பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் [குருவி கதையை வைத்தே இதைச் சொல்கிறேன்]
உம்பர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் இந்த துப்பறிதல் என்ற வடிவத்தை ஏன் கையில் எடுத்தார்கள் என்றால் அது பண்பாடு வரலாறு தனிநபர் ஆகிய பலகதைகளை ஒன்றாகக் கோத்துக்கொண்டே போகும் வசதி கொண்ட வடிவம் என்பதனால்தான்.
இந்தக்கதையிலேயே ஔசேப்பச்சன் துப்பறிந்துகொண்டே செல்வது மாப்பிளை பண்பாடு, அவர்களின் வரலாறு, அதில் ஊடாடும் தனிநபர்களின் வாழ்க்கைப்பிரச்சினைகள் ஆகியவற்றைத்தான்
தமிழின் நவீன இலக்கியக் கதைசொல்லும் முறையிலேயே மிகப்பெரிய மாறுதலை இந்தக்கதைகள் உண்டுபண்ணும் என்று நம்புகிறேன்
எஸ். ராஜ்குமார்
***
அன்புள்ள ஜெ.
பத்துலட்சம் காலடிகள் கதையின் சிறப்பம்சமே சற்றே கோணல் புத்தி கொண்ட ஔசேப்பச்சன் பார்வையில் கதை விரிவதுதான்.அவன் சில விஷயங்களை அதீதமாக பேசுகிறான். சில விஷயங்களை தவற விடுகிறான் என வாசிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது
உதாரணமாக , தனது ஒரு காலடி தவறாய்ப்போனால், பத்துலட்சம் காலடிகளுமே தவறாய் போய்விடும் என அப்துல்லா நினைப்பதாக (சரியாக) புரிந்து கொண்டு அவரை மாமனிதராக நினைக்கிறான்
ஆனால் ராதாமணியும் அப்படித்தான் நினைக்கிறாள்.,அதனால்தான் ஹாஷிமை உதறுகிறாள் என்பது அவனுக்குப்பிடிபடவில்லை . அவளை அபலைப் பெண்ணாக நினைக்கிறான் என்ற கோணம் கிடைப்பதற்கு ஔசேப்பச்சனின் பாத்திரப்படைப்பே காரணம்
ஹாசிமை பிடித்திருந்தும் அவர் கொன்றார். பிடித்திருந்தும் இவள் புறக்கணித்தாள் என்பது காலடிகளை கவனமாக வைப்போர் அனைவரையும் உலுக்கியிருக்கும்
http://www.pichaikaaran.com/2020/04/blog-post_22.html?m=1
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
வான்நெசவு [சிறுகதை]
வணக்கம் ஜெ
வான்நெசவு கதையை வாசித்தேன். இனிய பழைய நினைவுகளுக்குள் சஞ்சரிக்கும் தம்பதிகள். சுயநினைவிழந்தவன் ஒவ்வொறு நினைவையும் திரட்டிக் கொண்டு எழுவது போல. பிரயோசனம் உள்ளவை பழையதாகும் என்ற வரியும் பிரயோசனமற்று இருப்பவை காலத்துக்கும் நீடிக்கும் என்பது மிக முக்கியமான வரிகள். மீண்டும் மேலேறி சென்று இளமை திரும்பினால் குமரேசன் தன் வாழ்வை பிரயோசனமில்லாததாகத்தான் மாற்றிக் கொள்வார்.
அரவின் குமார்
***
குருவி. நீங்கள் பலமுறை சொன்ன விஷயம். ஆனால் அதை கதையாக மாடன் நோக்கில் வாசிக்கையில் எழும் உணர்வெழுச்சி அபாரம். உன்ன விட பெரிய ஆளெல்லாம் அமைதியா வேலை பாத்துக்கிட்டு, வெளிய தெரியாம சத்தம் காட்டாம இருக்கான் நீறு என்ன வே சலம்பிகிட்டு கிடாக்கீரு. அப்டின்னு மாடன் கிட்ட சொல்லி அதை அவன் கேட்க அவன் வணங்கும் இன்னொரு கலைஞன் வர வேண்டியது இருக்கிறதது. அதுவே அந்தக் குருவி.
கடலூர் சீனு
***
சூழ்திரு, பொலிவதும் கலைவதும் கதையில் கூட உன்னமாக்கலுக்கு ஒரு மெல்லிய தத்துவ நோக்கு இழைந்து வருகிறது.
வான் கீழ் உங்கள் கதைகளில் முற்றிலும் தத்துவ கூறு அற்ற இனிய கதைகளில் ஒன்று. அவனுக்கு தன் உடல் குறையால் உயரம் பயம். பெண் அவளுக்கோ உயரம் கனவு. அவள் கனவையும் இவன் பயத்தையும் வெல்லும் காரணி. ராஜம்மை அப்பா உயரத்திலிருந்து விழுந்தவர் எனும் குறிப்பு, பல்வேறு பரிமாணங்களை அளிக்கிறது. கால் முடியாத நீ எப்படி என்னை உயரே அழைத்து செல்வாய் என அவள் ஒரு எளிய சந்தேகம் கூட அவன் மேல் கொள்ள வில்லை. அங்கேயையே துவங்கிவிட்டது எல்லாம். அவன் செய்தது எல்லாம் அவள் நம்பிக்கையை நிறுவியது மட்டுமே. வாழ்வு முழுமைக்குமான வாக்குறுதி ஒன்று அங்கே கையளிக்கப்பட்டு விட்டது. பிரமாதமான கதை ஜே :)
கடலூர் சீனு
***