Kekke Pikkuniமுன்னர் உங்கள் பயணத்தொடரைப் படித்த போதும், இப்போது உங்கள் திருவையாற்று பயணம் …
Jan 19 (3 days ago)
Kekke PikkuniLoading…Jan 19 (3 days ago)
Kekke Pikkuni to me
show details Jan 19 (3 days ago) Reply
முன்னர் உங்கள் பயணத்தொடரைப் படித்த போதும், இப்போது உங்கள் திருவையாற்று பயணம் பற்றி படித்த போதும், உங்களுக்குக் கோபமாக எழுதிவிடலாம் என நினைப்பேன்: அருண்மொழி அவர்களை நீங்கள் உங்களோடு ஏன் அழைத்துச் செல்லவில்லை என. இசைபற்றி உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர், உங்கள் எழுத்துக்களை நன்கு உணர முடிந்தவர், அவர் இல்லாத பயணங்கள் முழுமை பெறுமா என.. முக்கால்வாசி இந்திய ஆண்கள் உணராத/உணர முடியாத கோணம் அது. அரசியல், கலை, எழுத்துத் தளங்களில் ஒன்றுக்கு மேலான மனைவிகளைக் கொள்ளும், பெண்களை கீழ்ச்சாதியினராகக் காணும் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களிடம் உணரவைக்க இயலாத நியாயம் அது. பலரும் தாம் எழுதுவது அவர்தம் வீட்டுப் பெண்டிர் கொடுத்த வரம் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை….
இன்றைக்கு உங்கள் டைரி பதிவைப் படித்து அந்த கோபம் ஓரளவு தீர்ந்தது என்றே சொல்ல வேண்டும். கணவர் என்ற அளவில் நீங்கள் வீட்டுக் கடமைகளைப் பங்கு போடுவது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் காணக்கிடைக்கும்:-) அளவில் பதிவுசெய்த உங்கள் காதலுக்கும் வாழ்த்துகள். சுடரின் மேல், கீழ் என்று நீங்கள் இருவரும் இல்லை போலிருக்கிறது (எனக்கு அருண்மொழியின் உணர்வுகள் பற்றி தெரியாதே!!) அருண்மொழியின் தீராத வாழ்நாள் நோக்கங்கள் என்று ஏதேனும் இருப்பின், உங்கள் அருமையான மொழிக்கு வாசகர்களின் சார்பாக, அவற்றை அவருக்கு திரும்பவும் அறிமுகப்படுத்துங்கள். அவருக்காக என்று ஏதேனும் செய்வீர்கள்… இல்லை செய்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
//தீவிரம் இன்றி எதையுமே சாதிக்க முடியாதென உணர்ந்தவன்.ஆனால் உள்ளூர இந்த ஆட்டம் ஒருவகை விளையாட்டு மட்டுமே என்ற உணர்வுடன்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் இதை உள்ளூரப்பொருட்படுத்தாமல் இருக்கிறேன்.// இந்த வரிகளுக்கும் நன்றி.
keke pikkuni
அன்புள்ள கேகெ தங்கள் கடிதத்துக்கு நன்றி. நான் திருமணநாளில் இருந்து எப்போதுமே அருண்மொழியை ஒரு தோழியாக போகுமிடமெல்லாம் கொண்டுசென்றிருக்கிறேன். அதை எங்கள் நண்பர்களே வேடிக்கைசெய்வதும் உண்டு- இலக்கியக்கூட்ட்டங்களுக்கு கூட்டிவந்து வரதட்சிணைக்கொடுமை செய்கிறேன் என்று. அருண்மொழிக்கும் பயணங்களில் பெரும் ஈடுபாடு உண்டு. வருடத்தில் மூன்று பயணங்களையாவது நாங்கள் செய்வதுண்டு. இணையத்திலும் அதை நான் எழுதியிருப்பதைப் நீங்கள் பார்க்கலாம். என் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதும் துணிந்து நெடுந்தூரப்பயணங்கள் செய்வோம். அப்போது நான் ஒரு உபகரணம்செய்து வைத்திருந்தேன். கீல் வைத்த கனமில்லாத பலகை. அதை மடித்து ஒரு பையில்போட்டு எடுத்துச்செல்வோம். பேருந்தில் அதை விரித்து எங்கள் இருவர் மடிமீது போட்டுக்கொண்டு அதன்மீது பிள்ளைகளை படுக்க வைத்துவிட்டு நாங்களும் நன்றாகவே தூங்கிவிடுவோம். பேருந்தே எங்களை வேடிக்கை பார்க்கும். அருண்மொழி என்னுடன் வெளிநாட்டுக்கும் வந்திருக்கிறாள். வரும் ஏப்ரலில் கூட ஒரு பயணத்தை திட்டமிட்டுக்கொன்டிருக்கிறோம். ஏராளமான அரசு கெடுபிடுகளை தாண்டிக்கொன்டிருக்கிறோம் அதற்காக. ஆனால் சமீபகாலமாக அருண்மொழிக்கு பொறுப்பு அதிகம். நான் சாதாரணமான குமாஸ்தா. அருண்மொழி போஸ்ட் மாஸ்டர். ஆகவே அலுவலக விடுப்புஎ டுப்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஆகவே பல பயணங்களை அவள் தவற விட்டாகவேண்டியிருக்கிறது. நான் சினிமாவில் வெற்றிபெற்று அவள் வேலையை விடும் நாளை கனவாக கொன்டிருக்கிராள்
ஜெ
88
எம்.ஏ.சுசீலா,புதுதில்லி.
அன்பு ஜெ.எம்.குரு வணக்கம்.
‘டயரி ‘கட்டுரை மிகவும் பிடித்தது. 15 ஆண்டுகளாக உற்சாகம் என்ற ஒன்று மட்டுமேயாக இருக்கும் உங்கள் ஆளுமை மிகப்பாராட்டத்தக்கது. உற்சாகத்தையும், ஊக்கத்தையுமே என் ஆசிரிய நாட்களில் மாணவர்களுக்குமுன் வைத்து வந்திருக்கிறேன்நான். கூடியவரை அப்படி இருந்து காட்டவும் முயன்றிருக்கிறேன். உற்சாகமும், ஊக்கத்திறனுமாக ஒவ்வொரு கணத்தையும் பொருள் பொதிந்ததாக ஆக்கிக்கொள்ளும் மனிதர்களை நான் பெரிதும் நேசிக்கிறேன். அந்த வரிசையில் உங்களுக்கு என்றும் ஒரு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்ட மகிழ்வான சூழலை உங்களுக்களித்த அருள்மொழி, நீடு வாழ வாழ்த்துகிறேன்.
தற்கொலைக்குத்தப்பியவருக்குத்தான் வாழ்வின் ஆனந்தக்கணங்களைப்பூரணமாக உணர முடியும் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, நெகிழ வைக்கும் சத்திய வாக்கல்லவா?
கர்ம யோகத்தில் ஆழ்ந்து, திளைத்து என்றும் எப்பொழுதும் தாங்கள் இதே உற்ச்சாகத்துடன் இலக்கியம் படைத்துக்கொண்டே இருக்க வேண்டும்..,அதை நாங்கள் படித்து ஆனந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே என் ஒரே விழைவு.
கீதை பற்றிய தங்கள் கட்டுரைகள், விரைவில் நூலாக்கம் பெற வாய்ப்புள்ளதா என அறிய ஆசைப்படுகிறேன்.
என்றும் அன்புடன்,
சுசீலா.
அன்புமிக்க திரு.ஜெயமோகன்
வணக்கம்.டைரி இரண்டுவிதமான குற்ற உணர்வுகளை எழுப்பியது.
என்னிடம் கூடுதலாக உள்ள டைரிகளில் ஒன்றையோ,நமது நம்பிக்கை வெளியிட்ட டைரியையோ உங்களுக்கு நான் அனுப்பியிருக்க வேண்டும்.
நீங்கள் டைரி எழுதுவீர்கள் என்று நாஞ்சிலாவது சொல்லியிருக்கலாம்.
இரண்டாவதாக- வாழ்க்கையின் கடந்து போகிற நிமிஷங்கள் ஒவ்வொன்றுக்கும் கணக்குக் காட்டுகிற விதமாய் உங்களிடம் இருக்கும் பதிவுகள்.அவ்வப்போதைய தீவிரமான உணர்வுகளையோ நிகழ்வுகளையோ பதிவு செய்ய இனியாவது டைரி எழுத வேண்டும்.
அப்புறம் அந்தக் கவிதை அபாரம்.உங்கள் இருவருக்காக மட்டுமே எழுதியவை அந்த வரிகள் என்றும்-யாருக்கும் -உங்களுக்கும் கூட என்றில்லாமல் எழுதிய வரிகள் அவை என்றும் தோன்றுகிறது.
ஒவ்வோர் ஆண்டிலும் நீங்கள் பட்டியலிட்டிருக்கும் ஒரு தேதியில் மட்டுமே இவ்வளவு உயிர்ப்பான விஷயங்கள் நடந்திருக்கின்றன என்கிற
போது எழுகிற பிரம்மிப்பை வெளிப்படுத்த கம்பனைத் துணைக்கு
அழைத்துக் கொள்கிறேன்
“பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ”
அன்புடன்
மரபின் மைந்தன் முத்தையா
88
அன்புள்ள ஜெ
டைரி பற்றிய உங்கள் கட்டுரையை ஆர்வத்துடன் வாசித்தேன். பல விஷயங்களை நீங்கள் தகவல் துல்லியத்துடன் சொல்லும்போதே டைரி எழுதும் பழக்கம் இருக்கும் என்று ஊகித்தேன். இத்தனை எழுதிக்குவித்த பின்னர் டைரியும் எழுதுகிறீர்கள் என்பதே ஆச்சரியமானதுதான். இப்போது உங்கள் டைரியாக இந்த இணையதளமே உள்ளதே. நீங்கள் உங்கள் மனைவியைப்பற்றி எழுதியிருந்த கவிதை அருமை
சிவகுமார் முருகேசன்
**