“ஏதோ நல்ல வீட்டிலே குட்டியாக்கும், அதுக்க பேரைப்பாத்தாலே தெரியுமே? தாட்சாயணின்னு சொல்லும்பளே ஒரு இது இருக்கே” என்று சுப்பையாச் செட்டியார் சொன்னார்.
“ஆமா, அது பின்ன அந்தக்குட்டிய கண்டாலே தெரியாதா? அதுக்க முகத்தில உள்ள தேஜஸு என்ன, சிரிப்பு என்ன?” என்றார் மாணிக்கநாடார்.
“இங்க வந்து இப்பிடிச் சிக்கி சீரளியுது… ஏதுநேரத்திலே இவன் கூட இப்பிடி எறங்கி வரணும்னு தோணிச்சோ” என்று அருணாச்சலம் சொன்னார்.
”அது எப்டிவே, இந்தமாதிரி குட்டிக இவனுகள மாதிரி ஆளுககூட எறங்கி வந்திருதாளுக?”என்று சுப்பையாச் செட்டியார் கேட்டார்.
“இந்த பாட்டு பாடுதவனுக, படம் வரையுதவனுக, நாடகம் போடுதவனுக எல்லாருக்கும் இதிலே ஒரு நேக்கு உண்டு பாத்துக்க… அதிலயும் டேன்ஸ் ஆடுதவன்னா பிறவு பாக்கவேண்டாம்” என்றார் உடக்கு கருணாகரன்.
“ஆமா, அர்ச்சுனன் டேன்ஸ் ஆடுதவன்லா?” என்றார் மாணிக்க நாடார்.
“அங்க என்னமோ புகையுதுன்னு சொன்னாவளே, என்னவாக்கும்?” என்று மாணிக்க நாடார் கேட்டார்.
“என்ன புகையதுக்கு? நேரடியா நடக்குது. அவனுகளுக்கு ஒண்ணும் அதிலே ஒளிவுமறைவு இல்லை. இந்தக் குட்டிய கூட்டிட்டு வந்தவன் அந்த ஒல்லிப்பய, டேன்ஸ் செல்லப்பன். இப்ப இந்த குரூப்பிலே அடிமுறை ஆசான் எருமை நாராயணனுக்கு இவளுக்க மேலே ஒரு கண்ணு… குரூப்பை நடத்துத சதானந்தன் நாயருக்கு ரெண்டு கண்ணு… வெளங்குமா? குட்டிய அவனுக நாசமாக்கிப்போடுவானுக… வேற என்ன?” என்றார் சுப்பையாச் செட்டியார்.
உரப்பன் கணேசன் அவர்கள் பேசுவதை மாறிமாறி கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு அவர்கள் சொல்வது கொஞ்சம்போல புரிந்தது. தாட்சாயணி ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தது. அவன் மனம் படபடத்தது.
“இந்நா உரப்பன் கேட்டுக்கிட்டு நிக்குதான்… இவன் ராத்திரி பகலா அங்கிணயாக்குமே? ஏலே உரப்பா, அங்க என்னலே சண்டை?
“தெரியல்ல” என்று உரப்பன் சொன்னான்.
“அவனுக்கு என்ன தெரியும்? அவனுக்குத் தெரிஞ்சது டேன்ஸு பாட்டு, அப்டியே உக்காந்து பாப்பான். சோறு வேண்டாம். தண்ணி வேண்டாம். பாவப்பட்ட பயலாக்குமே”.
“லே, நீ குரூப்பிலே சேருதியாலே?”
உரப்பன் கணேசன் இல்லை என்று தலையசைத்தான். அவர்கள் அதன்பின் பேச்சிப்பாறை தண்ணீரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவன் அங்கிருந்து விலகி நடந்தான்.
கைதமுக்கு முச்சந்தியில் அம்புரோஸ் பெருவட்டரின் தோட்டத்தில் ‘சைக்கிள் இறங்கா சர்க்கஸ்’ போட்டிருந்தது. அந்தக்காலை வேளையில் அங்கே யாருமில்லை. சைக்கிள்காரன் மாணிக்கம் மட்டும் சைக்கிள் மேல் அமர்ந்து பூவரச மரத்தின்மேல் சாய்ந்திருந்தான். பூவரச மரத்தின்மேல் அமர்ந்த காக்காய்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன.
சைக்கிள் ஓடி ஓடி உருவான வட்டத் தடத்தின் நடுவே கமுகுத்தடி நடப்பட்டு அதன் உச்சியில் நான்கு பக்கமும் பார்த்து கோளாம்பி ரேடியோ கட்டப்பட்டிருந்தது. கமுகுத்தடியின் உச்சியில் இருந்து நான்கு பக்கமும் மணிப்பொச்சக் கயிற்றில் இழுத்து கட்டப்பட வண்ணக் காகிதத் தோரணங்களும், அந்த வட்டமுற்றத்தைச் சுற்றி நடப்பட்டிருந்த மூங்கில்களில் பொருத்தப்பட்டிருந்த குழல்விளக்குகளும் அதற்கு ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் தோற்றத்தை கொடுத்தன.
சற்று அப்பால் முக்கால் ஆள் உயரமான மூன்று கூடாரங்கள். பழைய லாரி டார்ப்பாயை இழுத்து கட்டியவை. பழைய சேலையைக்கொண்டு திரையிடப்பட்டவை. அங்கே இரண்டு சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கும் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
மாணிக்கன் உரப்பனிடம் “லே இங்க வார்” என்றான்.
“என்னண்ணா?” என்று உரப்பன் அருகே சென்றான்.
“ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வாடே. ஒரு தீப்பெட்டியும்”.
“செரிண்ணா”.
“போ”.
“அண்ணா பைசா?”
மாணிக்கன் முகம் சுளித்து “அங்கிண ஆருகிட்டயாவது வாங்குலே” என்றான்.
“செரிண்ணா” என்று உரப்பன் கூடாரத்தின் அருகே சென்றான். முதற்கூடாரத்திற்குள் ‘எருமை’ நாராயணனும் ‘ஒத்தை’ சண்முகமும் ‘குருவி’ ராமனும் ‘உருமால்’ சந்திரனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விதவிதமாக வாயைத் திறந்து ஓசையுடன் மூச்சுவிட்டார்கள். எருமையின் வாய்க்குள் கறைபடிந்த பற்களின் அடிப்பகுதி தெரிந்தது
அவன் இரண்டாம் கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்தான். அதற்கு வெளியே கோமாளி வேஷம் போடும் ‘உண்டை’ வேலாயுதன் தூங்கிக் கொண்டிருந்தான். உள்ளே ‘டேன்ஸ்’ செல்லப்பன் தூங்கினான். டேன்ஸ் செல்லப்பனை அப்போது பார்க்க மிகச் சாதாரணமாக இருந்தான். குழிந்த கண்கள், ஒடுங்கிய கன்னம்,சற்றே பற்கள் உந்திய வாய். ஆனால் முகத்தில் செந்நிற பௌடர் பூசி, வாயில் சிவப்புச் சாயம் போட்டு, சுருள்முடி டோப்பா வைத்து கறுப்புக் கண்ணாடி அணிந்து அவன் எம்ஜியாராக வரும்போது அவரைப் போலவே இருப்பான். கையை சுழற்றி எம்ஜிஆர் போலவே வாழ்த்து சொல்வான். நாடோடி மன்னன் எம்ஜிஆர் போல மூக்கில் கையை வைத்து ‘ம்ம்ம்ஹா!’ என்பான். கூட்டமே ‘வாத்யாரே! தலைவா!” என்று கூச்சலிடும்.
அவனுடன் ஒப்பிடும்போது சிவாஜியாக வரும் உருமால் சந்திரன் ஒருபடி கீழேதான். ஆனால் வசந்த மாளிகையில் வரும் “யாருக்காக!” புதிய பறவையில் வரும் “எங்கே நிம்மதி” இரண்டுபாடலிலும் எங்கோ போய்விடுவான். அப்போது டேன்ஸ் செல்லப்பன் பக்கத்திலேயே போகமுடியாது. பிற அனைவராகவும் குருவி ராமன் வந்தான். அவன் எந்த நடிகனைப் போலவும் நடிக்கவில்லை. அவன் இஷ்டத்துக்கு ஆடி நடிப்பான்.
பின்னால் வளையலோசை கேட்டது. தாட்சாயணி குளித்து ஈரத்துணியால் தலைமுடியை சுழற்றிக்கட்டிக்கொண்டு கையில் தோளில் முறுக்கிப் போட்ட ஈரத்துணிகளுடன் வந்தாள். மார்பில் பாவாடையை கட்டியிருந்தாள். கால்களில் வெள்ளிக்கொலுசுகள் தெரிந்தன.
“ஏண்டே?” என்று அவள் கேட்டாள். சிரித்தபோது கன்னத்தின் இரு பக்கங்களிலும் குழிகள் விழுந்தன. பற்கள் வெண்மையாக ஒளிவிட்டன. ஊரில் எவருக்குமே அத்தனை அழகான பற்கள் இல்லை. மூக்கின் மேலும் கன்னத்திலும் இரு சிறு பருக்கள். அவள் மாநிறம்தான், ஆனால் குளித்துவிட்டு வந்தபோது தேய்த்த பலாத்தடியின் மின்னும் மஞ்சள் நிறம் கொண்டிருந்தாள்.
“மாணிக்கன் அண்ணன் பீடி வாங்க சொன்னாரு”.
அவள் தென்னை மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்டிருந்த கொடியில் துணிகளை காயப்போட்டபடி “அதுக்கு ஏன் இங்க வந்து நிக்குதே?” என்றாள்.
“பைசா?”
“அதுக்கு இங்க எங்க பைசா? கடையிலே போயி சைக்கிள் சர்க்கஸுக்காரருக்கு பீடி வாங்கிக்குடுங்கன்னு கேளு… யாராவது வாங்கிக் குடுப்பாங்க”.
அவள் துணிகளை கைதூக்கி காயப்போட்டபோது அக்குளின் மென்மயிர் தெரிந்தது. அவன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
“கடையிலே என்னமோ பேசுதாக?” என்றான்.
“என்ன?” என்றாள்.
“இங்க சண்டை நடக்குதுன்னு…”
“என்ன சண்டை?”
“உங்களுக்காக எருமையும் ஓனரும் சண்டைபோடுதாகன்னு”.
அவள் பெருமூச்சு விட்டு “அதுக்கு என்ன? எல்லாரும்தான் சண்டை போடுதாக” என்றாள்.
“நீங்க எதுக்கு இவருகூட வந்தீக?” என்று அவன் கேட்டான்.
“என்னது?” என்று அவள் மூக்கைச் சுளித்துக் கொண்டு கேட்டாள்.
“டேன்ஸ் செல்லப்பண்ணன் கூட?”
“ஏன்?”
“இல்ல, குடும்பத்திலே பிறந்துட்டு இப்டி…” என்றான்.
“என்ன இப்டி?”
“ரிக்கார்டு டேன்ஸ் ஆடுகது…”
அவள் ஒன்றும் சொல்லாமல் கடைசி துணியையும் உதறி காயப்போட்டபின் “மூணுநேரம் சோறு கிட்டுதே” என்றாள்.
அவன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றான்.
அவள் புன்னகைத்து “பசி தெரிஞ்சா பிறகு சோறுதான் தெய்வம்… ” என்று கூடாரத்திற்குள் சென்றாள்.
உரப்பன் கடைக்குச் சென்றான். அங்கே பேசிக் கொண்டிருந்த கூட்டம் இல்லை. குமாரசாமி மாஸ்டரும் ஆசீரும் நின்றுகொண்டிருந்தனர்.
உரப்பன் “சைக்கிள் சர்க்கஸுக்காரருக்கு பீடி வேணுமாம்” என்றான்.
“வாங்கிட்டு போகவேண்டியதுதானே? ஏன் தொண்டைய கீறுதே?”
“பைசா இல்லை”.
“பைசா இல்லாம பீடி குடுக்க இங்க என்ன அவனுக்க தந்தையா கடைய வச்சிருக்கான்?”
“அண்ணாச்சி அவனுக்க தந்தை ஆருண்ணு தெரிஞ்சா அவன் எதுக்கு சர்க்கஸுக்கு போறான்?” என்றான் ஆசீர் “இந்தாலே ரெண்டு ரூபா… வாங்கிக்கொண்டுபோயி குடு. வலிச்சு சாகட்டு, பிச்சக்காரக் கூட்டம்”
“பிச்சக்காரக் கூட்டம் ஒண்ணுமில்லை. நல்ல சௌரியமாத்தான் இருக்கானுக. நேத்து ஒருத்தன் லாந்திக்கிட்டு இருந்தான். கோளி வேணுமாம். கோளி இல்லேண்ணா சோறு எறங்காதே அண்ணாச்சீங்குதான். கோளி இல்லேன்னா வெடியெறைச்சி இருந்தாலும் போருமாம்” என்றார் குமாரசாமி மாஸ்டர்.
பீடியுடன் திரும்பச் சென்ற போது உரப்பனுக்கு வருத்தமாக இருந்தது. மீண்டும் ஒருமுறை தாட்சாயணியைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது.
மாணிக்கம் சைக்கிளின் ஹேண்டில்பார் மேல் காலை வைத்து பின்சீட்டில் ஒரு பலகையை சாய்மானமாக வைத்து நன்றாக காலைநீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான். பலகை பூவசரமரத்தில் சாய்ந்திருந்தது. அந்த சைக்கிளுக்கு ஸ்டாண்ட் இல்லை. சக்கரங்களெல்லாம் மொட்டையான வட்டமாக தெரிந்தன.
அவன் பீடியை கொடுத்ததும் மாணிக்கன் அதை வாங்கியபடி “ஆருடே பைசா குடுத்தது?” என்றான்.
“ஆசீர் அண்ணன்”.
“அப்ப ஒரு பாக்கெட் சீரெட்டு கேட்டிருக்கலாமே”.
உரப்பன் ஒன்றும் சொல்லவில்லை. கூடாரத்திலிருந்து தாட்சாயணி சிவப்புச் சேலைகட்டி கூந்தலை விரித்து பின்னால் போட்டுக்கொண்டு சென்றாள். அவள் ரிங்கில் இறங்கும்போது பாண்டும் சட்டையும் போட்டுக்கொண்டு வருவாள். அவளுடைய பின்பக்கம் உருண்டு பெரிதாக தெரியும். மார்புகள் அவள் நடனமாடும்போது குலுங்கும். ஊரில் பெண்கள் சட்டை போட்டு எவருமே பார்த்ததில்லை.
“அந்தக்காலத்திலே வாழ்க்கை படத்திலே வைசெயந்திமாலா சட்டையை போட்டுக்கிட்டு வருவா!” என்று ஆமோஸ் பாட்டா சொன்னார்.
“அவ வசுந்தரா தேவிக்க மகளுல்லா” என்றார் கிருஷ்ணமூர்த்திப் பிள்ளை பாட்டா.
அப்போது அவன் அவர்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அதில் அவனால் விளங்கிக்கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருந்தது.
உரப்பன் அவளிடம் போய் ஏதாவது சொல்லலாமா என்று நினைத்தான். ஆனால் அவள் ஒரு பானையில் தண்ணீருடன் போவது தெரிந்தது. சமைக்கப் போகிறாள். ஆண்களெல்லாம் இரவு முழுக்க குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவள்தான் அத்தனை பேருக்கும் சமைக்கவேண்டும். அதன்பிறகு சாயங்காலம் முழுக்க டான்சும் ஆடவேண்டும்.
அவன் தயங்கி நின்றபின் கூடாரத்திற்கு பின்னால் சென்றான். அங்கே அடுப்பு கூட்டி அதில் தாட்சாயணி சமைத்துக் கொண்டிருந்தாள். விறகுகளை சரித்து வைத்து ஒரு காகிதத்தால் விசிறினாள்.
“என்னடே? பீடிவாங்கி குடுத்தியா?”
“ஆமா”.
அவள் தீயை வீசுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உடலில் இருந்த மினுமினுப்பு அந்த ஊரில் எந்த பெண்களிடமும் இல்லை. பெரிய வீட்டுப்பெண்களின் தோல் மென்மையாக இருக்கும், ஆனால் அவர்களின் உடல் குளுகுளுவென பதம்வராத கொழுக்கட்டை போலிருக்கும். தாட்சாயணி நன்றாக இழுத்து முறுக்கி முடையப்பட்ட பனங்குருத்தோலைப் பெட்டி போல் இருந்தாள்.
அவன் பார்ப்பதை உணர்ந்து அவள் நிமிர்ந்து “என்ன?” என்றாள்.
“கோயிலுக்கு போனீகளோ?”
“ஆமா, அருமையான ஆத்து தண்ணி. கரையிலே மகாதேவர் கோயில்… காலம்பற குளிச்சு கும்பிட்டு வந்தா எதமா இருக்கு”.
“சைக்கிள்காரரு குளிக்கமாட்டாரு இல்ல?” என்றான்.
“குளிக்கலாம், சைக்கிளிலே இருந்துகிட்டு பக்கெட்டு தண்ணிய விட்டு குளிச்சா என்ன?”
“சைக்கிளிலே பத்து நாள் எறங்காம இருக்குறது கஷ்டம்லா?”
“எல்லாமே கஷ்டம்தான்”.
“எட்டுநாள் ஆயாச்சு… இனிமே ரெண்டுநாள்”
“ஆமா, எட்டுநாள்” என்றாள்.
“இங்கேருந்து எங்க?”
“தெரியல்ல, அருமனையா களியலாண்ணு பேசிக்கிட்டாங்க” என்றாள். “ஓனருக்குத்தான் தெரியும்… இண்ணைக்கு சாயங்காலம் வந்திருவாரு”
“எங்க போனாலும் டேன்ஸ் செல்லப்பன் அண்ணனுக்க ஆட்டம் பாக்க ஆளு வருவாங்க”.
“என்னத்த ஆட்டம், அதானே எங்கயும்?”
“என்னக்கா சொல்லுதீக?”
“டேய், அவரு என்ன ஆடுதாரு? எம்ஜியாரு, வேற என்ன வேஷம் போடுவாரு?”
“எம்ஜியாராட்டு…”
“ஆமா எம்ஜியாரு… மத்தவரு சிவாஜி. குருவி எப்பமுமே குருவிதான். டேய் ஆளு அப்டியே மாறிடணும், அதாக்கும் கலை ஒருபாட்டுக்கு எம்ஜியாரு, ஒருபாட்டுக்கு சிவாஜி, ஒருபாட்டுக்கு நாகேசு… அப்டி மாறினா அது ஆட்டம்”.
“அப்டிப்பாத்தா நீங்க எல்லா பாட்டுக்கும் ஒரே மாதிரி ஆடுதீக” என்றான்.
“நான் சொல்லலியே நான் ஆட்டக்காரீண்ணு… வயித்துப்பொளைப்புக்கு குலுக்கிக் காட்டுதோம். வாய்வளிஞ்சுகிட்டு வந்து நிக்கானுக, பைசா போடுகானுக”.
அவனுக்குச் சோர்வாக இருந்தது. “நான் வாறேன்” என்று கிளம்பினான்.
உரப்பனுக்கு குரியாக்கோஸ் பண்ணையில் ரப்பர்ஷீட்டுகளை உலர்த்தி வைக்க வேண்டிய வேலை இருந்தது. அவன் வயல் வரப்பு வழியாக நடந்து பண்ணையை அடைந்தான்.
கேட்டில் நின்றிருந்த கோலப்பன் “ஏம்லே லேட்டு?” என்றான்.
“வெயிலு வரல்லேல்லா”.
“நீ எடுத்து பரத்தி போடுகதுக்குள்ள இருக்குத வெயிலும் அணைஞ்சிரும்”.
அவன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றான். முருகேசனும் டென்னிஸும் ரப்பர் பாலை நீள்சதுர தட்டுகளில் ஊற்றி வெண்ணிற அல்வா போல எடுத்து மிஷின்களில் நுழைத்துக் கொண்டிருந்தனர். குரியாக்கோஸ் பண்ணையில் மட்டும்தான் மிஷின்கள் கரெண்டில் ஓடும். மறுபக்கம் அல்வா பிதுங்கி கோடுகோடாக பதிந்து பிழியப்பட்டு வந்தது அதை தூக்கி அப்பாலிட்டனர். அமிலம் எரியும் புளிப்புநாற்றம் கொண்டிருந்தது. பிழியப்பட்ட அமிலநீர் வாடையுடன் சிமிண்ட் ஓடை வழியாக அப்பால் சென்றது
உரப்பன் ஒருநாள் காய்ந்த ஷீட்டுகள் போடப்பட்டிருந்த அறைக்குள் சென்றான். அங்கே வாசலில் சின்னக்கருப்பன் ஒரு ரப்பர் ஒட்டுகறையை போட்டு கடித்துக் கொண்டிருந்தது. பாலை எடுத்தபின் கொட்டாங்கச்சியில் எஞ்சும் ரப்பர் ஒட்டுகறைக்கு காய்ந்தால் கருவாட்டு வாடை. அதை எத்தனை முறை கடித்து ஏமாந்தாலும் மீண்டும் மீண்டும் கவ்விக்கொண்டு வந்தபடியேதான் இருக்கும்
உரப்பன் கதவைத்திறந்தான். உள்ளே உலர்ந்த மாமிசவாடை நிறைந்திருந்தது. ரோஸ்டுத்தோசை போல கருகியும் சிவந்தும் வெளுத்தும் கலவையான வண்ணத்துடன் இருந்த ரப்பர் ஷீட்டுகளை எடுத்துக்கொண்டு சென்று சிமிண்ட் முற்றத்தில் சீராக பரப்பினான். ஈரமாக இருந்த வெள்ளை ஷீட்டுகள் சொட்டி முடித்தபின் எடுத்துவந்து வெயிலில் போட்டான். பரப்பி முடித்தபோது பத்துமணி ஆகிவிட்டிருந்தது.
அப்போது காவடியாக கட்டிய தகரடின்களில் ரப்பர் பாலுடன் வெட்டுகாரர்கள் வரத் தொடங்கியிருந்தனர். அவன் அவர்களுடன் நின்று பாலை சதுரவடிவ தகர ஏனங்களில் ஊற்றி நீரில் கலக்கப்பட்ட ஆசிட் ஊற்றி உறைவதற்காக வைத்தான். வேலை முடிந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஓடையில் கைகளை கழுவிவிட்டு அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டான். அவன் தனியாக சாப்பாடு கொண்டு வருவதில்லை. அவர்களே ஆளுக்கு கொஞ்சம் சோறும் கிழங்கும் கொடுத்துவிடுவார்கள்.
வெட்டுகாரர்கள் ஒவ்வொருவராக சைக்கிளில் கிளம்பிச் சென்றனர். உரப்பன் சிறிதுநேரம் மரத்தடியில் சிமிண்ட் பெஞ்சில் படுத்து தூங்கினான். அவன் விழித்துக் கொண்டபோது வெயில் நன்றாகச் சாய்ந்திருந்தது. எழுந்து முகம் கழுவிவிட்டு ரப்பர் ஷீட்டுகளை எடுத்துக் கொண்டுசென்று உள்ளே அடுக்கினான்.
உலர்வதன் வண்ணங்களின் அடிப்படையில் தனித்தனியாக அடுக்கி முடித்துவிட்டு வந்து ஓடையில் நின்று பனையோலைத் தோண்டியால் நீரை அள்ளி தலைமேல் விட்டு குளித்தான். அவனுக்கு அங்கேயே ஒரு சிறு சாய்ப்பறை அளிக்கப்பட்டிருந்தது. அதற்குள் சென்று தகரப்பெட்டியிலிருந்து துவைத்து நீவி மடித்து வைத்த சட்டையையும் வேட்டியையும் எடுத்து கட்டிக்கொண்டான். தலைக்கு எண்ணை வைத்து சீவி நெற்றிக்குமேல் சுருட்டிவிட்டான். பவுடரை தட்டி கர்சீப்பால் தொட்டு முகத்தில் பூசி பௌடராலேயே நெற்றியில் விபூதிபோட்டு கையில் டார்ச் விளக்கை ஏற்றிக்கொண்டு கிளம்பினான்
அவன் வரம்பினூடாகச் செல்கையிலேயே ரேடியோவில் பாட்டு போட்டுவிட்டார்கள். அவன் விரைவாக நடந்து பாடகச்சேரி முக்கில் மேடேறி ஜங்ஷனை அடைந்தான். எதிரே வந்த ஏசுவடியாள் “ஏம்லே உரப்பா, அந்த செவத்த குட்டிய அந்த தடியன் தூக்கப்போனானாமே?” என்றாள்.
“ஆரு சொன்னா?” என்றான் உரப்பன்.
“நான் என்னத்த கண்டேன்… ஆளுக சொல்லுதாக” என்றாள்.
“இவ யோக்கியம்லா? அறுவாணி… ஆம்புளைகளை பிடிச்சு கவட்டைக்கெடையிலே வைக்குத தட்டுவாணி நாயி” என்றாள் கமலம்.
உரப்பன் ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றான். ரிங்கைச்சுற்றி பெருங்கூட்டம் சேர்ந்திருந்தது. தலைகளுக்கு அப்பால் குழல்விளக்குகள் எரிந்தன. ரிக்கார்டு டான்ஸ் ஆரம்பித்துவிட்டதா?
“காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டுவாங்கி போனாள் அந்த கன்னி என்ன ஆனாள்!?”
அவன் கூட்டத்தை அணுகி குந்தி அமர்ந்து கால்களின் இடைவெளி வழியாக ஆட்டத்தை பார்த்தான். டேன்ஸ் செல்லப்பன் எம்ஜியாராக கறுப்புக்கண்ணாடி போட்டு ஆடிக்கொண்டிருந்தான். அருகில் பச்சை பாண்ட் மஞ்சள் சட்டைபோட்டு இரட்டைச் சடையுடன் தாட்சாயணி ஆடினாள்.
அன்றைக்கு முன்னாடியே ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டமும் முன்னாடியே சேர்ந்துவிட்டது. அதற்குக் காரணம் ஊரே அந்த வம்பைத்தான் பேசிக்கொண்டிருந்தது. தாட்சாயணியை கவர முயலும் இருவர். ஒருவன் குண்டன் இன்னொருவன் பணம் உள்ளவன். அவள் கணவனோ ஒல்லியான உதவாக்கரை ஆள்.
அடுத்த பாட்டு “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றான்”. தாட்சாயணி எப்போதும் ஒரே போல உதட்டைச் சுழிப்பாள். மார்புகளை ஆட்டுவாள். இடையை அரைத்தபடி நடந்துசென்று சட்டென்று திரும்புவாள். முறைத்தபடி சென்று சடையை தூக்கி பின்னால் வீசுவாள். சட்டென்று சிரிப்பாள். அவளுக்கு வேறெந்த நடனமும் தெரியாது. அவள் எந்த பாட்டுக்கும் தனியாக ஆடுவதில்லை.
செல்லப்பன் எம்ஜியார் போலவே நடந்தான். துள்ளி குதித்தான். கையை சுழற்றி வீசினான். அழகாக ஸ்டெப் வைத்து ஆடினான். “ஒருகண்ணை சாய்க்கிறா” பாட்டுக்கு நாக்கைச் சுழற்றிக்கொண்டு தலையை ஸ்டைலாக ஆட்டி கண்ணடித்தான்.
உரப்பன் மிகமெல்ல நகர்ந்து கால்களின் நடுவிலூடாக உள்ளே போய் முன்னால் அமர்ந்தான். இனி அவன் நள்ளிரவுவரை அங்கிருந்து எழப்போவதில்லை.
“கட்டுக்காவல்கள் விட்டுப்போகட்டும், கன்னிப்பெண் என்னை பின்னிக்கொள்ளட்டும்! ஆ!” என்ற வரிக்கு தாட்சாயணி ஓடிவந்து செல்லப்பனை அணைத்து ஒருகாலை தூக்கி அவனை வளைத்துக்கொண்டாள். மொத்தக் கூட்டத்திலும் ஒரு விரையல் கடந்துசென்றது. ஆனால் உரப்பனின் உடலில் அனல் எரிந்து மேலெழுந்தது. அவன் தரையை பார்த்து அமர்ந்திருந்தான். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து மண்ணை குத்தி புரட்டினான்.
குருவி வந்து “இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள்” ஆடினான். அதன்பின் ‘உருமால்’ சந்திரனும் தாட்சாயணியும் சேர்ந்து “காதல் ராஜ்ஜியம் எனது, அந்த காவல் ராஜ்ஜியம் உனது” குதிரையின் குளம்படி ஓசை உள்ள பாட்டு. தாட்சாயணி ஒரு சைக்கிளில் ஏறி குதிரைமேல் அமர்ந்திருப்பதுபோல நடித்தாள். ‘உருமால்’ சந்திரன் கைவீசி சிவாஜி போலவே நடித்தான்.
அதன்பின் குருவியும் தாட்சாயணியும் நடித்த “இது மாலை நேரத்து மயக்கம்” அந்தப்பாட்டில்தான் தாட்சாயணி தன் மார்புகளை ஆட்டுவாள். அதற்காகவே அத்தனைபேரும் காத்திருந்தார்கள். அந்தப்பாடல் எட்டுநாளும் ஒருமுறையாவது ஆடப்பட்டது. அவள் ஆட்டிமுடித்து பாடல் ஓய்ந்ததும் அத்தனைபேரும் பெருமூச்சுடன் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள்.
‘உண்டை’ வேலாயுதன் அந்தர் பல்டி அடித்தபடியே அரங்குக்கு வந்தான். வந்த விசையிலேயே கால்தவறி மண்ணில்விழுந்து உருண்டு எழுவதற்குள் அவன்மேல் சைக்கிள் உருண்டு சென்றது. கூட்டம் சிரித்தது.
“டேய் உண்டை”என்றான் டேன்ஸ் செல்லப்பன்.
“அண்ணா”.
“உனக்கு ரெக்கார்ட் டேன்ஸ் தெரியுமா?”
“அண்ணா நல்லா தெரியும்ணா”.
“அப்ப இந்தப்பாட்டுக்கு ஆடு பாப்போம்… பாட்டு போடுடே”.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… ஓடியது. உண்டை கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
அவனை செல்லப்பன் மிதித்து ”டேய் என்னடா செய்யுதே?” என்றான்.
“அண்ணா டான்ஸ் ஆடுதேன்”.
“இதாடா டான்ஸு? படுத்து உறங்குதே?”
“அண்ணா இது கனவுப்பாட்டுல்லா? அதாக்கும் கனவிலே ஆடுதேன்”.
செல்லப்பன் அவனை ஓங்கி மிதிக்க அவன் குட்டிக்கரணம் அடித்து அப்பால் சென்றான். மக்கள் சிரித்து கூச்சலிட்டனர்.
உருமால் தொப்பியுடன் சுற்றிவர வந்திருந்தவர்கள் அதில் சில்லறைகளைப் போடத்தொடங்கினர். உரப்பன் ஒரு ரூபாய் போட்டான். அவன் தினம் மூன்று ரூபாய் போடுவான். கொஞ்சம் கொஞ்சமாக”
மைக்கில் ஒத்தை சண்முகம் “தாய்மார்களே, தந்தைமார்களே, சிறுவர்களே, இளைஞர்களே, இளம்பெண்களே, மற்றும் இங்கே வந்திருக்கும் மானமுள்ள மக்களே, ஒருவாய் சோற்றுக்காக ஒருவன் இங்கே சைக்கிளில் ஏறிவிட்டு இறங்காமல் இருப்பதை காணீர் !காணீர்! காணீர்!” என்றான்.
“குளிப்பதும் தின்பதும் சைக்கிளிலே. ஐயா கக்கூஸ் போவதும் ஒண்ணுக்கு போவதும் சைக்கிளிலே. ஐயா கஷ்டமெல்லாம் கஞ்சிக்காக. நீங்கள் கண்டுகளிக்கும் இந்த அருமையான பாடல்களும் நடனங்களும் அரைவாய் சோற்றுக்காக. ஐயா, வயிற்றிலடித்து வாயிலடித்து தொப்பி ஏந்தி கெஞ்சி கேட்டு உங்களிடம் வருகிறோம். ஐயா கருணை பார்க்கவேண்டும்… அதோ அதோ ஐயா பெருவட்டர் அஞ்சு ரூபாய் போட்டிருக்கார். பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான். நல்லகுடும்பத்திலே பிறந்தவன் அதுக்க குணம் காட்டுவான்… ஐயா உங்கள் அன்புக்காக வருகிறோம் ஐயா!”
உண்டை வேலாயுதன் கைகளை உரசிக்கொண்டு “ஆகவே உங்களுக்காகச் சில வித்தைகளை காட்டப் போகிறேன் மான மகாசனங்களே” என்றான்.
செல்லப்பன் “இருடே” என்றான். “முதல்ல உனக்க பேரச் சொல்லு”
“சொல்லமாட்டேன்”.
“செரிடே முதல் எளுத்தைச் சொல்லு”
“சு”.
“கடைசி எளுத்து? ”
“ணி”.
“டேய்! ”
“அண்ணா சுப்ரமணிண்ணா சுப்ரமணிண்ணா”
“உனக்கு எந்த ஊருடே? ”
“அண்ணா முத எளுத்து பு”.
“செரி”.
“கடைசி எளுத்து டை”.
“டேய்”.
“அண்ணா புதுக்கோட்டைண்ணா புதுக்கோட்டைண்ணா!”
மக்கள் சிரித்துக் கூவினர். ஒத்தை சண்முகம் கழியை ஓங்கியபடி உண்டையை அடிக்க வந்தான். அவன் தப்பி ஓடிசெல்லப்பன் மேல் தொற்றி ஏறி அங்கிருந்து பூவரச மரத்தில் ஏறி அங்கிருந்து ஒத்தை மேல் குதித்தான். அந்தக் கழியை பிடுங்கிக்கொள்ள ஒத்தை அஞ்சி ஓடினான். அவன் அந்த கழியை தன் காலிடுக்கில் வைத்து நீட்டிக்கொண்டான்
“டேய் உண்ட”.
“அண்ணா”.
“உன்னைய இந்தூர்க்காரங்க பொட்டைன்னு சொல்லுறாங்க”
“எந்த கொட்டை சொன்னான்?”
“பலபேரு சொன்னாங்க”.
“அண்ணா எனக்க வித்தைய பாருங்க”.
உண்டை அந்த கோலை நிலத்தில் ஊன்றி அதை காலிடுக்கில் கவ்வியபடி கையையும் காலையும் விரித்து அதன்மேல் பம்பரம்போல சுற்றினான்.
கைதட்டல்கள் சிரிப்புகள் “லே உண்டே! லே மாப்பிளே” என்றெல்லாம் அழைப்புகள்.
உண்டை “இப்ப்டி ஆராவது இங்க ஆடமுடியுமா? அண்ணா நீங்க வாங்க. உங்களால முடியும். விளைஞ்ச சைசாக்குமே”.
கொல்லன் குஞ்சிமுத்தன் “லே, போலே” என்று பின்னடைய கூட்டம் “கூ கூ கூ” என்று கூச்சலிட்டு சிரித்தது.
உண்டை ஒல்லி காட்டுமுத்தனிடம் “அண்ணா நீங்க வாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுல்லா?” என்றான்.
மீண்டும் சிரிப்பு கூச்சல்.
மீண்டும் பாடல். “நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!” அதன் பின் “விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே”. தொடர்ந்து “தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” எல்லா பாட்டுக்கும் தாட்சாயணி ஒரேபோல உதட்டைச் சுழித்தாள். சிணுங்கியபடி குதித்து ஓடினாள். இடையை அரைத்து நடந்தாள் நாக்கை கடித்து சிரித்தாள்.
அடுத்த பாட்டு “தேன்கூடு நல்ல தேன்கூடு” அதில் அவள் ஓர் இடத்தில் இடுப்பை கொஞ்சம் முன்னால் ஆட்டிக்காட்டுவாள். அதற்காகத்தான் கூட்டம் காத்திருந்தது. அவள் அதைக் காட்டியதும் ஒரு கலைந்த ஓசை. சிரிப்புகள், எவரோ “குளவிக் கூடுல்லா!” என்றனர். சிரிப்பொலிகள்.
மீண்டும் தொப்பி சுழன்று வந்தது “மான மகாசனங்களே, இந்த ஏளைகளின் ஒருவாய் சோறு உங்களை நம்பி. இந்த ஆட்டமும் பாட்டமும் பொய். அரிசியும் பருப்பும் உண்மை. அய்யா உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது தொப்பி. புரச்சித்தலைவர் எம்ஜியார் தொப்பி. சிரிப்புவில்லன் அசோகன் தொப்பி. கௌபாய் தொப்பி. துப்பாக்கித்தொப்பி. தொப்பி நிறையணும் அய்யா!தொப்பி நிறைஞ்சா எங்க வயிறு நிறையும் அய்யா!”
ஒத்தை சண்முகம் வாயிலிருந்து மண்ணெண்ணையை துப்பி பந்தத்திலிருந்த தீயை பறக்கவிட்டான். உண்டை ஒரு கட்டு சீட்டுடன் வந்தான். அதை டீ போல ஆற்றினான். தன்னைச்சுற்றி மேலாடை போல பறக்கவிட்டான். வாள் போல ஆக்கி சுழற்றிக்காட்டினான். ஒவ்வொரு சீட்டாக எறிந்தான். அவை சரியாக சென்று ஒரு இடத்தில் அடுக்கப்பட்டு அமைந்தன.
அதன் பின்னர் அன்றைய சர்க்கஸ் நிகழ்ச்சி. ஒவ்வொருநாளும் ஒன்று. முந்தையநாள் அடுக்கப்பட்ட டியூப்லைட் குழாய்களின்மேல் ‘ஒத்தை’ சண்முகம் அந்தர்பல்டி அடித்து போய் விழுந்தான். டியூப்லைட்டுகள் பட் பட் பட் என்று வெடித்தன. கூடிநின்றவர்கள் “அய்யோ! அய்யோ” என்று கூச்சலிட்டனர். பெண்கள் கண்களை மூடிக்கொண்டு அலறினர். டியூப் லைட்டில் விழுந்த ஒத்தையை இருவர் பிடித்து தூக்க அவர் தள்ளாடி விழுந்தான். அவனை தூக்கிக்கொண்டு சென்றனர்
மறுநாள் தாட்சாயணி உரப்பனிடம் “அது டிரிக்கு… சும்மா நடிக்குதது. டியூப்லைட்டுக்குள்ள கேஸ் உண்டு. அடிச்சா உடையுறப்ப சத்தம் கேக்கும். அதுக்க கிளாஸு சும்மா பேப்பரு மாதிரியாக்கும். இந்த பாரு” அவள் எழுந்து சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த பியூசான டியூப்லைட் குச்சியை கையால் ஒரு அடி அடித்தாள். அது டப் என்று வெடித்து வெண்ணிறமான புகைவிட்டது
“எல்லாம் நடிப்பாக்கும்” என்றாள்.
“அப்ப நாளைக்கு நெஞ்சிலே ஜீப்ப ஏத்துறது?”
“டேய், நெஞ்சிலே ஏத்தமாட்டான். கைமேலே ஏத்துவான். கையிலே எவ்ளவுநேரம் நிக்குதுன்னு பாரு. அரை நிமிஷம், கூடிப்போனா ஒரு நிமிஷம்”
உரப்பன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘எருமை’ நாராயணன் வந்து தலைவணங்கினான். “அய்யா கேளுங்க… அருமை அம்மா கேளுங்க. ஒரு சின்னப்புள்ளை ஓட்டுற சக்கரம் நம்ம மேலே ஏறினா என்ன பாடு படுதோம். இந்நா இப்ப ஒரு ஜீப்பை நெஞ்சிலே ஏத்தப்போறேன். ஜீப்பு சக்கரம் என் மேலே ஏறிப்போகும். எனக்கு என்னமாம் ஆச்சுண்ணு சொன்னா எனக்க குடும்பத்தை பாத்துக்கிடுங்க. எனக்க பிள்ளைகளை அனாதையா ஆக்கிடாதீங்க. ஐயா, உயிரு போய் உயிரு வாற ஆட்டமாக்கும் இது. ஐயா, செத்துச் செத்து பிளைச்சு வாற ஆட்டமாக்கும் இது. ஐயா வண்டிச்சக்கரத்திலே கிடக்கப்போறேன்…”
அவன் மல்லாந்து படுத்தான். அவன் மார்பின்மேல் ஒரு பலகையை வைத்தனர். அவன் அதை இரு முழங்கைகளாலும் தாங்கிக்கொண்டான்
“ஏலே, செத்திருவான் போல இருக்குலே”
அப்பால் ஜீப் வந்து நின்றது. அதை ‘ஒத்தை’ சண்முகம் ஓட்டினான். அவன் ஜீப்பை ஸ்டார்ட் செய்து அதன் குமிழை திருகித் திருகி ஓசையெழுப்பினான். ஜீப் புலிபோல உறுமிக்கொண்டே இருந்தது. விசில் ஒலித்தது. ஜீப் ஓடிவந்தது. அதன் ஒரு சக்கரம் பலகையில் ஏறி மறுபக்கம் வந்தது. ஜீப்பின் அடியில் எருமை நாராயணனின் உடல் இருந்தது. ஜீப் ஏறி மறுபுறம் வந்ததும் அவன் வெந்நீர் பட்ட புழு போல துடிதுடித்தான்.
“அய்யோ! அய்யோ!” என்று அனைவரும் கூச்சலிட்டனர். ஒத்தை , குருவி, டேன்ஸ் அனைவரும் ஓடிவந்தனர். அவர்கள் எருமையை தூக்கி கொண்டுசென்றனர். அவன் துடித்துக்கொண்டே இருந்தான்.
“ஒருவாய் சோற்றுக்காக ஐயா. உயிர்வாளணுமுண்ணு உயிரை வைச்சு ஆடுதோம் ஐயா! உங்கள் பொன்னான கைகளால் அள்ளி அள்ளி போடுங்க ஐயா!” என்று உருமால் சந்திரன் சிவாஜி கணேசனின் குரலில் சொன்னான். தொப்பி சுழன்று வந்தது. உரப்பன் மீண்டும் ஒரு ரூபாயை போட்டான்.
மீண்டும் பாடல்கள் தொடங்கின. “அவளுக்கென்ன அழகிய முகம்!” குருவி நாகேஷ் போல ஆடவில்லை. அவன் பாட்டுக்கு அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தான். அடுத்த பாடல் உருமால். “செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று!” அதற்கு அடுத்ததும் சிவாஜிதான். “ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா”.
அடுத்து எம்ஜியார் சோலோ. “தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து”. மக்கள் கைதட்டி விசில் அடித்து கூவினர். அடுத்து சிவாஜி சோலோ. “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி!” இன்னொரு சிவாஜி சோலோ பாட்டு “வந்த நாள் முதல்!” உருமால் ஒரு தொப்பியை வைத்துக்கொண்டு சைக்கிளில் பாடியபடியே சுற்றிவந்தான்.
அப்போது உள்ளிருந்து தாட்சாயணி ஓடி ரிங்குக்கு வந்தாள். கைவீசி அலறிக்கொண்டு “நான்போறேன்… நான் போறேன்” என்று கூவினாள். “அய்யோ எனக்க தெய்வமே! எனக்க தெய்வமே!”
செல்லப்பன் “ஏட்டி என்ன? என்னவாக்கும்?” என்றான்.
“என்னை ஏறி பிடிச்சான்… என்னையப் பிடிச்சான்!” என்று தாட்சாயணி கூவினாள். அவள் சட்டை கொஞ்சம் கிழித்திருந்தது.
மக்கள் கூச்சலிட்டனர். ஒருசிலர் ரிங்குக்குள் சென்றனர். உருமால் “நில்லுங்க, நில்லுங்க, சொல்லுதேன்… ஒரு சின்ன பிரச்சினை” என்றான். “செல்லப்பா,, தாட்சாயணி, எதுவா இருந்தாலும் உள்ளபோயி பேசுங்க. ரிங்ல வேண்டாம். இங்க ஷோ நடந்திட்டிருக்கு… ஆளுக பாக்கிறாங்க”.
“என்னலே! ஏலே என்னலே பிரச்சினை!” என்று தங்கன் பெருவட்டர் சொன்னார்.
“என்னை பிடிக்கவாறான் அண்ணா!” என்று கண்ணீருடன் தாட்சாயணி பெருவட்டரிடம் சொன்னாள். “நான் டேன்ஸ் ஆட வந்தேன்… அவுசாரித்தனம் பண்ண வரல்ல… கால்வயிறு சோத்துக்காக வந்தேன். என்னை நாய அடிக்க மாதிரி அடிச்சு…” அவளால் பேச முடியவில்லை. அவள் கதறி அழுதபடி குந்தி அமர்ந்தாள்.
எருமை உள்ளிருந்து வந்தான். “ஆமலே, கைய வச்சேன். இவ என்ன பெரிய கண்ணகியா?”
“டேய்!” என்று டான்ஸ் செல்லப்பன் எருமைமேல் பாய எருமை அவனை அறைந்தான். செல்லப்பன் மயங்கி விழுந்தான். உருமால் ஓடிப்போய் செல்லப்பனைத் தூக்கிக்கொண்டான்.
“அய்யோ அய்யோ!” என்று கூவியபடி தாட்சாயணி ஓடிச்சென்று அவனை தூக்கினாள். “கேக்க ஆளில்லியா? இப்டி அடிக்கானே! இங்க நாயம் பேச ஆளில்லையா?”
“ஆமலே இவ எனக்கு வேணும். எண்ணி குடுத்தேன்லா, நாநூறு ரூவா. அது இதுக்கும் சேத்துத்தான்.. எனக்க பணத்தை திரும்பக் குடுக்கச் சொல்லுலே” என்றான் எருமை.
“அய்யோ அய்யோ” என்று தாட்சாயணி கத்த எருமை ஓடிப்போய் அவள் தலைமயிரை பிடித்து தூக்கினான். அவள் அலறியபடி துடித்தாள். அவன் அவளை இழுத்துச்சென்றான்.
தங்கன் பெருவட்டர் “நாநூறு ரூபாய்க்காக பொம்புள மேலே கைய வைக்கிறியா? நாறபயலே” என்றார்.
“ஆமா நாநூறு ரூபா எனக்கு பெரிசாக்கும்… நான் ஜீப்புக்க அடியிலே கெடந்து சம்பாரிச்ச பைசாவாக்கும்” என்று எருமை சொன்னான். “இந்த தட்டுவாணி கேட்டாண்ணு எண்ணிக்குடுத்தேன்”.
“எனக்க அம்மை சாகக்கிடந்தா… அவளுக்கு ஆஸ்பத்திரி செலவுக்காக வாங்கினேன்… எப்டியாவது குடுத்திருவேன்… மானம்போனா செத்திருவேன். இந்த மரத்திலே தொங்கி நின்னிருவேன்”.
“பைசா குடுக்கல்லேன்னா தொங்கிச்சாவுடீ” என்றான் எருமை.
தங்கன் பெருவட்டர் “எலே ,உனக்கு நாநூறு ரூபாதானே?” என்றார் நூறு ரூபாயை எடுத்து வீசி “இந்நா கெடக்கு நூறு ரூவா… டேய் இங்க மரியாதைக்கு சீவிக்குதவனுக இருந்தா பைசாவ போடுங்கலே”என்றார். எல்லாரும் ஐந்து பத்து என்று போட்டார்கள். ரூபாய் விழுந்துகொண்டே இருந்தது.
தாட்சாயணி உரப்பனை நோக்கி “டேய் தம்பி பைசாவ பெறுக்கி குடுடே” என்றாள்.
உரப்பன் எழுந்து சென்று தரையில் விழுந்த பணத்தை பொறுக்கி எடுத்துச் சேர்த்தான். அறுநூறு ரூபாய்க்கு மேல் இருப்பதாக தோன்றியது.
“நான் போறேன் அண்ணா…. மான மகாசனங்களே நான் போறேன்… இந்த ஊரவிட்டே போறேன். இந்த நாறப்பொளைப்பு இனி வேண்டாம்” என்று தாட்சாயணி கண்ணீருடன் கைகூப்பினாள். “நான் மரியாதைப்பட்ட குடும்பத்திலே பிறந்தவளாக்கும். பட்டினியிலே கெடந்தப்ப இந்தாளு வந்து அரிசி வாங்க பைசா குடுத்தாரு. தாலிகெட்டி பொஞ்சாதியா சேத்துகிட்டாரு. அவரு சொல்லியாக்கும் நான் இந்த தொளிலைச் செய்தது… இனி இது எனக்கு வேண்டாம்”.
சதானந்தன் நாயர் ஓடிவந்து “போயிருவியா? எனக்க அட்வான்ஸை திருப்பிக் குடுத்திட்டு போடி” என்றார்.
“குடுத்திடறேன்… எப்டியாவது குடுத்திடறேன்”.
“இனி நீ ஆடவேண்டாம்… எனக்க கூத்தியாளா இரு”.
“அய்யோ அய்யோ என் தெய்வமே!” என்று தாட்சாயணி தலையில் அறைந்து அழுதாள்.
“டேய் நாயரே உன் கணக்கு எம்பிடுலே?” என்றார் தங்கன் பெருவட்டர்.
“என் கணக்கு அறுநூறு ரூபா”.
“இந்தா ரெண்டு பவுனு இருக்கு… அவன் மூஞ்சியிலே எறிஞ்சுட்டு எறங்கிப்போடீ…” என்று தங்கன் தன் கழுத்திலிருந்த செயினை கழற்றி வீசினான். “போ, போயி மானம் மரியாதையா வாளுத வளியப்பாரு. எரப்பாளிப்பயக்க… அவனுக நாய்க்குணத்தை நம்ம ஊரிலே வந்து காட்டுதானுக”.
“போறேன் அண்ணா… இந்தாபோறேன்… இப்ப வந்து எல்லாருக்கும் பணத்தைக் குடுத்திடறேன்” என்று அவள் சொன்னாள் “டேய் வாடா”.
உரப்பன் அவள் பின்னால் சென்றான். கூடாரத்திற்குள் சென்று அவள் சேலை மாற்றிக்கொண்டாள். உள்ளிருந்தே எட்டிப்பார்த்து “டேய் தம்பி, அந்த சைக்கிளை எடுத்திட்டு வா”.
“எந்த சைக்கிளை அக்கா?”
“அந்தா நிக்குதே”.
அவன் அதை உருட்டிக்கொண்டு வந்தான். அவள் ஒரு பையுடன் வெளியே வந்தாள். “நான் இப்ப வந்திருதேன்… யாராவது கேட்டா உள்ள டிரெஸ் மாத்துதேன்னு சொல்லு”.
ரிங்கில் மீண்டும் பாட்டு ஒலித்தது. “யாருக்காக? இது யாருக்காக!” அதன் பின் எம்ஜியர் பாட்டு “நான்யார் நீயார்!”
செல்லப்பன் ஓடிவந்து “எங்கலே அவ?”
“உள்ள” என்றான் உரப்பன்.
அவன் உள்ளே போய் திரும்பி வந்து “இல்லியே” என்றான்.
உரப்பன் வாய் திறந்து பேசாமல் நின்றான்.
உருமால் மைக்கில் “மான மகாஜனங்களே, இன்றைக்கு இந்த ஷோ இங்கே முடிவடைகிறது. நாளைக்கு புதிய கதாநாயகி வருவாள். ஷோ தொடரும்… இன்றைக்கு இப்படி சீக்கிரமே முடித்ததற்கு வருந்துகிறோம். நாளை நமதே” என்றான். “நாளை நமதே!” என்று ரிக்கார்ட் ஓட தொடங்கியது.
செல்லப்பன் “ஏலே, எங்கலே போனா அவ?” என்றான் பிறகு அவனே கூடாரத்துக்குப் பின்னால் ஓடினான்.
உருமால் வந்து “எங்க அவ?” என்றான்.
உரப்பன் திகைப்புடன் பார்த்து நின்றான். எருமையும் ஒத்தையும் உண்டையும் வந்தனர். சதானந்தன் நாயர் அக்குளில் தோல்பையுடன் வந்து “என்னலே? என்ன? எங்க அவ?”
“இவனாக்கும் இங்க நின்னான்”.
“லே பைசால்லாம் எங்கலே?”
“அக்கா கையிலே”.
“அக்காவா? ஆருலே இவன்? மோணையனா இருக்கான்”.
டேன்ஸ் செல்லப்பன் ஓடிவந்து “அண்ணா அவளை காணல்லை… ஓடிப்போயிட்டா” என்றான்.
எருமை அவன் சட்டையைப் பிடித்து தூக்கி கூடாரம் மீது சாத்தினான். “போயிட்டாளா? எங்க? ஏல ஆருகிட்ட வேலை காட்டுதே? அவ உனக்க பெஞ்சாதிதானே? போயி கூட்டிட்டு வாலே”.
“அண்ணா, அவ எனக்க பெஞ்சாதி இல்லை”.
“லே, என்னலே சொல்லுதே?” என்றான் உருமால்.
“அண்ணா அவளேதான் வந்து சொன்னா, ரெக்கார்டு ஆட வாறேன்னு. உங்க பொஞ்சாதின்னு சொல்லுதேன். இல்லேண்ணா கண்டவன் வந்து மேலே ஏறுவான்னு சொன்னா… அதனால நானும் அப்டி சொன்னேன். அவ ஆளு ஆருண்ணு எனக்கு தெரியாதுண்ணா!”
“அவ எங்கயும் போயிருக்க மாட்டா… இந்த ஊரிலே இருந்து நடந்து எம்பிடுதூரம் போயிருப்பா?” என்றார் சதானந்தன் நாயர்.
“அக்கா சைக்கிளிலே போனா” என்றான் உரப்பன்.
“எந்த சைக்கிள்? ஆமா, இங்க எனக்க சைக்கிள் நின்னுதே” என்றார் சதானந்தன் நாயர்.
“இனி அவளை எங்க பிடிக்க? இங்க வேற சைக்கிளும் இல்லை”.
“ஊரிலே போயி சைக்கிளு கேளுலே”.
“ஆமா, ஊரிலே போயி சொல்லு. சேர்ந்து நாடகம் போட்டு எல்லாரையும் ஏமாத்தினோம்னுட்டு… கொட்டைய அம்மியிலே வச்சு நசுக்குவானுக… அந்த பெருவட்டரு ஆளு கொலகாரனாக்கும்”.
“அய்யோ, ரெண்டு பவனும் ஆயிரம் ரூபாயும்… யம்மா!” என்றான் எருமை. தலையில் அறைந்து “பிள்ளைகளுக்கு ஒரு நல்ல துணி எடுக்கலாம்னு நினைச்சேனே. எனக்க தெய்வமே!” என அழுதான்.
சதானந்தன் நாயர் “டேய் செல்லப்பா, அவளுக்க உண்மையான பேரு என்ன?”
“ரெஜினா”.
“ஓ, வீடு?”
“மஞ்சாலுமூடு… அங்க போனப்ப அவளை பாத்தேன். அவளுக்க வீட்டிலே அம்மை மட்டுமாக்கும். ஒரு கிளவி” என்றான் டேன்ஸ் செல்லப்பன்.
“அவ அங்கதான் இருப்பா… பிடிச்சிரலாம்” என்றார் சதானந்தன் நாயர்.
உரப்பன் ஓரமாகச் சென்று தென்னை மரத்தடியில் அமர்ந்தான். நெஞ்சடைத்து அழுகை வந்தது. கண்ணீரை அடக்க அடக்க ஊறிக்கொண்டே இருந்தது. அவன் எழுந்து நடந்து இருட்டுக்குள் புகுந்தான். கையில் டார்ச் இருந்தாலும் அதை அடிக்கவில்லை. இருட்டுக்குள்ளேயே நடந்தான். நீர்ப்பாம்புகள் மிதிபட்டு சுருண்டன. வயல் வழியாகவே நடந்து பண்ணையை அடைந்தான்.
சட்டையை கழற்றாமல் சிமிண்ட் பெஞ்சிலேயே படுத்துக்கொண்டான். வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் பரவியிருந்தன. அவற்றைப் பார்த்தபடி மல்லாந்து கிடந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
அவனுக்கு அவனுடைய உணர்வுகளே புரியவில்லை. அவன் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல தோன்றியது. மனம் முழுக்க வெறுமை. விடியும்போது குளிர்ந்த காற்று வந்து தொட்டது. வானில் விடிவெள்ளியை கண்டான். அப்போதுதான் அந்த வெறுமையிலே முழுஇரவும் கடந்துவிட்டது தெரிந்தது
மறுநாளே ‘சைக்கிள் இறங்கா சர்க்கஸ்’ கூட்டம் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றது. அவன் மாலை சென்று பார்த்தபோது சைக்கிள் ஓடிய வட்டத்தடம் மட்டும் ஆழமான வடுவாக புழுதியில் தெரிந்தது. டியூப்லைட் கட்டியிருந்த மூங்கில்களின் குழிகள் பதிந்திருந்தன. நாய் ஒன்று அங்கே முகர்ந்து பார்த்தபடி நின்றிருந்தது. அவன் நெடுநேரம் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தான்
அதன்பின் அவன் ஒவ்வொரு நாளும் அங்கே வந்து சற்றுநேரம் பார்த்துவிட்டுச் சென்றான். ஊரில் அவனை கேலி செய்தார்கள். அவன் அவற்றுக்குச் செவி கொடுக்கவில்லை. அவன் முன்னரே பெரும்பாலும் எவருடனும் பேசுவதில்லை. அதற்குப்பின் அவன் மேலும் அமைதியானவன் ஆனான்.
எப்போதுமே அவனுடைய நெஞ்சில் ஒரு பெரிய எடை போல வெறுமை இருந்துகொண்டிருந்தது. ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தால் தெரியாது, சும்மா அமர்ந்தால் உடனே அந்த வெறுமை சூழ்ந்துவிடும். கசப்போ துக்கமோ இல்லை. வெறுமை மட்டும்.
பின்னர் அம்புரோஸ் பெருவட்டர் அந்த அந்த இடத்தில் மரச்சீனி நட்டார். அது வளர்ந்து தலைக்குமேல் சென்றது. மரச்சீனியை பிடுங்கினார். மீண்டும் நட்டார். மீண்டும் அது தலைக்குமேல் சென்றது.
மழைக்காலத்தில் குரியாக்கோஸ் முதலாளியின் வீட்டுக்கு வாழைக்குலை கொண்டு கொடுப்பதற்காக அவன் திருவனந்தபுரம் சென்றான். அவருடைய வீடு திருவனந்தபுரத்திற்கு வெளியே பாங்கோடில் இருந்தது. மிலிடரி ஆபீஸ் அருகே ஒரு மிகப்பெரிய கட்டிடம். வாழைக்குலைகளை கொண்டுசென்று கொடுத்தான். முதலாளி திரும்பிச்செல்லவும் சாப்பிடவும் பணம் கொடுத்தார்.
அவன் பாங்கோட்டிலிருந்து தம்பானூருக்கு பஸ் ஏறியபோது தாட்சாயணியை பார்த்தான். ஒரு கணம் உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு சிந்தனைகூட மனதில் இல்லை. இறங்கிவிடலாம் என்றுதான் நினைத்தான். அதற்குள் கண்டக்டர் விசில் கொடுத்துவிட்டார்.
அவன் அவளை பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றான். அவள் அவன் பார்வையை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவனை அடையாளம் கண்டு இயல்பாக புன்னகைத்து “கெணேசன்தானே? வா வா” என்றாள்.
அவன் தயங்கி நிற்க “எடமிருக்கே… வந்து உக்காரு” என்றாள்.
அவன் அவளருகே அமர்ந்தான். “என்ன ஒருமாதிரி இருக்கே?”
“இல்ல” என்றான். ஆனால் அழுகை வந்துவிட்டது. கண்களை கையால் அழுத்திக்கொண்டான். உதட்டை இறுக்கி அழுகை விம்மலாக வெடிக்காமல் காத்தான்.
“என்ன இப்ப?” என்று அவள் அவன் கைமேல் கைவைத்தாள். “அண்ணைக்கு காசோட வந்திட்டேன்னு கோவமா?”
“இல்ல”.
“வேறே என்ன செய்ய? நான் இருக்குற நிலைமை அப்டி…” அவள் முகம் மாறியது. கண்களில் கண்ணீர் பரவியது. அவளுடைய சிறிய உதடுகள் துடிப்பதை அவன் பார்த்தான். மெல்லிய மேலுதட்டில் பூனை மயிர்களில் வியர்வை. அழுகையை அடக்க வெளியே பார்த்தாள். பின்னர் புன்னகையை தருவித்துக்கொண்டு அவனை பார்த்தாள். “செரி விடு… அதையெல்லாம் உங்கிட்ட எதுக்கு சொல்லிக்கிட்டு?”
“உங்க பேரு ரெஜினாதானே?”
“ஆரு சொன்னா?” என்றாள்.
“டேன்ஸ் செல்லப்பா”.
“அவன்கிட்ட அப்டி சொன்னேன்” என்றாள் “உனக்க கிட்ட சொல்லுதேன், என் பேரு மகேஸ்வரி. வீடு இங்கதான் பாங்கோடு”
“பின்ன?” என்றான். பிறகு “உங்களை பிடிக்க அவனுக மஞ்சாலுமூட்டிலே உங்க வீட்டுக்கு போனாங்க” என்றான்.
“அது என் வீடு இல்லை. அவங்களுக்கு நான் யாருன்னே தெரியாது” என்றாள்.
“அப்டியா?”
“எனக்கும் மஞ்சாலுமூட்டுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. அண்ணைக்கு நான் மஞ்சாலுமூட்டிலே தெரிஞ்ச ஒருத்தரை தேடி போனேன். அவரு எனக்க பழைய முதலாளியாக்கும். அவருக்க வீட்டிலே எனக்க அம்மை சமையற்காரியா இருந்தா. ஆனா அவரு அங்க இல்ல. வீட்ட மாத்திட்டு போயிட்டாரு” என்றாள். “நான் போனது கொஞ்சம் பணம் கடன் வாங்கலாம்னு. என் அம்மா இங்க ஆஸ்பத்திரியிலே கிடந்தா. மூணு தங்கச்சி. அப்பா விட்டுட்டுபோயி பதினெட்டு வருசமாச்சு. எனக்க வருமானமாக்கும் குடும்பத்துக்கு. என்ன செய்வேன்?”
உரப்பன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகம் சிவந்து சூடாகிவிட்டிருந்தது.
“உனக்கெல்லாம் புரியாது, வயித்துப் பசிக்க வெளையாட்டு. தீப்பிடிச்சு நின்னு எரியுத மாதிரியாக்கும். அப்ப நாம் ஆரையும் சங்கறுத்துக் கொல்வோம்” என்று அவள் சொன்னாள். “எங்க போறதுன்னு தெரியாம நின்னப்ப தான் செல்லப்பனை பாத்தேன். அங்க ஒரு ஆட்டத்துக்கு வந்திருந்தான். என்னைய பாத்து பேச்சுக் குடுத்தான். நான் பைசா இல்லாம நிக்குதேன்னு தெரிஞ்சப்ப வளைக்க பாத்தான். செரி, என்ன குடுப்பேன்னு கேட்டேன். முந்நூறு ரூவா அட்வான்ஸ்னு சொன்னான். அத வாங்கிட்டு கிளம்பினேன். ஆரும் தெரியாம அம்மைக்கு பைசாவ மணியார்ட செய்தேன்… அந்த முநூறு ரூபாயிலேயாக்கும் மூணுமாசம் எனக்க வீட்டிலே அடுப்பு எரிஞ்சது”.
உரப்பன் பெருமூச்சுவிட்டான்.
“நான் ரெக்கார்டு ஆடவந்தேன். வேற வளியில்லை. ஆனா அவுசாரியா வரல்ல. அவனுக எரப்பாளிக் கூட்டம். ஒவ்வொருத்தனும் என்மேலே கைய வைப்பான். என்ன செய்வேன்? அதாக்கும் நான் செல்லப்பன் கிட்ட சொன்னேன். அவனை நான் கெட்டிகிடுதேன்னுட்டு. எனக்க அம்மைக்க கடனை மட்டும் அடைச்சபிறகு கல்யாணத்தை வச்சுகிடுவோம், அதுவரை தொடப்பிடாதுன்னு சொன்னேன். அவன் எங்க பொம்புளையப் பாத்தான். நான் சொன்னதும் ஆசையிலே சம்மதிச்சான். நான் அவனுக்க பெஞ்சாதின்னு மத்தவனுக கிட்ட சொன்னேன். எனக்கு வேற வளியில்லை”
“ரெஜினான்னு சொன்னது?”
“பின்ன உள்ளதச் சொல்லமுடியுமா? அவனுக என்னைய தேடிவருவானுகள்லா? என் வீடு ஏதுன்னு அவன் கேட்டான். அப்பம் நான் நின்னிட்டிருந்த வீட்டிலே ஒரு கிளவி மட்டும் இருந்தா. நான் அவகிட்ட ஒரு செம்பு தண்ணி வாங்கி குடிச்சுட்டு அங்க பேசிட்டு நிக்கிறப்பதான் செல்லப்பன் என்னைய பாத்தான். அதுதான் எனக்க வீடு, அந்த கிளவி எனக்க அம்மைன்னு சொன்னேன். அந்த வீட்டிலே ஏசு படம் இருந்ததனாலே என் பேரு ரெஜினான்னு சொன்னேன்”.
“அப்ப செல்லப்பனை ஏமாத்தணும்னு உங்களுக்கு அப்பவே ஐடியா இருந்தது இல்லியா?”
“அம்மை மேலே ஆணையா இல்லை. ஆனா செல்லப்பன் ஆரு எப்பிடீண்ணு எனக்குத் தெரியாதுல்லா? அவனை நம்பி வாறேன். அவன் கெட்டவன்னு தெரிஞ்சா என்ன செய்ய? எப்டி தப்புவேன்? அவன் ஆளு செரியில்லைன்னு தெரிஞ்சா அப்டியே தப்பி வெளியே போனா பிறவு அவன் என்னைய பிடிக்க வருவான்ல? உண்மையைச் சொல்ல முடியுமா? அதாக்கும் பேரு எடம் எல்லாம் மாத்திச் சொன்னேன்”.
உரப்பன் பெருமூச்சு விட்டு “செரி” என்றான்.
“நீ சின்னப்பையன். உனக்கு பொம்புளையாளுக எப்டியெல்லாம் ஜாக்ரதையா இருப்பாங்கன்னு தெரியாது… அப்டி இருந்தாத்தான் ஏழைப்பட்ட பொண்ணு மானம் மரியாதையா வாழமுடியும்…”
“அந்த பணத்தோட போய்ட்டீங்க?”
“ஆமா, அவனுக ஊரை ஏமாத்தி பணத்தை வாங்கி பங்குபோடலாம்னு நினைச்சாங்க. அந்தப்பணம் எனக்கு உங்க ஊருகாரங்க தந்ததுதானே? உங்க ஊரிலே நான் என்ன சொன்னேன்? அங்கேருந்து கெளம்பிப்போயி மானம் மரியாதையா வாளுதேன்னு தானே? அதுக்குத்தான் அந்தப் பணத்தோட கெளம்பிட்டேன். இல்ல, ஊரு எனக்காக குடுத்த பணத்தை அந்தக் களவாணிகளுக்கு குடுக்கணுமா? சொல்லு”.
“சரிதான்” என்றான்.
“நான் உன்கிட்ட எதுக்கு சொல்லுதேன்? நீ மனசாட்சி உள்ளவன். உனக்கு புரியும்” என்று அவள் சொன்னாள். “அந்தப் பணத்திலே ஒரு பெட்டிக்கடை தொடங்கி அம்மைய உக்காரவச்சிருக்கேன். தங்கச்சிக படிக்குது”.
“உங்களுக்கு கல்யாணம் ஆகல்லியா?”
“கல்யாணமா, எனக்கா?” அவள் சிரித்தபோது முகம் இன்னும் துக்கம் நிறைந்ததாக ஆகியது “அதுக்கு இன்னும் நாலஞ்சு மலை ஏறணும்… பாப்பம். இப்பதான் வீட்டிலே அடுப்பு எரியுது”
“நான் ஒண்ணும் தப்பா சொல்லல” என்று அவன் சொன்னான்.
“சேச்சே, நீ சொன்னதுதான் சரி. என்ன இருந்தாலும் நான் பணத்தோட ஓடிவந்தது தப்புதான்…”
“அதெல்லாம் ஒண்ணும் தப்பில்ல.. அவனுகதான் களவாணிக”.
“செரி விடு… நம்ம தலையெழுத்து இப்டி”என்றாள் மீண்டும் கண்களில் கண்ணீர் பரவியது.
“ஒண்ணும் மனசிலே வச்சுகிடாதே அக்கா” என்றான்.
“நான் என்ன நினைக்கப்போறேன் உன்னப்பத்தி? உன்னை எனக்கு தெரியாதா?” என்றாள். “இப்ப அவனுக கண்ணிலே நான் படக்கூடாது. எல்லாம் செரியான பிறகு வாறேன். உன்னைய மறுபடி பாக்கணும். உன்னை மாதிரி எனக்கு மனசுக்கு நெருக்கமா யாருமே தோணினதில்லை”.
உரப்பன் பெருமூச்சுவிட்டான். அவன் மனதிலிருந்த வெறுமை மேலும் அழுத்தம் கொண்டதாக ஆகியிருந்தது. ஏன் என்றே தெரியவில்லை. எங்காவது கைவிரித்தபடி ஓடவேண்டும், வெறிகொண்டு கூச்சலிடவேண்டும் போல் இருந்தது.
பேட்டை பஸ்ஸ்டாப்பில் அவள் இறங்கினாள். “நான் வாறேன்…” என்று அவன் தோளில் கையை வைத்துவிட்டு படிகளில் இறங்கினாள்.
ஒயர்கூடையுடன் பஸ்ஸில் ஏறிய ஒரு அம்மாள் அவளை நோக்கி “ஏட்டி, லீலா தானேடி நீ? உன் புருசன் ஜெயிலிலே இருந்து வந்திட்டானா?” என்றாள்.
ஒருகணம் அவள் நிமிர்ந்து உரப்பனை பார்த்தாள். பிறகு “இல்ல மாமி… ஆறுமாசம் ஆவும்” என்றாள். விடைபெறுவதுபோல வேறேதோ சொன்னாள். கண்டக்டர் விசில் அடிக்க அந்த அம்மாள் ஏறிக்கொண்டாள். பஸ் முன்னால் சென்றது.
அதற்கு முன் அவள் நிமிர்ந்து பார்த்தாள். உரப்பனின் பார்வையை அரைக்கணம் சந்தித்தாள். அவள் கண்களில் ஒரு சிரிப்பு வந்துசென்றது.
பஸ் முன்னகர்ந்து காற்று முகத்திலறைந்தது. உரப்பன் அறியாமல் சிரித்துவிட்டான். அதுவரை இருந்த அத்தனை வெறுமையும் முழுமையாகவே அகல தனக்குத்தானே சிரித்தபடியே சென்றான்.
***