பிடி,மாயப்பொன் – கடிதங்கள்

பிடி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு மோகம் இருந்துகொண்டிருக்கும். அவர்கள் அனுமனை வழிபடவேண்டும் என்று சொல்லுவார்கள் [ பயம் உள்ளவர்கள் நரசிம்மரை வழிபடவேண்டும் என்பார்கள்]

அந்த பலவீனமான கிழவருக்காக இரங்கி வருகிறார். இயல்பாக என்ன பாட்டு வேணும் சொல்லுங்கோ என்கிறார். இந்தக்கதையை உயிர்ப்புள்ளதாக ஆக்குவது அந்த சரியான லொக்கேஷன்.பெரும்பாலும் கைவிடப்பட்ட பழைய வீடுகள். வீட்டுக்குள் இடமில்லாததனால் சேர்த்து வைக்கப்பட்ட உடைசல்கள். அந்த உடைசல்கள்போன்ற முதியவர்கள். சாக்கடை ஓடும் காற்றோட்டமில்லாத சந்து. அந்த இடமும் மனிதர்களும் அப்படியே கண்ணுக்குள் வருகிறார்கள்.

அதிலும் அந்த பானுமதி ஒரு ஜானகிராமன் கதாநாயகி மாதிரியே அழகான நுட்பமான பெண்ணாக இருக்கிறாள். அவள் பின்னலை தூக்கிப்போட்டுக்கொண்டு உள்ளே போவதை ஒரு ஓவியம்போலவே பார்க்கமுடிகிறது

எஸ்.விஜயகுமார்

***

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலம் தானே ?

பிடி கதையின் கடைசி வரி தான் உச்சம் என நான் உணர்ந்தேன்.

கருவறையில் அருல் பாளித்த தெய்வம் என மேடையில் கச்சேரி செய்த போதும் தன் முன் இருக்கும் பக்தர்கள் (ரசிகர்கள்) பல தரப்பில் இருந்தாலும் தன்னியல்பில் முழு வேகத்தில் அருள் (இசை) பொழிந்த தெய்வம்.

பல்வேறு காரணங்களால் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு தேடிச்சென்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டியதை அறிந்து வழங்கிய உற்சவராய் விஸ்வரூபம் எடுத்து நெடிது உயர்ந்து நின்ற அந்த இறுதிக்கணம். அடடா… அற்புதம்

என்றும் அன்புடன்

பா முருகானந்தம்

***

மாயப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மாயப்பொன் கதை இந்த வரிசையில் ஒரு கிளாஸிக். அது மெல்லமெல்ல மாயத்தன்மை அடைந்து ஒரு உச்சத்தில் முடிகிறது. அந்த சாராய ஊறலில் இருந்து கடைசிச் சொட்டு அமுதம்போல ஊறிவரும் ஓசையை கேட்கமுடிகிறது. அப்போதுதான் கடுத்தா சாமியும் காட்டுக்குள் இருந்து நேசையனை பார்த்துக் கிளம்பி வரத்தொடங்கியிருக்கும்

வாழ்க்கையில் அந்த உன்னதமான ஒரு தருணம் தற்செயலாக ஒரு தனித்த ராத்திரியில் நடந்த அனுபவம் சிலருக்கு இருக்கலாம். நாம் எதை தவமாக செய்து கொண்டிருக்கிறோமோ அது கனியும் ஒரு தருணம் அது. அந்தக்கதைபோலவே எனக்கு ஒன்று நடந்தது. என்னால் அதை எழுத முடியாது. என் ஆராய்ச்சியில் நான் இன்றுவரை பெருமைகொள்ளும் ஒன்று நடந்தது அப்போது. அப்போது கூடவே ஒரு பீட்டில்ஸ் பாட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதையும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன்

ஆனால் நேசையன் போல அதை எவரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன். அதனால் பயனில்லை. அதோடு அதன் பிரைவசியும் இல்லாமலாகிவிடுகிறது

ஆனந்த்குமார்

***

வணக்கம் ஜெ

மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். வாழ்வதற்கான பொருள் துலங்கிய தருணம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அமுதும் நஞ்சும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இயேசுவையும் சாத்தானையும் போல என்று சொல்லப்படுகிறது. அமுதோ நஞ்சோ எதோ ஒன்று வாழ்நாளெல்லாம் மனிதனை அலைக்கிறது. அது ஊறி கனிந்து சொட்டி வரும் தருணத்தில் நஞ்சாகினும் எண்ணத்தால் பொன்னே.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரைமலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை- கடிதங்கள்