நற்றுணை [சிறுகதை]

“பயமா? இல்லை நான் பயப்படவில்லை…. ஏனென்றால் நான் தனியாகப் போகவில்லை. என் கூட கேசினியும் வந்தாள்” என்று அம்மிணி தங்கச்சி சொன்னார்.

“கேசினியா? அது யார்?” என்றேன்.

“என் தோழி… எப்போதும் என்னுடன் இருப்பாள்.”

“கல்லூரிக்கு உங்களுடன் வந்தார்களா?” என்றேன்.

அது உண்மை தகவல் என்றால் இந்த பேட்டியையே விட்டுவிடவேண்டியதுதான். தென்திருவிதாங்கூரில் இருந்து கல்லூரிக்குப் படிக்கச் சென்ற முதல் பெண்மணி, கேரளத்தில் பட்டம்பெற்ற இரண்டாவது பெண்மணி அவர் என்ற அடிப்படையில்தான் பேட்டியே எடுக்கப்பட்டது. நான் சேகரித்த செய்திகள் எல்லாமே அப்படித்தான் சொல்லின.

“ஆமாம்” என்று அம்மிணித் தங்கச்சி சொன்னார்.

“உங்களுடன் படித்தார்களா?”

“என் அருகே அமர்ந்திருப்பாள்…”

“அவர்கள் இப்போது இருக்கிறார்களா?”

“இருக்கிறாளே.”

“எங்கே?”

“திருநயினார்க்குறிச்சியில்….எங்கள் குடும்பவீட்டில்”

“உங்களுக்கு அவர்கள் உறவா?” என்றேன்.

“உறவெல்லாம் இல்லை… எங்கள் பூர்வீகர்கள் பண்டு வேளிமலையில் இருந்து கூட்டிவந்து குடிவைத்தார்கள்…”

“யாரை? கேசினியின் பெற்றோர்களையா?”

“இல்லை, அவளைத்தான்.”

“அவளை என்றால்… அவள்… ” நான் கவனமாகச் சொற்களை தொகுத்துக்கொண்டு “அவளைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?” என்றேன்.

“அவளை நான் எனக்கு இரண்டுவயதாக இருக்கும்போது பார்த்தேன்… அதன்பிறகு எப்போதும் என்னுடனேயே இருந்தாள்… “

“அவள் யார்?”

“அவளா, கேசினி… நீளமான கூந்தல் இருக்கும். அலையலையாக பறக்கும். நெடுந்தொலைவு வரை பறக்கும். ஆகவே அவளுக்கு அந்தப்பெயர்…”

“கூந்தல் என்றால்?”

“யக்ஷிகளுக்கு அப்படித்தான் பெயர் இடுவார்கள். ஏதாவது ஓர் அடையாளத்தை வைத்து…”

“அம்மா, ஒரு நிமிடம். இந்த கேசினி என்பவர் ஒரு யக்ஷியா?”

“ஆமாம், அதைத்தானே நான் உன்னிடம் இத்தனை பொழுது சொல்லிக்கொண்டிருந்தேன்?”

நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். டேப் ரிக்கார்டர் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணங்களின்படி அம்மிணி தங்கச்சிக்கு நூற்றிநான்கு வயது. ஒன்றிரண்டு வயது கூடுதலாகக்கூட இருக்கலாம். அன்றெல்லாம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது ஐந்து வயது என்று போட்டுக்கொள்வார்கள். வயது ஆறோ ஏழோ எட்டோகூட இருக்கலாம். குறைய வாய்ப்பில்லை.

அவருக்கு நினைவு மிகவும் மங்கலாகிவிட்டிருந்தது. பேச்சில் தொடர்ச்சி என்பதே இல்லை. உச்சரிப்பு மிகமிக மழுங்கி பலசமயம் பேசுவது வெறும் ஓசை என்றே தோன்றியது. ஆனால் அவர் ஒரு வரலாற்றுச் சின்னம். பழைய கோயில்கள், கோட்டைகள், அருங்காட்சியகத்தில் இருக்கும் உடைவாட்கள் போல. பழுப்பேறிய பழைய புத்தகங்கள் போல. அந்த மழுங்கலும் சிதைவும்தான் ஆர்வத்தை கூட்டின. சொற்களுக்கிடையே இருந்து அகழ்ந்து எடுக்க ஏராளமாக இருந்தது.

நான் கேள்வியை திரும்பவும் ஒருங்கிணைத்துக் கொண்டேன். “அம்மா நான் மறுபடியும் கேட்கிறேன். இந்தப்பேட்டியை நாங்கள் ’நவயுக வனிதா’ என்கிற மாத இதழுக்காக எடுக்கிறோம். இது ஒரு பெண்கள் இதழ்… பெண்களின் விடுதலைக்காக நடத்தப்படுவது”

“ஓகோ” என்றார் அம்மிணித் தங்கச்சி. ‘ரொம்ப நல்ல விஷயம்.ஆசீர்வாதம்” நான் அதை அவரிடம் பதினெட்டாவது தடவையாகச் சொல்லியிருந்தேன்.

“நீங்கள் தென்திருவிதாங்கூரில் இருந்து முதன்முதலாக கல்லூரிக்கு போன பெண். அந்த அனுபவம் இன்றைய பெண்களுக்கு முக்கியமான ஒன்று. ஆகவே அதைப்பற்றி நான் கேட்க வந்தேன்… நீங்கள் எப்படி கல்லூரிக்குச் சென்றீர்கள்? அந்த எண்ணம் எப்படி வந்தது?”

“ஆமாம், கல்லூரிக்கு நான் சென்றேன்” என்று அம்மிணித் தங்கச்சி சொன்னார். “அன்றெல்லாம் வெள்ளைத்துணி மட்டும்தான் கிடைக்கும். பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் எல்லாருக்குமே வெள்ளை பாலராமபுரம் கூறைத்துணிதான். கெட்டியாக இருக்கும்… வாங்கும்போது மங்கலான நெல்நிறத்தில் இருக்கும். வெள்ளாவி வைத்து வெளுத்து நீலம்போட்டால்தான் வெள்ளைநிறம் வரும். ஜாக்கெட்டெல்லாம் நாங்களே தைத்துக்கொள்வோம். கையால்தான். ஊசிநூலை மார்த்தாண்டத்திலே வாங்கி கையால் தைப்போம்.

அன்றைக்கு ஜாக்கெட் தைப்பது மிக எளிமையானது. கை இடுப்பு எல்லாமே தொளதொளவென்று இருக்கும். பட்டன் கிடையாது, நாடாதான். அதை வைத்து முன்பக்கம் முடிச்சுபோட்டுக்கொள்வோம்… எனக்கு நான்கு வெள்ளை வேட்டி நான்கு மேல்வேட்டி நான்கு ஜாக்கெட். செருப்பு கிடையாது. மாட்டுவண்டியில் திருவனந்தபுரம் போனோம்… என் இளைய தாய்மாமா சிவசங்கரன் நாயர் என்னை அழைத்துக்கொண்டு போனார்.

தேங்காய்நார் மெத்தைமேல் சிவப்பு வெல்வெட் இருக்கை போட்ட வில்வண்டி. முற்றத்தில் நின்ற மாடுகளின் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மா சொன்னாள்,  “போடி போய் மூத்தம்மைகளையும் பரதேவதைகளையும் கும்பிடு. எல்லா அருளும் உனக்கு இருக்கும்”. நான் என் பெரியபாட்டியையும் சின்னப்பாட்டிகள் இரண்டுபேரையும் அத்தைகள் நால்வரையும் கால்தொட்டு வணங்கினேன்.

பெரிய அத்தை கண்ணீர்விட்டு அழுதாள். பெரிய பாட்டி “சுகிர்தம் துணையிருக்கட்டும்” என்றாள். நான் தெற்கு அறையில் குடியிருந்த குடும்ப பரதேவதைகளுக்கெல்லாம் நெய்விளக்கு ஏற்றி கும்பிட்டேன். நான் வண்டியில் ஏறும்போது இவள் கூடவே வந்தாள், கேசினி… அவளும் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

நான் பெருமூச்சுவிட்டேன். மறுபடியும் பேச்சைத் திருப்பிக் கொண்டுசெல்வதா வேண்டாமா? “அவளை யாரும் பார்க்கவில்லையா?”

அம்மிணித் தங்கச்சியின் சுருங்கிய முகம் சிரிப்பில் விரிந்தது. பல் இல்லாத வாயில் உள்மடிந்த உதடுகள் வெளியே வந்தன. “அதெப்படி தெரியும்? யட்சியை அவள் விரும்பாதவர்கள் பார்க்கமுடியாது”

“ஆண்கள் யாருமே பார்ப்பதில்லையா?”

“கேசினி மங்கல யக்ஷி. அவளை காமம் கொண்ட ஆண்கள் பார்க்கமுடியாது.”

“ஏன்?”

“அவள் தன்னை காட்ட மாட்டாள்… முல்லைப்பூ மணம் வரும். காலடியோசை கேட்கும் குரல் கேட்கும். ஆளை பார்க்கமுடியாது”

மெல்ல எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அம்மிணித் தங்கச்சியிடமிருந்து யக்ஷியை விலக்க முடியாது. அவர்கள் உள்ளத்தில் அந்த நிகழ்ச்சிகள் அவ்வாறு பதிவாகி விட்டிருக்கின்றன. நெடுங்காலமாக அவற்றை தனக்குள்ளே அப்படியே நினைத்து, பிறகு நினைத்ததை நினைவுகூர்ந்து நிறுவிக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் உருவாக்கிக்கொண்ட அந்த உலகில் வாழ்கிறார்.

அவர் சொல்லும் எல்லாவற்றிலும் கற்பனையும் கனவுகளும் ஊடுருவியிருந்தன. புராணம் கூட ஊடே சென்றது. காலம் உருகி கலந்து ஒற்றைச் சுழிப்பாக இருந்தது. அவர் சொல்வதை அப்படியே பதிவுசெய்வது ஒன்றே வழி. யக்ஷியை பிறகு வெளியே உருவிவிடலாம். வேண்டுமென்றால் அந்த யக்ஷியைப் பற்றி இன்னொரு கதை எழுதலாம்.

“சொல்லுங்கள், எப்படி திருவனந்தபுரம் சென்றீர்கள்?” என்றேன்.

“திருவனந்தபுரமா? யார் சென்றது? சரோஜினியா?”

“இல்லை, நீங்கள்.”

“நானா நான் எப்போது போனேன்? நான் இங்கே ஆஸ்பத்திரிக்குத்தானே போனேன்?”

“ஆமாம், நான் கேட்பது முன்பு. நீங்கள் சின்னப்பெண்ணாக இருக்கும்போது… முதல்முதலாக காலேஜ் போனீர்களே அப்போது.”

“ஆமாம்… மாட்டுவண்டியிலே போனோம். அது இரட்டைமாட்டுவண்டி. நல்ல சின்ன காளைகள். குதிரைபோல தாவித்தாவிச் செல்லும். திருநயினார்குறிச்சியில் இருந்து நாங்கள் கிளம்பி நெய்யாற்றின்கரை வரை வந்தோம். அங்கே எங்கள் சொந்தக்காரர்களான சடையமங்கலம் தம்பி வீட்டில் தங்கினோம்… அங்கேதான் சுமங்கலை இருந்தாள். அவளும் நானும் அன்றைக்கு நிறைய பேசினோம். அவளுக்கு அப்போது திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. நான் என்ன சொன்னேன்?”

“சுமங்கலையைப்பற்றி.”

ஆமாம், நானும் அவளும் ஒரே வயது. அவளுக்கு மட்டும்தான் நான் படிக்கப்போகும் செய்தி தெரியும். எனக்கு திருவனந்தபுரத்தில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகத்தான் எல்லாரிடமும் சொல்லியிருந்தார் என் மாமா. திருநயினார்க்குறிச்சியில் எவருக்குமே தெரியாது. தெரிந்தால் என்ன ஆகும்? ஊரே கலவரமாகியிருக்கும். ஊரில் அன்றெல்லாம் படிப்பு என்பது ஒழுக்கமீறலாகவே கருதப்பட்டது.

நான் ரகசியமாக சுமங்கலையிடம் நான் காலேஜில் சேரப்போகிறேன் என்றேன். அவளுக்கு நம்பிக்கையே இல்லை… நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அதன்பிறகு அவள் நம்பினாள். நாங்கள் அன்றிரவு ஒரே படுக்கையில் படுத்தோம். அருகருகே. நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு தூங்கினோம். அன்றெல்லாம் பெண்கள் அப்படித்தான் தூங்குவார்கள். நான் அவளுக்கு முத்தம் கொடுத்தேன். எங்களுடன் கேசினியும் அந்த படுக்கையில் இருந்தாள்.

“அவளுக்கு நான்கு தங்கைகள். அவர்களெல்லாம் பிறகு திருமணமாகி வேறுவேறு இடங்களில் இருந்தனர். சுமங்கலையின் மகள் சாந்தாமணி… அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்றார் அம்மிணி தங்கச்சி.

நான் “திருவனந்தபுரத்தில்” என்றேன். யார் அந்த சுமங்கலை என்றே தெரியவில்லை.

“ஆமாம் திருவனந்தபுரத்தில்” என்று அம்மிணித் தங்கச்சி சொன்னார். அவரே சொற்களை சேர்க்க தொடங்கினார். அன்றைக்கு ரோடு இல்லை. மண்சாலைதான். சி.பி.ராமசாமி அய்யர் ரோடு போட்டதெல்லாம் பிறகுதானே? மண்சாலையில் மாட்டுவண்டிச் சக்கரங்கள் உருண்டு உருண்டு செம்மண் குங்குமம் போல இருக்கும். மாட்டுவண்டி போவதுகூட சேற்றில் உழுதுகொண்டே போவதுபோல இருக்கும். இரண்டுபக்கமும் வயல்கள் பச்சைப்பசேலென்று விரிந்திருக்கும். தொலைவில் மரங்கள் அடர்ந்த மண்குன்றுகள் தெரியும்.

அன்றைக்குப் பாறசாலைகூட சின்ன ஊர்தான். பாலராமபுரத்தில் ஒரே ஒரு கடை. சாலியர்கள் அங்கே துணிவிற்பார்கள். அதன்பிறகு நேமம். கரமனை ஆற்றின் கரையில் என் சிறிய மாமா நாராயணனின் மனைவி பத்மாவதியின் குடும்பவீடு இருந்தது. கல்லிங்கல் வீடு என்று பெயர். அங்கேதான் நான் தங்கிப் படித்தேன். நேராக ஆற்றங்கரைக்கு போய் வண்டியை அவிழ்த்துவிட்டு ஆற்றில் குளித்து சுத்தமாகி ஈர உடையுடன்தான் கல்லிங்கல் வீட்டுக்குப் போனோம்.

கரமனை ஆற்றில் கேசினி குளிக்கவில்லை. அருகே மகாதேவர் கோயில் இருந்தது . அவள் கோயில் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.யக்ஷிகள் கோயிலுக்குள் நுழையாமல் இருக்க பூதங்களை காவல் வைத்திருப்பார்கள். அவள் ஆற்றின் கரையில் நின்று சுற்றிச்சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். அவள் வீடுவிட்டு வந்ததே இல்லை. வண்டியில் இருந்து பாதையை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். நாங்கள் கோயிலில் கும்பிட்டுவிட்டு வந்தபோது வந்து சேர்ந்துகொண்டாள்

நான் அவர் முகத்தை பார்த்தேன். கண்களில் பார்வை பாதிதான் வெளியுலகு நோக்கி இருந்தது. எந்த வயதில் அகவுலகும் புறவுலகும் எல்லை அழிந்து கலக்க ஆரம்பிக்கின்றன?

ஆனந்தவல்லி டீச்சர் வந்து என்னை நோக்கி “இன்றைக்கு போதும்” என்றாள்.

“ஆமாம்” என்று நான் எழுந்துகொண்டேன்.

ஆனந்தவல்லி டீச்சர் திருவனந்தபுரம் யூனிவர்சிட்டி கல்லூரியில் மலையாளம் துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். கவிதைகள் எழுதுவார். எட்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.  பெரும்பாலும் குருவாயூரப்பனைப்பற்றிய கவிதைகள் அவருடைய அம்மா சரோஜினியம்மா மறைந்த நீதிபதி கிருஷ்ணன் நாயரின் மகள். அவர் மறைந்து எட்டாண்டுகளாகிறது. சரோஜினியம்மாவின் அம்மாதான் அம்மிணித் தங்கச்சி.

அம்மிணித் தங்கச்சிக்கு சரோஜினி ஒரே மகள்தான். சரோஜினி மறைந்ததை அம்மிணித் தங்கச்சி காலப்போக்கில் அப்படியே மறந்துவிட்டார். ஆனந்தவல்லியம்மாவையே சரோஜினியம்மா என்று நினைத்திருந்தார். அந்த எண்ணத்தை மாற்ற எவரும் முற்படவில்லை.

“அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்றாள் ஆனந்தவல்லி டீச்சர்.

“இவள் என்ன செய்வாள்?” என்று அம்மணித் தங்கச்சி என்னைப் பார்த்தார்.

“இவள் போய்விட்டு நாளை வருவாள்.”

“நீ என்ன செய்வாய் லக்ஷ்மி?” என்றாள் அம்மணித்தங்கச்சி

“நாளைக்கு வருவேன்” என்றேன்.

“சரி நாளைக்கு வா” என்றார் அம்மிணித் தங்கச்சி “சாப்பிட்டுவிட்டு போ என்ன?”

ஆனந்தவல்லி அம்மா அவரை கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். அவர் உருவமே குறுகிவிட்டது. வயதாகும்போது மனிதர்களின் உடல் எப்படி அத்தனை சிறிதாகிவிடுகிறது என்பதைப்போல ஆச்சரியம் ஏதுமில்லை. தசைகள் சுருங்கிவிடுகின்றன, உடல்திரவம் குறைந்துவிடுகிறது, எலும்புகள் ஒன்றோடொன்று இணைப்பு தளர்வதனால் கைகால்கள் வளைந்து கூன்விழுந்து மொத்தகூடே சிறிதாகிவிடுகிறது.

ஆனால் அதைவிட ஒன்று உண்டு, அவர்களின் மானசீகமான இடமும் சிறிதாகிவிடுகிறது. மிகப்பெரிய இடத்தை நிறைத்து வாழ்ந்தவர்கள் கண்ணும் கையும் எட்டும் சிறிய வெளியில் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். ஆகவே நாம் அவர்களை நம்மையறியாமலேயே மிகச்சிறியவர்களாக எண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

நான் விடைபெற்று என் அறைக்கு வந்தேன். அவர்களின் வீடு கொல்லத்தில் காயல் அருகே இருந்தது. நான் நகரில் ரயில்நிலையம் அருகே ஒரு விடுதியில் அறை போட்டிருந்தேன். வந்ததுமே குளித்தேன். மின்சாரக் கெட்டிலில் ஒரு டீ போட்டு குடித்தேன். பதிவானவை சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து ஒரு நகல் எடுத்துக்கொண்டேன்.

எழுதவிருக்கும் கட்டுரையின் முகப்பை ஒருமுறை டைப் செய்து தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. என்னுடன் எப்போதுமே ரெமிங்டன் போர்ட்டபிள் டைப்ரைட்டரை கொண்டு செல்வேன். தனியறையில் அது எனக்கு ஒரு அழகான துணை. எழுதாவிட்டாலும்கூட அது இனிய உடனிருப்பு. எப்போதுவேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற வாய்ப்பின் வடிவம் அது.

நான் அதன் முன் அமர்ந்து எழுத்துக்களில் கைகளை ஓட்டினேன். இந்தியாவே பரபரத்துக்கொண்டிருந்தது. பொதுத்தேர்தலில் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது. வி.பி.சிங் பிரதமராகக்கூடும், ஆனால் சந்திரசேகர் அதை எதிர்த்தார். டெல்லியில் சமரசப் பேச்சுவார்த்தைகள் அல்லது சதிப்பேச்சுவார்த்தைகள் முழுமூச்சாக நடந்துகொண்டிருந்தன. அத்தனை பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி மட்டுமே எண்ணி பேசி எழுதிக்கொண்டிருந்தார்கள்.

நான் இங்கே நெடுந்தொலைவில் கேரளத்தின் ஒரு சிறுநகரில், நூறாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருந்தது. மண்புழுவாக மாறிவிட்டேன், மண்ணுக்கு அடியில் நெளிந்து வாழ்கிறேன். வேர்களுடன் வேராக. என் தலைக்குமேல் எங்கோ நிகழ்காலம் நடந்துகொண்டிருந்தது. நான் தட்டச்சிடத் தொடங்கினேன்

கேரளா பெண்களின் நிலம். இந்திய வரலாற்றில் பல முதல் பெண்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்னா ராஜம் கேரளத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் முதல் பெண் மாஜிஸ்ட்ரேட் ஓமனக் குஞ்ஞம்மா கேரளத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி கேரளத்தவர். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண்நீதிபதியான ஃபாத்திமா பீபியும் கேரளத்தைச் சேர்ந்தவர். இந்தப்பட்டியலை இன்னும்கூட பெரிதாக்கலாம்

அந்த முதல்பெண்மணிகளில் ஒருவர் அம்மிணி தங்கச்சி. இந்தியாவின் இரண்டாவது பெண் நீதிபதி அவர்தான். அந்த பழைய வரலாற்று நாயகிகளில் இன்று வாழ்பவர்களில் ஒருவர். நூற்றிநான்கு வயதைக் கடந்துவிட்டார். சென்றகாலத்தின் தூலவடிவமாக நம் முன் அமர்ந்திருக்கிறார்.

முதல்காலடிகள் எல்லாமே மகத்தானவை. அவை ஒருவகை எல்லை மீறல்கள். காலமும் விதியும் சூழலும் வகுத்த நெறிகளையும் தடைகளையும் உடைத்து முன்னெழுபவை. ஆகவே அவை மிகப்பெரிய அறைகூவல்கள்.

இன்னொரு கோணத்தில், இவர்கள் வரலாற்றின் கருவிகள். இப்போது பார்த்தால் இதெல்லாம் நடந்தேதீரவேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வழியாக. அது வரலாற்றின் விசை. அது இவர்கள் வழியாக நிகழ்ந்தது.

ஆனால் அது எளியது அல்ல. வரலாறு என்பது ஒரு மாபெரும் சக்தி. அது நம் வழியாகச் செல்கிறது. நாமனைவரும் பெருந்திரளாக அதை நம்மில் ஏற்றிக் கடத்துகிறோம். அம்மிணித் தங்கச்சி போன்ற சிலர் தன்னந்தனியாக அதை தாங்கி கடத்துகிறார்கள். பல்லாயிரம் வால்டேஜ் அழுத்தமுள்ள மின்சாரம் அந்த சிறு கம்பிகள் வழியாகச் செல்கிறது. அந்தக் கம்பி கொதிக்கும், உருகும், அறுந்துவிடக்கூடும். அது தொடுபவர்களை கொல்லும், அருகிருப்பவரை தகிக்க வைக்கும். அது ஒரு கொடூரமான தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவதுபோல.

அதுவும் எத்தனை வயதில்? உலகம்தெரியாத இளமையில். நண்பர்களே, நார்மன் ராக்வெல் 1964ல் வரைந்த அந்த அழகான வண்ணப்படத்தை நினைவுகூர்கிறீர்களா? The Problem We All Live With என அதற்கு நார்மன் ராக்வெல் பெயரிட்டிருந்தார். யதார்த்த பாணி ஓவியம், புகைப்படம் போன்றது. அதில் ஆறு வயதான ரூபி பிரிட்ஜ் என்னும் கருப்பினச் சிறுமி அமெரிக்கப் போலீஸ் அதிகாரிகளால் காவல் காக்கப்பட்டு வெள்ளையர்கள் மட்டுமே படிக்கும் ஒரு பள்ளிக்கு படிக்கச் செல்கிறார். நிறவெறிக்கு எதிரான அமெரிக்க சிவில் உரிமைகள் போராட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு அது. ஒரு திறப்பு, ஒரு வெற்றி.

1960 ஆம் ஆண்டுதான் அமெரிக்க அரசு கருப்பினத்தவர் எல்லா பள்ளிகளிலும் படிக்கலாமென ஆணையிட்டது. ஆனால் படிக்கச் செல்ல கருப்பினத்தவர் அஞ்சினர். ரூபி பிரிட்ஜ் துணிந்து முன்வந்தாள். வெள்ளை வெறியர்கள் அச்சிறுமியைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். அப்பள்ளியில் படித்த அத்தனை வெள்ளையினத்து பிள்ளைகளும் நின்றுவிட்டனர். அமெரிக்காவின் வெள்ளையர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் வெறுப்புடன் அருவருப்புடன் அவள் பார்க்கப்பட்டாள். ஆனால் அந்த ஓவியத்தில் அவள் வெண்ணிறச் சீருடை அணிந்து கையில் புத்தகத்துடன் உறுதியான முகத்துடன் கிட்டத்தட்ட ராணுவ சீர்நடையில் பள்ளிக்குச் செல்கிறாள்.

நண்பர்களே இது நடந்தது 1960ல். அப்போது இந்தியாவில் தீண்டாமை தடைசெய்யப்பட்டு,இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.நாம் பேசிக்கொண்டிருப்பது மேலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்ததைப் பற்றி. அன்று பெண்களின் இடமே ஒடுக்கப்பட்ட இனத்திற்கு நிகரானதுதான். அவர்கள் தங்களை அணைகட்டிய சிறையிட்ட அனைத்துக்கும் எதிராக எழுந்தனர். சிலர் அந்த அலையின் முதன்மை முகங்கள். முன்னணிப் போர்வீரர்கள்

அவர்களை ஆட்கொண்ட அந்த விசைதான் என்ன? இவர்கள் அத்தனைபேருக்கும் ஒரு முக்கியமான பொதுத்தன்மை உண்டு, இவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்ந்தவர்கள். அன்று தொற்றுநோய்கள் மிகுதி. ரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை வியாதிக்கும், இதயநோய்க்கும் அன்று மருந்துகள் இல்லை. ஆனால் அவர்கள் காலத்தை எதிர்கொண்டு நெடுங்காலம் வாழ்ந்தனர். காரணம் அவர்களுக்குள் இருந்த மாபெரும் உயிர்விசை. அவர்களை மொத்த சமகாலத்தையே எதிர்க்கச் செய்த அதே விசை.

அதை அறியத்தான் நான் அம்மிணி தங்கச்சியின் சொற்களுக்குள் செல்கிறேன். அம்மிணி தங்கச்சி இன்று தமிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில், பழைய தெற்கு திருவிதாங்கூரில், திருநயினார்க்குறிச்சி என்ற ஊரில் 1884-ல் பிறந்தார்.

திருநயினார்க்குறிச்சி தொன்மையான கோயிலூர். இங்குள்ள கறைகண்டேஸ்வரம் என்னும் சிவன்கோயில் சோழர்காலம் முதலே இருந்து வருவது. இங்குள்ள கல்வெட்டு இக்கோயிலை ‘ராஜராஜ தென்னாட்டு குறுநாட்டு கடிகை பட்டினத்து கரைகண்டேஸ்வரம் உடையார்-நாயனார்-கூத்தாடும் தேவர் என்ற அருள்மிகு கரைகண்டேஸ்வரம்  மகாதேவர்’ என்றும், இந்த ஊரை ‘கடிகைப்பட்டினம் திருநயினார்குறிச்சி’ என்றும் குறிப்பிடுகிறது

கடிகைப்பட்டனம் என்னும் ஊர் இன்று ஐந்து கிலோமீட்டர் அப்பாலிருக்கும் கடலோரக் கிராமம். இந்த கோயில் கல்வெட்டுகளில் இருந்து கடல் முன்பு இங்கே இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்று வள்ளியாறு கடியபட்டினத்தில் கடலில் கலக்கிறது. இன்று வள்ளியாற்றங்கரையில் உள்ளே தள்ளி இருக்கும் இந்த ஊர் அன்று ஒரு சிறு துறைமுகமாக இருந்திருக்கிறது

இந்த ஊரில்தான் தமிழகத்தின் பெருங்கவிஞரும் அறமுரைத்தவருமான திருவள்ளுவர் பிறந்தார் என்பது ஒரு தொன்மம் .திருவள்ளுவர் வள்ளுவநாயனார் என்று அழைக்கப்படுவதனால் இந்த ஊருக்கு திருநயினார்க்குறிச்சி என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.

எவ்வாறாயினும் இந்தச் சிற்றூர் சமண மதத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது. இந்த ஆலயத்தைச் சூழ்ந்து நாகரம்மன், நாகராஜா, சுழல்நாகங்களின் ஏராளமான சிலைகள் வழிபடப்படுகின்றன. தெற்குத்திருவிதாங்கூரில் கிடைத்த சமண தீர்த்தங்காரர், புத்தர் சிலைகளில் பெரும்பகுதி திருநயினார்க்குறிச்சியில் கிடைத்தவைதான்.

ஆதிச்சன் கோதை என்பவன் இந்த ஆலயத்தை எடுத்துக் கட்டி நிபந்தங்கள் விட்டதை தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் உள்ளன. கோதை, ஆதிச்சன் என்பவை சேரர்களின் பட்டங்கள். இப்பகுதியை ஆண்ட சேர அரசகுடியினனாக இருக்கலாம். ஆனால் கல்வெட்டு சோழர் காலத்தையது. சோழர்களின் குறுநிலமன்னராக இவர் இருந்திருக்கலாம்.

கோயிலின் முன்பகுதியில் உள்ள சோபன மண்டபத்தை ‘பெரும்பற்றப்புலியூர் சிவனுக்கடியான்’ என்பவன் 1432-ம் ஆண்டு கட்டுவித்தான் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. சிவனடி என்ற அடைமொழி கொண்டது அம்மிணித் தங்கச்சியின் பெரும்பற்றப்பள்ளி குடும்பம். சோழர் காலத்தில் உருவாகி வந்த நிலவுடைமை குடி. பல தலைமுறையாக ஏராளமான சொத்துக்கள் இருந்தன, ஆனால் குடும்பம் அதைவிட பிரம்மாண்டமானது. பிற்காலத்தில் அந்த சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது எவரும் செல்வந்தர்களாக நீடிக்கவில்லை.

ஆனால் அம்மிணி தங்கச்சி பிறந்தபோது எட்டுகட்டு வீடு, வாசலில் யானை, நாலைந்து வில்வண்டிகள், இருபது வேலைக்காரர்கள், பத்து வைக்கோற்போர்கள், நூற்றுக்கணக்கான மாடுகள் என்று ஒரு நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அங்கே இருந்தது.

அந்தக்குடும்பத்தில் எவருமே பள்ளிக்கூடம் சென்று படித்ததில்லை. ஆண்களுக்குக் கல்வி கற்பிக்க வீட்டுக்கே கணியார் வருவார். மலையாள எழுத்துக்கள், அடிப்படை எண்கள், பஞ்சாங்கம் பார்க்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டதும் கல்வி நிறைவு அடைகிறது. அதன்பின் நேராக களரியில் அடிமுறையும் ஆயுதமுறையும் கற்பார்கள். நாயர்குடும்பங்களில் பெண்களுக்கு கணியாரின் மனைவியர் வந்து வீட்டின் அகத்தளத்தில் வைத்து எண்ணும் எழுத்தும் சொல்லிக்கொடுப்பார்கள்.

பெண்கள் அன்று பொதுவாக வீட்டைவிட்டு வெளியே செல்வதே இல்லை. செல்வதாக இருந்தால் ஒரு ஏவல்பெண்ணும் ஒரு வாளேந்திய காவல்காரனும் உடன் செல்லவேண்டும். மூடுவண்டிகளில்தான் இன்னொரு ஊருக்குச் செல்வார்கள். அப்போது ‘பூஹோய்! பூஹோய்!’ என ஓசையெழுப்புவார்கள். கீழ்ச்சாதியினர் விலகிவிடவேண்டும். அவ்வாறு விலக்கும் இந்த உயர்சாதிப்பெண்ணும் சிறையில் தான் இருக்கிறாள் என்பதை நினைவுகொள்க.

மேலும் சில தலைமுறைகளுக்கு முன் அவர்களை ஒரு கீழ்சாதிக்காரன் கண்ணால்கூட பார்க்கக்கூடாது என்றே வழக்கம் இருந்தது. அப்படிப் பார்த்து ஒரு கல்லை எடுத்து அவள்மேல் வீசிவிட்டு ‘தொட்டுவிட்டேன் தொட்டுவிட்டேன்’ என்று கூவினால் அவளை அவனுக்கே அளித்துவிடுவார்கள். அவன் அவளை மணந்துகொள்ளலாம், பெரும்பாலும் உடனடியாக அடிமையாக விற்றுவிடுவான். அன்று அப்பெண்களை வாங்க பலரும் விரும்பினர். அடிமைவணிகம் உச்சத்தில் இருந்த காலம் அது

இந்த முறை மண்ணாப்பேடி, புலைப்பேடி எனப்பட்டது. அவ்வாறு அவள் குடும்பம் அவள் செத்துவிட்டதாக கருதி ஈமச்சடங்குகள் செய்து நிலைவாயிலை மூடிவிடும். பெண்களை அப்படி உயிருடன் செத்தவர்களாக ஆக்குவது ‘படியடைத்து பிண்டம்வைத்தல்’ எனப்பட்டது.

1696ல் திருவிதாங்கூர் மகாராஜா ராமவர்மா மண்ணாப்பேடி புலைப்பேடி இரண்டையும் தடைசெய்தார். அதற்கு எதிராக புலையர்கள் ஒரு கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று வலியகேசி கதை என்ற நாட்டுப்புறப்பாடல் சொல்கிறது. ஏனென்றால் அவ்வாறு பெண் கவர்தல் புலையர் சாதியினரின் முக்கியமான வருமானமாக அன்று இருந்தது. அக்கலவரம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

மேலும் கீழும் பெண்கள் ஒடுக்கப்பட்டிருந்தனர். பெண்களை நிலம் என்றால் அவர்கள் மேல் கல்லும் செங்கல்லும் வைத்து கட்டப்பட்டவை அன்றைய கோட்டைகள், அரண்மனைகள், வீடுகள். பெண்களின் மேல் வேர் பரப்பி உறிஞ்சி உண்டு எழுந்தவை அன்றைய அரசு, மதம் அனைத்தும்.

அன்று திருவிதாங்கூரில் திருமணமுறை இல்லை. ஆண்கள் பெண்களை வீடுதேடி வந்து சம்பந்தம் செய்து பிள்ளைபெறச் செய்வார்கள். அதிகமும் நம்பூதிரிகள், அல்லது அரசகுடியினர். ஆண்கள் வெளியே சென்று தங்கள் துணைவிகளை தேடிக்கொள்வார்கள். பெண்கள் தங்கள் மூத்த உடன்பிறந்தவர்களின் ஆட்சியில் வீடுகளிலேயே பற்பல தலைமுறைகளாக சேர்ந்து வாழ்வார்கள்.

அந்தக்கால வீடுகளே பல அடுக்குகள் கொண்டவை, அக்கால நிலவுடைமைச் சமூகம் போல. கோயிலருகே, அல்லது மையச்சாலை அருகே இருக்கும் எட்டுகட்டு வீடுகள் கோட்டை போன்ற மதிலால் சூழப்பட்டவை. அந்த மதிலில் உள்ள நுழைவாயில் கூரைபோடப்பட்டு இருபுறமும் திண்ணை போன்ற அமைப்புடன் இருக்கும். அதை கொட்டியம்பலம் என்பார்கள். உள்ளே இன்னொரு முற்றம்.

அதற்குப்பிறகுதான் மையவீடு. இது தாய்வீடு எனப்பட்டது. அதன் முகப்பு மூன்றுபக்கமும் வராந்தா கொண்ட ஒரு நீட்சி. அதை பூமுகம் என்பார்கள். கொட்டியம்பலத்திற்கு அப்பால் கீழ்ச்சாதியினருக்கு நுழைவு அனுமதி இல்லை. பூமுகமும் அதையொட்டிய உள்கூடமும் இருபுறமும் உள்ள படுக்கையறைகளும் ஆண்களுக்குரியவை. அங்கே எச்சூழ்நிலையிலும் பெண்கள் வரமுடியாது. அவை அரங்கும் அறையும் எனப்பட்டன.

பெரும்பாலும் அவை இரண்டு மாடி. கீழே வைப்பறைகள். அங்கேதான் விலைமதிப்புள்ள பொருட்கள் இருக்கும். மேலேறிச்செல்ல மரத்தாலான படிக்கட்டுகள். மாடியில் ஆண்களுக்கான படுக்கையறைகள். ஆண்கள் உள்ளே வந்து செல்ல மூன்று வாசல்கள் உண்டு. முகப்பு வழியாக இளையவர்கள் நுழைவதும் வெளியேறுவதும் கூடாது

உள்ளே ஒரு அங்கணம். அதைச்சுற்றி வராந்தாக்கள். படுக்கையறைகள். அவை ஒவ்வொன்றும் குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு. அதிலிருந்து ஒரு இடைநாழியால் இணைக்கப்பட்ட தனிக்கட்டிடம் அகத்தளம். அது முழுக்க முழுக்க பெண்களுக்குரியது. அங்கே இன்னொரு அங்கணம். அதைச்சுற்றி வராந்தாக்கள். படுக்கையறைகள். பெண்களுக்கான வைப்பறைகள்.

அதிலிருந்து இன்னொரு இடைநாழியால் இணைக்கப்பட்ட தனிக்கட்டிடம் சமையலறை. அங்கு இன்னொரு அங்கணம் அதைச்சூழ்ந்து வராந்தாக்களில் சமையல் வேலைகள் நிகழும். அடுக்களைகள் இரண்டு இருக்கும். ஒன்றில் ஆண்களுக்கான உணவு, இன்னொன்றில் ஏனையோருக்கான உணவு.

அதற்கும் அப்பால் ஒரு கொல்லைமுற்றம். அதற்கு அப்பால் உரப்புரை விறகுப்புரை நெல்லுபுரை போன்ற பணியிடங்கள். நெல்குத்துவது விறகு சேமிப்பது போன்றவற்றை செய்பவர்களின் இடம். அங்கேயே வாழும் வேலைக்காரர்கள். அவர்கள் உள்ளே வந்துசெல்வதற்கான கொல்லைப்புற வாசல். அதிலிருந்து எழுந்து கொல்லைப்புற தோட்டம் வழியாக அப்பால் சென்று ஊடுவழியாக ஆகும் வேலைக்காரர்களுக்கான பாதை.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான இடங்கள் வரையறை செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொருவர் மேலும் அந்த மொத்த அமைப்பே அமர்ந்திருந்தது. எவருமே அசைய முடியாது. அசைந்தால் அக்கணமே நசுக்கப்படுவார்கள். அந்தச் சூழலில் இருந்து ஒருபெண் பள்ளிக்கூடத்திற்குப் படிக்கச் சென்றாள் என்பதும், கல்லூரிக்குச் சென்றாள் என்பதும் நினைத்தே பார்க்கமுடியாதது.

திருவிதாங்கூர் நாட்டின் முதல் கல்லூரி மாணவி மேரி புன்னன் லூக்கோஸ் என்பது சரித்திரம். கேரளத்திலும் அவரே முதல் கல்லூரி மாணவி. சென்னை பல்கலையின் முதல் பெண் பட்டதாரியும் அவரே. நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் காசநோய் மருத்துவமனை அவரால் நிறுவப்பட்டது, இன்று அது மருத்துவக் கல்லூரியாக இருக்கிறது. மேரி புன்னன் லூக்கோஸும் அம்மிணி தங்கச்சியும் ஒரே வயதினர், அம்மிணி தங்கச்சி ஒருவயது கூடுதல். ஆனால் அவர் ஒருவயது பிந்தி கல்லூரியில் சேர்ந்தார்.

அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு மிகப்பெரியது. மேரி புன்னன் லூக்கோஸின் அப்பா டாக்டர். புன்னன் திருவிதாங்கூரில் முதல் மருத்துவ டாக்டர் பட்டம் பெற்ற இந்தியர். அரசருக்கான மருத்துவராக இருந்தார். அவருடைய மகளான மேரி பிரிட்டிஷ் கவர்னஸால் வளர்க்கப்பட்டவர். திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் ஹைஸ்கூலிலும் பின்னர் திருவனந்தபுரம் மகாராஜாஸ் கல்லூரியிலும் படித்தார்.

மகாராஜாஸ் கல்லூரி பின்னர் திருவனந்தபுரம் யூனிவர்சிடி கல்லூரி என்று பெயர் பெற்றது. மேரிக்கு அவர் பெண் என்பதனால் கல்லூரியில் அறிவியல்படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருடைய தந்தையே போராடியும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் பி.ஏ படித்து 1909ல் பட்டம் பெற்றார். சென்னை பல்கலையிலேயே பட்டம்பெற்ற முதல் பெண்மணி மேரி புன்னன்தான் .

பின்னர் லண்டன் சென்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். லண்டனிலேயே மருத்துவப் பணியாற்றிய மேரி இந்தியா திரும்பும் எண்ணமே கொண்டிருக்கவில்லை. ஆனால் டாக்டர்.பூன்னன் இறப்புத் தருணத்தில் அவர் இந்தியா திரும்பவேண்டும் என்று ஆணையிட்டார். ஆகவே 1916ல் இந்தியா திரும்பி இங்கே காசநோய் பணிகளில் ஈடுபட்டார் மேரி.

மேரி வழக்கறிஞரான குந்நுகுழியில் குருவிளா லூக்கோஸை திருமணம் செய்துகொண்டார். லூக்கோஸ் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். மேரி புன்னன் லூகோஸ் 1976-ல் மறைந்தார். அதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1975-ல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

மேரி புன்னன் லூக்கோஸின் கதையுடன் இணைத்தே அம்மிணி தங்கச்சியின் கதையும் பேசப்படுகிறது. மேரி புன்னனைப் போல அம்மிணி தங்கச்சியின் கல்விவாழ்க்கை சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது அல்ல. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உறைந்து நின்றுவிட்ட நாயர் குடும்பத்தில் பிறந்தவர் அவர். கேரளத்தின் தெற்கே மிகச்சிறிய கோயில்சார்ந்த ஊரான திருநயினார்க்குறிச்சியில் அன்று அங்கே ஆரம்பப் பள்ளிக்கூடம்கூட இல்லை.

அம்மிணி தங்கச்சி பன்னிரண்டு வயது வரை வீட்டிலேயே எண்ணும் எழுத்தும் படித்துவிட்டு நேராக ஆறாம் வகுப்பில் நாகர்கோயில் டதி பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கே மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். திருவனந்தபுரம் மகாராஜாஸ் கல்லூரியில் பட்டப்படிப்புக்குச் சேர்ந்தார். அங்கே அவருக்கு இடம் கிடைத்ததே அதற்கு முந்தைய ஆண்டு மேரி புன்னன் லூக்கோஸுக்கு இடம் கிடைத்திருந்தமையால்தான்.

அங்கே பட்டப்படிப்பு முடித்தபின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். அங்கேயும் அவர் இரண்டாமர். அவருக்கு முன்னால் பி.ஆனந்தபாய் மெட்ராஸ் மாகாணத்தில் சட்டம்படிக்கச் சென்ற முதல் பெண். ஆனந்தபாய் வழக்கறிஞர் தொழில்செய்ய மிகவும் போராடவேண்டியிருந்தது. அதைவிடப்பெரிய போராட்டம் அம்மிணி தங்கச்சிக்கும் தேவைப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் முதல் பெண் வழக்கறிஞர் அம்மிணி தங்கச்சி. இந்தியாவின் இரண்டாவது பெண் நீதிபதி.

நான் குறிப்பை முடித்துவிட்டு தாள்களை அடுக்கி படித்துப் பார்த்தேன். விரல்களைச் சொடுக்கி நிமிர்ந்து பெருமூச்சுவிட்டேன். மிகமிக தெளிவான வரலாறு. தரவுகள் நிறைந்தது. ஆனால் ஊடாக அந்த யக்ஷி. அவளை என்ன செய்வது?

அன்று படுக்கும்போது அந்த யக்ஷியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான நாயர் இல்லங்களில் யக்ஷிகள் இருக்கிறார்கள். இரண்டு வகையானவர்கள். அந்த வீடுகளிலேயே பிறந்து வளர்ந்து ஏதேனும் தருணங்களில் அவமரணம் அடைந்து யக்ஷியானவவர்கள். வெளியே இருந்து வந்து குடியேறியவர்கள். வெளியே இருந்து வருபவர்களிலேயே பழிவாங்கும் பொருட்டு தேடி வந்து விலக்க முடியாதபடி அங்கேயே தங்கி விட்டவர்கள் ஒருசாரார். விரும்பி அழைத்துக்கொண்டு வந்து பரதேவதையாக அமைய வைக்கப்பட்டவர்கள் இன்னொரு சாரார். இந்த யக்ஷி எத்தகையவள்?

அந்த யக்ஷி எவ்வகையில் அம்மிணி தங்கச்சிக்கு பொருள்படுகிறார்? நான் அவரிடம் பலமணிநேரம் பேசிவிட்டேன். அவருக்கு தன் கணவர் திரு கொண்டம்பள்ளி சிவதாச மேனோன் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை. மகள் சரோஜினியைப் பற்றிக்கூட பெரிதாக ஏதும் சொல்லவில்லை. அவர் வாழ்க்கையில் பெரிய செல்வாக்கு செலுத்திய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். 1969-ல் மாத்ருபூமிக்காக எம்.ஏ. நஜீப் எடுத்த நீண்ட பேட்டியில் அவர் தன் கல்வி வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதில் பலரை உணர்ச்சிகரமாக நினைவுகூர்ந்திருந்தார்.

அவரை நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்த்துக்கொண்டு, ஆசிரியையாகவும் தனிப்பட்ட பாதுகாவலராகவும் அமைந்த டதி அம்மையார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது மேரி புன்னனுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி திருவிதாங்கூர் மகாராணியிடமே முறையிட்டு அனுமதி பெற்றுத்தந்த பேராசிரியர் எம்.கிருஷ்ண மேனன். மகாராஜா கல்லூரியின் தலைவராக இருந்த அலெக்ஸாண்டர் மிச்செல்.

ஆனால் என்னிடம் பேசியபோது அவர் அவர்களை அவ்வப்போது வெறும் பெயர்களாகக் கடந்துசென்றார். அவர் சொன்னது முழுக்க அவருடைய இளமையில் இருந்த ஊர்களின் காட்சிகளையும், பாதைகளையும், அன்றிருந்த சில தோழிகளையும் பற்றி. அனைத்தையும் இணைப்பது அந்த யக்ஷி, கேசினி.

நான் தூங்கி நெடுநேரம் கழித்து, விடிவதற்குச் சற்றுமுன், ஒரு கனவு கண்டேன். என் அறைக்குள் ஒரு பெண் நின்றிருந்தாள். பதினைந்து வயதிருக்கலாம். மிகமிக அழகிய பெண். அவள் கண்களும் மூக்கும் உதடுகளும் அமைந்திருந்த நேர்த்தி மிகச்சிறந்த செவ்வியல் ஓவியங்களுக்குரியது. அவள் கூந்தல் பெருகி விழுந்து தரையில் பரவியிருந்தது. என்னை நோக்கி புன்னகை செய்தாள்.

அதன்பின்னரே அவள்கூந்தலின் விசித்திரம் என் பிரக்ஞையை தொட்டது. நான் எழுந்து அமர்ந்தேன், கனவுதான் என்று உணர்ந்தேன். எழுந்துசென்று நீர் அருந்திவிட்டு படுக்கையில் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

அன்று நான் அம்மிணி தங்கச்சியை பார்க்கச் சென்றபோது ஆனந்தவல்லி டீச்சர் வாசலிலேயே புன்னகையுடன் வரவேற்றார். “அம்மச்சி காலையிலேயே எழுந்து அமர்ந்து அவள் எங்கே, லக்ஷ்மி எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

“குளித்துவிட்டார்களா?”என்று நான் கேட்டேன். அவர் குளிக்காமல் எவரையும் சந்திப்பதில்லை.

“காலையிலேயே குளித்துவிட்டார்” என்று ஆனந்தவல்லி சிரித்தார் “எல்லாமே ரெடியாக இருக்கிறது.”

நான் உள்ளே சென்றபோது அம்மிணி தங்கச்சி சோபாவில் ஒடுங்கி அமர்ந்திருந்தார். சோபாவில் முன்னால் வளைந்து மடியில் இரு கைகளையும் ஊன்று அமர்வதுதான் அவருக்கு வசதியான அமர்வு முறை. நான் சென்று வணங்கினேன்.

“நீ எங்கே போனாய்?”

“இங்கே பக்கத்தில்தான் இருந்தேன்” என்றேன். பொதுவாக போவது வருவதுபோன்ற எந்த விஷயங்களும் அவர் நினைவில் நிற்பதில்லை. சிலசமயம் நான் அந்த வீட்டிலேயே இன்னொரு அறையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்.

ஆனந்தவல்லி டீச்சர் அறையை விட்டுச் சென்றபோது “நீங்களும் இருங்கள்” என்றேன்

“நான் எதற்கு?” என்றார்

“அம்மா குடும்ப நினைவுகளைத்தான் சொல்லப்போகிறார். கதைகளிலோ பிற செய்திகளிலோ எங்காவது இடைவெளி விழுந்தால் நீங்களும் சொல்லலாமே” என்றேன்.

அவர் “நானா?” என்றார் பிறகு “நானும் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். பாட்டி சொல்லும் கதைகளெல்லாம் நான் பலமுறை கேட்டவைதான்” என்றார்.

“உட்காருங்கள் டீச்சர்” என்றேன்.

அவர் அமர்ந்தார். “கல்யாணி, அடுப்பை பார்த்துக்கொள்” என்று வேலைக்காரிக்கு ஆணையிட்டார்.

டேப்பை ஓடவிட்டதும் நான் முதலில் கேசினியைப் பற்றித்தான் கேட்டேன்.

“கேசினியா? அவள் எங்கள் திருநயினார்க்குறிச்சி வீட்டில் தெற்குபுரையில் இருந்தாள்” என்றார் அம்மிணி தங்கச்சி.

“அங்கே எப்படி வந்தாள்?”

“என் பூர்விகர்களில் ஒருவரான பெரும்பற்றப்பள்ளி சிவனடிக்காரன் வலிய பிறுத்தா நாயர் முன்பு ஒருமுறை வேளிமலைக்கு புலிவேட்டைக்குப் போனார்” என்று அம்மிணி தங்கச்சி சொன்னார். “புலிவேட்டையாடி புதிய புலிநகமும் தோலும் கொண்டுசென்று மகாராஜாவுக்கு காணிக்கை வைப்பது பெரிய வீரம் என்று அன்று கருதப்பட்டது. புலியைக்கொல்ல நிறைய விதிமுறைகள் உண்டு. அந்தப்புலியின் நகம் ஏழுமுறை தேய்ந்திருக்கவேண்டும். அது ஆண்புலியாக மட்டும்தான் இருக்கவேண்டும்”

“ஆமாம்” என்றேன். அன்று மூத்தபுலியை கொல்வது காட்டை வாழச்செய்யும் ஒரு முறையாக பழங்குடிகளிடையேகூட இருந்திருக்கிறது. இளம்புலிகள் தலையெடுக்கும். அவை ஆரோக்கியமான குட்டிகளை உருவாக்கும்.

“அன்றைக்கு வேளிமலை இப்போது மாதிரி அல்ல, அணுகவே முடியாது. கேட்டிருப்பாய். வேளிமலையின் அடிவாரம் முழுக்க பெரிய காடுகள் இருந்தன. பஞ்சவன் காடு, கள்ளியங்காடு. இப்போது அதெல்லாமே ஊர்கள் ஆகிவிட்டன. வேளிமலைக்குமேலேயே எஞ்சீனியரிங் காலேஜ்கள் இருக்கின்றன என்று சரோஜினி சொல்கிறாள்.”

“ஆமாம்” என்றேன் “அவையெல்லாம் இன்றைக்கு நாகர்கோயிலின் பகுதிகளாக மாறிவிட்டன.”

வலிய பிறுத்தா நாயரும் அவருடைய இளையவர் குட்டன் நாயரும் மூத்த மருமகன் கண்டன் நாயரும் மற்ற படைவீரர்களும் திருநயினார்குறிச்சியில் இருந்து கிளம்பி குருந்தங்கோடு வழியாக ஆளூரில் சென்று தங்கினார்கள். ஆளூர் அன்றைக்கு கோட்டாறு பத்மநாபபுரம் வண்டிப்பாதையில் இருந்தது. அதற்கு வடக்கே பஞ்சவன்காடு தொடங்கிவிடும். வில்லுக்குறி போயில் ஏழுமலை பாறையிடுக்கு வழியாக வேளிமலைமேல் ஏறிச்சென்று புலிவேட்டையாடி மறுபக்கம் கணியாகுளத்தில் இறங்கி திரும்பி வருவார்கள்.

அம்மிணி தங்கச்சி அதுவரை இருந்த சொல்தயக்கங்களை உதறி தொடர்ச்சியாகப் பேசத்தொடங்கினார். அவர் குரலில் இளமை வந்தணைந்ததுபோல தோன்றியது.

மிகமிக ஆபத்தான பாதை. அதை மிகவும் திறமையான வேட்டைக்காரர்கள் மட்டுமே செய்யமுடியும். நல்ல வழிகாட்டிகளும் வேண்டும், இல்லாவிட்டால் அப்படியே வழிதவறி உள்காட்டுக்குள் சென்று விடவேண்டியதுதான். திரும்பி வரவே முடியாது. வேளிமலைக்கு அப்பால் அப்படியே காடுதான். முடிவில்லாத காடு. இன்றைக்குத்தான் அந்த காடெல்லாம் கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், நெடுமங்காடு என்றெல்லாம் ஊர்களாக ஆகியிருக்கின்றன. அன்றைக்கு மிகப்பெரிய காடு… இந்த தெற்குதிருவிதாங்கூரின் முக்கால்வாசி நிலம் புலியும் யானையும் வாழும் காடுதான்.

ஆனந்தவல்லி டீச்சரும் சேர்ந்தே கதை சொன்னார். இருவரும் ஒரு கதையின் இருபக்கங்களை நிரப்பினர். பின்னர் எப்போதோ ஒரே குரலாக மாறினர். இந்தக்கதைகள் எவர் நாவை கண்டடைந்தாலும் தாங்களே திகழத்தொடங்கிவிடுகின்றன.

வலிய பிறுத்தா நாயரும் அவருடைய இளையவர்களும் படைவீரகளும் மலையேறிச் சென்று வேளிமலையின் உச்சியில் அமைந்த யானைப்பாறைக்கு பின்பக்கம் இருக்கும் துளிச்சொட்டு குகை என்ற கோயிலை அடைந்தார்கள். அது இயற்கையாக அமைந்த ஒரு குகை. அதற்குள் சாஸ்தாவின் ஒரு சிறு சிலை இருந்தது. அங்கே அன்றாட பூஜைகள் ஏதும் இல்லை. ஆண்டுக்கு ஒரே ஒருநாள் இருமுடி கட்டி அங்கே வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்து திரும்பிவிடுவார்கள்.

அங்கே அரிசியும் உப்பும் எப்போதும் பாறையிடுக்கில் வைக்கப்பட்டிருக்கும். மலையேறி வருபவர்களுக்கு அந்த இடம்தான் இறுதி எல்லை. அதற்கப்பால் செல்லக்கூடாது. அங்கே சமைத்துச் சாப்பிட்டு ஓய்வெடுத்து இறங்கிவிடவேண்டியதுதான். ஆனால் அன்று வலிய பிறுத்தா நாயர் காலடித்தடங்களைக் கொண்டு ஒரு மூத்த வேங்கைப்புலியை துரத்திச் சென்றார். அது அவர்களின் ஓசைகேட்டு உள்காட்டுக்குள் சென்றுவிட்டது.

அவர்கள் அந்தப் புலியை பார்க்கவே இல்லை, ஆனால் காலடிகளை வைத்து அளந்தபோது அந்தப் புலி ஒன்பது அடி நீளமிருந்தது. அதன் காலடித்தடத்திற்குள் ஒரு மனிதக்காலடியை முழுமையாக வைக்க முடிந்தது. அது ஆண்புலியாக இருக்கவே வாய்ப்பு, மூத்த பெண்புலிகள் குட்டிகள் இல்லாமல் தனியாக அலைவதில்லை. அதன் நகத்தையும் தோலையும் திருவனந்தபுரத்துக்கு கொண்டுசென்றால் மகாராஜாவின் பட்டும்வளையும் கிடைப்பது உறுதி. ஆகவே விடக்கூடாது என்று முடிவுசெய்தார்.

கூட வந்தவர்கள் எதிர்த்தனர். மேலே சென்றால் வழியறியாக் காட்டில் சிக்கவேண்டியிருக்கும் என்றனர். ஆனால் வலிய பிறுத்தா கேட்கவில்லை. அவர் எவர் பேச்சையும் கேட்பவர் அல்ல. துளிச்சொட்டு சாஸ்தா குகையில் தங்கியிருந்தபோது அவர்கள் சொல்லிச் சொல்லி பார்த்துவிட்டு அமைதியடைந்தனர். மறுநாள் வேல்குந்தங்களை ஏந்தியபடி அவர்கள் மறுபக்கம் மலைச்சரிவில் இறங்கி இரண்டு மலைகளுக்கு நடுவே செறிந்திருந்த பச்சைக்காடு வழியாக புலியின் காலடித்தடங்களை தேடிச்சென்றார்கள்.

அவர்கள் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது வலிய பிறுத்தா நாயரின் மருமகனாகிய கண்டன் நாயர் காட்டுக்குள் தீயின் தழல் எழுவதை பார்த்தார். தீ ஒரு நாக்குபோல நெளிந்தது. “புலி!” என்று கூவியபடி வலிய பிறுத்தா நாயர் வாரிக்குந்தத்துடன் அதை நோக்கி ஓடினார். அப்போதுதான் அது புலியின் வால் என்று தெரிந்தது

புதர்களுக்குள் வலிய பிறுத்தா நாயர் ஓடிமறைய அவர்கள் பின்னால் சென்றனர். அங்கே வலிய பிறுத்தா நாயர் இல்லை, ஆனால் புலியின் கால்தடங்கள் மட்டும் இருந்தன. அவர்கள் அந்தக் கால்தடங்களை தொடர்ந்து சென்றார்கள். அது மேலும் மேலும் அடர்காட்டுக்குள் சென்றது.

“அது வலிய நாயரை தூக்கிச் செல்கிறது!” என்றான் வழிகாட்டியான கிண்டன் குறுப்பு

வலிய பிறுத்தா நாயர் மிகப்பெரிய உடல்கொண்டவர். அவரை அத்தனை எளிதாக ஒருமுறைகூட மண்ணில் உடல்தொடாமல் கொண்டுசெல்லமுடியுமா?

“ஆமாம், புலியின் ஆற்றல் அத்தகையது. முழு எருமையைத் தூக்கிக்கொண்டு அது மரத்தின்மேல் ஏறும். ஆற்றில் நீந்தி மறுகரைக்கும் செல்லும்” என்றார் கிண்டன் குறுப்பு.

மேலும் மேலும் காடு அடர்ந்து சென்றது. பின்னர் தடங்களும் தெரியாமலாயின. வலிய பிறுத்தா நாயரை பலமுறை கூவி அழைத்தும் மறுவிளி வரவில்லை. திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்தனர். அத்தனை பேரும் களைத்திருந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் வேர்ப்புடைப்புகளில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். சிலர் சருகுகளை கூட்டிப் போட்டு படுத்தனர்.

திடீரென்று இரண்டு மூன்று புலிகள் அவர்கள் மேல் பாய்ந்தன. மூன்றும் இளம்புலிகள். ஆளுக்கொருவரையாக அவை கவ்விக்கொண்டன. எஞ்சியவர்கள் அலறியபடி சிதறி ஓடினர். கண்டன் நாயர் அந்த வேகத்தில் காட்டுக்குள் ஓடி பள்ளம் ஒன்றில் பாய்ந்து சரிவில் உருண்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டார்.

அவர் உடலெங்கும் முள்ளும் புழுதியும் சருகுமாக எழுந்தார். மூச்சுவாங்கியபடி காட்டுக்குள் நடந்தார். திசைகள் மறைந்துவிட்டிருந்தன. காட்டின் மூர்க்கமான மரச்செறிவு சூழ்ந்திருந்தது. பசியும் தாகமும் தாங்காமல் அவர் அமர்ந்துவிட்டார். ஆனால் இருட்டிக்கொண்டு வந்தது. ஒரு வாய் நீரேனும் கிடைத்தால் இரவை ஏதாவது மரத்தின்மேல் கழித்துவிடலாம் என்று தோன்றியது.

காட்டுக்குள் ஒரு வெளிச்சத்தை அவர்கண்டார். அது ஒரு நீர்நிலை என்று தோன்றியது. ஆனால் அங்கே சென்று பார்த்தபோது அது ஒரு தட்டையான பெரிய பாறை என்று தெரிந்தது. அதன்மேல் வானம் திறந்து ஒளி இறங்கியிருந்தது. அந்த பாறைநடுவே ஆளுயரமான ஒரு சிறிய ஆலயம் இருந்தது.

அவர் அந்த ஆலயத்தை பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வேளிமலையைப் பற்றிய நிறைய கதைகள் அவருக்குத் தெரியும். முற்காலத்தில் வேளிமலைமேல் ஓர் அரசாங்கமே இருந்தது. மலைக்குறவர்களின் அரசு அது. அவர்களை ஆய்வேளிர் என்றார்கள். ஆய் அண்டிரன் ஆட்சிசெய்த ஆயூர் என்னும் ஊர் அங்கே இருந்தது. அங்கே அவர்கள் வழிபட்ட தெய்வம்தான் வேளிர்மலை முருகன்.

ஆய்வேளிர்களை பாண்டியர்கள் தோற்கடித்து அழித்தனர். அவர்களின் நகரம் காட்டுக்குள் மறைந்தது. பாண்டியர்கள் வேளிர்மலை முருகனை அங்கிருந்து கொண்டுவந்து கீழே ஒரு குன்றில் நிறுவினர். அதுதான் பிற்காலத்தில் குமாரகோயில் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் அங்கே திருவிழாவின் முதல் மண்டகப்படி ஆய்குலத்தைச் சேர்ந்த மலைக்குறவர்களுக்குத்தான். ஏரிக்கரையில் குறவர் சமுதாயத்திற்கு உரிய கல்மண்டபம் உள்ளது.

ஆய்வேளிர் வழிபட்ட தெய்வங்கள் பல வகை. கால்மடித்து கண்மூடி தியானத்தில் இருக்கும் தெய்வங்கள். மூன்றடுக்கு கிரீடம் சூடி, காதில் குழை அணிந்து, கையில் தாமரையுடன் யானைமேல் அமர்ந்திருக்கும் தெய்வங்கள். மும்முடி அணிந்து கையில் வஜ்ராயுதத்துடன் புலிமேல் அமர்ந்திருக்கும் தெய்வங்கள்.

அவ்வப்போது மலையிறங்கிவரும் ஆற்றுவெள்ளத்தில் அவை இழுத்துவரப்படும். அவற்றின் அறியப்படாத முகங்கள் அனைவரையும் அச்சுறுத்துவன. நம்பூதிரிகளை வரவழைத்து தாந்திரீக விதிகளின்படி அவற்றை சாந்தி செய்து கட்டி அவை கண்டடையப்பட்ட இடத்திலேயே ஆழமாக புதைத்துவிடுவதே வழக்கம்.

கண்டன் நாயர் அந்தக் கோயிலின் அருகே சென்று பார்த்தார். உள்ளே பீடத்தில் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் தெய்வச்சிலை. அருளலோ அபயமோ இல்லாமல் இரு கைகளும் மடியில் வைக்கப்பட்டிருந்தன. அடுக்குமடிப்புகளாக ஆடை ஒற்றைத் தோளில் இருந்து சரிந்து உடலை சுற்றியிருக்க மறுதோள் திறந்திருந்தது. சுருள்முடி மகுடம்போல் தெரிந்தது. வடித்து நீட்டபட்ட காதுகள் தோள்தொட்டு தொங்கின. அவர் முகத்திலும் உதடுகளிலும் தன்னுள் எதையோ எண்ணி கனிந்திருக்கும் புன்னகை தெரிந்தது.

அக்கோயிலைச் சுற்றி ஏராளமான சிலைகள் உடைந்து கிடந்தன. அவர் அந்த ஆலயத்தின் படிக்கட்டில் அமர்ந்தார். காட்டுக்குள் சென்று அங்கே மரங்களின்மேல் தங்குவதைவிட அந்த கோயிலின் மேலே ஏறி அங்கே தங்குவது பாதுகாப்பானது என்று தோன்றியது. அங்கே பாம்புகள் வர வாய்ப்பில்லை. விலங்குகளும் மேலே வரமுடியாது.

அவர் கோயிலின் மேல் ஏறினார். அங்கே வசதியாகப் படுக்க இடமிருந்தது. தாகத்திற்கு நீர் மட்டும் கிடைத்துவிட்டால் அந்த இரவை அங்கே நன்றாகவே செலவிடமுடியும். அருகே நீர் இருந்தாக வேண்டும். நீரில்லாத இடத்தில் கோயில் கட்டமாட்டார்கள். ஆனால் விரைவாக இருட்டிக்கொண்டிருந்தது. கீழிறங்கிச் செல்வது அபாயமானது.

களைப்பினால் அவர் தன்னையறியாமலேயே தூங்கிவிட்டார். நெடுநேரம் கழித்து கண்கள்மேல் வெயில் படுவதுபோல தோன்றி விழித்துக்கொண்டார். மிக அருகே நிலா தெரிந்தது. மேலே விழுந்துவிடுவதுபோல. எழுந்து பார்த்தபிறகும் கொஞ்சநேரம் எங்கிருக்கிறோம் என்ற உணர்வை அடையவில்லை. பின்னர் பெருமூச்சுடன் தன்னிலை அடைந்தார். அது வைகாசி மாதம் முழுநிலவு நாள்.

கீழே ஓர் அசைவு தெரிந்தது. அவர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அங்கே தீபற்றி எரிவதுபோலிருந்தது. பின்னர்தான் அது ஒரு பெரிய புலி என்று தெரிந்தது. புலியின்மேல் ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த வெண்ணிறமான ஆடை காற்றில் அலைகொண்டது. அவள் கூந்தல் நெடுந்தொலைவுக்கு எழுந்து பறந்தது. இருட்டுக்குள் அந்த கூந்தல் அலையடித்து மறைந்தது.

கண்டன் நாயர் ஒரு முடிவெடுத்தார். கீழே இறங்கிச் சென்று கைகூப்பியபடி அந்த பெண்முன் நின்றார். புலியின் சிப்பிக்கண்கள் அவரை பார்த்தன. அவள் கண்கள் சிறுமியருக்குரிய அழகிய இளஞ்சிரிப்பு கொண்டிருந்தன.

”தேவி, நான் எளிய மனிதன். இந்தக் காட்டில் வழி தவறி வந்தவன். உன்னைச் சந்திக்கும் பேறு பெற்றேன். நீ என்னை ஆதரிப்பதென்றால் ஆதரிக்கலாம், அழிப்பதென்றாலும் அவ்வாறே செய்யலாம். என்னை உன்முன் வைக்கிறேன்” என்று சொல்லி அவர் அவள்முன் நெற்றிமுதல் கால்வரை மண்படிய விழுந்து வணங்கினார்.

அவள் புலியில் இருந்து இறங்கிவந்து அவரை தொட்டு எழுப்பினாள். “உன்னை நான் வாழ்த்துகிறேன். உன் குடியை நான் வளர்ப்பேன். உனக்கு துணையாக எப்போதும் இருப்பேன்” என்றாள். அவர் அவள் காலடியை வணங்கினார். அது வரை இருந்த பசி தாகம் எல்லாம் நீங்கியது.

அவள் மறைந்த பின்னர் அவர் நிலவை பார்த்தபடி அங்கேயே இருந்தார். அச்சமோ தனிமையுணர்வோ ஏற்படவில்லை. காலையில் அவர் எழுந்து கொண்டபோது மனம் தெளிவடைந்திருந்தது.

“தேவி, நான் இக்காட்டிலிருந்து செல்லவேண்டும், என்னை வழிநடத்துக” என்று அவர் கேட்டார்.

அப்போது ஒருகுரல் “உன் காலடியில் வலப்பக்கம் கிடக்கும் சிலை என்னுடையது, அதை எடுத்துக்கொள்” என்றது.

அவர் திரும்பிப் பார்த்தபோது அங்கே பாதியாக உடைந்த ஒரு பெண்தெய்வத்தின் சிலையைக் கண்டார். குனிந்து அதை கையிலெடுத்துக் கொண்டார்.

அச்சிலை அவரிடம் பேசியது “வலப்பக்கமாகச் செல். அங்கே இரு பாறைகளுக்கு நடுவே இருக்கும் வழியில் கீழே இறங்கு”

அவர் அவ்வண்ணமே வழிகண்டுபிடித்து சென்றார். “அந்தப்பாறை நடுவே ஓர் ஊற்று உண்டு, வாய்வைத்து உறிஞ்சு, முலைப்பால்போல் நீர் ஊறிவரும்” என்றாள்.

அன்று மாலையில் கண்டன் நாயர் கணியாகுளத்தின் வீரசோழன் மாதேவனின் ஏரிக்கரையை வந்தடைந்தார். களைத்து சோர்ந்து தள்ளாடினாலும் அந்த சிலையை சுமந்து கொண்டிருந்தார்.

“தேவி, நீ என்னுடன் இருக்கவேண்டும்” என்று அவர் சொன்னார் “நீ யார்? என்னிடம் சொல்.”

“என் பெயர் கேசினி. நான் காலமும் இடமும் அற்ற வெளியில் வாழும் யக்ஷி” என்று அவள் சொன்னாள் “அந்த ஆலயத்தை ஹரிணி, அலிகை, பிரபாவதி, ஹரிதை,சுமதி,சுவீரை, ரூபவதி, அசிதை, நான் என ஒன்பது யக்ஷிகள் காவல்காக்கிறோம். நான் உன்னுடன் வந்தாலும் இங்கும் இருப்பேன். என் அம்சத்தில் ஒன்று உன்னுடன் இருக்கும்”

அவர் “என் பேறு” என்று வணங்கினார் “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?”

“என்னை உன் இல்லத்திற்குள் தென்மேற்கு மூலையில் ஓர் அறையில் இந்தச் சிலைவடிவாகவே குடியிருத்து. எனக்கு ஒவ்வொருநாளும் விளக்கு வைக்கப்படவேண்டும். எல்லா பௌர்ணமிகளிலும் நீரும் அன்னமும் மலரும் படைக்கப்படவேண்டும். “என்று தேவி சொன்னாள் “ஆனால் ஒன்று, நவராத்திரிகளின் ஒன்பது நாளும் என்னை குடியிருத்திய அறையை எவரும் திறக்கலாகாது. என்னை எவரும் பார்க்கலாகாது.”

“அவ்வாறே செய்கிறேன் தேவி” என்றார் கண்டன் நாயர்.

கண்டன் நாயர் அச்சிலையை வண்டியில் ஏற்றி திருநயினார்க்குறிச்சிக்குக் கொண்டுவந்தார். அங்கே குடும்பவீட்டின் தெற்குபுரையில் நிறுவினார். அவள் சொன்னபடியே தீபமும் பூஜைகளும் நடந்தன.

“இப்போது அச்சிலை அங்கே இருக்கிறதா?”என்று நான் கேட்டேன்.

ஆனந்தவல்லி டீச்சர் “ஆமாம் இருக்கிறது. நீ வேண்டுமென்றால் போய்ப்பார்க்கலாம். அந்த வீடு இப்போது பூட்டித்தான் கிடக்கிறது. தெற்குபுரை முன்னால் மட்டும் ஒவ்வொருநாளும் விளக்கு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். பௌர்ணமிதோறும் பூஜையும் உண்டு. அவ்வப்போது நான் போய்வருவேன்” என்றார்.

“நான் போவதில்லை… நான் போய் நீண்ட நாட்களாகின்றன” என்றார் அம்மிணி தங்கச்சி.

“அந்தச்சிலை எப்படிப்பட்டது?” என்றேன்.

“இரு” என்று சொல்லி அவர் ஒரு புகைப்படத்தை எடுத்துவந்து காட்டினார்.

நான் அந்த புகைப்படத்தை பார்த்தேன். நெடுக்குவாட்டில் உடைந்த ஒரு கல்சிற்பம். அதன் தலைக்குமேல் அடுக்கடுக்காக ஏதோ பூமரக்கிளை. அதன்நீள்கூந்தல் உடைந்திருந்தது.

“இது ஒரு சிறுமி” என்று ஆனந்தவல்லி சொன்னார். “இடதுகையால் அறிவுறுத்தல் முத்திரையை காட்டுகிறாள். வலதுகையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. உடைந்திருக்கிறது”

நான் “இது ஒரு புத்தமதத்துச் சிலை” என்றேன்.

“புத்தமதத்தில் யக்ஷிகள் உண்டா?”

“நூற்றுக்குமேல் யக்ஷிகள் உண்டு. கதையில் நீங்கள் சொன்ன எல்லா யக்ஷிகளும் புத்தமதத்தின் யக்ஷிகள்தான். கேசினி உட்பட.”

அவர் சற்றுநேரம் கழித்து “இருக்கலாம். ஆனால் உமையம்மை ராணியின் காலம் முதல் எங்கள் இல்லத்தில் இந்த யக்ஷி வழிபடப்படுகிறாள்” என்றார்.

அந்தக்கோயிலின் உள்ளே தரை மண்ணாலானதாக இருந்தது. “இது என்ன கோயிலுக்கு தரைபோடப்படவில்லையா?” என்றேன்.

“ஆமாம், அந்த யக்ஷியை மண்ணில்தான் நிறுத்தமுடியும். ஆகவே அறைக்குள் மணல்விரித்து அதன்மேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள்” என்றாள் ஆனந்தவல்லி அம்மா.

“அம்மா களைத்திருக்கிறார்களா?” என்றேன்.

“அம்மா, களைப்பாக இருக்கிறதா? டீ வேண்டுமா?”

“வேண்டாம்” என்று அம்மிணி தங்கச்சி சொன்னார். “நான் இவளிடம் பேசவேண்டும்.”

“அம்மா தனிப்பட்ட முறையில் பேசவிரும்புகிறார்” என்று ஆனந்தவல்லி டீச்சர் சொன்னார். “பேசிக்கொண்டிரு.”

அவர் செல்வதைப் பார்த்தபின் அம்மிணி தங்கச்சி “நான் அந்த கோயிலின் வாசலை திறந்தேன்” என்றார்.

“எப்போது?”

அப்போது எனக்கு எட்டு வயது… எங்கள் குடும்பத்தில் ஐந்து வயதில் ஆண்களுக்கு அக்ஷராப்யாசம் என்னும் சடங்கு நடக்கும். சரஸ்வதிபூஜை அன்று கணியார் வந்து கோலமிட்ட தரையில் வாழையிலை விரித்து அதில் பூ, பழம், பொன், பட்டு, விளக்கு என்னும் ஐந்துமங்கலப் பொருட்களை பரப்பி வைப்பார். வெல்லத்தில் பிள்ளையார் வைத்து அருகம்பூ படைப்பார். சரஸ்வதியாக ஏட்டுச்சுவடியும் அக்ஷமணி மாலையும் வைக்கப்படும். அதற்கு தீபாராதனையும் தூபாராதனையும் காட்டப்படும்.

அதன்பின்னர் பெரிய தாலத்தில் அரிசி பரப்பி வைப்பார்கள். கணியார் எழுத்தறிவிக்கவேண்டிய சிறுவர்களை அருகே அமரவைத்து சுட்டுவிரலைப் பிடித்து அரிசியில் மலையாள எழுத்தான ஸ்ரீயை எழுதவைப்பார். அதை அழித்து சம்ஸ்கிருத ஓம். அதை அழித்து தமிழ் அ. அதன்பின் எழுத்தாணியால் நாவில் தேன் தொட்டு வைப்பார். சரஸ்வதி அருள் வந்துவிடும்.

அன்றே ஏடுதொடங்கல். அனைத்துப் பிள்ளைகளையும் வரிசையாக அமரச்செய்து மணலில் ஸ்ரீ என எழுதச்செய்வார். ஏட்டில் ஒரு புள்ளி போடவைப்பார். அனைவரும் சேர்ந்து சரஸ்வதி வந்தனம் பாடலை பாடவைப்பார். அன்றுமுதல் அவர்களுக்கு கல்வி தொடங்கும். எங்கள் குடும்பத்திற்கு வழக்கமாக ராமக் கணியார்தான் எழுத்தறிவித்தலுக்கு வருபவர்.

பொதுவாக நாயர் குடும்பங்களில் பெண்களுக்கும் எழுத்தறிவித்தல் உண்டு. பெரிய பண்டிதைகள் எல்லாம் பல குடும்பங்களில் இருந்திருக்கிறார்கள். பெண்களுக்கு கணியாத்தி எழுத்தறிவிப்பார். அதன்பின் கணியாத்திகளும் மூத்தம்மைகளும் அம்மச்சிகளும் கல்வி கற்பிப்பார்கள்.

எங்கள் குடும்பத்தில் ஏழு தலைமுறைகளுக்கு முன்பு அன்றிருந்த காரணவரான பூதத்தான் நாயர் பெண்குழந்தைகளுக்கு கல்வி தேவையில்லை என்று முடிவெடுத்தார். அதற்கு காரணம் இருந்தது. 1700 களில் திருவிதாங்கூர் முழுக்க அரசியல் நிலையின்மை நிலவியது. அன்று வாணியர், வடுகர் போன்ற பல சாதிகளில் இருந்தும் நிலப்பிரபுக்கள் உருவாகி வந்தனர். அவர்கள் தொன்மையான நாயர் குடும்பங்களில் இருந்து பெண்களை தூக்கிக்கொண்டு சென்று மணம்புரிந்தனர். அதன் வழியாக அவர்களின் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதி சார்ந்த ஏற்பும் உரிமையும் உருவாகியது. ஆகவே பெண்கவர்தலும் அதற்கான போரும் ஒவ்வொரு நாளும் நடந்தது.

அன்று எழுத்தறிவிக்கப்படாத பெண் மூதேவி என்று கருதப்பட்டாள். அவளை அப்படி தூக்கிக்கொண்டு சென்றால் வீட்டுக்கு மூதேவி வந்துவிடுவாள் என்று நம்பினார்கள். தன் குடும்பத்துப் பெண்களை காப்பாற்றிக் கொள்ள பூதத்தான் நாயர் கண்டுபிடித்த வழிமுறை எழுத்தறிவிக்காமலிருப்பது. ஆனால் மார்த்தாண்டவர்மா ஆட்சியமைத்து திருவிதாங்கூர் வலுவான அரசாக ஆனபின்னரும் அந்த வழக்கம் தொடர்ந்தது.

ஏழு தலைமுறைகளாக எங்கள் இல்லத்தில் அத்தனை பெண்களும் எழுத்தறியாதவர்கள்தான். என் அம்மாக்கள், பாட்டிகள் எவருக்குமே ஏடு வாசிக்க தெரியாது. எண்ணிக்கூட்டுவதை மட்டும் கற்று வைத்திருந்தார்கள். அதற்குமேல் ஏதாவது வாசித்தறியவேண்டும் என்றால் கணியாத்தியை வரச்சொல்வார்கள்.

அன்றைக்கு ராமக்கணியார் வந்து என் இளையவர்களாகிய கொச்சுராமன், கிருஷ்ணன், ஸ்ரீதரன், நாராயணன், ஷண்முகன் ஆகியோருக்கு எழுத்தறிவித்துக் கொண்டிருந்தார். என் தாய்மாமா நாகத்தான் நாயரும் அவர் தம்பியான சாஸ்தா நாயரும் அருகே அமர்ந்திருந்தனர். குடும்பத்தின் காரியக்காரர்களும் வேறு சில ஊர்க்காரர்களும் அப்பால் அமர்ந்திருந்தனர்.

எங்கள் வீட்டில் ஆண்களுக்குரிய அரங்குவீட்டுக்கு அகத்தளத்தில் இருந்து பெண்கள் வரக்கூடாது. இரண்டும் தனிவீடுகள் போல. நடுவே தொப்புள்கொடி போல கூரையிடப்பட்ட ஒரு வராந்தா இணைப்பு உண்டு. என் அம்மாக்கள் பாட்டிகள் யாருமே அந்த வராந்தாவை தாண்டியதில்லை.

நான் அன்று எழுத்தறிவிப்பு நடக்கப்போவதை கணியாத்தி சொல்லி அறிந்தேன். அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். யாருக்கும் தெரியாமல் பதுங்கி வந்து பெரிய கூடத்தை ஒட்டிய வைப்பறைக்குள் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் காட்சி என்னை ஒருவகையான பரவசத்தில் ஆழ்த்தியது. ஐந்து மங்கலங்கள். ஏடு, எழுத்தாணி, அக்ஷமாலை. அரிசியில் என் தம்பி ஸ்ரீ எழுதியபோது நான் நெஞ்சில் கையை வைத்து கண்ணீர் விட்டேன்.

அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் கண்ணீருடன் கைகூப்பியபடி வெளியே சென்று “கணியாரே, எனக்கும் எழுத்தறிவியுங்கள் கணியாரே!” என்று கூவினேன். மண்டியிட்டு தரையில் வணங்கி “எனக்கும் எழுத்து அளியுங்கள்! எனக்கும் கற்பியுங்கள்!” என்றேன்.

என் தாய்மாமா நாகத்தான் நாயர் கொதித்து எழுந்தார். “எடீ! குடும்பம்கெட்டவளே!” என்று கூவியபடி கையிலிருந்த பெரிய செம்பை எடுத்து என்னை நோக்கி எறிந்தார். அருகே இருந்த பெரிய தடியை எடுத்துக்கொண்டு என்னை அடிக்கப் பாய்ந்தார். “டேய், அவளை பிடித்து கையை காலை கட்டி இழுத்துக் கொண்டுவாருங்கள்!” என்று கூச்சலிட்டார்.

அவருடைய இளையவர்களும் வேலைக்காரர்களும் என்னைப் பிடிக்க துரத்திவந்தார்கள். நான் பயந்து அலறியபடி தப்பி ஓடினேன். நாகத்தான் மாமா வேலைக்காரிகளிடம் “விடாதீர்கள், அவள் எங்கிருந்தாலும் பிடித்துக்கொண்டு வாருங்கள்… திமிறினால் அடித்து மண்டையை உடைத்துக் கூட்டிக்கொண்டுவாருங்கள்” என்றார்.

அவர்கள் என்னை எல்லா திசையிலும் சூழ்ந்து துரத்திவந்தார்கள். நான் மாடிப்படி ஏறி ஓடினேன். என்னை அங்கும் துரத்தி வந்தனர். நான் வைப்பறைக்குள் சென்று ஒளிந்துகொண்டேன். வெளியே என்னை அத்தனைபேரும் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஓசைகள் வந்தன. என் தாய்மாமா வெறிகொண்டு கூச்சலிட்டு வேலைக்காரர்களை சாட்டையால் அடித்து ஆணைகளிடுவதை கேட்டேன்.

என் தாய்மாமா நாகத்தான் நாயர் மிக அறிவு குறைந்தவர். அவருக்கு எந்த மொழியிலும் தடையின்றி வாசிக்கவோ எழுதவோ தெரியாது. கணக்குகள் கொஞ்சம் கூட புரியாது. ஆகவே தன்னை அத்தனை பேரும் ஏமாற்ற முயல்வதாக அவர் எண்ணிக் கொண்டார். தாழ்வுணர்ச்சியால் உருவான சந்தேகமும் பயமும் எப்போதும் அவரை ஆட்டுவித்தன.

ஆகவே அவர் மூர்க்கமானவராக ஆனார். தன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சையே அவர் விரும்புவதில்லை. எதிர்ப்பேச்சு பேசுபவன் தன்னை அவமானப்படுத்துபவன், தன்னை ஏமாற்ற நினைப்பவன், தன்னை அழிக்க சதிசெய்பவன் என்று அவர் நினைத்தார். அவனை முழுமையாக அழித்தபிறகே நிறைவடைந்தார். தன் தம்பிகள் ,மருமகன்கள் ,வேலைக்காரர்கள் அனைவரிடமும் மிகக்கொடூரமாக நடந்துகொண்டார்.

தன்னை நினைத்தாலே ஒவ்வொருவரும் பயப்படவேண்டும் என்று நினைத்தார். எங்கள் வீட்டு முகப்பில் கொட்டியம்பலத்தை ஒட்டிய மரத்தூணில் ஒவ்வொருநாளும் எவரையாவது கட்டிவைத்து அடித்தார். அடிப்பதற்கென்று அவர் மாட்டுத்தோல் சவுக்கு வைத்திருந்தார். அதைக்கொண்டு புலையர்களையும் பிடித்துவரப்பட்ட பாண்டிநாட்டு அன்னியர்களையும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க அவர் அடிப்பார்.

அவர் திரச்சிமீனின் வாலால் ஆன சாட்டை ஒன்றை வைத்திருந்தார். அந்த வால் எலும்பாலானது. பாம்பின் எலும்புபோன்ற வடிவம். அதன் செதில்முட்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். அதைக்கொண்டு அடித்து இழுத்தால் தசை பிய்ந்து துண்டுதுண்டுகளாக ரத்தத்துடன் தெறிக்கும். கேட்க எவருமில்லாதவர்கள் அகப்பட்டால் அவர் திரச்சி வாலுடன் வந்துவிடுவார்.

எங்கள் வீட்டு முகப்பிலேயே அவர் மூன்றுபேரை அடித்துக் கொன்றிருக்கிறார். அது மன்னராட்சிக் காலம். மகாராஜா இருப்பது தொலைவில் திருவனந்தபுரத்தில் உள்ளூரில் மாடம்பி நாயர்தான் மகாராஜாவின் கண்கண்ட வடிவம். கேட்க எந்த நீதியும் இல்லை.

எனக்கு நான்கு வயதாக இருந்தபோது எங்கள் வீட்டிற்கு மாடுகறக்க வரும் சின்னன் என்பவனை இழுத்துவந்து கட்டிவைத்தார்கள். அவன் இளமையானவன், பட்டுமீசையும் சிவந்த உதடுகளும் கொண்டவன். அவன் கெஞ்சவில்லை, அழவில்லை. “எல்லாம் என் தப்புதான்… நான் மட்டும் செய்த தப்புதான்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவரை நாகத்தான் நாயர் திரச்சி வாலால் அடித்தார். அவன் உடல் தசைகள் கிழிந்து தரையெங்கும் கிடந்தன. கடைசியில் அவன் செத்து தூணில் தொங்கி கிடந்தான்.

மூன்றாம் நாள் காலையில் என் பெரிய அக்கா பத்ரை வீட்டுக்கு பின்பக்கத்தில் இருந்த குளத்தில் செத்து மிதந்தாள். அவளை அப்படியே கொண்டுசென்று எரித்துவிட்டனர். அந்தக்குளத்தில் எவரும் குளிப்பதில்லை. அருகிலிருந்த சிறிய குளத்தில்தான் குளிப்பார்கள். அந்த குளத்தில் எங்கள் குடும்பத்திலுள்ள பலபெண்கள் அப்படி மிதந்திருக்கிறார்கள். “வலியகுளத்துக்கு போகணுமா உனக்கு?” என்பது பெரிய மாமா கோபம் வந்தால் கேட்கும் கேள்வி. அப்போது என் சித்திகள் பாட்டிகள் முகங்கள் மெழுகாலானவை போல உறைந்திருக்கும்.

கதவின் விரிசல் வழியாகப் பார்த்தேன். பெரிய மாமாவின் கையில் திரச்சிவால் இருப்பதைக் கண்டேன். தரையோடு தரையாக தவழ்ந்து ஒரு சிறு அறைக்குள் சென்றேன். அங்கே ஒரு தரைப்பலகை சற்றே எழுந்து நின்றதைக் கண்டேன். அதை இழுத்து மேலே தூக்கினேன். தரையில் ஒரு சிறு ஓட்டை உருவானது அதன்வழியாக உள்ளே நுழைந்து மேலே பலகையை இழுத்து மூடிவிட்டேன்.

கீழே ஆழத்தில் ஓர் அறை. அது உள்ளே தாழிடப்பட்டிருந்தது. அதன் கதவின் தாழில் கால்வைத்து தொற்றி கீழே குதித்தேன். அப்போதுதான் அந்த அறைக்குள் ஒரு சிறுமி இருப்பதைப் பார்த்தேன். என்னுடைய அதே வயது. ஆனால் மிகமிக அழகானவள். நீண்ட பெரிய கண்கள். கூர்மையான மூக்கு. அவள் தலைமயிர் அலையலையாக சரிந்து அறையின் தரையில் பரவியிருந்தது.

அவள் தரையில் குனிந்து அமர்ந்து தரையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். சுட்டுவிரலால் மணலில் எழுதுவதுபோல எழுதினாள். எழுத்துக்கள் நத்தையின் கோடுகள் மழையீரத்தில் மின்னுவதுபோல தெளிந்து மறைந்தன.

அவள் ஓசைகேட்டு திரும்பி என்னை பார்த்தாள். கோபத்துடன் எழுந்து “யார் நீ? எப்படி உள்ளே வந்தாய்?” என்றாள்.

“நான் தப்பி ஓடிவந்தேன். என்னை பிடித்தால் கொன்றுவிடுவார்கள்” என்றேன்.

“நான் எழுதியதை நீ படித்தாயா?”என்று அவள் கேட்டாள்.

“இல்லை, எனக்கு படிக்கத்தெரியாது” என்றேன்.

“ஏன்?” என்றாள்.

“எனக்கு எவரும் படிக்கச் சொல்லித்தரவில்லை.”

“நீ கேட்கவேண்டியதுதானே?”

“கேட்டேன், அதற்காகத்தான் என்னை கொல்ல வருகிறார்கள்.”

அவள் கண்கள் கனிந்தன. புன்னகையுடன் என் அருகே வந்து என் தோளில் தொட்டாள். “நீ படிப்பதற்கு நான் உதவி செய்கிறேன்” என்றாள்.

“நீ யார்?” என்று நான் கேட்டேன். “எங்கள் வீட்டில் என்ன செய்கிறாய்?”

“என் பெயர் கேசினி… நான் காலமும் இடமும் இல்லா வெளியில் வாழும் யக்ஷி” என்று அவள் சொன்னாள்.

எனக்கு அந்த வயதில் அவளை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அவளை ஒரு அழகான தோழியாகத்தான் கண்டேன். “எனக்கு இங்கே யாருமே இல்லை. என்னுடனேயே இரு” என்றேன்.

மிக அழகான பற்களைக் காட்டி புன்னகைத்து “இருக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

“என்னை விட்டு பிரியவே கூடாது, என்னுடனேயே இருக்கவேண்டும்” என்று நான் மீண்டும் கேட்டேன்.

“பிரியமாட்டேன்” என்றாள்.

கைநீட்டி “சத்தியம்செய்துகொடு” என்றேன்.

“சத்தியம்” என்று என் கையை தொட்டாள். “ஆனால் நான் உன்னுடன் இருப்பதை பிறர் பார்க்கமுடியாது. பிறருடன் இருக்கையில் நீ என்னை பார்க்கவோ பேசவோ கூடாது. நான் விரும்பாமல் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது”

நான் “சொல்லமாட்டேன்” என்றேன்.

“சத்தியம் செய்” என்றாள். நான் அவள் கையில் தொட்டு சத்தியம் செய்தேன்.

“சரி நாம் வெளியே போவோம்” என்றாள்.

நான் கதவைப்பிடித்து இழுத்துப்பார்த்தேன். வெளியே பூட்டு போட்டிருந்தது. நவராத்திரி ஒன்பதுநாளும் அக்கதவை திறக்கக் கூடாது. எவராவது தவறாகத் திறந்துவிடுவார்கள் என்ற பயத்தில் வெளியே பூட்டு போட்டிருந்தார்கள். உள்ளிருந்து கதவை இழுத்து இழுத்து பார்த்தேன். “வெளியே பூட்டியிருக்கிறது” என்று கேசினியிடம் சொன்னேன்.

வெளியே என்னை தேடிக்கொண்டிருந்த வேலைக்காரர்களில் ஒருவன் உள்ளிருந்து கதவு அதிர்வதைக் கண்டு கூச்சலிட்டான். அப்பால் நின்றிருந்த மாமன் நாகத்தான் நாயரும் இளையவர்களான சாஸ்தா, சிவசங்கரன், பாஸ்கரன் ஆகியோரும் ஓடிவந்தார்கள்.

அவர்கள் வெளியே திகைத்து நின்றிருக்கையில் உள்ளே நான் கேசினியிடம் “இதை திறக்கமுடியாது. கனமான கதவு, வெளியே பூட்டியிருக்கிறது” என்றேன்.

அவள் புன்னகைத்தாள். அருகே வந்து ஓங்கி அந்தக் கதவை மிதித்தாள். அது விறகுபிளக்கும் ஓசையுடன் வெடித்து திறந்து அப்பால் விழுந்தது. நான் வெளியே சென்றேன். எனக்குப்பின்னால் அவளும் வந்தாள்.

என்னைக் கண்டதும் பெரியமாமா “எடீ, குடும்பத்துரோகி!” என்று கூவியபடி கையில் இருந்த திரச்சி வாலால் என்னை அடித்தார். நான் நடுங்கி கைகால்கள் ஓய்ந்து சொல்லிழந்து அப்படியே நின்றேன். திரச்சிவால் சாட்டையின் சொடுக்கொலி கேட்டது, ஆனால் அடி என்மேல் விழவில்லை.

எனக்குப் பின்னால் நின்றிருந்த கேசினி ஓர் உறுமலுடன் முன்னால் வந்தாள். மூத்த புலியின் உறுமல். “டேய் நாகத்தானே, என் தோழியை நோக்கி சாட்டையை எடுத்த நீ நாளை புலரியைக் காணமாட்டாய்!” என்று கூவினாள்.

அவர் திகைத்து பின்னர் மேலும் வெறிகொண்டு அடிக்க வந்தார். அவள் எட்டி அவர் வயிற்றில் உதைத்தாள். அவர் மல்லாந்து விழுந்தார்.

அவள் திரும்பி என் இளைய மாமனிடம் “டேய் சாஸ்தா, நாளை முதல் இந்த வீட்டுக்கு நீ காரணவன், உன் பரதேவதையாகிய நான் ஆணையிடுகிறேன். இனி இவள் சொன்னது எதுவும் நடந்தாகவேண்டும். மறுப்பவன் மறுநாள் புலரியைக் காணமாட்டான்! ஆணை! ஆணை! ஆணை!” என்றாள்.

சிறியமாமா சாஸ்தா நாயர் நடுநடுங்கிவிட்டார். கைகூப்பியபடி நின்று “ஆணையை ஏற்கிறேன் பரதேவதே!” என்றார்.

பெரியமாமா நாகத்தான் நாயர் மயங்கிவிட்டார். அவரை தூக்கிக்கொண்டு சென்று முன்கூடத்தில் படுக்கவைத்தனர். நான் நேராகச் சென்று முகப்பில் சரஸ்வதி பூஜை வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தேன். “கணியாரே, வந்து எனக்கு எழுத்தறிவியுங்கள்!” என்று சொன்னேன்.

அவர் கைகளை கூப்பி நடுங்கிக்கொண்டிருந்தார்.

“வாருங்கள்” என்றேன்.

அவர் அருகே வந்து என்னருகே அமர்ந்து என் கை பற்றி அரிசியில் எழுதவைத்தார். மூன்று மொழியின் மூன்று எழுத்துக்களை எழுதினேன். மலையாளத்தில் செல்வம், சம்ஸ்கிருதத்தில் முழுமை, தமிழில் முதன்மை. முதற்சொல்லின் இனிமை என் நாக்கில் படிந்தது.

எழுந்து என் கழுத்திலிருந்த தங்க அட்டிகையை எடுத்து கணியாருக்கு அளித்து “இது என் காணிக்கை. இனி ஒவ்வொருநாளும் இங்கே வந்து எனக்கு கற்பிக்கவேண்டும்” என்றேன்.

“உத்தரவு” என்று அவர் தலைவணங்கி அந்த பரிசை பெற்று கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

மூத்த மாமா நினைவு வந்ததும் எழுந்து வந்து பூமுகத்தில் நின்று கூச்சலிட்டார். “அவளுக்கு வலிய குளம் காத்திருக்கிறது.. சாவித்ரியே, உன் மகளுக்கு குளம்தானெடீ”

“அண்ணா பரதேவதையின் உத்தரவு…” என்றார் இளைய மாமா சாஸ்தா.

“இங்கே பரதேவதை நான்தான்… நான் சொல்வதுதான் இங்கே சட்டம்… போடா நாயே” என்று அவர் செவிட்டில் அறைந்தார் மூத்த மாமா.

நான் பின்னறைக்குச் சென்று ஒடுங்கிக்கொண்டேன். அம்மா என்னிடம் வந்து “நீ இப்படியே ஓடிப்போய்விடு… இப்படியே போனால் உன்னை யாராவது பிடித்து கொண்டுசெல்வார்கள். யாருக்காவது விற்பார்கள். அடிமையானாலும் உயிரோடிருக்கலாம். போடீ” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

அம்மா “கிளம்புடீ… வலிய குளத்தில் நீ மிதப்பதைக் காண என்னால் முடியாது” என்று அழுதாள்.

நான் “எனக்கு பசிக்கிறது” என்றேன்.

அம்மா திகைத்துவிட்டாள். ஒன்றும் பேசாமல் சென்று கஞ்சி கொண்டுவந்து தந்தாள். நான் முழுக்கோப்பை கஞ்சியையும் குடித்துவிட்டு “இன்னும்” என்றேன்.

மூன்று முறை வாங்கி குடித்தபின் அங்கேயே படுத்து தூங்கினேன்.

காலையில் எழுந்தால் வீடே பரபரப்பாக இருந்தது. பெண்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் ஓடினார்கள். வேலைக்காரி பாறுக்குட்டியை நிறுத்தி “என்னடி?” என்று கேட்டேன்.

“கொச்சு தம்பிராட்டி, பெரிய எஜமானன் கட்டிலில் செத்துகிடக்கிறார்!” என்று அவள் சொன்னாள்.

நான் எழுந்து சென்று சன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். முற்றத்தில் கூட்டமாக கூடிநின்று பதற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றாக தெரியத் தொடங்கியது. இளைய மாமாக்கள் சாஸ்தாவும் சிவசங்கரனும் பாஸ்கரனும் நடுவே நின்றிருந்தனர்.

காலையில் மூத்தமாமாவை அழைக்கச் சென்ற வேலைக்காரன் அவர் தன் படுக்கையில் இறந்து கிடப்பதைப் பார்த்தான். அவர் முகம் கடும் அச்சத்தில் அப்படியே உறைந்ததுபோல் இருந்தது. அவர் காதுகளில் இருந்தும் மூக்கில் இருந்தும் வாயிலிருந்தும் ஆண்குறியிலிருந்தும் ரத்தம் வெளிவந்திருந்தது. எடைமிக்க யாரோ அவரை அப்படியே நசுக்கி கொன்றிருக்கிறார்கள்.

யக்ஷிதான் அவரைக் கொன்றுவிட்டாள் என்று அவர்கள் அனைவருக்குமே தெரிந்திருந்தது. ஆனால் யக்ஷி என்ற சொல்லையே அவர்கள் உச்சரிக்கவில்லை.

நான் என்னருகே கேசினி நிற்பதைக் கண்டேன். அவள் புன்னகைத்து “இளையவர் இனி நீ சொல்லும் எதையும் மறுக்கமாட்டார்” என்றாள். நானும் புன்னகைத்தேன்.

வீடே பலநாட்கள் பரபரத்து கிடந்தது. ஒவ்வொருவரும் அந்தச் சாவைப் பற்றியே பேசிக்கொண்டார்கள். இளையமாமா சாஸ்தா நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

என் அருகே எவருமே வரவில்லை. அம்மாகூட என்னிடம் கண்களைப் பார்த்துப் பேசவில்லை. நானும் எவரையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

கணியார் வந்து எனக்கு எழுத்துச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். நான் எழுத்துப் படிக்க அமரும்போது கேசினியும் வந்து அருகே அமர்ந்து கொள்வாள். அவர் சொல்லச்சொல்ல நாங்கள் இருவரும் சேர்ந்து கேட்போம். அவர் எழுதச் சொல்லிக் கொடுத்ததை சேர்ந்தே எழுதுவோம். அவர் போனபிறகு நானும் அவளும் தனியாக அமர்ந்து எழுதிப் பழகுவோம்.

நான் கற்றுக் கொண்ட வேகம் கணியாரை திகில் அடைய வைத்தது. இரண்டே வாரங்களில் நான் மலையாளமும் தமிழும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். இருபத்திரண்டாம் நாள் மலையாளத்தில் உண்ணுநீலி சந்தேசம் என்னும் குறுங்காவியத்தை முழுமையாக வாசித்தேன். ஒருமாதத்திற்குள் கண்ணச்ச ராமாயணம் பாஷாபாரத சம்பு ஆகியவற்றை படித்து முடித்தேன்

கணியார் இளைய மாமனிடம் “உடையதே, இது சாதாரண புத்தி இல்லை… ஏதோ தெய்வ அவதாரம். இல்லை என்றால் ஏதோ வாதை கூடியிருக்கிறது… மனிதர்களால் சாத்தியமே இல்லை” என்றார்.

அவர்கள் ஏற்கனவே என்னை நினைத்து பயந்து போயிருந்தார்கள். “கூடியிருக்கும் வாதை எதுவென்றுதான் தெரிகிறதே. மகாதேவா, குடும்பத்தில் வேறு எவருக்கும் எந்த தீங்கும் நடக்காமலிருந்தால் போதும் ” என்றார் இளைய மாமா சாஸ்தா நாயர்.

நான் அவர்கள் எவரையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. எவரிடமும் தேவையில்லாமல் பேசுவதில்லை. பெரும்பாலும் தனியாகவே இருந்தேன். இரவில் கேசினியும் நானும் சேர்ந்து படுத்துக்கொண்டோம். அவள் என்னிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே இருந்தாள். அவளால் என்னை சிரிக்க வைக்க முடியும். நான் உதட்டை அழுத்தி சிரிப்பை அடக்கியபடியேதான் அவளிடம் பேசுவேன்.

ஒருநாள் பெரிய பாட்டி என்னை வரச்சொன்னார். நான் அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் திடுக்கிட்டு “மகாதேவா சம்போ மகாதேவா” என்றார்.

அருகே நின்ற தேவகிச் சிற்றம்மை “என்ன சித்தீ?” என்றார்.

“இந்தக் குட்டி உள்ளே வந்தபோது இரண்டு பேர் உள்ளே வருவதுபோலத் தோன்றியது” என்றாள் பாட்டி. “என் மனம் பதறிவிட்டதடி… என்னென்ன நடக்கிறதோ இந்த உலகத்தில்”

ஆனால் அவர்களை விட தேவகிச் சிற்றம்மை பதறிவிட்டாள். “நான் வருகிறேன்… நாணி கூப்பிடுகிறாள்” என்று வெளியே சென்றுவிட்டாள்.

பெரியபாட்டி என்னிடம் “நீ ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். “உனக்கு என்னவேண்டும்?”

“நான் படிக்கவேண்டும்… நிறைய படிக்கவேண்டும்” என்றேன்.

“பெண்கள் நிறைய படிக்கமுடியாதே… எப்படியும் இன்னும் நான்கு வருடங்களில் உனக்கு மங்கலம் நடக்கவேண்டும்” என்றாள் பெரிய பாட்டி.

“நடக்காது!” என்று நான் சொன்னேன். “நான் படிப்பேன்… படிக்கக்கூடியது எல்லாவற்றையும் படிப்பேன்.”

“கணியாருக்கு இதற்குமேல் என்ன தெரியும்?”

“நான் நாகர்கோயில் போய் படிப்பேன்” என்றேன். “கணியார் சொன்னார், இனிமேல் படிப்பு நாகர்கோயிலில்தான் என்று. டதி அம்மா ஆரம்பித்த பெண்பள்ளிக்கூடம் அங்கே இருக்கிறது. அதில் சேர்ந்து படிப்பேன்.”

“வேதக்காரர்களின் பள்ளியிலா?” என்று பாட்டி திகைத்தார். வாய் சிறிய சிவப்பு ஓட்டை போல திறந்து நின்றது.

“ஆமாம், அதில்தான்.”

“எடியே!” என்று அவள் மூச்சொலியில் சொன்னாள். “நீ குடும்பத்தை அழிச்சிருவே!”

அப்போது என் அருகே நின்ற கேசினி “அவள் படிப்பாள்… படிக்கத்தான் அவள் பிறந்திருக்கிறாள்” என்றாள்.

பாட்டி திடுக்கிட்டு “ஆ!” என்றாள். பின்பு கைகள் நடுங்க கும்பிட்டாள். முகம் கோணலாகி வாய் இழுபட்டு அதிர்ந்தது. ஒரு கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

நான் வெளியே வந்தேன். கேசினியிடம் “நீ பாட்டியை பயமுறுத்தினாயா?”என்றேன்

“சேச்சே, சொல்லவேண்டியதை தெளிவாகச் சொல்லவேண்டுமே” என்று அவள் சொன்னாள்.

“பாட்டி பயந்துவிட்டாள்” என்றேன்.

“ஆமாம், நானே போய் சொல்லிக்கொள்கிறேன்…” என்று அவள் சிரித்தாள்.

அவளைப் போன்ற இனிமையான ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை. கண்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஏன் அவளை அப்படிப் பயப்படுகிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை.

மறுநாள் பாட்டி என்னை மீண்டும் அழைத்தாள். நான் சென்றபோது கார்த்துச் சித்தி பாட்டியின் கால்களை அகலமான மரவையில் நிறைத்த வெந்நீரில் வைத்து விரல்களை நீவிக்கொண்டிருந்தாள். என் அம்மா அருகே நின்றிருந்தாள்.

பாட்டி என்னிடம் “வாடி, பக்கத்திலே வா” என்றாள்.

அருகே சென்று நின்றேன். என் கையைப்பிடித்தாள். பிறகு என் தலையில் கையை வைத்து “நன்றாக இருடி… நீ விரும்பிய இடத்துக்கெல்லாம் போ… ஏழு தலைமுறையாக நாங்களெல்லாம் ஜெயில்வாசம் அனுபவித்தது நீ பறந்து மேலே எழவேண்டும் என்பதற்காகத்தானோ என்னவோ…. எங்கள் அனைவருடைய ஆசிகளும் பிரார்த்தனையும் கண்ணீரும் உன்னுடன் இருக்குமடி” என்றாள்.

கீழே அமர்ந்திருந்த கார்த்து சித்தி விசும்பும் ஒலி கேட்டது. அம்மாவும் கண்ணீருடன் திரும்பிக்கொண்டாள்.

“நான் படிப்பேன்” என்று சொன்னேன்.

“படி… படித்துக்கொண்டே இரு… யாரும் உன்னை தடுக்கமுடியாது… தடுத்தவர்கள் அழிவார்கள்… அது இந்த இருட்டறைகளில் வாழ்ந்து செத்த உன் மூத்தம்மைகளின் கோபம்… நீ போய்க்கொண்டே இரு… எங்கேயும் நின்றுவிடாதே” என்றாள்.

சட்டென்று அவள்குரல் மேலெழுந்தது “உன் வழியில் மகாராஜாவின் கோட்டை வந்தால் உடைத்து எறி. அனந்தபத்மனாப சாமியின் கோயில் வந்தால் அதை மிதித்து போடு… போய்க்கொண்டே இருடீ அம்மா… போய்க்கொண்டே இருடீ!”

சட்டென்று பாட்டி மயங்கி சரிந்துவிட்டள். என் அம்மாவும் சித்தியும் பிடித்துக்கொண்டர்கள். பாட்டியின் வலக்கால் இழுத்து இழுத்து அதிர்ந்தது. அவளை தூக்கிக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

மறுநாள் நான் சிறிய மாமா சாஸ்தாவிடம் என்னை நாகர்கோயில் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் என்று சொல்வதற்காகச் சென்றேன். இடைவராந்தாவை கடந்து அரங்கில் ஏறி பூமுகத்தை அடைந்தேன். அங்கே அவர் காரியக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அருகே எங்கள் கோயில்களில் பூசை செய்யும் கோபாலன் போற்றி அமர்ந்திருந்தார்.

இளையமாமா என்னைக் கண்டதும் திகைத்து எழுந்து நின்றார்.

“நாகர்கோயில் டதி அம்மாவின் பள்ளிக்கூடத்தில் நான் இங்கிலீஷ் படிக்கவேண்டும்… என்னை கொண்டுபோய் சேருங்கள்” என்று நான் சொன்னேன்.

காரியக்காரர்கள் திகைப்புடன் இளைய மாமாவை பார்க்க கோபாலன் போற்றி “நாகர்கோயிலிலா? வேதக்காரர்களின் பள்ளியிலா?” என்றார்.

“ம்ம்ம்!” என்று ஓர் உறுமலை எழுப்பியபடி கேசினி முன்னால் அடியெடுத்து வைத்தாள். அவர் பதறியடித்து எழுந்துவிட்டார்.

“கொண்டு போய் சேர்க்கிறேன்… கொண்டு போய் சேர்க்கிறேன்!” என்று இளையமாமா சொன்னார்.

போற்றி இறங்கி வெளியே ஓடினார். செல்லும் வழியிலேயே கால்தடுக்கி விழுந்து அவருடைய முகவாய் படிக்கல்லில் மோதி ரத்தம் கொட்டியது. நெஞ்சிலும் வயிற்றிலும் ரத்தம் வழிந்தது. அவர் ஓசையில்லாமல் அழுதுகொண்டிருந்தார்.

மறுநாளே நான் கிளம்பினேன். பாட்டிகளிடமும் அம்மாவிடமும் சித்திகளிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டேன். பெரியபாட்டி படுத்த படுக்கையாக இருந்தார். நான் வணங்கியபோது “நீ எனக்காக திரும்பி வரவேண்டாம். உனக்கு இனி குடும்பம் இல்லை. உற்றாரும் உறவினரும் இல்லை. உனக்கு இனி சரஸ்வதி மட்டும்தான் உறவு…. சிரேயஸும் பிரேயஸும் நிறையட்டும்” என்று பாட்டி வாழ்த்தினார்.

எனக்காக வில்வண்டி காத்திருந்தது. நான் அதில் ஏறி அமர்ந்தபோது கேசினியும் வந்து ஏறிக்கொண்டாள். “நீ எங்கள் வீட்டை விட்டு வரலாமா?” என்று நான் கேட்டேன்.

“இங்கும் நான் இருப்பேன். எங்களுக்கு காலமும் இடமும் இல்லை” என்று கேசினி சொனனாள்.

திருநயினார்க்குறிச்சியிலிருந்து ஆளூர் வழியாக நாகர்கோயில் போனோம். அங்கே நடுக்காடு என்ற பொட்டலில் மீட் துரை உருவாக்கியிருந்த புதிய ஊரும் சர்ச்சும் இருந்தது. அதனருகே டதி அம்மா தொடங்கிய பெண்கள் பள்ளி. நான் அதில் சேர்ந்தேன்.

ஆனந்தவல்லி டீச்சர் வந்து “பாட்டி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்… அவர்கள் கொஞ்சம் பால் சாப்பிடவேண்டும்” என்றார்.

“ஆமாம்…” என்று நான் சொன்னேன்.

“உனக்கு டீ வேண்டுமாடி?”

“ஆமாம்… நானே கேட்கவேண்டும் என்று நினைத்தேன்” என்றேன்.

அம்மிணி தங்கச்சியை மெல்ல கைபற்றி அழைத்துச்சென்றார் ஆனந்தவல்லி. எனக்கு டீ வந்தது. நான் என் குறிப்புகளில் ரெவரெண்ட் டதி பற்றி எழுதியிருந்ததை ஒருமுறை வாசித்தேன்.

ரெவெரெண்ட் ஜேம்ஸ் டதி 1833ல் லண்டனில் ஸ்காட்லாந்தில் ஸ்டோன்ஹாவன் என்ற ஊரில் பிறந்தவர். இந்தியாவுக்கான லண்டன் மிஷன் திருச்சபையில் உறுப்பினாராக 1856ல் சேர்ந்தார். 1858ல் சென்னைக்கு வந்தார். அடுத்த ஆண்டு நாகர்கோயிலுக்கு வந்தார். 1865 வரை நாகர்கோயில் லண்டன்மிஷன் நாகர்கோயில் சர்ச்சின் பொறுப்பாளராக இருந்தார். 1908ல் பெங்களூரில் உயிர்துறப்பது வரை லண்டன் மிஷனின் வெவ்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தார். அவருடைய உடல் நாகர்கோயில் டதி பள்ளி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ரெவெரெண்ட் ஜேம்ஸ் டதியின் மகள் திருவாட்டி பியாட்ரீஸ் டதி 1870 ல் பிறந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. நாகர்கோயில் நகரின் வளர்ச்சிக்காகவும் கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் திருவாட்டி பியாட்ரீஸ் டதி.

நாகர்கோயிலில் பெண்களுக்குக் கல்விநிலையம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். நாகர்கோயிலில் இன்று கலெக்டர் அலுவலகமாக இருக்கும் இடம் மகாராஜாவின் பழைய கோடைக்கால மாளிகை. அதனருகிலேயே ஒரு நிலத்தை மகாராஜாவிடமிருந்து வாங்கி அங்கே பெண்களுக்கான பள்ளி ஒன்றை 1890-ல் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது இருபது தான்.

அன்று பெண்களுக்கு வருமானமே இல்லை. கூலிவேலைக்குச் செல்லும் பெண்கள் தவிர பிறர் முழுக்க முழுக்க வீட்டிலேயே கோழி ஆடு வளர்ப்பது போன்ற தொழில்களைச் செய்து வந்தனர். அதைச்செய்தால் படிக்க நேரம் இருக்காது, பள்ளிக்கும் வரமுடியாது. பெண்களை விவசாய வேலையிலிருந்து விடுவித்தாலொழிய கல்விக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த திருவாட்டி டதி கவுனின் கீழ்ப்பகுதியில் வைத்து தைக்கும் லேஸ்களை தயாரிக்கும் பயிற்சியை பெண்களுக்கு அளித்தார்.

மிக விரைவிலேயே லேஸ் தொழில் நாகர்கோயிலில் பரவியது. லேஸ் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வளர்ந்து கொண்டிருந்த லண்டனில் அதற்கு நல்ல சந்தை இருந்தது. அதில் கிடைத்த லாபத்தில் டதி பள்ளியை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார். டதி பள்ளியில் படிக்கும் பெண் அங்கே லேஸ் செய்து கொடுக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தையே பார்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

1919-ல் தன் 49 ஆவது வயதில் திருவாட்டி டதி மறைந்தார். அவருடைய உடல் நாகர்கோயில் ஹோம்சர்ச் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வரலாறுகள் எழுதப்படுகின்றன. பேரரசர்களின் கதைகள். அதன்பின் தேசியப் பெருமிதங்கள், மொழி இனப்பெருமிதங்கள், கடைசியாக சாதியப் பெருமிதங்கள். டதி போன்றவர்களே உண்மையான வரலாற்றுத்தலைவிகள். அவர்களை பற்றி எழுதப்படுவதேயில்லை. டதி அம்மையார் பற்றி தமிழில் எந்தக்குறிப்பும் எனக்கு பொதுச்சூழலில் அகப்படவில்லை.

நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அம்மிணி தங்கச்சி பதினைந்தே நிமிடத்தில் ஓய்வெடுத்து முடித்து எழுந்துவிட்டார். அவரே சுவரைப் பிடித்துக்கொண்டு கூன் விழுந்த உடலை உந்தி கைகளை தொங்குவது போல வீசி நடந்து வந்து “லக்ஷ்மியே, எடியே!” என்றார்.

“அம்மா, இங்கே இருக்கிறேன்” என்றேன்.

“நான் டதி மேடம் பற்றி உன்னிடம் சொன்னேனாடீ?” என்றார். “இதோ இப்போது படுத்திருந்தேனே, அருகே அவர் நிற்பதுபோல இருந்தது. என்னை பார்த்துக் கொண்டிருந்தார். என்ன ஒரு கண்கள். கனிந்த கண்கள். கனிந்த சிரிப்பு. தெய்வமே, நான் மேரிமாதாவுடன் அல்லவா பழகியிருக்கிறேன்” என்றார்.

முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது, என்னருகே வந்து “மெய்யாகவே இங்கே பக்கத்தில் அவர் இருப்பது போல இருக்கிறதடீ.. அவர்களின் கடல்நுரைபோல லேஸ் வைத்த வெள்ளை கவுனையே பார்க்கமுடிகிறது” என்றார்.

எனக்கு சற்று புல்லரித்தது. உண்மையில் முதியவர்கள் இறந்தவர்களின் உலகுக்கு மிக நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள். அல்லது பெரும்பாலும் இறந்துவிட்டிருக்கிறார்களோ? கொஞ்சம்தான் இங்கே எஞ்சியிருக்கிறதோ?

டதி அம்மா 1890-லேயே பெண்பள்ளிக்கூடத்தை நிறுவிவிட்டார். ஆனால் அதில் பெரும்பாலும் ஆங்கிலேய குழந்தைகளும் கிறித்தவக் குழந்தைகளும் மட்டும்தான் அதில் படித்தன. என் தலைமுறையில்தான் பிறகுழந்தைகள் அதில் சேரத் தொடங்கியிருந்தனர். நான் சேரப்போனது 1898 ல். ஜூனில்தான் பள்ளிக்கூடம் திறக்கும் அந்த தகவலெல்லாம் எனக்கு தெரியாது. நான் சேரப்போனது அக்டோபர் மாதம்

நாகர்கோயிலில் எங்களுக்கு சொந்தக்காரர்கள் இருந்தார்கள். என் இளைய தாய்மாமன் பாஸ்கரன் நாயரின் மனைவி அம்பிளியின் அண்ணா மாதவன் நாயர் அப்போது அங்கே தேர்ட் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் கான்ஸ்டபிளாக இருந்தார். அவருடைய வீடு வடிவீஸ்வரத்தில் இருந்தது. அங்கே சென்று ஓய்வெடுத்தபின் மறுநாள் காலை வில்வண்டியில் கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு போனோம்.

நாங்கள் சென்றபோது டதி மேடம் இருந்தார். என்னுடன் மூத்த அண்ணா கருணாகரன் வந்திருந்தார். அவருக்கு படிப்பு தெரியாது, உலகமும் தெரியாது. கான்ஸ்டபிள் மாதவன் நாயர்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

வண்டியில் என்னுடன் கேசினியும் இருந்தாள். அவளும் என்னுடன் கிளம்பி வந்திருந்தாள். அவளுக்கு அந்த பள்ளிக்கூடத்தை பார்க்கப் பார்க்க ஆச்சரியம். “இத்தனை பெண்கள் படிக்கிறார்களா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

டதி மேடத்தின் அறை மரத்தட்டிக்கு அப்பால் இருந்தது. ஒரு பங்காவை ஒருவன் இழுத்துக்கொண்டே இருந்தான். ஒரு பெரிய சேவலின் ஒற்றைச் சிறகு போல அது அசைந்தபடி இருந்தது. அதன் கிரீச் கிரீச் ஓசை கேட்டது. ஆங்கிலேயர் கட்டிய கட்டிடங்களில் எல்லாம் கூரைகள் மிக உயரமானவை.

டதி அம்மாவின் பெண் உதவியாளர் கிரேஸி எங்களிடம் உள்ளே போகும்படிச் சொன்னார். நான் கைகூப்பியபடி உள்ளே சென்றேன். என் அண்ணா வெளியே நின்றுவிட்டார். மாதவன் நாயர் உள்ளே சென்று வலுவான ஒரு சல்யூட் அடித்தார்.

அந்த ஓசையில் டதி அம்மா திடுக்கிட்டுவிட்டார். உடனே வாய்விட்டு சிரித்து அமரும்படி சொன்னார்.

அவர் “பரவாயில்லை அம்மா” என்றார்.

“உட்காருங்கள்” என்று தமிழில் மீண்டும் சொன்னார். அதன்பின் அவர் அமர்ந்தார்.

டதி அம்மா நான் நினைத்ததை விட சிறிய உருவம். வெள்ளையர்கள்போல ரத்தச்சிவப்பாக இல்லை, இங்கெயே பிறந்தவர் ஆனதனால் வெயில்பட்டு கொஞ்சம் நிறம் மங்கியிருந்தார்கள். இருபக்கமும் பிடித்து அழுத்தியதுபோல நீண்ட முகம். கூர்மையான நீண்ட மூக்கும், வெள்ளாரங்கல் போன்ற கண்களும், சிவப்புக் கோடு இழுத்ததுபோன்ற உதடுகளும் கொண்டிருந்தார். கருமையான கூந்தலை சீவி சிறிய கொண்டையாக போட்டிருந்தார். தளர்வான வெள்ளை ஆடை. அதில் கழுத்திலும் கைகளிலும் ஃப்ரில்களும் லேஸ்களும். கைகளில் பட்டு உறையிட்டிருந்தார்கள். சிரித்தபோது பற்கள் மரத்தாலானவை போலிருந்தன.

“என்ன வேணும்?” என்று டதி அம்மா கேட்டார்.

“இவளை இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும்” என்று மாதவன் நாயர் ஆங்கிலத்தில் சொன்னார் “நாங்கள் ரொம்ப புராதனமான பெரிய குடும்பம். கல்வி எல்லாம் வீட்டிலேயேதான். ஆனால் இவள் இங்கிலீஷ் படிக்க ஆசைப்படுகிறாள்… ஆகவே கூட்டிவந்தோம்”

“ஆனால் இந்த ஆண்டு இனிமேல் சேர்த்துக்கொள்ள முடியாதே” என்று டதி அம்மா சொன்னார் “இனி அடுத்த கிளாஸ்கள் தொடங்குவது அடுத்த ஜூனில். ஜூன் என்றால் தமிழ் மாசம் வைகாசி. மலையாள மாசம் மிதுனம்”

மாதவன் நாயர் “கூட்டி வந்துவிட்டோமே, தயவுசெய்து சேர்த்துக்கொள்ளவேண்டும்” என்றார்.

“இப்போது சேர்த்துக்கொண்டால் அவளால் படிக்க முடியாது… மற்ற பிள்ளைகளை கவனிப்பதன் நடுவே அவளை நாம் தனியாக படிக்கவைக்கவும் முடியாது, சொல்வதைக் கேளுங்கள்” என்றார் டதி அம்மா.

நான் நடுவே புகுந்து அழுத்தமாக “முடியும்” என்றேன்.

திகைப்புடன் என்னை பார்த்தபின் மீண்டும் அவர் சிரித்துவிட்டார். சிரிக்கும்போது நம் பெண்களைப்போல வாயை பொத்திக் கொள்ளமால் தலையை நன்றாக பின்னால் சாய்த்து குரல்வளை தெரிய பற்கள் தெளிய வாய்விட்டுச் சிரிப்பது அவர் வழக்கம். அப்படிச் சிரிக்கும் பெண்ணை நான் அதற்கு முன் பார்த்ததே இல்லை.

“என்ன சொல்கிறாய்? படிக்க முடியுமா உன்னால்? என்ன படித்திருக்கிறாய்?”

“தமிழும் மலையாளமும் கணக்கும் ஜோசியமும் தெரியும்… சம்ஸ்கிருத எழுத்துக்களும் தெரியும். இங்கிலீஷ் சொல்லித் தந்தால் படிப்பேன்”

“ஆமாம் கண்டிப்பாகப் படிக்கலாம். ஆனால் இந்தியர்கள் இங்கிலீஷ் படிப்பது ரொம்ப கஷ்டம்”

“என்னால் முடியும்” என்று நான் சொன்னேன்.

“இவள் இரண்டே வாரத்தில் தமிழ் மலையாள எழுத்துக்களை படித்தவள்” என்றார் மாதவன் நாயர்

“இரண்டே வாரத்திலா?” என்று திரும்பி என்னை பார்த்தார். “இங்கிலிஷில் இருபத்துஆறு எழுத்துக்கள்தான். அவற்றை எத்தனை நாட்களில் படிப்பாய்?”

“இங்கேயே படித்துவிடுவேன், சொல்லிக்கொடுங்கள்” என்றேன்.

அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு சிலகணங்கள் அமர்ந்திருந்தார். பிறகு ஒரு கரும்பலகையை எடுத்து “பார்” என்று சொல்லி சுண்ணாம்புக் கட்டியால் ஆங்கில எழுத்துக்களை எழுதினார். ஒவ்வொரு எழுத்தையும் எழுதும்போதே சொல்லிக்கொண்டார்.

“பார்த்தாயா? இரு இன்னொரு முறை சொல்கிறேன்” என்றார்.

நான் “வேண்டாம்” என்றேன். அந்த சுண்ணாம்புக் கட்டியை எடுத்து இருபத்து ஆறு ஆங்கில எழுத்துக்களையும் சொல்லிக்கொண்டே எழுதினேன்.

அவர் வியப்புடன் “நீ இதற்கு முன் ஆங்கிலம் படித்ததில்லையா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

அவருக்கு நம்பிக்கை வரவில்லை. “சரி, அந்த போர்டில் எத்தனை எஸ் இருக்கிறது என்று எண்ணிச் சொல் பார்ப்போம்” என்றார்.

நான் நின்ற இடத்தில் இருந்தே அதைப் பார்த்தேன். கேசினி என் காதில் “நாற்பத்தேழு” என்றாள் நான் “நாற்பத்தேழு” என்றேன்.

அவர் பிரமித்துவிட்டார். “இவள் சேர்ந்துகொள்ளட்டும்” என்றார். “நீ எந்த வகுப்பில் சேரவேண்டும்?”

“எந்த வகுப்பிலும் சேர்வேன்” என்றேன்.

“நேராகவே ஆறாம் வகுப்பில் சேர்ந்துகொள். உனக்கு நானே சொல்லித்தருகிறேன். ஓராண்டில் உன்னால் ஆறாம்வகுப்பு தேர்வை எழுத முடியும்” என்றார் டதி அம்மா.

“பெரிய உபகாரம்” என்று மாதவன் நாயர் சொன்னார். எழுந்து கைகூப்பினார். “கால் தொட்டு வணங்குடி… குருசான்னித்தியமாக்கும்” என்றார்.

“நோ நோ” என்றார் டதி அம்மா.

அதற்குள் நான் குனிந்து அவர் காலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன். மாதவன் நாயர் வெளியே சென்றார்.

“நானும் தொட்டு வணங்கிக்கொள்கிறேனே” என்று கேசினி சொன்னாள்.

டதி அம்மா காலை இழுத்துக்கொண்டு “என்ன?” என்றார் “யார்?” என்று குனிந்து மேஜைக்கு அடியில் பார்த்தார்.

“அது கேசினி…” என்றேன் “அவளும் உங்களை வணங்குகிறாள்.”

“கேசினியா? யார் அது?”

“யக்ஷி… என் தோழி”

அவர் என்னை திகைப்புடன் பார்த்தார். “தெய்வமா?” என்றாள்.

“ஆமாம்… யக்ஷி.”

அவர் புன்னகைத்து “அதுதான் நீ எல்லாவற்றையும் மீறி வந்திருக்கிறாய்” என்றார்.

அதன்பின் நான் டதி அம்மையாரின் அருமைப்பெண்ணாக மாறினேன். ஆறே மாதத்தில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கற்றேன். எல்லா பாடநூல்களையும் ஒரே மாதத்தில் படித்தேன். மெட்ரிக்குலேஷன் வென்றேன்.

மாதவன் நாயரின் வீட்டில்தான் நான் தங்கியிருந்தேன். அங்கிருந்து வில்வண்டியில் டதி பள்ளிக்கூடம் செல்வேன். மாதவன் நாயர் ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அன்றெல்லாம் அது மிக மிக அபூர்வமானது. அந்த சைக்கிள் லண்டனில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் துரை கொண்டுவந்தது. ஆனால் அவரால் அதை ஓட்டமுடியவில்லை. இரண்டுமுறை அதிலிருந்து விழுந்தபின் அதை சும்மா வைத்திருந்தார். மாதவன் நாயர் அதை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கினார். ஊரில் அவர்பெயரில் இருந்த எட்டு ஏக்கர் நிலத்தை விற்ற பணத்தை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

நாகர்கோயிலிலேயே டதி அம்மா மட்டும்தான் சைக்கிளில் போகும் ஒரே பெண். டதி அம்மாவின் சைக்கிள் சிறிய சக்கரங்கள் கொண்டது. எடையும் குறைவு. இது பெரிய சக்கரம் கொண்டது. எடைமிக்க இரும்பாலானது. இருக்கை மரக்கட்டையால் ஆனது.

ஒருநாள் நான் காலையில் எழுந்து வெளியே வந்தேன். என் வில்வண்டியை ஓட்டும் சுடலைப் பிள்ளை வந்திருக்கவில்லை. சைக்கிள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

கேசினி அதை பார்த்து “அதிலே போவோமா?” என்றாள்.

“போவோமே” என்று நான் சொன்னேன்.

நான் அதை எடுத்து என் பையை பின்னால் செருகிவிட்டு “அத்தை, நான் சைக்கிளில் பள்ளிக்கூடம் போகிறேன்…” என்று சொல்லி ஓட்டினேன்.

அத்தை ஓடிவந்து “எடீ! எடீ! யக்ஷீ!” என்று கூவினாள்.

அவள் என்னை அப்படித்தான் அழைப்பாள். ஆனால் அவளுக்கு என்னை பிடிக்கும். அவளுக்கு மூன்று பெண்கள். மூன்றுபேரையுமே வேதக்கார பள்ளியில் படிக்கவைக்கவேண்டும் என்று ஆசை. அவர்களுக்கு நான் ஒவ்வொருநாளும் பாடம் எடுப்பேன்.

நான் சாலை வழியாக சைக்கிளில் போனபோது அத்தனை ஆண்களும் திகைத்து வாய் பிளந்து நின்றுவிட்டார்கள். வீடுகளுக்குள் இருந்து பலர் ஓடிவந்து வேடிக்கை பார்த்தார்கள்.

பள்ளியில் டதி அம்மாவின் சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு அருகே என் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போய் “குட் மார்னிங் மேடம்!” என்றேன்.

“குட்மார்னிங் மை டியர் டெவில்” என்றார். அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்.

“நான் சைக்கிளில் வந்தேன். என் மாமாவின் சைக்கிள்” என்றேன்.

“எப்படி ஓட்ட பழகினாய்?” என்றார்.

“பழகவில்லையே… எடுத்து ஓட்டிக்கொண்டுவந்தேன்” என்றேன்.

“யார் சொன்னது ஓட்டலாம் என்று?” என்றார் “அந்த டெவிலா?”

“ஆமாம்” என்றேன். “நானும் கேசினியும்தான் சேர்ந்து வந்தோம்”

“சச் எ க்யூட் டெவில்” என்று சிரித்தார்.

அந்த சைக்கிளை நான் ஊரிலிருந்து பணம் வரவழைத்து வாங்கிக்கொண்டேன். அதில்தான் ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போனேன்.

அங்கே இருந்த நாளெல்லாம் டதி அம்மா எனக்கு அம்மாபோல இருந்தார். லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட புத்தகங்களை எனக்கு தருவார். டேனியல் டூஃபோ முதல் ஆர்.எல்.ஸ்டீவன்சன் நாவல்கள் வரை வாரம் ஒரு புத்தகம் என்று சகட்டுமேனிக்கு வாசிப்பேன். வாசித்ததைப் பற்றி அவரிடம் பேசுவேன்.

அவருக்கு அன்று எல்லாரும் வாசித்த பிராண்டெ சகோதரிகளை பிடிக்கும். ஷெல்லி, கவிதைகளை உரக்கச் சொல்வார். அனால் அவருடைய மிகப்பிரியமான எழுத்தாளர் எலிசபெத் காட்ஜ் [Elizabeth Goudge] என்ற பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர். அவர் கிறிஸ்தவக் கருக்களை வைத்து எழுதுபவர். தான் எழுதியிருந்தால் அவரைப்போல எழுதியிருப்பேன் என்று டதி அம்மா சொல்வதுண்டு.

உண்மையிலேயே அவருக்கு ஒரு நாவலாசிரியை ஆகவேண்டும் என்ற ஆசை உண்டு. லண்டனில் இருந்திருந்தால் ஆகியிருக்கவும் கூடும். இங்கே இந்தியாவின் தெற்கே ஒரு சிற்றூரில் அவருடைய கர்மயோகம் இருந்தது. அவர் அது ஏசுவின் ஆணை என்று நம்பினார். என்னிடம் ஏசுவின் அருள் பற்றி கண்கள் பனிக்க பேசியிருக்கிறார். ஏசு அவருக்கு கூடவே இருக்கும் ஒருவர். வழிகாட்டி, காதலன், தெய்வம். ஆனால் அவர் என்னை மதம் மாற்ற முயன்றதே இல்லை.

நான் மெட்ரிகுலேஷன் முடித்ததும் என்ன செய்யப்போகிறேன் என்று டதி அம்மா கேட்டார். “கல்லூரிக்கு போய் படிப்பேன்” என்று சொன்னேன்.

அவர் சிலகணங்கள் திகைத்துவிட்டார். அவர் அதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அப்போதே பத்தொன்பது வயது ஆகியிருந்தது. என் வயதை ஒட்டியவர்கள் இரண்டு குழந்தைகளை பெற்றிருப்பார்கள்.

அவர் என் கையை பிடித்துக்கொண்டார் “விடாதே டெவில்… உன்னை யாரும் தடுக்க முடியாது” என்றார்.

அவர் சொன்னது என்ன என்று எனக்கு பிறகு புரிந்தது. நான் அவருடைய சிறகுகளுக்குள் இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. அதற்குப்பின் நான் சந்தித்தது எல்லாமே தடைகள்தான்.

நான் மகாராஜா கல்லூரியில் சேர விண்ணப்பம் கொடுத்திருந்தேன். என் வீட்டில் தாய்மாமன்களும் அண்ணன்களும் என்னை எதிர்த்து எதையும் பேசமுடியாதவராக ஆகியிருந்தனர். வீட்டில் உள்ள பெண்கள் எல்லாருமே என்னை ஆதரித்தார்கள். என் படிப்பைப் பற்றி மட்டுமே வீட்டில் பேச்சிருக்கும்.

ஆனால் என்னை கல்லூரியில் சேர்வதற்கு அழைக்கவில்லை. திருவனந்தபுரத்தில் என் தாய்மாமனின் மைத்துனர் கிருஷ்ணன் நாயர் கல்லூரிக்குப் போய் பார்த்துவிட்டு அங்கே இடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். நான் நேரில் சென்று பிரின்ஸிப்பாலிடம் பேசவேண்டும் என்று சொன்னேன்.

இளைய மாமா “அது தேவையா? நாம் நம் இடத்தில் இருக்கவேண்டும். அது மகாராஜாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காலேஜ். நாம் அத்துமீறுவதாக புகார் செய்துவிட்டால் ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும்” என்று என் செவியில் விழும்படி அம்மாவிடம் சொன்னார்.

“யாரும் வரவேண்டியதில்லை. நானே செல்கிறேன்… எனக்கு துணையும் வேண்டாம்” என்று நான் சொன்னேன். “நான் நாளைக்காலை கிளம்புகிறேன்.”

கருணாகரன் அண்ணா “வேண்டாம்… நானே வருகிறேன்… ” என்றார்.

திருவனந்தபுரம் சென்று மகாராஜா கல்லூரியின் நிர்வாகப் பேராசிரியர் பணியில் இருந்த எஸ்.மகாலிங்க ஐயரைச் சந்தித்தேன். என்னுடன் கருணாகரன் அண்ணா வந்தார். ஆனால் அவர் வழக்கம்போல பயந்து வெளியே நின்றுவிட்டார். திருவனந்தபுரத்தில் இருந்த கிருஷ்ணன் நாயர்தான் கூட வந்தார். அவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்.

“மகாலிங்கய்யர் சுவாமி மகா கோபக்காரர். மகாராணியிடம் நேரில் பேசுபவர். இளையராஜாக்களுக்கு அவர்தான் சம்ஸ்கிருத பாடம் சொல்லி தருகிறார் என்கிறார்கள்…” என்று போகும் வழியெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.

எஸ்.மகாலிங்க அய்யர் என்னை உள்ளே விடவே இல்லை. கிருஷ்ணன் நாயரை மட்டும் உள்ளே அழைத்தார். அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியாது. வெளியே வரும்போது அவர் கண்கலங்கியிருந்தார். “வா போகலாம்… நம் தலையெழுத்து, இனி உனக்கு படிப்பு இல்லை” என்றார்.

“என்ன சொன்னார்?”என்று நான் கேட்டேன்.

“ஒன்றுமில்லை” என்றார்.

“என்ன சொன்னார்?” என்று மேலும் உரக்க கேட்டேன்.

“வீட்டுப்பெண்ணை விபச்சாரத்திற்கு விடப்போகிறீர்களா என்று கேட்டார்” என்றார் கிருஷ்ணன் நாயர்.

“அய்யோ தெய்வமே” என்று கருணாகரன் அண்ணா  தலையில் கைவைத்தார்.

நான் ஒரு கணம் உறைந்து நின்றேன். கேசினி உறுமியபடி முன்னால் செல்ல நான் அவளை பிடித்து நிறுத்தினேன்.

அதே கட்டிடத்தில் மாடியில் பிரின்சிப்பாலின் அலுவலகம் இருந்தது. அன்றைய பிரின்ஸிப்பால் டாக்டர் அலெக்ஸாண்டர் மிச்செல் இன்றைக்கு பலபேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மிகப்பெரிய வானியலாளர்.

“கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

நான் அவரைப்பற்றிய குறிப்புகளை எடுத்திருந்தேன். அலக்ஸாண்டர் கிரைட்டன் மிச்செல் [Alexander Crichton Mitchell] புவிகாந்தவியல் என்ற துறையின் முன்னோடியான அறிவியலாளர்களில் ஒருவர். வானியல் நிபுணர். நீர்மூழ்கிகளை கண்டுபிடிப்பதற்கான கருவியை உருவாக்கியவர். மகாராஜாவின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரம் வந்து மகாராஜா கல்லூரியின் தலைவராக இருந்தார். திருவனந்தபுரம் வானியல் ஆய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

நான் நேராக மிச்செல் துரையின் அறை முன் சென்று நின்றேன் என்றார் அம்மிணித் தங்கச்சி. என்பின்னால் பதறியபடி ஓடி வந்தார். நான் துரையின் பியூனிடம் உள்ளே சென்று அவரைப் பார்க்கவேண்டும் என்றேன். உள்ளே விடமுடியாது என்று அவர் சொன்னார். அவர் ஒரு நாயர், பெண் ஒருத்தி அப்படி வந்து நின்றது அவரை எரிச்சலடையச் செய்தது தெரிந்தது.

உள்ளே பெல் அடித்தது. அவர் உள்ளே போனபோது நானும் உள்ளே சென்றேன். அவர் என்னை தடுப்பதற்குள் நான் துரையின் முன் சென்று நின்றேன்.

“என் பெயர் அம்மிணி தங்கச்சி எனக்கு இங்கே இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணத்தால் என்று எனக்கு தெரியவேண்டும்” என்றேன்.

“அதை இங்கே பேசக்கூடாது. கல்லூரி பொறுப்பாளரிடம் பேசு” என்றார் துரை.

கடுகடுப்பான சிறிய மனிதர். மெல்லிய தலைமயிர், மேடேறிய நெற்றி. சாதாரணமாக ஆங்கிலேயர்களுக்கு இருப்பதைவிட பெரிய காதுகள். முகம் நன்றாகச் சிவந்திருந்தது.

“நான் ஓர் ஆங்கிலேயரின் நீதியுணர்வை நம்பி இங்கே வந்திருக்கிறேன். நான் பெண் என்பது மட்டுமே காரணம் என நினைக்கிறேன்” என்றேன்.

“இந்த நிறுவனத்தை என் முன் நீ விமர்சிக்க முடியாது” என்று அவர் சொன்னார்.

“இல்லை என்றால் எனக்கான காரணத்தைச் சொல்லுங்கள்.”

அவர் மணியை அடித்து “மிஸ்டர் மகாலிங்கையரிடம் வரச்சொல்லுங்கள்…” என்றார்.

சட்டென்று கேசினி “நீங்கள் யார் என்று எனக்குத்தெரியும்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?”என்று அவர் கேட்டார்.

“உங்கள் மேஜைமேல் இருக்கும் இந்தப் புத்தகம் பூமியின் காந்தப்புலம் பற்றியது. அது நீங்கள் எழுதியது. உங்கள் ஆய்வேட்டின் அச்சுவடிவம்” என்று கேசினி சொன்னாள். “பூமியில் நிறைந்திருக்கும் ஆற்றல் என்பது இங்கு சுழன்றுகொண்டிருக்கும் கோடானுகோடி துகள்களின் ஆற்றல். அந்த ஆற்றல் ஒன்றை ஒன்று சமன்செய்வதனால் நிலைஆற்றலாக ஆகியிருக்கிறது. அதுவே பூமியை ஒரு காந்தமாக நிலைநிறுத்துகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்”

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று அவர் திகைப்புடன் கேட்டார்.

“உங்களைப் பற்றி திரு டதி அவர்கள் ஒருமுறை பேசுவதை கேட்டேன்”

“ஆனால் உனக்கு எப்படி இதெல்லாம் புரிகிறது?”

“நான் எல்லாவற்றையும் புரிந்துகொள்வேன்.”

மகாலிங்கய்யர் உள்ளே வந்தார். என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மிச்செல் துரையை வணங்கினார்.

“மிஸ்டர் மகாலிங்கம், இந்தப் பெண் நம் கல்லூரியில் படிக்கவேண்டும். அட்மிஷன் போடுங்கள்.”

“சார் மன்னிக்கவேண்டும், இங்கே அறிவியல் வகுப்புகளுக்கு பெண்களைச் சேர்க்கமுடியாது. சேர்த்தாலும் மெட்ராஸ் பல்கலைகழகம் இடம் தராது… தேர்வு எழுத முடியாது” என்றார் மகாலிங்க ஐயர்.

துரை என்னைப் பார்த்து “நீ கலை பாடம் எடு… பி.ஏ வகுப்பில் சேர்” என்றார்.

நான் “சரி” என்றேன்.

“ஆனால் அதற்கும் இங்குள்ள ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றார் மகாலிங்கையர்.

துரை பெல்லை அடித்து “கிருஷ்ண மேனனை வரச்சொல்” என்றார்.

கலைத்துறை தலைவர் மலையிங்கல் கிருஷ்ணமேனன் உள்ளே வந்தார்.

“மிஸ்டர் மேனன், இந்தப் பெண்ணை இங்கே சேர்க்கமுடியுமா?” என்றார் மிச்செல் துரை.

“சர், சேர்க்கும் வழக்கம் இல்லை. ஆனால் முந்தைய ஆண்டில் மேரி புன்னன் என்ற பெண் சேர்ந்திருக்கிறார். ”

“அப்படியென்றால் இவளும் சேரட்டும்.”

“ஆனால் ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேரி புன்னனுக்கு மகாராணியின் சிபாரிசு இருந்தது” என்றார் மகாலிங்கையர்.

“நான் இவளுக்கும் மகாராணியின் சிபாரிசை வாங்கித்தருகிறேன்” என்று கிருஷ்ணமேனன் சொன்னார்.

“அப்படியென்றால் சரி” என்று மகாலிங்கையர் சொன்னார். ஆனால் அவர் முகம் சுருங்கியிருந்தது. வெறுப்பில் உதடுகள் மடிந்திருந்தன.

அவர் தலைவணங்கி வெளியே சென்றபோது கேசினி “நான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றாள்.

மிச்செல் துரை என்னிடம் “நீ இங்கே சேர்ந்து படி… எந்தப் படிப்பாக இருந்தாலும் அது மேலே செல்லும் வழிதான்” என்றார்.

“ஆமாம்” என்றுநான் சொன்னேன்.

“ஆனால் இங்கே ஆசிரியர்கள் உன்னை விரும்பாமல் இருக்கலாம். அவர்கள் உன் படிப்பை பாதியில் முடக்க நினைக்கலாம். அதை என்னால் தடுக்க முடியாது” என்று மிச்செல் துரை சொன்னார். “நீதான் போராடவேண்டும்…”

“நான் ஜெயிப்பேன்” என்று சொன்னேன்.

அவர் புன்னகைத்து “நான் போராடுவேன் என்று நீ சொல்லவில்லை, ஜெயிப்பேன் என்று சொல்கிறாய், நல்லது. நீ ஜெயித்தாகவேண்டும்” என்றார். “நீ ஒரு பாதையை திறக்கிறாய்…. புதியபாதையை திறப்பவர்கள் எப்போதும் மிகுந்த ஆபத்தில் இருக்கிறார்கள்.”

“நான் எப்போதுமே தனித்துச் செல்பவள்… என்னுடன் என் தோழி மட்டுமே இருக்கிறாள்.”

“யார் அவள்?”

“என் குலதெய்வம்” என்றேன்.

அவர் சிரித்து “நல்லது” என்றார் “அவளுடைய துணை உனக்கு இருக்கட்டும்.”

அவருடைய முகத்தை நினைவுகூர்கிறேன். அவரை நான் அதன்பிறகு தனிப்பட்ட முறையில் சந்திக்கவேயில்லை.

மகாராஜா கல்லூரியில் என் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். ஒரு பெண் படிப்பதை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர்களே மிகுதி. என்னை பார்க்கும்போதே அவர்களின் முகங்கள் சுருங்கும். பற்களை கடித்து வேறுபக்கம் திரும்பிக்கொள்வார்கள்.சந்திரசேகரன் நாயர் என்னை நேரில் பார்க்கவே மாட்டார். ஆனால் என்னைப்பற்றி பிறருடம் பேசும்போது strumpet என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவார் என்று அறிந்தேன். பின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் அந்தச் சொல்லைத்தான் என்னைக்குறிக்க பயன்படுத்தினர்

ஆனால் கிருஷ்ணமேனன் என்னைப்பற்றி அம்மை மகாராணி சேதுபார்வதி பாயிடம் சொன்னார் என்று அறிந்தேன். மகாராணி என்னை வாழ்த்தி ஒரு பேனாவை பரிசாக கொடுத்தனுப்பியிருந்தார். ஆகவே என்னை எவரும் புறக்கணிக்கவும் முடியவில்லை.

நான் அன்று மிச்செல் துரையின் அறையில் இருந்து வெளியே வந்தபோது மகாலிங்கையர் மயங்கி விழுந்துவிட்டதை அறிந்தேன். அவர் அதன்பின் என் வழியில் குறுக்கே வரவில்லை . அதேசமயம் எந்த ஆசிரியரும் எனக்காக எதையும் சொல்லித்தரவில்லை. நான் வகுப்பில் ஓர் ஓரமாக அமர அனுமதிக்கப்பட்டேன். மிகத்தனிமையாக ஒரு டெஸ்கின்பின் நானும் கேசினியும் அமர்ந்திருப்போம். அவள் மட்டுமே என் தோழி. மாணவர்கள் எவரும் என் அருகே வரமாட்டார்கள்.

மகாராஜா கல்லூரியில் நான் மட்டுமே பெண். ஆசிரியையோ மாணவியோ வேறு எவருமில்லை. அப்போது மேரி புன்னன் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் தன் தந்தையின் காரில் வகுப்புக்கு வந்துவிட்டு அப்படியே போய்விடுவார். நான் கரமனையில் இருந்து சைக்கிளில் வருவேன்.

அந்த சைக்கிளை திருவனந்தபுரம் கொண்டு வந்திருந்தேன். கரமனை முதல் பேட்டை வரை நான் சைக்கிளில் செல்வதை மக்கள் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். எனக்கு பின்னால் கூச்சலிடுவார்கள். என்னை வேசி என்றுதான் திட்டுவார்கள். உண்மையிலேயே நான் அரசகுடும்பத்தைச் சேர்ந்த எவருடையவோ வைப்பாட்டி என்று நினைத்தார்கள். இல்லாவிட்டால் இத்தனை தைரியம் எப்படி வரும்? நான் அதை ஒரு நல்வாய்ப்பாகவே நினைத்தேன். எவரும் என் எதிரே வந்து பேசமாட்டார்கள். என் கண்களை எதிர்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் நான் செல்லும் வழியில் முள்ளையும் ஆணியையும் கொண்டுவந்து போட்டிருப்பார்கள். அவற்றை கேசினி தொலைவிலேயே பார்த்துவிடுவாள். ஒருமுறை ஒரு காளைமாட்டை வாலைப்பிடித்து முறுக்கி என் முன்னால் துரத்தி விட்டார்கள். கேசினி அதை ஓங்கி ஓர் அடி அடித்து திரும்ப ஓடவிட்டாள். அது அதை துரத்திவிட்டவர்கள் மேல் பாய்ந்து இருவரை தூக்கி வீசியது.

நான் பி.ஏயில் சென்னை பல்கலைக்கழகத்தில் நாலாமிடம் பெற்று வென்றேன். அன்று பிஏ பட்டம் என்பது முதல் முயற்சியில் வெல்வதே அரிதானது. அந்த பட்டம் வழங்கும் விழாவில்தான் மிச்செல் துரையை மீண்டும் பார்த்தேன். “உன்னை ஒரு டெவில் என்று சொன்னார்கள்…” என்றார்.

“ஆமாம் சார், நான் டெவில்தான். அப்படித்தான் டதி அம்மா என்னை அழைப்பார்” என்றேன்.

“ஆல்த பெஸ்ட் மை க்யூட் டெவில்!” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினார்.

என் போராட்டம் ஒருநாளும் ஓய்ந்ததில்லை என்றார் அம்மிணி தங்கச்சி. எனக்கு பட்டம் தருவதற்கு மெட்ராஸ் பல்கலைக்கழகம் இழுத்தடித்தது. அதற்கு கவர்னர் வரை சென்று மனு கொடுத்து போராடினேன். பட்டம் பெற்றபின் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேயும் எனக்கு இடம் மறுக்கப்பட்டது. நான் எனக்கு முன் பி.ஆனந்தபாய்க்கு இடம் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மெட்ராஸ் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து அதில் வென்று அடுத்த ஆண்டு இடம் வாங்கினேன்.

சட்டப்படிப்புக்கு ஏன் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை தெரியுமா? வக்கீலாகவோ நீதிபதியாகவோ பிரிட்டிஷ் மரபிலேயே பெண்களை உருவகம் செய்திருக்கவில்லை. பெண் வக்கீல்களுக்குரிய ஆடையே வடிவமைக்கப்படவில்லை. பெண் நீதிபதி எப்படி விக் வைக்கமுடியும் என்று கேட்டார்கள். எப்படி இருக்கிறது?

அந்த நாள் நினைவிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜேம்ச் வில்கின்ஸனின் முன்னால் விசாரணை. ஆர்.எல்.சீதாரமையா சொன்னார், “சரி இவர் வக்கீலாக ஆனால் என்ன ஆடை அணிவார்? நீதிபதியாக ஆனால் எந்த விக்கை அணிவார்?”

“விக்கை நானே தயாரித்துக்கொள்கிறேன்” என்று நீதிமன்றத்தில் சொன்னேன். “வேண்டுமென்றால் மற்றவர்களுக்கும் அந்த விக்கை செய்து தருகிறேன். நான் தலைமுடியை குட்டையாக வெட்டிவிட்டேன். அந்த மயிர் இருக்கிறது. எதிர்க்கட்சி வக்கீல் விரும்பினால் தருகிறேன்.”

“மிலாட்! கட்சிக்காரர் அத்துமீறி பேசுகிறார்” என்று கூச்சலிட்டார் சீதாராமையா. அவர் என்னை பயமுறுத்துவதுபோல கைநீட்டி என்னை நோக்கி வர கேசினி அவரை முறைத்துப் பார்த்தபடி முன்னால் சென்றாள்.

அவர் பதறி உடல் வியர்த்து அப்படியே அமர்ந்துவிட்டார். அதன்பின் அவர் வாதிடவில்லை.அவரால் எழவே முடியவில்லை. நீதிபதி நான் சட்டம்படிக்க அனுமதி அளித்தார்.

சட்டப்படிப்பில் பட்டம் பெற்றேன். திருவிதாங்கூர் பார் கௌன்சிலில் என்னை சேர்க்க மறுத்தார்கள். அதற்கும் சட்டப்போராட்டம். போராடி வென்று வக்கீல் ஆனேன். அப்போது எனக்கு வயது முப்பத்திநான்கு. அதன்பிறகுதான் திருமணம் செய்துகொண்டேன். கொண்டம்பள்ளி சிவதாச மேனோன் என்னும் வக்கீல். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு வளர்ந்த குழந்தைகளும் இருந்தன. அவர் மனைவி காசநோயில் இறந்திருந்தார்.

திரு கொண்டம்பள்ளி சிவதாசன் அமைதியானவர். என் குணத்திற்கு மிகப்பொருத்தமானவர். முதலிரவில் நான் அவரிடம் கேசினியைப் பற்றிச் சொன்னபோது ஆச்சரியமே படவில்லை. சும்மா என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.

கேசினி என்னுடன் எப்போதும் இருப்பதை அவர் அறிந்திருந்தார். ஒரே ஒருமுறை அவருடைய முதல் மனைவியின் மகள் மாதவிக்கு ஒரு பிரச்சினை வந்தது. என்னிடம் “நான் உன்னிடம் அவளை ஒப்படைத்துவிட்டேன். உன்னுடன் இருக்கும் கேசினிதான் என் மகளுக்கும் காவல்” என்று அவர் சொன்னார். கேசினிதான் மாதவியை அந்தச் சிக்கலில் இருந்து காப்பாற்றினாள். அது வேறு கதை

நான் அதன்பின் நீதிபதி ஆனேன். நீதிபதி வாழ்க்கையிலும் ஒவ்வொருநாளும் போராட்டமே. ஓய்வுபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் கேரளத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எஸ்.ராகவ குறுப்பை ஒர் ஊழல் வழக்கில் தண்டித்தேன். மத்திய அரசில் மிகச் செல்வாக்கானவர். சாதித்தலைவர். ஏற்றுமதித்தொழிலில் பெரிய செல்வந்தர். கள்ளக்கடத்தல் செய்துவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரிய கிரிமினல் பின்னணி உண்டு.

அவருடைய ஆட்கள் என்னை நேரில் வந்து மிரட்டினார்கள். கடைசியாக அவரே என்னை என் வீட்டுக்கு வந்து மிரட்டினார். “உன் வீட்டில் மூன்றுபேரும் பெண்குழந்தைகள்… பார்த்து நடந்துகொள்” என்றார்.

நான் பேசுவதற்குள் கேசினி அவரிடம் பேசினாள். அவள் ஒன்றுமே சொல்லவில்லை. முன்னால் ஓர் அடிவைத்து “என்ன?” என்றாள். அவ்வளவுதான், அவர் பிணம்போல வெளுத்துவிட்டார். என் வீட்டிலிருந்து வெளியே போகும்போதே நடக்கமுடியாமல் தளர்ந்து விழுந்துவிட்டார். பதவி போயிற்று. பக்கவாதம் வந்து படுத்தவர் எழவேயில்லை.

என் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளுக்கும் கேசினிதான் காரணம். அவள் என் தோழியாக இல்லாவிட்டால் நான் எதையுமே அடைந்திருக்க முடியாது. எனக்கு முன்னால் மாபெரும் கோட்டைகள் கட்டி எழுப்பி என் வழியை அடைத்தனர். கேசினி அவற்றை உடைத்து என்னை கொண்டு சென்றாள். அவளுடய உள்ளங்கையில் அமர்ந்து நான் பயணம் செய்தேன். இன்று என்னைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள். ஆனால் கேசினியைப் பற்றி எழுதவேண்டும். அதற்காகத்தான் சொல்கிறேன்.

நான் ஓய்வுபெற்ற பிறகு வனிதா கமிஷன் தலைவராக இருந்தேன். மக்கள் சட்ட உதவி மையம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்தேன். வயதாகி முழுமையாக ஒதுங்கிக் கொண்டபின் அவள் கொஞ்சம் விலகிச் சென்றுவிட்டாள். இப்போது அவள் என் கூடவே இல்லை, ஆனால் அடிக்கடி அவள் வந்து என் அருகே நிற்பதுண்டு.

நான் இன்னும் சிலநாட்களில் இங்கிருந்து சென்றுவிடுவேன். அவள் இங்கே காலகாலமாக இருப்பாள். லக்ஷ்மி, நீ போய் திருநயினார்க்குறிச்சியில் அவளை பார்க்கவேண்டும். ஒரு நெய்த்திரி ஏற்றி அவள் சன்னிதியில் வைக்கவேண்டும்” என்றாள் அம்மிணித்தங்கச்சி “அவள்தான் நமக்கெல்லாம் காவல், நமக்கு உண்மையான தோழி

“கண்டிப்பாக” என்றேன்.

அவள் மிக மிக அழகானவள். நீ அவளைப் பார்த்தால் செல்லக்குட்டி என்று கூப்பிட்டு நெஞ்சோடணைத்துக் கொஞ்சுவாய். எனக்கு வயதாகிவிட்டது. அவள் அப்படியேதான் இருக்கிறாள். அவள் மாறாமல் இளமையுடன் இருந்ததனால் நானும் மனசுக்குள் இளமையாகவே இருந்தேன். எனக்கு வயதாகிவிட்டது என்று தோன்றியதும் அவள் மறையத் தொடங்கினாள்.

நான் எப்போதும் பயந்துகொண்டிருந்தது அவளுடைய கோபத்தைத்தான். அவள் என்னைவிட்டு விலகிவிடக்கூடாதே என்றுதான். ஆகவே அவளை கோபப்படுத்தும் எதையும் நான் செய்யவில்லை. நேர்மை தவறி ஏதாவது செய்தால், கருணையில்லாமல் நடந்துகொண்டால் அவள் எப்படி மாறுவாள் என எனக்கு தெரியும்.

எத்தனை எத்தனை இடங்களில் அவள் சீறியிருக்கிறாள். “சட்டக்கல்லூரியில் பெண்களுக்கு இடம் தந்தால் நாளை பசுமாடுகளும் நாய்களும் வந்து இடம்கேட்கும்” என்று சொன்ன கே.நாராயண ரெட்டி என்ற பேராசிரியர் அவளைக் கண்டு இருக்கையிலேயே சிறுநீர் கழித்ததை நான் கண்டேன்.

“அவளை ஏன் அத்தனைபேரும் அந்த அளவுக்கு அஞ்சினார்கள்?” என்று நான் கேட்டேன்.

“அவளுக்கு கொடூரமான ஒரு முகம் உண்டு… நான் அதை பார்த்திருக்கிறேன்” என்றார் தங்கச்சி.

அவள் யார் என எனக்கு தொடக்கம் முதலே தெரியும். அவள் தோன்றிய முதல்நாளிலேயே அவளுடைய அந்த கொடூர தோற்றத்தை நான் கண்டேன். சரஸ்வதி பூஜை நடந்த அன்று. இரவில் அவள் என் அருகில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். நான் “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டேன். அவள் என்னிடம் பேசாமல் சென்றுகொண்டே இருந்தாள்.

செல்லச்செல்ல அவள் கூந்தல் நீண்டு நீண்டு பறந்தது. அவள் இடைநாழி வழியாகச் சென்றபோது தொழுவில் பசுக்கள் பயந்து கூச்சலிட்டன. என் மூத்தமாமா நாகத்தான் நாயரின் அறையை அடைந்தாள். அவர் அறைக்குமுன் காவலன் சிண்டன் வாளுடன் அமர்ந்திருந்தான். அவள் அருகே சென்றதும் அவன் தூங்கி சுவரில் சாய்ந்தான். அவள் உள்ளே சென்றாள். நான் தொடர்ந்து சென்றேன்.

அவள் நாகத்தான் நாயரைப் பார்த்ததும் ஓர் உறுமலுடன் இரு கைகளையும் விரித்தாள். கையில் நகங்கள் சிறிய கத்திகள் போல எழுந்தன. அவள் பெருகிப்பெருகி எழுந்தாள். அறையின் கூரை முட்டும்படி தலை உயர்ந்தது.

அவள் பாய்ந்து அவர் நெஞ்சின்மேல் ஏறி அமர்ந்து அவர் வாயை தன் வலக்காலால் அழுத்தி மூடிக்கொண்டாள். இடக்காலால் அவருடைய ஆண்குறிக்குமேல் அடிவயிற்றை மிதித்தாள். வலக்கையின் இரு விரல்களால் அவருடைய கழுத்தின் பள்ளங்களை அழுத்தினாள். இடக்கையின் இருவிரல்களால் அவர் கண்களை குத்தி இறக்கினாள்.

அவள் விரல்கள் அவர் கழுத்தை நெரித்து தசைக்குள் அழுந்தி இறங்குவதைக் கண்டேன். அவருடைய உடல் துள்ளி துள்ளி அதிர்ந்தது. கால்கள் வலிப்பு கொண்டன. கைகள் காற்றில் அலைக்கழிந்தன. பிறகு கைகள் உயிரற்று விரிந்தன. விரல்கள் நிமிர்ந்து அசைவிழந்தன. கண்கள் இரு குமிழ்களாக முகத்தின் துளைகளுக்குள் இருது பிதுங்கி வெளிவந்து பக்கவாட்டில் நரம்பில் தொங்கி கிடந்தன

அவள் எழுந்து திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

“அவளுடைய அந்தப் புன்னகையை கண்டு நான் கைகூப்பினேன்” என்றார் தங்கச்சி. “நான் அதன்பின் அந்த கொடூரச் சிரிப்பை பார்த்ததே இல்லை. இனிய அழகிய சிறுபெண்ணாகவே அவளை கண்டிருக்கிறேன். ஆனால் என் நினைவில் அவளுடைய அந்த முகம் எப்போதும் இருந்தது.”

நான் பெருமூச்சு விட்டேன். என் உடல் வியர்த்து பின் குளிரத்தொடங்கியது.

“நீ திருநயினார்க்குறிச்சிக்கு போ….” என்று அம்மிணி தங்கச்சி சொன்னார் “அங்கே கேசினியின் சிறிய கோயில் இருக்கிறது. அங்கே அவளைச்சூழ்ந்து தரையிலிருக்கும் மணற்பரப்பில் உள்ள ஒவ்வொரு மணலும் ஒரு நாகத்தான் நாயர், அவள் காலமில்லாதவள்.”

“ஆம்” என்று நான் சொன்னேன்.

அம்மிணி தங்கச்சி கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டு களைப்புடன் அமர்ந்திருந்தார். “இது பதிவுசெய்கிறதா?” என்று டேப்பைச் சுட்டிக்காட்டி கேட்டார்.

“ஆமாம்” என்றேன்.

“கேசினி இருந்திருந்தால் அவள் குரலையும் பதிவு செய்திருக்கலாம்.”

“ஆமாம்.”

அவரிடமிருந்து மூச்சொலி எழுந்தது. நீண்டநேர உரையாடலால் களைத்திருந்தார். பல்லில்லாத வாயின் உதடுகள் மூன்றுமாதக் குழந்தையின் வாய்போல பிதுங்கி மூடியிருந்தன. மூக்கின் நிழல் வாய்மேல் விழுந்திருந்தது. இமைகள் சரிந்து மூட தலைசரிய தூங்கத் தொடங்கினார்.

ஆனந்தவல்லி டீச்சர் வந்து மிகமெல்ல “அப்படியே தூங்கிவிட்டார்களா?” என்றார்.

“ஆமாம்” என்றேன்.

“பிடி” என்றார் ஆனந்தவல்லி டீச்சர்.

நானும் அவரும் சேர்ந்து அம்மிணி தங்கச்சியை மெல்ல தூக்கி கொண்டு சென்று அவருடைய கட்டிலில் படுக்க வைத்தோம். சிறிய உடல் வளைந்து கருக்குழவிபோல தோன்றியது. மீண்டும் கருவில் புகுந்துகொள்ளவிருப்பது போல.

“நான் கிளம்புகிறேன்” என்றேன்.

“இன்றைக்கு என்ன, ஓரளவு செய்தி கிடைத்ததா?”

“நிறைய” என்று புன்னகைத்தேன்.

***

முந்தைய கட்டுரைகைமுக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை