பலிக்கல்[சிறுகதை]

வாசலில் வந்து நின்றவரை நான் முன்னர் பார்த்திருக்கவில்லை. நாளிதழை தழைத்துவிட்டு எழுந்துயாரு?” என்றேன்.

அவர் கைகூப்பிஇல்ல, பாக்கணும்னு…” என்றார். “ஆடிட்டர் அஷ்டமூர்த்தி சாரு?”

நாந்தான்என்றேன்.

என் பேரு பரமசிவம்நமக்கு தென்காசிக்கு அந்தால புளியறை…”

நான் கைகூப்பிவாங்கஎன்றேன். எதற்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. நினைவில் எங்கும் முகம் தென்படவில்லை. நான் பணியாற்றியது முழுக்க கேரளத்தில். தென்காசிப்பக்கம் தெரிந்த எவரும் இல்லை.

அவர் அமர்ந்துகொண்டுநான் ஒரு காரியமாட்டு வந்தேன்என்றார். குரலில் ரகசியம் வந்துவிட்டிருந்தது. “முத்தாலத்து சங்கரன் போத்தி சாமி…”.

எங்க அப்பாதான்என்றேன்.

நான் அவரை பாக்கணும்”.

நான்எதுக்கு?”என்றேன். “அவரை உங்களுக்கு எப்டி தெரியும்?”

எனக்கு அவரை தெரியாது. நான் வந்தது வேற ஒருத்தருக்காக. அவர் பெரியவரோட வாழ்க்கையிலே ரொம்ப சம்பந்தப்பட்டவர்”.

இங்க பாருங்க, அப்பாவுக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?”

அவர் தலையசைத்தார்.

எனக்கு அறுபத்திமூணு. அப்பாவுக்கு தொண்ணூத்திநாலுஅவருக்கு நடமாட்டம் நின்னுபோய் ஏழுவருஷம் ஆகுது. சுயநினைவு குழம்பிப்போய் முப்பது வருஷம் ஆகுது. இப்ப அவரை வச்சு என்ன பண்ணப்போறீங்க?”

நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் சார். நான் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். புளியறையிலே ஒரு பண்ணையை என்னோட பார்ட்டி ஒண்ணு விக்க வந்தார். அவரு பேரு சண்முகலிங்கம். அவரோட அப்பா காலத்திலே வாங்கின லேண்ட் அது. அவரு மெட்ராஸிலே ஆடிட்டரா இருக்கார். நூத்து நாப்பத்தேழு ஏக்கர். முழுக்க தென்னையும் மாவும் பலாவும். நல்ல செழிப்பான தோட்டம், அங்க தண்ணிப் பிரச்சினை இல்லை பாத்துக்கிடுங்க. எஸ்டேட்டுக்குள்ளாடியே ஒரு சின்ன ஆறுபோவுதுஎன்றார் பரமசிவம். “ஒரு பங்களாவும் உண்டு. பழசுதான், ஆனால் நல்ல பெரிய வீடு..”

ஓகோ”.

ஆனால் அவங்க நெலத்தை அப்டியே ஒரு வாட்ச்மேன் பொறுப்பிலே விட்டுட்டு மெட்ராஸிலே இருந்தாங்க. அங்க யாரும் வர்ரதே இல்லை. மண்ணிலே இருந்து லாபம்கூட அந்த வாட்ச்மேனே எடுத்திட்டிருந்தான். அதான் வித்துடலாம்னு முயற்சி பண்ணியிருக்காங்க. நான் நெலத்தை வாங்குறதுக்கு ஆளு தேடினேன். நெலம் பத்துப்பதினஞ்சு கோடிக்கு போவும். அம்பிடு கோடி ருபா குடுத்து நெலத்தை வாங்கணுமானா அரசியல்வாதி வாங்கணும். அவனுக கிட்ட பைசாவ வாங்குறது கஷ்டம். அதனாலே கேரளாவிலே ஆளுண்டான்னு விசாரிச்சேன்”.

சரிஎன்றேன் ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என எண்ணிக்கொண்டேன்.

அதை வாங்க வந்தவர் ஒரு கேரளாக்கார கிறிஸ்தவர். ஜார்ஜ் தாமஸ் வடக்கேடன்னு பேரு. துபாய்ல கடைவச்சிருந்தவர். ஊருக்கு வந்திட்டார். அவரு பாத்ததுமே தெரிஞ்சுகிட்டார், பாக்க ஆளில்லாத நிலம்னு. நாலுகோடிக்குமேலே ஒரு பைசா தரமாட்டேன்னு சொல்லிட்டார். சண்முகலிங்கம் நல்லா சொல்லிப்பாத்தார். ஆனா கேரளாக்காரனுக நேக்கு தெரிஞ்சவனுக. ஒத்தவெலை நாலுகோடி, குடுத்தாக்குடு, இல்லேன்னா போன்னுட்டாங்க. நான் கொதிச்சுப் போய்ட்டேன், நாலுகோடிக்கு நூத்திநாப்பத்தேழு ஏக்கர் பண்ணைன்னா அது ஏவாரம் இல்லை, தானம் குடுக்கிறது. ஆனா சண்முகலிங்கம் சட்டுன்னு நாலுகோடின்னாலும் பரவாயில்லை, முடிச்சிருன்னு சொன்னார்”.

சரி, இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க? நான் இப்ப ஆடிட்டிங் எல்லாம் பண்றதில்லை”.

ஒரு ஓரமா சொல்லிட்டே வந்திடறேன்சார். இல்லேன்னா புரியாது. பேச்சு எல்லாம் முடிஞ்சு அட்வான்ஸ் கைமாறியாச்சு. பதிவுக்கு நாள் குறிச்சாச்சு. அந்நேரத்திலே ஒரு ஆக்ஸிடெண்ட். ஜார்ஜ் தாமஸோட மூத்த பையன் காரிலே இடுக்கியிலே இருந்து தொடுபுழா வர்ரப்ப கார் மலைப்பள்ளத்திலே விழுந்துட்டுது. அப்டியே போய்ட்டான். உடம்ப எடுக்கவே நாலுநாள் ஆச்சு”.

ஜார்ஜ் தாமஸ் ஒடிஞ்சு போய்ட்டார். மூணுமாசம் பொறுத்து நான் போயி நெலத்தை வாங்குறீங்களான்னு கேட்டேன். இல்லே, ஏதாவது ஜோசியன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு சொல்லிட்டாங்கநாந்தான் அல்லிமங்கலம் நம்பூதிரிகிட்ட கூட்டிட்டு போனேன். கேட்டிருப்பீங்க, மாவேலிக்கரையிலேரொம்ப புராதனமான ஜோசியக் குடும்பம் அவங்கஎனக்கும் அவரை தெரியாது. அவங்களே விசாரிச்சுட்டு அவரு நல்ல ஞானம் உள்ள ஜோசியர்னு சொன்னாங்க. என்னைய கூட்டிட்டுப்போகச் சொன்னாங்க

சார், இப்ப மாதிரி இருக்கு. நானும் ஜார்ஜ் தாமஸும் அவரோட வீட்டுக்காரம்மாவும் ஜோசியர் முன்னால உக்காருறோம். ஜாதகத்தை எடுத்து புரட்டிப் பார்க்கிறார். இப்டி குடும்பத்திலே ஒரு துக்கம்னு சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள கையை காட்டிபையன் போய்ட்டான் இல்ல?’ன்னு கேட்டார். ஜாதகத்தை பாத்து மடிச்சு வச்சுட்டுஒரு மகாபாப தோஷம் தேடி வந்திருக்கு. ஆர்ஜித தோஷம். நீங்க செஞ்சது இல்லை, வேற எங்கிருந்தோ வந்து ஒட்டியிருக்குன்னு சொன்னார்”.

எனக்கு ஒண்ணும் புரியலைஅதெப்டின்னு ஜார்ஜ் தோமஸ் கேட்டார். ஜோசியர் மறுபடியும் பாத்துட்டுவீடு ஏதாவது புதிசா வாங்கினீங்களா?’ன்னார். ‘இல்லேன்னு ஜார்ஜ் தோமஸ் சொன்னார். ‘இல்லை வேறேதாவது நகை சொத்து?’ அப்டீன்னு கேட்டார். இவர் கொஞ்சம் பம்மிநான் ஒரு நெலத்தை வாங்கலாம்னு அட்வான்ஸ் பண்ணினேன். அதை செஞ்ச நாளிலே இருந்தே மனசுலே ஒரு மாதிரி ஒரு அலைமோதலா இருந்திட்டிருந்ததுன்னு சொன்னார்

ஜோசியர்கனவுகள் வந்திச்சோ?’ ன்னு கேட்டார். ‘ஆமான்னு இவர் சொன்னார். ‘என்ன கனவு?’ன்னு ஜோசியர் கேட்டார்.. ‘ஒரு வயசான கிழவர் ஒரு பெரிய கிணற்றுக்குள்ள ஆழத்திலே இருந்து அழுதிட்டிருக்கார். நான் மேலே நின்னு பாத்திட்டிருக்கேன்ன்னு ஜார்ஜ் தாமஸ் சொன்னார். ‘வேற?’ ன்னு ஜோசியர் கேட்டார். ‘வேற கெடையாது. இந்த ஒரே கனவுதான்’. நம்பூதிரி அவருக்க வீட்டுக்காரம்மாவை பாத்துஉங்களுக்கும்மா?’ன்னு கேட்டார். ‘யாரோ வந்து கதவை தட்டி அழுதுட்டே நிக்கிறமாதிரி கனவு. அதுமட்டும்தான். ஆனா பத்து தடவைக்குமேலே வந்திட்டுதுன்னு அந்தம்மா சொல்லிச்சு”.

நம்பூதிரிநெலம் எங்கே, யாரோடது?’ன்னு கேட்டார். நான் எல்லாத்தையும் விபரமா சொன்னேன். ‘நெலத்துமேலே பெரிய சாபம் கெடக்கு, அதிலே இருந்து வெளியே வர்ரது கஷ்டம். போனது போகட்டும், அட்வான்ஸை விட்டிருங்க. மிஞ்சின குடும்பம் லாபம்னு இருக்கட்டும். கூடுதலா சாபம் தேடி வைக்கவேண்டாம்அப்டீன்னு சொல்லி ஜாதகத்தை கீழே வைச்சிட்டார் நம்பூதிரி.”

கும்பிட்டு கெளம்பினப்ப அந்தம்மா அழுதிட்டு கைகூப்பிசெரி சாமி, இதுக்கு என் பையன் ஏன் போகணும்?’னு கேட்டார். ‘பாவம்னா மோசமான ஒட்டுவாரொட்டி. அது அப்டித்தான். ஒருவாய் சோத்துலே கூட ஏறி நம்மகிட்ட வந்திரும். அதான் துஷ்டனைக் கண்டா தூரவிலகுன்னு சொல்லியிருக்குன்னு அவர் சொன்னார். ‘இருந்தாலும் இப்டி ஆயிடிச்சே சாமீன்னு அந்தம்மா அழுதிச்சு. ‘எல்லாத்துக்கும் ஜோசியன் ஒரு பதிலைத்தாம்மா சொல்லமுடியும், எல்லாம் விதியோட கணக்குன்னு சொல்லி அவரு கும்பிட்டார்”.

வெளியே வந்ததும் ஜார்ஜ் தாமஸ் எங்கிட்டஎல்லாம் அப்டியே போகட்டும், என் அட்வான்ஸ் வேண்டாம்னார். நான் சொல்லிப் பாத்தேன், பரிகாரங்கள் பண்ணலாம்னு பேசினேன். அவரு ஒத்துக்கலை. மனசுவிட்டுப் போனேன். மெட்ராஸ் போயி சண்முகலிங்கம் சார் கிட்டஇப்டி ஆயிடிச்சே சார்!’ னு சொன்னேன். ‘அட்வான்ஸை திருப்பிக் குடுத்திடறேன், அவரு பைசா நமக்கு எதுக்கு?’ன்னார்”.

அப்ப சட்டுன்னு அவரோட மனைவி அழுதுகிட்டே வெளியே ஓடிவந்து எங்கிட்டஅந்த நம்பூதிரிய பாக்கணும்ங்க, எங்க குடும்பத்திலேயும் பெரிய பெரிய நாசமெல்லாம் நடந்திட்டிருக்கு! எங்களைக் கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னா. தலையிலே அறைஞ்சு கதறி அழுதிட்டே விழுந்திட்டா”.

நான் அவங்களை நம்பூதிரிகிட்ட கூட்டிட்டு போனேன். இவங்க ஜாதகத்தைப் பாத்ததுமே அப்டியே கீழே போட்டுட்டார்குலசாபம் துரத்துது. அழிச்சிட்டுதான் போகும். அள்ளி அள்ளி வச்சாலும் அடங்காத நெருப்புன்னு சொல்லிட்டாரு. இவங்க கதறி அழுதிட்டே இவங்க குடும்பத்தைப் பத்திச் சொன்னாங்க. அப்பதான் எனக்கும் எல்லாம் தெரிஞ்சுது”.

எனக்கு ஓரளவு பிடிகிடைத்தது. ஆனால் பேசாமல் இருந்தேன்.

அழகியநம்பியாபிள்ளை குடும்பம் சார், பெரியவரு அப்ப கேஸ்லே மாட்டினப்ப இவருதான் கோயில் எக்சிகூட்டிவ் ஆபீசர்.”

ம்என்றேன்.

அப்ப சம்பாரிச்சதுதான்அந்த பணத்தவச்சு அந்த நெலத்தை வாங்கியிருக்கார். அவரோட குடும்பமே அதைவச்சுத்தான் மேலே வந்திருக்காங்க”.

நான் தலையசைத்தேன்.

அழகியநம்பியாபிள்ளைக்கு மூணு பிள்ளைக. மூத்தவரு சுப்ரமணியம். ரெண்டாவது பொண்ணு, மீனாட்சின்னு. கடைசியா இவரு, சண்முகலிங்கம். சுப்ரமணியம் போய்ட்டாரு. எஞ்சீனியரா இருந்தவரு மாடியிலே இருந்து விழுந்துட்டாரு. அவருக்கு ஒரே மகன் அவனும் ஒரு ஆக்ஸிடெண்டிலே போய்ட்டான். அவனுக்க பொஞ்சாதி ஒத்தைப் பையனோட தன் அப்பாம்மா வீட்டுக்கு போய்ட்டுது. மூணுவருசம் முன்னாடி அந்த பையனும் தவறிட்டான். செம்பரம்பாக்கம் ஏரிக்கு குளிக்கப்போனவன் சேத்திலே சிக்கிக்கிட்டான். இப்ப அந்தம்மா மட்டும் எங்கியோ ராஜபாளையத்திலே இருக்கு. அந்த வம்சமே அழிஞ்சாச்சு

அழகியநம்பியா பிள்ளைக்க மகள் மீனாட்சியும் இப்ப இல்லை. அவங்களோட ரெண்டு பையங்களும் தவறியாச்சு. ரெண்டுபேருக்குமே சட்டுன்னு ஹார்ட்டு அட்டாக்கு வந்துச்சு. அவங்க குடும்பத்திலயும் நாலு சாவு. மூணு பிள்ளைங்களுக்கு மூளை வளர்ச்சி கெடையாது. அந்தக்குடும்பமே அப்டியே இழவடிச்சுப்போய் திருவண்ணாமலையிலே கெடக்கு”.

அப்டியா?”

ஆமா சார். சண்முகலிங்கம் சார் ஆடிட்டர். ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பொண்ணு நாலுவருசம் முன்னாடி பிரசவத்திலே போய்ட்டா. மூத்த மகனுக்கு போனவருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட். படுத்த படுக்கையா இருக்கான்அவரு சொல்லுதாரு, மூணுமாசத்துக்கு ஒரு கெட்டசெய்தி வந்திட்டே இருக்குன்னுவாழ்நாள் முழுக்க அப்டித்தான். அவரு இருபது வயசிலே இருந்தே மாத்திரபோட்டுத்தான் தூங்கிட்டிருக்காருஎன் கையைப் பிடிச்சுட்டுநான் கல்யாணம் பண்ணிட்டிருக்கக் கூடாது. என் வம்சம் அழிஞ்சிருக்கணும். மத்தபேராவது தப்பிச்சிருப்பாங்கன்னு சொல்லி கதறி அழுதிட்டார்…”

இப்ப என்ன பண்ணணும்?” என்றேன்.

சார், அவங்க செய்யாத பூசை இல்லை. போகாத கோயில் இல்லை. கோடிக்கணக்கிலே தானதர்மம் பண்ணியிருக்காங்க. பிராயச்சித்தம் பண்ணிட்டே இருக்காங்க. இனி செய்றதுக்கு ஒண்ணும் இல்லைஎன்றார் பரமசசிவம். “அவங்க அப்பா அழகியநம்பியா பிள்ளை எழுபதுவயசிலே போனார். ஃபிஸ்டுலான்னு ஒரு சீக்கு. பீ ஒளுகிட்டே இருக்கும். அப்பதான் எல்லாத்தையும் சொல்லி அளுதிருக்காரு. ‘பதினேழு வருசமா கழுவிலே ஏத்தி உக்கார வைச்சிருக்குடாஆண்டவன் என்னைய கழுவிலே ஏத்திட்டாண்டான்னு சொல்லி கதறியிருக்காரு”.

நான் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தேன். பற்களை இறுகக் கடித்திருந்தேன்.

எல்லாம் செஞ்சது அவரு. ஒப்பரம் நின்னது ரெண்டு வாட்ச்மேன் ஸ்டாஃப். அந்த ஆளுகளும் இப்ப மொத்தமா நாசமாப் போயிட்டாங்க. அழகியநம்பியா பிள்ளை மாட்டிக்கிட்டதும் ஒண்ணும் தெரியாத பெரியவர கைகாட்டி விட்டுட்டார். வக்கீல் முதல் எல்லாருக்கும் பணத்தை அள்ளி எறக்கி தப்பிச்சுட்டார். ஆனா ஆண்டவன்கிட்டேருந்து தப்பமுடியல்லை”.

நான்சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு?” என்றேன்.

அவங்க இவ்ளவுநாள் பெரியவரு போய்ட்டாருன்னு நினைச்சுட்டு இருந்திருக்காங்க. அங்க இங்க விசாரிச்சப்ப அப்டித்தான் சொல்லியிருக்காங்க. இவ்ளவுநாள் இருப்பாருன்னு எப்டி எதிர்பார்க்கிறது? சோசியர்தான்பிராயச்சித்தம் பண்ணி எந்தபிரயோசனமும் இல்லை, உங்களாலே அழிஞ்சவங்க உங்கமேலே போட்ட சாபம் அப்டியே இருக்கு. அங்கபோயி காலிலே விழுந்து மன்னிப்பு கேளுங்க. அவங்க மன்னிச்சாத்தான் விடுதலைன்னு சொன்னார். ‘அந்த தலைமுறையே இப்ப இல்லையேன்னு சண்முகலிங்கம் சொன்னார். ‘அப்ப அவங்க வாரிசுக இருப்பாங்க. அவங்க கிட்ட போயி மன்னிப்பு கேளுங்க. அவங்க மனசார மன்னிச்சா அவங்களோட பூர்விகர்கள் மன்னிச்ச மாதிரிதான்னு நம்பூதிரி சொன்னார்”.

அப்ப பெரியவர் உசிரோட இருக்கிறது தெரியாது. நான் பொதுவா அவரைப் பத்தி தேடினேன். வாரிசுங்களையாவது கண்டுபிடிக்கலாம்னு நினைச்சேன். நீலமாணிக்கபுரத்திலே யாருக்கும் ஒண்ணும் தெரியாது. நாகர்கோயிலிலே பார்வதிபுரம் அக்ரகாரம் போனேன் அங்க ஒரு தகவலும் இல்லை. பல எடங்களிலே தேடினேன். அட்ரஸை ஒருவழியா கண்டுபிடிச்சு இங்க வந்தேன்”.

அட்ரஸ் ஜெயிலிலே கிடைக்குமேஎன்றேன்.

ஆமா சார், அங்கதான் கிடைச்சுது. ஆனா அது கொச்சி அட்ரஸ். அங்கபோயி விசாரிச்சு அங்கேருந்து உங்க பழைய ஆபீஸ் அட்ரஸை கண்டுபிடிச்சேன். உங்க பென்ஷன் இங்கே திருவனந்தபுரம் ஆபீசிலேருந்து குடுக்கிறதா சொன்னாங்க. அங்க போயி இந்த வீட்டு அட்ரசை கண்டுபிடிச்சேன்”.

அதுக்கு நீங்க எதுக்கு மெனக்கெடணும்?”

எனக்கு உண்டான செலவும், கூடுதலா கமிஷனும் தாறதா சொன்னாங்க. நம்ம தொழிலுல்லா?”

சரி, இப்ப என்ன பண்ணணும்?” என்றேன்.

பெரியவரு இப்ப உசிரோட இருக்கிறாருன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன். அவங்க வந்து பெரியவரு காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கணும்… “.

நான் சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்துவாங்கஎன்றேன்உள்ள வாங்க, அப்பாவை பாருங்க.

அவர் என்னுடன் வந்தார். “அவரு எப்டி இருந்தாலும் இது அவங்களுக்க மன ஆறுதலுக்கு. அவங்களுக்கு நிம்மதியான தூக்கமில்லை. பயந்து பயந்து ரெண்டு தலைமுறையா செத்துட்டிருக்காங்கவந்து காலிலே விழட்டும். என்ன சடங்கு வேணுமோ செய்யட்டும்நான் இதை தொழிலா மட்டும் பார்க்கலை. மனுஷ வாழ்க்கையில்லா? அப்டி தலைமுறை தலைமுறையா உமித்தீ மாதிரி நீறி அழியுறதுன்னா அது பெரிய கொடுமை…”

நான் அவரை உள்ளறைக்கு கொண்டு சென்றேன். மையவீட்டில் இருந்து தள்ளி இருந்த அறை. டெட்டாலும் சிறுநீரும் கலந்த அந்த வாடை எனக்கு எப்போதுமே குமட்டலை உருவாக்குவது.

அப்பா கட்டிலில் எழுந்து அமர்ந்து ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் களைத்துப்போயிருந்தார். நானே அவரைப் பார்த்து ஒருமாதத்திற்கு மேல் ஆகிறது.

அவர் என் வீட்டிலேயே தனியாகத்தான் இருந்தார். ஜான் என்ற ஆண் நர்ஸ் தினமும் வந்து கூடவே இருந்து அவருக்கு தேவையானதைச் செய்துவிட்டு சாயங்காலம் சென்றுவிடுவான். அவனை நான் பார்த்தே பலநாட்கள் ஆகின்றன. இரவில் அவருடன் ஒரு வேலைக்காரிக் கிழவி தங்குவாள். அப்பா பெரும்பாலும் இரவில் ஆழ்ந்து உறங்குவார்.

அப்பாவின் முகத்தை நான் ஏறிட்டுப்பார்த்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன். ஒரு கணம் அவரைப் பார்த்துவிட்டு பார்வையை தாழ்த்திக்கொள்வது என் வழக்கம். அவர் எனக்கு அளிக்கும் பதற்றம் ஏன் என்றே தெரியாதது. நான் அவரைப் பற்றி நினைப்பதையே தவிர்த்தேன். இளமைநாளிலிருந்தே அப்படித்தான். வீட்டுக்குள் கூடவே முப்பதாண்டுகளாக இருக்கும் ஒருவரை என்னால் மறக்கமுடிந்தது அவ்வாறுதான். மறக்க முடிந்தமையால்தான் நான் உயிருடன் இருக்கிறேன்.

அப்பாவின் முகம் ஒடுங்கி நீண்டு உருமாறியிருந்தது. கன்ன எலும்புகள் உந்தி வெந்து கருகியதுபோல் தோன்றிய முகத்தோலுக்குள் புடைத்திருந்தன. பெரிய கழுகுமூக்கு முகத்தசை வற்றி தழைந்ததனால் மேலும் புடைத்திருந்தது. மூக்குத்துளை நிறைய நரைத்த மயிர்க்கற்றை. உதடுகளே இல்லை. கண்களில் வெண்விழிகள் கலங்கிச் சிவப்போடியிருந்தன. கருவிழிகள் நரைத்திருந்தன. அவர் கண்கள் இரு சீழ்பிடித்த புண்கள் போல இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும். அந்நினைப்பை உந்தி விலக்கிக்கொள்வேன்.

அவர் உடல் மிகவும் குறுகிவிட்டது. கைகளில் தசைகள் வற்றி நரம்புகள் இழுத்துக்கொண்டு வலிப்பு வந்து அப்படியே உறைந்துவிட்டவர் போலிருந்தார். ஒரு மெழுகுச்சிலை உருகி உருமாறியதுபோல. தோலிலும் ஒரு மெழுகுத்தன்மை. கால்கள் வீங்கி பளபளவென்றிருந்தன.

அவர் கைகள் நடுங்கிக்கொண்டே இருக்கும். அவரால் எந்தப்பொருளையும் கையால் எடுக்க முடியாது. தண்ணீர் கூட எவரேனும் ஊட்டவேண்டும். அல்லது குழாய் பொருத்தப்பட்ட பிளாஸ்க் வேண்டும். அப்பா கைகளை தன் இரு தொடைகளுக்கு அடியிலும் வைத்து அழுத்திப் பிடித்திருந்தார். முழங்கைகள் துள்ளி நடுங்கிக்கொண்டிருந்தன.

காலடியோசை கேட்டு திரும்பி பார்த்த அப்பா என்னையே அடையாளம் காணவில்லை என்று தோன்றியதுஇவா யாரு?” என்று என்னிடம் கேட்டார்.

உங்களைப் பாக்கத்தான் வந்திருக்காஎன்றேன். அவருக்கு என்னை தெரிகிறது.

டேய் குருவி வரதுடா உள்ளார. அடைக்கலாங்குருவிஇங்க உள்ளார வந்து..” என்று அப்பா சுட்டிக்காட்டினார். “இவா யாரு?”

அப்பா உங்களைப் பாக்க வந்திருக்கா

கோயில் காரியமா? பூசைக்குன்னா ராமுகிட்ட பேசிடுங்கோஎன்றார் அப்பா.

அப்பா, இவர் உங்க கேஸைப்பத்தி விசாரிக்க வந்திருக்கா?”

அப்பா திரும்பிப் பார்த்து புன்னகைத்தார். “செவெண்டி சிக்ஸ் தெஃப்ட் கேஸ்தானே? நீலமாணிக்கபொரம் தெஃப்ட் கேசு? இவா அதிலே யாரு?”

தெரிஞ்சவாஎன்றேன்அதைப்பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு வந்திருக்கா”.

அப்பாஉக்காருங்கோ சொல்றேன்என்றார். “அது அந்தக்காலத்திலே பிரமாதமான கேஸ்பத்திரிகையிலே ஏகப்பட்ட நியூஸ் போட்டுண்டிருந்தா. இப்பல்லாம் மறந்துட்டா. இங்க நீலமாணிக்கபுரம் கோயிலிலே நடந்த பெரிய திருட்டு. பூசாரியா இருந்தவரு முத்தாலத்து சங்கரன் போற்றின்னு ஒருத்தர். நல்ல மனுஷர். ஒரு வம்புக்கும் போகமாட்டார். பெரிசா அறிவும் கெடையாதுன்னு வைங்கோ”.

பரமசிவம் திடுக்கிட்டு என்னை பார்த்தார். நான் கண்களால் மேலே கேளுங்கள் என்று குறிப்பு காட்டினேன்.

முத்தாலத்து சங்கரன் போற்றின்னு சொன்னேன்ல, அவரு ஊரிலே எல்லாருக்கும் வேண்டப்பட்டவர். ஜோசியமும் பாப்பார். வீட்டிலே ரொம்ப கஷ்டம். ரொம்ப கஷ்டம்னா, ஒருவேளைதான் வீட்டிலே சமையல். வெறும் சோறு இல்லேன்னா மரச்சீனு கெழங்கு. அதுவும் அப்பப்ப இல்லாம ஆயிரும். ராத்திரியிலே அப்டியே பழையாத்தங்கரை ஓரமா போயி பேய்ப்பூசனிக்காய பறிச்சிட்டு வருவார். அது நஞ்சு, சிலதிலே நஞ்சு கூடிப்போய் ஆளைக் கொன்னிரும். பசுவுக்கே குடுக்கமாட்டா. இவரு அதை வேகவைச்சு பிள்ளைகளுக்கு குடுப்பார். அதைவிட நஞ்சு காட்டுச்சேம்பு. அதை குடுப்பார்அதெல்லாம் பட்டினி தலைமேலே ஏறினா செய்யக்கூடியது”.

அப்பல்லாம் கன்யாகுமரி மாவட்டத்திலே முக்காவாசிக் கோயில்களை அறநிலையத்துறையோட இணைக்கல்லை. திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திலே இருந்து வந்த கோயில் எல்லாம் ஒரு தனி நிர்வாகம். இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள்னு பேரு வச்சிருப்பா. அறநிலையத்துறையிலேயே ஒழுங்கா சம்பளம் இல்லை. இணைக்கப்படாத கோயிலிலே சம்பளம் கிடைச்சா ஆச்சு, இல்லேன்னா இல்லை. என்ன பண்ணுவா சொல்லுங்கோ? ஊரிலே எவனாம் பூசை கார்மிகம்னு கூப்பிட்டு எட்டணா, ஒருரூபா குடுத்தா உண்டு. பட்டினிதான் வாழ்க்கைன்னு வைங்கோ. என்ன சொல்லிண்டிருந்தேன்?”

நான்சங்கரன் போற்றியப்பத்தி…” என்றேன்.

அவருதான்அப்ப எவனோ வந்திருக்கான். ஆசைகாட்டியிருக்கான். கோயிலிலே நாலஞ்சு பஞ்சலோக சிலை உண்டு. உற்சவமூர்த்திகள். சாமிக்கு ஒரு எரநூறு பவுன் நகையும் உண்டு. இவரோ பட்டினி. இவருக்க அப்பா வேற படுத்த படுக்கை. அவரு ஒரு காலத்திலே பெரிய தந்த்ரி. தந்தரசமுச்சயம் கரதலபாடம். மகாராஜாவே கூப்பிட்டனுப்பி கும்பிட்ட ஆளு. எல்லாம் போச்சு. நாடு நிலைமை மாறியாச்சு. கோயில் நிலத்தை வச்சிருந்த நாயரும் வெள்ளாளனும் சேர்ந்து நம்பூதிரியும் போத்தியும்தான் அயோக்கியன்னு சொல்லி நம்பவைச்சிட்டான். மரியாதை போச்சு. வருமானம் போச்சு. பிச்சைக்கார வாழ்க்கையாச்சு, சரி எல்லாம் பகவானோட ஹிதம், என்ன சொல்றீங்க?”

ஜான் வந்து நின்றான். அப்பா அவனை யாரோ என்பதுபோல சற்றுநேரம் கூர்ந்து பார்த்தார். பிறகு என்னிடம் சொல்லத் தொடங்கினார்.

நான் சொன்ன இந்த சங்கரன் போற்றிக்கு நாலஞ்சு பிள்ளைங்க. அதிலே மூணு பொண்ணு. ஒண்ணு வளந்து கல்யாணத்துக்கு நின்னுட்டிருந்தது. ரெண்டாவது பையன், பதினொண்ணாம் கிளாஸு படிச்சிட்டிருந்தான்.அவனுக்கும் ஒரு சாஸ்தாகோயிலிலே பூசைவேலை உண்டு. படிக்காசு மட்டும்தான். கீழே மறுபடி மூணு பெண்குழந்தைகள். ஏழுஜென்ம சாபம் போலே பட்டினி சுத்தி நின்னுண்டிருக்கு. எப்டியோ கையை சாமிசெலைமேல வச்சிட்டாருமுதல்ல நகைகளை எடுத்து கொஞ்சம் கொஞ்சமா வித்து அங்கங்கே சேத்து வச்சுகிட்டாரு. பிறவு சிலைகளை எடுத்து வித்திருக்காரு. எப்டி எடுத்தாரு எப்டி வித்தாரு எல்லாம் போலீஸ் விஜாரிச்சு புடிச்சுட்டாங்க. கோர்ட்லே புட்டுப்புட்டு வைச்சிட்டாங்க. அவருக்கு பத்துவருசம் ஜெயிலு. சாமிபாவம் விட்டிருமா? பிரம்மஹத்தி மாதிரி வந்து பிடிச்சுக்கிடும்ல?”

அப்பா மீண்டும் புன்னகைத்தார். எதையோ ரகசியமாகத் தெரிந்துகொண்டு தந்திரமாகப் புன்னகைப்பதுபோல் இருந்ததுநான் அப்ப சுசீந்திரம் உட்பட எட்டு கோயிலிலே எக்ஸிகூட்டிவ் ஆபீசர். நான்தான் திருட்டை கையும் களவுமா புடிச்சவன். பாதி எவிடென்ஸ் நான் குடுத்ததுதான்னு வையுங்கோ. கோர்ட்லே பனிஷ் பண்ணிட்டாங்கதப்பு செஞ்சா தலைய குடுக்கணும், என்ன சொல்றீங்க? பெருமாள் சொத்துலே கைய வச்சா அவன் விடுவானா? கருடன் வந்து கொத்திண்டு போய்டாது?”

நான்ஆமாஎன்றேன். பரமசிவம் திகிலுடன் என்னைப்பார்த்தார்.

அப்பா தலையை ஆட்டி சிரித்துபாவம், ஜெயிலிலே நரகவேதனைப் பட்டான். கைதிகளோட அடி வாங்காத நாள் கிடையாது. அது பின்ன, அடிக்காம விடுவானுகளா? இவரு செய்ஞ்சது அப்டீல்லா? கும்பிடுற சாமியை எடுத்து வித்தா விட்டிருவானுகளா?” என்றார் அப்பாடேய் தண்ணியக்குடுடா”.

ஜான் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அப்பா அதை தலைகுனிந்து அமர்ந்து மிகமெல்ல உறிஞ்சினார்.

பரமசிவம் மிக மெல்லசார்என்றார்.

சொல்லுங்க

முத்தாலத்து சங்கரன் போத்திங்கிறவரு…”

இவருதான்…” என்றேன். “இப்ப இவரு தன்னை வேற மாதிரி நினைச்சுகிட்டிருக்கார்”.

அப்பாஏண்டா குருவி எல்லாம் உள்ள வருதே? சன்னலை பூட்டிவைன்னு சொன்னா அவன் கேக்குறதில்லை…” என்றார்.

நான்போலாமா?” என்றேன்.

சரி சார்என்றார் பரமசிவம்.

நாங்கள் கூடத்துக்கு வந்தோம். “பாத்தீங்கள்ல?” என்றேன்.

என்ன சார் இது?” என்றார் பரமசிவம். அவர் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தார்.

ஜெயிலிலேயே இப்டி ஆயிட்டார். இப்ப அவரு சங்கரன் போற்றி இல்லை, வேற யாரோஎன்றேன்எழுபத்தேழுலே உள்ள போனார். எம்பத்தெட்டிலேதான் வெளியே வந்தார். பத்துவருசம் ஜெயில்தண்டனை. ஆனா பதினொரு வருசம் உள்ள இருந்தார். விசாரணைக் கைதியா இருந்ததை எல்லாம் சேத்தா பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே. அதாவது ஒரு முழு ஆயுள்தண்டனை. நடுத்தெருவிலே ரெட்டைக்கொலை பண்ணினவன் எல்லாம் நேரு பிறந்தநாள் பெரியார் பிறந்தநாள்னு அஞ்சுவருசத்திலே வெளியே போய்ட்டே இருந்தான். இவரு பரோலுகூட இல்லாமல் உள்ளேயே இருந்தார்.”

ஏன் சார்?” என்றபோது பரமசிவம் அழுதுவிட்டார்.

எல்லாத்துக்கும் ஆளு வேணும்ல? அரசியலிலே ஆளுவேணும். சர்க்காரிலே ஆளுவேணும். எங்களுக்கு யார் இருக்கா? பிராமணன். அதிலயும் துளு போத்தி. இந்த ஊரிலே நாங்க மொத்தமா நாநூறுபேரு கூட இல்லை. டெமாக்ரஸியிலே நம்பர்தானே சக்தி? விசாரணை எப்டி நடந்தது? ஆறுமாசம், சரசரன்னு நடந்து அப்டியே தீர்ப்பு. அப்பீல் கெடையாது. நேரா ஜெயில். அப்பாவுக்காக வாதாட கோர்ட்டே நியமிச்ச இலவச வக்கீல். அவரு இருபத்தாறு வயசான ஒண்ணும் தெரியாத பையன்அவன் பாதிநாள் கோர்ட்டுக்கே வரல்லை. அவ்ளவுதான், கதை முடிஞ்சது”.

அதோட மொத்த சமூகத்திலயும் இருந்த பிராமண வெறுப்பு. ஆகா, கோயிலிலேயே பூசாரி திருடிட்டார்னு மொத்த ஊரே கொண்டாடிச்சு. பத்திரிகைகளிலே செய்திமேலே செய்தி. அப்ப நாகர்கோயிலுக்கு வந்த ஒரு பெரிய அரசியல்வாதி இந்த விஷயத்தைப் பத்தி மட்டும் மேடையிலே ஒண்ணரை மணிநேரம் நக்கலும் நையாண்டியுமா பேசியிருக்கார். மக்களுக்கு ஒரு பலி தேவைப்பட்டது. வெள்ளாட்டைத்தானே இழுத்துவந்து பலிகுடுப்பாங்க?”

இப்ப சொல்றேன், இந்த நாட்டிலே கோயில் சொத்திலே நேரடியாகவோ மறைமுகமாகவோ கையை வைக்காத குடும்பங்கள் ரொம்ப கம்மி. அவங்களுக்கு அது கொஞ்சம் உறுத்தும். அதனாலே எல்லாருமா சேந்து அப்பாவை பலிக்கல்லிலே ஏத்தினாங்க. நீதி நியாயம் எல்லாமே சமூகத்திலே பொதுவா தீர்மானமாகிறதுதான். சமூகம் இதுதான் நீதின்னு எதை முடிவுசெஞ்சாலும் அதான் நீதி, அவ்ளவுதான்

நான் அப்ப பதினொண்ணாம் கிளாஸு முடிச்சு சும்மா நின்னேன். நாங்க தங்கியிருந்த வீடு கோயிலுக்குச் சொந்தம். போலீஸு புடிச்சதுமே ஊர்க்காரங்க கல்லாலே அடிக்காத கொறையா தொரத்தி விட்டாங்க. எந்திரிக்க முடியாத தாத்தாவ தூக்கி ஒத்தக்காளை வண்டியிலே போட்டுட்டு புலியூர்க்குறிச்சி போனோம். அங்க சித்தப்பா கையெடுத்து கும்பிட்டு போயிடுங்க, என் பொழைப்ப அழிக்காதீங்கன்னார். அப்டியே திருவட்டார் போனோம். பெரியப்பா வந்து ஆற்றூரிலேயே வழிமறிச்சு ஊருக்குள்ளேயே நுழையாதீங்க, என்னையும் என் குடும்பத்தையும் நாசமாக்காதீங்கன்னார்

அப்டியே திரும்பி போறப்ப பாத்தா தாத்தா உடம்பு குளுந்து கெடக்கு. அம்மாவை கூப்பிட்டு சொன்னேன். அம்மா வண்டிக்காரன் கிட்ட சொல்லி கும்பிட்டு அழுதா. அவன் எந்திரிச்சு அவ கன்னத்திலே அறைஞ்சான். பதினாறு வயசு பையன் நான் பாத்துக்கிட்டு நின்னேன். பக்கத்திலே பதினெட்டுவயசு அக்கா. மூணு தங்கச்சிகஅப்றம் எப்டி சமாளிச்சோம்? அதை பெத்தமகன் நான் என் நாக்காலே சொல்லக்கூடாது. ஒவ்வொரு நாளும் அந்த பாழாய்ப் போனவளை நினைச்சு மனசாலே கும்பிடணும்…”

அவனே அந்த உடம்பை உண்ணாமலைக்கடை பக்கம் காட்டுக்குள் ஒரு சுடுகாட்டில் ஆளைப் பிடிச்சு பணம் கொடுத்து எரிக்கவச்சான். நான் கொள்ளிவைச்சேன். அவனே வண்டியில் எங்களை கொண்டுபோய் மார்த்தாண்டத்தில் போய்விட்டான். திருவனந்தபுரம் வரை பஸ் டிக்கெட்டுக்கு பணமும் தந்தான். திருவனந்தபுரத்திலே போய் ஒரு மடத்தோட திண்ணையில் எட்டு நாள் இருந்தோம். அப்றம் ஒரு ஓட்டலிலே வேலைக்குச் சேர்ந்தோம். அந்த ஓட்டல் ஓனருக்கு கீப்பாத்தான் எங்கம்மா இருந்தா. அப்றம் என்ன?”

ஒருவருசம் அந்த ஓட்டலிலே நான் தட்டுதூக்கினேன். பிறகுதான் போஸ்டாபீஸிலே வேலை கிடைச்சது. பதினொண்ணாம் கிளாஸ் மார்க் அடிப்படையிலே. நானே படிச்சேன். ஆடிட்டர் ஆனேன். அக்காவுக்கு இருபத்தொன்பது வயசிலே கல்யாணம் பண்ணி வைச்சேன். தங்கச்சிகளை கட்டிக்குடுத்தேன். நடுவிலே இவரை வந்து பாக்க எங்களால முடியலை. உண்மையச் சொல்லணும்னா அந்த தொடர்பையே மறந்திட்டேன். கஷ்டப்பட்டு மறந்திட்டேன். செத்தாச்சுன்னே நினைச்சுகிட்டேன்”.

இவரை பாளையங்கோட்டையிலே இருந்து வேலூருக்கு மாத்தினாங்க. பத்துவருஷம்மறுபடியும் ஒரு வருஷம். விடுதலை பண்றதுக்கு எவ்ளவு புரசீஜர்ஸ்வர்ரப்ப இப்டி வந்தார். இப்ப அவரு சங்கரன் போற்றி இல்ல. வேற யாரோ. சங்கரன் போற்றி திருடினார், அதனாலே அவரை ஜெயிலிலே போட்டாங்க, அவருக்கு அதெல்லாம் வேண்டியதுதான்னு இவரே நினைச்சுகிட்டார்”.

எங்கிட்ட வந்தபிறகு பத்துப் பதினைஞ்சு டாக்டர்கள் கிட்ட காட்டியிருக்கோம். எல்லாரும் சொல்றது ஒண்ணுதான், மனசு போட்ட அந்த வேஷத்தாலேதான் இவரு ஆளு தப்பிச்சுகிட்டார். சங்கரன் போற்றி வேற ஆளுன்னு நினைச்சார். அவரை வெறுக்கறதுக்கு பழகிக்கிட்டார். அப்ப சங்கரன் போற்றிய ஜெயிலிலே போட்டதும் அடிஅடின்னு அடிச்சதும் இன்னும் வெளியிலே சொல்லமுடியாத என்னென்னமோ செஞ்சு சீரழிச்சதும் நியாயம்தானே?”

சங்கரன் போற்றி திருடலை. திருடினது அழகிய நம்பியாபிள்ளை. அது தெரியாத யாரும் கிடையாது. அத்தனை சாட்சிகளுக்கும் தெரியும். நீதிபதிக்கு ரொம்ப நல்லா தெரியும். தர்மம் செத்துப்போச்சுன்னு சொன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடும். பிறந்த நாள் முதல் கடவுளை நம்பி வாழ்ந்தவர் அப்பா. எப்டி கடவுளை விட்டிருவார்? விட்டுட்டு எப்டி ஜெயிலிலே இருப்பார்? மனசு கொதிச்சு கொதிச்சே செத்திருப்பார். அதனாலே சங்கரன் போற்றிய அப்டியே விட்டுட்டார். சங்கரன் போற்றி திருடர், அதனாலே ஜெயிலிலே கிடக்கார். அப்ப கடவுள் இருக்காரு, அவரு நியாயத்தை நடத்துறார்னுதானே அர்த்தம்? அதைப்புடிச்சுகிட்டு வாழுறார்முப்பத்திரண்டு வருஷமா இவர் இருக்கார், சங்கரன் போற்றி இல்லை

இல்ல, இப்ப வேற என்னமோ சொன்னார்

என்ன?” என்றேன்.

இல்ல, தான்தான் சுசீந்திரம் உட்பட எட்டு கோயிலிலே எக்ஸிகூட்டிவ் ஆபீசர். நான்தான் திருட்டை கையும் களவுமா புடிச்சவர்னு சொன்னார்என்றார் பரமசிவம்.

ஆமாஎன்றேன். “அதை நான் கவனிக்கலைஎனக்கு படபடப்பாக இருந்தது.அப்ப அவரு தன்னை அழகிய நம்பியா பிள்ளைன்னு நினைச்சிட்டிருக்கார்என்றேன். அத்தனை நாள் எப்படி அதை கவனிக்காமலிருந்தேன்!

ஆமாஎன்று பரமசிவம் சொன்னார்.

நான் பெருமூச்சுவிட்டேன். “பாருங்க, இப்டி இருக்காரு. இப்ப அழகியநம்பியா பிள்ளையோட பிள்ளைய கூட்டிட்டு வந்தா அவருக்கு என்ன தெரியும்? அவரு எப்டி மன்னிப்பு குடுக்கமுடியும்?”

அவரு மன்னிப்பு குடுக்க வேண்டியதில்லைஎன்று பரமசிவம் சொன்னர்நான் கூட்டிட்டு வாறேன். அவரு குடும்பத்தோட இவுரு காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கணும்அவங்களுக்காக. எங்கியோ சாமீண்ணு ஒரு இருந்தா அதுக்காக”.

ஆனாஎன்று நான் தயங்கினேன். “அவரு ஜெயிலிலே இருந்ததெல்லாம் என்னோட மகனுக்கோ மகளுக்கோ தெரியாது. அவங்க பிள்ளைகளுக்கும் தெரியாது. இங்க அவங்க வந்தா பிரச்சினை ஆயிடும்”.

அப்ப எங்கயாவது கூட்டிட்டு வாங்கஎன்றார் பரமசிவம்.

அவரை வெளியே கூட்டிட்டுப் போகமுடியாதுஎன்று நான் சொன்னேன். “சரி, அவங்க அடுத்தவாரம் ஒரு கல்யாணத்துக்கு மட்டாஞ்சேரிக்கு போவாங்க. வீட்டிலே நானும் அப்பாவும் மட்டும்தான் இருப்போம். அப்ப நான் ஃபோன் பண்றேன். அப்ப வந்துட்டு போகச்சொல்லுங்க”.

சரி”.

ஆனா ஜோசியன் சொன்னான் பூசாரி சொன்னான்னு பூசை, சடங்கு, பரிகாரம் ஒண்ணும் செய்யமுடியாது. வந்து பாக்கணுமானா பாக்கலாம். ஒரு அரைமணி நேரம்அவராலே ஒண்ணும் புரிஞ்சுகிட முடியாதுஎன்றேன்அவங்க திருப்திக்காக வேணும்னா பாத்துட்டு போகலாம்”.

சரிஎன்று பரமசிவம் எழுந்து கும்பிட்டார்ரொம்ப உபகாரம்நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்லுறேன்”.

அவர் போன பின்னர்தான் நான் அப்பா இருக்கும் நிலையை முழுக்க உணர்ந்தேன். அவர் தன்னை அழகியநம்பியா பிள்ளையாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால் அது சங்கரன் போற்றியிடமிருந்து விலகிக்கொள்வதற்காக மட்டுமா? அழகியநம்பியாபிள்ளையாக அவர் ஏன் மாறவேண்டும்? அழகிய நம்பியாபிள்ளைதான் திருடர் என அவருக்கு நன்றாகவே தெரியும்.

அப்படியென்றால் அவர் அழகியநம்பியாபிள்ளை வெற்றிபெற்றவர் என நினைக்கிறார். சங்கரன் போற்றி வீழ்த்தப்பட்டவர். தோற்றவரிலிருந்து தாவி வென்றவர் மேல் படிந்துவிட்டிருக்கிறார். அவர் சங்கரன் போற்றியின் துயரை கொண்டாடுவது அழகியநம்பியா பிள்ளையாக நின்றுதான். அத்திருட்டை வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

எனக்கு அது அளித்த ஒவ்வாமை நாள் தோறும் பெருகியது. அழுகிய மலினம் எதையோ தவறாக விழுங்கிவிட்டதைப் போல குமட்டிக் குமட்டி வந்தது. அப்பா தன்னை கடவுளை நோக்கி நகர்த்திக் கொண்டார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவர் தன்னை திருடனாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் நான் சாதாரணமாக பேசுவதில்லை. அதன்பின் அடிக்கடி அவர் அருகே சென்று அமர்ந்து பேச்சுக் கொடுத்தேன். “நீங்க சங்கரன் போற்றிய ஜெயிலிலே பாத்திருக்கீங்களா அப்பா?” என்றேன்.

பின்ன? நெறைய வாட்டி என்றார். என்னைய பாத்ததும் அழுவார். தப்புசெஞ்சு போட்டேன் பிள்ளைவாள்னு சொல்வார். சரி, செஞ்ச தப்புக்கு தண்டனை வந்தாச்சுஎல்லாம் சரியாயிடும்னு சொல்வேன். ஜெயிலிலே ரொம்ப கஷ்டம்தான். இவர் வேற வெள்ளையா பூஞ்சையா இருப்பாரா, அவுசாரிப் பொழைப்புதான்ஹெஹெஹேஹெ

அப்பா அழகியநம்பியா பிள்ளைதானே திருடினவரு?” என்றேன்.

ஆரு?” என்றார்.

நீங்க?”

அப்பாவின் கண்கள் சுருங்கின. வாய் சுருக்குப்பைபோல குவிந்ததுஎந்தத் தேவ்டியா மகன் சொன்னான்?” என்றார்.

இல்ல, அப்டி கேள்விப்பட்டேன்என்றேன்.

அவன் சொன்னானா? சங்கரன் போற்றியா?”

இல்ல, நான் வேறமாதிரி…”.

என்ன வேறமாதிரி? அவன் தான் சொல்லிண்டிருந்தான். ஏன்னா அவன் திருடன். எந்த திருடன் திருட்ட ஒப்புத்துட்டிருக்கான்? அவன் யோக்கியம்பான். அப்ப அயோக்கியன் யாரு? இன்னோர்த்தன். இவனுக்கு பிடிக்காதவன். சங்கரன் போற்றியை மாட்டிவிட்டவன் நான். அவனுக்கு எம்மேலே எவ்ளவு வெறுப்பு இருக்கும்சொல்லாம இருப்பானா? அயோக்கியப்பய”.

நான் பெருமூச்சுடன் எழுந்துகொண்டேன். உண்மையிலேயே பதற்றமாக இருந்தது. அப்பாவைச் சந்திக்க அவர்களை வரச்சொல்லலாமா? அந்தச் சந்திப்பு அவரில் எந்த விளைவை உருவாக்கும்? என் நண்பரும், அவ்வப்போது அப்பாவை கவனித்துக் கொள்பவருமான டாக்டர் பாலகிருஷ்ணன் நாயரை நேரில் போய் சந்தித்தேன். அனைத்தையும் சொன்னேன்

சிக்கல்தான், எனக்கும் புரியவில்லை. அவர்களிடம் அவர் எப்படி நின்று பேசுவார்? அழகியநம்பியா பிள்ளையாக நின்று அவர்களிடம் பேச எப்படி முடியும்? மகனிடம் பேசுவதுபோல பேசுவாரா? அல்லது மீண்டும் சங்கரன் போற்றியாக மாறி நின்று அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாரா? சங்கரன் போற்றி மீண்டும் அவரில் தோன்றுவதென்றால்அதுவும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகுஅந்த மாறுதலைச் செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்கு இன்றைய சூழலில் மனஆற்றல் உண்டா?” என்று பாலகிருஷ்ணன் சொன்னார்.

அவருக்கு ஏதாவது ஆகிவிடுமா?” என்றேன்.

நூறுவயது ஆகப்போகிறது அவருக்கு. முதியவர்களின் உடல் மிகமிக பூஞ்சையானது. உயிர் அதில் கொஞ்சமாக எஞ்சியிருக்கிறது. மனம் என்பது உடலின் ஒரு வெளிப்பாடுதான். மிகப்பெரிய கொந்தளிப்பை அடைந்தால் உடல் தாங்காமல் போய்விடலாம்”.

அப்படியென்றால் அவர்களிடம் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்”.

அதுதான் நல்லதுஆனால்என்று பாலகிருஷ்ணன் தயங்கினார். “ஆனால் இது ஒரு ஆன்மீக விடுதலையாக இருக்கலாம். அவருடைய ஆத்மா அடைபட்டுக் கிடக்கும் இருண்ட சிறையிலிருந்து வெளிவந்து விடுதலை அடையலாம். இத்தனை நாட்கள் அவர் வாழ்ந்ததே கூட இந்த தருணத்திற்காகத்தான் என்று இருக்கலாம். நமக்கு அதை மறுக்க உரிமை உண்டா?”

நான் என்னதான் சொல்கிறீர்கள்?” என்று எரிச்சலுடன் கேட்டேன்.

அவர் அவர்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்று உளவியலாளனாக நான் சொல்வேன். சந்தித்தாக வேண்டும் என்று ஒரு மனிதனாக நான் சொல்வேன். எனக்கே புரியவில்லை

நான் உங்களிடம் வழிகாட்டல்தேடி வந்தேன்என்றேன்.

பாலகிருஷ்ணன் சட்டென்றுசந்திக்கட்டும், அதுதான் தோன்றுகிறது. இதுவரை இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது விதி என்றால் அதுவும் நடக்கட்டும். என்ன ஆகப்போகிறது? பெரியவர் இறந்துவிடக்கூடும். அதனாலென்ன? நூறு வயதாகப் போகிறது. சாவதற்குமுன் அவர் நிலைமீளக்கூடும் என்றால் அது நல்லதுதானே?” என்றார்.

யாராவது ஜோசியரிடம் கேட்கலாமா?” என்றேன்.

ஆம், அதைத்தான் நானும் நினைத்தேன்என்றார். “ஜோசியர்கள் உறுதியாகச் சிலவற்றைச் சொல்லமுடியும். ஏனென்றால் அவர்கள் எதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அவர்கள் விதியைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. உளவியலாளர்களான நாங்கள்தான் எங்கள் சொற்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்”.

நான் மேலமணக்காடு அச்சுதன் நம்பூதிரியிடம் பலமுறை போயிருக்கிறேன். அவரிடம் கேட்டாலென்ன?”

அப்பாவைப்பற்றி அவருக்கு தெரியுமா?”

இல்லை, சொன்னதில்லை”.

நம்பிக்கை இருந்தால் போங்கள்”.

நீங்களும் வாருங்கள்என்றேன்.

நானா!” என்று சிரித்தார்.

வாருங்கள்என்று சொன்னேன். “நீங்கள் ஜோசியம் பார்க்காதவராக இருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு மலையாளி பூமி மேல் இல்லை”.

அவர் சிரித்துவருகிறேன்என்றார்.

நாங்கள் அன்றே நேரம் பதிவுசெய்து கொண்டு மேலமணக்காடு அச்சுதன் நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். பழைய வீடு, அவரும் கிழவர். நூறாண்டுகளுக்கு முந்தைய ஓர் உலகில் நுழைந்துவிட்டதாக உணர்ந்தேன். முன்பு ஒருமுறை அங்கே வந்திருந்தேன், என் மகன் ராகவனின் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க. அன்றும் அதே உணர்வு ஏற்பட்டது.

அச்சுதன் நம்பூதிரியிடம் நான் எல்லாவற்றையும் சொன்னேன். தாமரை மணைமேல் பத்மாசனத்தில் அமர்ந்து, கண்கள் தாழ்ந்திருக்க, வலக்கைச் சுட்டுவிரலால் மண்ணை தொட்டபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் நிமிர்ந்து என்னைப் பார்த்துஇதில் ஜோசியம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை ,அவர் அவர்களைச் சந்தித்தாகவேண்டும்என்றார்.

ஆனால்…” என்றேன்.

என்ன ஆகும் என்று நாம் சொல்லமுடியாது. என்ன ஆனாலும் அது நல்லது, அவர் இறந்தால்தான் என்ன?” என்று அச்சுதன் நம்பூதிரி சொன்னார். “அவருக்குள் ஆழத்தில் சங்கரன் போற்றியின் ஆத்மா சிறைப்பட்டு கிடக்கிறது, அதை திறந்துவிடுங்கள். அது என்ன ஆகிறதோ ஆகட்டும்.”

நாங்கள் கும்பிட்டுவிட்டு திரும்பும்போது நான் தெளிவடைந்திருந்தேன். பாலகிருஷ்ணன் சிரித்தபடிஇதற்குத்தான் ஜோசியர்கள் வேண்டும் என்பது. நாங்கள் டாக்டர்கள் முடிவெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறோம். ஜோசியர்கள் முடிவை அவர்களே எடுத்து உங்களுக்குத் தருகிறார்கள்என்றார்.

நீங்களும் வாருங்கள், அவர்கள் வரும்போது நீங்களும் இருங்கள்என்று சொன்னேன்.

பாலகிருஷ்ணன் தயங்கிநான் வந்தால் நன்றாக இருக்குமா?”என்றார்அவர்கள் ஒரு அந்தரங்கமான சந்திப்பை உத்தேசித்திருந்தால்…”

அதற்கு நமக்கு உரிமை இருக்கிறது, நீங்கள் அப்பாவின் டாக்டர்என்றேன்.

ஆமாம், அப்படி சொல்லலாம். நான் வருகிறேன்என்றார்.

நான் அதன்பின் அதிகம் பதற்றம் அடையவில்லை. இயல்பான நிலையை அடைந்து என் வழக்கமான வாழ்க்கைச் சுழலுக்குள் அமைந்தேன். எதிர்பார்ப்பு மட்டும் இருந்துகொண்டிருந்தது.

அன்று என் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றார்கள். டாக்டர் பாலகிருஷ்ணன் அவருடைய காரில் வந்து சேர்ந்தார். நாங்கள் கூடத்தில் காத்திருந்தோம். அப்பாவுடன் ஜான் இருந்தான்.

பாலகிருஷ்ணன்நான் சில அடிப்படை மாத்திரைகள் கொண்டுவந்திருக்கிறேன். அவர் கொந்தளிப்பாக இருந்தால் நாம் உடனே தூங்கவைத்துவிடலாம்பயப்படவேண்டியதில்லைஎன்றார்.

பார்போம்என்று நான் சொன்னேன்.

கைகளை மார்பில் கட்டி கண்மூடி அமர்ந்திருந்தபோது நான் அம்மாவை நினைத்துக் கொண்டிருந்தேன். திருவல்லாவில் போஸ்டாபீஸில் வேலை கிடைத்து நான் வீடு பார்த்துக் கொண்டபோது அவளை அழைத்தேன். வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். “உன் கூடப் பிறந்தவங்களை கூட்டிட்டுப் போ, நான் வந்தா சரியா இருக்காது.

எனக்கு ஏன் அப்படி சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. கொந்தளித்தேன். “இனிமேலாவது மானமா பிழைக்கவேண்டாமா? பேசாம வாஎன்று அழைத்தேன். ஒருகட்டத்தில் மனம் உடைந்து அழுதேன். பின்னர் கொதிப்படைந்து அவளை வசைபாடினேன். “மானம்கெட்ட பொழைப்பு அப்டியே பழகிப்போச்சு என்ன?” என்றேன்.

அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். நான் என் சகோதரிகளுடன் திருவல்லாவில் குடியேறினேன். முதலில் கசப்பு குமட்டிக் குமட்டி வந்தது. ஒருவாரம் கழித்து மனம் உருகியது. போய்ப்பார்த்து காலில் விழுந்து கூட்டிவரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவள் செத்துவிட்டாள் என்ற செய்திதான் வந்தது. அவள் வழக்கமாகப் படுக்கும் ஸ்டோர் அறையில் பிணமாகக் கிடந்திருக்கிறாள். திருவனந்தபுரத்தில் ஒரு சுடுகாட்டில் எரிந்தாள்.

கார் வந்து நின்றது. பரமசிவம் இறங்கி கும்பிட்டபடி வந்தார். “சார், அவுக வந்திருக்காகவாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க

நான் வெளியே கைகூப்பியபடி சென்றேன். காரில் அவர்கள் இருவரும் இருந்தனர். சண்முகலிங்கம் என் பக்கமாக இறங்கினார். கைகூப்பியபோது அழுவதுபோல் இருந்தார். அவரால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. மறுபக்கமாக வந்த அவர் மனைவி தலைகுனிந்திருந்தார்.

வாங்கஎன்றேன்.

அவர்கள் கூடத்திற்குள் வந்து அமர்ந்தனர். பரமசிவம் பாலகிருஷ்ணனைப் பார்க்கஇவர் டாக்டர் பாலகிருஷ்ணன், என் நண்பர்என்றேன்.

டாக்டரைப் பார்த்ததனால் சண்முகலிங்கம் ஆறுதல் அடைந்ததுபோல தோன்றியது.

வீட்டிலே யாரும் இல்லைஎன்று நான் சொன்னேன். “ஒரு டீ வேணும்னா…”.

வேண்டாம், இப்பதான் சாப்பிட்டுட்டு வந்தோம்என்றார் சண்முகலிங்கம்.

பரமசிவம்வர்ர வழியிலேயே ரெண்டுபேருக்குமே கொஞ்சம் மயக்கம் மாதிரி வந்திச்சுஎன்றார்.

நான்கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறதானா…” என்றேன்.

அய்யோ வேண்டாம்என்று சண்முகலிங்கம் சொன்னார். “இப்ப நல்லாத்தான் இருக்கேன்”.

பரமசிவம் சொல்லியிருப்பார், அப்பா…”

ஆமாஎன்றார்.

அவரு இப்ப வேற ஆளா இருக்காருஎன்னால் முழுமையாகச் சொல்லமுடியவில்லை.

ஆமாஎன்றார் சண்முகலிங்கம்அழகியநம்பியாபிள்ளையா அவரோட மனசு இருக்குன்னு பரமசிவம் சொன்னாருஅவர் முகம் இழுபட்டு உதடுகள் கோணலாயின. “சாமி சுத்தமானவரு. மனசாலேகூட அந்த பாவியா தன்னை நினைச்சுக்கக் கூடாது. முதல்ல வரணுமான்னுதான் நினைச்சேன். பிறகு தோணிச்சு எனக்கும் என் வம்சத்துக்கும் மன்னிப்பு கேட்டுகிடுறது இருக்கட்டும். முதல்ல அந்த பஞ்சமாபாவியோட நெனைப்பிலே இருந்து சாமிய வெளியே கொண்டுவரணும்னுட்டுஅது எங்க கடமை. நான் செஞ்சாகணும்நான் சொன்னா அவருக்கு அது புரியும்”.

ஜாக்ரதையாகச் சொல்லணும்என்றார் பாலகிருஷ்ணன்அவருக்கு வயசு நூறை நெருங்கிட்டிருக்கு. பெரிய இமோஷனல் டிராமாவையெல்லாம் தாங்கிக்கிட மாட்டார்”.

எங்களாலே முடிஞ்சவரைக்கும்என்றார். “அவரு காலிலே அப்டியே விழுந்துடணும்அதுக்குத்தான் வந்தோம். பிறகு செந்திலாண்டவனோட விருப்பம்”.

நான் எழுந்துகொண்டுவாங்கஎன்றேன்.

அவர் நடுங்கத் தொடங்கினார். கைகளை மார்பின்மேல் கோத்துக்கொண்டார்.

வாங்கஎன்றேன்.

டாக்டரும் வரட்டுமே”.

அவரும் வருவார்”.

பரமசிவம் வாரும்வே”.

வாரேன்யா”.

ஏட்டி…”.

வாரேன்என்றாள் அந்த அம்மாள்.

அவர் மிகமிக மெல்ல நகர்ந்தார். அவ்வப்போது நின்றார். மூச்சுவாங்கினார். “முருகா! செந்திலாண்டவா!” என்று முனகிக்கொண்டார்.

அறைக்குள் அப்பா வெள்ளை ஆடை அணிந்து கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. உள்ளங்கைகளை தொடைக்கு அடியில் வைத்து அழுத்தி பிடித்திருந்தார். முழங்கைகள் அசைந்தன. எங்களைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தார். என்னை பார்த்துஏண்டா, ரூம்புக்குள்ளே குருவி வந்துண்டே இருக்கே. சன்னலை மூடுடான்னா கேக்கமாட்டேங்குறான்என்றார்.

அப்பா இவாள்லாம் உங்களைப் பாக்க வந்திருக்கா”.

அப்பா முகம் மலர்ந்துவாங்கோஎன்றார். “என்ன விஷயம்? கோயில் விஷயமானா நீங்க எல்லாத்தையும் முதல்லே ராமுகிட்டே பேசிடுங்கோரசீது போடாம இப்பல்லாம் ஒண்ணுமே செய்யக்கூடாது

அப்பா, இவா கேஸ் விஷயமா பேசவந்திருக்கா. பழைய தெஃப்ட் கேஸு”.

அப்பா புன்னகையுடன் தலையை ஆட்டி, “ஆமா, அது அந்தக்காலத்திலே பிரமாதமான கேஸ்பத்திரிகையிலே ஏகப்பட்ட நியூஸ் போட்டுண்டிருந்தா. இப்பல்லாம் மறந்துட்டா. இங்க நீலமாணிக்கபுரம் கோயிலிலே நடந்த பெரிய திருட்டு…”

அப்பா இவா அழகியநம்பியா பிள்ளையோட மகன்”.

ஆரு?”என்று அப்பா கண்களைச் சுருக்கியபடிக் கேட்டார்.

சண்முகலிங்கம் சட்டென்று பாய்ந்து அப்பாவின் காலடியில் குப்புற விழுந்தார். அப்பாவின் கால்களை பிடித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டார். “சாமி, எங்களை மன்னிக்கணும். சாமி என்னையும் என் குடும்பத்தையும் மன்னிச்சு ஆசீர்வாதம் பண்ணணும். கோயில்சொத்தை திருடி உங்களை ஜெயிலுக்கு அனுப்பின மாபாவி அழகியநம்பியா பிள்ளைக்க மகன் நான். எங்க குடும்பமே நாசமாப்போச்சு சாமிசில்லுச்சில்லா அழிஞ்சே போச்சு சாமிசாமி ஆசீர்வாதம் பண்ணணும்என் பிள்ளைங்களுக்கு ஒரு தோஷமும் வந்திரப்பிடாது”.

அந்தக்குரல் என் நெஞ்சை அழுத்திப் பிசைவதுபோல் ஒலிக்க நான் திரும்பிக் கொண்டேன். கன்னங்களில் கண்ணீரை உணர்ந்து துடைத்துக் கொண்டேன்.

அந்த அம்மாள் அப்படியே தரையில் அமர்ந்தாள். பக்கவாட்டில் அப்படியே சரிந்து விழுந்து முகத்தை தரையில் பதித்துக் கொண்டாள். அவள் உடல் வலிப்பு போல அதிர்ந்து கொண்டிருந்தது.

அப்பாவின் முகம் சாதாரணமாகவே இருந்தது. தொடைக்கு அடியில் இருந்து நடுங்கும் கையை எடுத்து சண்முகலிங்கம் தலைமேல் வைத்தார். “சரி விடுடாரெண்டுபேருமே சின்னப்பசங்க. நமக்கு எல்லாருமே ஒண்ணுதான்என்றார்.

சாமி ஆசீர்வாதம் பண்ணுங்க சாமீஎன்றார் சண்முகலிங்கம் பிச்சை எடுப்பவர் போல கையேந்திஆசீர்வாதம் குடுங்க சாமி!” என்றார்.

புள்ளைகுட்டியோட அமோகமா இருடாபதினெட்டு தலைமுறைக்கு சிரேயஸும் பிரேயஸும் அமையும்சந்தோசமா போஎன்றார் அப்பா.பொம்புளையாளுகளுக்கு ஒரு கொறையும் இல்லாம பாத்துக்கோ”.

அவர் விம்மி அழுதபடி தரையில் படுத்துவிட்டார். நான் கைகூப்பி அழுதுகொண்டிருந்த பரமசிவத்திடம்கூட்டிட்டுப்போங்கஎன்று மெல்ல சொன்னேன். ஜானிடம் அப்பாவை படுக்க வைக்கும்படி கண்காட்டினேன்.

டாக்டரும் கண்ணீருடன் அழுது கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் கூடத்திற்கு வந்தோம். பரமசிவம் அவர்கள் இருவரையும் கூட்டி சென்று வெளியே திண்ணையில் அமரவைத்தார். இருவரும் அப்போதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அழுகையின் இயல்பு மாறியிருந்தது.

பரமசிவம் என்னிடம் வந்துகெளம்புறோம் சார். இனிமே ஏதாவது பேசினா நிறைவா இருக்காது. பெரியவர் ரொம்பப் பெரிய ஆசீர்வாதத்தைக் குடுத்துட்டார்இதுக்குமேலே ஒரு வார்த்தை என்ன?” என்றார்.

சரி, பாப்போம்என்று எழுந்து கைகூப்பினேன்.

வாறேன் டாக்டர்என்று சொல்லி கைகூப்பி பரமசிவம் வெளியே சென்றார்.

மீண்டும் அமர்ந்து கொண்டோம். நான் எல்லா ஆற்றலும் அகன்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். கைகால்கள் தளர்ந்தன. இமைகள் சரிந்தன. பெருமூச்சுடன் மேலும் மேலும் ஓய்ந்தபடியே சென்றேன்.

பாலகிருஷ்ணன் என்னிடம் தயங்கியகுரலில்இல்லை, ஒரு சின்ன டவுட்என்றார்.

என்ன?” என்றேன்.

இப்ப உங்க அப்பா வாயிலே வந்து பேசினது யாரு?”

நான் திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். டாக்டரை வெறித்து பார்த்தேன். மெல்ல நடந்து அப்பாவின் அறைக்குள் போய் பார்த்தேன். அப்பாவை ஜான் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டான். அவர் மார்பின்மேல் கையை கோத்து வைத்து வாய் திறந்திருக்க தூங்கிக்கொண்டிருந்தார்.

***

முந்தைய கட்டுரைஐந்து நெருப்பு,கரவு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54