“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார்.
விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே விட்டது. ஆகவே குளிரடித்தது.
ஆனால் சுழன்று சுழன்று வீசிய காற்று எந்த திசையிலிருந்து வருகிறது என்று சொல்லத் தெரியவில்லை. எழுந்து சென்று அந்த சன்னலை மூடினால் நன்றாக இருக்கும். ஆனால் அந்தச்சூழலில் ஒரு சிறு அசைவை வெளிப்படுத்துவதும் முண்டிக்கொண்டு எழுவதுபோல தோன்றும்.
நித்யா சொன்னார். “ஒரு சின்ன கதை சொல்கிறேன். காக்காய் கதை. நாமெல்லாம் முதலில் கேட்பது காக்காய் கதைதான். முதல் பாட்டின் கதைநாயகனும் காக்காய்தான். அந்த பிரபலமான பாட்டு இருக்கிறதே, ‘காக்கே காக்கே கூடெவிடே?’. அழகான பாட்டு. இப்போதுகூட மின்னும் கருமையுடன் ஒரு காகத்தை பார்த்தால் அந்த பாட்டு ஞாபகம் வருகிறது.”
“எம் கோவிந்தன் அதற்கு ஒரு நகல் கவிதை எழுதியிருக்கிறார். “வாக்கே வாக்கே கூடெவிடே?’ என்று. உண்மையில் அதன் தொடக்கம் நன்றாக இருக்கும்” நான் சொன்னேன்.
“ஆமாம், நல்ல வரி. வாக்கே வாக்கே கூடெவிடே. வாக்கு. காக்காவின் மொழி ஒற்றைச் சொல். கா? சம்ஸ்கிருதத்தில் கா என்றால் ஏன். ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது.” நித்யா சொன்னார் “அல்லது அந்த பறவையிலிருந்துதான் தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கான சொல்லை முனிவர்கள் கண்டடைந்தனர்”
“இனியது, அழகியது. கருந்தளிர்போல அதன் உடலின் மினுமினுப்பு. காகத்தைப்போல அழகான பறவை வேறில்லை. ஒருநாளில் ஒருமுறையாவது காகத்தை பார்த்தாகவேண்டும் எனக்கு. அந்த கேள்வியை அது என்னிடம் கேட்கும். ஏன்? நான் அதனிடம் திரும்ப கேட்பேன், ஏன்? ஒற்றைச்சொல்லில் ஓர் உரையாடல்”.
“காகம் மூதாதையரின் வடிவம். குழந்தை பிறந்து எழுந்து அமர்ந்ததுமே தேடிவரும் முதல் உயிர் அதுதான். வானிலிருந்து உதிர்வதுபோல இறங்கி வருகிறது. எந்தக்குழதையும் அதன் பெயரைச் சொல்லிவிடும். காக்கா!” நித்யா புன்னகைத்து “குழந்தை கையிலிருந்து எதையாவது பிடுங்கி தின்கிறது. என் அம்மா சொல்வாள், அழாதே குஞ்ஞா, அது உன் தாத்தா. தாத்தாவுக்குத்தானே கொடுத்தாய்? ஆமாம், மூதாதை வந்து முதற்பலியை வாங்கிச்செல்கிறார்”.
நான் “காவிரியை உருவாக்கியதே காகம்தான் என்று சொல்லப்படுகிறது” என்றேன். “காகம் விரித்ததனால்தான் அதற்கு காவிரி என்று பெயர் என்று சொல்வார்கள். அகத்தியர் வானிலிருந்து ஆகாயகங்கையை இறக்கி தன் கமண்டலத்தில் அடக்கி தெற்கே கொண்டுவந்தார். அதை ஒரு காகம் தட்டி கவிழ்த்துவிட்டது. அங்கிருந்து காவேரி பெருகி ஓடத்தொடங்கியது. இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது”.
நித்யா வியப்புடன் “ஆமாம், அந்தக்கையை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அதை எண்ணி மீண்டும் புன்னகைத்து “அகத்தியர் கடலை விழுங்கியவர் அல்லவா?” என்றார்.
“ஆமாம்” என்றேன்.
“அந்தக் கமண்டலத்தில் இருந்தது அடுத்தவேளை குடிப்பதற்காக அவர் வைத்திருந்த கடல்!” நித்யா வாய்விட்டுச் சிரித்தார். “அதை தட்டிவிட காகம் வரவேண்டியிருக்கிறது. தலைசரித்து பார்த்திருக்கும். ஓடவேண்டியதை எதற்கு ஒடுக்கி வைத்திருக்கிறார் இந்த ஆள் என்று யோசித்திருக்கும். வந்து உருட்டிவிட்டுவிட்டு ஏன் என்று கத்தியபடி எழுந்து பறந்திருக்கும்”.
“காகம் மிகமிக அறிவுள்ளது. இன்றைக்குக்கூட அறிவியலாளர்கள் காகத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யவில்லை. எதிர்காலத்தில் நல்ல எலக்டிரானிக் மினியேச்சர் காமிராக்கள் வரும். அப்போது இவர்கள் காகம் பற்றி தெரிந்துகொண்டிருப்பது டீஸ்பூன் அளவுக்குத்தான் என்று தெரியவரும். அதுவரை நாம் சொல்வதையெல்லாம் கதைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்”.
“நான் சொல்ல வந்தது ஒரு துறவியைப்பற்றி” என்று தொடர்ந்தார் நித்யா “முன்பு சதானந்த தீர்த்தர் என்று ஒருவர் நம் குருகுலத்தில் இருந்தார். என் குருவை விடவும் இருபதாண்டுகள் சீனியர்… நான் அவரை முள்ளிமலையில் முதலில் சந்தித்தேன். முள்ளிமலை குருகுலத்தை அப்போதுதான் வாங்கியிருந்தோம். மலையுச்சியில் தன்னந்தனியான இடம். மிக அருகே இருக்கும் வீடு ஐந்து கிலோமீட்டர் தள்ளி. ஒற்றையடிப்பாதையில் இரண்டு மணிநேரம் ஏறித்தான் அங்கே செல்லமுடியும்”.
மிகச்சிறியவிலைக்கு வாங்கப்பட்ட ஏழரை ஏக்கர் நிலம். நடுவே ஒரு மண்வீட்டை கட்டி அதில் அவர் மட்டும் குடியிருந்தார். அந்த வீடே அவர் கையால் கட்டியதுதான். தாழ்வான சுவர்களும் ஓலைக்கூரையும் கொண்ட வீடு. நல்ல குளிர்ந்த மண் திண்ணை. அங்கே அமர்ந்திருந்தால் அலையலையாக குட்டி மலைகள் தெரியும். எல்லாமே பச்சைமூடிய மலைகள். ஒரு பெரும்புயல் அடித்து காட்டுப்பரப்பு அப்படியே கொந்தளித்து மிகப்பெரிய அலைகளாக எழுந்து அசைவற்று விட்டதுபோல தோன்றும்.
நாம் நாகரீகம் என்று நினைக்கும் எந்த ஓசையும் அங்கே வந்துசேராது. அங்கே கோடைகாலம் என்பதே இல்லை. இங்கே உள்ள கணக்கைக் கொண்டு பார்த்தால் குளிர்காலமும் இல்லை. அது மேற்குதொடர்ச்சிமலையின் மழைக்காடுக்குள் அமைந்த பகுதி. மழைக்காட்டில் சரியான பொருளில் இலையுதிர்காலமும் இல்லை. ஆகவே எஞ்சியிருப்பது கார்காலமும் வசந்தமும்தான்.
வசந்தமும் மழைக்காலமும் மாறிமாறி. வெயிலில் பச்சை சுடர்விடுவதை பார்த்துக்கொண்டு நீராவி நிறைந்த குளிர்காற்றை உடலில் வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தால் இருத்தல் போல இன்பம் மானுடனுக்கு வேறு ஏதும் இல்லை என்று தோன்றிவிடும். நுகர்வது அல்ல. அடைவது அல்ல. திகழ்வதுகூட அல்ல. வெறுமே இருப்பது. இருக்கிறேன் என உணர்வது.
சதானந்தர் மிகக் கடுமையான உழைப்பாளி.அந்த நிலத்தை அவர் ஓர் அற்புதமான சோலையாக ஆக்கினார். மா, பலா ,வாழை, தென்னை, கமுகு, மரவள்ளி, காய்கறிகள். வாரம் ஒருமுறை சந்தைக்கு பொருட்களை கொண்டுசென்று விற்பார். செலவுக்கு மிஞ்சியதை தலைமைக்கு அனுப்பிவிடுவார். அவருக்கு உடைமை என ஏதும் இல்லை.
அவர் வாழ்க்கையே ஒரு நோன்பு. காலை எழுந்து பாராயணம்,தியானம் இரண்டையும் முடித்தபின் மண்வெட்டியுடன் நிலத்தில் இறங்கிவிடுவார். அந்தியில்தான் வெளியே வருவார். மீண்டும் தியானம், பாராயணம். பிறகு சமையல் சாப்பாடு தூக்கம். காலையிலும் மாலையிலும் இரண்டுவேளைதான் சாப்பாடு. அவர் மட்டும்தான் அங்கே தங்கியிருந்தார். எப்போதாவது எவராவது தேடிவருவார்கள். பெரும்பாலும் என்னைப்போன்ற இளந்துறவிகள்.
அவருடன் அந்த திண்ணையில் பேசிக்கொண்டிருந்தேன். இளங்குளிர்காற்று கீழிருந்து ஏறி வந்துகொண்டிருந்தது. கண்கூசும் பச்சைநிறமான வெயில். அப்போது ஒரு காகம் வந்து அவர் அருகே அமர்ந்தது. அவரைப் பார்த்து கா என்றது. அவர் தலையசைத்தார். அவ்வளவுதான். மேற்கொண்டு உரையாடல் ஏதுமில்லை. அது எழுந்து பறந்து போயிற்று.
“இந்தக் காகத்திற்கு உங்களை தெரியுமா?” என்று கேட்டேன்.
“காகங்களுக்கு அவை சந்திக்கும் மனிதர்கள் அனைவரையுமே தெரியும்.தலைமுறை தலைமுறையாக ஞாபகம் வைத்திருக்கும்” என்றார்.
“அப்படியா?”என்று நான் அவநம்பிக்கையுடன் கேட்டேன். நான் அப்போதுதான் தத்துவப்பேராசிரியர் வேலையை விட்டிருந்தேன்.
“காகம் மிகமிக புத்திசாலி” என்றார் சதானந்தர்.
“ஆனால் அதன் கூட்டில்தானே குயில் முட்டைபோடுகிறது?” என்றேன். “அப்படியென்றால் குயில்தானே புத்திசாலி?”
சதானந்தர் அந்தமாதிரியான விவாதங்களுக்குப் பழக்கம் உடையவர் அல்ல. அவர் திகைப்பால் திறந்த வாயுடன் என்னை பார்த்தார். “இருக்கலாம்” என்றார். பிறகு “எனக்கு காகங்கள்தான் இங்கே ஒரே உறவு. அவற்றுக்கு என்னை நன்றாகவே தெரியும்” என்றார்.
“ஆமாம், இங்கே நமக்கு பறவைகள்தான் துணையாக இருக்கமுடியும்” என்றேன்
சற்றுநேரம் யோசித்தபின் “காகம் ஏன் குயிலை முட்டைபோட அனுமதிக்கிறது?” என்றார் சதானந்த சாமி.
“மிக அறிவானவர்களின் முட்டாள்தனம் வசீகரமானது” என்று நான் சொன்னேன். “அதைத்தான் நாம் அன்பு பாசம் கருணை அறம் என்றெல்லாம் சொல்கிறோம்”.
நித்யா சிரித்துக்கொண்டே சொன்னார்.“காகத்திற்கும் சதானந்த சாமிக்குமான உறவு வேடிக்கையானது. அதைத்தான் சொல்ல வந்தேன்” பின்னர் முகம் மலர்ந்து சொல்லத் தொடங்கினார் “அவர் தன் இருபத்தேழு வயதில் முள்ளிமலைக்கு வந்து தங்கினார். நான் சொன்னேனே, அங்கே அவருக்கு காகங்கள் மட்டும்தான் பேச்சுத்துணை. ஏற்கனவே வற்கலையில் பிரம்மசாரியாக இருக்கும்போதே அவர் காகங்களுடன் மிக நெருக்கமாக ஆகிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் மூன்றுவேளையும் காகங்களுக்கு உணவு வைத்து அவை வந்து சாப்பிட்டுவிட்டுப் போன பிறகுதான் அவர் சாப்பிடுவார். காகங்கள் அவரை ஏற்றுக்கொண்டன. நெருங்கின. பிறகு அவருடன் அவை மிக அணுக்கமாக இருந்தன.
முள்ளிமலையில் சதானந்தர் காகங்களுடன் சரளமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அவர்கள் உரையாடுவது போலத்தான் இருக்கும். “நல்லவேளை சதானந்த சாமிக்கு வேதாந்தப் பிலாக்காணம் இல்லை. இருந்திருந்தால் காக்காய்களிலும் வரட்டு வேதாந்திகள் தோன்றியிருப்பார்கள். எல்லா காக்காய்களும் சேர்ந்து ஒற்றைக் காக்காய், அந்தக் காக்காய்தான் பிரம்மம், நானே அந்த பிரம்மம் என்று சொல்ல ஆரம்பித்திருப்பார்கள்” என்று என் நடராஜ குரு கிண்டல் செய்வார்.
ஒருநாள் குருகுலத்தின் முற்றத்தில் எதுவோ மின்னியது. இறங்கிச்செல்லும் படியின் நேர் முன்னால் அது கிடந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்தார். போலிப்பொன்னால் ஆன ஒரு கம்மல். சந்தைகளில் மலிவாக கிடைக்குமே, அலுமினியத்தில் செய்து கில்ட் பூசிய நகை அது. முதலில் அவர் ஏதோ பொன் என்று நினைத்தார். எடுத்துப் பார்த்தால் பொன் அல்ல என்று தெரிந்தது. அப்பால் வீசிவிட்டார்
ஆனால் நாலைந்து நாட்கள் கழித்து வேறொன்று அங்கே கிடந்தது. இன்னொரு போலிப்பொன் நகை. மூக்குத்தியோ திருகாணியோ. யார் அங்கே வருவது? அதுவும் பெண்? அபவாதம் உருவாகிவிடுமோ? சதானந்தர் நிம்மதி இழந்தார். முற்றத்தையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு வேலைகள் செய்தார். பகல் முழுக்க கண்காணித்தார். நாலைந்து நாளிலேயே விஷயம் தெரிந்தது, அதைக் கொண்டுபோடுவது காகம்.
அலகில் ஒரு வெள்ளிநகைத் துண்டுடன் காகம் வந்து தென்னை ஓலையில் அமர்ந்திருப்பதை அவர் பார்த்தார். பின்னர் அது சிறகடித்து கீழே இறங்கியது. முற்றத்தில் படியின் முன்னால் அமர்ந்து அந்த வெள்ளிமணியை போட்டது. திரும்ப எடுத்து மீண்டும் போட்டது. மீண்டும் இடம் மாற்றிப்போட்டுவிட்டு “கா!கா!கா!”என்றது. அவர் வெளியே வந்ததும் எழுந்து மேலே சென்று அமர்ந்தது.
அவர் அதை எடுத்துப் பார்த்தார். அது வெள்ளி. ஏதோ கால்கொலுசின் திருகாணி. அவர் காகத்தை பார்த்தார். அது வேண்டுமென்றேதான் கொண்டுவந்து போடுகிறது. அவருக்கு தெரிந்த காகம். அவர் தினந்தோறும் சாப்பாடு போடுவது. “இது என்ன?” என்று அவர் கேட்டார். “ஏன் இங்கே கொண்டுவந்து போடுகிறாய்? எங்கே கிடைத்தது?”
காகம் கரைந்துகொண்டே இருந்தது. பிறகு சென்றுவிட்டது. அவர் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டே இருந்தார். அந்த பொருட்களை வைத்து கூடு ஏதாவது கட்ட நினைக்கிறதா? இல்லை அது தின்பண்டம் என்று நினைக்கிறதா? அது முட்டைபோட்டு குஞ்சுபொரித்து வளர்ப்பதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுகின்றனவா?
நாலைந்து நாட்கள் கழித்து அதே இடத்தில் ஒரு மின்னும் வெள்ளிநிறக் கூழாங்கல் கிடந்தது. சிலநாட்களுக்குப்பின் ஒரு அலுமினிய சிகரெட்தாள். பிறகு ஒரு அலுமினிய துண்டு. மீண்டும் சில மின்னும் கூழாங்கற்கள். ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு. ஒரு நீலநிற பளிங்குத்துண்டு கண்ணைப்பறிக்கும் மின் கொண்டிருந்தது. அவர் அதை எடுத்துப்பார்த்தார். செந்நீல நிறம். சரித்துப்பார்த்தால் மின்னியது.
அவர் காகங்கள் என்னதான் செய்கின்றன என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தப்பொருட்களை ஒரு டப்பாவில் போட்டுவைத்தார். அந்நாளில் ஒருமுறை குருவும் நானும் அங்கே சென்றோம். சதானந்தர் அந்த டப்பாவை எடுத்துவந்து காட்டினார். “இது என்ன என்று சொல்லுங்கள்” என்றார்.
குரு “என்ன, காக்கா கொண்டுவந்து போட்டதா?” என்றார்.
சதானந்தர் திகைத்துவிட்டார். “எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார்.
“காகத்திற்கு இப்படி ஒரு குணம் உண்டு. அதற்கு மிகவும் பிடித்தவர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கவிரும்பும். மின்னுவதை பார்த்தால் கொத்திக் கொண்டுவந்து முற்றத்தில் போட்டு எடுத்துக்கொள் என்று சொல்லும்”.
சதானந்தர் திகைத்துவிட்டார். பிறகு “காகத்திற்கு இந்த பொருட்கள் எல்லாம் முக்கியமானவையா?” என்றார்.
“இல்லை, அதற்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மனிதர்களுக்கு இவை முக்கியமானவை என்று அது நினைக்கிறது”.
“ஏன்?” என்று சதானந்தர் கேட்டார்.
“மனிதர்கள் என்ற விலங்குகளைப்பற்றி ஒட்டுமொத்தமாக நினைத்துப்பாருங்கள். அவற்றுக்கு உண்மையில் மின்னும் பொருட்கள் மேல் பெரிய பித்து இருக்கிறது. அந்த பித்தால்தான் அவர்கள் இயற்கையிலிருந்து ஏராளமான பொருட்களை கண்டுபிடித்து இந்த உலகையே உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார் குரு.
“மிகமிகப் பழைய கற்காலத்தில் மனிதர்கள் மின்னும் கூழாங்கற்களால் ஆன நகைகளை அணிந்திருந்தார்கள். மின்னும்கூர்மைகொண்ட உடைசல்கற்களை எடுத்து ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்கள். அதன்பின் உலோகங்களைக் கண்டுபிடித்தார்கள். மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்குமான வேறுபாட்டை உருவாக்குவது என்ன? உலோகங்கள் அல்லவா?”
“உலோகங்களில் பொன் ஓர் உச்சம். மனிதர்களுக்கு அழகு என்றால் பொன்தான். செல்வம் என்றால் பொன். அவர்களின் தெய்வமும் பொன்தான். மனிதர்கள் பொன்னுக்கு அடிமைகள்” என்றார் குரு. அவருக்கு பேசப்பேசத்தான் ஒரு கொள்கை உருவாகி வரும். அதை முழுமையாக உருவாக்கியபின் மணலில் வீடுகட்டி விளையாடிய குழந்தை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதுபோல விலகிவிடுவார்.
“மின்னுவது என்றால் உண்மையில் என்ன? அது ஒரு குணம். உறுதி, மென்மை, கூர்மை ஆகியவற்றின் காட்சிவடிவையே நாம் மின்னுதல் என்கிறோம். இயற்கையில் எந்தப்பொருளும் இயல்பாக மின்னிக்கொண்டிருப்பதில்லை. அவற்றின்மேல் ஏதோ ஒன்று நிகழ்ந்து அவை அக்குணங்களை அடைந்தால்தான் மின்னுகின்றன. ஆகவே மனிதர்கள் மின்னும் எந்தப்பொருளையும் ஆர்வத்துடன் எடுத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. நீங்கள்கூட இந்தப்பொருட்கள் மின்னுவதனால்தானே எடுத்துப்பார்த்தீர்கள்?”
“காகத்தின் பார்வையில் நாம் எப்படி தென்படுவோம்? மனிதர்கள் உடலெங்கும் மின்னும் நகைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் மின்னுகின்றன. துணிகளில் சரிகை மின்னுகிறது. காகம் புரிந்துகொண்டது தவறு என்று எப்படிச் சொல்லம்முடியும்?” குரு கேட்டார்.
நான் அந்தப்பேச்சை கொஞ்சம் திசைமாற்ற விரும்பினேன். ஏனென்றால் சதானந்தர் அமைதியிழப்பதுபோல தோன்றியது என்று நித்யா சொன்னார். “அதற்கு நம்மைபோன்ற வண்ணங்கள் தெரியுமா?” என்றேன்.
“காகத்தின் பார்வை நம்மைவிட கூர்மையானது. நம்மைவிட நிறைய நிறங்களை அது பார்க்கும். அல்ட்ரா வயலட் கதிர்களைக்கொண்டும் அது பார்க்கிறது. ஆகவே அதற்கு வேறுபாடுகள் மிக நன்றாகவே தெரியும். நமக்குத்தான் அதெல்லாம் தெரியாது என்று அது நினைக்கிறது” என்றார் குரு.
குரு சொன்னதைக் கேட்டு சதானந்தர் முகம் சிவந்துவிட்டார். மூச்சு வாங்க ஆரம்பித்தார். நான் அதைக் கவனித்தேன். சூழலை சாதரணமாக ஆக்குவதற்காக “பாவம் காகம் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைக்கிறது” என்றேன்.
குரு சிரித்து “பொன் என்பது ஒரு மின்னும் பொருள் மட்டும்தான் என்று நினைக்கிறது என்றும் சொல்லலாமே” என்றார். “காக்காய்ப்பொன் என்று ஒன்று உண்டு தெரியுமா? இதோ இதுதான்” அந்த செந்நீலநிற கல்லை எடுத்தார்.
“இந்த மின்னும் பொருட்களில் இது மட்டும் வேறு. இது காப்பர் சல்ஃபைட். காட்டில் தொன்மையான எரிமலைப் பாறைகளில் ஒரு சிறுபகுதியாக இருக்கும். சிலசமயம் உடைந்து சில்லுகளாகி நதியில் ஓடி வந்து ஒதுங்கிக் கிடக்கும். நமக்கு இது அவ்வளவாக கண்ணுக்குப்படாது. ஆனால் காகத்தின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கொண்ட கண்ணுக்கு இது சுடர்விட்டு எரிவதுபோலத் தெரியும். இதை எடுத்துக் கொண்டுவந்து நம் வீட்டுமுன் போடும். அவர் அதை திரும்ப வைத்து “காப்பர் சல்ஃபைட் பழங்காலத்தில் மிக மிக மதிப்புமிக்க மருந்து. தோலுக்குமேல் போடும் பெரும்பாலான மருந்துகளில் இது உண்டு”
அந்தப்பேச்சு அப்படியே ஆயுர்வேத மருந்துகளில் உள்ள இயற்கை ரசாயனங்களைப் பற்றியதாக மாறியது. ஆனால் சதானந்தர் பேசவே இல்லை. அவர் கடுமையாக மனம் புண்பட்டுவிட்டார் என்பது பின்னர் தெரிந்தது. அவரால் குரு சொன்ன அந்த வரிகளை கடக்கவே முடியவில்லை. குரு கிளம்பிச் சென்றபின் நான் மேலும் ஒருவாரம் அங்கே தங்கினேன். நான்காம் நாள் என்னிடம் சதானந்தர் “அந்தக் காகம் என்னை பற்றி ஏன் அப்படி நினைக்கிறது?” என்றார்.
“ஏன்?” என்று புரியாமல் கேட்டேன்.
“நான் எந்த நகையும் வைத்துக் கொள்ளவில்லை. இங்கே உள்ள எல்லா பாத்திரங்களும் மண்ணாலானவை. கோப்பைகள் கூட மண்தான். மின்னும் பொருள் ஒன்றுகூட இங்கே இல்லை” என்றார் சதானந்தர்.
“ஆமாம், ஆனால் காகம் உங்களை மனிதர் என்று நினைக்கிறது. மனிதர்களுக்கு எது பிடிக்குமோ அதை உங்களுக்கு தருகிறது” என்றேன்.
“ஆனால் நான் அப்படி அல்ல. நான் துறவி. நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே மேலே வந்திருக்கிறேன். இத்தனை உயரத்திற்கு. உனக்குத்தெரியுமா, இங்கே நான் பணத்தைக்கூட கொண்டுவருவதில்லை. விளைபொருட்களை விற்றுவிட்டு தேவையானவற்றை வாங்கி மிஞ்சிய பணத்தை கடையில்கொடுத்துவிட்டுத்தான் வருவேன். நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இங்கே மின்னும் பொருள் என்று எதுவுமே இல்லை.
“ஆமாம், அதை காகம் கவனித்திருக்காது” என்றேன்.
“அதற்கு எல்லாமே தெரியும். காகம் என்பது ஒரு தனிப்பறவை அல்ல. அது பெரிய ஒரு பறவையின் தனித்தனி தோற்றம். ஆகவேதான் அது தலைமுறை தலைமுறையாக விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறது அந்த ஏகரூபமான காகத்திற்கு நான் துறவி என்று தெரியாமல் இருக்குமா? என்னை பொன்னை விரும்புபவன் என்று அது எப்படிச் சொல்லமுடியும்?”
“அது அப்படிச் சொல்லவில்லையே” என்றேன்.
“மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….” என்றார் சதானந்தர் “ஆகவேதான் நான் எல்லாவற்றையும் விலக்கினேன். மின்னும் பொருள் எதுவும் என்னிடம் இல்லை. எதுவுமே இல்லை”
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவர் அழுவதுபோன்ற குரலில் “அது என்னை கிண்டல் செய்கிறது. நான் கடக்கவில்லை என்று சொல்கிறது. உனக்கு இதுதானே வேண்டும் என்று தான் அதுகேட்கிறது” என்றார்.
“காகம் கிண்டல்செய்கிறதா?”என்றேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ஆமாம், கிண்டல் செய்கிறது. கிண்டல் செய்கிறது. நான் பொன்னுக்கு ஆசைப்படும் சாமானியன் என்று நினைக்கிறது” என்று அவர் கூவினார். “நான் மின்னுவதைக் கடந்தவன். கடந்த என்னை ஏன் அந்த காகம் புரிந்துகொள்ளவில்லை?”
அதையே இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் மிக முதியவர், சொல்லப்போனால் நாராயணகுருவின் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய மனம் எப்படி செயல்படுகிறது என்று எனக்குப் புரிந்தது. அவர்களைப் பொறுத்த வரை சமரசமே இல்லாத வைராக்யமே தவம் என்பது. அதில் நகைச்சுவைக்கும் அழகுக்கும் மெல்லுணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. சித்தவிருத்தி நிரோதம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. செய்வதனைத்தும் அதன்பொருட்டே.
மறுநாள் காலை நான் விசித்திரமான ஒரு காட்சியை கண்டேன். சதானந்தர் கையில் ஒரு நீண்ட கழியுடன் முற்றத்தில் நின்று காகங்களை துரத்திக்கொண்டிருந்தார். “போ!போ!”என்று ஒரே கூச்சல்.
“என்ன செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.
“என் முற்றத்தில் இனி அது எதையாவது கொண்டு போடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று அவர் கூச்சலிட்டார். “நான் யார் என்று எனக்குத் தெரியும். ஒரு அற்பப் பறவை வந்து என்னை இழிவுசெய்ய நான் விடப்போவதில்லை”
ஆனால் அவர் தோட்டத்திற்குச் சென்று வருவதற்குள் முற்றத்தில் காகம் ஒரு வெள்ளித்தாளை கொண்டுவந்து முற்றத்தில் போட்டிருந்தது. அவர் தொலைவிலேயே அதைப் பார்த்துவிட்டார். மிகமெல்ல காலடி வைத்து அருகே வந்தார். அதைக் குனிந்து பார்த்தார். காலால் விலக்கி நன்றாகப் பார்த்தார். நிமிர்ந்து பார்த்தபோது மேலே காகம் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
சட்டென்று விசும்பியபடி திண்ணையில் அமர்ந்துவிட்டார். நான் அருகே சென்று “என்ன இது? நீங்களே ஏதாவது நினைத்துக் கொள்ளவேண்டாம்… அது வெறும் பறவை. அதன் உயிரியல் பழக்கத்தைத்தான் அது செய்யமுடியும்” என்றேன்.
“இல்லை இல்லை”என்று தலையசைத்து அவர் அழுதுகொண்டிருந்தார். “அதற்குத் தெரியும்… அதற்கு தெரியும்”.
“நீங்கள் உங்கள் குழப்பங்களை அதன்மேல் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் உணவு கொடுக்கிறீர்கள். அது பதிலுக்கு அந்த பொருளை கொண்டுவந்து போடுகிறது”.
அவர் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தார். அவரை சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.
அங்கிருந்து நான் வந்துவிட்டேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவருடைய மனநிலையே தவறிவிட்டது. காகம் என்றாலே வெறுப்பு. காகங்களை விரட்டுவதற்காகவே கையில் எப்போதுமே கழி வைத்திருந்தார். காகங்களை பார்த்தாலே கல்லைவிட்டு எறியத்தொடங்கினார். கூச்சலிட்டார், வசைபாடினார்.
ஆனாலும் காகங்கள் அவரை தேடி வந்துகொண்டிருந்தன. அவரால் ஒரு காகத்தைக்கூட குச்சியால் அடிக்கவோ கல்லடித்து வீழ்த்தவோ முடியவில்லை. அவற்றின் பார்வை அவருடைய பார்வையை விட பலமடங்கு கூர்மையானது. அவருடைய கையை விட அவற்றின் வேகமும் மிகுதி. மேலும் அவை அவரை கூர்ந்து பார்த்து நன்றாகவே அறிந்திருந்தன.
அவர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே ஒடுங்கிக்கொண்டே வந்தார். எவரிடமும் பேசுவதில்லை. கண்கள் பதறிக்கொண்டே இருந்தன. முதுமையும் நோயும் அவரை அழுத்தின. அந்த குருகுலத்தை பார்த்துக் கொள்ள வேறொரு இளைஞரை அமர்த்தினோம்.
சதானந்தர் வெளியே வருவதே குறைந்தது. பின்னர் ஓர் இருண்ட தனியறையிலேயே இருக்க தொடங்கினார். முதற்காலையில் எழுந்து குளித்து அதற்குள் புகுந்தால் பகல் முழுக்க அங்கேதான் இருப்பார். பெரும்பாலான நேரம் கையில் மணிமாலையை வைத்து உருட்டியபடி ஜபம் செய்துகொண்டிருப்பார். இரவில் இருட்டு எழுந்தபிறகு வந்து திண்ணையில் அமர்ந்து நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருப்பார்.
அவர் வெயிலை பார்த்தே மாதக்கணக்கில் ஆயிற்று. அவருடைய கண்கள் சாதாரண வெளிச்சத்துக்கே கூசின. அங்கே மின்விளக்கு இல்லை. மண்ணெண்ணை விளக்கே கண்கூசுகிறது, மின்னுகிறது என்று சொல்வார். எண்ணைத்திரி போடப்பட்ட மிகச்சிறிய அகல்விளக்குதான். அதுகூட அரிதாகவே. பெரும்பாலும் அவர் இருட்டிலேயே இருந்தார்.
அவர் காகங்களை பார்த்தே நெடுநாட்கள் ஆகிவிட்டன. காகங்களுக்கு அங்கே சாப்பாடு வைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆகவே அவை வருவதுமில்லை.
எடைமிக்க கல் கிணற்றின் இருண்டநீரில் மூழ்கி ஆழத்தில் மறைவதுபோல சதானந்தர் மறைந்துகொண்டே இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால் அப்படி ஒருவர் தன்னை உள்ளிழுத்துக் கொண்டால் நாமும் அவரை அப்படியே கடந்து விடுகிறோம். நம் குருகுலங்களில் ஆண்டுக்கணக்காக மௌனவிரதம் இருக்கும் துறவிகள் உண்டு. அவர்கள் கண்முன் வந்துகொண்டே இருப்பர்கள். ஆனால் அவர்களிடம் நாம் பேசமுடியாது, அவர்கள் நம்முடன் பேசமாட்டார்கள் என்பதனாலேயே அவர்களை நம பார்க்காமலாகிவிடுவோம். அவர்கள் எவராலும் பார்க்கப்படாமல் நம்மிடையே நடமாடிக் கொண்டிருப்பார்கள். நாம் நமக்கு அளிக்கப்படுவனவற்றை மட்டுமே பெற பழகியவர்கள். நம்மிடம் கூறப்படாத எதையும் நம்மால் கேட்கமுடியாது.
நான்காண்டுகளில் சதானந்தரை எல்லாருமே மறந்துவிட்டனர். அவர் ஏதோ தனித்தவத்தில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஒருநாள் அவர் வழக்கம்போல விடியற்காலையில் வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால் கடும் காய்ச்சலில் மயங்கிக் கிடந்தார். அங்கிருந்து அவரை சுமந்துதான் கீழே கொண்டு வரவேண்டும். மூத்த உடல், அது தாக்குபிடிக்குமா என்று தெரியவில்லை.
டாக்டரை அழைத்துப் போனார்கள். அவர் சில மருந்துகள் கொடுத்துவிட்டு ஒருநாள் பார்க்கலாம், காய்ச்சல் குறையாவிட்டால் டோலியில் தூக்கி கீழே கொண்டுசெல்ல வேண்டியதுதான் என்று சொன்னார். நான் அப்போது தலைச்சேரியில் இருந்தேன். செய்திகேட்டு இரவில் சென்று சேர்ந்தேன்.
காய்ச்சல் மறுநாள் காலையில் குறைந்தது. சதானந்தர் கண்விழித்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். “நீ வந்தது நல்லதாகப் போயிற்று” என்றார்.
“ஒன்றுமில்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.
“என்னை திண்ணைக்கு கொண்டுசென்று படுக்கவை” என்றார். “காகம் வருகிறதா என்று பார். எனக்கு அது இப்போது என்ன கொண்டு தருகிறது என்று பார்க்கவேண்டும்”.
“இப்போது அது தேவையா? வெளியே காற்று கடுமையாக வீசுகிறது” என்றேன்.
“இல்லை, கொண்டுபோ என்னை” என்றார்
திண்ணையில் பாய்விரித்து அவரைப் படுக்கவைத்தோம். அவர் கைகளை கூப்பியபடி மல்லாந்து படுத்து முற்றத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பழுத்த கண்களில் இருந்தது என்ன உணர்ச்சி என்று எனக்குத் தெரியவில்லை.
“காகங்கள் வருவதுண்டா?”என்று கேட்டேன்.
அங்கிருந்த பிரம்மசாரி “இங்கே அவற்றுக்கு உணவு கொடுப்பதில்லை. ஆகவே முற்றத்திற்கெல்லாம் வருவதில்லை” என்றார்.
ஆனால் எனக்கு தெரியும், வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் கதையில் ஒருமை இல்லாமலாகிவிடுமே. எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு நின்றோம்.
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. காகங்கள் வெயில் ஏற ஏற விலகி கிளைகளுக்குச் செல்வதே வழக்கம். நான் அவை வரப்போவதில்லை என்று எண்ணியபோது ஒரு காகம் பறந்து வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து தலைசரித்து பார்த்தது. பிறகு பறந்து முற்றத்தில் இறங்கி வாலை ஆட்டியபடி நடந்து அருகே வந்தது.
சதானந்தர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அது மீண்டும் எழுந்து பறந்து கிளைக்குச் சென்றது. அங்கிருந்து கரைந்தது. எழுந்து பறந்து சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காகம் வந்தது. மரக்கிளையில் அமர்ந்து சிறகை அடுக்கியபின் தழைந்து கீழிறங்கியது.
அதன் வாயில் ஒரு வெள்ளிபோல ஏதோ மின்னியது. அதை முற்றத்தில்போட்டுவிட்டு கா கா கா என்றது. சிறகடித்து எழுந்து கிளைக்கே சென்றது.
நான் சதானந்தரின் முகத்தைப் பார்த்தேன். அது மலர்ந்திருந்தது. சிறுகுழந்தைகளுக்குரிய சிரிப்பு என்று தோன்றியது. “அதை எடு” என்றார்.
அது ஒரு சிறு அலுமினிய மணி. ஏதோ செயற்கை நகையில் இருந்து உதிர்ந்தது. அதை எடுத்து அவரிடம் அளித்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டார். கைவிரல்களில் வைத்து உருட்டிக்கொண்டே இருந்தார்.
“அன்று மாலை சதானந்தர் சமாதியானார். அப்போது அவர் கையில் அந்த மணி இருந்தது” என்று நித்யா சொன்னார். “ஆகவேதான் சொன்னேன் தவமும் மீட்பும் பேசி முடிக்கமுடியாதவை”.
ராமகிருஷ்ணன் எழுந்துசென்று ஜன்னல் கதவை மூடினார். காற்றின் ஒலி குறைந்தது. நித்யா என்னை நோக்கிச் சிரித்து “இந்த நாடகீயமான கதைக்கு ஒரு நல்ல முத்தாய்ப்புச் சொற்றொடர் தேவை, இல்லையா?” என்றார். கையை தூக்கி “சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும் கேள்விக்கு வணக்கம்” என்றார்.
நான் புன்னகைத்தேன்.
நித்யா “அடுத்த பாடலுக்குப் போவோம்” என்று விவேகசூடாமணிக்கே திரும்பினார்.
***