‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43

பகுதி நான்கு : அலைமீள்கை – 26

துவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி கிளம்ப இயலாது. கவச உடைகளை அணிவது, காலணிகளை போட்டுக்கொள்வது, படைக்கலன்களை எடுத்துக்கொள்வது அனைத்தையுமே ஒருவகையான அலுவல் நடவடிக்கையாக அவர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதற்கான ஆணைகள் கூச்சல்கள் உடல்மொழிகள் அவர்களிடம் கூடிவிடும். வழக்கமான காவல்வீரர்களை மந்தணப்பயணத்திற்கு அழைத்துச்செல்லவே முடியாது.

ஏனெனில் பெரும்பாலான படைவீரர்கள் பணி என்று எதையும் ஆற்றுவதில்லை. வெறுமனே இருக்கிறோம் என்னும் உணர்வு அவர்களுக்கு எழுமெனில் அவர்கள் தங்கள் தொழிலில் சலிப்படையக்கூடும். ஆகவே படைநிரைகளை காலை எழுவதிலிருந்து ஆடைகளை அணிந்து கொள்வது, உணவருந்துவது, ஓய்வெடுப்பது, அந்தியில் துயில்வது அனைத்தையுமே ஒருவகையான படை நடவடிக்கைகளாக மாற்றி அதற்கான ஆணைகளையும் கூச்சல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாங்கள் கிளம்ப இருப்பது உடனடியாக தெரிந்துவிடும். எனக்கு அங்கு பொழுதில்லை. நான் உடனே கிளம்பியாகவேண்டும். குருதிமணத்தை படைவீரர்கள் நன்கறிவார்கள். மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். அதைவிட புரவிகள் குருதிவீச்சத்தை அறியும். அப்போதே பல குதிரைகள் பல இடங்களில் கனைப்பொலி எழுப்பத் தொடங்கிவிட்டிருந்தன.

நான் புரவியை விரைவாகச் செலுத்தி படையின் எல்லையென அமைந்த காவல்நிலையை அடைந்து அங்கு என்னை மறித்த காவலனிடம் கணையாழியைக் காட்டி “நான் விரைந்து முன் செல்கிறேன், என் படைவீரர்கள் தொடர்ந்து வருவார்கள். அவர்களை பின்னால் வரச்சொல்க!” என்றபடி புரவியை முழுவிசையில் செலுத்தி பாலை நிலத்திற்குள் சென்றேன். என் சொற்கள் விசையுடன் எழுந்தமையால் அவர்களால் மேற்கொண்டு எண்ணம் சூழ இயலவில்லை. அதற்குள் நான் புழுதி பரவி அலையடித்த பாலைநிலத்தினுள் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தேன். என்னைச் சூழ்ந்திருந்த செம்புழுதியை திரையென உணர்ந்தேன். அது எனக்கு ஆறுதலை, தனிமையை, தன்னம்பிக்கையை அளித்தது.

பாலைநிலத்திற்கு புரவி பழகிவிட்டிருந்தது. ஆகவே பலகை பதிக்கப்பட்ட பாதையினூடாகவே விரைந்தது. அங்கே வரும்போது அது மணலில் புதைந்திருந்த அந்தப் பாதையை கண்டுபிடித்திருந்தது. செல்லும்போது அதற்கு எதையும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. நான் எங்குமே நிற்கவில்லை. சீரான விசையில் சென்றுகொண்டே இருந்தேன். என் பின்னால் சூரியன் இருந்தது. என் நிழல் எனக்கு முன்னால் நீண்டு சென்றது. பின் குறுகியது. பின்னர் என் உடலைக் கடந்து பின்னால் சென்றது. நான் வெம்மைகொண்டு செம்புழுதியால் ஆனதுபோல் வானில் திகழ்ந்த சூரியனை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

முதல் தங்குமிடத்திலேயே இன்னொரு பயணக்குழுவை கண்டடைந்தேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கு சென்றுகொண்டிருந்த சிறிய வணிகக்குழு அவர்கள். அவர்களை வணிகர்குழு என்று சொல்லமுடியாது, ஒரு நாடோடிக்குழு. சில பொருட்களை வாங்கி விற்று வாழ்க்கையை ஈட்டிக்கொள்பவர்கள். ஆகவே அவர்களுக்கு பெரிய வணிகப் பொருட்கள் ஏதுமில்லை. எனவே சென்றாகவேண்டிய பதற்றமும் இல்லை. இயல்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வந்திருந்த புரவி களைத்திருந்தது. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கு நின்றிருந்த புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு சிறிது பணமும் அவர்களுக்கு அளித்தேன். அந்தப் புரவியில் ஏறி ஓய்வெடுக்காமலேயே துவாரகை நோக்கி சென்றேன்.

பிறிதொரு புரவி அவ்வாறு வழியில் கிடைக்குமெனில் துவாரகையை மறுநாள் புலரிக்குள் சென்றடைந்துவிட முடியும். நாடோடிகளின் புரவி பாலைக்கு மேலும் பழகியது. எனவே சீரான விசையில் சென்றுகொண்டிருந்தது. எப்படி ஒவ்வொன்றையும் வகுத்துக்கொள்வது என்று செல்லும் வழியிலேயே நான் எண்ணம் சூழ்ந்தேன். அந்தச் சாவுக்குரிய பொறுப்பை ருக்மி மேல் போடுவதே சிறந்த வழி. விசாரு அங்கு சென்றதற்கு துவாரகையில் சான்றுகள் ஏதுமில்லை. தாங்களேதான் அவனை அனுப்பினேன் என்று பிரத்யும்னனோ சுதேஷ்ணனோ பொதுஅவையில் கூற இயலாது. அவனே தன் முயற்சியில் ருக்மியை பார்க்கச் சென்றதாகவும் அவர்களுக்குள் பிறர் அறியாத ஏதோ உறவாடல் இருந்ததாகவும் எவரும் இயல்பாக எண்ணக்கூடும்.

அதையே நானும் சொல்லவேண்டும். அக்கொலைக்கு நான் சான்றாகவில்லை என்றே கூறவேண்டும். அவையில் விசாருவை பார்த்தேன். ருக்மிக்கும் அவனுக்கும் இடையே ஏதோ அறியா ஆடல் இருந்தது என்றும், அது மோதலாக மாறிவிட்டிருப்பதை நான் உணர்ந்தேன் என்றும், ருக்மி என்னை சிறைபிடிக்க முயன்றதால் குடிலிலிருந்து தப்பி துவாரகைக்கு விரைந்து வந்தேன் என்றும் கூறுவதே உகந்ததென்று முடிவு செய்தேன் என்றும் கூறுவதாக வகுத்துக்கொண்டேன். சொல் சொல்லாக அம்முடிவை என்னுள் எழுப்பிக்கொண்டேன்.

அம்முடிவை எடுத்த பின்னர் என் உள்ளம் நிலைகொண்டது. என் முகத்தில் புன்னகை எழுந்தது. மீண்டும் நான் தன்னம்பிக்கையை அடைந்தேன். எத்தருணத்தையும் எதிர்கொள்ள என்னால் இயலும். எங்கும் என்னை நிறம் மாற்றிக்கொள்ள இயலும். என் தந்தையின் சூழ்ச்சிகளில் முதலானது அவர் தானிருக்கும் இடத்திற்கேற்ப முழுமையாக மாறிக்கொள்பவர் என்பது. அங்கு பிறந்து அங்கு வளர்ந்தவர்களைவிட அவ்விடத்திற்கு உரியவராக அவரால் ஆகிவிட முடியும். நானும் அவ்வண்ணமே. அவருடைய பிற திறன்களை நான் ஈட்டிக்கொள்ள இயலும். நானும் நூல் நவில்வேன். படைநின்று பொருதி வெல்வேன். ஆனால் இத்தருணத்தில் நிலைகொள்ளவும் வென்றெழவும் இத்திறனே முதன்மையானது.

அந்தி இறங்கியது. கதிரவன் செம்புழுதியில் கலங்கி இருண்டு மறைந்தான். பாலைமணல்வெளியில் மட்டும் மென்வெளிச்சம். வானில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. புரவியை சற்று ஓய்வெடுக்கவிடலாம் என்று வழியில் கண்ட ஒரு சிறு சோலை அருகே சென்றேன். அது வழக்கம்போல கைவிடப்பட்ட சோலை. அதற்குள் பேணப்படாத கலங்கிய ஊற்று ஒன்று இருக்கும் என்று எண்ணினேன். புரவியிலிருந்து இறங்கி அதைப் பிடித்து அழைத்தபடி சோலையை நோக்கி சென்றேன். இரவின் நிலவொளியில் பாலைநிலம் காற்றில் அதிரும் மெல்லிய திரைச்சீலைபோல என்னைச் சுற்றி அலைவு கொண்டிருந்தது. அதை நோக்கலாகாது. விழிக்குள் வெளிச்சத்தை நிறைத்து பிறிதொன்றை நோக்க முடியாது. உள்ளிருளச் செய்துவிடும் தன்மை அதற்குண்டு.

நான் நிலத்தைப் பார்த்து குனிந்து நடந்து சோலைக்குள் சென்றேன். உள்ளே எவரோ இருப்பதை என் உணர்வு சொன்னது. வாளில் கைவைத்தபடி “எவர்?” என்று உரக்க குரல் எழுப்பினேன். அங்கே எவரோ இருப்பதைப்போல செவியறியா ஒலியை கேட்டேன். “யார்? யாரது?” அங்கிருந்து ஒரு சிரிப்பொலி மறுமொழியாக எழுந்ததும் “நன்று” என்றேன். மீண்டும் உரத்த குரலில் “எவர்?” என்றேன். மீண்டும் நகைப்பொலி கேட்டது. நான் உடைவாளில் கைவைத்து அசைவிலாமல் நின்றேன்.

சாமி மரத்தின் முட்புதருக்குள்ளிருந்து ஒருவன் தோன்றினான். உடலெங்கும் மட்கிய ஆடைகள் தொங்கின. சடைத்திரிகள் என மீசையும் தாடியும் தலைமயிரும். பாலைகளில் அலையும் பேய்களில் ஒன்றென்று என் மனம் சொல்லியது. ஆனால் புலன்கள் அவன் மனிதன் என்பதை உறுத்துக் காட்டின. நகைத்தபடி என்னருகே வந்து “ஒவ்வொன்றும் அதனிடத்திலிருந்து நழுவுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “உணவு எங்குமிருக்கிறது. உணவுக்காக எதையும் செய்யவேண்டியதில்லை. நீர் இங்கிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு விரிந்த வெளி தேவையில்லை. இதோ இந்தச் சிறுவட்டம் போதும். ஆனால் உளம் எழுந்து பறப்பதற்கு பெருவெளி தேவை. அது இங்கே சூழ்ந்திருக்கிறது. ஆனால்…” என்றான்.

திகைப்புடன் அவன் கண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை அவன் எவர் என்று எனக்கு காட்டியது. பாலையில் வழி தவறிய பித்தர்களில் ஒருவன். இந்தச் சோலையை கண்டடைந்ததனால் இங்கு வாழ்கிறான். தனிமையில் நோயுற்று இங்கு இறந்து மட்கி மண்டை ஓடென எஞ்சுவான். அதுவரை இவ்வாறு உள்ளம் அலைந்து கொண்டிருக்கும். பாலை மானுடரை பித்தராக்குவது. மனிதர்கள் எட்டு திசைகளாலும் அழுத்திக் கவ்வி நிறுத்தப்படவேண்டியவர்கள். அப்போதுதான் அவர்களுக்கு வடிவம் அமைகிறது. உளவடிவம், உடல்வடிவம். ஒருதிசை சற்றே திறந்தால் ட அவ்வழியே அவர்கள் உள்ளம் பீறிட்டு விலகுகிறது. உடல் உடைந்து பீறிடுகிறது. எண் திசையும் நிறைந்துகிடக்கும் பாலையில் அவர்கள் சிதறிப் பரவிவிடுகிறார்கள். இந்தப் பாலையில் திறந்து வைத்த ஒரு குடம் நீர் ஆவியாகி காற்றெங்கும் நிறைந்து இன்மையென்றாகி முற்றிலும் மறைவதைப்போல.

“விலகு” என்று அவனை தள்ளிவிட்டு நான் சோலைக்குள் சென்றேன். அங்கு அந்த ஊற்று நன்றாகவே பேணப்பட்டிருந்தது. அதன் கரைகளுக்கு கற்கள் அடுக்கப்பட்டு விளிம்பு அமைக்கப்பட்டிருந்தமையால் மணல் சரிந்து உள்ளே இறங்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதிலிருந்த தண்ணீர் இறைத்து வெளியே கொட்டப்பட்டிருந்தமையால் குப்பைகளும் சருகுகளும் இன்றி நீர் கண்ணாடித் துண்டென தெளிந்து கிடந்தது. சூழ்ந்திருந்த மரங்களின் இலைநிழல்களை அலைகள் நெளியச் செய்துகொண்டிருந்தன. அருகே இருந்த கொப்பரையால் நீரள்ளி அருந்தினேன். தலையிலும் உடலிலும் நீரை விட்டுக்கொண்டேன். புரவியை நீர் குடிக்க கொண்டு சென்றேன்.

இந்தப் பாலைவனப் புரவிகள் குளம்பு தொட்டு நீரை கலங்கடிக்காமல், முகத்தை மூழ்க வைக்காமல், எந்த வகையிலும் நீரை தூய்மையிழக்கச் செய்யாமல் உதடுநுனிகளை மட்டுமே வைத்து அருந்துவதற்குப் பயின்றவை. புரவி நீரை உறிஞ்சிக் குடித்ததும் தலையை சற்றே வெளியே எடுத்து அண்ணாந்து வாயின் மயிர்களில் இருந்த நீர் சொட்டச்சொட்ட ஆழ உறிஞ்சிய பின் மீண்டும் கழுத்தை நீட்டியது. நீர் அருந்தியதுமே அதன் உடல் இளைப்பாறல் கொண்டது. பல இடங்களில் தசை விதிர்க்கத் தொடங்கியது. நிறைந்த வயிற்றுடன் செவிகளை அடித்த பின் அதன் தலையை என் தோளில் வைத்து உரசி தன் அன்பை தெரிவித்தது. நான் அதை கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தியபடி வெளியே வந்தேன்.

எனக்குப் பின்னால் வந்த பித்தன் அங்கு நின்று இடையில் கைவைத்து மிகுந்த பதற்றம் கொண்டவன்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிச்சென்றதும் என் பின்னால் வந்து “அதாவது நான் என்ன சொல்கிறேன் எனில் ஒவ்வொன்றும் நிலையழிந்துகொண்டிருக்கிறது. இடிந்துகொண்டிருக்கிறது. ஏன் இடிகிறது என்றால் அவை இடிவதற்காகவே அவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதனால்தான்” என்றான். கைதூக்கி “நோக்குக! மனிதர்கள் கட்டும் ஒவ்வொன்றும் இடிகின்றன. ஒன்றை புதிதாக கட்டுபவனிடம் சென்று கேட்டுப்பாருங்கள், அது எவ்வாறு இடியுமென்று. அவனுக்கு அது தெரிந்திருக்கும். மனிதன் படைத்த ஒரு கட்டடம் எவ்வாறு இடியுமென்பதை அதை பார்க்கும் எவரும் சொல்லிவிடமுடியும். ஒரு மரத்தை அவ்வாறு சொல்ல முடியாது” என்றான்.

“இது ஆழமானது. இதை நான் சொல்லும்போதே என்னை பலர் வணிகத்திற்கு வராதே என்கிறார்கள். ஆனால் நிலவில் ஒரு வணிகன் தனியாக இருக்கக்கூடாது. ஏனெனில் நிலவு வணிகனை அவனுடைய கையிலிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடுகிறது. பொன் வெள்ளியாகிறது. வெள்ளி மண் ஓடாகிறது. நிலவில் தனித்திருக்கும் வணிகன் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் கையிலிருக்கும் அத்தனை பொருட்களும் பயனற்றவையாகிவிடுகின்றன. அவன் கண்ட சொற்கள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன. மணலும் கூலமும் கலப்பதுபோல. ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து பிரிக்கப் பிரிக்க மீண்டும் அவன் கலந்துகொண்டே ஒருக்கிறான். இந்தப் பாலைமணல் முழுக்க இங்குள்ள கூலங்கள் கலந்துவிட்டால் எவரால் பிரித்தெடுக்க முடியும்?”

அவன் என் தோளைப் பிடித்து உலுக்கி பதறும் கண்களுடன் “கூலங்கள் மட்டுமல்ல அருமணிகளும் பாலை நிலத்தில் அவ்வாறுதான் தொலைந்து போகின்றன” என்றான். அவன் சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியைத் தட்டி ஆறுதல்படுத்தியபின் நான் ஏறி அமர்ந்தேன். அதன் கடிவாளத்தை இழுத்து அதன் செவியருகே சற்றே தட்டி “செல்க!” என்றேன். அது செருக்கடித்து காலெடுத்ததும் அவன் பின்னால் ஓடிவந்து “முதற்கொலை! முதற்குருதி!” என்றான். என் உடல் விதிர்த்தது. நான் இறந்தவனைப்போல் அதன்மேல் இருந்தேன். அவன் மேலும் என் அருகே ஓடிவந்து “முதற்குருதி!” என்றான். ”முதற்குருதி… அது முதற்குருதி.”

பதறும் குரலில் “என்ன?” என்று நான் கேட்டேன். “உடன்பிறந்தான் குருதி! அது புனிதமானது! தெய்வங்கள் விரும்புவது. நமது உடன்பிறந்தான் சங்கை அறுத்து பலி கொடுத்தால் எந்த தெய்வமும் நமக்கு கனியும். தெய்வங்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். மணிமுடிகளை, பேரரசுகளை, பெரும் கருவூலங்களை, நிகரற்ற வெற்றியை, நிலைத்து வாழும் புகழை. நாம் செய்யவேண்டுவது ஒன்றே. உடன்பிறந்தானை கொல்வது” என்று அவன் சொன்னான். நான் அவனை நோக்கி நெஞ்சின் ஒலி முழக்கமிடக் கேட்டு அமர்ந்திருந்தேன். “ஆனால் ஒன்று! ஆனால் ஒன்று!” என்றான். “ஆனால் ஒன்று உண்டு. துலாவின் மறு எடை… மறுஎடை இல்லா துலா இல்லை! மறு எடை இல்லாத எதுவுமே இல்லை!”

அங்கு நின்றால் நானும் பித்தனாகிவிடுவேன் என்று எனக்குத் தோன்றியது. புரவியை தட்டினேன். ஆனால் என் உள்ளத்தை அப்புரவி அறிந்திருந்தது. அது அவனுடைய சொற்களுக்கு செவிகொடுக்க விரும்பியது. ஆகவே அது மிக மெல்ல காலெடுத்து வைத்து முன்னகர்ந்தது. அவன் ஓடி பின்னால் வந்து “ஆனால் ஒன்று, நாம் நம் உடன்பிறந்தானைக் கொன்று தெய்வங்களுக்கு பலியிட்டு அரியணையை அடையலாம். ஆனால் ஒன்று!” என்றான். எரிச்சலுடன் “செல்க!” என்றேன். அவன் அதை கேட்கவில்லை. “நாம் நம் மைந்தரை பலியிட்டு அந்தக் கொடையை நிகர்செய்ய வேண்டியிருக்கும்!” என்றான்.

என் உடலெங்கும் ஒரு துடிப்பு ஓடியது. “தெய்வங்களை இறக்கிக் கொண்டுவருவது எளிது. வந்த தெய்வத்தை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால் நாம் மீண்டும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். முதற்பலியை சிறிதாக்கும் மேலும் பெரிய பலியை. அத்தனை பேரும் அதை செய்திருக்கிறார்கள். தன் மைந்தரை, தன் கைகளாலேயே கொன்றிருக்கிறார்கள்” என்றான். சிரித்தபடி தொடர்ந்தான் “அல்லது நம் மைந்தர் நம்மை பலிகொடுக்க வேண்டும். பலி பலியால் ஈடு செய்யப்படுகிறது. ஆகவே…”

நான் குதிமுள்ளை ஓங்கி புரவியின் விலாவில் அடித்தேன். செல்க என்று கூவினேன் அது கனைத்தபடி கால் தூக்கி சற்றே சுழன்று முழு விசையில் பாலைவனம் நோக்கி வால் சுழற்றி புழுதி கிளப்பி பாய்ந்தது. நிலவில் புழுதி பின்னால் செல்வதை அப்பித்தனாக அங்கு நின்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

நான் துவாரகையை அடைந்து நேராக கணிகரை பார்க்கத்தான் சென்றேன். துவாரகைக்குள் நான் நுழைவதை பிறர் அறியாமல் இருப்பது நன்று என்று எனக்குத் தோன்றியது. ஆகவே முடிந்தவரை புரவியைச் செலுத்தி புலரியிலேயே தோரணவாயிலை கடந்தேன். அங்கு காவல்மாடத்தில் களைத்த புரவியை விட்டுவிட்டு புதிய புரவியை பெற்றுக்கொண்டு முழு விசையில் அதை ஓட்டி துவாரகையின் தெருக்களினூடாக விரைந்து அரண்மனையை அடைந்து கணிகரின் சிறுகுடிலை நோக்கி சென்றேன்.

கணிகர் அவ்வேளையில் விழித்திருப்பார் என்று எனக்கு தெரிந்திருந்தது. அவர் மிகக் குறைவாகவே துயில்பவர். அதிலும் முன்னிரவில் ஓரிரு நாழிகைப்பொழுது. எஞ்சிய பொழுதெல்லாம் விழித்திருக்கிறார். பெரும்பாலும் விண்மீன்களைப் பார்த்தபடி இருட்டில் தனித்திருக்கிறார். அவர் விண்மீன்களை எண்ணி கணக்கிடுபவர் என்று ஏவலர்கள் ஏளனமாக சொன்னார்கள்.

நான் அவர் குடில் வாயிலில் சென்று நின்று “அந்தணரே, நான் பிரதிபானு” என்றேன். கணிகர் மெல்லிய குரலில் “வருக!” என்றார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். என் கண்களை ஒருகணம் பார்த்துவிட்டு “கூறுக!” என்றார். நான் நிகழ்ந்ததை கூறினேன். பதறும் சொற்களுடன். சொல்லச்சொல்லத்தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு புரிந்தது. அதுவரை அதை நிகழ்த்துகையில் நிகழ்காலத்திலும் அதன் விளைவுகளை எண்ணுகையில் எதிர்காலத்திலுமாக பிளந்து நின்றிருந்தேன். ஆகவே அதனை முழுமையாக உணராமலிருந்தேன். அப்போது முழுமையாக அக்கணத்தில் குவிந்தேன். அதை முழுதுற உணர்ந்தேன்.

“ஒவ்வாப் பிழை செய்துவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேறு வழியில்லை” என்றேன். அவர் புன்னகைத்தார். அப்பேரழகுப் புன்னகை அத்தருணத்தில் என் மேல் நெய்யூற்றி தீ வைத்ததுபோல் உணரச்செய்தது. “என்ன?” என்றேன். அவர் “நன்று!” என்றார். “ஏன்?” என்றேன். “இவ்வண்ணமே இது நிகழும். எண்பதின்மரில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். கொல்பவர்களே இங்கு முடிகொள்ள இயலும்” என்றார். நான் அவரை அச்சமும் பதற்றமுமாக நோக்கிக்கொண்டிருந்தேன். “ஆம், அது அவ்வாறுதான்” என்றார். “முன்பும் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. எண்பதின்மரில் பெரும்பாலானவர்கள் கொல்லப்படுவார்கள்.”

“அவர்களைக் கொல்லும் துணிவு எவருக்கும் இல்லையென்பதனால்தான் இதுநாள் வரை இங்கே எதுவும் நிகழாமல் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டிருந்தீர்கள். ஏனெனில் நீங்கள் எல்லோரும் இளைய யாதவரின் மைந்தர்கள். இளைய யாதவரை வெறுப்பவர்கள்கூட உள்ளூர அவரை வழிபடுபவர்களே. அவரை பேருருவாக்கி அதனூடாக தங்களை பேருருவாக்கிக்கொண்டவர்கள் அவர்கள். அவரை வெறுப்பதனூடாக அவரை கூர்ந்து அறிபவர்கள். ஒருகணமேனும் அவராக நின்று உலகனைத்தையும் உணர்ந்தவர்கள். ஆகவே இளைய யாதவரின் எதிரிகளால் நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். ஆனால் உடன்பிறந்தாரால் ஒருவருக்கொருவர் கொல்லப்படுவீர்கள்.”

“ஏனெனில் நீங்கள் எவரும் அவரை உணர்ந்ததில்லை. தந்தையென அவரை நிறுத்திவிட்டமையாலேயே அவரென்றாக இயலாதவர்களாகிவிட்டீர்கள். பிறர் உங்களை தந்தையின் சிறு வடிவம் என்று பார்ப்பதனாலேயே அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவேண்டிய பொறுப்பை இளவயதிலேயே ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களால் இயலாதது அதுவே, நீங்கள் உங்கள் தந்தையென்றாகி அவர் கண்டதை காணவே முடியாது” என்றார் கணிகர். “ஆகவே நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்வீர்கள். இது முதற்கொலை, நன்று. இவ்வண்ணம் தொடங்கியது மிகவும் நன்று.”

“அக்கொலை முன்னரே நிகழ்ந்திருக்கவேண்டும். இத்தனை நாள் இங்கு ஒன்றும் நிகழாமல் நாகங்கள் ஒன்றையொன்று கவ்வி ஒரு திரளென்றாகி நெளிந்துகொண்டிருப்பதுபோல் நீங்கள் இருந்தமைக்கான ஏது ஒன்றே. ஒருவரை ஒருவர் கொல்ல அஞ்சினீர்கள். இதோ முதல் தடையை கடந்துவிட்டீர்கள். இனி கொலைகள் நிகழும். நிகழ்ந்தபடியே இருக்கும்” என்றார். நான் “அச்சமூட்டாதீர்கள், ஆசிரியரே” என்றேன். “அஞ்சுவதா?” என்று அவர் சிரித்தார். “அது மானுடருக்கு தெய்வங்கள் வகுத்த எல்லை. முதலில் அவ்வெல்லையை எவர் கடக்கிறார்களோ அவர்களே மானுடர் அல்லாமலாகிறார்கள். தெய்வங்களின் ஆற்றல் கொண்டவர்கள் ஆகிறார்கள்.”

“நீ கடந்துவிட்டாய். நீ ஆற்றல் கொண்டவனாகிவிட்டாய்” என்றார். அப்போது மைந்தனிடம் பேசும் கனிந்த தந்தையென அணுக்கம் கொண்டிருந்தார். “இனி உன்னால் இயலும். எஞ்சிய அனைவரையும் கொன்று துவாரகையின் மணிமுடியை சூடவேண்டும் என்றால்கூட உன்னால் இயலும். அரசன் மானுடனல்ல, ஒரு வகையான தெய்வம். மானுடனை கட்டுப்படுத்தும் குருதியும் அளியும் அறமும் அவனை கட்டுப்படுத்துவதில்லை. மானுடரை ஆட்டுவிக்கும் சாவு அவனை அச்சுறுத்துவதில்லை. மானுடருக்கு அப்பால் எழுபவனே மானுடனை ஆளமுடியும். மானுடர் தயங்கும் இடங்களில் விழியிமை சலிக்காது கடந்து செல்பவன் அரசன். மானுடர் தலைக்கு மேல் எழுந்து நின்று அவர்களை நோக்கி பேசுபவன்.”

“இங்கு மானுடரின் கால்கள் தயங்கும் இறுதி எல்லைகள் மூன்று. உற்றார் குருதி காண்டல், நம்பிக்கை வஞ்சம், எளியோரை கொல்லுதல். அம்மூன்றையுமே செய்பவர்களே இதுவரை மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். பல்லாயிரம் படைவீரர்களை அவர்கள் கொலைக்களத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் தந்தையர், கணவர், உடன்பிறந்தார், மைந்தர் என்பதை அவர்கள் அறிவார்களாயினும் கருத்தில்கொள்வதில்லை. குடிப்பேரவையில் குலமூதாதையரைத் தொட்டு ஆணையிட்டு எடுத்த வஞ்சினத்தையும் அளித்த சொல்லுறுதியையும் கைவீசி இல்லையென்றாக்கி கடந்து செல்பவனே பாரதவர்ஷத்தின்மேல் கோல்கொள்ள முடியும்.”

“தன் மைந்தனை, தன் தந்தையை கொல்லும் திறன்கொண்டவன்தான் பிறரில் அச்சத்தை நிறைக்கிறான்” என்று கணிகர் தொடர்ந்தார். “மானுடன் தெய்வமாகும் தருணம் இது. மானுடரை ஆளும் அனைத்து விசைகளையும் எல்லைகளையும் கடந்து செல்பவன் மாவீரன். நீ முதல் கட்டை அவிழ்த்துவிட்டாய். வென்று மேல்மேலே செல்லவிருக்கிறாய்.” விழிதாழ்த்தி “நான் பதறிக்கொண்டிருக்கிறேன், கணிகரே” என்றேன். “எண்ணுக, நீ சந்தித்த அந்த முடிச்சை எவராலும் அறுக்க இயலாது!” என்றார் கணிகர்.

“ஒரு யவனநாட்டுக் கதை உண்டு. வருவதுரைக்கும் தெய்வங்கள் வகுத்திருந்தன, மிகச் சிக்கலாக கட்டப்பட்ட பன்னிரு அடுக்காலான முடிச்சொன்றை அவிழ்த்தால் அவன் அரசனாகலாம் என்று. அம்முடிச்சு ஒன்றை அவிழ்த்தால் பிறிதொன்று தானாக விழும் தன்மை கொண்டது. ஆகவே அதை எவராலும் அவிழ்க்க இயலவில்லை. பெரும்தத்துவ ஞானியரே அதை அவிழ்க்க முடியும், அவர்கள் முடிசூட விரும்புவதில்லை. அதை அவிழ்ப்பதற்கான கணக்குநூல்கள் பல இயற்றப்பட்டிருந்தன. அவற்றைப் பயின்று அவற்றை அவிழ்க்க முயலும் பல இளைஞர்கள் அங்கிருந்தனர். அப்போது அங்கு ஒருவன் வந்தான். துணிவுள்ளவன், எல்லைகளை கடப்பவன், தெய்வமாகும் தகுதி கொண்டவன். தன் உடைவாளை உருவி அம்முடிச்சை துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான். அவனை தெய்வமென்று தெய்வங்கள் ஏற்றுக்கொண்டன. அவன் அரசனானான்.”

“யவனத்தில் முடிசூடும் ஒவ்வொரு அரசனைப் பற்றியும் இந்தக் கதை சொல்லப்படுகிறது” என்றார் கணிகர். “நீ முதல் முடிச்சை அறுத்துவிட்டிருக்கிறாய். நீ வெல்வாய். இன்னும் அறுக்க வேண்டிய முடிச்சுகளை காண்பாய். இதுவே வழி என்று உணர்க!” நான் அச்சொற்களால் மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். “அவன் கழுத்தை அறுக்கையில் என் கை நடுங்கவில்லை” என்று நான் சொன்னேன். “அத்தருணத்தில் அதை கடந்து செல்லவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது, அதனாலாக இருக்கலாம். ஆனால் என் கை நடுங்கவில்லை என்பது எனக்கு பேரச்சத்தையே இப்போது அளிக்கிறது. என்னை எண்ணியே நான் பதற்றம் கொள்கிறேன்” என்றேன்.

“நீ உன்னை எண்ணி பெருமிதம் கொள்ளவேண்டிய தருணம் இது. மகிழ்க! அனைத்தும் தொடங்கிவிட்டன. அனைத்தும் விசை கொண்டுவிட்டன. இந்த ஆடலில் முதல் கருவை நீக்கி முதல் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய்” என்று கணிகர் கூறினார்.

முந்தைய கட்டுரைஉலகெலாம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைமதுரம்,சூழ்திரு -கடிதங்கள்