கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை]

கைமுக்கு சடங்கை குறித்து எனக்கு தெரிந்தவை :

அ) திருமணமான நம்பூதிரி பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி ஆணுக்கு தான் கைமுக்கு .ஸ்மார்த்த விசாரணையில் தன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் நம்பூதிரி கைமுக்குக்கு முன் வர வேண்டும் .

ஆ) ஆணோ பெண்ணோ இதர வர்ணத்தார் எனில் கை முக்கு இல்லை

இ) கைமுக்கு நடத்த அரசர் உத்தரவு வேண்டும்

ஈ) சுசீந்திரம் கோவில் யோகக்காரர்கள் பொறுப்பு

உ) சடங்கு நடப்பதற்கு இரண்டு / மூன்று நாட்களுக்கு முன்னரே சம்பந்தபட்ட நம்பூதிரி வந்து பஜனம் அதாவது விரதம் இருக்க வேண்டும்

ஊ ) நம்பூதிரி ஏதாவது கண் கட்டு செய்யாமல் யோகக்காரர்கள் கவனிக்க வேண்டும்

எ ) கைமுக்கு காண மக்கள் திரள் திரளாக வருவார்கள் . ஆகையால் மோசடி செய்வது சிறிது கடினம் .

ஏ) கொதிக்கும் நெய்யில் இடப்படுவது ஸ்வர்ண ரிஷபம் .ஹனுமார் அல்ல .

கைமுக்கு – மாணவர்கள் மனநிலை குறித்து

ஆம் . அடுத்தவர்கள் துயரை கண்டு வருந்துவது என்பது அரிதாகத் தான் இருக்கிறது . பெரும்பாலும் குடி மட்டுமே நட்பை உருவாக்குகிறது .மிகவும் ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர் தவிக்கிறார்கள் .நான் எப்போதும் இவர்களுக்கு சொல்லும் விஷயம் இது தான் .ஆம் , என்னிடம் இரண்டு செட் உடைகள் தான் உண்டு என்று அடித்து சொல்லுங்கள் . கஷ்டபட்டு படித்தேன் .இனியும் கஷ்டபட்டுதான் என் குடும்பத்தை காப்பாற்ற போகிறேன் என்று உரத்து சொல்லுங்கள் .இந்த ப்ரகடனம் தான் உங்களை காக்கும்

அனீஷ் கிருஷ்ணன்நாயர்

***

வணக்கம் ஜெ,

நான் உங்கள் தொடர் வாசகன், மூன்று ஆண்டுகளாக. சமீபத்திய உங்கள் தொடர் சிறுகதைகள் மகிழ்ச்சி திகைப்பு எனத் திணறடிக்கின்றன. இன்னுமொருவர் முன்னுமில்லை இனியுமில்லை என்று சத்தியம் செய்கின்றன.

கைமுக்கு கதையில் மகேஷ் ஔசேயிடம் பேசும் பின்னணி சூழ்நிலை விவரணைகள் அவன் கல்லூரி பயின்ற 1997 காலத்தில் இருந்தேயிராத சமூக வலையமைப்பில் போலி இடதுசாரி பதிவுகள் முதற்கொண்டு சூழ்நிலையின் சட்டகத்திற்கு மிக அப்பால், இன்னும் கறாராக சொன்னால் ஆசிரியரின் நேர்கூற்றாக ஒலிப்பது போல தோன்றியது. வாசகன் பிரக்ஞையை கதைச் சூழலை விட்டு பிறிதொரு விவாத சூழலுக்கு திசைதிருப்பி மீண்டும் கதைக்குள் வரும்போது செயற்கையாக ஒன்றிக்கொள்ள நேரிட்டது. வழமையான உங்கள் இந்த வரிசை கதையொன்று தந்திருக்கக்கூடிய முழு ஒன்றிப்பு கிடைக்கவில்லை.

இது வாசிப்பில் என் தவறாக இருக்கலாம்.

மிக்க அன்புடன்,

ராகசுதன்

யாழ்ப்பாணம்

***

அன்புள்ள ஜெ

கைமுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுச் சுழல். இம்முறை சமூகவரலாற்று அடுக்குகள் இரண்டு. ஒன்று சிவராஜ பிள்ளையின் இளமைப்பருவம், அவருடைய போராட்டம். இன்னொன்று அவர் மகன் மகேஷின் இளமைப்பருவம், அவனுடைய போராட்டம். இரண்டு வாழ்க்கை அடுக்குகளும் ஒன்றுக்குமேல் ஒன்றாக படிகின்றன

இரண்டு வாழ்க்கைக் காலகட்டங்கள். மகேஷை அதீதமான அறிவும் வாசிப்புத்திறனும் கொண்டவனாகவும் சுந்தர ராமசாமியை அறிந்தவனாகவும் காட்டியிருப்பது முக்கியமான விஷயம். அவனுடைய வீழ்ச்சி என்பது ஏழை என்பதனால் மட்டும் அல்ல, அவன் இலக்கிய நுண்ணுணர்வு கொண்டவன் படிப்பவன் என்பதனாலும்தான். அவனால் அந்தக்கூட்டத்தில் சேர்ந்து கொள்ளமுடியாது

மகேஷ் இலக்கிய வாசகன் என்பதனால் மிகமிக நுட்பமாக அவனுடைய சூழலை ஆராய்ந்து சொல்கிறான். சிவராஜபிள்ளை பொதுவான ஒரு சித்திரத்தைச் சொல்கிறார். சாஸ்தாவை உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்

மையப்படிமம் அந்த கைமுக்குதான். கைமுக்கு என்பது ஒரு கொந்தளிப்பான வாழ்க்கைச் சந்தர்ப்பம். சிவராஜபிள்ளைக்கு மகன் மாட்டிக்கொள்ளும் இடம் கைமுக்கு. மகேஷுக்கு உண்மையில் கைமுக்கு என்பது முதல்திருட்டு. இந்தமாதிரியான கொந்தளிப்பான சூழல்களில் பொதுவாக நாம் நம்மை பொய்யாக புனைந்துகொள்கிறோம். மிகையாக நடிக்கிறோம். அதைத்தான் போலி சிலைகளை வெளியே எடுக்கிறோம் என்று ஔசேப்பச்சன் சொல்கிறான். கைமுக்கில் நாம் எடுப்பது நாமே கொண்டுவரும் சிலையை. உள்ளே கிடக்கும் உண்மையை அல்ல

உண்மை உள்ளே கொதிக்கும் நெய்க்குழம்புக்குள் தகித்துக்கொண்டேதான் இருக்கும்

ரவிச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ

கைமுக்கு வழக்கம்போல ஔசேப்பச்சனின் துடுக்குத்தனமான பார்வையில் ஒரு வரலாறு. பலவகையான முரண்பாடுகள் கொண்ட கதை. சிவராஜபிள்ளை, மகேஷ் இருவருமே இளமைப்பருவத்தை போராடி எதிர்கொள்கிறார்கள். இருவருடைய வாழ்க்கையும் இரண்டு வகையில் செல்கிறது. அதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சந்தர்ப்பச் சூழல்கள்தான்.

ஆனால் மகேஷ் அவனுடைய அப்பா மேல்கொண்ட அன்பினால்தான் திசைமாறுகிறான். கடைசிவரை அப்பாமேல் அன்புடன் இருக்கிறான். ஆகவே அப்பாவுக்கும் வேறுவழியே இல்லை.

தொண்ணூறு சதவீதம் இதேபோன்ற ஒரு குற்றவழக்கு செய்தியில் வந்தது. இரண்டு ஆண்டுகள் இருக்கும். பையன் எஞ்சீனியரிங் படித்து வேலையில் இருக்கிறான் என்று அப்பா நினைத்துக்கொண்டிருந்தார். திருமணமாகி சகோதரிகளை சென்னைக்கு அழைத்துக்கொண்டான். [அப்பாவும் கூடவே வந்து தங்கினார். அப்பாகூட நாகர்கோயில்காரர்தானோ?] பையன் வழிப்பறி கேஸில் மாட்டினான். பார்த்தால் மிகப்பெரிய திருடன். குடும்பத்திற்கே அப்போதுதான் தெரியும். அவர்கள் கதறி அழுததெல்லாம்கூட செய்தியாக வெளிவந்திருந்தது

ஜே.ஜான் பிரபாகர்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44
அடுத்த கட்டுரைமாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்