெறி இருந்தது என்பதை நினைவுகூர்ந்தேன். ஒவ்வொரு நாளும அவர்கள் ஏன் வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஓர் இடர் வரும்போது அறிஞர்கள் இன்றி எதுவும் நிகழாது என்று அப்போது உணர்ந்தேன். இடர் வரும்போது அவர்களை சென்று கண்டுபிடிப்பதுதான் முதன்மையான சிக்கல்.
துவாரகையில் என்ன நிகழ்ந்திருக்கிறது, என்ன நிகழக்கூடும் என்று அறிந்த ஒரு அறிஞர்கூட அப்போது இல்லை. அவர்கள் துவாரகை முழுக்க கொந்தளித்துக் கொண்டிருந்த மக்கள் திரளுக்குள் முற்றாக மறைந்துவிட்டிருக்கிறார்கள், அவர்களை தேடிக் கண்டடைவதற்கான எந்த அமைப்பும் இல்லை. அப்போது அறிந்தேன், சிறியவர்கள் ஒருபோதும் பெருநகர்களை ஆளமுடியாது. கூடவே ஒன்றை உணர்ந்தேன், துவாரகையை ஆளும் தகுதி எனக்கும் இல்லை, இத்தகைய இடர்நிலை ஒன்றை நான் ஒருகணம்கூட முன்னர் உணர்ந்ததில்லை.
எனில் என்ன செய்யவிருக்கிறேன்? இந்நகரை இரண்டாக உடைத்து பிளக்கப்போகிறேன்! ஆம், எவ்வண்ணமேனும் அது பிளக்கும். அதை நானே இயற்றுவது முறை. இந்நகர் இனி வாழாது. இத்தனை பெரிய விரிசலுடன் இது இங்கு நீடிக்க இயலாது. இதன் யுகம் முடிந்துவிட்டது. என்று தந்தை இங்கிருந்து கிளம்பிச்சென்றாரோ அப்போதே இது அழியத்தொடங்கிவிட்டது. இது அவருடைய நகரம். அவரில்லாது இது வாழாது.
முற்றழிவு நிகழட்டும். யாதவர்கள் கிளம்பி தங்கள் தொல்நிலங்களுக்கு செல்லட்டும். அவர்களால் கையாள உகந்த சிறிய நிலங்களில் சிறிய அரசுகளை உருவாக்கிக்கொள்ளட்டும். நானும் செல்கிறேன். எனக்கென ஒரு சிறு நிலத்தையும் அரசையும் உருவாக்கிக்கொள்வேன். அங்கு என் மைந்தருடன் குடியேறுவேன். துவாரகை போன்ற பேரரசுகளை விழைந்ததுதான் நான் செய்த தவறு. எனக்கு சிறு நிலம் போதும். ஒருநாள் ஒரு பசு மேயும் நிலம் போதும். அதற்குள் என் மைந்தருடன் வாழ்வேன். என் கொடிவழிகள் அங்கு வாழட்டும். நான் விரும்புவது அது மட்டுமே. தெய்வங்களிடம் நான் கோருவதற்கு அது மட்டுமே உள்ளது.
எனது புரவி கற்பாளங்கள் பதிக்கப்பட்ட பாதையில் குளம்புத் தாளத்துடன் கீழிறங்கி கீழிறங்கி சென்றது. அது திமிறிக்கொண்டே இருப்பதை உணர்ந்தேன். முன்செல்ல விரும்பாததுபோல. நான் என் குதிமுள்ளால் அதை குத்திக் குத்தி செலுத்தினேன். பலமுறை அது நின்று பின்னடி வைத்து கனைத்தது. செருக்கடித்து செவி பின்விலக்கி விழியுருட்டி நீள்மூச்செறிந்தது. அது எதையோ அஞ்சுகிறது, எதை என்று தெரியவில்லை. கண்முன் வெறுமையே திகழ்ந்தது. ஒருவேளை அந்த இடத்தின் வெறுமையை அது அஞ்சுகிறது போலும்.
துறைமேடை தொலைவில் கடலுக்குள் நகரின் ஒரு கை நீட்சியெனத் தெரிந்தது. கடல் மிகமிக உள்வாங்கியிருந்தது. துறைமேடைக்கு இரு பக்கமும் அலைநுரை நிறைந்திருக்கும் இடமெல்லாம் கரிய ஈரப்பாறைகள் நிறைந்திருந்தன. கடல் உள்வாங்கிய நிலம் முழுக்க கரிய சேறும் சிப்பிகளும் பாறைகளும் தெரிந்தன. கடல் உள்வாங்கி மிகுதிநேரம் ஆகவில்லை. பல பாறைகள் ஈரம் காயாமல் விலாவில் அலைநுரை அடையாளங்களுடன் இருந்தன. சிறுகுழிகளில் நீர் நலுங்கியது.
வழக்கமாக துறைமேடையைச் சுற்றி வானின் வெண்ணுரைபோல கடற்பறவைகள் செறிந்திருக்கும். பல்லாயிரம் பல லட்சம். கோடி என்றுகூட தோன்றும். அவற்றின் எச்சம் விழுந்து கரையோரப் பாறைகள் வெண்மையாக மாறிவிட்டிருக்கும். அப்போது ஒரு பறவைகூட இல்லை. ஒரு சிறகசைவுகூட தென்படவில்லை. முற்றாகவே அகன்றுவிட்டிருந்தன. அவை எங்கே சென்றுவிட்டன என்ற வியப்பு என்னுடன் வந்தது. அங்கே வானிலும் ஏதோ நிகழ்ந்திருக்கிறது.
துறைமேடைக்கு அப்பால் தொடுமுனையில் தனியாக நின்றிருந்த பீதர் பெருங்கலம் மிகமிக மெல்ல அசைந்த நீர்ப்பரப்பின் மேல் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. நெளியும் நீலத் திரைச்சீலைமேல் ஒரு சிறு செப்புபோல. நான் கீழிறங்கிச் சென்று முதல் காவல்மாடத்தை அடைந்தேன். அங்கிருந்த காவலர்கள் என்னை நோக்கி வந்து “ஆணை என்ன, இளவரசே?” என்றனர். அவர்கள் ஏதேனும் ஆணை வரும் என எதிர்பார்த்திருந்தனர். அந்த இடத்தை கைவிட்டு விலகிச்செல்லும் விழைவு கொண்டிருந்தனர்.
நான் இறங்கியதுமே என் புரவி கனைத்தபடி திரும்பி குளம்புகள் தாளமிட கற்பரப்பில் ஓடி அகன்றது. வீரர்கள் திகைப்புடன் அதை நோக்கினர். காவலர்தலைவன் “இங்குள்ள அத்தனை புரவிகளும் அறுத்துக்கொண்டு சென்றுவிட்டன. கொடிது ஒன்று நிகழும் என இங்குள்ள மாலுமிகள் அஞ்சுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தாங்களும் விலகி ஓடிவிட்டனர். நாங்கள் ஆணைக்காக காத்திருந்தோம்” என்றான்.
நான் ஃபானுவின் முத்திரை மோதிரத்தைக் காட்டி “இது அரசரின் ஆணை. உடனடியாக என்னுடன் படைக்கலம் ஏந்திய வீரர்கள் இருநூற்றுவர் அணிகொண்டு வரவேண்டும்” என்றேன். காவலர்தலைவன் “இங்கு அவ்வளவு பேர்தான் மொத்தமாக இருப்பார்கள்” என்றான். “அத்தனை பேரும் வருக!” என்றேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தலைவன் முடிவெடுத்து தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதினான். ஆணை ஒலித்ததும் அங்கிருந்த அத்தனை வீரர்களும் திடுக்கிடுவதை கண்டேன். அத்தகைய ஒரு ஆணையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்கள் படைக்கலன்களுடனும் கவசங்களுடனும் குறடுகள் ஒலிக்க ஓடிவந்து பத்துப் பத்து பேராகக் கூடி இருநூறுபேர் கொண்ட சிறுபடையாக மாறினர்.
“தொடர்க!” என்று ஆணையிட்டுவிட்டு நான் பெருநடையில் துறைமேடையை நோக்கி நடந்தேன். துறைமேடையின் முதன்மைக் காவலன் ஐயத்துடன் வந்து என்னை வழிமறித்தான். அவனிடம் என் கணையாழியைக் காட்டி அரசரின் ஆணை என்றேன். “இளவரசே, இங்கிருப்பது பீதர்களின் கலம் மட்டுமே. அதுவும் வெறும் கலம். அவர்கள் மாளவத்திலிருந்து வரும் வழியில் கடலில் ஏதோ அலைமாறுபாட்டை உணர்ந்து ஐயம்கொண்டு அது தெளியும்வரை இங்கு கரை சேர்ந்திருக்கிறார்கள்” என்றான்.
“ஆம், அந்தக் கலத்தை நாம் கைப்பற்ற வேண்டும் என்பது அரசரின் ஆணை” என்றேன். “அது நமது கலம் அல்ல” என்றான் படைத்தலைவன். “நமக்கு இப்போது பெரும்கலமொன்று தேவை. நமது ஆணையில் அக்கலம் இருக்கவேண்டும். இங்கிருக்கும் கலம் அது மட்டும்தான்” என்றேன். அவன் புரியாமல் தலையசைத்தான். நான் முன்னேற அவன் திகைப்புடன் நோக்கி நின்றான். அவன் புரிந்துகொள்ளாமலிருப்பதே நன்று என்று தோன்றியது.
செல்லச் செல்ல கடல் எங்களைச் சூழ்ந்து அசைவற்று நின்றதை கண்டேன். அலைகள் வந்தறைந்து நுரை கொப்பளிக்கும் துறைமேடையின் பாறைவிளிம்புகள் ஈரக்கறையுடன் ஓய்ந்து நின்றிருந்தன. பிளந்த முதலைவாயின் பற்கள்போல அவை தோன்றின. ஒவ்வொன்றும் எதற்காகவோ காத்திருந்தன.
படை துறைமேடை அணைந்து சீர்நடையிட்டு பீதர் பெருங்கலம் நோக்கி சென்றது. நான் அதன் முகப்பில் சென்றேன். அணுக அணுக துறைமேடையின் நீண்ட கற்பாதைக்கு அப்பால் பத்தடுக்கு மாளிகைபோல பீதர்கலத்தின் மரக்கட்டமைப்பு எழுந்து நின்றிருப்பதை கண்டேன். அது எத்தனை பெரிய கலம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மீனெண்ணைப் பிசின் பூசப்பட்ட அதன் விலா எழுந்து எழுந்து கரிய மரத்தாலான கோட்டைபோல் திசையை மூடி இருட்டாக்கிவிட்டதோ என்ற ஐயத்தை எழுப்பியது.
நான் துறைமேடைக்கு வந்து கலங்களை அணுகுவது அரிதாகத்தான். பெருங்கலங்கள் செல்லாத சிறு படகுத்துறைமேடையில் இருந்தே கடலாடச் செல்வேன். கலங்கள் கடலில் இருப்பதாலேயே சிறு பாவைகள் என்று எப்போதும் தோன்றச்செய்கின்றன. துவாரகை கரைக்கு மேல் இரு மலைகளில் அமைந்திருப்பதனால் எப்போதும் மேலிருந்து பார்க்கும் கோணத்திலேயே கடலையும் கலங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
துறைமேடையின் எல்லையை அணுகியதும் நான் படைமுறைமைப்படி கைவீசி ஆணைகளை பிறப்பித்தேன். அதன்படி என்னைத் தொடர்ந்து வந்த இருநூறு பேரும் இரண்டு நிரைகளாக பிரிந்தனர். முகப்பில் வேலேந்தியவர்களும் பின்னிரையில் வாளேந்தியவர்களும் அமைந்தனர். நாகமுத்திரை காட்டி “தொடர்க!” என்று ஆணையிட்ட பிறகு வேங்கை முத்திரைகாட்டி “ஓசையின்றி” என்று அறிவுறுத்தி நான் முன்னால் சென்றேன். என்னைத் தொடர்ந்து வானில் பறக்கும் நாரைக்கூட்டமென விசைகொண்டு வந்தது துவாரகையின் சிறுபடை.
எங்கள் வருகையையும் அவ்விசையையும் பீதர்கலத்தில் இருந்தவர்கள் உணரவில்லை. நான் பீதர்கலத்தின் திறந்திருந்த வாயிலை அடைந்து கலத்திற்கும் துறைமேடைக்கும் நடுவே போடப்பட்டிருந்த மரப்பாலத்தினூடாக குறடுகள் ஓசையிட்டு முழங்க கலத்திற்குள் நுழைந்தேன். உள்ளே இருந்த பீதர்கள் வெளிவந்து தலைவணங்கி முகமன் உரைப்பதற்குள்ளாகவே அவர்களை வெட்டி வீழ்த்தினேன். “கொல்லுங்கள்! அனைத்து பீதர்களையும் கொல்லுங்கள்! கலமாலுமிகள் மட்டும் எஞ்சட்டும்!” என்று ஆணையிட்டேன்.
அங்கிருந்த காவலர்கள் எங்களை நோக்கி வருவதற்குள்ளாகவே பெரும்பாலானவர்களை கொன்றுவிட்டோம். அவர்கள் எவரும் படைக்கலம் எடுத்திருக்கவில்லை. கவசங்களோ ஆடைகளோ அணிந்திருக்கவும் இல்லை. ஓய்வு எடுத்துக்கொண்டும் மது அருந்தி படுத்துக்கொண்டும் இருந்தார்கள். அக்கலத்திற்குள்ளே ஐநூறுக்கும் மேற்பட்ட பீதர்கள் இருந்தார்கள். அத்தனை பேருக்கும் இடமளிக்கும் ஒரு பெரும் மாளிகை அல்லது ஒரு சிறு நகரம் அது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.
அனைத்து அறைகளிலும் ஓடி ஒளிந்திருந்தவர்களை கொன்றோம். படையுதவி கேட்டு கொம்போசை எழுப்பிய ஒரு மாலுமியை நானே ஓடிச்சென்று வெட்டிக்கொன்றேன். கொம்பொலி எழுந்து துவாரகையை நோக்கி அலைகொண்டது. அது உதவி கோரும் விலங்கொன்றின் ஓசை. ஆனால் துவாரகையில் அதை கேட்பதற்கு எவருமில்லை என்று அறிந்திருந்தேன். மாலுமிகளில் ஒருவன் உரத்த குரலில் “என்ன செய்கிறீர்கள்? எதன்பொருட்டு இதை கைப்பற்றுகிறீர்கள்?” என்றான். “இதற்குள் ஒன்றுமில்லை. செல்வம் என ஒன்றுமில்லை.” இன்னொருவன் “இக்கலத்தை நீங்கள் ஆளமுடியாது. இது எங்கள் நாட்டு மாலுமிகளால் மட்டுமே ஆளக்கூடிய கலம். இதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்றான்.
“இது எனக்கு தேவை” என்று நான் சொன்னேன். கை வெட்டுண்டு கிடந்த முதிய பீதன் “இது வெறும் கலம். மாளவத்திலிருந்து தேவபாலபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். கடலுக்குள் மீன்கள் நிலையழிவதை கண்டோம். இதுவரை பார்த்திராத பெருமீன்கள் ஆழ்கடலிலிருந்து மேலே வந்து துடித்தன. அரிதென்று எதுவோ நிகழப்போகிறது என்று உணர்ந்து கரையணைந்தோம். தங்கள் தந்தையின் காலத்திலிருந்து காக்கப்படுபவர்கள் நாங்கள். கடலோடிகளின் மேல் எந்த நகரமும் கைவைப்பதில்லை. பிறகு அவர்கள் அங்கு வாழமுடியாது” என்றான். “இந்நகர் இனி வாழ விரும்பவில்லை” என்று நான் சொன்னேன். “அறிவின்மை! இது முற்றாக அறிவின்மை! இந்தக் கலம் உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படாது” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாளை உருவி அவன் கழுத்தை வெட்டினேன்.
விரைவிலேயே முழுக் கலத்தையும் எங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்தேன். “பாய்களை விரியுங்கள்!” என்று ஆணையிட்டேன். பாய்களை விரிக்கும் நுட்பம் தெரிந்த பீதர்களை மட்டும் பிடித்துக்கொண்டு வந்து அதற்கான பொறிகளை இயக்கச்செய்தேன். ஒன்று தொட்டு ஒன்றென அனல்போல் பெருகுவதாக அமைந்திருந்தன அந்தப் பாய்கள். கைகளால் கயிறுகளை இழுத்து விரிய வைக்கவேண்டிய மூன்று ஆள் உயரமான சிறிய பாய்கள் நூற்றுக்கும் மேல் இருந்தன. சகடங்களை இழுத்து அவற்றை விரித்தோம். அவை மாபெரும் பருந்துகள் வானிலெழ முற்படுபவைபோல ஓசையுடன் விரிந்து விரிந்து பரவின.
அந்தப் பாய்கள் காற்றில் புடைத்து எழுந்த உடனே அவற்றின் இழுவிசையைப் பயன்படுத்தி உள்ளிருக்கும் பற்சகடங்களை இயக்கி இன்னும் பெரிய பாய்களை இழுத்து மேலேற்றினார்கள். அந்தப் பாய்களின் இழுவிசையைப் பயன்படுத்தி மேலும் பெரிய பற்சகடங்களை இயக்கி மாபெரும் பாய்களை இயக்கினார்கள். அப்பாய்களின் தெறிக்கும் இழுவிசையை சகடங்களுக்கு அனுப்பி அவர்கள் எழுப்பிய பாய் துவாரகையின் ஒரு மாளிகையை உள்ளே வைக்கும் அளவுக்கு பெரிதாக இருந்தது. அனைத்து பாய்களும் மேலெழுந்ததுமே கீழிருக்கும் நங்கூரங்களை இழுத்தபடி கலம் துள்ளத்தொடங்கியது.
“நங்கூரங்களை அறுத்து வீசுங்கள்!” என்றேன். “அறுக்கவா?” என்று ஒருவன் கேட்டான். “ஒவ்வொன்றையும் இழுத்து மேலெடுப்பதற்கு ஒரு நாளாகும். நமக்கு பொழுதில்லை. அனைத்து நங்கூரங்களையும் அறுத்துவிடுங்கள்” என்று சொன்னேன். “நம்மால் இந்தக் கலத்தை நிறுத்த முடியாமல் போகும்” என்று ஒருவன் சொன்னான். “அறுத்துவிடுங்கள்” என்று நான் மீண்டும் சொன்னேன். “இது அரசாணை… செல்க! நங்கூரங்களை அறுத்திடுக!”
அவர்கள் தயங்கியபடி அனைத்து நங்கூரங்களையும் அறுத்தனர். ஒவ்வொரு நங்கூரம் அறுபட்டு கீழிறங்கும்போதும் கலம் திடுக்கிட்டு சற்றே திரும்பியது. ஒவ்வொரு அசைவினூடாகவும் அது தன் நிலைமாறிக்கொண்டிருந்தது. சங்கிலிகளில் திமிறிக்கொண்டிருக்கும் பெரும் களிறு என நிலையழிந்திருந்தது. இறுதி மூன்று நங்கூரங்களையும் கலத்தின் இழுவிசையே அறுத்து வீசியது. பாய்கள் புடைத்தெழ கலம் அலைகளில் ஏறி கடலுக்குள் சென்றது.
அப்போதுதான் கரையிலிருந்து கடலை நோக்கி விசையுடன் காற்று வீசிக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அது விந்தையாக இருந்தது. அவ்வண்ணம் கரைக்காற்று கடலுக்குள் செல்லும் என்றே நான் எண்ணியிருக்கவில்லை. கலம் சில கணங்களிலேயே துவாரகையை சிறிதாக்கி அகன்று சென்றது. துவாரகையின் இரு குன்றுகளும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தன. ஒன்றின்மேல் அந்த மாபெரும் நுழைவாயில் விண்ணுக்கான பாதையென காட்டி நின்றிருந்தது. பிறிதொன்றில் உச்சியில் எழுந்த ஆலயம் தெரிந்தது.
“செல்க!” என்று நான் ஆணையிட்டேன். “மேலும் செல்க! செல்க!” கலத்தின் முகப்பில் நின்று துவாரகையை பார்த்துக்கொண்டிருந்தேன். துவாரகை மிகச் சிறிதாக ஒரு கணையாழி போலாகி என் கண்ணிலிருந்து மறைந்தது. கலத்தின் விரைவு குறைவதை நான் கண்டேன். அது எதிரிலிருந்தும் அதே அளவு விசைகொண்ட காற்றால் தள்ளப்பட்டதுபோல் சற்றே திரும்பி நிலையழிந்தது. அதன் பாய்கள் அனைத்தும் தொய்வடைந்தன. இழுபட்ட கயிறுகள் வளைந்து தழைந்தன. அவற்றின் இரும்பு வளையங்கள் முனகின.
நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அத்தனை பாய்களும் புடைப்பை இழந்து துணித்தொங்கல்களாக மாறின. பாய்மர உச்சிகளில் பறந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான கொடிகள் துவண்டு விழுந்தன. அவற்றில் இருந்த மாபெரும் சிம்ம நாகங்களின் முகங்கள் சுளித்து சுருங்கி இல்லாமலாயின. கலம் அலைகளின் மேல் தள்ளாடியபடி அசைவற்று நின்றது. எதையோ செவிகூர்வதுபோல. சுற்றிலும் கடல் பளிங்குக்கல் பரப்பென அசைவிழந்து நின்றது. துள்ளும் சிறு மீன்கள்கூட இல்லை. வானில் ஒரு பறவைகூட இல்லை.
பின்னர் தொலைவில் ஓர் உறுமல் ஓசையை கேட்டேன். பெரும் பாறை ஒன்று புரண்டு எழுந்து வருவதுபோல் உளமயக்கு எழுந்தது. கலத்தின் மேல் நின்றபடி கடலுக்குள் பார்த்தபோது பல்லாயிரம் மீன்கள் நீர்ப்பரப்புக்கு மேலே வந்து நிலையழிந்து சுழல்வதை கண்டேன். அவை ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு ஒற்றைப்படலமென்றாகி சுழித்தன. பெரிய வெள்ளித் துணி ஒன்றை எவரோ பற்றி இழுத்து சுழற்றிக்கொள்வதுபோல தோன்றியது. ஒருபோதும் மீன்களை நான் அவ்வாறு பார்த்ததில்லை.
ஏதோ ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தேன். என் அருகே இருந்த அனைத்து கொடிகளும் உர்ர்ர்ர்ர் என்ற ஓசையுடன் வண்டுச்சிறகுகள்போல துடிதுடித்தன. இத்தனை விசை கொண்ட காற்றா? நான் திரும்பிப்பார்க்கையில் என் அருகே தொய்ந்து நின்ற பாய் ஊதப்பட்டதுபோல் உப்பி எழுந்து புடைத்த வயிறென ஆயிற்று. பலநூறு பெரும்பறவைகள் சிறகுகள் விரித்தெழுந்ததுபோல அத்தனை பாய்களும் புடைத்து மேலெழுந்தன. பெரும்பாய் தலைக்கு மேல் ஒரு செந்நிற முகிலென புடைத்து மேலெழுந்தது.
கலம் திடுக்கிட்டு அலைவுகொண்டது. பின்னிருந்து மாபெரும் கால் ஒன்றால் எற்றி வீசப்பட்டதுபோல விசைகொண்டது. அஞ்சிய புரவியென அலைகளின்மேல் பாய்ந்தது. அலைகளிலிருந்து அலைகளுக்கென எழுந்து அம்பெனப் பாய்ந்து சென்றது. நான் கண்மூடி நின்றிருந்தேன். கலத்தில் இருந்தவர்களின் அலறல்களையும் பொருட்கள் உருண்டு விழும் ஓசைகளையும் கேட்டேன். அத்தனை கயிறுகளும் இழுபட்டு பேரியாழ் நரம்புகள் என மீட்டப்பட்டு அதிர்ந்தன. அத்தனை மரப்பலகைகளும் தூண்களும் காற்றைக் கிழித்து முழக்கமிட்டன.
முழு விசையுடன் பாய்ந்து சென்ற கலம் விண்ணிலிருந்து எவரோ சுழற்றி அடித்த இரும்புக்கூடமென துவாரகையின் துறைமேடையைச் சென்று அறைந்து அதன் கற்பரப்புகளை உடைத்து மாடங்களின் கற்தூண்கள் செதில்களாகச் சிதறி அழிய நொறுக்கியபடி உள்ளே நுழைந்தது. அந்த அதிர்வில் தொலைவில் துவாரகையின் மாளிகைகள் அனைத்தும் உடைந்து உடைந்து சரிவதை நான் கண்டேன். அவை ஒன்று விழுந்து பிறிதொன்றை உடைத்தன. உடைந்த கற்பாளங்கள் சரிந்து சரிந்து கீழிறங்கின. அதிர்ந்து உலைந்த கலத்தின் முகப்பில் நின்றபடி நான் பிறந்து வளர்ந்த அப்பெருநகரம் தன்னத்தானே நொறுக்கிக்கொண்டிருப்பதை கண்டேன்.