ஓலைச்சிலுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கர்த்தரை என் அகம் உணரச் செய்த ஓலைச் சிலுவைக்கு நன்றி.

இதைத் தாண்டி, இந்தப் புனைவை வைத்துக்கொண்டு, மத மாற்றம், மிஷனரிகளின் நோக்கம் இவற்றை ஆராய்வது அபத்தமாகப்படுகிறது.
[மதத்தையும் வரலாற்றையும் சமூகத்தையும் அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது என்று ஏதாவது கூறுவீர்கள் – ஆனால், என்னைப் பொறுத்தவரை ஓலைச் சிலுவை எனக்களித்த ஆத்மார்த்த அனுபவத்தைத் தாண்டி எதுவும் தேவை இல்லை- இது என் தரப்பு:) ]

அன்புடன்
ஸ்ரீனிவாசன்

====================================

சில ஆண்டுகளுக்கு முன்பு, மகள் மதுராவுக்கு ஒரு ஒவ்வாமைப் ப்ரச்சினைக்காக CMC வேலூர் செல்ல நேரிட்டது. எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். வங்காள, ஒரிய, பங்ளாதேசி, பாக்கிஸ்தானியர், ஆப்பிரிக்க மக்கள் என்று தேனடை போல கூட்டம்.

இரண்டு விஷயங்கள் கவர்ந்தன. முதலில், மதுராவின் பரிசோதனைக்காக அதிகாலையில் சென்றிருந்தோம். 8 மணி ட்யூட்டிக்கு, 7:45க்கு வந்த செவிலி, முதலில், ப்ரார்த்தனை செய்து விட்டு, அன்று வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு குழந்தைக்காக ஸ்பெஷல் ப்ரார்த்தனையும் செய்து விட்டு வேலையைத் துவங்கினார். நோயாளிகளுக்கு, ப்ரார்த்தனையை விட மிகப் பெரும் மன ஆறுதல் இருக்கவே முடியாது. அதைக் கேட்ட நானும் விஜியும் ஒரு பெரும் மன எழுச்சிக்கு ஆளானோம்.

இரண்டாவது, மதுராவின் மருத்துவர் – ராமக்ருஷ்ணன் – உலகின் மிகச் சிறந்த கேஸ்ட்ரோ எண்ட்ராலஜிஸ்ட். மாதம் சில நாட்கள் மட்டுமே சிஎம்சி வருபவர். மதுராவின் ப்ரச்சினைகள் சார்ந்த பரிசோதனைகள் விரிவாகச் செய்யப் பட்டு, ஒரு மாதம் கழித்து, பார்க்க நேரம் கிடைத்தது. முதலில் மருத்துவத்தில் முனைவர் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சி மாணவர் (15 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர்), எங்களோடு கிட்டத் தட்ட ஒரு மனி நேரம் செலவழித்து, மதுராவின் குழந்தைப் பருவத்திலிருந்து பல விஷயங்களைக் கேட்டறிந்தார். அப்போதுதான் எனக்கும் சிறு வயதிலிலிருந்து க்ளூட்டன் ஒவ்வாமை இருந்திருக்கலாம் என்று உணர்ந்தோம். பின்னர், மருத்துவர் ராமக்ருஷ்ணனும் கிட்டத் தட்ட அரை மணிநேரத்துக்கும் மேலாக செலவிட்டார். அதற்கு நான் செலவிட்ட தொகை – ரூபாய் 300 மட்டுமே. (பரிசோதனைச் செலவுகள் ஒரு 2000). கிட்டத் தட்ட, எங்கள் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்கள் அனைத்தையும் கேட்டறிந்து, அதற்கேற்றார் போல் தீர்வு. மிகக் குறைவான மருந்துகள். உணவுகளில் கட்டுப் பாடு. வெளியே வந்து நானும் விஜியும் வெதும்பினோம். அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு, 60000 ஆயிரம் செலவில் கர்ப்பப் பை அகற்றும் சிகிச்சை செய்து முடித்த பின்பு, மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தோம் – இன்னொரு நோயாளியுடன் பேசிக்கொண்டே, விஜியின் கோப்பில் கையெழுத்து இட்டது அந்த உயிரினம்.

அந்தக் காலத்தில், எங்களூரில், கைவிடப் பட்ட நோயாளிகளை, “வேலூருக்குக் கொண்டுட்டு போயிட்டாங்க” ந்னு சொல்வார்கள். அதை நேரில் கண்டோம். கதியற்றவர்களுக்கு மீட்பு எவ்வளவு பெரிய விஷயம்?. நாமனைவரும் ஒரு முறை அங்கு யாத்திரை சென்று வரவேண்டும் ஜெ..

பாலா
==================

ஜெ,

ஓலைச்சிலுவை வாசித்து பல இடங்களில் மெய் சிலிர்த்து நின்றுவிட்டேன். செயற்கரிய செய்வார் பெரியார் சிறியார் செயற்கரிய செய்கலாதார் என்ற வரிக்கு சிறந்த உதாரணம் அந்த டாக்டர். அவர் உண்மைக்கதாபாத்திரம் என்று நீங்கள் சொன்னதனால்தான் நம்பினேன். இல்லையேல் எழுத்தாளனின் கற்பனை என்றுதான் சொல்லியிருப்பேன். அவருடைய முகங்கள் பிரமிக்க வைக்கின்றன. கருணை மிகுந்த டாக்டர், மிகச்சிறந்த மலை ஏற்ற நிபுணர், இசைவாணர், ஆன்மீக துறவி… ஒரு உச்சியிலே இருந்து இன்னொரு உச்சிக்கு சாதாரணமாகச் சென்றுகொண்டே இருக்கிறார். ஒரு மலையேறும் நிபுணர் சாதாரண ஸ்போர்ட்ஸ்மான் ஆகத்தான் இருப்பார் என்றால் இவர் மருத்துவ நிபுணர். ஈரமற்ற மருத்துவர் என்றால் இவர் கனிந்த ஞானி. ஏதோ ஒரு உச்சிக்குச் சென்றவர்கள் அங்கே இருந்து எல்லா உச்சிகளுக்கும் சென்றுவிடுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு மலைச்சிகரத்தில் இருந்து இன்னொரு மலைச்சிகரததுக்கு போகலாம் இல்லையா?

சிவவராஜ்

அன்புள்ள சிவராஜ்

உண்மைதான்.

பொதுவாக ஆன்மீக ஞானிகளின் வாழ்க்கையில் ஆரம்பகட்டத்தில் அவர்கள் அசாதாரணமான உடல்பலம் கொண்டவர்களாக , பயில்வான்களாகவும் விளையாட்டுவீரர்களாகவும் இருந்தார்கள் என்று பார்க்கிறோம். கிரிமினல்களாகவும் ரவுடிகளாகவும் இருந்தவர்கள் உண்டு

அதை ஓஷோ விளக்குகிறார். அதை அடிப்படைசக்தி – எலிமெண்டல் பவர்- என்கிறார். அது உடலில் வெளிப்படுகிறது. பின் மனம் வழியாக. பின் ஆன்மீகமாக. ஆன்மீகமே அதன் இயல்பான அவ்ழி. ஏரி சிறிய மடைவழியாக உடைத்து அது போதாதென உணர்ந்து மேலும் மேலும் பெரிய மடைகளை கண்டுகொள்கிறது

டாக்டரின் ஆளுமையில் உள்ள முக்கியமான விஷயம் விடுபட்டுள்ளது கதையில்- அவர் நல்ல ஓவியரும்கூட

ஜெ

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரையானைடாக்டர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉலகக் குடிமகன்