முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி.
அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர் வருவதை எட்டிப்பார்த்தான். காய்ந்த உடைமுட்களை குவியலாகப் போட்டு அமைக்கப்பட்டிருந்த வேலிக்கு நடுவே செம்மண் புழுதி குமுறிக்கிடந்த பாதையில் மிகமெல்ல ஞானப்பன் வந்துகொண்டிருந்தார். அந்தப்பாதையில் சைக்கிள் எத்தனை மிதித்தாலும் முன்னகராது. சண்டி எருமைபோல அடம்பிடித்துத்தான் முன்னகரும்
ஞானப்பன் அவனை நோக்கித்தான் வந்தார். அவன் நெஞ்சு படபடத்தது, ஆனால் முகம் மலர்ந்துவிட்டது. அவன் வேலியோரமாகச் சென்றான். ஞானப்பன் அவன் அருகே வந்து சைக்கிளை காலூன்றி நிறுத்தி “ஏலே, இங்க மாயாண்டிக்க வீடு எது?” என்றார்
முத்து உள்ளம் குன்றினான். ஒருசில கணங்கள் தேவைப்பட்டன அந்த தணிவுநிலையில் இருந்து மீண்டு வர. “மாயாண்டிக்க வீடு ஊருக்கு உள்ளேல்லா?” என்றான்.
“ஆமா, அது தெரியாதா? அங்க வட்டிக்காரனுக வந்திருதானுகன்னு இங்க தோட்டத்திலே எங்கிணயோ குடும்பத்தோட வந்து தங்கியிருக்கானாம். அவனுக்க தோட்டம் ஏதுண்ணு தெரியல்ல.”
“என்ன சங்கதி?”
“சர்க்காரு லெட்டர். அவனுக்க பய மாணிக்கம் சர்க்காரிலே பாஸ்போர்ட்டோ என்னமோ கேட்டிருக்கான் போல. அது வந்திருக்கு… போஸ்டாபீஸிலே இருக்கு. அவன் வந்தா போஸ்ட்மாஸ்டர் ஆளைப் பாத்துட்டு குடுப்பாரு… ஒரு வாரம் இருக்கும். ஆளு வரல்லேன்னா திரும்ப போயிரும்” என்றார் ஞானப்பன்
“அய்யோ… அந்தா அந்த முக்குலே திரும்பினா நாலுபனை ஒருகொத்தா நிக்குததுதான் அவங்க தோட்டம்… பாத்தா தெரியும்” என்றான் முத்து. “குடிசைய பள்ளத்திலே போட்டிருப்பாங்க, வளியிலே நின்னா தெரியாது. போஸ்ட்மேனாக்கும்னு சொல்லி விளிச்சா மாணிக்கம் வந்திருவான்.”
“செரிடே…” என்றான். பையில் இருந்து பீடியும் தீப்பெட்டியும் எடுத்து பற்றவைத்துக்கொண்டு “ஆனா ஒண்ணு கேட்டுக்க. இதை தோட்டம்னு சொல்லாதே கேட்டியா? நான் நல்ல பச்சைத்தோட்டங்கள் உள்ள மண்ணிலே இருந்து வந்தவனாக்கும். இங்க வெளையுதது ஒடைமுள்ளு மட்டும்தான். முள்ளுக்கு முள்வேலி போட்டிருக்கிறத இந்த மண்ணுக்கு வந்தபிறகுதான் பாத்தேன். முள்ளை வெள்ளாமை செய்து விப்பானுகன்னு இங்க வந்தபிறகுகூட கொஞ்சநாள் நம்பல்ல… ஆனா முள்ளுக்காட தோட்டம்னு சொல்லுததா இந்நா இப்பகூட நம்பமுடியல்ல” என்றார்
“அதுக்கென்ன, கும்பிக்கு சோறுபோட்டா எல்லாமே வெள்ளாமைதான்” என்றான் முத்து. “நமக்கு லெட்டர் ஒண்ணுமில்லியா அண்ணாச்சி?”
“இல்லியே, இருந்தா குடுப்பேன்லா?” என்றபின் அவன் முக வாட்டத்தைக் கண்டு “வேலைக்கு போட்டிருந்தியோ?” என்றார்.
“ஆமா” என்றான்.
“சும்மா எளுதிபோட்டுட்டே இருந்தா என்னன்னு வரும்? இப்ப காசு இல்லாம வேலை இல்லை. இந்தா இந்த ஈடி போஸ்ட்மேன் வேலை. கண்காணா ஊரிலே இந்த முள்ளுக்காட்டிலே தீமாதிரி வெயிலிலே அலையுதேன்… இதுக்கு குடுத்திருக்கு ஒரு லெச்சம் ரூபா லஞ்சம்”
அவன் கண்கள் கலங்கிவிட்டன.
“செரிடே மக்கா. கடவுள் இருக்காரு. ஒரு வளிகாட்டுவாரு. கவலைப்படாதே என்ன?” என்றபின் அவர் பீடியை ஆழ இழுத்து “வாறேன்டே” என்று மிதித்துச் சென்றார். அவர் முழங்கால் ஆழத்துச் சேற்றை மிதிப்பதுபோல தெரிந்தது.
கவைக்கோலுடன் முத்து மீண்டும் முள்காட்டுக்குள் வந்தான். எட்டுநாட்களுக்கு முன்னால் அவனே வந்து உடைமுள்ளை கீழிருந்து வெட்டி சுருட்டிப் போட்டிருந்தான். அவை காய்ந்து துருப்பிடித்த இரும்பாலானது போன்ற முட்குவியல்களாக கிடந்தன. அவன் கவைக்கோலால் அவற்றை கவ்வி உந்தி எழுப்பி சுழற்றி சுழற்றி கொண்டுசென்று பெரிய உருளைகளாக ஆக்கினான். அவற்றை கவைக்கோலால் அழுத்தி அறைந்து இறுக்கினான். அதன்பின்னர் அங்கே கொண்டு போடப்பட்டிருந்த பனைநாரால் அவற்றை சுழற்றிக் கட்டினான்.
செங்காட்டுக்கு முதலில் வருபவர்கள் அந்த முள்காடுகளை கண்டு திகைப்படைவதை அவன் கண்டிருக்கிறான். முள்வேலிபோட்ட பெரிய தோட்டங்கள். நடுவே லாரிப்பாதை. உள்ளே ஏதோ தோப்பு இருப்பதாக நினைப்பார்கள். உள்ளே வெறும் உடைமுள்தான் என்று தெரிந்ததும் “உடைமுள்ளா அண்ணாச்சி?” என்பர்கள் “அதுக்கா இந்த வேலி..”
“முள்ளா இருந்தாலும் வெள்ளாமை வெள்ளாமைதானே? அதுக்கு எல்லையும் காவலும் வேணும்லா?” என்று ஒருமுறை சாத்தூரான் சொன்னார். “இந்த மண்ணிலே முள்ளும் பனையும் மட்டும்தான் வெளையும். பனையிலே கள்ளெடுக்க சர்க்கார் சம்மதிக்காது. அக்கானி எடுத்து காய்ச்சலாம்னா கள்ளெறக்குதோம்னு சொல்லி டாஸ்மாக் காரன் ஆளுவச்சு அடிப்பான். வேற என்ன செய்ய? வாளணும்ல?”
போஸ்ட்மேன் ஞானப்பன் ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமிருந்து வந்தவன். அவனுக்கு அப்போதும் திகைப்பு மாறவில்லை. “இருந்தாலும் உடைமுள்ளப்போயி…” என்றான்.
“ஏம்வே, நடாம தண்ணிவிடாம அறுவடை மட்டுமே பண்ணுத ஒரு வெள்ளாமை வேற உண்டா?” என்றார் சாத்தூரான் “இதுலே ஒரு பெரிய விசயம் என்னாக்க களை பறிக்கவேண்டாம்… ஏன்னா களையைத்தான் வெள்ளாமையே செய்யுதோம்.”
“இத கொண்டுட்டுப்போயி என்ன செய்யுதான்?” என்றான் ஞானப்பன்.
“காயித ஆலை இருக்குல்லா, அதுக்கு வாங்குதானுக. ஒரு லாரி லோடுக்கு ரெண்டாயிரம் ரூவா. ஆனா நாம ஏத்தி விடணும்.”
“ஏன் அண்ணாச்சி, இதைப்பாத்தா மரம் மாதிரியே இல்லியே. ஒரு பச்சை எலையக் காணும். எங்கூர்லே உடைமுள்ளுகூட பச்சைத்தளிரும் பூவுமாட்டுல்லா இருக்கும்? இது என்னமோ இரும்புல செய்து குவிச்சுப்போட்டது மாதிரி இருக்கு” என்றான் ஞானப்பன்.
“இங்கயும் பச்சை வரும்… மார்களி மாசம் வந்து பாரு… அது உடைமுள்ளு சமையுத சீசனாக்கும்”
மேலே வெயில் எரிந்துகொண்டிருந்தது. மண் கொதித்து அனல் கிளம்பியது. செக்கச்சிவந்த நிலமே மாபெரும் அனல்பரப்பு போல ஆகியது. அந்த மண்ணில் பிறக்காதவர்களால் அங்கே அரைமணிநேரம் நிற்க முடியாது. மூன்றடுக்கு லாரிடயர் செருப்பு போடாமல் அங்கே நடமாடமுடியாது. செருப்பின் அடிப்பகுதி உருகி தரையில் ஒட்டும்.
அவன் பனையின் அருகே சென்று அமர்ந்தான். பனையன்றி அங்கே நிழல்மரம் ஏதுமில்லை. பனைநிழல் நீளமான கரிய கோடு. அதற்குள் பதமாக உடலை வைத்துக்கொண்டு நிற்கவேண்டும். காற்றில் அனல் வீசி காதுமடல்கள் எரிந்தன.
அவனைச்சூழ்ந்து உலர்ந்த உடைமுள் குவிந்து கிடந்தது. பதினேழு ஏக்கர், சாத்தூரானுக்குச் சொந்தமானது. முள்செறிந்ததுமே வெட்டவேண்டும். ஜூனில் ஒரு சிறிய மழை அடிக்கும். அதில் வெட்டிய வேரிலிருந்து முளைத்துவிடும். பிறகு மழை வேண்டாம். செப்டெம்பர் முதல் டிசம்பருக்குள் ஒரு இரண்டு மழை. வளர்ந்து தலைக்குமேலே போய்விடும். உடைமுள் ஒரு பூதம். மாடன்போல கருப்பு போல. அதற்கு எதுவுமே தேவையில்லை.
அந்த தோட்டத்து முள்ளை முழுக்க அவன்தான் வெட்டினான். நான்குநாட்களாக தனியாக வந்து வேலை செய்து கொண்டிருந்தான். நீண்ட கைப்பிடி கொண்ட அரிவாளால் முள்ளை வெட்டவும் சுருட்டி மலர்த்தவும் முள்ளிலேயே பிறந்து வளர்ந்தவர்களால்தான் முடியும். எப்படி எண்ணி எண்ணி செய்தாலும் ஒவ்வொரு நாளும் நூறு முள்ளாவது கையிலும் காலிலும் உடலிலும் குத்திச் செல்லாமல் இருக்காது. வேறு ஊர்களில் இருந்து அங்கே வேலை செய்ய எவரும் வரமுடியாது. அங்கிருப்பவர்களே ஒவ்வொரு நாளும் கிளம்பிச் சென்று கொண்டிருப்பார்கள்
நிழலைப் பார்த்தபோது மணி பன்னிரண்டு ஆகியிருக்கும் என்று தெரிந்தது. நான்கு மணிக்கெல்லாம் லாரி வந்து விடும். அவன் பனை அடியில் இருந்த மண்கலத்தில் இருந்து தகரப்போணியால் தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு மீண்டும் கவைக்கோலை கையில் எடுத்து முள்ளை உருட்ட ஆரம்பித்தான்.
மாகாளி ஒருமுறை சொன்னான் “வண்டு பீய உருட்டுத மாதிரில்லா நாம முள்ளை உருட்டுதோம்.”
முத்து “ஆமா பீயத்தின்னு வாளணும்னு அதுக்கு உத்தரவு” என்றான் “இது நம்ம சோறாக்கும்.”
“எனக்க சோறு இங்க இல்ல… கெளம்பீரணும். எங்கிணயாம் போயி பரோட்டா போடலாம். ஏல மார்க்கெட்டிலே மூட்ட சுமந்தாக்கூட இதவிட மானமா பொளைக்கலாம். இது தீயிலே நின்று கரியாகுத வாழ்க்கைல்லா?”
“ஊரிலே எப்டியெப்டியோ வாளுதாக. கொல்லுதாக, சாவுதாக, கயவாளித்தனம் பண்ணுதாக… அவுசாரித்தனம் செய்து வாளுதானுக” என்றான் முத்து.
“ஆமா, அதில என்ன செய்தாலும் சோறு உண்டு. இதிலே வெந்தெரிஞ்சு கடைசியிலே சங்கும் வயிறும் சேந்து எரியுதே.”
மாகாளி மெட்ராஸில் பரோட்டாக் கடையில் வேலை பார்க்கிறான். அதற்கு பிறகு ஒருமுறை ஊருக்கு வந்தான். நன்றாக நிறம் வந்து மினுமினுவென்றிருந்தான். ஆளே வேறு மாதிரி தெரிந்தான். அங்கே பார்த்த சினிமாக்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.
“ஏல, நீ நல்லா வெளுத்து செவந்து போய்ட்டியே” என்றான் முத்து.
“லே, அங்க பரோட்டா அடுப்பு பக்கத்திலே நிக்குதேன். ஆனா இந்த மண்ணுலே நிக்குததிலே நூறிலே ஒரு பங்கு சூடு அங்க இல்ல பாத்துக்க. இந்த செங்காடு ஒரு சூளை மாதிரி. சுட்டுக் கரியாக்கிப்போடும்… எப்டியாவது ஓடிரு…. அத்துக்கிட்டு எங்கிட்டாவது போயிரு… அம்பிடுதான் நான் சொல்வேன்.”
முத்து புகைமணத்தை உணர்ந்தான். புகையா? எங்கே? மூக்கை தூக்கிப் பார்த்தான். காற்று சுழன்று சுழன்று வீசியதனால் எந்த திசையில் இருந்து புகைமணம் வருகிறது என்று அவனால் காணமுடியவில்லை. செங்காட்டில் பொதுவாக தீ மூட்டுவதில்லை, அதிலும் கோடைகாலத்தில். பீடியைக்கூட கைபொத்தி பற்றவைத்து இழுத்து மணலில் மூடி அணைப்பாகள். எல்லாமே காய்ந்து கிடக்கும் நிலம்.
ஆனால் சிலசமயம் வெறுமே உடைமுள்ளே பற்றிக்கொள்ளும். காற்றில் உலர்ந்த உடைமுள் மண்ணிலோ கல்லிலோ உரசி தீப்பிடிக்கும். ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடிப்பதுண்டு. பனைமட்டை கருக்குகளும் உரசிக்கொண்டு தீப்பிடிக்கும்.
“இங்க மண்ணிலயும் கல்லிலயும் தீ நிறைஞ்சிருக்கு. வானத்திலே இருந்து தீ மழை விளுது. இந்த செடியெல்லாம் ஒரு சின்ன சத்தியத்துக்க பிடிப்பிலேயாக்கும் தீப்பிடிக்காம நின்னுட்டிருக்கு” என்று சாத்தூரான் சொல்வார்.
சட்டென்று அவன் புகையை கண்டான். உள்ளம் உறைந்து போய் பார்த்தபடி நின்றான். தீக்கு வெளிச்சமே இல்லை. பழைய சிவப்புநிற துணியை உதறுவதுபோலிருந்தது. அது எரிந்தபடி அணுகி வருவது உடைமுள் காட்டுக்குள் செம்மரியாட்டுக்கூட்டம் வருவதுபோல ஓசை எழுப்பியது.
அவன் பதறி மறுபக்கம் ஓட முயன்றபோதுதான் அங்கிருந்தும் தீ வருவதைக் கண்டான். தீ பெரிய நண்டு இரண்டு கைகளையும் விரித்து அணைக்க வருவதுபோல சூழ்ந்து வந்தது. அவன் ஓடுவதற்கு ஒருவழிதான். அங்கே அவன் வெட்டிக் குவித்திட்ட உடைமுள் சுள்ளிகள் ஆளுயரத்திற்கு, இருபதடி அகலத்திற்கு கோட்டைபோல் கிடந்தன.
அவன் தீயை தாவிக்கடந்து விடலாமா என்று பார்க்க ஒருபக்கம் போனான். ஆனால் தீ உறுமத்தொடங்கியிருந்தது. விறகுகள் வெடித்து தெறித்தன. எரிய எரிய மேலும் விறகை உண்டு அது பெரிதாகியது. அவனை விட உயரத்தில் தீக்கொழுந்துகள் எரிந்தன.
அவன் மறு எல்லைக்கு ஓடினான். அங்கு மேலும் வேகத்துடன் தீ வந்தது. அணைதிறந்த வெள்ளம் வருவதுபோல. ஒளியே இல்லாமல் கலங்கல் மழைநீர் போலத்தான் தெரிந்தது. அத்தனை விரைவாக அது அணுகிவிடும் என்று எண்ணியிருக்கவில்லை.
அவன் கவைக்கோலை எடுத்துக்கொண்டு ஓடினான். அதை ஓங்கி ஊன்றி எம்பித்தாவினான். ஆனால் கோல் சற்றே சாய்ந்ததனால் அவன் மேலே எழுந்து நேராக முள்ளுக்குள் சென்று விழுந்தான். தீயில் விழுந்ததுபோலத்தான் இருந்தது. உடலெல்லாம் பற்றி எரிய அவன் முள்ளில் கிடந்து துடித்தான். முள் மேலேயே நீந்தி தவழ்ந்து முள்ளில் மிதித்து எம்பிக்குதித்து அப்பால் செம்மண்ணில் விழுந்தான்.
புரண்டு எழுந்தபோது உடலெங்கும் முள் தைத்திருந்தது. அவனால் நிற்க முடியவில்லை. தள்ளாடி தள்ளாடி விழுந்தான். முள் தைத்த ரத்தம் மீது செம்மண்ணும் உடைமுள்ளின் சிறிய இலைச்சருகுகளும் ஒட்டியிருந்தன.
தீ மிகப்பெரிய உறுமலுடன் தன்னைத்தானே வான்நோக்கி உதறியபடி அலையடித்து பொங்கி எழுந்து வந்தது. அதன் ஓசை மிகப்பெரிய உறுமல் போல ஒலித்தது. அவன் தள்ளாடி நடந்து அருகே கிடந்த கழியை எடுத்து ஊன்றியபடி வெளியே சென்றான். சாலையில் இறங்கி செம்மண் புழுதியினூடாக நொண்டி நொண்டி நடந்தான்.
இரண்டு மூன்று இடத்தில் விழுந்து எழுந்து மீண்டும் விழுந்து அவன் குடிசையைச் சென்றடைந்தான். குடிசையில் யாருமில்லை. அவன் திண்ணையில் அமர்ந்தான். அமர முடியவில்லை. அங்கே நிறைய முள்கள் தைத்திருந்தன. உடலில் எந்தப்பகுதியையும் மண்ணில் வைக்க முடியவில்லை.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. பனம்படல் கதவை திறந்து குடிசைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் பனையோலைக்கூரை. இருட்டு. அது ஒரு பெரிய முட்குவியல் என்று தோன்றியது, எந்த கணமும் பற்றிக்கொள்ளக்கூடியது
அவன் பானையிலிருந்து தண்ணீர் மொண்டு குடித்தபின் திரும்பி வந்தான். திண்ணையில் கையை ஊன்றியபடி முதுகை வளைத்து அசையாமல் நின்றான். உடல் முழுக்க தீப்புண்கள் பட்டதுபோல வலிகள் பரவியிருந்தன. தனித்தனியான வலிகள். ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கமுடியும் போல
எவ்வளவு நேரமாகியது என்று தெரியவில்லை. காலடி ஓசை கேட்டது. அவனால் திரும்ப முடியவில்லை “எட்டீ, கோமதியாட்டீ?”
கோமதிதான். அவள் அருகே ஓடிவந்து “அண்ணே, என்ன அண்ணே” என்றாள்.
“முள்ளிலே விளுந்துபோட்டேண்டீ…” என்றான் முத்து “எனக்க புட்டத்திலே இருக்க முள்ளையெல்லாம் பிடுங்கி எடுடீ”
“அய்யோ அண்ணே!”
“லுங்கிய களட்டு…. ஜட்டியை தாத்து முள்ளை பிடுங்குடீ”
அவள் அவன் ஜட்டியை தாழ்த்தினாள் “அப்டியே முள்ளா இருக்கு…அய்யோ”
“ஒண்ணொண்ணா எடு… என்னால உக்கார முடியாது… எடுடி”
அவள் முட்களை பிடுங்கி பிடுங்கி எடுத்தாள். முள்ளால் ஆழமாக குத்துவதுபோல வலித்தது. “ஆ, யம்மா யம்மா” என்று அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.
“அவ்வளவும் முள்ளு அண்ணா.”
“எல்லாத்தையும் எடு.”
அவள் “இன்னும் சின்ன முள்ளு நிறைய இருக்கு…” என்றாள்.
அவன் திரும்பி கையூன்றி அமர்ந்தான். மெல்ல உடலை நிமிர்த்திக்கொண்டான். முதுகெல்லாம் முள் தைத்திருந்தது. சாய முடியாது. “போயி அம்மாவ கூட்டிட்டுவாடி… ஓடு”
அவள் திரும்பி ஓடினாள். அவன் கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் தீயின் அலைகள் தெரிந்துகொண்டிருந்தன.
அம்மா ஓடிவரும் ஓசை கேட்டுத்தான் அவன் நிலையுணர்ந்தான். அதற்குள் சற்றே தூங்கிவிட்டிருந்தான். அம்மா ஓடிவந்தபடியே “அய்யோ எம் மக்கா! எம் மக்கா!” என்று கூவினாள்.
அவனைக் கண்டதும் “என்னலே ஆச்சு? ஏலே என்னலே ஆச்சு?” என்று அவள் அலறினாள்.
சும்மா கெடந்து சலம்பாதே… முள்ளைப்பிடுங்கு.
“அய்யோ எம்பிடு முள்ளு… யம்மா. ”
“பிடுங்குன்னா…”
அவளும் கோமதியும் முட்களை பிடுங்க தொடங்கினார்கள்.
“ஏலே ரத்தம் வருதுலே.”
“நீ முள்ளை பிடுங்கு முதல்ல.”
அவள் அவன் முட்களை பிடுங்கும்போதே கண்ணீர் விட்டாள். மூக்கை உறிஞ்சும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.
“ஏலே, எம்மக்கா, என்னலே ஆச்சு?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“இதுக்காலே நீ பன்னெண்டாம் கிளாஸு வரை படிச்சே? வேண்டாம்லே. எங்கியாம் போயி வேலை பாரு… என்ன வேலைன்னாலும் செரி.”
“போனா வட்டிக்கு பைசா குடுத்தவன் விட்டிருவானா?”
“அவன் கடனை அடைக்கலாம்ல?”
“எங்க அடைக்குதது? இங்க இருந்தா கண்ணெதிருலே இருக்கோம்னு இருக்கும். கெளம்பிப்போனா அவனுக உன்னை வந்து பிடிப்பானுக. போன தடவை வந்தப்ப குட்டிய வீட்டுவேலைக்கு விடுன்னு ராமசாமி கேட்டாரு.”
“பரோட்டா கடைக்கு போறானுகளே.”
“போலாம், அதான் பேசினோம்ல? பேச்சியப்பன் என்ன சொன்னாரு? ரெண்டுவருசம் படுக்க எடமும் திங்கச்சோறும் மாசம் ஆயிரம் ரூவாயும்… போருமா? வட்டியும்கட்டி வச்சு பொளைப்பியா நீ? பரோட்டா மாஸ்டர் ஆகுறதுக்கு மூணுவருசமாவது ஆகும். அதுவரை பைசாவ கண்ணிலே பாக்கமுடியாது.”
“பின்ன என்னலே செய்ய?” என்றாள் அம்மா “அய்யோ எங்க பாத்தாலும் முள்ளா இருக்கே…யம்மா”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.. வலியை பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொண்டு கிடந்தான். ஆனால் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
கோமதி பொறுமையாக முள்ளை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.
“இவ போன சென்மத்திலே கோளியாக்கும்” என்று முத்து சொன்னான்.
“போ” என்றாள் கோமதி.
அம்மா அந்த வேடிக்கைப் பேச்சால் கொஞ்சம் ஆசுவாசமானாள். “முள்ளை பொறுக்கி எடுடி… சின்னமுள்ளெல்லாம் ஊக்கு வச்சு எடுத்திரு… வேப்பெண்ணை இருக்கு. கொஞ்சம் மஞ்சளை சேத்து சூடு பண்ணி மேலாப்ல போட்டா செரியாயிரும்” என்று எழுந்து சென்றாள்.
கோமதி அவனிடம் மெல்ல “கறிவைக்க வைச்ச கோளி மாதிரி இருப்பே” என்றாள்
“அடி பின்னீருவேன்… “என்று அவன் சிரித்தான்.
அம்மா வேப்பெண்ணையை பூசிவிட்டாள். முதலில் கொஞ்சம் எரிந்தாலும் மெல்ல இதமாக அது உடலில் படர்ந்தது. பாயில் எண்ணை பரவியபோது அதில் முதுகை வைத்து படுக்க முடிந்தது.
“கஞ்சி குடிக்குதியாலே?”
“வேண்டாம்” என்று அவன் சொன்னான். தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது. குடிலுக்குள் இருக்கும் இருட்டில் படுத்தாலே அவனுக்கு தூக்கம் வந்து அழுத்தும்.
அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போதே கோமதி மெல்ல ஊக்கால் முட்களை எடுத்துக்கொண்டிருந்தாள். அவன் அவளுடைய கையையும் ஊக்குமுனை உடலில் குத்துவதையும் உணர்ந்துகொண்டிருந்தான்.
“அம்பிடு முள்ளு… முள்ளு முள்ளா இருக்கு.”
“ஒண்ணொண்ணா எடு” என்று அம்மா சொன்னாள் “அவன் தலையெளுத்து இந்தமாதிரி…” பின்னர் நீண்ட பெருமூச்சுடன் “அவரு கண்ட சொப்பனமெல்லாம் நினைச்சா…” என்றாள். பின்னர் தானாகவே விசும்பி விசும்பி அழத்தொடங்கினாள்.
மாலையில் அம்மா அவனை மெல்லத் தூக்கி அமரச்செய்து அலுமினியக் கோப்பையில் கொஞ்சம் சாராயத்தை ஊட்டினாள்.
“என்ன இது?”
“கொஞ்சம்போல நாட்டுச் சாராயம்லே… சண்முகண்ணாச்சிகிட்ட வாங்கிட்டு வந்தேன். குடிச்சுட்டு சாப்பிடு… உறங்கி எந்திரிச்சா செரியாயிரும்.”
அவன் அந்த கசப்பை ஒரே மூச்சில் விழுங்கி உடலை உலுக்கிக் கொண்டான். அம்மா அவனுக்கு அகப்பையால் கஞ்சி ஊட்டினாள். முக்கால்வாசி குடிப்பதற்குள் அவனுக்கு குமட்டியது.
“அப்டியே படுத்துக்க” என்றாள் அம்மா
அவன் மணலில் ஆழ்ந்து ஆழ்ந்து புதைந்துகொண்டே சென்றான். மணலுக்குள் முட்கள் நிறைந்திருந்தன. அவை அவன் உடலுக்குள் நுழைந்தன. முட்கள் புழுக்கள் போல நெளிந்து நெளிந்து அவனை துளைத்தன.
நள்ளிரவில் விழித்துக்கொண்டபோது உடல் ஓய்ந்து கைகால்கள் செயலற்று கிடந்தன. ஆனால் நல்ல தாகம். அவன் கையூன்றி எழுந்து அமர்ந்தான். அருகே அம்மா செம்பில் நீர் வைத்திருந்தாள். அதை முழுக்க குடித்தான்.
மெல்ல நடந்து வெளியே சென்று குட்டைப்பனை அடியில் சிறுநீர் கழித்தான். பனை காற்றில் சீறிக்கொண்டிருந்தது. வானத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் நின்றது
காற்றில் இருந்த இளம்குளிர் அவன் உடலை சற்றே ஆறுதல்கொள்ளச் செய்தது. அவன் பனையைப்பிடித்தபடி சற்றுநேரம் நின்றான். ஆனால் மீண்டும் தூக்கம் வந்து இமைகள் சரிந்தன
அவன் தள்ளாட்டத்துடன் நடந்து வந்து படுத்துக்கொண்டான். உடலெங்கும் ஒரு வெம்மை பரவியிருந்தது. பல இடங்களில் சிறுபூச்சிகள் கடித்து ஊர்வதுபோல தோன்றியது. சில இடங்களில் ஊசிகள் போல உள்ளே இறங்கியது. சில இடங்களில் தேள்கடிகள். ஆனால் உடல் பாயில் படிந்து கண்கள் மூடின.
முற்றத்தில் யாரோ கூச்சலிடுவதைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். சாத்தூரானின் குரல். அவன் கையை ஊன்றி எழுந்து நின்றான். உடலெங்கும் மஞ்சளும் எண்ணையும் கலந்த பூச்சு. ஜட்டி மட்டும் போட்டிருந்தான். லுங்கி அப்பால் கிடந்தது.
அவன் அதை எடுத்து சுற்றிக்கொண்டு வெளியே சென்றான். சாத்தூரான் கூச்சலிட்டார். “தீய வச்சு கொளுத்திட்டு வந்திருக்கான்… மொத்தக்காடும் தீயாப்போச்சு… நல்லவேளை நேரா மேலே பொட்டலுக்கு போச்சு. அங்க மணலிலே அணைஞ்சுட்டுது… இல்லேன்னா இந்நேரம் போலீஸு புடிச்சிருக்கும் உன் மகனை”
“அவன் என்ன செய்வான்?
“என்ன செய்வான்னு எனக்கு தெரியாது. போனது எனக்க மொதலாக்கும்… எண்ணி பைசாவ வைக்கச் சொல்லு உனக்க மகனை”
“உடையோரே பைசா இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கோம்?”
“அது உனக்க பாடு… நான் விடமாட்டேன்… நான் இதுக்கு கணக்கு பேசி வாங்குவேன்”
“ஒடையோரே” என்று அம்மா கைகூப்பி அழுதாள்
அவன் வெளியே வந்து “நான் தீய வைக்கல்ல… அங்க போயி பாருங்க தீயி நம்ம தோட்டத்திலே வந்த தடம் தெரியும்… யாரு பாத்தாலும் தெரியும்”
“எந்ததடமும் வேண்டாம்லே… நீ பிடிச்ச பீடிதான்… ஏலே எனக்க பைசாவை எண்ணி வை… எண்ணி வைலே ஐயாயிரம் ரூபா”
“ஐயாயிரம் பைசா இருந்தா எடுத்திட்டு போங்க”
“நான் வாங்குதேன். பைசாக்கணக்கை நான் எண்ணி எண்ணி வாங்குதேன்… வெளையாட்டா? நெறைகாட்ட கொளுத்திவிட்டுட்டு பேச்சு பேசுதியா?”
அவர் டிவிஎஸ்50 ஐ கிளப்பிக்கொண்டு சென்றார். அம்மா கைகூப்பியபடி நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவன் களைத்துப்போய் திண்ணையில் அமர்ந்தாள். அம்மா சட்டென்று திரும்பிப்பார்த்து “ஏலே எந்திரி… உடம்ப களுவிட்டு வேட்டிய கட்டு… சட்டைய போடு”
“எங்க போறம்?
“கெளம்புலே”
“டாக்டரை ஒண்ணும் பாக்கவேண்டாம்… செரியாப்போவும்”
“சொல்லுறத செய்லே” என்று அம்மா கூச்சலிட்டாள். மெலிந்து கருமையாகி உடைமுள் சுள்ளி போலவே இருப்பாள். அப்படியே பற்றி எரிந்துவிடுவாள் என்று தோன்றியது.
அவன் எழுந்து கொல்லைப்பக்கம் சென்றான். பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மா அலுமினிய குண்டானில் வெந்நீருடன் வந்தாள். பச்சைத்தண்ணீர் கலந்து அருகே வைத்தாள்.
அவன் அந்த நீரை எடுத்து உடல்மேல் விட்டுக்கொண்டான். வெந்நீர் ரணங்களின்மேல் பட்டபோது உடல் எரிந்து மெய்சிலிர்ப்பு வந்தது. ஆனால் நாலைந்து குவளை விட்டுக்கொண்டபோது மெல்ல உடல் குளிரத்தொடங்கியது. தோளிலும் முதுகிலும் தசைகள் துடித்துக்கொண்டிருந்தன
அம்மா வெளியே வந்து முகம் கழுவினாள். உள்ளே போய் அவளுக்கிருந்த ஒரே கிழியாத சேலையை உடுத்திக்கொண்டாள். கோமதியும் வெளியே வந்து முகம் கழுவினாள்.
அவன் குளித்து விட்டு சென்றபோது அம்மா “துண்ட வச்சு துடைக்காதே… ஒத்திக்கோ” என்று உள்ளிருந்து சொன்னாள்
அவன் வீட்டுக்குள் சென்றபோது அம்மா காக்கி பாண்டும் நீலச் சட்டையும் எடுத்து வைத்திருந்தாள்.
“வெள்ளைச்சட்டைய எடு” என்றான் “காக்கி பாண்டுக்கு நீலச்சட்டையா?”
“எல்லாம் போரும்… வெள்ளைச்சட்டை போட்டாக்க ரத்தம் பட்டிரும்”
“அப்ப நீல பாண்ட எடு”
“அது ரொம்ப சின்னதுலே… பாத்தேன்”
அவன் ஒன்றும் சொல்லவில்லை. காக்கிபாண்ட் கூட சின்னதுதான். சந்தையில் இரண்டாம் விலைக்கு வாங்கியது. ஆனால் கீழே இறக்கிப் போட்டுக்கொள்ளலாம். இடுப்பு நல்ல அகலமானது.
அவன் பாண்டையும் சட்டையையும் போட்டுக்கொண்டான். அம்மா பழைய சோற்றில் உப்பு போட்டு போணியில் கொண்டுவந்து வைத்தாள். “குடிச்சுக்க… அங்க போக நேரமாவும்.”
“எங்க போறம்?”
அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவள் சொல்ல மாட்டாள் என்று தெரிந்தது.
அவள் படலை இழுத்து மூடிவெளியே வருவதுவரை கோமதி தலையைச் சீவிக்கொண்டிருந்தாள்.
“என்னடி அங்க சிங்காரிக்கே? போதும் வா” என்றாள் அம்மா.
“சிக்கு” என்றாள் கோமதி.
“காட்டிலே கெடந்தா முடி அப்டித்தான் இருக்கும்… எண்ணை வச்சியா?”
“இருந்த எண்ணைய அவனுக்கு பூசிவிட்டே.”
முத்து “அப்ப என்மேலே தலைய வச்சு தேச்சிருக்கலாம்ல?” என்றான்.
“போடா.”
அம்மா முன்னால் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து பின்னால் சென்றார்கள். கோமதி ரகசியமாக “எங்க போறம்?” என்றாள்.
“தெரியல்ல” என்றான் “கேட்டா கடிக்க வாறா.”
முப்பது இ பஸ் வருவதற்காக காத்து நின்றார்கள். சாமியப்பா சைக்கிளில் போகும் வழியில் “என்ன குட்டி, பிள்ளைகளோட ஊர விட்டு ஓடுதியோ? கடன்காரன் அங்க தேடிவருவான்லா?” என்றார்.
அம்மா பல்லை மட்டும் கடித்தாள்.
பஸ் வந்தது. கூட்டமே இல்லை. அவர்கள் அமர்ந்துகொள்ள இடம் கிடைத்தது. சன்னலோரம் கோமதி பாய்ந்து அமர்ந்தாள். அவனுக்கும் அப்படி கூட்டமில்லாத பஸ்ஸில் சாலையோரம் பார்த்துக்கொண்டு போவது பிடித்திருந்தது. பஸ்ஸில் இருந்து பார்த்தால் உடைகாடுகூட அழகாகத்தான் இருக்கிறது.
பஸ் ஸ்டாண்டில் இறங்கி ராதாபுரம் போகிற பஸ்ஸில் ஏறினார்கள். சமூகரெங்கபுரம் தாண்டியதுமே அம்மா எழுந்துகொண்டாள்.
“எய்யா, சீலாத்திகொளம் எங்க எறங்கணும்?”
“அடுத்த ஸ்டாப்பு” என்றார் கண்டக்டர்.
சீலாத்திக்குளத்தில் அவரே விசில் அடித்து “சீலாத்திக்குளம்!” என்றார்.
அவர்கள் இறங்கியதும் “இங்க ஆரு?” என்றான்.
“இங்க ஒரு ஆளு உண்டு… வாங்க” என்று அம்மா சொன்னாள்.
ஊருக்குள் செல்லும் வழியின் இருபக்கமும் காகிதமும் பிளாஸ்டிக்கும் குப்பை மலைகளாக குவிந்திருந்தன. உடைமுள் புதர்களில் பிளாஸ்டிக் உறைகளும் பழைய துணிகளும் சிக்கி காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. ஊருக்குள் செல்லும் பாதை நடுவே சிமிண்ட் போட்டிருந்தார்கள் போல. அது உடைந்து மீண்டும் மண்சாலையாக ஆகியிருந்தது.
எதிரே வந்த கிழவரிடம் “எய்யா, இசக்கியப்பன் வீடு ஏது?”
“ஆரு, பாம்பேக்காரரா?”
“ஆமா.”
“அந்தா புதிய மஞ்சபெயிண்டு வீடு… பைக்கு நிக்குதுல்லா?” என்றார்.
அந்த வீடு கட்டி முடியவில்லை. ஒருபக்கம் செங்கல் தெரிந்தது. ஆனால் முன்பக்கம் மஞ்சள் டிஸ்டெம்பர் அடித்து புதிய பெட்டி போல தெரிந்தது. சற்று பெரிய வீடுதான். வீட்டின் நிலைவாயில் முகப்பில் செவ்வந்தி ஆரம் போடப்பட்டிருந்தது. இரண்டுநாள் பழைய ஆரம். மாவிலைத் தோரணம் காய்ந்திருந்தது. நிலைகள்மேல் குங்குமமும் சந்தனமும் கலந்து பொட்டு போட்டிருந்தனர்.
அம்மா முற்றத்தில் நின்று “அய்யா…அய்யா!” என்றாள்.
“ஆரு” என்றபடி உள்ளிருந்து தடிமனான பெண் வந்தாள். நீலநிறத்தில் புதிய பாலிஸ்டர் புடவை கட்டி பூ வைத்திருந்தாள். “ஆரு?”
“நான் லெச்சுமி…நடுவாக்குறிச்சி லெச்சுமி”
அவள் முகம் மாறியது. “வாங்க” என்று மெல்ல சொன்னாள்.
“அவுக இருக்காகளா?” என்று கேட்டபடி அம்மா படி ஏறினாள் “வாங்க…வாலே” என்றாள்.
அவர்கள் செருப்பை முற்றத்திலேயே கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் நாலைந்து பிளாஸ்டிக் செயர்கள் போடப்பட்டிருந்தன. தரையில் மொசைக் போட்டிருந்தது. அதில் உள்ளே ஈரம் காயாததுபோல குளுமை இருந்தது. அந்த அறையில் சுண்ணாம்பு வாசனை நிறைந்திருந்தது. மேலே ஒரு ஃபேன் சுற்றியது. ஒரு கலர் டிவி ஓடிக்கொண்டிருந்தது.
“அவுகள பாக்கணும்” என்று அம்மா சொன்னாள்.
“எதுக்கு?”
அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
“உறங்குதாக… விளிக்கேன்.”
அவள் உள்ளே செல்ல அம்மா கைகளை மார்பின்மேல் கும்பிடுவதுபோல வைத்தபடி நின்றாள்.
உள்ளே என்னவோ பேச்சுக்குரல்கள் கேட்டன. ஒரு பையன் வெளியே வந்து அவர்களை பார்த்தான். கோமதியின் வயது இருக்கும். அவர்களை மாறிமாறி பார்த்தபின் உள்ளே சென்றான்.
சுடிதார் போட்ட ஒரு பெண் வெளியே இருந்து உள்ளே வந்தாள். கையில் இருந்த ராணி வார இதழை பிளாஸ்டிக் நாற்காலிமேல் போட்டுவிட்டு அவர்களை பார்த்து “ஆரு?” என்றாள்.
“அவுகளை பாக்கணும்” என்றாள் அம்மா.
அவள் “சொல்லுதேன்” என்று உள்ளே போனாள். அவள் மாந்தளிர் நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். தலைமயிரை தளர்வாக கோதி பின்னால் சரித்திருந்தாள். அவள்முன் அப்படி பழைய சட்டையுடன் நிற்க முத்து கூசினான்.
கோமதி ரகசியமாக “மாம்பழக்கலர் சுடிதார்ணே” என்றாள்.
“ம்” என்றான் முத்து
உள்ளிருந்து சற்றே தொப்பை போட்ட கருப்பான உயரமான ஒருவர் வெளியே வந்தார். கண்களைச் சுருக்கியபடி அம்மாவைப் பார்த்தார். அம்மா வந்திருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனாலும் நேரில் பார்த்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்ததை காணமுடிந்தது.
அம்மா “நான் லெச்சுமியாக்கும். நடுவாக்குறிச்சி லெச்சுமி” என்றாள்.
“ம்” என்றபடி அவர் நாற்காலியில் அமர்ந்தார்.
“பாக்கணும்னு வந்தேன். இது எனக்க மகன், இது மக. லே கும்பிடுலே.”
முத்து கும்பிட்டான். கோமதி அவன் பின் மறைந்து நின்றாள்.
“நீ இப்ப நடுவாக்குறிச்சியிலேயா இருக்கே?”
“அங்க என்ன இருக்கு? இவனுக்க அப்பன் கூட செங்காட்டுக்கு போயாச்சு… கருவாக்குளத்துக்கு பக்கத்திலே காட்டிலே குடிசை… பனையேறி ஒருமாதிரி தேறிவாற நேரத்திலே…”
அம்மாவால் பேசமுடியவில்லை. அவர் “ம்” என்றார்.
“இப்ப நடுத்தெருவிலே நிக்கேன்… ஆஸ்பத்திரிச்செலவுக்கு வாங்கின கடன் அந்தால வட்டியோட வளர்ந்துபோச்சு. மூணாளும் கூலிவேலை செய்தாலும் வாளமுடியல்ல.”
அவர் அசைந்து அமர்ந்தார். அந்தப்பக்கமாக பார்த்தார். அங்கே அவர் மனைவி வாசலுக்கு அப்பால் நின்றிருந்தாள்.
“என் பய பன்னிரண்டாம் கிளாஸ் பாஸாக்கும்… கரையேத்தி விடணும்… கைபிடிச்சு கூட்டிட்டு போகணும். எனக்கு ஆருமில்லை… எனக்கு வேற ஆருமில்லை தொணை”
“நான் வேணுமானா…”
“இவனையும் பாம்பேய்க்கு கூட்டிட்டு போங்க… எங்கியாம் சேத்துவிடுங்க”
“பாம்பேயிலே நான் பரோட்டா கடையாக்கும்.”
“அதிலே வச்சுகிடுங்க…” என்று அம்மா சொன்னாள் “இங்க பரோட்டாக்கடைக்கு போலாம்னா மூணுவருசம் ஒண்ணும் குடுக்க மாட்டாக… வீட்டுக்கு அவன் மாசம் ஒரு நாலாயிரம் ரூபா அனுப்பணும்… இல்லேன்னா கடன்காரனுக என்னையும் என் மகளையும் கொன்னுபோடுவானுக.”
அவர் அமைதியிழந்தார். எழுந்து அசைந்து அமர்ந்து “நீ நினைக்கிற மாதிரி இல்ல… பாம்பேயிலே ரொம்ப கஷ்டமாக்கும்” என்றார்.
“இங்க படுத கஷ்டம் அதுக்கும் மேலே.”
“நான் சொல்லுகத கேளு… இங்க நான்—”
அம்மா சட்டென்று அவன் சட்டையை பிடித்து மேலே தூக்கினாள் “பாருங்க…. இந்த உடம்ப பாருங்க… முள்ளு. அம்பிடும் முள்ளு… நார்நாரா கிளிஞ்சிருக்கு உடம்பு. புலியடிச்ச மாதிரி… அடிச்சது அந்த மண்ணு. அந்த மண்ணாக்கும் புலி. அது என் பிள்ளைய கொன்னு தின்னிரும்… என் பயல காப்பாத்துங்க.”
அவர் திகைப்புடன் அவன் உடலை பார்த்தார். “என்னது?” என்றார்
“முள்ளுவேலை” என்றான் முத்து.
அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். “செரி, என்கூட வரட்டு” என்றார்.
“சாமியா கும்பிடுவேன்… என் குலசாமியா கும்பிடுவேன்” என்று அம்மா கைகூப்பி அழுதாள்.
“சாப்பிடுங்க…” என்றபடி அவர் எழுந்து உள்ளே சென்றார்.
உள்ளே பெண்குரலில் ஏதோ பேச்சு கேட்டது. அவர் உரத்த குரலில் “ஆமா, அப்டித்தான். அதுதான். நான் சொன்னா செய்யணும். எனக்கு மறுசொல்லு சொல்லுதவ என் வீட்டிலே இருக்கவேண்டாம்!” என்றார். “புரியுதா?”
பிறகு அமைதி. அந்த இளம்பெண் வெளியே வந்து “வாங்க , கைய களுவிட்டு சாப்பிடுங்க” என்றாள்
“இல்ல வேண்டாம்” என்றாள் அம்மா.
“அப்பா சொன்னதை செய்தாகணும்… ஆரா இருந்தாலும். வாங்க.”
அவளே அவர்களை உள்ளே கொண்டுபோய் சமையலறையை ஒட்டிய அறையில் அமரச்செய்தாள். அவளே இலைபோட்டு சோறு பரிமாறினாள். கறிக்குழம்பு ஊற்றினாள்.
அவனும் கோமதியும் அம்மாவைப் பார்க்க அம்மா “சாப்பிடுங்க” என்றாள்.
அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். கறிக்குழம்பு காரமாக நன்றாக இருந்தது. முத்து கறிக்குழம்பைச் சாப்பிட்டு நீண்டநாள் ஆகியிருந்தது.
“இவன் என்ன படிக்கான்?” என்று அந்தப்பெண் கேட்டாள்.
“பிளஸ்டூ பாஸ்…. மூணுவருசமாகுது.”
“மேலே படிக்கலையா?”
“இல்ல வசதி இல்ல.”
“அதான் அப்பாகூட போறீங்களா?”
அவன் “ஆமா” என்றான்.
அவள் அம்மாவிடம் “உங்களைத்தான் அப்பாவுக்கு முதல்ல பொண்ணு பாத்ததா?” என்றாள்.
அம்மா தலைகுனிந்து சிலகணங்கள் அமர்ந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டாள்.
அவள் இனிமையான சிரிப்பு கொண்ட பெண்ணாக இருந்தது அவர்களின் கூச்சத்தை இல்லாமலாக்கியது. முத்து அள்ளி அள்ளி சாப்பிட்டான். இன்னும் இரண்டுமுறை சோறு வாங்கிக்கொண்டான்.
“நானும் கறிக்கொளம்பு வைப்பேன்” என்று அவள் சொன்னாள் “ஆனா அம்மா வைச்சாத்தான் ருசி.”
“வீடு இப்பதான் கட்டினதா?”
“ஆமா, கிருகப்பிரவேசம் போனவாரம்… அப்பா அதுக்குத்தான் வந்தாக. நாளைக்கு போகணும்.”
“உன் பேரு என்ன தாயி?” என்றாள் அம்மா.
“மகாலச்சுமி.”
“நெறைஞ்சு வாழணும்” என்று அம்மா சொன்னாள்.
“இவ என்ன சாப்பிடவே மாட்டேங்குதா… கறிபோட்டுக்க குட்டி” என்றாள் மகாலட்சுமி.
“அய்யோ போரும்.”
“நீ என்ன படிக்கே?”
“படிக்கல்ல” என்று கோமதி சொன்னாள்.
“நீ என்ன படிக்கேம்மா?” என்றாள் அம்மா.
“எஞ்சீனியரிங் செகண்டியர்… கம்யூட்டர் சயன்ஸ்” என்றாள் மகாலட்சுமி “இவ பேரு கோமதில்லா?”
“ஆமா”
அவர்கள் சாப்பிட்டு முடித்து வந்தபோது அவர் வந்து அப்பால் நின்று “நான் நாளைக்கு சாயங்காலத்துக்கு பாம்பேய்க்கு டிரெயின் போட்டிருக்கேன். இவன் கூட வரணும்னா பொதுப்பெட்டியிலதான் வரணும்…” என்றார்.
“அவன் எப்டியும் வந்திருவான்” என்று அம்மா சொன்னாள். சட்டென்று அழ ஆரம்பித்து அவன் தீயில் மாட்டிக்கொண்டதையும் முள்ளில் பாய்ந்ததையும் சொன்னாள். கடன், வட்டி, வாராவாரம் கேட்கும் மானம்கெட்ட பேச்சு. அவனை படிக்க வைக்க அவன் அப்பா கண்ட கனவு. “பனையிலே இருந்து விளுந்துட்டாரு… அந்த மண்ணிலே இருக்குத தீ ஆரையும் வாளவிடாது” என்றாள்.
அவர் ஒன்றும் சொல்லவில்லை. திரும்பி அவனிடம் “எலே, போயி உனக்க துணி பெட்டி எல்லாம் எடுத்திட்டு வா.”
முத்து பேசாமல் நின்றான்.
“துணி பெட்டி ஒண்ணும் இல்ல” என்றாள் அம்மா.
“ஓ” என்றார். “உனக்க சர்ட்டிபிகெட்டு எடுத்துக்க. ரேசன் கார்டுக்க காப்பியும் வேணும்.”
“எடுத்திட்டு வாறேன்” என்றான்.
“இல்ல ,உனக்க அம்மை போயி கொண்டுவரட்டும்…நீ இங்க இரு. உனக்கு சட்டையும் பேண்டும் வாங்கணும்”
“நான் போயில் காலம்பற கொண்டாரேன்” என்றாள் அம்மா.
“கோமதி இங்க நிக்கட்டு” என்று மகாலட்சுமி சொன்னாள்.
“இல்ல, நான் அம்மாகூட போறேன்” என்றாள் கோமதி.
அவர்கள் முற்றத்திற்குச் சென்றார்கள். விடைபெறும்போது அம்மா அவனிடம் “வாறேம்லே…எல்லாம் பாத்து செய்வாருலே… பக்குவமா கூடவே இருந்துக்க” என்றாள்.
இசக்கி எட்டிப்பார்த்து கோமதியிடம் “ஏட்டி, இந்தா” என்று ஒரு சுருள் நோட்டுக்கற்றைகளை கொடுத்தார். கோமதி அம்மாவை பார்த்துவிட்டு, அவள் கண்களை காட்ட ,வந்து வாங்கிக்கொண்டாள்.
அம்மா “வாறேன்” என்றாள்.
அம்மா சென்றபின் அவர் முத்துவிடம் “ஏலே பைசா குடுக்கேன். ராதாபுரம் போயி நாலு சட்டையும் பேண்டும் ஒரு சோடி செருப்பும் வாங்கிக்கோ” என்றார்.
“செரி” என்றான்.
அவர் அவனிடம் எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார்.
“ரொம்ப இருக்கு” என்றான்.
“பளையத வாங்கச் சொல்லல்ல. ரெடிமேடு கடையிலே போயி புதிசாட்டு வாங்கு. ஒரு சூட்கேஸும் வாங்கிக்க.”
அவன் மூச்சுத்திணறினான். தலையை மட்டும் அசைத்தான்.
“ராதாபுரத்திலே கண்ணன் ரெடிமேட்ஸ்னு ஒரு கடை இருக்கு. அங்க போ. என் பேரச்சொல்லு.”
பணத்துடன் பஸ் ஏறி ராதாபுரம் போனான். அங்கே கண்ணன் ரெடிமேட் கடையில் அவர் பெயரை சொன்னான்.
“ஆ இசக்கியப்பனா? நீ அவருக்கு என்ன மொறை?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“மருமகனாலே?”
“ஆமா” என்றான்.
“இரு அளந்துகிடுதேன்.”
அவர் டேப் வைத்து அவனை அளந்து சட்டைகளை எடுத்துபோட்டார். அவன் இளநீலத்திலும் தவிட்டுநிறத்திலும் சிமிண்ட் நிறத்திலும் மூன்று பாண்ட்களை எடுத்துக்கொண்டான். சாக்லேட் நிறத்திலும் பிஸ்கட் நிறத்திலும் இளநீலத்திலும் தவிட்டுநிறத்திலும் நான்கு சட்டைகளை எடுத்தான். இரண்டு டிஷர்டுகள். ஒன்று சிவப்பு நிறம், ஒன்று நீலநிறம். இரண்டு லுங்கி, நான்கு ஜட்டிகள்.
ஒரு ஜோடி செருப்பும் ஒரு சின்ன பெட்டியும் வாங்கினான். மொத்தம் ஏழாயிரத்தி நாநூறு. அறுநூறு ரூபாய் மிச்சமிருந்தது. துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டான். செருப்பையும் உள்ளே வைத்தான்.
உடம்பில் போடுவதற்கு மெடிக்கல் ஷாப்பில் கேட்டு ஒரு ஆயின்மெண்ட் வாங்கிக்கொண்டான். அங்கேயே ஓரமாக ஒரு சந்தில் சென்று நின்று உடம்பில் போட்டுக்கொண்டான்
அவன் திரும்ப வந்தபோது அந்தியாகியிருந்தது. முற்றத்தில் மகாலட்சுமி உலவிக்கொண்டே படித்துக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் “புதுச்சட்டை வாங்கியாச்சா?” என்று சிரித்தபடி கேட்டாள்
அவன் வெட்கத்துடன் “ஆமாம்” என்றான்.
“போட்டுட்டு வரவேண்டியதுதானே?”
“இல்ல, நாளைக்கு போட்டுக்கறேன்.”
அவள் சிரித்தாள். அவன் வீட்டுக்குள் நுழைந்தான். பெட்டியை கூடத்தில் ஓரமாக வைத்தான். மகாலட்சுமி பின்னால் வந்து “அந்த சைடு ரூம்லே இருந்துக்கோ” என்றாள். பெட்டியுடன் அந்த அறைக்குள் சென்றான்.
அவன் சட்டையை கழற்றலாமா என்று எண்ணினான். ஆனால் எவராவது கூப்பிட்டுவிடலாம் என்று தோன்றியது.
அந்தச்சிறுவன் வாசலில் நின்று “அப்பா விளிக்காரு” என்றான்.
அவன் எழுந்து சென்று இசக்கியின் அறை வாசலில் நின்றான். அவர் எவரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். மிகுந்த கவலையும் பதற்றமுமாக பேசுவதுபோலிருந்தது. “ஆமா, ஆமா, நான் சொல்லுதேன். அண்ணாச்சி நான் சொல்லுதேன். நான் சொல்லிடுதேன் அண்ணாச்சி. நீங்க அவங்க கிட்ட சொல்லுங்க… அம்மையாணை, என் பிள்ளைக மேல ஆணை நான் எந்த தப்பும் செய்யல்ல. நான் நேரிலே வந்து சொல்லுதேன். வந்து காலிலே விளுதேன்.” ’
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “பேசிப்பாருங்க அண்ணாச்சி. நீங்கதான் எனக்கு எல்லாம். நான் உங்களை நம்பி இருக்கப்பட்டவன்” என்றார்.
சென்போனை அணைத்துவிட்டு அவனிடம் “உனக்கு இங்கிலீஷ் எழுத தெரியுமாலே?” என்றார்.
“தெரியும்” என்றான்.
“இந்தா இந்த அட்ரஸை இந்த கவரிலே எளுது… இது நம்ம பாம்பே அட்ரஸ். இது லெட்டர் போற அட்ரஸ்.”
அவன் அதை எழுதியதும் “இதை கொண்டுபோயி கூரியரிலே போடணும்…நாளைக்கு காலையிலேயே கெளம்பிடு… ராதாபுரத்திலே கொண்டுபோய் போட்டுட்டு வா. நாம இங்கேருந்து மத்தியான்னம் கெளம்பி திருச்செந்தூர் போகணும்” என்றார்.
முத்து “சரி” என்றான்.
அவர் அவனை பார்த்து ஏதோ சொல்ல விரும்புபவர் போல இருந்தார். அவன் காத்து நின்றான்.
“நீ வாற எடம் அவ்ளவு செரியில்ல… அங்க வந்த பிறகு தெரியும்” என்றான்.
“செரி”
“ஆனா உன் உடம்பு இருக்குற நெலைமைய பாத்தப்ப இதைவிட அதுவே மேலுன்னு தோணிச்சு…” அவர் சற்றே தயங்கி “இங்க வானத்திலயும் தீ, மூணுபக்கமும் தீ. ஒரு பக்கம் முள்ளு” சட்டென்று கசப்புடன் புன்னகைத்து “அங்கவந்தா அஞ்சுபக்கமும் தீயாக்கும்…” என்றார்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“பளைய தெருக்கூத்து நாடகத்திலே சுடலைமாடன் அப்டி தபஸு செய்வான். நாலுபக்கமும் தீ, மேலே சூரியன். அஞ்சுதீ தபஸுன்னு அதுக்கு பேரு… இங்க சில கோயிலிலே அதை ஒரு சடங்கு மாதிரியும் நடத்துவாங்க. தீய மூட்டிட்டு நடுவிலே கைய தலைக்குமேலே தூக்கி ஒத்தக்காலிலே நின்னுட்டு…”
அவன் தலையசைத்தான்.
“செரி போ.”
அந்த இரு கவர்களுடன் தன் அறைக்கு வந்தான். மகாலட்சுமி வந்து “சாப்பிடுறியா?” என்றாள்.
“அவரு?”
“அவருக்கு ரூமிலே குடுப்போம். இம்பிடுபோல ரம்மு சாப்பிடுவாரு.”
அவன் “ஓ” என்றான்.
“நீ ரம்மு குடிப்பியா?”
“அய்யோ!”
அவள் சிரித்தபடி சென்றாள். அவன் அவளை தொடர்ந்து சென்றான். அவள் அம்மா தோசை வார்த்து தந்தாள். அவன் நாலைந்து தோசை சாப்பிட்டான்.
திரும்ப வந்தபோது அறைக்குள் பாயும் தலையணையும் வைக்கப்பட்டிருந்தது. அவன் கதவை மூடி ஃபேனை போட்டான். சட்டையைக் கழற்றிவிட்டு படுத்துக்கொண்டான். உடம்பில் அந்த ஆயின்மெண்டை மீண்டும் போட்டான். ஃபேன் காற்றில் உடலில் ஆயின்மெண்ட் குளிராக இருந்தது
அவன் விழித்துக்கொண்டபோது யாரோ அழுவதுபோல் இருந்தது. யார்? கனவா? அவன் எழுந்து அமர்ந்தான். மெய்யாகவே எவரோ அழுதுகொண்டிருந்தார்கள்.
எழுந்து வெளியே கூடத்திற்கு வந்தான். இசக்கியின் அறை திறந்திருந்தது. அவன் உள்ளே பார்த்தான். மெத்தைமேல் ஏதோ கிடந்தது. அவன் திடுக்கிட்டு கூர்ந்து பார்த்தான். ஒரு துப்பாக்கி.
துப்பாக்கியேதான். கரியது. ஆயிரங்காலட்டையின் உலோகப் பளபளப்பு. அவன் அதையே பார்த்துக்கொண்டு நின்றான். அதற்கு கண்ணை ஈர்த்து, விலகவே செய்யாதபடி கவ்வி நிறுத்தும் ஆற்றல் ஒன்று இருந்தது. செங்காட்டில் ஒருமுறை அவன் நரியை பார்த்திருக்கிறான். அதன் கண்கள் அவனை அவ்வாறு ஈர்த்து அசைவில்லாமல் நிற்கச்செய்தன.
இசக்கியின் குரல் சட்டென்று ஓங்க அவன் திரும்பிப் பார்த்தான். அவர் முற்றத்தில் உலவியபடி ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். குரல் அழுவது போலிருந்தது. இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். மெய்யாகவே அழுகிறார்.
அவன் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கைகளை நீட்டி இறைஞ்சுபவர் போல தோன்றினார். கண்ணீர் விட்டார். தன் தலையில் தானே அடித்துக்கொண்டார். விசித்திரமான ஒரு நாடகம் போலிருந்தது அவருடைய அசைவுகளும் பேச்சும்.
செல்போனை அணைத்துவிட்டு அவர் கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே வந்தார். அவன் காலடியோசை கேட்காமல் சென்று படுத்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு அந்த துப்பாக்கியை நினைவில் எழுப்பினான். அது துப்பாக்கிதானா? அவன் பல படங்களில் பார்த்திருக்கிறான். அதெல்லாம் பொம்மை துப்பாக்கி என்பார்கள். இல்லை, அது பொம்மை துப்பாக்கி இல்லை. மெத்தைமேல் அது கிடந்தவிதம் ஒரு சீமானுக்குரியது
முத்து அதை கனவிலும் கண்டான். அவன் படுத்திருக்கும்போது மிக அருகே அது இருந்தது. அவனுடைய வயிற்றுக்கு அருகே. அங்கே ஒரு நச்சுப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதுபோல. ஒரு சின்னக்குழந்தைபோல. எவரோ அறைக்குள் வந்தார்கள். அவன் சட்டென்று அதை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு எழுந்தான். அங்கே ஒரு கட்டு நோட்டும் இருந்தது. எழுந்தபின் அது கனவு என்று உணர்ந்தான். மீண்டும் படுத்துக்கொண்டன்
காலையில் அவன் பலமாக கதவைத்தட்டும் ஓசை கேட்டு கண்விழித்தான். முதலில் எங்கே இருக்கிறோம். என்ன நிகழ்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னர் எழுந்து அமர்ந்து வாயைத் துடைத்துக்கொண்டான். இசக்கியின் அறைக்கதவை மகாலட்சுமியும் அவள் அம்மாவும் சேர்ந்து தட்டிக் கொண்டிருந்தார்கள்
அவன் சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வந்தான். “என்ன? என்னாச்சு?” என்றான்
“கதவைத் திறக்கமாட்டேங்குதாரு தம்பி….” என்றாள் மகாலட்சுமியின் அம்மா “ரொம்பநேரமா தட்டுதோம்..என்னன்னு தெரியல்லியே. “
மகாலட்சுமி அழுதுகொண்டிருந்தாள். முந்தைய இரவின் நினைவெழுந்ததும் அவனுக்கு நெஞ்சில் கொள்ளித் தீயால் தொட்டது போலிருந்தது. பாய்ந்து வெளியே சென்று சுற்றிக்கொண்டு சென்று அந்த அறையின் மறுபக்க சன்னலை அடைந்து அதன் விளிம்பை பிடித்து இழுத்தான். ஒரு கதவு திறந்தது.
உள்ளே இசக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். தலைகுனிந்து இரு கைகளையும் தொங்கவிட்டு நிற்பதுபோலத் தெரிந்தார்
அவன் அலறியபடி ஓடி மீண்டும் முற்றத்திற்கு வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அப்பால் திண்ணையில் சிறிய அம்மி கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். அவன் முதுகெலும்பு அதிரும் எடை கொண்டிருந்தது அது.
“வெலகுங்க… வெலங்குங்க” என்று கூவியபடி வந்தான். அதை தூக்கி கதவை அறைந்தான். பலமுறை கதவில் அதைக்கொண்டு முட்டினான். கதவின் மேலே உள்ளே தாழிட்டிருப்பது அதிர்விலிருந்து தெரிந்தது. அம்மியை தலைமேல் தூக்கி அந்த புள்ளியில் அடித்தான். உள்ளே தாழ் ஸ்குரூவுடன் பெயர்வது தெரிந்தது. நாலாவது அடியில் கதவு பிளந்து விலக கையிலிருந்த அம்மி உள்ளே விழுந்தது
அவனுக்குப் பின்னால் பெண்கள் இருவரும் கூச்சலிட்டு கதறிக் கொண்டிருந்தனர். அவன் உள்ளே நுழைந்து ஓடி இசக்கியை அணுகி அவர் காலை தொட்டான். நன்றாகக் குளிர்ந்திருந்தது. அவர் தூக்கில் தொங்கி நீண்டநேரம் ஆகியிருக்கவேண்டும். தரையில் சிறுநீர் கொட்டி காயத்தொடங்கியிருந்தது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்
மகாலட்சுமி “ரத்தினம் மாமாவ விளியுங்க… ரத்தினம் மாமா… இங்கதான் அவருக்க வீடு” என்று கூச்சலிட்டாள். வெறியுடன் அலறிக்கொண்டிருந்த அவள் அம்மா சுவரைப்பிடித்துக்கொண்டு நின்று தள்ளாடி சட்டென்று மயங்கி விழுந்தாள்
அவன் அவளை நோக்கி செல்ல, “நான் பாத்துக்கிடுதேன்… ரத்தினம் மாமாவ விளிச்சுகிட்டு வாங்க” என்று மகாலட்சுமி கூவினாள்
அவன் வெளியே ஓடி தெருவினூடாக சென்றான். எதிரே வந்தவர்களிடம் “ரத்தினம் மாமா வீடு…” என்று கூவிக்கேட்டான்
“அந்த செவப்பு பெயிண்டு வீடு….”
ரத்தினம் அதற்குள் வெளியே வந்துவிட்டிருந்தார். அவன் ஓடிச்சென்று நின்று “மாமா, இசக்கி மாமா, தூக்கிலே….” என்று மூச்சிரைத்தான்
“அட படுக்காளிப்பயலே!” என்று அலறியபடி அவர் இசக்கியின் வீடு நோக்கி ஓடினார். அதற்குள் அங்கே பலர் கூடிவிட்டிருந்தனர். மேலும் பலர் அந்த வீடு நோக்கி ஓடினர். முத்து கால் தளர்ந்து மிக மிக மெல்ல நடந்து வீட்டை அடைந்தான். கடும் தாகம் எழுந்தது. அவன் உடலெங்கும் பொருக்கோடியிருந்த முள்காயங்களும் கீறல்களும் திறந்துகொண்டு ரத்தம் கசிந்தன.
அதற்குள் இசக்கியை அறுத்து கீழே போட்டிருந்தார்கள். இருவர் அவரை தூக்கி கொண்டுவந்து கூடத்தில் படுக்க வைத்தார்கள்
ரத்தினம் “போலீஸு கேஸாக்கும்…” என்றார் “அவனுகளுக்கு தாக்கல் சொல்லியாகணும்… பிரச்சினை ஆயிடும்” என்றார்.
“தலையாரியை ராதாபுரத்துக்கு அனுப்பி செய்தியச் சொல்லலாம். அபிசியலா போறது நல்லது” என்றார் ஒருவர்
“பில்கலெக்டர் தங்கப்பனும் போவட்டும். கவர்மெண்ட் ஆளுக ரெண்டுபேரு போறது இன்னும் நல்லது”
அவர்கள் வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தனர். கூடத்தில் இசக்கியின் உடல் படுக்க வைக்கப்பட்டிருந்தது. கழுத்தில் கயிறு இறுகிய இடம் ஆழமாக உள்ளே இழுபட்டிருக்க கழுத்தே ஒடிந்தது போல மடிந்திருந்தது. நாற்றத்திற்கு முகம்சுளிப்பதுபோல இருந்தது அவருடைய பாவனை.
முத்து அவருடைய அறைக்குள் சென்றான். அங்கே எவருமில்லை. படுக்கையை அணுகி தலையணையை தூக்கிப்பார்த்தான். துப்பாக்கி இருந்தது, அருகே ஒரு கட்டு இருநூறுரூபாய் நோட்டு. துப்பாக்கியையும் பணத்தையும் எடுத்து சட்டைக்குள் செருகிக்கொண்டான். வெளியே சென்று தன் அறையை அடைந்து பெட்டிக்குள் அவற்றை லுங்கியில் சுற்றி வைத்து மூடினான்.
வெளியே நல்ல கூட்டம் வந்துவிட்டது. சொந்தக்காரர்கள் , ஊர்க்காரர்கள். பெண்கள் கதறி அழுதுகொண்டிருந்தனர். தலைவிரிகோலமாக மகாலட்சுமியும் அவள் அம்மாவும் அமர்ந்திருந்தனர்.
முத்து வெளியே சென்று முற்றத்தில் நின்றான். முற்றத்திலும் நல்ல கூட்டம். பிளாஸ்டிக் நாற்காலிகளில் ரத்தினமும் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். அவன் முற்றத்தின் ஓரம் வேப்பமரத்தடியில் நின்றான். அங்கே ஏராளமானவர்கள் வெற்றிலை துப்பி வைத்திருந்தனர்
தொலைவில் அம்மா வருவதை அவன் கண்டான். கூட்டத்திலிருந்து விலகி அம்மாவை தேடிச்சென்று வழியிலேயே சந்தித்தான்
“ஏலே என்னலே ஆச்சு? ஏலே….. வாற வழியிலே சொன்னாக!” என்றாள் அம்மா. அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்
“என்னான்னு நமக்கு தெரியாது…”
“நாம என்னலே செய்ய? யம்மா, முத்தாலம்மா, எனக்க அம்மா,, மலைமாதிரி நம்பிட்டு வந்தேனே”
“நான் கெளம்புறேன்… நாளைக்கு”
“எங்க?”
“பாம்பேய்க்கு… இசக்கிமாமா கடைக்கு”
“நீ எப்டிலே? அவரு இல்லாம?”
“பரவால்ல. எங்கிட்ட அட்ரஸ் இருக்கு”
“நீ எப்டிலே அந்தா தொலை போவே?”
“போவேன்…” என்று அவன் சொன்னான் “போயாகணும்லா? பாத்துக்கிடுதேன்”
***
(மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2020 மே 3)