ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அதாவது இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக நமது சமூகத்தில் இருந்துகொண்டிருந்தது

எனக்கு எப்போதுமே உள்ள சந்தேகம் ஒன்று. மனநோயாளிகள் போன்றவர்களை வீட்டிலேயே வைத்துக்கொள்வதுபற்றி. அவர்களை dispassionate ஆக கையாள்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கொஞ்சம்கொஞ்சமாக அவர்களைப் பார்த்துக்கொள்பவர்களும் அதேபோல ஆகிவிடுவார்கள். இதில் செண்டிமெண்ட் பார்க்கவேண்டிய அவசியமே கிடையாது. இது எங்கள் குடும்ப அனுபவமும்கூட.

ஓநாயின் மூக்கு வழக்கம்போல மூன்றுகதைகளை ஒன்றுடன் ஒன்று ஊடுருவ விடுகிறது. ஒன்று சரித்திரம். இன்னொன்று சமகாலச் செய்தி. இன்னொன்று துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஓர் உலகம். சமகாலச் செய்தி documented ஆக உள்ளது. வரலாறு கதையாகவும் தகவலாகவும் உள்ளது. சமகாலக் கதை reality மற்றும் fantasy இரண்டுக்கும் நடுவே ஊடாடுகிறது. அது பேயா என்றால் பேய். மனநோயா என்றால் மனநோய். ஏன் அது வருகிறது என்றால் வரலாற்றில் இருந்து. மனிதனின் subconscious ஆக இருந்துகொண்டிருக்கும் வரலாறு அது.

நம்முடைய conscious என்பது subconscious ஆல் கட்டுப்படுத்தப்படுவது. அடித்தளமே subconscious தான். அதேபோலத்தான் நமது சமகாலம் என்பது வரலாற்றால் ஆனது

எஸ்.மகேஷ்

***

வணக்கம் ஜெ.

ஒநாயின் மூக்கு சிறுகதையை வாசித்தேன். அறம் எனும் கருத்துருவாக்கமே நீலியாக யட்சியாகத் தொடர்கிறது. புறப்பொருட்களான நாடு, சுதந்திரம் எல்லாம் அன்னையர்களாகவே உருவகிக்கப்படுகின்றனர். அன்னையர்களின் அன்பு மகத்தானது. மறுபுறத்தே அவர்களுக்கு இழைக்கப்படும் வஞ்சகமும் அத்தகையதே. மனிதர்கள் நிறுவி செல்லும் அன்னையர்களின் இன்னொரு முகம்தான் இந்தக் கதை.

அரவின் குமார்

***

 

ஆழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆழி சிறுகதை இந்த வரிசைச் சிறுகதைகளில் எளிமையானது. உண்மையில் கதையை இரண்டாம் முறை வாசித்தபிறகுதான் அந்தக்கதையில் கடல் என்னவாக இருக்கிறது என்று தெரிந்தது. கடல் இரண்டுபேரையும் தூக்கி கரையில் வீசி போய் வாழுங்க என்று சொல்கிறது. அலைகளை பெரிதாக நினைக்கவேண்டாம், கடலாகிய நானே சொல்கிறேன் என்று சொல்கிறது

பிரிவதற்கு அலைகள், இணைவதற்கு கடல் என்று நான் புரிந்துகொண்டேன். நேர் மாறாகவும் நடக்கலாம். ஆயிரம் அலைகள் சேர்த்துவைக்கலாம். கடல் இருவரையும் பிடுங்கியும் விலக்கிவிடலாம். ஆனால் அதுதான் அடிக்கடி நடக்கிறது

ரவிச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் வெளியான தங்க‌ளின் சிறுகதை ‘ஆழி’ வாசித்தேன்.  கதையின் தலைப்பான ‘ஆழி’, வாழ்க்கையின் ஒரு உருவகமாகவே தோன்றுகிறது .

இரு காதலர்கள் தங்களின் பிரிவு-சேர்தல் எண்ண போராட்டங்கள், அலைகளில் அவர்கள் சேரவும்-பிரியவும் செய்யும் விளையாட்டாகவே நான் பார்க்கிறேன். அவர்களின் முடிவுகள் அவர்கள் கையில் இல்லை. அவர்கள் சேர நினைத்தாலும் கடல் அலை என்னும் விதி (அல்லது கண்ணுக்கு தெரியாத ஒன்று, ஒத்துக்கொள்ள நினைப்பவர்கள் தங்களின் ஆணவம் அல்லது ‘தான்’ என்ற மையம்) அவர்களை சேர விடுவதில்லை.

இல்லாமையின் இருப்பில் தான்இருப்பின் முக்கியத்துவம் தெரிவது போல, அவன் இல்லை என்ற போது தான், தன்னிச்சையாக கடல் அலைகளில் போராடி அவனை தேடும் போது, அவன் இருப்பு தெரிகிறது. அந்த ஆழி அவர்களுக்கு ‘மனித மனம்’ ஒரு சிறு பொருள் என்று உணர்த்தியது. உங்களின் லாஜிகல் திங்கிங் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்றும் உணர்த்துவன‌ போல இருந்தது. நீங்கள் ஆயிரம் காரணத்திற்காக பிரிய நினைத்தாலும் சேர்வதும், ஆயிரம் காரணத்திற்காக சேர நினைத்தாலும் பிரிவதும், ஆழியின் ஆழம் போன்று கண்ணுக்கு தெரியாத ஒன்று தான் முடிவு செய்கின்றது.

பிரவின்.

***

முந்தைய கட்டுரைகைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇறைவன் [சிறுகதை]