பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பத்துலட்சம் காலடிகள் தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட அபாரமான கதைகளில் ஒன்று. ஒருபக்கம் ஒரு முழுப் பண்பாட்டையே அதன் வரலாறு, மனநிலைகள், அதன் பிரச்சினைகள் அனைத்துடனும் அறிமுகம் செய்கிறது. இன்னொரு பக்கம் தனிமனித துயரத்தின் வழியாகச் செல்கிறது. தனிமனிதன் தன் சாதாரண உணர்ச்சிகளைக் கடந்து மேலே எழும் அபாரமான உச்சத்தைப் பற்றிச் சொல்கிறது. நீங்கள் கதையில் சொல்வதுபோல அப்துல்லா அவர்கள் ஷாஜகான் மாதிரித்தான் தெரிகிறார். மகத்தான கதாபாத்திரம்.

இந்தக்கதையில் நான் கவனித்தது ஔசேப்பச்சன். அவர் ஒரு காவல் அதிகாரி. காவலதிகாரிகளுக்கு உரிய அலட்சியம், கொஞ்சம் பொறுக்கித்தனம் அவரிடம் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பொதுவாகவே சினிக் ஆக வெளிப்படுகிறார். தன் சாதியையும் பிறசாதியையும் நையாண்டி செய்துகொண்டே இருக்கிறார். அவருக்கு ரொமாண்டிக் உணர்வுகள் ஏதுமில்லை. குடி, தீனி, பெண்கள். மாரல் வேல்யூஸும் இல்லை. எதிக்ஸும் பெரிசாக இருப்பதுபோல தெரியவில்லை. அப்பாவிகளை அடிப்பதெல்லாம் சாதாரணமாக அவரால் செய்யப்படுகிறது. ஆனால் அதை மீறி அவர் ஒருசில இடங்களில் மூவ் ஆகிறார். அந்த இடங்கள்தான் கதையின் உச்சங்களாக உள்ளன.

பொதுவாக இந்த மாதிரி கதைகளில் துப்பறிபவர், கதைசொல்பவர் அப்பழுக்கற்ற நல்லவராக காட்டப்படுவார். ஔசேப்பச்சன் அப்படி இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை சரித்திரத்திலும் சமகால வாழ்க்கையிலும் ஊடுருவும் ஒரு குடிகார பொறுக்கியின் பார்வை என்று சொல்லலாம். ஆனால் அவருக்கே மிகப்பெரியதாகத் தெரியும் மானுட உண்மைகள் கதையில் வெளிப்படுகின்றன

மகாதேவன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

இந்தக்கதை ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவம்கடந்து போன காலத்தின் சாட்சியாக நிற்பது

இந்தக் கதையின் வழி வாசகன் தன் பழைய காலங்களை பழைய தர்மங்களை மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்யலாம் கண்டராதித்தன் எழுதியது போல சற்று பின்னகர்ந்து முன்னகரலாம்

முப்பது வருடங்களுக்கு முன் வந்த படமான தாசரதம் படத்தை அண்மையில் தான் கண்டேன்சில அரிய விஷயங்கள் பழைய கணக்குகள் நோக்கி செல்ல அறிந்தவர்க்கே புலப்படும்தங்கள் கதையும் அவ்வகையே

மிக அன்புடன்
மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

நலம் தானே.

நான் இன்றுதான்பத்துலட்சம் காலடிகள்சிறுகதை வாசித்தேன். யோசித்து படி நின்று கொண்டிருக்கிறேன்.

மனதின் பரிமாணங்களுக்கு நீரின் இயல்பை அணுகுமுறையாக.. பல எண்ணங்கள் மிதக்கின்றன. சில மெதுவாக மூழ்குகின்றன.. சில உடனே மூழ்குகின்றன.துப்பறியும் கதைகளில் கொலையாளி யார் எனத் தேடுவது, Cain and Abel தொன்மம் சார்ந்தது என்று எனக்குத் தோன்றும்.

ஆனால் பொதுச் சமூகத்தில், மனித உயிர் இறந்தது எவ்வாறு என்கிற தேடல் மானுடம் தவிர்க்க இயலாதது.குடும்பங்கள் அதை உள்வாங்கிக் கொள்வதும், நவீன சமூகம் அதனை உள் வாங்கிக் கொள்வதும்.. ஒரு நிறமாலை.

உண்மை நிகழ்வுகளில் புனைவு கொண்டு புதிய காட்சி அமைப்புகளை (visualisation?) கொண்டு எதனையோ ஆழத்திலிருந்து ஆயிரமாயிரம் துணுக்குகள் கொண்டு மீட்டெடுத்து போல ஒரு உணர்வு..

சிறப்பான சிறுகதை. வாழ்த்துக்கள்

அன்புடன்

முரளி

***

அன்புள்ள ஜெ.

தங்களுடைய பத்துலட்சம் காலடிகள் கதை வாசித்தேன். மிக அருமையாக இருந்தது. இது இந்தக் காலங்களை ஆசுவாசம் கொள்ளவைக்கும் படைப்பூக்கம் போல தோன்றுகிறது.

https://suyaanthan.blogspot.com/2020/04/blog-post_19.html?m=1

சுயாந்தன்

***

முந்தைய கட்டுரைசூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவனவாசம் [சிறுகதை]