ஒரு விமர்சனம்

ஒரு நண்பர் சேட்டில் வந்தார். சுபைர் என்று இருந்தது. முழுத்தகவல் இல்லை. இளைஞர் என நினைக்கிறேன். நலம் விசாரணைகளுக்குப் பின்னர் விவாதம். நான்குமுறையாக விட்டுவிட்டு இரவு ஒருமணி வரை.

அவரது கேள்வி ‘இஸ்லாமிய எழுத்தாளர்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்’ என்று சொல்கிறார்களே?’

யார்?

நிறையப் பேர்

பெயரைச் சொல்லுங்கள்

இப்போது ஆபிதீன் சொல்கிறார்.

அவர் சொல்லவில்லை

அவரது தளத்திலே பார்த்தேன்,வேறொருத்தர் சொன்னார்

சரி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏன்?

நீங்கள் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் பெயரைக்கூடச் சொல்லவில்லை

எந்த எழுத்தாளர் விடுபட்டிருக்கிறார்?

தெரியாது. நீங்கள் சொல்லியிருந்தால்தான் எனக்கெல்லாம் தெரியும்.

அப்படியானால் நான் சொல்வதை நம்பவேண்டும். என் தேர்வில் அந்தப் பட்டியலில் இடம்பெறுமளவுக்கு எவரும் இல்லை. ஏனென்றால் அப்போது இஸ்லாமியர் எவரும் தீவிரமாக எழுதவில்லை.

நீங்கள் யாரைப்பற்றியுமே எழுதவில்லையே

முதல்நாவல்களில் ஒன்றை எழுதிய சித்திலெப்பை மரைக்காயரைப் பற்றி எழுதியிருக்கிறேன்

அவர் பழைய ஆள்

சரி, பிறகு எழுதிய பலரைப்பற்றி எழுதியிருக்கிறேனே

பலரைப்பற்றி எழுதவில்லை…

யாரைப்பற்றி எழுதவேண்டும்?

தோப்பில் முகமது மீரானைப்பற்றி நீங்கள் எழுதவில்லை

தோப்பில் அண்ணாச்சி எழுதி, நான் விமர்சனம் எழுதாத ஏதாவது புத்தகம் இருக்கிறதா? உங்களுக்குத் தெரியுமா?

எதிர்மறையாக எழுதியிருப்பீர்கள். அவரை வசைபாடியிருப்பீர்கள்.

வாசித்துப்பார்க்கலாமே. என் ஞாபகத்தில் ஒரே ஒரு நாவலைப்பற்றி மட்டும்தான் எதிர்மறையாகச் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். மற்றவை எல்லாம் முக்கியமான நாவல்கள் என்றுதான் எழுதினேன். சொல்லப்போனால் எழுதி எழுதி அவரை தமிழில் நிலைநாட்டியவர்களில் நானும் ஒருவன். இந்தியாவின் எந்த இலக்கியமேடையிலும் ஒருமுறைகூட அவரும் என்னைப்பற்றி ஒரு வரியேனும் சொல்லாமல் விட்டதில்லை.

அவர் உங்கள் சொந்த ஊர்க்காரர்.. அதுதான் காரணம்…

சரி, மனுஷ்யபுத்திரன். இருபது வருடங்களாக அவரைப்பற்றி எழுதி வருகிறேன். அவர் என் அபிமான கவிஞர். சிறுவயது முதல். எப்படியும் பத்து பெரிய கட்டுரை எழுதியிருப்பேன்…

அவர் உங்கள் நண்பராக இருந்தார்..

சரி, நான் அபி பற்றி எழுதியிருக்கிறேனே. தமிழில் நான் மூன்றே மூன்று கவிஞர்களைத்தான் அவருடன் ஒப்பிடுகிறேன். பிரமிள், தேவதேவன். சு.வில்வரத்தினம். ஆனால் எனக்கு அபி பழக்கமே இல்லை.

விமர்சனமாக எழுத வேண்டும். பெயரைச் சொன்னால் போதாது

மிகப்பெரியவிமர்சனம். குட்டி நூலாகவே வரலாம். உள்ளுணர்வின் தடத்தில் என்ற நூலில் அந்த கட்டுரை உள்ளது

அவர் முஸ்லீமா?

ஆம். அபிபுல்லா என்று பெயர்

அவர் முஸ்லீம் என்றே தெரியாது

அதை அவரிடம் கேட்கவேண்டும்

அவர் ஒளிந்துகொண்டு எழுதுகிறார். இந்துப்பெண் போல பெயர் வைத்து எழுதுகிறார்.

இல்லை. எல்லா நூலிலும் அவரது முழுப்பெயர் உள்ளது…

நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை

அதற்கு அவர் என்ன செய்வார்?

நீங்கள் வேறுமொழி எழுத்தாளர்களில் இஸ்லாமிய எழுத்தாளர்களை மட்டும் நிராகரிக்கிறீர்கள்

உதாரணமாக?

சதத் ஹுசைய்ன் மன்றோ

நிராகரிக்கவில்லை. ஆனால் கொண்டாடவுமில்லை. சரி.நான் இந்திய இலக்கிய மேதைகளின் வரிசையிலே குர்அதுலைன் காதரையும் வைக்கம் முகமது பஷீரையும் முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் தமிழில் நான் மட்டும்தான் அவர்களைப்பற்றி மிக விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். புனத்தில் குஞ்ஞப்துல்லா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்

ஆனால் நீங்கள் மன்றோவை நிராகரிக்கிறீர்களே

ஒரு முஸ்லீம் எழுத்தாளரைக்கூட நிராகரிக்கக்கூடாதா? மேலும் அவரது கதைகளை நான் நிராகரிப்பதற்கான காரணம் அவை உரத்த குரலில் அதிர்ச்சியூட்டும்படி உள்ளன என்பதனால்தான்

நீங்கள் இளம் இஸ்லாமிய எழுத்தாளர்களை அங்கீகரிப்பதில்லை

நான் பார்த்த நல்ல எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். மீரான் மைதீன், கீரனூர் ஜாகீர் ராஜா…

அவர்கள் இஸ்லாமுக்கு எதிரானவர்கள். இஸ்லாமை விமர்சனம் செய்பவர்கள்.

அப்படியானால் யாரைப் பாராட்டவேண்டும்?

நிறையபேர் இருக்கிறார்கள்

பெயரைச் சொல்லுங்கள்

நிறையபேர்

மொத்தமே நாலைந்துபேர்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்…எல்லாரையும் சொல்லவேண்டுமா?

நிறையபேர் இருக்கிறார்கள்

பெயரைச் சொல்லுங்கள்

நிறையபேர்

நான் சொல்கிறேன். தமிழில் சிறுபான்மை இலக்கியம் என்றபேரில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஓர் இஸ்லாமிய இதழ் கேட்டுக்கொண்டதனால் எழுதியது. அதில்  இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த இலக்கியக் கொடையையும் சுருக்கி எழுதியிருக்கிறேன்.

அது ஒரு கட்டுரைதானே?

சரி வேறென்ன செய்யவேண்டும்?

இஸ்லாமுக்காக எழுதுபவர்களைச் சொல்லவில்லையே

சமரசத்தில் எழுதுவாரே தாழை மதியவன் ? அவரைப்பற்றியா?

அவர் நல்ல எழுத்தாளர்.

அப்புறம் ஆளூர் ஜலால்?

அவரும் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்

நான் எழுதுவது இலக்கிய விமர்சனம். உங்கள் மதப்பிரச்சாரகர்களை நான் ஏன் பாராட்டவேண்டும்? அதுவும் மதவெறியைப் பரப்புபவர்களை? எனக்குச் சில அளவுகோல்கள் உள்ளன. அவற்றை வெளிப்படையாக வைத்துத்தான் நான் விமர்சனம் எழுதுகிறேன். அவற்றுக்குள் வரும் எந்த எழுத்தாளரை விட்டிருக்கிறேன்?

நிறையபேர். இஸ்லாமிய இதழ்களில் எழுதுகிறார்கள்.

அதேபோல எத்தனையோ பெந்தேகோஸ்தே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்…இந்து மதச் சனாதன எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நான் பொருட்படுத்தி எழுதுவதில்லை. இலக்கியம் என்பது வேறு… நீங்கள் நான் எழுதுவதை படியுங்கள்

நீங்கள் ஆபிதீன் பற்றி எழுதியதில்லை

எழுதியிருக்கிறேன்

வாசித்ததில்லை

அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

நீங்கள் நிறைய பேரை விட்டுவிட்டீர்கள்

இந்து எழுத்தாளர்களிலும் நூற்றுக்கணக்கான பேரை விட்டுவிட்டு சிலரை மட்டுமே சொல்லியிருக்கிறேன்

நீங்கள் ஒரு நல்ல வக்கீல்

நன்றி சுபைர். உங்களுக்கு என்னதான் பிரச்சினை?

உங்கள் இஸ்லாமிய வெறுப்புதான். நீங்கள் இஸ்லாமியர்களை அங்கீகரிப்பதே இல்லை. அதை நீங்கள் வாதாடி நிரூபிக்கமுடியாது

மீண்டும் கேட்கிறேன், சுபைர் உங்களுக்கு என்னதான் பிரச்சினை?

நீங்கள் இந்துத்துவா எழுத்தாளர்களை மட்டும்தான் பாராட்டுகிறீர்கள்…

சுபைர், உங்கள் பிரச்சினை என்ன?

 

*

 

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்Mar 5, 2011 ]

முந்தைய கட்டுரைமனு, கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு, குழந்தைகளுக்காக