பகுதி நான்கு : அலைமீள்கை – 23
தந்தையே, ஒவ்வொருவரும் நம்முள் ஒவ்வொன்றாக பதிந்திருக்கிறார்கள். நாம் அதை நம் எல்லைகளைக் கொண்டே மதிப்பிட்டிருக்கிறோம், அவர்களின் எல்லைகளைக் கொண்டு அல்ல. நம் எல்லைகளை வகுப்பவை நம் விழைவுகள், அச்சங்கள், சினங்கள். அதற்கும் அப்பால் நம் ஆணவம். நாம் ஒவ்வொருவரையும் நம் ஆணவத்தை அளவுகோலாகக் கொண்டே மதிப்பிடுகிறோம். நான் ருக்மியை அவ்வண்ணம் மிகக் கீழே மதிப்பிட்டிருந்தேன். அது அவர் பேசத்தொடங்கியதுமே தெளிவடைந்தது.
ருக்மி அரசர் என்பதை நான் மறந்துவிட்டேன். அரசர்களை ஒருபோதும் தனிமனிதர்களாக எண்ணலாகாது. அவர்கள் அமைச்சர்களும் ஒற்றர்களும் இணைந்து உருவான பேருரு ஒன்றின் கண்திகழ் வடிவங்கள். பலநூறு விழிகளும் பல்லாயிரம் கைகளும் கொண்டவர்கள். பெருந்திரளெனப் பெருகிய ஓருருவர். நான் அன்று அறிந்தேன், ஆளும் பொறுப்பில் இருக்கும் எவரையும் மனிதராக எண்ணி மதிப்பிடலாகாது, அவர்களின் அரசநிலையையும் கருதியாகவேண்டும். ருக்மி என்னிடம் “நான் உங்களிடம் அறியவிழைவது ஒன்று உண்டு, இளையவரே” என்றார். “கூறுக!” என்றேன். “கிருதவர்மன் துவாரகைக்கு வந்தபின் சந்தித்த அரசகுடியினர் எவர்?” என்றார். நான் “யாதவ மைந்தர் அனைவரையும் சந்தித்தார்” என்றேன். “அதை அறிவேன். அதற்கும் மேல்” என்றார்.
அவர் சொல்வதென்ன என்று உடனே புரிந்துகொண்டேன். அவர் அதை அறிந்திருப்பார் என்று நான் எண்ணவே இல்லை. ஏனென்றால் மிகமிக மந்தணமாக அது நிகழ்ந்தது. என் உடன்பிறந்தாரிலும் எவரும் அதை அறிந்திருக்கமாட்டார்கள் என எண்ணியிருந்தேன். தந்தையே, கிருதவர்மன் துவாரகைக்கு வந்தபின், நான் சாத்யகியை கூட்டிவந்த மறுநாள் காலை அன்னையிடமிருந்து ஒரு அழைப்பை பெற்றேன். அன்னை என்னை அழைத்து உரையாடி நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அவர்களை நான் நேரில் பார்த்தது தாங்கள் நகரிலிருந்து கிளம்பிய அன்று. அதன்பின் ஒருமுறை அவைக்கு வந்து அன்றைய யாதவ குடித்தலைவர்களை நோக்கி நகர் பொறுப்பிலிருந்து அவர் விடுபடுவதாக அறிவித்தார். அதன் பிறகு நோன்புகள், விழவுகள் எதிலும் அவர் தென்படவில்லை.
அவர் அங்கு இருக்கிறார் எனும் உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது. முதலில் அவரைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. பின்பு அவையும் வராமலாயின. எட்டு அரசியரில் ருக்மிணிதேவியையும் ஜாம்பவதியன்னையையும் அன்றி பிறரை எவரும் பார்க்க இயலாமலாயிற்று. அரசு அமர்வதற்கோ பிற சடங்குகளுக்கோ அரிதாக ருக்மிணிதேவி வந்தார். ஜாம்பவதியன்னையும் அவ்வாறே அரிதாகத்தான் தோன்றினார். அரசியென நகரை ஆண்டது சாம்பனின் துணைவியும் அஸ்தினபுரியின் இளவரசியுமான கிருஷ்ணை மட்டுமே.
ஆகவே காலையில் என்னைத் தேடி முகமறியாத சேடி ஒருத்தி வந்து நின்றபோது நான் முதலில் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவளே தன் கணையாழியைக் காட்டி “மூத்த அரசி சத்யபாமையின் தூதுப்பெண் நான்” என்று அறிவித்துக்கொண்டாள். அப்போது அவளை எவ்வாறு எதிர்கொள்வதென்றும் எவ்வகையில் முகமன் உரைப்பதென்றும் எனக்கு தெரியவில்லை. திகைத்த வண்ணம் பேசாமல் நின்றேன். “மூத்த அரசி தங்களை சந்திக்க விழைகிறார்” என்று அவள் சொன்னாள். “எப்போது?” என்று நான் கேட்டேன். “முடிந்தவரை விரைவில்” என்றாள். “நன்று, நான் உடனே வருகிறேன்” என்றேன்.
அவள் சென்ற பிறகு மூத்த அரசியிடமிருந்து வந்த அழைப்பை மூத்தவரிடமும் அமைச்சர்களிடமும் பகிர்ந்துகொண்டு அவர்களின் கருத்தை கேட்டபிறகு முடிவெடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. உண்மையில் அது எளிய சந்திப்பாக இருக்கப்போவதில்லை. எளிய சந்திப்பாயினும் அதற்கு அரசியல் முதன்மை உண்டு. நானும் அரசியும் என்ன பேசிக்கொண்டோம் என்பதை அறிவதற்கு யாதவ மைந்தர்கள் அனைவருமே விழைவு கொண்டிருப்பார்கள். அங்கு நான் பேசியதன் பொருட்டு அரசியல் தொடர் விளைவுகள் எழக்கூடும். ஆகவே நான் குறைந்தது மூத்தவர் சுஃபானுவிடமாவது கலந்துகொண்ட பின்னரே அங்கு செல்லவேண்டும் என்று விழைந்தேன்.
ஆனால் அவ்வாறு எண்ணியபோது முதலில் என்னுள் எழுந்தது ஒரு வீம்பு. என் ஆணவத்தின் கூர்முனை அது. நான் என்னை மேலெழுப்பி நின்று அதை நோக்கினேன். இத்தருணத்தில் அவர்களுக்கு மேல் நான் நின்றிருப்பவன். அவர்களுக்கு இயலாத ஒன்றை நான் செய்வதை அவர்களுக்கு காட்டியாக வேண்டும். முன்பொரு நாள் உணவறைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்வினையாக அதை செய்தேனா என்று இப்போதும் சொல்ல முடியவில்லை. அவ்வாறும் இருக்கலாம். மானுட உணர்வுகள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்றும் எதை நிகர்க்க எது செய்யப்படுகிறது என்றும் எவராலும் முன்னரே சொல்லிவிட இயலாது.
ஆனால் அத்தருணத்தில் அன்னையை தனியாகச் சென்று பார்ப்பதினூடாக நான் ஈட்டுவது ஒன்று உண்டு என்று எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அரசியை சந்திப்பதற்குரிய முறையான ஆடைகளுடன் எவருக்கும் அறிவிக்காமல் கிளம்பி அன்னையை பார்க்கச் சென்றேன். கடலோரமாக அமைந்த அவருடைய தவக்கோட்டத்திற்கு உப்பு உருகி வழிந்துகொண்டிருந்த கற்பாதையினூடாக நடந்தேன். அன்னையின் சிற்றறை உப்பரித்திருந்தது. அங்கு அமர்ந்திருந்தபோது சுவர்கள் உயிருள்ள தசைப்பரப்புகள்போல ஈரமும் வெம்மையும் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கு எவ்வண்ணம் வாழ முடியும் என்று வியந்தேன். அங்கு வாழ்வதென்பது தன் உடலை தானே நலிய வைத்துக்கொள்வது, ஒருவகையில் படிப்படியாக இற்று உயிர்விடுவது. அன்னை நோன்பென்ற பெயரில் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.
முதிய சேடி வந்து “அன்னை வருகிறார்” என்று அறிவித்தாள். அரசி என்று அல்ல. சற்று நேரத்தில் அன்னை வந்து என் முன் அமர்ந்தார். நான் முன்பு கண்டிருந்த அன்னை அல்ல. அன்னையிடம் எப்போதும் ஒரு நிமிர்வு இருந்தது, காலடிகள் அனைத்திலும் ஒரு உறுதி இருந்தது. கண்களில் ஆணை கூர்ந்திருக்கும். நேர் நோக்கும் குரலில் நடுக்கிலாத ஒருமையும் இருக்கும். அவையனைத்தையும் இழந்து முற்றாகவே பிறிதொருத்தியாகிவிட்டிருந்தார். நான் அங்கு கண்டது வற்றி ஒடுங்கிய முதுமகளை. முற்றிலும் உள்வாங்கிவிட்டிருந்த விழிகள். பதறி நடுங்கிக்கொண்டிருந்த குரல்.
அவர் உள்ளே வரும்போது முதலில் அது என் அன்னை என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே எழுந்து தலைவணங்காமல் திகைத்து அமர்ந்திருந்தேன். நாம் நமக்கு அணுக்கமானவர்களை உடலசைவுகளினூடாகவே அடையாளம் காண்கிறோம் என்பது வியப்பூட்டுவது. உடலசைவு மாறிவிட்டிருந்தால் கண்ணெதிரே ஒருவர் வந்தால்கூட அவர்தான் என்று நம் அகம் எண்ணிக்கொள்வதற்கு நெடுநேரம் பிடிக்கும்.
அன்னை வந்து என்னை வணங்கிய பின்னரே நான் பாய்ந்தெழுந்து வணங்கினேன். “வணங்குகிறேன் அன்னையே, தங்கள் தாள் பணிகிறேன்” என்று கூறினேன். அப்போதும் சென்று அவர் கால் பணிந்து சென்னி சூடுவதற்கு தோன்றவில்லை. அன்னை “அமர்க!” என்று கை காட்டி தன் பீடத்தில் அமர்ந்தார். அதன் பிறகு நான் விழிப்பு கொண்டு மூன்றடி எடுத்துவைத்து குனிந்து அவர் காலடியைத் தொட்டு தலைசூடி மீண்டும் “வணங்குகிறேன், அன்னையே” என்றேன். என் தலைமேல் கைவைத்து வாழ்த்தி அமர்க என்று கைகாட்டினார்.
நான் அமர்ந்ததும் “கிருதவர்மன் வந்ததை அறிந்தேன்” என்றார். முகமன்களோ பிற சொற்களோ இல்லை. ஆகவே அதை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் தத்தளித்து “ஆம், அவர் இங்குதான் இருக்கிறார்” என்று சொன்னேன். “அவரை நான் சந்திக்கவேண்டும்” என்று அன்னை சொன்னார். “நான் ஒருக்குகிறேன்” என்றேன். “இங்கு வேண்டியதில்லை. அங்கு கரையில் ஏதேனும் ஒரு சிறு மண்டபத்திற்கு அவரை வரச்சொல். அவரிடம் நான் ஒரு சொல் உரைக்கவேண்டும்“ என்றார். “ஆணை” என்றேன். “நன்று, இது மந்தணமாக அமைக!” என்றபின் அவர் எழுந்துகொண்டார்.
நான் “அன்னையே” என்றேன். அவர் துவாரகையின் நிலைமை பற்றி ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தேன். மைந்தர்களைப்பற்றி உசாவுவார் என்றும் மைந்தர் மைந்தர்களைப்பற்றி ஏதேனும் அவர் கேட்பார் என்றுகூட எண்ணினேன். அவர் கேட்கும் வினாக்களுக்குரிய விடைகளை நான் முன்னரே ஒருக்கியிருந்தேன். ஒரு சில சொற்களில் அவ்வுரையாடல் முடிந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அன்னை அதற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். நான் “மைந்தர் எண்பதின்மரும் இப்போது ஒன்றாக இருக்கிறோம். அனைவரும் இணைந்து மூத்தவர் ஃபானுவுக்கு முடிசூட்ட முடிவெடுத்திருக்கிறோம். அதற்கு அனைவரையும் அழைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறோம்” என்றேன்.
அன்னையின் முகத்தில் எந்த உணர்வு மாறுபாடும் தெரியவில்லை. தலையை அசைக்கவோ அச்சொற்களை உள்வாங்கியதாகக் காட்டவோ கூட இல்லை. மீண்டும் நான் “மூத்தவர் ஃபானு முடிசூட இருக்கிறார். அஸ்தினபுரியின் ஆதரவு நமக்கிருக்கிறது. எண்பதின்மரும் ஒற்றுமையுடன் நின்றால் துவாரகை பெருவல்லமையுடன் எழும் என்கிறார்கள். கிருதவர்மனும் சாத்யகியும் இணைந்து நம்முடன் இருக்கிறார்கள். அன்னையே, நாம் எண்ணியதனைத்தும் நிறைவேறவிருக்கிறது” என்றேன். அன்னை அதற்கும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவர் விலகிச்சென்ற பின்னரும் பார்த்தது அன்னையைத்தானா என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் நான் அங்கே அமர்ந்திருந்தேன்.
கிருதவர்மனிடம் நானே சென்று அன்னையின் அழைப்பைப் பற்றி சொன்னேன். கிருதவர்மன் புலரியில் எழுந்து கதிர் நோக்கி அமர்ந்திருந்தபொழுது நான் அவரை காணச் சென்றேன். என் வருகையை அறிவித்த ஏவலன் உள்ளே செல்லும்படி கைகாட்டினான். உப்பரிகையில் கால் மடித்து கண்மூடி ஊழ்கத்திலென இளவெயிலில் அவர் அமர்ந்திருந்தார். தொலைவில் கடல்அலைகள் வெயிலொளியில் கொப்பளித்துக்கொண்டிருந்தன. அதன் ஒளியலைகள் உப்பரிகையின் பளிங்குச் சுவர்களில் நெளிந்தன. அங்கு அமர்ந்திருந்த கிருதவர்மன் ஓர் ஓவியம்போல் ஆகிவிட்டிருந்தார். தொன்மையான ஓர் ஓவியம் காலத்தால் பெரும்பகுதி உதிர்ந்து உருவழிந்துவிட்டிருந்தது.
நான் தலைவணங்கி “வணங்குகிறேன், தந்தையே” என்றேன். அவர் விழி திறந்து அமர்க என்று கைகாட்டி “கூறுக!” என்றார். “அன்னை தங்களை சந்திக்க விழைகிறார்” என்றேன். அவர் அதை முதலில் உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஒருகணத்திற்குப் பின் “யார்?” என்று கேட்டார். “அன்னை சத்யபாமை” என்றேன். “அவர் நோன்பில் இருப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்?” என்றார். “ஆம், ஆனால் இன்று புலரியில் அவர் தன்னை வந்து சந்திக்கும்படி என்னை அழைத்திருந்தார். ஆகவே நான் கிளம்பிச்சென்றேன்” என்றேன். ஏன் அத்தனை கூர்மையாக, முகமன்கள் இல்லாமல் சொல்கிறேன்? ஏனென்றால் அவ்வண்ணம் அன்னை என்னிடம் அதைப்பற்றி சொல்லியிருந்தார். அந்த உணர்வு என்னையறியாமலேயே நீடிக்கிறது.
கிருதவர்மன் “என்ன கூறினார்?” என்று கேட்டார். “அவர் எதையும் உசாவவில்லை. என்ன நிகழ்கிறது என்று கேட்பாரென்றும் குறைந்தது மைந்தரின் நலம் உசாவுவார் என்றும் நான் எதிர்பார்த்தேன். அவர் தங்களை பார்க்கவேண்டும் என்பதற்கப்பால் எதுவும் கூறவில்லை.” கிருதவர்மன் “எதற்கென்று கூறினாரா?” என்று கேட்டார். “இல்லை. தன் நோன்பிடத்திற்கு வெளியே ஓர் இடம் ஒருக்கும்படியும், தங்களை அங்கு அழைத்துவரும்படியும் மட்டும்தான் கூறினார்” என்றேன். கிருதவர்மன் “நன்று” என்றார். பிறகு நீள்மூச்செறிந்து “நெடுநாட்களாகிறது” என்றார். “ஆம்” என்றேன்.
சட்டென்று அவர் உரக்க நகைத்து “அறுதியாகப் பார்த்தது இந்நகரின் தெருக்களூடாக கைகள் கட்டப்பட்டு நான் இழுத்துவரப்படுகையில். இந்த உப்பரிகை மேடையிலிருந்து அவள் என்னை பார்த்தாள்” என்றார். ஒருமையில் அவர் அவ்வாறு சொன்னது என் உள்ளத்தை திடுக்கிடச் செய்தது. முதன்முறையாக என் அன்னைமேல் பெருங்காதல் கொண்டிருந்த ஒருவர், அதை அப்போதும் பேணி வந்த ஒருவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய வஞ்சம் அனைத்திற்கும் அடியில் வேரென்றிருப்பது அந்தக் காதல். அக்காதல் துவாரகை அரண்மனை முற்றத்தில் சிறுமைப்பட்ட தருணமே அவரை கசப்புநிறைந்தவராக ஆக்கியது. துவாரகையின் அரண்மனை முற்றத்தை மீண்டும் வந்தடைந்த கணமே அவர் அதிலிருந்து விடுபட்டுவிட்டார் என அறிந்தேன்.
தந்தையே, முதற்கணம் ஒரு பெரிய அலையென கசப்பு எழுந்து என்னை அறைந்தது. என் கைகால்களை நடுங்கச்செய்தது. விரல்களை மடித்து முறுக்கி உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன். அவர் “அந்த இறுதிக் கணத்து முகத்தோற்றம் இத்தனை ஆண்டுகளில் என் முன் அவ்வண்ணமே நீடிக்கிறது. அது ஒரு தெய்வ உருபோல என்னை ஆள்கிறது. இவ்வண்ணம் செலுத்துகிறது” என்றார். எத்தனை நெடுங்காலம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அத்தனை காலம் ஒரு பெண்ணின் முகத்தை மட்டும் உளம்தேக்கி ஒருவர் வாழமுடியுமா? கதைகளில் அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வண்ணம் இயல்வதென்றால் அது ஒரு தெய்வ வெளிப்பாடா என்ன?
நான் அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே அவராக நான் உருமாறிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த அனைத்தையும் நோக்கியபோது அதுவரை இருந்த அனைத்தும் உருமாற ஒருகணத்தில் என் அகம் இனிமை கொண்டது. அவரையும் அன்னையையும் நான் விரும்பினேன். அத்தருணத்திற்காக நான் உளநிறைவு கொண்டேன். ஆம், பெருங்காதல் அரிதாக ஏதோ புவியில் நிகழ்கிறது. ஆணும் பெண்ணும் அறிவதும் இணைவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒருவர் ஒரு பெண்ணை விரும்பக்கூடும். இழந்தபின் மேலும் விரும்பக்கூடும். அவள் முன் சிறுமை கொண்டபின் மேலும் மேலும் விரும்பக்கூடும். ஆனால் அவள் பொருட்டு பெருவஞ்சம் கொண்டு, வாழ்வை அனலாக்குவது ஒரு தவம். தவம் தெய்வங்களை படைக்கிறது.
கிருதவர்மன் எழுந்து கொண்டு “செல்வோம்” என்றார். “இல்லை, தாங்கள் ஒருங்கி…” என்று நான் சொல்ல “ஒருங்கவேண்டியதில்லை. இவ்வண்ணமே செல்வோம். இது முறைசார் சந்திப்பு அல்ல அல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். அவரை அழைத்தபடி அரண்மனையின் இடைநாழியினூடாகச் சென்றேன். அன்னையின் நோன்புமாடத்திலிருந்து சற்று தள்ளி கடலோரமாக அமைந்திருந்தது காவலர்தலைவனின் சிறு கல்மாளிகை. அங்கு சென்றபின் அன்னையை அழைத்துவரும்படி ஏவலனிடம் ஆணையிட்டேன்.
நாங்கள் அந்தக் கல்மண்டபத்திற்குச் சென்று அமர்ந்திருந்தோம். கீழே நெடுந்தொலைவில் துவாரகையின் துறைமுகம் தெரிந்தது. அங்கே மூன்று கலங்கள் கடலில் மெல்ல உலைந்துகொண்டிருந்தன. அவற்றின் கொடிகள் சிறகுகள் என பறந்துகொண்டிருந்தன. விழி தொடும் தொலைவு வரை மிக மெல்ல அசைந்துகொண்டிருந்தது கடல். கடலை அவ்வண்ணம் மெல்ல நெளியச் செய்யும் அதே காற்று கொடியை கிழிந்துவிடும்போல் துடிக்கச்செய்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கடலலைகளை நெடுந்தொலைவில் இருந்து பார்க்கையில் அவை எழுவது போலும் அணுகுவது போலும் தோன்றுவதில்லை. அவை சற்றே உருகி நெளியும் கற்பரப்புபோல தோன்றுகின்றன. மெல்ல உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றின்மேல் வெண்நுரை வளையங்கள் மட்டும் தோன்றித் தோன்றி மறைகின்றன.
கடலை நெடுந்தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பது உள்ளத்தை விரியச் செய்வது, தன்னிலையை சிறுமையாக்குவது. இந்திரப்பிரஸ்தத்திலோ அஸ்தினபுரியிலோ இல்லாத ஒன்று கடல். துவாரகையில் ஒவ்வொரு நாளும் குடிகளில் அனைவருமே கடலை பார்க்க முடியும். ஆனால் கடல் எவருக்கும் அவர்களின் தன்னிலையை உணர்த்தவில்லை. எவரையும் உள்ளத்தால் எளியவராக்கவில்லை. நானே கடலை அரிதாகத்தான் அப்படி பார்த்திருக்கிறேன்.
அன்னை வருகிறார் என்று ஏவலன் அறிவித்தபோது நான் எழுந்து தலைவணங்கி “நான் இங்கு இருப்பது உகந்ததல்ல. தங்கள் சந்திப்பு நிகழட்டும்” என்றேன். கிருதவர்மன் கைகாட்டி “அல்ல, நீ இருந்தாகவேண்டும்” என்றார். “இல்லை” என்று நான் சொல்ல “அல்ல. இத்தருணத்தில் மைந்தன் உடன் இருந்தாகவேண்டும்” என்றார். அவர் என்ன கூறுகிறார் என்று எனக்கு புரிந்தது. “மைந்தர்கள் உடனின்றி சந்திக்கலாகாது” என்று அவர் மீண்டும் கூறினார். நான் தலைவணங்கி ”ஆம்” என்றேன். பின்னர் அந்த அறையிலிருந்து வெளிவந்து அன்னை வருவதற்காக காத்து நின்றேன்.
ஏவலன் ஒருவனும் ஏவற்பெண்டும் தொலைவில் வந்தனர். ஏவலன் கையில் கொம்புடன் முன்னால் வந்தான். ஏவற்பெண்டு கையில் மங்கலத்தாலமொன்றை வைத்திருந்தாள். அதில் சிற்றகல் சுடர் எரிந்தது. புது மரங்களின் கனிகளும் இருந்தன. அவளுக்குப் பின்னால் அன்னை பெரிய வெண்ணிற ஆடையால் முற்றிலும் உடல் மறைத்து முகம் தாழ்த்தி நடந்து வந்தார். அருகணைந்ததும் ஏவலன் கொம்பை எடுத்து ஊதி “துவாரகையின் பேரரசி சத்யபாமை எழுந்தருள்கை!” என்றான். நான் தலைவணங்கி நின்றேன். மங்கலத்தாலமேந்திய சேடி அறைக்குள் புகுந்து அதை வைத்துவிட்டு வெளியேற ஏவலன் வெளியே நின்றான்.
அன்னை அருகணைந்து என் அருகே வந்து நின்றார். “வருக அன்னையே, தங்களுக்காக காத்திருக்கிறார்!” என்றபடி உள்ளே சென்றேன். அன்னை என்னைத் தொடர்ந்து உள்ளே வந்தார். அன்னை அறைக்குள் நுழைந்ததும் அவர் அன்னை என்றே உணராதவராக திகைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கிருதவர்மன். நான் அவ்விருவரையும் மாறி மாறி பார்த்தபடி அறையில் சாளரத்தோரமாக விலகி நின்றேன். அன்னை தனது வெண்ணிற ஆடையை விலக்கி கைகளில் சரியவிட்டு பீடத்திலிட்டார். அவரது உரு தெரிந்தவுடன் கிருதவர்மன் திடுக்கிட்டு இரு கைகளையும் விரித்தபடி பீடத்திலிருந்து எழுந்தார். அவ்வுடல் நடுங்கத் தொடங்கியது. அன்னையும் கிருதவர்மனின் தோற்றத்தைக் கண்டு உடல் நடுங்கினார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கைகள் அதிர முகம் இழுபட்டு கண்கள் நீர்மை கொண்டு பற்கள் கிட்டித்து அத்தருணத்தில் ஒன்றின் இரு முனைகளென நின்றனர். அத்தருணத்தை அப்போதுதான் முற்றுணர்ந்தேன். இருவரும் உடல் சிதைந்து உருமாறியிருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் இளமைக்குப் பின் கண்டதில்லை. அவர்களுக்குள் வாழ்ந்தவர்கள்தான் இளமைத்தோற்றம் கொண்டிருந்தனர். உடல்கள் பொருளிழந்துவிட்டன, ஆனால் அவ்வுடல்களினூடாகவே அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவேண்டியிருந்தது.
கிருதவர்மன்தான் முதலில் தன்னுணர்வு கொண்டார். “அரசி” என்றார். அன்னை “ஆம்” என்றார். “தாங்கள்… தங்கள் உரு…” என்றார். அன்னை “மறையும் நேரம்” என்றார். பின்னர் “போரில் அனல்பட்டதாக அறிந்தேன். ஆனால்…” என்றார். அப்போதுதான் தன்னை உணர்ந்து “ஆம், நானும் உதிரும் பொழுது” என்றார் கிருதவர்மன். அன்னை மெல்ல பீடத்தில் அமர அவரும் அமர்ந்துகொண்டார். கிருதவர்மன் “அரசன் என நகர் நுழைந்தேன். என்னை யாதவப் பெருங்குடியே திரண்டு வரவேற்றது” என்றார். சிரிப்பில் உதடு வளைய “ஆனால் இவ்வண்ணமல்ல நான் நகர் நுழையவேண்டும் என்று எண்ணியிருந்தது” என்றார்.
“எண்ணியது நிகழ்வதில்லை” என்று அன்னை சொன்னார். “ஆம், எண்ணியது நிகழ்வதில்லை. எண்ணாதது நிகழ்ந்தாலும் நன்றே நிகழ்ந்தது. மைந்தரை ஒருங்கிணைத்திருக்கிறேன்” என்றார் கிருதவர்மன். “அறிந்தேன்” என்று அன்னை சொன்னார். ஆனால் அவரிடம் எந்த உவகையும் நிறைவும் வெளிப்படவில்லை. கிருதவர்மன் அதை உணரவில்லை. அவர் தன்னுள் ததும்பிக்கொண்டிருந்தார். “எவ்வகையிலோ இங்கு இளைய யாதவரை நான் நடிக்கிறேன். அது அளிக்கும் நிறைவும் பேரின்பமும் என்னை பேருருக்கொள்ளச் செய்கின்றன” என்றார்.
அன்னை நிமிர்ந்து பார்த்தார். இருவரும் பார்த்தனர். அன்னை விழிநீர் உகுத்து அழத்தொடங்கினார். அவரை நோக்கிக்கொண்டிருந்த கிருதவர்மனும் அழுதார். இருவரும் அங்கு அமர்ந்து அவ்வாறு சொல்லின்றி விழிநீர் உகுத்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு நான் நின்றிருந்தேன். அவர்களுக்கு இடையே கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை. இணைந்து அமர்ந்து அவ்வாறு அழுவதற்கு ஒரு தருணம் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்திருந்தது. அது அவர்களை நிறைவுறச் செய்தது. நெடுந்தொலைவு அலைந்து சென்ற ஒரு கோடு வட்டமென திரும்பி வந்து சந்திப்பதுபோல. நெடுங்காலம் பல ஊர்கள் பல நிலங்கள் சென்ற ஒரு கோடு. விலகிச்செல்கிறது என்றும் ஒருபோதும் மீண்டு வராதென்றும் எண்ண வைத்த ஒரு கோடு.
அவர்கள் அழுதுகொண்டிருக்கும்போது அங்கிருப்பது ஒரு ஒவ்வாமையை அளித்தது. ஆனால் அங்கிருந்து நான் விலகவேண்டும் என்றும் தோன்றவில்லை. உடலில் சிறு அசைவு எழுந்தாலும் அது அவர்களை கலைத்துவிடுமென்று தோன்றியது. அவர்கள் முற்றும் அழுது ஓயவேண்டும். ஒரு துளி எஞ்சினாலும் அது மீண்டும் வளரும். இத்தருணத்துடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைவு செய்யவேண்டும். ஒருவரிலிருந்து ஒருவர் முற்றாக அகலவேண்டும். அந்த எடை எவ்வாறிருக்கும்? வளர்ந்து வளர்ந்து ஒருவரை நசுக்கி கீழே வீழ்த்தும் அளவுக்கு பெரிதாகும். வேரொடு மரத்தை சாய்க்கும் பெருங்கனிபோல் என்று சூதர்கள் பாடுவார்களே அதுவா? அன்றி சுருங்கிச் சுருங்கி பொருளற்றதாகி மிகச் சிறு துளியென எஞ்சியிருக்கிறதா? அது உதிர்ந்தபின் எஞ்சிய விடுதலையை அவர்கள் நாடுகிறார்கள்.
அத்தருணத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அன்னை தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கிருதவர்மன் சாளரத்தினூடாக கடலை நோக்கிக்கொண்டிருந்தார். இருவர் கண்களிலும் நீர் வழிந்து மடியிலும் மார்பிலும் சொட்டிக்கொண்டிருந்தது. நெடுநேரத்திற்குப் பின் ஒரு விசும்பலோசையுடன் அன்னை மேலாடையால் முகத்தை அழுத்தித் துடைத்தார். அவ்வோசை கேட்டு கிருதவர்மனும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். அன்னை எழுந்து தலைவணங்கி “நன்று, நலம் சூழ்க!” என்றார். கிருதவர்மன் “ஆம்” என்றார். அன்னை மறுமொழி கூறாமல் அறையைவிட்டு வெளியேறினார். வெளியே காத்து நின்றிருந்த சேடியுடன் அவர் நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டது.
அன்னை அகன்றபின் கிருதவர்மன் மார்பில் கைகளைக் கட்டியபடி கடலைப் பார்த்து ஆழ்ந்திருந்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது. இனிய நினைவில் ஆழ்ந்திருப்பவர்போல. எதையோ எண்ணி எண்ணி உவகை கொள்பவர்போல. தசையுருகி தோல்வெந்து வழண்டிருந்த அந்த முகம் அவ்வினிமையில் அழகாகத் தோன்றியது. கண்களில் இருந்தது முதிரா இளஞ்சிறுவர்களுக்குரிய கனவு. காதல் கொண்ட ஓர் இளைஞன் அங்கு அமர்ந்திருந்தான். தன்னுள் எழும் இனிமையை பல்லாயிரம் நாவுகள் எழுந்து சுவைத்து தான் மகிழ்ந்து அதை சொல்லென்றும் ஆக்காமல் மூழ்கியிருப்பதுபோல.
நான் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கலைக்கலாகாது என்ற தன்னுணர்வு இருந்தது. நெடுநேரம் கழித்து அவர் விழிப்பு கொண்டு என்னைப் பார்த்து “கிளம்புவோம்” என்றார். பெருமூச்சுடன் மேலாடையை எடுத்துக்கொண்டு நடந்தார். நான் அவருடன் நடந்தேன். இருவரும் ஒரு சொல்லும் உரையாடிக்கொள்ளவில்லை. கிருதவர்மன் மிக அப்பால் வேறொருவர் போலிருந்தார். வேறொரு காலத்தில் அவர் வாழ அவரது பாவை ஒன்று என்னுடன் இருப்பதாகத் தோன்றியது.
தந்தையே, நான் அந்தத் தருணத்தை மிகமிக ஆழமாக உணர்ந்தேன். அரிதாகவே நாம் நம் முந்தைய தலைமுறையினரின் வாழ்வுக்குள் அத்தனை ஆழமாக செல்லமுடிகிறது. அன்று நிகழ்ந்தது என்ன என்று நான் எவரிடமும் சொல்லவில்லை. எவரும் என்னிடம் கேட்கவுமில்லை, எனவே எவரும் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணினேன். முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து அந்தச் சொல் எழுந்தபோது நான் திகைத்துவிட்டேன். ருக்மி என்னை நோக்கி புன்னகைத்து “அத்தருணத்தில் நீங்கள் உடனிருந்தீர்கள்” என்றார். நான் “ஆம்” என்றேன். “அங்கே ஒரு சொல்லும் உரையாடப்படாவிட்டாலும் அது அந்தகர் குலத்து வீரர் ஒருவர் அந்தகக் குலத்து அரசிக்கு அளித்த சொல்லுறுதி” என்றார் ருக்மி.