போழ்வு [சிறுகதை]

கொல்லத்திலிருந்து நான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர ஒரு பகலும் ஓர் இரவும் ஆகியது. காயல் வழியாக கொச்சுவேளி வரை படகில் வந்தேன். மூங்கிற்பாயால் வளைவான கூரையிடப்பட்ட படகில் பகல் முழுக்க கரையோரமாக ஒழுகிச்சென்ற தென்னைமரக் கூட்டங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவை தொலைவிலிருந்து பார்த்தபோது புல்பத்தைகள் போல தோன்றின. கோடைகாலமாதலால் நீர் நீலத்தெளிவுடன் இருந்தது. அதில் அவ்வப்போது பச்சைத்தீவுகள் போல பாசிப்பரப்புகள் மிதந்து சென்றன.

இங்கெல்லாம் படகில் பாய்கள் இல்லை. துடுப்பு போடுவதுமில்லை. நீண்ட மூங்கில்கழிகளால் அடிநிலத்தில் ஊன்றி உந்தி படகை முன்னால் தள்ளுகிறார்கள். இருபது மனிதர்களும் ஏராளமான பொதிகளும் கொண்ட பெரிய படகை ஒரே ஒருவன் தள்ளுவான். ஆனால் நினைப்பதை விட விரைவாக இப்படகுகள் செல்லும். அவனுடைய தசைகள் இறுகி நெகிழ்ந்து நெளிந்துகொண்டிருப்பதை நீரின் அலைகளை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே இருக்கலாம்

நான் அவனுடைய பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் இந்த மலபார் மண்ணுக்கு வந்தநாள்முதல் கேட்கும் பாடல். பரசுராமன் கோகர்ணத்தில் மலையுச்சியில் ஏறி நின்று தன் கோடரியை தூக்கி கடலில் வீசினார். கடல் பின்னகர்ந்து கேரளம் உருவாகி வந்தது. அதை அவர் ஐம்பத்தாறு நாடுகளாக பிரித்து அதற்குரிய அரசர்களை உருவாக்கினார். தொன்மையான கேரள மாகாத்மியம் என்ற சம்ஸ்கிருத நூலில் இச்செய்தி இருப்பதாக வில்லியம் கானர் என்னிடம் சொன்னார். ஆனால் அது இங்கே எல்லா நாட்டுப்புறப் பாடகர்களின் நாவிலும் இருக்கிறது.

ஆயுதத்தால் உருவான நாடு. நான் இங்கே வந்தபோது இந்த அபாரமான பசுமையை கண்டு மனம் பேதலித்தேன். என்னுடைய ஸ்காட்லாந்து போலவே பசுமை என்று தோன்றியது. ஆனால் இங்குள்ள பசுமை வெயிலில் வதங்கி மணம் எழுவது. நீராவி உமிழ்வது. பின்னர் தொடுபுழை கடந்து மேலேறி வாகைமண் மலையுச்சிகளுக்குச் சென்றபோது ஸ்காட்லாந்தின் அதே நிலத்தை, அதே பசும்புல்வெளிகளைக்கூட கண்டேன். என்னுடன் வந்திருந்த வில்லியம் கானர் “ஆமாம், பசுமைதான். ஆனால் பசுமைநிலங்கள் மதிப்பு மிக்கவை. அவற்றை வெல்லவும் ஆளவும் குருதி சிந்திக்கொண்டே இருப்பார்கள்” என்றான்.”இந்த சிறிய நிலத்தில் ஐம்பத்தாறுநாடுகள். அவை போர் ஓய்ந்து இருந்ததே இல்லை”

திருவனந்தபுரத்திற்கு நான் திடீரென்று கிளம்பவேண்டியிருந்தது. ஆகவே படகு எதையும் ஏற்பாடு செய்யவில்லை. கொல்லத்தில் ஸ்காட்டிஷ் மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்து என் உதவியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சொந்தமான குதிரைவண்டியில் காயல்கரைக்குச் சென்றேன். படகு ஏற்பாடு செய்ய நேரமாகும் என்றான் அங்கிருந்த படகுத்துறை காரியக்காரன். சரக்குப்படகு கிளம்பிக்கொண்டிருந்தது. ஏறிவிட்டேன். அது போதிய விசையுடன் செல்லவில்லை என்றால் வழியில் இறங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது ஒருகட்டத்தில் காற்றில் பறந்து சென்றுகொண்டிருந்தது.

கொச்சுவேளியில் விடியற்காலையில் படகிறங்கினேன். அந்நேரத்தில் அங்கே குதிரைவண்டிகள் காத்திருந்தது ஆச்சரியம்தான். ஒற்றைக் குதிரைவண்டியில் ஏறி விரைவாக திருவனந்தபுரம் செல்ல ஆணையிட்டேன். வெளிச்சம் எழுந்துகொண்டிருக்கையில் ஸ்காட்டிஷ் மிஷனின் மிஷனரீஸ் ஆப் கிராஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே என்  முகம்கழுவி ஆடைகளை மாற்றிக்கொண்டேன்.

கிளம்புவதாகச் சொன்னபோது ரெவெரெண்ட் ஜான் மாக்பை என்னிடம் “எங்கே செல்கிறாய்? இந்நேரத்தில் அரண்மனைக்குச் செல்வதென்றால் எவருக்காவது உடல்நிலை சரியில்லையா?” என்றார்.

“இல்லை, இது மருத்துவத்திற்காக அல்ல, இன்னொரு வேலையாக” என்று சொன்னேன்.

அவர் மேலும் கேட்கவில்லை. ஸ்காட்டிஷ் மிஷனின் ஒரு பகுதியாக மருத்துவப் பணியாற்றினாலும் நான் அவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவன் அல்ல, அதை அவர் அறிந்திருந்தார்.

குதிரைவண்டிக்குச் சொல்லியிருந்தேன். அது வந்து காத்திருந்தது. அதில் ஏறும்போது அவர் என் பின்னால் வந்து திண்ணையில் நின்றிருந்தார். “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறையாக அழைத்தார். “நாங்கள் உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட முடியாது. ஆனால் உங்கள் செயலால் எங்களுக்கு ஏதும் தீங்கோ தடையோ வந்துவிடக்கூடாது” என்றார்.

“வராது, நான் உறுதி அளிக்கிறேன்” என்றேன்.

“எங்கள் அதிகாரபூர்வ நிலைபாடு ஒன்று உண்டு. நமது பணி கிறிஸ்துவின் சொல்லை பரப்புவது, அதற்கான கல்வி, மருத்துவச் சேவைகளைச் செய்வது. உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. ஆகவே எந்த அரசு அமைப்புடனும் நெருக்கமாக இருப்பதில்லை.அரசகுடும்பத்தினரின் ஆதரவு நமக்கு தேவை, ஆனால் அதை மிகமிக அளவோடே வைத்துக்கொள்கிறோம்”.

“நானும் அப்படித்தான்” என்றேன்.

“நீங்கள் கிளம்பும் அவசரம் அப்படிக் காட்டவில்லை” என்றார் ரெவெரெண்ட் ஜான் மாக்பை. “நீங்கள் தளவாய் வேலுத்தம்பிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றே அறியப்பட்டிருக்கிறீர்கள்”.

“உண்மை அப்படி அல்ல. அவரை நான் பார்த்து ஓராண்டுக்குமேல் ஆகிறது”.

“ஆனால் இப்போது நீங்கள் அவரைத்தானே சந்திக்கப் போகிறீர்கள்?”

“ஆமாம்” என்றேன்.

“ஏன் என்று நான் கேட்கப்போவதில்லை”.

“அதை நானே சொல்கிறேன், இப்போது அல்ல” என்றபின் வண்டி நகரலாம் என்று கைகாட்டினேன். அவருக்கு தலைவணங்கினேன். அவர் சிலுவை காட்டினார்.

ரெவெரெண்ட் ஜான் மாக்பை பழையபாணி கிறிஸ்துவ ஊழியர். அவருடைய முகம் இந்த நிலநடுக்கோட்டுப்பகுதியின் வெப்பத்தால் வெந்து கன்றி செக்கச்சிவப்பாக, பெரிய பருக்களுடன் இருந்தது. இருந்தாலும் அவர் எப்போதும் கழுத்தை மூடும் தடிமனான அங்கியும் கழுத்துக்குட்டையும் தலையில் தொப்பியும் பட்டுக்கையுறைகளும் உயரமான தோல்காலணிகளும் அணிந்தே பிறர்முன் தோன்றினார். முறையான மொழியிலேயே எப்போதும் பேசினார்.

நான் தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை அமைந்த நெடுந்தெருவின் முகப்பிலேயே ஈட்டியேந்திய காவலர்களால் மடக்கப்பட்டேன். அவர்கள் நான் அனுமதி பெற்றிருக்கிறேனா என்று கேட்டனர். என்னை அடையாளம் காட்டும் எவரேனும் அரண்மனையில் இருந்து வரவேண்டும் என்றனர். நல்லவேளையாக அங்கே பிரிட்டிஷ் சார்ஜெண்ட் ஒருவன்  தலைமைப் பொறுப்பில் இருந்தான். தொலைவிலேயே என்னைப் பார்த்தபின் அவன் அங்கிருந்து ஒரு சரடை இழுத்து மணியை அடித்தான். அவர்கள் பார்த்ததும் கையசைவால் ஆணையிட்டான். காவலர் என்னை உள்ளே செல்ல விட்டனர்.

அந்த சார்ஜெண்டை நான் அறிவேன். அவன் பெயர் பாட்ரிக் வால்ஷ். ஐரிஷ்காரன். நான் அவன் அருகே சென்று வண்டியில் இருந்து இறங்கியதும் “காலைவணக்கம், பாட்ரிக். என்ன நடக்கிறது? ஏன் இத்தனை காவல்?” என்றேன்.

“கலகத்திற்குப்பிறகு எங்கும் காவலை பலமடங்கு ஆக்கிவிட்டார்கள்” என்று அவன் சொன்னான். “இங்கே எந்த நாயர் அரசவிசுவாசி எவன் துரோகி என்று அவனுக்கே தெரியாது. சட்டென்று முடிவெடுத்து வாளை உருவிவிடுகிறார்கள்” புகைக்கறை படிந்த பற்களை காட்டிச் சிரித்து “கர்னல் மெக்காலே கவலைகொண்டிருக்கிறார்” என்றான்.

நான் “உண்மைதான்” என்றேன். “நான் தளவாய் வேலுத்தம்பியை சந்திக்க வந்தேன். முக்கியமான செய்தி”.

“அவர் அறைக்குள் இருக்கிறார் என நினைக்கிறேன். இப்போதுதான் தூங்கி எழுந்திருப்பார். பத்மநாபன் தம்பி  அங்கே உள்கூடத்தில் இருக்கிறார்”.

“நன்றி பாட்”.

நான் உள்ளே சென்றேன். என்னை குச்சம் வைத்த தலைப்பாகை அணிந்த சட்டையில்லாத நாயர்வீரன் அரண்மனையின் கூடத்திற்குள் கொண்டுசென்றான். நான் வருவதை அறிவித்திருப்பார்கள். பத்மநாபன் தம்பி  உள்ளிருந்து வெளியே வந்தார். வெள்ளைவேட்டியை கால்சராய் போல அணிந்து, இடையில் மஞ்சள்நிற கச்சை கட்டி ,அதில் அலங்காரப் பிடிகொண்ட டச்சு உடைவாளை செருகியிருந்தார். வெண்பட்டால் ஆன தலைப்பாகை. அதன் முகப்பில் திருவிதாங்கூரின் சங்கு முத்திரை பொறித்த சுட்டி. கழுத்தில் ஒரு நீளமான மணிமாலை.

“வாருங்கள் டாக்டர்…” என்றார்.

“நான் தளவாய் வேலுத்தம்பி அவர்களை பார்க்கவந்தேன். ஒரு தனிப்பட்ட கோரிக்கை”.

“அவர் நேற்றிரவு மிகவும் பிந்தித்தான் தூங்கச்சென்றார். கர்னல் மெக்காலேவிடம் ஒரு சந்திப்பு. ஐரோப்பியர்கள் இரவில் நெடுநேரம் விழித்திருக்கிறார்கள். இங்கே அவர்களுக்கு உகந்த வெப்பநிலை இரவில்தான் அமைகிறது” என்றார் பத்மநாபன் தம்பி .கண்கள் சற்றே மாறுபட  “நீங்கள் கர்னல் மெக்காலேவை பார்த்துவிட்டு வருகிறீர்களா?” என்று கேட்டார்

“இல்லை, நான் நேரடியாக கொல்லத்தில் இருந்து வந்தேன்”.

“சற்று காத்திருங்கள்… நான் சென்று அவரை பார்த்துவிட்டு வருகிறேன்”.

பத்மநாபன் தம்பி ஒருபார்வையில் தளவாய் வேலுத்தம்பி போலவே தோன்றுவார். ஒருகணம் தளவாய் வேலுத்தம்பியை பார்த்துவிட்டோமா என்று ஐரோப்பியர் எண்ணுவார்கள். ஆனால் இவர் அவரைவிட நான்கு வயது இளமையானவர்,பத்துவயது இளைமையானவராக தோன்றுவார். இவரிடம் எப்போதுமே கண்களில் ஒரு புன்னகை இருக்கும். நிறையப்பேச விரும்புபவர் போலவும் கட்டுப்படுத்திக்கொள்பவர் போலவும் தோன்றுவார். தனியறைக்குள் சென்றால் மேலும் இளைஞராக ஆகி கைவீசி நடனமிடுவார் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் நாற்காலியில் அமர்ந்தேன். என் மருத்துவப்பெட்டியை கால்களுக்கு நடுவே வைத்துக்கொண்டேன். அதை கூடம் என்று சொன்னாலும் சற்றே பெரிய அறைதான். இரண்டு வாசல்கள். இரண்டிலும் திரைகள் ஏதும் இல்லை. வாசல்களுக்குமேல் வெண்கலத்தால் ஆன சங்கு முத்திரைகள் பதிக்கப்பட்டிருந்தன. இங்கே கூடங்களில் பங்கா தொங்கவிடும் வழக்கம் இல்லை. என் ஆடைக்குள் புழுங்கி வியர்வை நிறைய தொடங்கியது.

தளவாய் வேலுத்தம்பி எனக்கு அறிமுகமான அன்றே பத்மநாபன் தம்பியும் அறிமுகமானார். சொல்லப்போனால் அரைமணிநேரம் முன்னதாகவே. அன்றுமுதல் தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்ட நாட்கள் உண்டு. மிக நெருக்கமாகவே என்னிடம் பேசியிருக்கிறார், அவருடைய கவலைகளைப்பற்றி. ஐயங்களைப்பற்றி. அவருடைய குடும்ப வரலாற்றை விரிவாக என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அவற்றை முறையாக எழுதி பதிவுசெய்து வந்தேன். அவர்கள் பொதுவாகவே ஐரோப்பியர் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். அச்சமே மிகுதி, அச்சம் அகன்றால் மிகமிக  அணுக்கமாக ஆகிவிடுவார்கள்.

நான் ஸ்காட்லாந்திலிருந்து 1798 ல் இந்தியா வந்தேன். கல்கத்தாவிலிருந்து 1801ல் கொல்லம் வந்து அங்கிருந்து திருவிதாங்கூரின் புதிய துறைமுகமான ஆலப்புழைக்கு வந்தேன். ஆலப்புழை ஸ்காட் மிஷன் ஆஸ்பத்திரியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில்தான் தளவாய் வேலுத்தம்பிக்கு சிகிழ்ச்சை அளிப்பதற்காக அழைக்கப்பட்டேன். அழைக்க வந்தவர் தன்னை மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்றும், தென்திருவிதாங்கூரில் ஆளூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும். வேலுத்தம்பி தளவாய்க்கு மிக நெருக்கமானவர் என்றும்  அறிமுகம் செய்துகொண்டார்.

வேலுத்தம்பி தளவாய் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தார். ஆனால் அச்செய்தியை அவர் எதிரிகள் அறியக்கூடாது. ஆகவே  மிக ரகசியமான பயணம். ஆலப்புழையில்  தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை துறைமுகத்திற்கு அருகிலேயே தனியான படகுத்துறையுடன் இருந்தது. ஆலப்புழை துறைமுகத்தை நிறுவிய ராஜா கேசவதாஸ் தனக்காக கட்டியது அது.அவர் அங்கே இரண்டு ஆண்டுக்காலம் தங்கியிருக்கிறார்

அது 1802 ஆம் ஆண்டு. வேலுத்தம்பி  திருவிதாங்கூரின் தளவாயாக பதவியேற்று மூன்றுமாதங்களே ஆகியிருந்தன. மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பத்மநாபன் தம்பி உள்ளே தன் அண்ணனுடன் இருந்தார். அவர் வெளியே வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

தளவாய் வேலுத்தம்பி ஒரு தாழ்வான கட்டிலில் படுக்கவைக்கப் பட்டிருந்தார். அவருடைய விலாவில் ஆழமான வெட்டுக்காயம். அதற்கு உள்ளூர் முறைப்படி எண்ணைக்கட்டு போடப்பட்டிருந்தது. ஆனால் புண் புரையோடத் தொடங்கிவிட்டிருந்தது. கடுமையான காய்ச்சலில் அவர் வெந்தவர் போல் இருந்தார். காதுகள் ரத்தம்போல் சிவந்து வீங்கியிருந்தன

நான் அறைக்குள் நுழைந்தபோது ஓசைகேட்டு தளவாய் வேலுத்தம்பி திடுக்கிட்டு எழமுயன்றார். வலியால் இழுக்கப்பட்டு முனகியபடி படுக்கையில் சரிந்தார்.அருகே நின்றிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தார்கள். “டாக்டர்தான், ஐரோப்பிய டாக்டர்” என்றார்கள்.

நான் கட்டை அவிழ்த்துப் பார்த்தேன். புண் மிகப்பெரியது. அதற்கு தையல் போட்டாகவேண்டும். எரிசாராயத்தால் தூய்மை செய்யவேண்டும். ரத்ததில் நஞ்சு பரவாவிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை. “அறுவைச் சிகிழ்ச்சை செய்யவேண்டும், அனுமதி உண்டா?” என்றேன்.

நான் அதைச் சொன்னபோது அவர் அருகே நின்ற பத்மநாபன் தம்பி “செய்யலாம். எதை வேண்டுமென்றாலும் செய்யுங்கள். ஆனால் இங்கே இவர் இந்நிலையில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது” என்றார்.

“இல்லை, நான் எவரிடமும் சொல்லப்போவதில்லை” என்றேன்.

“உங்கள் உதவிக்கு நீங்கள் எவரையும் அழைக்கக்கூடாது. மருந்துகள் பெறுவதாக இருந்தாலும் எவருக்கும் தெரியக்கூடாது”.

“இல்லை, நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

நான் புண்ணை எரிசாராயத்தால் கழுவி குதிரைவால் முடியால் தைத்தேன். கந்தகக்குழம்பை மேலே பூசினேன். பதற்றத்துடன் பத்மநாபன் தம்பி அருகே நின்றிருந்தார். மறுபக்கம் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை. நான் கைகழுவி வந்ததும் இருவரும் என்னருகே வந்தனர்.

பத்மநாபன் தம்பி கவலையுடன் “என்ன நிலைமையில் இருக்கிறார்?” என்றார்.

“பிழைத்துக்கொள்வார் என்றுதான் தோன்றுகிறது” என்றேன்.

“பிழைத்துக்கொண்டாகவேண்டும்… திருவிதாங்கூர் வாழவேண்டும் என்றால் அவர் பிழைத்தாகவேண்டும்” என்றார் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை. அவர் மிக உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார். கண்களில் கண்ணீரின் ஒளி இருந்தது.

என் அதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அவர் விரைவிலேயே குணமடைந்தார்.

என்ன நிகழ்ந்தது என்று பிறகு சொன்னார்கள். அவர் ஆலப்புழை அரண்மனையில் தன் படைத்தலைவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய படைத்தலைவர்களில் ஒருவனாகிய குஞ்சன் செறுமல்லன் என்பவன் அவரை கட்டாரியால் குத்தினான். அவனுடன் வந்த சிண்டன் மாராயன் என்பவனும் அவனுடன் சேர்ந்து குத்தினான். குஞ்சன் செறுமல்லனின் குத்தை அவர் கையால் தடுத்து உடலை விலக்கிக்கொண்டார். அந்த கட்டாரி நெஞ்சை தாக்காமல் அவர் விலாவை கிழித்துச் சென்றாலும் உயிரை எடுக்கவில்லை. சிண்டன் மாராயனை அவர் அருகே நின்றிருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை தடுத்து அவனை அங்கேயே வெட்டி வீழ்த்தினார்.

மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் பத்மநாபன் தம்பியும்தான் தளவாய்க்குரிய அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றினர். தளவாய் நோயுற்றிருப்பது அரசருக்குக் கூட அறிவிக்கப்படவில்லை. அரண்மனை முழுமையாகவே காவலில் இருந்தது. என்னை அங்கேயே ஓர் அறையில் தங்கவைத்தனர்.

மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் வேலுத்தம்பி தளவாயும் இளமைக்கால நண்பர்கள்.ஒரே வயதினர். கேரளபுரம் ஞாறய்க்கல் வெள்ளான் குறுப்பின் களரியில் இருவரும் சேர்ந்தே படைக்கலை பயின்றவர்கள். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையிடம்தான் வேலுத்தம்பி தளவாய் கொஞ்சமேனும் சிரித்தார். அவருடன் தனித்திருக்கையில்தான் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பேசினார்.

வெளியே தளவாய் வேலுத்தம்பிக்கு எதிராக சூழ்ச்சிகளும் அவதூறுகளும் பரவிக்கொண்டிருந்தன. அவர் அரசரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சிறுகுழுவை மக்கள்துணையுடன் அகற்றி தன்னை தளவாயாக ஆக்க அரசரை கட்டாயப்படுத்தி வென்றிருந்தார். அவரை பல்லாயிரம்பேர் காவல்தெய்வம் என்றும் வீரநாயகன் என்றும் கொண்டாடினர். அவரை கொல்லவும் சிலர் விரும்பினர்.

எவ்வகையிலோ எனக்கு தளவாய் வேலுத்தம்பி மேல் ஓர் ஆர்வம் எழுந்தது. அவர் நாளைய வரலாற்றில் நிலைகொள்ளப்போகும் ஒரு மாமனிதர் என எனக்குத்தெரிந்திருந்தது. அவரை வில்லியம் வாலஸ் போலவோ ராபர்ட் புரூஸ் போலவோ கற்பனை செய்துகொண்டேன். இளமை முதலே நான் கேட்டு வளர்ந்த புரட்சிவீரர்கள். மக்கள் நாயகர்கள். வேலுத்தம்பியும் அப்படிப்பட்டவர். அவர்களுக்கிடையே நிறையவேறுபாடுகள் உண்டு என தெரியாமல் இல்லை. ஆனால் ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி, பல்லாயிரம் மனிதர்களின் சீற்றமும் கொந்தளிப்பும் அவர் வழியாக கடந்துசெல்வது எப்படி என்னும் அடிப்படைக் கேள்வியே என்னை அவருக்கு அணுக்கமாக ஆக்கியது.

வேலுத்தம்பி தளவாய் தன் உயிரைக் காப்பாற்றிய என்னிடம் சற்றே நெகிழ்வைக் காட்டினார். என்னைக் காணும்போது மெல்லிய புன்னகை ஒன்று வந்து மறையும். சொற்களில் சற்று மென்மை இருக்கும், அவ்வளவுதான். பொதுவாகவே அவர் மிகமிகக் குறைவாகவே பேசினார். எவர் சொன்னாலும் சிறிய விழிகளை தாழ்த்தியபடி அமர்ந்து கேட்டுக்கொண்டார். பெரும்பாலும் எதற்கும் தன் பதில் என்று எதையும் சொல்வதில்லை. அவர் சொல்வதெல்லாம் முறையான அரசாணைகளாகவே வெளிப்பட்டன.

பெரிய தலையும், சதுரமான முகத்தில் சற்றே பதிந்து பரவிய மூக்கும், தடிமனான உடலும் கொண்ட கரிய மனிதர். புதர்போல் செறிந்து கீழே வளைந்த மீசை. அவருடைய நீண்ட கூந்தலை பார்த்து முதல்முறை நான் வியந்துபோனேன். அதை சுருட்டிக்கட்டி அதன்மேல் பட்டுத்தலைப்பாகையை அணிவார்.

பத்மநாபன் தம்பி வந்து “வரலாம்” என்றார்.

நான் என் மருந்துப்பெட்டியுடன் எழுந்துகொண்டேன். நாங்கள் வேலுத்தம்பி தளவாயின் சிறிய படுக்கையறைக்குள் நுழைந்தோம். அவருடைய உருவத்திற்கு அது சிறிய படுக்கை. அந்த அறையே சாளரங்கள் இல்லாமல் சற்றே பெரிய மரப்பெட்டி போல் இருந்தது. காலையில் அவர் எழுந்ததும் பார்ப்பதற்காக நேர் எதிரில் ஒரு மேஜையில் மயிற்பீலியும் மலர்களும் கண்ணாடியும் வைக்கப்பட்டிருந்தது.

வேலுத்தம்பியின் கண்கள் களைத்து தசைகள் தளர்ந்திருந்தன. வாயின் இருபக்கமும் சுருக்கங்கள். அவர் நான் ஓராண்டு முன்பு கண்டதைவிட பல ஆண்டுகள் வயதானவர் போலிருந்தார். ஆனால் நன்றாக தடித்திருந்தார். வெயிலில் நிற்காமையால் வெளிறியும் இருந்தார்.

நான் அவருடைய நாடியை பிடித்துப் பார்த்தேன். அவருடைய கண்களையும் நாக்கையும் பார்த்தேன். அவர் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருந்தது.

“நீங்கள் குறைவாக மது அருந்தவேண்டும்” என்றேன்.

“தொடர்ச்சியாக ஐரோப்பியர்களுடன் சந்திப்பு. மதுவை தவிர்க்கமுடியாது” என்றார்.

நான் பேசவந்ததை சொல்ல சொற்களை தேடிக்கொண்டிருந்தபோது வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உள்ளே வந்தனர். அவர்களுடன் இரண்டு இஸ்லாமியர்களும் இருந்தனர்.

அவசரமான குரலில் “ஆடை ஒருக்கமாகிவிட்டது… தாங்கள் பார்த்து சொல்லவேண்டும்” என்றார் வலிய காரியக்காரர் கேசவன் நாயர்.

பேஷ்கார் நாராயண பிள்ளை “இப்போதுதான் பணிகுறை தீர்ந்தது… ஏதாவது மாற்றவேண்டும் என்றால் உடனே சொல்லவேண்டும்” என்றார்.

இஸ்லாமியர்களில் ஒருவர் வயதானவர். மருதோன்றிச் சாற்றால் சிவப்புச் சாயமிட்ட நீண்ட தாடியும் மீசையற்ற மேலுதடும் கொண்டவர். அவருக்குப்பின்னால் அவருடைய மகன் எனத் தோன்றும் இளைஞன் சிறிய கரிய தாடி கொண்டவன். இருவருமே பட்டுத்தொப்பி வைத்திருந்தனர்.

“உஸ்தாத், காட்டுங்கள்” என்றார் கேசவன் நாயர்.

கிழவர் முன்னால் வந்து “என்பெயர் கான் முகமது கான். இவன் என் மகன் தாவூத் கான். நாங்கள் மதுரையிலிருந்து வந்தவர்கள். திருமனசின் அளவுகள் கிடைத்தன. அதைக்கொண்டு தைத்தோம். நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது அல்லாவின் அருள்” என்றார்.

வேலுத்தம்பி தளவாய் தலையசைத்தார்.

அவர் தன் மகனிடமிருந்து ஒரு மூங்கில்பெட்டியை வாங்கி அதைத் திறந்து உள்ளிருந்து மிகப்பெரிய அங்கி ஒன்றை எடுத்தார். கிட்டத்தட்ட ஆளுயரமான ஆடை. ஆழ்ந்த கருஞ்செந்நிறப் பட்டால் ஆனது. அதில் பொன்னை உருக்கி நீட்டிய மெல்லிய நூல்கம்பிகளால் பூவேலை செய்யப்பட்டிருந்தது. விளிம்புகளில் மாங்காய்களை அடுக்கியதுபோல. நெஞ்சின் இருபக்கமும் தாமரைகள். கைகளில் கவிழ்ந்த தாமரைகள். பொன்னூல் வேலைப்பாடுகள் மிகமிக நுணுக்கமானவை.

வேலுத்தம்பி தளவாய் நிறைவுற்றார் என்று முகம் காட்டியது.

“நல்லது” என்றார்.

“உள்ளே போடுபவை அணியலங்காரம் அற்றவை” என்று அவர் அவற்றை எடுத்துக் காட்டினார். பட்டுச் சட்டை, பட்டு சராய். வெள்ளையரின் ஆடைகளைப்போல லேஸ் வைத்து தைக்கப்பட்டவை

வேலுத்தம்பி தளவாய் தலையசைத்தார். அவர்கள் தலைவணங்கி பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

வேலுத்தம்பி தளவாய் பதற்றமாகவே இருந்தார். சட்டென்று திரும்பி பத்மநாபன் தம்பியிடம் “உடனே நான் கிளம்பவேண்டும்…நீ என்னுடன் வா” என்று சொல்லிக்கொண்டே மறுவாசல் வழியாக வெளியே சென்றார். அதை எதிர்பாராததால் நான் திகைத்து நின்றேன். பத்மநாபன் தம்பி என்னை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்து சென்றார்.

நான் மீண்டும் கூடத்திற்கு வந்து அமர்ந்தேன். வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் என்னை கடந்து வெளியே சென்றனர்.

அந்த இரு முஸ்லீம்களும் அங்கேயே அமர்ந்து அந்த அங்கியை சீரமைக்கத் தொடங்கினர். அதை அவர்கள் ஒரு கழியில் மாட்டி சுவரில் பொருத்தினர். பின்னர் பட்டுநூல் கோத்த ஊசியால் விரைவாக தைக்கத் தொடங்கினர். அவர்களின் கைகள் சிறிய பூச்சிகளில் மட்டுமே தெரியும் துடிப்பான விரைவைக் கொண்டிருந்தன.

முன்பெல்லாம் திருவிதாங்கூரின் தளவாய்க்கு இப்படிப்பட்ட சரிகைப் பட்டு ஆடைகள் இல்லை. மற்ற சம்ஸ்தானங்களில் திவான் எனப்படும் பதவி இங்கே தளவாய் எனப்படுகிறது. தலைமைப்படைத்தலைவர், தலைமை அமைச்சர் என்னும் இரு பதவிகளும் கலந்தது அது. அரசருக்கு அடுத்தபடியாக அனைத்து அதிகாரங்களும் கொண்டது. ஆயினும் அவர் ஓர் அரசு ஊழியரின் தோற்றத்தையே கொண்டிருந்தார்.

திருவிதாங்கூர் அரசின் சிற்பி என்று அழைக்கப்பட்ட மார்த்தாண்டவர்மா மகாராஜாவை அரசராக்கியவர், அவருக்காக எதிரிகள் அனைவரையுமே வென்று அழித்தவர், திருவிதாங்கூரில் நிலையான மைய நிர்வாகத்தை உருவாக்கியவர் தளவாய் ராமையன். அவருடைய படத்தை நான் பார்த்திருக்கிறேன். இடையில் சுற்றிக்கட்டிய புளியிலைக் கரையிட்ட வேட்டி, செம்பட்டுக் கச்சை, வெண்பட்டு மேலாடை, வெண்ணிறமான தலைப்பாகை, அதன் நெற்றியில் திருவிதாங்கூரின் சங்கு முத்திரை அவ்வளவுதான். நகைகள் கூட இல்லை. கையில் இடையளவு நீளமான பெரிய வாள்.

மற்ற திவான்கள் கூடுதலாக நகைகள் அணியத் தொடங்கினார்கள். கழுத்தில் ஓர் ஆரம், அதில் சங்குமுத்திரையிடப்பட்ட பதக்கம், கடுக்கன்கள், அரசரால் அளிக்கப்பட்ட கங்கணங்கள், தேவையான முத்திரை மோதிரங்கள். அவ்வளவுதான் ஆடையணிகள். அத்தனை அரசு அதிகாரிகளும் அவ்வாறு எளிமையாகத்தான் ஆடை அணிந்தனர். இங்கே வரும் ஐரோப்பியருக்கு இருக்கும் சிக்கலே ஆடையை வைத்து ஒருவரின் அதிகாரநிலை என்ன, குடும்பநிலை என்ன என்பதை கணிக்கமுடியாது என்பதுதான்.

ராஜா கேசவதாசனின் காலகட்டத்தில்தான் திவான் ஆடம்பரமான ஆடை அணிவது வழக்கமாகியது. அரசருடன் திவானும் அவையில் கொலுவிருக்க்கும் வழக்கமும் அப்போது உருவானதுதான். ராஜா கேசவதாசனின் அதே ஆடைதான் இதோ வேலுத்தம்பி தளவாய்க்காக ஒருங்கிக்கொண்டிருக்கிறது. பனம்பாளை விரித்தது போன்ற மடிப்புக்கொசுவம் கொண்ட பாவாடை போன்ற கீழாடை. அதற்குள் பட்டுத்துணியில் தைக்கப்பட்ட கால்சராய். மேலே பட்டுத்துணியில் பொன்னூல்களால் அலங்காரப் பின்னல்கள் செய்யப்பட்ட நீண்ட அங்கி அதற்குள் பட்டாலான முழுக்கை சட்டை. அதன் கையில் ஐரோப்பிய பாணியில் பட்டைகள்.அவர் அணியும் நகைகளும் திருவிதாங்கூர் மரபைச் சேர்ந்தவை அல்ல. மார்பில் சரப்பொளி மாலை, காதுகளில் குண்டலங்கள், தலையில் உயரமான பட்டுத்தலைப்பாகை, அதற்குமேல் சுற்றப்பட்ட முத்துச்சரங்கள்.

அந்த ஆடையணிகள்  டெல்லி முகலாயர் அவையிலிருந்து மராத்தியர்களுக்குச் சென்றவை.  டெல்லி அவையில் அது ஆப்கானிய குருதிகொண்ட பிரபுக்களுக்கான ஆடை. ஷெகன்ஷாவின் ஆடை மேலும் சற்று வைரங்கள் பதிக்கப்பட்டது, அவ்வளவுதான். பின்னர் அது மராத்திய பேஷ்வாக்களின் தோற்றமாக மாறியது. அங்கிருந்து தஞ்சை மராட்டியர் அவைக்கு வந்தது. சரபோஜியின் அமைச்சர்களான நியோகி பிராமணர்களின் ஆடையாகியது. அவர்களிடமிருந்து திருவிதாங்கூர் திவானின் ஆடையாக வந்தமைந்தது.

இந்த முஸ்லீம் தையற்காரர்கள் மதுரை நாயக்கர்களால் வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்களின் முன்னோர்கள் ஆப்கானிலும் அதற்கு முன் பாரசீகத்திலும் இருந்தவர்கள். அவர்கள்தான் துருக்கிய சுல்தான்களுக்கு ஆடைகளை வடிவமைத்தவர்கள். துருக்கிய கலிஃபா முஸ்தபா பின் அப்துல் ஹமீது இன்று அணியும் ஆடையின் இன்னொருவடிவம் இதோ என் முன் நின்றுகொண்டிருப்பது. இவையனைத்திற்கும் மூலவடிவம் சீனச் சக்கரவர்த்திகளின் டிராகன் அங்கியில் இருந்து பெறப்பட்டது.

தளவாய் கேசவதாஸ் திவான் என்னும் நிலையில் இருந்து எழுந்து இணையான ஓர் அரசராகவே ஆனார். ராஜா கேசவதாஸ் என்றே அவரை மக்கள் அழைத்தனர். நாகர்கோயில் அருகே குன்னத்தூர் என்ற ஊரில் கீர்த்திமங்கலம் என்ற குடும்பத்தில் கேசவபிள்ளை பிறந்தார். அரசப்பணிக்கு இளமையிலேயே வந்த கேசவபிள்ளை  தர்மராஜா என்று புகழப்பட்டவரான கார்த்திகைத்திருநாள் மகாராஜாவின் முதுமைக்கால ஆட்சியில் கேசவதாஸ் என்றபேரில் திவானாக எழுந்தார்.

தென்னிந்தியாவையே கைப்பற்றியபின் மேலும் தெற்கே படைகொண்டு வந்த  திப்புசுல்தானின் படைகளை வென்று பெருவீரர் என மக்களால் கொண்டாடப்பட்டார் கேசவதாஸ். மன்னர் முதுமையில் அரண்மனையில் ஒடுங்க முடியதிகாரம் முற்றாகவே கேசவதாஸின் கைக்கு வந்தது. ராஜா என்று அவர் அழைக்கப்பட்டார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். தனக்கான ஆடையை அவரே வடிவமைத்துக்கொண்டார். செல்லுமிடங்களில் எல்லாம் கொலுவிருந்தார். மக்களிடம் நேரடியாக குறைகேட்டார். படைகளை தானே நடத்தினார்.

துறைமுகங்களையும் சந்தைகளையும் சாலைகளையும் உருவாக்கி திருவிதாங்கூரின் செல்வநிலையை மேம்படுத்தியவர் ராஜா கேசவதாஸ். ஆலப்புழை துறைமுகமே அவர் உருவாக்கியதுதான். அவரை மக்கள் கொண்டாடினர். படைவீரர்கள் வழிபட்டனர். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. வளர்ந்து வளர்ந்து செல்பவர்களின் சிக்கல் அது. அவர்கள் வளர்வதற்குரிய அனைத்து விசைகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். இறுதி எல்லையை பார்த்த பின்னரும் வளர்வதை நிறுத்த அவர்களால் முடியாது. அதுவே அவர்களின் வீழ்ச்சியாக ஆகிவிடும்.

அரசருக்கான உடையை அணியத் தொடங்கிய இடத்தில் ராஜா கேசவதாஸின் வீழ்ச்சி தொடங்கியது என்று  ரெவெரெண்ட் ஜான் மாக்பை ஒருமுறை தனிப்பேச்சில் சொன்னார். அவர் ராஜா என்று அழைக்கப்பட்டதை , அரச உடையுடன் கொலுவிருந்ததை  மக்கள் கொண்டாடினர். மகாராஜாவுக்கும் எந்த மறுப்பும் இருக்கவில்லை. ஆனால் எங்கோ அவருக்கான வாள் எழுந்துவிட்டது. அது அதன்பின் அவருடைய ஒவ்வொரு செயலாலும் கூர்கொண்டபடியே வந்தது. உரிய தருணத்தில் அவரைப் பற்றியது.

தளவாய் வேலுத்தம்பியை ஊக்கம் கொள்ளச்செய்த முன்னோடி வடிவம் ராஜா கேசவதாஸ் மட்டுமே. அவர் ராஜா என்றுதான் எப்போதும் அவரைச் சொல்வார். என்னிடம் பேசும்போது ராஜா கேசவதாஸின் பெயரை மட்டும் பெருமதிப்புடன் மெல்ல உச்சரிப்பார். அப்போது கண்கள் கனிந்திருக்கும். நான் அவர் ராஜா கேசவதாஸின் குடும்பதைச் சேர்ந்தவர் என நினைத்திருந்தேன். இல்லை அது ஒருவகை மாணவ ஆசிரிய பாவனைதான் என்று பிறகுதான் தெரிந்தது

1765 ஆம் ஆண்டில்  தலக்குளத்தில் குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளைக்கும் வள்ளியம்மைத் தங்கச்சிக்கும் மகனாக வேலுத்தம்பி தளவாய் பிறந்தார். அவ்வாண்டுதான்  ராஜா கேசவதாஸ் கார்த்திகைத் திருநாள் மகாராஜாவின் அரசில் ராயசம் ஆக பதவியேற்றார். அப்போது அவர் மழவராயன் கேசவபிள்ளை மட்டுமே. அவ்வாண்டு கார்த்திகைத் திருநாள் மகாராஜா பத்மநாபபுரத்திற்கு வந்திருந்தபோது தங்கள் மூன்றுமாத குழந்தையுடன் தலக்குளத்து வலியவீட்டில் குஞ்ஞு மாயூட்டிப் பிள்ளையும் வள்ளியம்மைத் தங்கச்சியும் அரசரை முகம்காட்ட ‘திருமுன்காட்சிவைப்பு’களுடன் சென்றனர். மலர், கனி, நெல், உடைவாள், பொன் என்று ஐந்துவகை மங்கலங்களை மகாராஜாவின் முன் படைத்து வணங்கினர்.

குழந்தையை மகாராஜாவின் காலடியில் வைத்து “தங்கள் சேவைக்காக இதோ இன்னொரு தலையும் இரண்டு கைகளும் தம்புரானே” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

மகாராஜா புன்னகைத்து குனிந்து குழந்தையின் தலையை தொட்டு “சிரேயஸ்மான் ஃபவ” என்றார்.

“குழந்தைக்கு ஒரு பெயர் சூட்டி அனுக்ரகிக்கணும்” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

மகாராஜா அருகே நின்றிருந்த இருபது வயது இளைஞரான ராயசம் கேசவபிள்ளையிடம்  “என்ன பெயர் போடலாம் கேசவா?”என்று கேட்டார்.

“அடியன், இன்று கிருத்திகை நாள். முருகன் பெயர் போடலாம். வேலாயுதன் என்று இருக்கட்டும்” என்றார் கேசவபிள்ளை.

“அருமை, அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் மகாராஜா. “உன் குடும்பத்திற்கு சோழர்காலம் முதலே செண்பகராமன் பட்டம் உள்ளதல்லவா மாயூட்டீ? இவனை வேலாயுதன் செண்பகராமன் என்றே அழைக்கலாம்”.

“அடியேன், திருப்பாதங்களின் ஆசி நிறையட்டும்” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

தனக்கு பெயரிட்டதே ராஜா கேசவதாஸ்தான் என்பதை தளவாய் வேலுத்தம்பி எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் மூன்றுமுறை சொன்னார். மெல்லிய குரலில், முகத்தில் பெருமிதம் நிறைந்திருக்க அதைச் சொல்லி தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.

கேசவபிள்ளை சம்பிரதியாகவும் பின்னர் சர்வாதிக்காரர் ஆகவும் மாறி கேசவதாஸ் என்றபேரில் திவானாக பதவி ஏற்பது வரை எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சென்று சந்தித்துக்கொண்டிருந்தார் வேலுத்தம்பி. அவரும் வேலாயுதன் செண்பகராமன் என்ற இளைஞனை நினைவு வைத்திருந்தார். அவனை வேலுத்தம்பி என்று அழைத்தவர் அவர்தான்.

1784ல் கார்த்திகைத்திருநாள் மகாராஜா திருச்செந்தூருக்கு ஆலயப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவருடைய பயணக்குழுவை களக்காட்டு மறவர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றில் மகாராஜாவின் தனிப்பட்ட பூசைப்பொருட்களும் பொன்னாலான பீடத்தில் பொருத்தப்பட்ட அரிய சாலக்கிராமம் ஒன்றும் இருந்தது. மனம் சோர்ந்து திருவனந்தபுரம் மீண்டுவந்த மகாராஜா திருடர்களை பிடித்து தண்டித்து அப்பொருட்களை மீட்டுவரவேண்டும் என்று ஆணையிட்டார்.

அன்று பெரியசர்வாதிக்காரராக இருந்த கேசவதாஸ் பத்மநாபபுரத்திற்கு வந்து களக்காட்டு மறவர்களை வென்று மகாராஜாவின் பூஜைப்பொருளை மீட்பதற்குரிய படை ஒன்றை அமைக்கவேண்டும் என்று புலியூர்க்குறிச்சியில் தண்டு கொண்டிருந்த திருவிதாங்கூரின் கிழக்கெல்லைப் படைகளை நடத்திய படைத்தலைவன் வலியகேசவன் தம்பியிடம் கோரினார்.

அன்று இருபது வயது இளைஞனாக இருந்த வேலாயுதன் செண்பகராமன் அப்போது சபையில் இருந்தார். அவர் எழுந்து “நூறுபேர் கொண்ட படை என்னிடம் இருக்கிறது, நான் சென்று அவர்களை தண்டித்து பொருளை மீட்டு வருகிறேன்”.

வலியகேசவன் தம்பி எரிச்சலுடன் “நூறுபேரல்ல ஆயிரம்பேர் சென்றால்கூட அவர்களை பிடிக்கமுடியாது. அவர்கள் வாழும் நிலம் மாபெரும் பொட்டல். சூழ்ந்திருப்பவை மொட்டைமலைகள். நம்மைக் கண்டதுமே அவர்கள் அந்த மலைகளுக்குமேல் ஏறிக்கொள்வார்கள். நாம் மேலேறிச்சென்றால் அவர்கள் பாறைகளை உருட்டிவிடுவார்கள். அந்த மலைகளுக்குமேல் அவர்களால் பலமாதங்கள் வாழமுடியும். நாம் கீழே ஒருவாரம்கூட தங்கமுடியாது, தண்ணீரும் உணவும் இருக்காது. பலமுறை நாம் படைகொண்டுசென்று பயனில்லாமல் திரும்பி வந்திருக்கிறோம்” என்றார்.

“நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று வேலுத்தம்பி சொன்னார். கேசவதாஸ் அனுமதி கொடுத்தார்.

வேலுத்தம்பியின் படை களக்காட்டை அடைந்தது. அவர்களைக் கண்டதுமே மறவர்கள் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் மட்டும் விட்டுவிட்டு மொட்டைமலைகளுக்குமேல் ஏறிக்கொண்டனர். கானல் பாய்ந்து கிடந்த பொட்டல் நிலத்தில் தீபோல வெயில் எரிந்தது. அந்தப்பெண்கள் சாபம்போட்டு வசைபாடி மண்ணை அள்ளித்தூற்றினர். சாணியும் மலமும் கரைத்து ஊற்றினர் அது அவர்களின் வழக்கமான போர்முறை.

ஆனால் அத்தனை பெண்களையும் பிடித்து கட்டி கொண்டுவர வேலுத்தம்பி ஆணையிட்டார். அது அன்றுவரை எவருமே செய்யாதது. பெண்களைச் சிறையிட படைவீரர்களே தயங்கினர். ஆனால் வேலுத்தம்பி அவரே வாளை உருவி முன்னால் வந்து நின்று சாணியை அள்ளி வீசி கூச்சலிட்ட ஒரு முதிய பெண்ணின் கழுத்தை வெட்டி தலையை மண்ணில் வீழ்த்தினார். அந்த ரத்தத்தை எடுத்து தன் முகத்தில் விட்டுக்கொண்டு வெறிக்கூச்சலிட்டார்.

அதன்பின் வெறிகொண்டு படைவீரர்களும் முன்னெழுந்தனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மொத்த வீடுகளும் எரியூட்டப்பட்டன. அப்பெண்கள் திகைத்து உறைந்தனர். அவர்களை இழுத்துவந்து மொட்டைமலைகளுக்கு கீழே திறந்த வெளியில் வைத்து ஒருநாளுக்கு ஏழுபேர் வீதம் கழுவேற்றினார்  வேலுத்தம்பி . மடியில் அவர்களின் குழந்தைகளின் தலைகளை வெட்டி வைத்தார்.

மேலே இருந்து நோக்கிய மறவர்கள் நடுங்கினர். அவர்களில் சிலர் நெஞ்சடைத்தே இறந்தனர். ஆயிரமாண்டுக்கால வரலாற்றில் எவரும் செய்யத்துணியாதது அது. தலைமுறை தலைமுறையாக தொடரும் குலப்பழியும் குடிப்பழியும் சேர்ப்பது.

மறவர்களில் முதியவன் மலையிறங்கி வந்து அடிபணிந்தான். அத்தனை மறவர்களும் வந்து பணியவேண்டும், திருடிய பொருட்கள் அனைத்தையும் திரும்ப அளிக்கவேண்டும்., இல்லையேல் ஒரு உயிர்கூட ஊரில் எஞ்சாது என்று வேலுத்தம்பி சொன்னார். கைக்குழந்தைகளையும் கழுவிலேற்றி துண்டுதுண்டாக வெட்டி ஈமச்சடங்குகூட செய்யமுடியாமல் பேய்களாக அலையவைப்பேன் என்றார்.

கிழவர் சென்று சொல்ல மறவர்கள் மேலும் தயங்கினர். இருமடங்கு பெண்கள் மறுநாள் கழுவேற்றப்பட்டனர். வேலுத்தம்பியில் இருந்த குருதிப்பேயை கண்டு அலறிவிட்ட மறவர்கள் அனைவரும் வந்து அடிபணிந்தனர். அவர்களில் பன்னிரண்டு இளைஞர்களை மட்டும் விட்டு எஞ்சிய அனைவரையும் கொன்று தலைகளை ஒரு மாட்டுவண்டி நிறைய குவித்து, பூசைப்பொருட்களையும் மீட்டு எடுத்துக்கொண்டு வேலுத்தம்பி திரும்பி வந்தார்.

பத்மநாபபுரத்திற்குள் அவர் நுழைந்தபோது குடிமக்கள் அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிட்டு வீட்டுக்குள் சென்று வாசல்களை மூடிக்கொண்டார்கள். சிலர் குலதெய்வங்களின் முன்னாலிருந்து விபூதியையும் குங்குமத்தையும் கொண்டுசென்று வீட்டு வாசல் முன் வைத்தனர். பிராமணர்கள் அனுமார் சிலைகளை கொண்டுவந்து படிகளில் வைத்தனர்.

ஆனால் ராஜா கேசவதாஸ் வேலுத்தம்பியை நேரில் வந்து எதிர்கொண்டு நெஞ்சோடு தழுவி வரவேற்றார். அவர் மீட்டுக்கொண்டுவந்த பொருட்களுடன் திருவனந்தபுரத்திற்கு திரும்பிச் சென்றார்.

வேலுத்தம்பியை அதன்பின் அனைவரும் அஞ்சினர். ஆழத்தில் வெறுத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் அதன்பின் தடைகளே இருக்கவில்லை. அவர் அவ்வாண்டே கல்குளம் ’மண்டபத்துவாதுக்கல்’ சபையின் காரியக்காரராக  ஆனார். இருபது வயதில் அத்தனை பெரிய பதவி எவரும் கேட்டிராதது.

1789 ல் கேசவதாஸ் திருவிதாங்கூரின் திவானாக ஆனார். அவர் இரணியல் நாட்டுக்கூட்டத்தின் தலைவராக வேலுத்தம்பியை நியமித்தார். திருவிதாங்கூருக்கு உட்பட்ட வேணாட்டு பகுதியின் அரசருக்கு சமானமான பதவி அது.

1798 ல் கார்த்திகைத்திருநாள் மகாராஜா மறைந்தார். அவருடைய பதினாறு வயதான மருமகன் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா அரசர் ஆனார். ஆற்றலற்றவரும் நோயுற்றவருமான  பாலராம வர்மா தனக்கு நெருக்கமானவரான ஜயந்தன் நம்பூதிரியை தன்னுடைய முதன்மை ஆலோசகராக நியமித்தார். ஜயந்தன் நம்பூதிரி தலக்குளத்து சங்கரநாராயணன் செட்டியையும் தச்சில் மாத்து தரகனையும் முதன்மைப் பதவிகளில் நியமித்தார்.

அந்தக் குழு முற்றதிகாரத்தை கைப்பற்ற நினைத்தது. ஆகவே. ராஜா கேசவதாஸை ஒற்றன் என முத்திரை குத்தியது. அவரை அரண்மனைச் சிறையில் அடைத்தது. ராஜா கேசவதாஸின் மேல் தனிப்பட்ட காழ்ப்பும் அச்சமும் கொண்டிருந்த அவையினர் பலர் அதை ஆதரித்தனர். மக்களில் ஒருசாராரின் ஆதரவும் அதற்கு இருந்தது.

திறமையானவரும் நேர்மையானவருமான ராஜா கேசவதாஸ் அவ்வண்ணம் வீழ்த்தப்பட்டதற்கு இருந்த ஆதரவு வேலுத்தம்பிக்கு திகைப்பை அளித்தது.  “இதெப்படி நடக்கமுடியும்? எடே பப்பு, ராஜாவைப்போல இந்த நாட்டுக்கு நல்லது செய்த யார் இருக்கிறார்கள்?” என்று அவர் புலம்பினார்.

பத்மநாபன் தம்பி “அவர் ராஜா இல்லையே அண்ணா” என்றார்.

“என்னடா சொல்கிறாய்?” என்று வேலுத்தம்பி சொன்னார்.

“ராஜா தவறுசெய்தாலும் மக்கள் மன்னிப்பார்கள். ராஜா அல்லாதவர் ராஜாவாக ஆவதை ஏற்கவே மாட்டார்கள்” என்றார் பத்மநாபன் தம்பி.

“நான் போய்ப்பார்க்கிறேன்.. நான் செய்யவேண்டியது என்ன என்று கேட்கிறேன்” என்று வேலுத்தம்பி சொன்னார்.

வேலுத்தம்பி திருவனந்தபுரத்திற்குச் சென்றார். அங்கே தெற்கே கொட்டாரம் மாளிகையில் சிறைவைக்கப் பட்டிருந்த ராஜா கேசவதாஸை காவல்களையும் தடைகளையும் மீறிச் சென்று பார்த்தார்.அங்கே கேசவதாஸுக்கு அவருடைய மருமகன்  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை துணையிருந்தார். அவர் வேலுத்தம்பியை உள்ளே அழைத்துச்சென்றார்.

ராஜா கேசவதாஸ் அருகே ஒற்றர்கள் இருந்தமையால் பேசமுடியாதவராக இருந்தார். “என்னை திரும்ப நாஞ்சில்நாட்டுக்கே சென்றுவிடும்படிச் சொல்கிறார்கள்” என்று அவர் சொன்னார்  “என் கர்மமண்டலம் இது… நான் போகமாட்டேன்”.

“நான் என்ன செய்யவேண்டும் ராஜா. சொல்லுங்கள்” என்றார் வேலுத்தம்பி.

“நான் ஆணையிடுகிறேன்… நானே சொல்கிறேன்” என்றார் ராஜா கேசவதாஸ்.

வேலுத்தம்பி தலக்குளத்திற்கு திரும்பி வந்த ஏழாம் நாள் ராஜா கேசவதாஸ் நஞ்சிட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது.

ஜயந்தன் நம்பூதிரியின் ஆட்சி வெறும் இருபத்தைந்து நாட்களே நீடித்தது. வேலுத்தம்பியின் தூதர்கள் திருவிதாங்கூர் முழுக்க சென்று அனைத்து நாயர் தளபதிகளையும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கணக்கான இடங்களில் படைவீரர்கள் கலவரம் செய்தனர்.

ராஜா கேசவதாஸின் நேர் மருமகன் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை வேலுத்தம்பி தளவாயுடன் வந்து சேர்ந்துகொண்டார். அவர் நாஞ்சில்நாட்டிலிருந்து இரண்டாயிரம்பேர் கொண்ட படை ஒன்றை திரட்டினார். பாண்டிநாட்டிலிருந்து இரண்டாயிரம்பேர் கொண்ட கூலிமறவப்படை ஒன்றையும் திரட்டிக்கொண்டார். அவர் ஆளூரில் இருந்து தலக்குளம் வந்து சேர்ந்தபோது அங்கிருந்த வேலுத்தம்பியின் இரண்டாயிரம் பேரும் இணைய திருவிதாங்கூரின் ஒட்டுமொத்த படையை விட பெரிய படை உருவாகியது.

அவர்கள் பத்மநாபபுரம் அரண்மனையை கைப்பற்றினர். அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்றனர். அவர்கள் செல்லும் செய்தி அறிந்ததுமே திருவிதாங்கூரின் பலபகுதிகளில் நாயர் பிரபுக்கள் படைகொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியிலேயே பலர் வேலுத்தம்பியுடன் சேர்ந்துகொள்ள எட்டாயிரம் பேர் கொண்ட படை தலைநகரைச் சூழ்ந்தது.

ஜயந்தன் நம்பூதிரி வடக்கே தப்பி ஓடினார். தலக்குளத்து சங்கரநாராயணன் செட்டியையும் தச்சில் மாத்து தரகனையும் வேலுத்தம்பி செவிகளை அறுத்து சிறையிலிட்டார். அங்கேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அரசரின்மேல் செல்வாக்குடன் இருந்த  சம்பிரதி குஞ்சுநீலன் பிள்ளை, வலியமேலெழுத்து முத்துப்பிள்ளை, சேனாபதி சுப்பையன் ஆகியோரை கொல்வதற்கான ஆணையில் அரசரிடமே கைச்சாத்து வாங்கினர். மதுவின் மயக்கத்தில் இருந்த அரசர் அந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது என்றே வாசிக்கவில்லை.

1802ல் வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் ஆக வந்தார். ஆனால் அவருக்கு உள்ளூர எதிர்ப்புகள் இருந்தன. சிறையின்கீழ் ஐயப்பன் செண்பகராமன், பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் ஆகியோர் வலுவான நாயர் தலைவர்களாக இருந்தனர். ஜயந்தன் நம்பூதிரியை துரத்தியபின் மகாராஜா ஐயப்பன் செண்பகராமனைத்தான் தளவாய் ஆக நியமித்தார். அவர் பதினான்கே மாதங்களில் உயிரிழந்தார். தொடர்ந்து பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தளவாய் ஆனார். அவரை ஏழு மாதத்தில் நீக்கிவிட்டு வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் பதவிக்கு வந்தார்.

வேலுத்தம்பி தளவாய் பதவி ஏற்ற மூன்று மாதங்களுக்குள் ஏழு கொலைமுயற்சிகள் நடந்தன.  அதில் ஒன்றிலிருந்துதான் நான் அவரை காப்பாற்றினேன். அதற்குப் பின்னாலிருந்தவர் பாறசாலை பத்மநாபன் செண்பகராமன். அவர் அப்போதும் வேலுத்தம்பி தளவாய்க்கு வலுவான எதிரியாக நீடித்தார். அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் வேலுத்தம்பி தளவாயைக் காத்தது ராஜா கேசவதாஸின் பெயர். அவருடைய நேர்மருமகனாகிய  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையின் ஆதரவு.

பத்மநாபன் தம்பி உள்ளே வந்தார். அவர் கைகாட்ட முஸ்லீம்கள் இருவரும் அந்த ஆடைகளுடன் உள்ளே சென்றனர்.

பத்மநாபன் தம்பி என்னிடம் வந்து “இன்று முக்கியமான ஒரு விசாரணை இருக்கிறது.  வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள்” என்றார்.

“தெரியும், தளவாய் அவர்கள் அரச ஆடை அணிவதும் அதற்காகத்தான் இல்லையா?” என்றேன்.

பத்மநாபன் தம்பி விழிகளில் ஒரு சங்கடத்துடன் “ஆம், அது தேவை என அவர் நினைக்கிறார்” என்றார்.

“நான் பேசவந்ததே அந்த விஷயமாகத்தான்” என்றேன்.

பத்மநாபன் தம்பி திடுக்கிட்டதுபோல தெரிந்தது. ஆனால் அவர் ஏதும் சொல்லவில்லை.

“நான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்காக பேச வந்தேன்” என்றேன்.

“அதை நீங்கள் பேசமுடியாது” என்று பத்மநாபன் தம்பி சொன்னார் “வேறு எவருமே பேசமுடியாது”.

“நான் பேசியாகவேண்டும். இல்லாவிட்டால் என் மனசாட்சி என்னை வருத்தும். அதற்காகவே செய்தி அறிந்ததும் கொல்லத்தில் இருந்து படகில் வந்தேன்” என்றேன்.

“அவர்மேல் இருக்கும் குற்றச்சாட்டு என்னவென்று தங்களுக்கு தெரியாது. அரசுக்கு எதிரான கலகம். ராஜத்துரோகம்…”

“எல்லாமே எனக்கு தெரியும். நிலைமையை நான் சொல்கிறேன், தவறா என்று நீங்களே சொல்லுங்கள்” என்றேன் “பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தலைமையில் வேலுத்தம்பித் தளவாய்க்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது.கர்னல் மெக்காலே பாறசாலை பத்மநாபன் செண்பகராமனை தற்காலிகமான திவானாக ஆக்கினார். ஏனென்றால் அவர்மேல் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் மறைந்த திவான் ராஜா கேசவதாஸின் தங்கை கணவர். ஆனால் அதை வேலுத்தம்பி தளவாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வேலுத்தம்பியை தனக்கு போட்டியாகக் கருதினார்.”

“தன் ஆதரவாளர்களை பாறசாலை பத்மநாபன் தம்பிக்கு எதிராகத் திரட்டினார். அவருக்கு மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை துணைந்நின்றார். பாறசாலை பத்மநாபன் தம்பியை நீக்கி வேலுத்தம்பி திவான் ஆனார். அது அவர்மேல் கசப்பை உருவாக்கியது.வேலுத்தம்பி தளவாய்  ஊழல்களை ஒடுக்கி, வரிநிலுவைகளை வசூலித்து நிதிவருவாயை பெருக்கத் தொடங்கியதும் அது பெருகியது. அவருக்கு உறுதுணையாக நின்றவர் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை..”

“தனக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றபோது தளவாய் மேலும் மேலும் ஆங்கிலேயரைச் சார்ந்திருக்கத் தொடங்கினார். ஆங்கிலேயருக்கு சுங்கத்தை முழுமையாகவே தவிர்த்தார். ஆங்கிலேயர் அல்லாத வணிகர்களை நாட்டில் இருந்து விரட்டினார். ஒவ்வொரு நாளும் தனக்கு எதிரான எதிர்ப்புகளால் உந்தப்பட்டு அவர் ஆங்கிலேயர்களை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தார்”.என்றேன்

“அவர் ஆங்கிலேயர்களை நெருங்க நெருங்க அவர்மேல் உள்ளூரில் சந்தேகமும் பகைமையும் வளர்ந்தது. ஆங்காங்கே கலகங்கள் உருவாயின. அவற்றை அடக்க அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து படையுதவி பெற்றார். அதற்கு கட்டணமாக மிகப்பெரிய தொகையை அளிக்க நேர்ந்தது. ஆகவே திருவிதாங்கூரின் செலவு அதிகரித்தது. விளைவாக வரிகூடிக்கொண்டே சென்றபோதும் நாட்டின் பொருளாதாரம் கீழே சென்றது”.

நான் தொடர்ந்தேன் “ஒரு கட்டத்தில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேலுத்தம்பி தளவாய் மொத்த திருவிதாங்கூரையுமே பிரிட்டிஷ்காரர்களுக்கு கட்டணம் கட்டவைத்தார்”

“போதும்” என்றார் பத்மநாபன் தம்பி.

“ஏன் பிழையா?”

“அல்ல, அதை காதால் கேட்க சங்கடமாக இருக்கிறது”

“அவர் இரட்டை நிலையில் இருக்கிறார். நாட்டைக்காக்க அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று ஆட்சியில் நீடிக்கவேண்டும் என்றால் நாட்டை ஒடுக்கியாகவேண்டும்…. எல்லா மாவீரர்களும் சென்றடையும் இடம் இது. அவர்கள் வரலாற்றில் நீடிக்கவேண்டும் என்றால் வரலாற்றை சூறையாடியாக வேண்டும். விளைவாக அவர்கள் இரட்டைமனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்களிடம் எவரும் எதையும் பேசமுடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லும் எந்த சொல்லுக்கும் செயலுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள்”

“நாம் இதைப்பற்றிப் பேசவேண்டாமே”.

“ஆனால் அவருக்கு நெருக்கமான ஒருவராவது இதை தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். ஓர் இடத்திலாவது இதை சொல்லியாகவேண்டும். கர்னல் மெக்காலேயை வேலுத்தம்பி தளவாய் கண்டடைந்தது ஒரு விதியின் கணம். இரண்டுபேரும் அரக்கர்கள். ஒர் அரக்கர் இன்னொரு அரக்கரை கொன்று தின்பார். அதுதான் விதி. இன்று அவர்கள் தழுவிக்கொள்ளலாம், ஆனாலும் அது அங்கேதான் சென்றுநிற்கும்”.

பத்மநாபன் தம்பியின் தவிப்பை நான் கண்களில் கண்டேன்

“அதில் ஓர் அரக்கன் உலகம் முழுக்க பரவியிருக்கும் மாபெரும் பேரரசு ஒன்றின் மேல் ஏறி நின்றிருக்கிறார். இந்த அரக்கன் அவரை இதுவரை கொண்டுவந்து சேர்த்த பின்னணிச் சக்தியாகிய நாயர்படையையே அழித்துக்கொண்டிருக்கிறார்”.

“வேறென்ன செய்ய முடியும்?” என்றார் பத்மநாபன் தம்பி

”எதையாவது செய்யலாம்… குறைந்தது திரும்பிவரமுடியாதபடி முன்னால் செல்லாமலாவது இருக்கலாம்”.

பத்மநாபன் தம்பி பெருமூச்சுவிட்டார்.

“பிரிட்டிஷாருக்கு கப்பமும் வட்டியும்  கட்டுவதற்குரிய பணத்தை சேமிக்கும் பொருட்டு நாயர்படைகளை கலைத்து அவர்களுக்குரிய சம்பளத்தை மிச்சப்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தவர் யார்?”

“அவரேதான்…”

“இல்லை” என்றேன்.

பத்மநாபன் தம்பி “வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும்தான்” என்றார்.

“அவர்கள் எவருடைய விசுவாசிகள்?” என்றேன்.

பத்மநாபன் தம்பி “அவ்வாறு நாம் பார்க்கமுடியாது” என்றார்.

“வலிய காரியக்காரர் கேசவன் நாயரின் மருமகன்கள் கொல்லத்தில் பிரிட்டீஷாருடன் வணிகம் செய்கிறார்கள்.  பேஷ்கார் நாராயண பிள்ளையின் மகன்களும் மருமகன்களும் தூத்துக்குடியில் கப்பலோட்டுகிறார்கள்”.

”ஆமாம்” என்றார் பத்மநாபன் தம்பி.

“நாயர்படைகளை கலைப்பது எவருக்கு லாபம்? கலைத்துவிட்டு எந்தப் படைபலமும் இல்லாமல் சென்று கர்னல் மெக்காலே முன் அமர்ந்தால் அவரிடம் எதைப்பேசி எதை வெல்லமுடியும்?”

“நான் அதை அண்ணனிடம் சொன்னேன். ஆனால் நாயர் படை இன்று நமக்கு ஆதரவாக இல்லை, அவர்கள் பாறசாலை பத்மநாபன் செண்பகராமனைத்தான் ஆதரிக்கிறார்கள் என்று அவர் சொன்னார். அவர்கள் அரசின் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு அரசின் தளவாய்க்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்றார்”

“ஊதியத்தை நிறுத்திவிட்டால் அவர்களை வெல்லமுடியுமா?” என்றேன்.

“முடியும் என்றார். அவர்கள் முதல் சிலமாதங்கள் ஆங்காங்கே கலவரம் செய்வார்கள். அதை ஒடுக்கிவிட்டால் அதன்பின் வருமானம் இல்லாமல் ஆங்காங்கே கூலிப்படையாகச் சென்று சேர்வார்கள், நாயர்படையே சிதறிப்போய்விடும் என்றார்”.

“நான் கொச்சியில் இருக்கும்போதுதான் இங்கே கலவரம் நடந்ததை அறிந்தேன்” என்றேன்

“ஆமாம், முதலில் ஊதியம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக ஆங்காங்கே நாயர்படையினர் கலவரம் செய்தார்கள். பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தலைமையில் அக்கலவரம் ஒருங்கிணைக்கப்பட்டபோது ஒரு போர்ச்சூழல் உருவானது. அப்போதுதான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை அவர்களுடன் சென்று சேர்ந்துகொண்டார், அவர்களின் தரப்பு வலுப்பெற்றது. எங்களால் எதிர்கொள்ளமுடியவில்லை”.

“மீண்டும் கர்னல் மெக்காலேவிடம் சென்று முறையிட்டீர்கள்”

“ஆமாம், அவர் பிரிட்டிஷ் படையை திருக்கணங்குடியில் இருந்து வரவழைத்தார். பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்ட படை. காப்டன் ஃப்ரேசர் தலைமையில் வந்த பிரிட்டிஷ்படை நாஞ்சில்நாட்டில் உருவான கலவரத்தை அடக்கியது. நாகர்கோயிலில் முகாமிட்டிருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை சிறைப்பிடித்தது. பாறசாலை பத்மநாபன் செண்பகராமனையும் சிறைப் பிடித்தார்கள். கலவரம் ஓய்ந்தது”.

நான் பெருமூச்சுவிட்டேன்.

“அண்ணா சொன்னதே நடந்தது. நாயர் படை அப்படியே சிதறிவிட்டது. இன்று அண்ணாவுக்கு எதிரியே இல்லை”.

“மிகப்பெரிய எதிரி கர்னல் மெக்காலேதான். அதை அவரே உருவாக்கிக்கொண்டார். அவர்முன் தன் படைகளை தானே அழித்தார்”.

“அவர் அப்படி நினைக்கவில்லை”.

“மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைதான் தளவாயின் உண்மையான பலம். அவர் ராஜா கேசவதாஸின் நேர்மருமகன். மக்கள் வேலுத்தம்பி தளவாயை ஏற்றுக்கொண்டதே அவர் ராஜா கேசவதாசனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் வளர்க்கப்பட்டவர் என்பதனால்தான். ராஜா கேசவதாசனின் மருமகனை நம்பித்தான் நாயர்ப்படைகள் வேலுத்தம்பி தளவாய் தலைமையில் திரண்டன. இன்று மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை மேல் எந்த தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மக்கள் ராஜா கேசவதாஸ் மீதான தாக்குதாலாகவே பார்ப்பார்கள்”.

“ஆமாம், அது ஒரு பார்வை. அதை நான் அண்ணனிடம் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லுங்கள்” என்றார் பத்மநாபன் தம்பி “ஆனால் வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உடனிருப்பார்கள்”.

“எனக்கு அவர்களை பயமில்லை”.

பத்மநாபன் தம்பியின் உடலில் ஒரு கொந்தளிப்பு நிகழ்வதை கண்டேன். “டாக்டர், நீங்கள் அண்ணனுக்கு நெருக்கமானவர். ஆனால் நீங்கள் கூட அண்ணனை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அண்ணன் ஒரு சாதாரண அதிகாரி அல்ல. அவர் ஒரு சரித்திர புருஷர். அவர் இங்கே பதவிக்கு வந்தபோது திருவிதாங்கூர் அரசாங்கமே சீரழிந்து கிடந்தது. எங்கும் ஊழல், சுரண்டல். ஒரு சந்தைகூட வியாபாரிகள் நம்பி வரக்கூடியதாக இருக்கவில்லை. ஒரு சாலையில்கூட வழிப்பறி பயம் இல்லாமல் மக்கள் செல்லமுடியவில்லை. ஒரே ஆண்டில் அனைத்தையும் சீரமைத்தவர் அவர்”

“இன்று அத்தனைபேரும் அவரை அஞ்சுகிறார்கள். தன் மகனின் பெயரைப் பயன்படுத்தி ஒரு சிறு ஊழலைச் செய்தார் என்பதற்காக தன் சொந்த அம்மாவின் கையில் விரலை வெட்ட ஆணையிட்டவர் அண்ணன்…. அதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மை. நான் அப்போது உடனிருந்தேன். அண்ணன் நெருப்பு போன்றவர். அவரில் எந்த சிறுமையும் அணுகாது. அவர் குரூரமானவர்தான். ஆனால் அந்த குரூரத்தால்தான் நீதியும் நெறியும் திகழும் ஒரு நாடாக அவர் திருவிதாங்கூரை மாற்றினார்” என்றார் பத்மநாபன் தம்பி

“ஆமாம், ஆனால் அப்படி மாற்றவேண்டுமென்றால் அதிகாரம் வேண்டும். அதிகாரம் வேண்டுமென்றால் சமரசம் செய்யவேண்டும். நான் பேசிக்கொண்டிருப்பதே இந்த பிளவுநிலைபற்றித்தான்” என்றேன்

வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உள்ளே வந்தனர். அவர்கள் மிகமெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

நாங்கள் எழுந்து சென்று சித்திரவாசலுக்கு வெளியே காத்திருந்தோம். பத்மநாபன் தம்பி முன்னால் நின்றார். அவருடன் வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் நின்றிருந்தனர். நான் சற்று பின்னால் நின்றேன்.

என் மருத்துவப்பெட்டியை சற்றுநேரமாக கையிலேயே வைத்திருந்தேன். அதன் எடை என் தசைகளை இழுத்தது.அதை தரையில் வைத்தேன். அசைவைக் கண்டு பத்மநாபன் தம்பி திரும்பிப் பார்த்தார்.

“நீங்கள் வேண்டுமென்றால் வெளியே கூடத்தில் காத்திருக்கலாம் டாக்டர்” என்றார் பத்மநாபன் தம்பி “அங்கே அமர்ந்திருக்கலாம்”

“வேண்டாம்” என்றேன் “என் பணி இது. மேலும் அவர் அந்தக் கூடத்தைக் கடந்தால் பிறகு எனக்கு நேரமிருக்காது”.

இந்த உள்ளறைகள் எல்லாமே சிறியவை. ஐரோப்பியரின் தலைகள் நிலைகளில் முட்டிக்கொள்ள வாய்ப்புள்ளவை. கைவிரித்தால் சுவர்களை தொட்டுவிடக்கூடும். சிறிய அறைகள் என்னை மூச்சுத்திணறச் செய்பவை. ஆயினும் அங்கேயே நிற்க நான் விழைந்தேன்.

கதவு திறக்க தாமதமாகிக்கொண்டிருந்தது. பத்மநாபன் தம்பியை காரியக்காரர் கேசவன் நாயர் பார்த்தார். “தட்டலாமா?”என்று மிக மெல்ல கேட்டார்.

வேண்டாம் என்று பத்மநாபன் தம்பி தலையசைத்தார்.

அவர்கள் மீண்டும் காத்திருந்தனர். பேஷ்கார் நாராயண பிள்ளை பெருமூச்சு விட்டார். பிற இருவரும் திரும்பி அவரைப் பார்த்தார்கள். நான் அவர்களின் பொறுமையின்மையை கவனித்துக்கொண்டிருந்தேன்.

கதவு திறக்கும் ஒலி அவர்களை திடுக்கிடச் செய்தது. சித்திரவாசல் இரண்டாகப் பிரிந்தது  தளவாய் வேலுத்தம்பி வெளியே வந்தார்.திவானுக்குரிய முறையான ஆடைகள் அணிந்திருந்தார். அவருடன் அவருக்கு ஆடை அணிவித்த இஸ்லாமிய தையல்காரர்களும் பின்னால் வந்தனர். முதிய கான் அந்த ஆடையில் நிறைவடையாதவர் போல குனிந்து குனிந்து பார்த்தார்.

வேலுத்தம்பி தளவாய் என்னை பார்த்தபோது முகம் சற்று சுருங்கியது “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று அழைத்தார் “நீங்கள் என்னிடம் எதையாவது பேசவிரும்புகிறீர்களா?”

எனக்கு நேரமில்லை என்று உணர்ந்தேன். அவசரமாக “தளவாய், நீங்கள் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை மன்னித்துவிட வேண்டும். அதைக்கோரிப்பெறத்தான் வந்தேன்” என்றேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் திகைத்து ஏதோ சொல்பவர்கள போல அசைந்தனர். அவர்களை புருவ அசைவால் வேலுத்தம்பி தளவாய் நிலைக்க வைத்தார். என்னை வெறுமே பார்த்தார்.

“அவர் உங்கள் இளமைக்கால நண்பர், போர்களில் உங்களுடன் இருந்தவர். நீங்கள் வென்று திவான் ஆவதற்கு உதவியவர்.அவரை நீங்கள் தண்டித்தால் நன்றியில்லாதவர் என்ற பழியை பெறுவீர்கள்” என்றேன் “அவர் நாயர் படைகளின் அடையாளம். அவரை அவர்கள் மறக்க மாட்டார்கள். இந்த அரசியல்விளையாட்டில் உங்களுடைய ஆயுதமே நாயர்படைதான்”

“இந்த திருவிதாங்க்குருக்குள்ளேயே வடக்கு தெற்கு வேறுபாடு உண்டு. நீங்கள் தெற்குநாட்டவர். வேணாடும் நாஞ்சில்நாடும்தான் உங்கள் ஆதரவுத்தளம். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் தெற்கத்திக்காரர். அவரை தண்டித்தால் உங்கள் ஆதரவுச்சூழலை நீங்கள் அழித்துக்கொள்வீர்கள்” என்று நான் தொடர்ந்தேன். “அனைத்துக்கும் மேலாக அவர் ராஜா கேசவதாசனின் மருமகன். உங்களை ராஜா கேசவதாசனின் வடிவமாகவே மக்கள் பார்க்கிறார்கள். நீங்கள் அவர் மருமகனை தண்டித்தால் பெரும்பழி வந்து சேரும்”.

“ஏற்கனவே ராஜா கேசவதாஸின் தங்கை கணவரான பாறசாலை பத்மநாபன் செண்பகராமனை நீங்கள் விலக்கி சிறையிலிட்டீர்கள் என்று ஒரு பேச்சு உண்டு. ராஜா கேசவதாஸின் மருமகன்களான இரயிம்மன் தம்பியையும் செம்பகராகன் குமாரனையும் குஞ்ஞுநீலன்பிள்ளை கொல்ல ஆணையிட்டது உங்களால்தான் என்று ஓர் அவதூறும் ஓடிக்கொண்டிருக்கிறது. அவை அனைத்தில் இருந்தும் உங்களை காப்பவர் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைதான்” என்றபோது எனக்கு மூச்சுத்திணறியது.

வலிய காரியக்காரர் கேசவன் நாயர் “நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இங்கே துரை சொன்ன எல்லாமே உண்மை. ஆனால் இவை அனைத்தையும் அப்படியே எதிர்தரப்பாகவும் பார்க்கலாம். இளமைக்கால நண்பர், போர்களில் உதவியவர், பதவியை அடைய துணைநின்றவர் ஆனாலும்கூட எதிர்த்தால் எஞ்சவிடமாட்டோம் என்ற செய்தியை நாம் நாட்டில் பரவவிடவேண்டும். அதற்கு இது ஒரு சந்தர்ப்பம்” என்றார்

“அவர் நாயர்படைகளின் அடையாளம் என்றால் அந்த அடையாளத்தை நாம் அழித்தாகவேண்டும். நாயர்படைகளின் அடையாளமாக தளவாய் வேலுத்தம்பி மட்டும் நீடித்தால் போதும், அதுவே உண்மையான ஆற்றல். நாயர்படைகளின் கட்டுப்பாட்டில் தளவாய் இருக்கக்கூடாது. தளவாயின் கட்டுப்பாட்டில் நாயர்படை இருக்கவேண்டும்”

நான் அந்த மதிநுட்பத்தைக் கண்டு திகைத்துவிட்டேன். பேஷ்கார் நாராயண பிள்ளை தொடர்ந்து சொன்னார் “அவர் சொன்னதையே நானும் சொல்வேன். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை திவான் கேசவதாஸின் மருமகன். என்றானாலும் அவர் தளவாய்க்கு எதிரிதான். என்றோ ஒருநாள் தளவாயை வென்று தானே தளவாய் ஆகவேண்டும் என்று அவருக்கு தோன்றலாம். தோன்றுவதென்ன, தோன்றிவிட்டது

“பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் அவருடைய உறவினர். ஆகவேதான் அவர் நம்மை உதறி அவருடன் சென்று சேர்ந்துகொண்டார். திவானின் ஆணைப்படித்தான் ராஜா கேசவதாஸின் மருமகன்களான இரயிம்மன் தம்பியும் குமாரனும் கொல்லப்பட்டார்கள் என்று மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் நம்புகிறார். ஆகவேதான் அவர் கிளர்ந்தெழுந்தார். இன்று அவரை நாம் விட்டுவிட்டால் என்றாவது ஒருநாள் மீண்டும் அவரை போர்க்களத்தில் சந்திக்கநேரிடும். அப்போது நிலைமை நமக்கு சாதகமாக இருக்கவேண்டியதில்லை”

வேலுத்தம்பி தளவாயின் முகத்தில் இருந்து எதையும் உணரமுடியவில்லை. நான் சொன்னேன். “நான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையால் அழைக்கப்பட்டே முதலில் உங்களை பார்க்கவந்தேன். இருபது முறைக்குமேல் அவரை சந்தித்திருக்கிறேன். அவர் உங்களுக்காக போரிட்டு வாள்காயம் அடைந்து கிடந்தபோது அவரை பார்த்துக்கொண்டவன் நான். அவருடைய உயிர் எனக்கு வேண்டும்… எனக்கென நான் எந்தப் பரிசையும் கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன். அவருடைய உயிரை எனக்கு அளிக்கவேண்டும்.

பத்மநாபன் தம்பி “டாக்டர் துரை அதை என்னிடமும் கேட்டார் அண்ணா” என்றார்.

சிறிய முகக்கோணலுடன் “இதில் உங்களுக்கு வேறு என்ன அக்கறை?”என்றார் வலிய காரியக்காரர் கேசவன் நாயர்.

நான் அவரை கூர்ந்து நோக்கி  “டேய் நாயர், என்னிடம் உன் நிலையில் உள்ள எவரும் இப்படி பேசுவதில்லை. இதை சொன்னதற்காக உன்னை கழுவிலேற்றும்படி கர்னல் மெக்காலேவிடம் சொல்வேன்” என்றேன். “ஸ்காட்டிஷ் மிஷனின் ஒரு சிறு உறுப்புதான் கர்னல் மெக்காலே, தெரியும் அல்லவா?”

அவர் நடுநடுங்கி கைகூப்பிவிட்டார். பேஷ்கார் நாராயண பிள்ளை அவருக்கு பின்னால் மறைந்தார்.

நான் திரும்பி வேலுத்தம்பி தளவாயிடம் “சொல்வதற்கு மேலே ஒன்றும் இல்லை, சற்றேனும் தன்நலத்தை நாடினால் சற்றேனும் அறத்தை நாடினால் அவரை விட்டுவிடுங்கள்” என்றேன்.

வேலுத்தம்பி தளவாய் சிலகணங்கள் நின்றபின் மெல்ல தலையசைத்து முன்னால் நடந்தார். நிமிர்ந்த தலையும் இரண்டு யானைத்துதிக்கைகள் போல அசையும் கைகளுமாக. அவருக்கு அந்த ஆடை மிகமிகப்பொருத்தமாக இருந்தது. அதன் விசிறிமடிப்பு அவர் நடந்தபோது அலைகொண்டது. சரிகைகளின் பொன் மாறிமாறி வந்த வெளிச்சத்தில் அரிய செதுக்குகள் கொண்ட நகை ஒன்றை திருப்பித்திருப்பிக் காட்டுவதுபோல மின்னியது.

அவர் ஒரு பெரிய பொன்வண்டு போலிருந்தார். பொற்சிறகு என அந்த அங்கியை விரித்து எழுந்துவிடுவார் என்பதுபோல. இவர்களின் தெய்வங்கள் பறப்பவர்கள். இவர் ஒரு தேவன், ஒரு கந்தர்வன்.

பத்மநாபன் தம்பி என்னிடம் குரல் தழைத்து “ஒன்றும் செய்யமுடியாது. நாம் ஒருபக்கம் இழுத்தால் அவர்கள் இன்னொரு பக்கம் இழுப்பார்கள்” என்றபின் வேலுத்தம்பியைத் தொடர்ந்து சென்றார்.

நான் பின்னால் சென்றேன். பின்னாலிருந்து என்னுடன் நெருங்கி வந்த வலிய காரியக்காரர் கேசவன் நாயர் தழுதழுத்த் குரலில் “நான் அப்படி எண்ணிச் சொல்லவில்லை” என்றார்.

“சீ ,விலகிப்போ நாயின் மகனே. நீ கழுவில் அமர்வதை கண்டிப்பாக நான் பார்ப்பேன்… நாட்களை எண்ணிக்கொள்”.

அவர் கைகூப்பி தோளைக்குறுக்கி அப்படியே நின்றுவிட்டார். நான் அவரை திரும்பிப் பார்க்கவில்லை. அவர் முகம் சடலம் போல் ஆகியிருக்கும்..

பேஷ்கார் நாராயண பிள்ளை முன்னால் வந்து மேலும் குரல்தழைத்து “அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடாதுதான்” என்றார்.

“நீ அவன் அருகே கழுவில் அமர்வாய்” என்று நான் சொன்னேன்.

அவரும் நின்றுவிட்டார். நான் முன்னால் சென்றேன்.அவர்கள் இருவரும் வெளுத்து நடுநடுங்கிக்கொண்டு வருவதை உணர்ந்தேன். வழியிலேயே வலிய காரியக்காரர் கேசவன் நாயர் தரையில் அமர்ந்துவிட்டார். பேஷ்கார் நாராயண பிள்ளை அவரிடம் குனிந்து மெல்லியகுரலில் பேசுவதை பின்னால் கேட்டேன்.

வேலுத்தம்பி தளவாய் வெளியே தோன்றியதுமே வீரர்கள் வாள் தாழ்த்தி வணங்கினர். அவர் அரண்மனைக்கு வெளியே வடக்கேமுற்றம் என்று அழைக்கப்பட்ட பெரிய களத்தில் அமைந்திருந்த சிறிய மேடையில் சென்று அமர்ந்தார். பத்மநாபன் தம்பி அவர் அருகே நின்றார்.

வேலுத்தம்பி அந்த நாற்காலியில் அமர்ந்ததும் இரு முஸ்லீம்களும் ஓடிச்சென்று அவருடைய ஆடையை சீராக்கி சரியாக மடிப்புகள் அமைந்திருக்கச் செய்தனர். பின்னர் சற்று விலகிநின்று ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்ப்பதுபோல அவர்களை பார்த்தனர். அவர்களுக்கு நிறைவில்லை. பத்மநாபன் தம்பி கைகாட்ட அவர்கள் விலகிச்சென்றனர்.

பேஷ்கார் நாராயணபிள்ளை ஓடிவந்தார். தளவாயின் முன் கைகூப்பி நின்றார். வேலுத்தம்பி தளவாய் திரும்பி நோக்கி புருவம் தூக்க “வலிய காரியக்காரர் கேசவன் நாயருக்கு நெஞ்சடைப்பு… விழுந்துவிட்டார்” என்றார்.

வேலுத்தம்பி தளவாய் நிமிர்ந்து என்னை பார்த்தார்.நான் அவர் கண்களையே கூர்ந்து நோக்கி நின்றேன். அவர் பார்வையை விலக்கிக்கொண்டார்.

பேஷ்கார் நாராயண பிள்ளை கைகாட்ட படைவீரர்கள் உள்ளே சென்று சற்று அப்பால் அழைத்துவந்து நிறுத்தி வைத்திருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை கூட்டிவந்தார்கள். அவர் அழுக்கான அரைவேட்டி மட்டும் அணிந்திருந்தார். உடலெங்கும் புழுதி. குருதிபடிந்து உலர்ந்த புண்கள். கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. ஆனால் மிடுக்காக தலைதூக்கி நிதானமாக நடந்து வந்தார்.

அவரைக்கொண்டுவந்து வேலுத்தம்பி தளவாய் நிறுத்தினார்கள். அவர் வணங்கவில்லை. விழிகளை தழைக்கவுமில்லை. நேருக்குநேர் பார்த்தபடி அமைதியாக நின்றார்.

வேலுத்தம்பி தளவாய் மீசையை நீவியபடி அவரைக் கூர்ந்து நோக்கினார். மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை திரும்ப அதே போல நோக்கிக்கொண்டிருந்தார்.

வேலுத்தம்பி தளவாய் கனைத்து குரலை எடுத்து உரக்க  “உன் மீதான குற்றம் என்ன என்று தெரியுமா?” என்றார்.

“நீயே சொல்”என்றார் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை.

“ராஜத்துரோகம்… அரசரின் ஆணைக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. படைகளை திரட்டி அரசப்படைகளை தாக்கியது. அரசக்கருவூலத்தை கொள்ளையடித்தது”.

கிருஷ்ண பிள்ளையின் உதடுகள் சிரிப்பில் வளைந்தன “வேலாயுதா, திருவிதாங்கூரின் நாயர்படை என் தாய்மாமன் ராஜா கேசவதாஸ் உருவாக்கியது. அதை வெள்ளைக்காரன் பேச்சைக் கேட்டு கலைத்த நீ செய்ததுதான் ராஜத்துரோகம். நான் அந்த நாயர்படையை அழியவிடாமல் தடுக்க முயன்றேன்.அந்த நாயர் படையை அழிக்க நீ வெள்ளையனிடமிருந்து கூலிப்படையை கேட்டுவாங்கிக் கொண்டுவந்தாய். அந்தக் கூலிப்படையை எதிர்த்துத்தான் நான் போரிட்டேன், அரசப்படைக்கு எதிராக அல்ல” என்றார்.

வேலுத்தம்பியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “நான் கொள்ளையடித்தது வெள்ளையனுக்கு கப்பம் கட்டுவதற்காக நீ கொண்டுபோன திருவிதாங்கூரின் செல்வத்தை. அது நாங்கள் கட்டிய வரிச்செல்வம்” என்றபோது அவர் முகத்தில் இருந்த தீவிரம் என்னை மனம்பதறச் செய்தது

வேலுத்தம்பி  மீசையை நீவியபடி புன்னகைத்து  “வேறேதும் சொல்வதற்கு உண்டா?” என்றார்.

“உண்டு, தளவாய் வேலுத்தம்பியிடம் அல்ல. பழைய வேலாயுதனிடம்” என்றார் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை  “யானைமேல் ஏறுவதைவிட அங்கே அமர்ந்திருப்பது கடினம் என்று எனக்கும் தெரியும். நீ அந்தப்பதவியில் அமர்ந்திருப்பதற்காக இதையெல்லாம் செய்கிறாய். ஆனால் ஒரு பதவிக்காக எதையும் செய்பவனால் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அந்தப்பதவியை அதற்கும் மேலே ஒரு பெரிய லட்சியத்திற்காக கையாள்பவனால்தான் அதில் நீடிக்கமுடியும். என் தாய்மாமா ராஜா கேசவதாஸ் அப்படி இருந்தார். அந்த இலட்சியத்தால் அழிந்தார். ஆனால் தெய்வங்களுக்கு முன்பும் மூதாதையர் முன்பும் தலைநிமிர்ந்து நின்றார். நீ அப்படியா? உன்னால் மனம்தொட்டு அப்படி சொல்லமுடியுமா?”

முதல்முறையாக வேலுத்தம்பி தளவாய் அமைதியிழப்பதைக் கண்டேன். அவர் அப்பேச்சு நீண்டு செல்வதை விரும்பவில்லை என்று தெரிந்தது.

“ஆறுவருடங்களுக்கு முன்பு நீ என் தாய்மாமனை சந்திக்க வந்தாய். நான் உன்னை அவருடைய படுக்கையறைக்கு கூட்டிக்கொண்டுசென்றேன். அவர் உன் கையைப் பிடித்துக்கொண்டு என்ன சொன்னார்?. சொல், என்ன சொன்னார்?”

வேலுத்தம்பி  தலையை திருப்பிக்கொண்டார்.

மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் முகம் சட்டென்று கனிவை அடைந்தது. “தளவாய்க்குரிய அரச உடையை அவர் அணிந்ததுதான் பெரிய தவறு என்றார். மாமன்னர் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாளைப் போல அத்தனை அதிகாரங்களையும் தெய்வத்தின் முன்வைத்து அடியவனாக நின்று ஆட்சி செய்திருக்கவேண்டும் என்றார். இல்லையா? சொல்!”

“போதும்” என்றார் வேலுத்தம்பி தளவாய் ஆனால் அது ஒரு பலவீனமான முனகலாகவே ஒலிததது.

“வேடம் அணியாதே வேலாயுதா என்று சொன்னார். ஏனென்றால் இந்த ஆடையை அணிந்துகொண்டால் பிறகு கழற்ற முடியாது. ஆனால் நீ அவர் போட்டிருந்ததை விடப்பெரிய ஆடையை தைத்து அணிந்திருக்கிறாய். வேலாயுதா, நீ இன்று இரண்டாக இருக்கிறாய்.இந்த  அலங்கார ஆடை ஒருவன். உள்ளிருக்கும் தலக்குளத்து வேலாயுதன் செண்பகராமன் இன்னொருவன்”.

“ம்ம்ம்” என்று வேலுத்தம்பி தளவாய் பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு ஆணையிட்டார்.

அவர் ஆணையை முன்னரே போட்டிருந்தார் என்று தெரிந்தது. பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அவர் முற்றத்திற்குச் சென்று இருபக்கமும் கையசைத்தார். ஒரு பெரிய ஆண்யானை கையில் ஒரு வடத்துடன் வந்தது.

வேலுத்தம்பி தளவாய் திரும்பி மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையிடம் வெறுப்பால் வளைந்த உதடுகளுடன் “என்ன சொன்னாய்? இரண்டா? யார் இரண்டாக ஆவது என்று பார்ப்போம்” என்றார். “நாலாம் முறை…. நாராயணபிள்ளே,  நாலாம்முறை நடக்கட்டும்…”.

பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு அதுவும் உடனே புரிந்தது. அவர் தலையசைத்துவிட்டு கையசைவால் ஆணையிட்டார்..மறுபக்கம்இன்னொரு பெரிய யானை கையில் கயிற்றுடன் வந்து முற்றத்தில் நின்றது.

படைவீரர்கள் கிருஷ்ண பிள்ளையை இழுத்துச்சென்றனர். அவருடைய வேட்டி உருவி விழுந்தது. உள்ளே அணிந்த லங்கோட்டியுடன் அவர் சென்றார்.

அவரை கீழே கிடத்தி அவருடைய இரு கால்களிலும் இரு வடங்களை பிணைத்துக் கட்டினர். அவர் அதை வேறெவருக்கோ நிகழ்வதுபோல தலைதூக்கி பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் தொன்மையான ஒரு மதச்சடங்கைப் போல அதை பார்த்துக்கொண்டு நின்றேன். அவர்கள் அனைவரிலும் மதச்சடங்குக்கு உரிய முகமே இருந்தது. மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். கட்டுகளை அழுத்தியும் இழுத்தும் சரி பார்த்தனர்.

பத்மநாபன் தம்பி மிகமெல்ல “அண்ணா” என்றார்.

“என்ன?”என்றார் வேலுத்தம்பி தளவாய்.

பத்மநாபன் தம்பி ஒன்றும் சொல்லவில்லை.

இரு வடங்களும் இரு யானைகளின் துதிக்கையில் அளிக்கப்பட்டன. அவை வடங்களை சுழற்றி பற்றிக்கொண்டன. இரு யானைகளின் பாகன்களும் தங்கள் யானைகளின் யானைகளின் காதுகளை பிடித்தபடி நின்றனர். யானைகள் இருட்டாக மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தன. மாபெரும் மத்தகங்கள். கட்டுமரம் போன்ற கொம்புகள். நெற்றியிலும் காதுகளிலும் கொன்றைமலர் போன்ற செம்புள்ளிப் பரவல்கள். அவற்றின் அசைவை பார்த்ததும் நெஞ்சு திடுக்கிட்டது. நான் பார்வையை திருப்பிக்கொண்டேன்.

இரு கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டு விரிந்திருக்க கிருஷ்ண பிள்ளை எழுந்து பின்பக்கம் கையூன்றி மண்ணில் அமர்ந்திருந்தார்.

வேலுத்தம்பி தளவாய் எழுந்து சென்று மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் அருகே நின்றார். “என்ன கிருஷ்ணபிள்ளே, என்ன சொல்கிறாய்?” என்று மீசையை நீவியபடி ஏகத்தாளமாக கேட்டார் “நான் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இன்றே உன்னை கொண்டுசென்று களக்காட்டுக்கு அப்பால் விட்டுவிடச் சொல்கிறேன். ஆனால் இனி திருவிதாங்கூர் மண்ணில் கால் வைக்க மாட்டாய் என்று இந்த மண்ணில் மும்முறை அறைந்து சத்தியம் செய்து தரவேண்டும்”

“முடியாது என்று முன்னரே சொல்லிவிட்டேன். இது என் கர்மபூமி. என் தாய்மாமன் கட்டிக்காத்த நிலம். இது வெள்ளையர் ஆட்சிக்குச் செல்லப்போகிறது உன்னால்” உரக்க சிரித்து “வெள்ளையரின் முதல்பெரும்பலி நீதான்… அதை அத்தனை தெள்ளத்தெளிவாக பார்க்கிறேன்….இதோ கண்முன் தெரிவதைப்போல பார்க்கிறேன்”

சீற்றத்துடன் திரும்பிய வேலுத்தம்பி தளவாய் “ம்ம்” என்று உறுமினார். பேஷ்கார் நாராயண பிள்ளை கையை அசைக்க இரு பாகன்களும் யானைகளை தட்டினர். யானைச்சங்கிலிகள் குலுங்கிய ஓசையில் என் உடல் விதிர்த்தது. விழுந்துவிடக்கூடாது என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்

இரு யானைகளும் கால்வைத்து பின்னடைந்தன. வடங்கள் இழுபட கால்கள் நீண்டு கிருஷ்ண பிள்ளையின் உடல் அந்தரத்தில் விரைப்படைந்து நின்றது

“எப்படி இருக்கிறது கிருஷ்ணா?”என்றார் வேலுத்தம்பி தளவாய்

“ஒருபக்கம் வேலாயுதன் செண்பகராமனின் தலக்குளம் வீட்டுத் திண்ணையின் குளிர். மறுபக்கம் தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை முற்றத்தின் வெப்பம்… நல்ல சுகமாக இருக்கிறது”

வேலுத்தம்பி தளவாயின் உடல் அதிர்வதை நான் தொலைவிலேயே கண்டேன்

பேஷ்காரிடம் கையை காட்டிவிட்டு வேலுத்தம்பி தளவாய் திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்தார். ஓய்வாக அமர்வதுபோல கால்களை நீட்டிக்கொண்டு கைகளை கைப்பிடியில் வைத்து தலையை தூக்கினார்

இரு யானைகளும் சங்கிலி ஓசையுடன் பின்கால் எடுத்து வைத்தன. மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் உடல் நீண்டு இறுகி காற்றில் நின்று துடித்தது. அவர்  “ம்ம்ம்ம்”   “ம்ம்ம்ம்”  என முனகிக்கொண்டிருந்தார். ‘ட்ட்டப்’ என்ற ஓசையுடன் இடுப்பெலும்பு உடைந்தது. “ஆஆஆஆ!”என்று அவர் அடித்தொண்டையில் அலறியபடி அந்தரத்தில் சுழன்று துடித்தார். இரு கைகளும் காற்றில் கிடந்து துவண்டு பதைத்தன

யானைகள் மீண்டும் ஒரு காலடி எடுத்து வைத்தன. இன்னொரு முறியும் ஒலி. ஆனால் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை ஒரு முனகலோசையை மட்டுமே எழுப்பினார்

இரு யானைகளும் மேலும் விலகிச்சென்றன. உடல் நெடுக்காக பிளந்தது. ஒரு யானையின் வடத்தில் ஒரு காலும் ஒரு கையும் விலாவெலும்புகளும் நுரையீரலும் குடல்களுமாக பாதி உடலும் இருந்தன. இன்னொரு யானையின் வடத்தில் ஒருகாலும் பாதி உடலும் தலையும். யானைகள் இரண்டும் விலகிச் செல்ல இரு துண்டுகளும் மண்ணில் கிடந்து அதிர்ந்தன

நான் திரும்பி வேலுத்தம்பி தளவாயை பார்த்தேன், அவர் உடல் மிகமெல்ல நடுங்கிக்கொண்டிருந்ததை கண்டேன்.

***

 

 

முந்தைய கட்டுரைசித்திரைநிலவு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56