அறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை

சில விஷயங்கள் விந்தையானவை. புறவுலகத்திற்கு எந்த தர்க்க ஒழுங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் அதற்கு காரணகாரிய உறவு ஒன்றை உருவாக்கிக் கொள்வோம். ஒன்றிலிருந்து ஒன்று என்று தொடரும் ஒரு நிகழ்வுச்சரடை. ஒன்றின் காரணமாக அதற்கு முன் இன்னொன்றை.

ஆனால் இதெல்லாம் மிகச்சிறிய ஒரு அலகுக்குள்தான் சாத்தியம். ஒர் எல்லையை வகுத்துக்கொண்ட பிறகுதான் அதற்குள் உள்ள தகவல்களை நாம் சேகரிக்க முடியும். அவற்றை அடுக்கி அந்த காரணகாரிய உறவை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். ஒட்டுமொத்தப் பெரும்பரப்பில் அப்படி ஒரு காரண காரிய உறவையே உருவாக்கிக்கொள்ள முடியாது.

உதாரணமாக, இந்தியாவில் ஒருவரின் தொழிலில் நஷ்டம் வர ஜப்பானில் ஒரு நிறுவனம் நொடித்தது காரணமாக அமையலாம். ஜப்பானிய நிறுவனம் நொடித்ததற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு மினரல் கிடைப்பது குறைந்தது காரணமாக அமையலாம். அதற்கு அண்டார்ட்டிக்காவின் வெப்பநிலை மாறுபட்டது காரணமாக அமையலாம். அதற்கு பூமியை ஒரு எரிவிண்மீன் கடந்துபோனது காரணமாக அமையலாம். அந்த எரிவிண்மீன் கிளம்பி நூறுகோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.

இதை எப்படி புரிந்துகொள்வது? ஆகவே நாம் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ‘மூட’ நம்பிக்கைகளை கோக்க தொடங்குகிறோம். புனைவுகள். ஆனால் அவை ஒழுங்காக ஒரு விளக்கத்தை அளித்துவிடுகின்றன.

2018ல் ஒரு செய்தி வந்தது. கேரள வரலாற்றிலேயே மிகப்பெரிய மாளிகை கட்டப்பட்டுள்ளது. அதை முறைப்படி திறந்துவைக்கும் சடங்கு நடக்கவிருக்கிறது. நான் அப்போது நண்பர்களுடன் ஒரு விடுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன், ஆமாம் ஏறத்தாழ ஔசேப்பச்சன் கம்பெனி. கேரளத்தில் வயநாட்டில் மானந்தவாடி வள்ளியூர்க்காவு சாலையில் அமைந்துள்ள அறைக்கல் பாலஸ் என்னும் அரண்மனை. பல ஆண்டுகளாக அது கட்டப்பட்டு வந்தது. இருபத்தைந்தாயிரம் அடி பரப்புள்ளது அது. ஐநூறுகோடி ரூபாய்  செலவில் அசல் பொன்கூட பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டது. அதை கட்டி குடியேறியவர் அறைக்கல் ஜோய் என்னும் கோடீஸ்வரர்.

ஜோய் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அக்கவுண்டண்ட் ஆக துபாய்க்குச் சென்றார். அங்கே விரைவிலேயே கப்பல்வணிகத்தில் புகுந்தார். பெட்ரோலியத்தைக் கப்பல்கள் வழியாக உலகமெங்கும் கொண்டுசெல்வது அவருடைய தொழில். கிட்டத்தட்ட முப்பது வெவ்வேறு நிறுவனங்கள். ஆனால் அதற்கப்பால் அவருடைய தொடர்புகளும் மெய்யான தொழிலும்  எவருக்கும் தெரியாது. அவர்மேல் பல்வேறு சர்வதேச கண்காணிப்புகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. அறைக்கல் ஜாயின் வளர்ச்சி மிகமிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்தது. 1991-ல்தான் அவர் தன்னுடைய பெரும்பாலான நிறுவனங்களை தொடங்கியிருக்கிறார்.

அந்தக் கட்டிடம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் சொன்னார். “அது அவருடைய வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” நான் “ஏன்?”என்று கேட்டேன். “வெறும் பொறாமை அல்ல மச்சானே, கேரள வரலாறு அது. இங்கே மாபெரும் அரண்மனை கட்டிய எவரும் அதில் வாழ்ந்ததில்லை”. அவர் நீண்ட பட்டியலைச் சொனனர், பத்மநாபபுரம் அரண்மனை முதல். என்னால் அப்போது ஒரு குடிச்சந்திப்பின் சுவாரசியமாகவே அந்தப்பேச்சை எடுத்துக்கொள்ள முடிந்தது.

ஐம்பத்து நான்கு வயதான கப்பல் ஜோய் என்னும் அறைக்கல் ஜோய் சென்ற ஏப்ரல் 23 ஆம் தேதி துபாயில் தன் அலுவலகம் இருந்த கட்டிடத்தின் பதினான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். துபாய் அரசு முதலில்  அந்த விசாரணைகள் அனைத்தையும் முற்றிலும் ரகசியமாகவே நடத்தியது. அவர் இறந்துவிட்டார் என்று மட்டும் அறிவித்தது.அவர் மாரடைப்பால் இறந்தார் என குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் சொன்னார்கள்.

ஆனால் இப்போது, ஏப்டல் 30 ஆம் தேதி, துபாய் போலீஸ் அது தற்கொலை என்று அறிவித்திருக்கிறது. அதில் கொலைக்கான வாய்ப்புகள் உண்டா என்பது தெளிவில்லை. உண்மையான காரணமும் சூழலும் பெரும்பாலும் வெளிவராமலேயே போய்விடக்கூடும்.

ஔசேப்பச்சன் போன்ற ஒருவர் மொத்த வரலாற்றையும் ஊடுருவிச் சென்று  வேரைக் கண்டடைந்து அதன் பின் ஒன்றும் செய்யமுடியாது என்று அப்படியே திரும்பி வந்துவிடும் ஒரு களம்.

***

ஔசேப்பச்சன் கதைகள்:

கைமுக்கு [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

முந்தைய கட்டுரைநற்றுணை [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49