கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ..

உங்களது தற்போதைய சிறுகதைகள் இதுவரை தொடாத புதிய இடங்கள் சிலவற்றை தொடுகின்றன இந்த கதைகளை ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களாக வாசித்தால் சில புதிய வாசல்கள் திறக்கின்றன எந்த முன்முடிவுகளும் இல்லாமல் தனியாக ஒரு தனிப்பட்ட கதையாக படிப்பதிலும் ஒரு வசதி இருக்கிறது இவற்றில் எதை நல்ல வாசிப்பாக நினைக்கிறீர்கள்

அன்புடன்

பிச்சைக்காரன்  

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

உலக இலக்கியத்தில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புலகில் இந்த தொடர்ச்சி உண்டு. தனித்தனியான கதைகளாக அவற்றை வாசித்தால்தான் அவற்றுக்கான வடிவ ஒருமையை உணரமுடியும். அந்தக் கதை அளிக்கும் தரிசனத்தையும் சென்றடையமுடியும்

தொடர்ச்சியால் என்ன பயன்? ஒரே கதாபாத்திரம் தொடர்ச்சியாக வரும்போது அதன் குணச்சித்திர இயல்பை ஒவ்வொரு கதையிலும் தனியாக வரையறை செய்யவேண்டியதில்லை. வாசகர்களுக்கு அது முன்னரே தெரிந்திருக்கும். கதைச்சூழல், கதாபாத்திரங்கள், கதைக்குள் உள்ள நுட்பமான உறவுமுறைகள் முன்னரே தெரிந்திருப்பதனால் எளிதில் கதைக்குள் செல்லமுடியும்

உதாரணமாக ஜே.ஜே.சிலகுறிப்புகள் முதல் பக்கத்தில் வந்த அப்பா போன்ற கதைகள் வழியாக குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவல் வரை வரும் சுந்தர ராமசாமியின் அப்பாவான எஸ்.ஆர்.எஸின் கதாபாத்திரம், சுந்தர ராமசாமியின் வடிவமான பாலு ஆகியவர்களைச் சொல்லலாம். ஆனால் ஜே.ஜேயில் எஸ்.ஆர்.எஸ் மெல்லிய கேலிச்சித்திரமாகவே சொல்லப்படுகிறார். குழந்தைகள் ஆண்கள் பெண்களில் அப்படி அல்ல.

ஜெ

***

அன்புள்ள ஜெ

லாக் டௌனில் சுமார் 45 சிறுகதைகள். வெண்முரசின் கல் பொரு சிறுநுரை வேறு. கதைகளிலும், வெண்முரசிலும் களிப்பும் சிந்தனைகளுமாக அனுபவித்து வருகிறேன். நன்றி. சற்றும் மனம் தளரா விக்ரமன் போலவும், காரணமில்லா கருணை கொண்ட பேரன்னை போலவும் ஒரே சமயத்தில்.

முகநூலில் உங்களை பற்றியும், உங்கள் முதல் சுற்று வாசகர்கள் பற்றி கேலிகள் இருந்தாலும் கூட (இருப்பதனாலேயே என்று கூட சொல்லலாம்), இதனை பதிவு செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. மதிப்பிற்குரிய ஒன்றை மதிக்காமல் இருக்க முடியாதே.

எம்.முரளி

***

அன்புள்ள எம்.முரளி

பலருக்கும் இந்தத் தயக்கம் உள்ளது. மின்னஞ்சல் வெளியிடப்படக்கூடாது என்ற கோரிக்கை பல கடிதங்களில் உள்ளது. நம்மைச் சூழ்ந்துள்ள சிறுமை அப்படி

மனித உள்ளத்தை அறிந்த எவரும் இதை உணரலாம். இத்தனை அளவில், இத்தனை தரத்தில் எவர் தொடர்ந்து எழுதினாலும் சூழலில் இத்தகைய உணர்ச்சிகளே இங்கே எழும். இங்குள்ள படைப்பூக்கமின்மையும்  அறிவுத்திறனின்மையும் அப்படிப்பட்டது. அதை தவிர்த்துவிட்டுச் சென்றுதான் ஆகவேண்டும்.

ஒரு தரமான குறிப்பைக்கூட எழுதமுடியாதவர்கள், எழுதக்கூடும் என்ற நம்பிக்கையைக்கூட உருவாக்கமுடியாதவர்களின் உணர்வுகள் அவை. ஒரு இலக்கிய வாசகனுக்கு தெரியுமே இதற்கு வெளியே என்ன எழுதப்படுகிறது என்று.

நல்லவாசகனின் அடையாளமே தன்னம்பிக்கையும் அதிலிருந்து வரும் தெளிவும்தான்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky  முதல் சுந்தரராமசாமி வரை.

ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது.

பிறகு, படிக்காமல் விட்ட மாய்ப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது.மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால்  உலகம் நோக்கி விரியும் கதை. இரண்டுமே அற்புதமானவை.

வாசித்து முடித்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருச்சி மிகவும் வெப்பமான மாவட்டம். அதில் இந்த கோடை மழை ஒரு வரப்பிரசாதம். வான் சிற்றலை. பால்கணியில் அமர்ந்து உங்கள் கதைகளை மழையில் அசை போடும் அருமையான அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.

தங்கள்

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்,

உண்மையில் ஒரு கதை இன்னொரு கதையை உருவாக்கும். இதை பெரும் படைப்பாளிகள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு கதைவழியாக ஓர் உயரத்திற்குச் சென்றபின் மேலும் மேலும் செல்லமுடியும். உலகின் சில ஆசிரியர்களின் மகத்தான கதைகள் ஓரிரு நாளில் தொடர்ந்து எழுதப்பட்டவை. குறிப்பாக பால்ஸாக் அப்படி நிறைய எழுதியிருக்கிறார். அது ஒரே வைரத்தை திருப்பித்திருப்பி முடிவில்லாது பார்த்துக்கொண்டிருப்பதுபோல

ஜெ

***

முந்தைய கட்டுரைவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலைகளின் உரையாடல் [சிறுகதை]