மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சூழ்திரு ரசனையைப் பற்றிய கதை அல்ல. வாழ்க்கைப் பார்வையைப் பற்றிய கதை. முன்பு ஒரு கட்டுரையில்எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கிறதுஎன்று எழுதியிருந்தீர்கள். இரண்டு வகையான மனநிலைகள் உள்ளன. எல்லாமே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு மனநிலை. கரடிநாயரும் நண்பர்களும் அந்த மனநிலையில் இருக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இன்னொருவகை. அவர்களைத்தான் நாம் இண்டஸ்டியஸ் பீப்பிள் என்கிறோம். இன்றைய முதலாளித்துவச் சமூகத்திற்கு அத்தகையவர்கள்தான் தேவைப்படுகிறார்கள்

நான் அவ்வப்போது என் கிளையண்டுகளான தொழிலதிபர்களின் பண்ணைவீடுகளில் தங்குவதுண்டு. ஊட்டி கொடைக்கானல் போல பல ஊர்களில் அழகான பண்ணைவீடுகளை வைத்திருப்பார்கள். ஆனால் எங்குமே அவர்கள் தங்குவதில்லை. தங்கினாலும் இயற்கையை ரசிப்பதில்லை. பிஸினஸ் பேச்சு, குடி அவவ்ளவுதான். காரணம் எல்லாமே அளிக்கப்பட்டிருக்கிறது என்று அவர்க்ளுக்கு தெரியாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி உண்டுபண்ணிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்க்ளால் ரசிக்கவே முடியாது

ஆனால் கரடிநாயர் ஓய்வாக இருக்கிறார். எதைப்பற்றியும் கவலைப்படாதவராக இருக்கிறர். ஆகவே எல்லாவற்றையும் ரசிக்கிறார். நாம் இழந்துவிட்டது அந்த மனநிலையைத்தான் என நினைக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெயமோகன் சார்,

சூழ்திருகதையை படித்துவிட்டு உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என நினைத்துஅப்படியே திடீர் எனஐயாரப்பனை அழிப்பதுஎன்ற பதிவை படித்துவிட்டு,லிங்க்களை பிடித்து பிடித்து உள்ளே உள்ளே போய் மறந்து தூங்கிவிட்டேன். ஆனால் அந்த கதையை மறக்க முடியவில்லை. இரண்டு காரணங்கள்.

ஒரு மகா கலைஞன் தனது கைவண்ணத்தை காட்டும் பொழுதுகளில் எல்லாம் புதிதாய் ஒன்றை கண்டுபிடிக்கிறான். பிறகு அதை உடனேயே சமைக்கிறான் அல்லது சோதனை செய்கிறான்.

அப்படி தான் கண்டுபிடித்த ஒரு சுவையை யாராவது உணர்ந்தார்களா, சுவைத்தார்களா ? என தேடுகிறான். அவ்வளவு கூட்டு பொரியல்கள் பச்சடிகள், ஓலன்கள், பிரதமன்களுக்கு இடையில் ஒரு துளி கசப்பையோ இல்லை அவனின் கற்பனையையோ கண்டுகொள்பவனை, கண்டுகொண்டு தன்னை தேடிவருபவனை மட்டும்தான் ஆசீர்வதிக்கிறான். மற்ற நேரம் எல்லாம் வெள்ளைத்துணியை முகத்தில் போட்டுகொண்டு தூங்கிவிடுகிறான்.

கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

***

மதுரம் [சிறுகதை]

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம். நலம்தானே?

மதுரம் கதை படித்தேன். ஒரு படைப்பாளன் தன் படைப்பில் ஒரு மையத்தை முதன்மைப் படுத்துகிறான் எனில் அது பற்றிய முழுத்தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். தேர்ந்த கால்நடை மருத்துவர் போல எருமை கன்று ஈனுதல். அதன் வலக்கண் குறைபாடு போன்றவற்றை செம்மையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். கதை மிகச் சிறியது தான். அக்குறை தெரியாமல் இருக்க ஆசானின் பெண் தொடர்புகள் பற்றிய செய்திகள் கதையை நன்கு வளர்த்துச் செல்கின்றன.

பேய்கள் பற்றிச் சொல்லும்போது, “பயப்படுத்த முடியாதவனை அதுக பயப்படும்” என்பது வாழ்வில் பெரும்பாலும் காணும் ஒன்று. எப்பொழுதும் எதிரி தன்னைக் கண்டு அச்சப்படுபவனிடம்தான் மேலும் வாலாட்டுவான். பயப்படாதவனிடம் நெருங்கப் பலமுறை யோசிப்பான்.

“கள்ளனுக்கும் நாயிக்கும் எடையிலே ஒரு ஒத்துபோக்கு உண்டு; போலீசுக்கும் கள்ளனுக்கும் நடுவிலே உண்டுல்லா, அதுமாதிரி” என்று ஆசான் போகிற போக்கில் சொல்லிவிட்டாலும் போலீசை எதற்கு உவமை சொல்கிறார் என்று யோசித்தால் சிரிப்பும் வருகிறது. சிந்திக்கவும் தூண்டுகிறது.

எருமைக்கு யாரும் சொல்லாத நேர்த்தியான உவமை “பாலீஷு போட்ட போலீசு பூட்சு மாதிரி” என்பது. மிகப் பொருத்தம். மினுமினுக்கும் கருப்பு நிறத்தைக் கண்முன்னே கொண்டுவரும் உவமை.

“சினுமா பொம்பளைகளை மாதிரி ஆட்டிக்கிட்டு” என்று ஆசான் எருமையிடம் பேசும்போது யாராலும் சிரிக்காமலிருக்க முடியாது.

வாசகனுக்குக் களைப்பு மூட்டாமல் அழைத்துச் செல்லும் அற்புதமான கதை.

வளவ துரையன்

***

மோகன்,

எல்லா கதைகளையுமே படித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து மொத்தமாக ஒரு கடிதம் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இன்று ‘மதுரம்’ படித்த பின் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.

‘எருமை அருமையாட்டு இருந்தது. நல்ல சிந்தி எருமை. பாலீஷு போட்ட போலீசு பூட்சு மாதிரி மினுப்பம். எலும்பு தெரியாத ஊட்டம். நாலு குளம்பும் நல்ல உருக்குபோல. குளம்புகளுக்கு நடுவில எடைவெளி இல்ல. பல்லைப் பிடிச்சு பாத்தேன். தேய்மானமே இல்ல. வாய மோந்து பாத்தேன். நல்ல அரைச்ச எலைமணம். புளிப்பே இல்ல.’

‘பொறகே அதுக்க அறைய மோந்து பாத்தேன். நல்ல மணமாக்கும்’ என்றார் டீக்கனார்.

‘நீரு செய்வேரு… போன சென்மத்துக நீரு எருமைக்கிடாயாக்கும்’ என்றார் ஆசான்.

********** ****** ******

‘ஆசானுக்கு இப்பம் வயசென்ன?’

‘அறுவது’

‘அறுவதா, வே எனக்கே அம்பது. எனக்க அப்பன் சின்னப்பையனா இருக்கறப்ப நீரு போலீஸுல சிக்கியிருக்கேரு.’

‘சரி எளுவது’.

‘அதெப்டிவே?’

‘செரி எம்பது… எம்பத்தஞ்சு கடைசி… இனி கூட்டமுடியாது, சொல்லிப்போட்டேன்.’

உரையாடல் இப்படித்தான் இருக்க வேண்டும். கதையின் மற்ற விஷயங்கள் தனி. அதற்கு ஒரு தனிமடல்தான் எழுத வேண்டும்.

சுகா

***

முந்தைய கட்டுரைஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாளிரவு – கடிதங்கள்