வான்நெசவு [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த காதல் கதை வான் கீழ். குமரேசனை ராஜம்மையை மறக்கவே முடியாது. தினம் ஒரு கதையென வந்துகொண்டிருக்கும் உங்களின் கதைகளின் வழியே பல்வேறு பணிச்சூழல்களை அறிந்துகொண்டிருக்கிறோம். குமரேசனை, ஞானத்தை, ராஜம்மையை ஏசையாவை, முருகனை, நெல்சனை என்று இதுவரையிலும் அதிகம் கவனித்தே இருக்காத பலரை நெருக்கமாக அறிந்துகொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் எதோவொரு பயணத்தின் போதோ அல்லது சாலையைக்கடக்கையிலேயோ ஒரு கணம் பார்த்து பின்னர் முற்றிலுமாக மறக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்வின் இயங்கியலின் துயர்களை, சிக்கல்களை, உறவுப்பிணைப்புக்களை காதல் உட்பட பல கொந்தளிப்புகளை இப்போது அணுக்கமாக அறிந்துகொள்ள முடிகின்றது. 27 வயதிலெயே நான் கல்லூரிப்பணிக்கு வந்துவிட்டேன். இத்தனை வருடங்களில் வேறு ஒரு பணிச்சூழலில் நான் இருந்ததே இல்லை. வீடு கல்லூரி, மகன்களின் பள்ளி இவற்றைத்தவிர வேறெந்த உலகையும் அறியாதவள். இப்போது இக்கதைகள் வாயிலாக பல பணியிடங்களுடன் எனக்கு நெருக்கமான தொடர்பிருப்பது போல் உணர்கிறேன்
குமரேசன் ராஜம்மை காதல் அற்புதம் அங்கே பெரும்பாலும் அத்தனை பேரும் பீடி குடிததாலும் குமரேசன் பீடி குடிப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை ராஜம்மை உணர்த்துகையில் ஒரு எண்ணை அங்கே அவள் எழுதிவிட்டு செல்கிறாள். தினமும் அத்தனை பேருக்கும் டீ கொண்டு வரும் அவளுக்கு இவன் காகிதங்களை எரித்து பழையபாலில் டீ போட்டு தருகிறான். இவன் இரண்டாம் குழுஎண்ணை அங்கே எழுதுகிறான். சப்பிப்போன காலினால் விரைவாக வேலை செய்யமுடியாமல் வேலை நீக்கம் செய்யபட்ட அதே குமரேசன் ராஜம்மையின் அங்கீகாரத்தில், பிரியததில் அத்தனை உயரமுள்ள அந்த கோபுரத்தில் ஏறியே விடுகிறான். அதிகாரியின் காரைக்கூட கும்பிடும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தங்கம் அந்த உயரத்தில் உடைகள் படபடக்க, நல்ல குளிரில், துலங்கிக்கொண்டுவரும் பொழுதை, வானம் கண்ணாடிக்கிண்ணியை கவிழ்த்து வைத்தது போலிருப்பதை , காலுக்கு கீழே பறவைகள் பறப்பதை, அத்தனை பெரிய இடம் அவளைச்சுற்றியிருப்பதை அவளுக்கு காட்டிய குமரேசனின் மேல் காதல் கொள்வதும் அவனைக்கட்டிக்கொண்டு கசிந்து அழுவதுமாக பரவசமான கணம் அது வாசித்த எனக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு இடமுள்ளது. பிற ஒன்று அமையமுடியாத இடம். குமரேசனுக்கென்றே ராஜம்மையின் மனதில் ஓரிடமிருந்திருக்கிறது, அங்கே இஞ்சினீயருக்கோ வேறு யாருக்குமோ பொருந்தி அமைந்திருக்கவே முடியாது. அங்கே அந்த உயரத்துக்கு சென்றதும் இவர்களிருவரும் அப்படியே அமைந்துவிட்டார்கள். பிற அனைத்தையும் காலடியில் மிகச்சிறியதாக்கிவிட்டு அனைத்திற்கும் மேல் எழுந்துநிற்கும் காதலெனும் தெய்வம் அல்லவா அந்த உயரத்தில் அவர்களுக்காக காத்திருந்தது
ஏக வயதில் எல்லாம் சரியாக இருக்கும் இருவருக்கு இடையில் வரும் காதலை கல்லூரியில் பார்த்துக்கொண்டேயிருக்கும் எனக்கு ஊனமும் ஏழ்மையும் இருக்கும் இடத்தில் வரும் இக்காதல் மனதை நெகிழச்செய்துவிட்டது. வழக்கம் போல் இரண்டாவது முறையாக வாசிக்காமல் முதல் முறை வாசித்ததின் உணர்விலேயே மனம் இருக்கட்டுமென்று விட்டுவிட்டேன்
மிகசரியாக இக்கதை வெளிவந்த அன்றுதான் Me before you என்னும் திரைப்படத்தை பார்த்தேன். கழுத்துக்கு கீழ் உடல் செயல்படாத ஒரு இளைஞனுக்கும் அவனுக்கு சேவை செய்யவரும் ஒருத்திக்கும் இடையே மலரும் காதலைச்சொல்லும் படம் அது. குமரேசனைப்போலவே அவனும் அந்தபெண்ணை வேறு ஒரு உயரத்துக்கு கூட்டிச்செல்கிறான். நான் பார்த்த திரைப்படங்களிலேயே இதுதான் ஆகச்சிறந்த காதல் திரைப்படமென்று எனக்கு தோன்றியது
நன்றி
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
பெண்மை தொட்ட உள்ளம் பாறை போன்ற ஒருவனை இளக்கவும், சாமானியனை வலியவனாக்கவும் வல்லது. அது குமரேசனின் உடற் குறையையையும் சமாளித்து இது வரை செய்யத் துணியாத அபாய முயற்சியை எடுக்க வைக்கிறது. சக காதல் போட்டியாளர்களை மீறி அவனை வெல்லவும் வைக்கிறது. அதன் விவரணையையும், அதன் பரிசாக ராஜம்மாவின் காதல் வெளிப்படும் தருணத்தையும் வான் கீழ் கதையில் அருமையாக சித்தரித்துள்ளீர்கள்.
இதன் தொடர்ச்சிக் கதையான வான் நெசவு முதல் கதையின் நிகழ்வுகளின் மிக இயல்பான அருமையான அசை போடுதலாய் அமைந்திருப்பது இதம். அந்த முதல் காதல் தருணத்தை மீள் உருவாக்கம் செய்ய லிஃப்டில் அவர்களோடு நம் மனமும் பயணிக்கிறது.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
மதுரம் [சிறுகதை]
அன்புநிறை ஜெ,
குட்டியப்பாக்க அம்மைக்கு கண்ணு எதுக்கு என்கிற ஆசானும், லட்சுமி ஈணும்போது பதட்டமும், ஒரு புதிய உயிர் ஜனித்து விட்ட பேருணர்வில் தத்தளிப்புமாக கரடி நாயரும் வாழ்வின் மதுரத்தை அறிந்த மனிதர்கள்.
சூழ்திருவில் எருமைக்கு என்னவோ மனசு சங்கடம் எனப் பேசிக் கொள்வார்கள். அங்கிருந்து இப்படியொரு அதிமதுரமான கதை முளை விட்டதா? இன்னொரு இனிய கதை.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களது ‘COVIT 19 ‘ சிறப்பு சிறுகதைகள் அனைத்தையும் வெளிவரும் அன்றே படித்து கொண்டிருக்கிறேன். ‘மதுரம்’ சிறுகதையை பற்றி என் எண்ணங்களை எழுத நினைக்கும் போதே மனது விம்முகிறது . குழந்தைகள் தங்களுக்கு பிடித்த தின்பண்டத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, விரைவாக தீர்ந்து விடக்கூடாதே என்று சிறுது சிறிதாக எடுத்து ரசித்து உண்பது போல், உங்கள் கதைகளையும் ‘ஐயோ முடியப்போகிறதே’ என்று கவலையோடு தான் படிப்பேன்.
2. “எருமை அருமையாட்டு இருந்தது. நல்ல சிந்தி எருமை. பாலீஷு போட்ட போலீசு பூட்சு மாதிரி
3. “பாப்போம்” என்று ஆசான் எழுந்தார். “எனக்க பொன்னு சொடலமாடா காத்து நில்லுடே தாயோளி!” என்று பிரார்த்தனை புரிந்துவிட்டு “எங்கிணயாக்கும் சாதனம்?”என்றார்
4. ஆசான் எழுந்து தொழுவத்துக்குச் சென்றதும் கருப்பன் “வாருங்க, காட்டுதேன். நம்ம எடமாக்கும்” என்று வாலை நீட்டி ஆட்டியபடி முன்னால் சென்றது.
மேற்கண்டவாறெல்லாம் அசாத்தியமான நகைச்சுவை, உவமை
லட்சுமி (எருமை என்று எழுத மனம் வரவில்லை) தன் வலது பக்கம் முழுவதுமே தன் வாழ் நாளெல்லாம் அன்பால் நிறைத்துக்கொண்டாள்.கரடி நாயரின் கைகளை அன்போடு நக்குகிறாள், தலை சாய்த்து கொள்கிறாள். லட்சுமியை திட்டிக்கொண்டிருந்த கரடி நாயர், அவள் பிரசவிப்பதை நேரில் பார்க்க தொடங்கியபின் அவர் லட்சுமியாகவே மாறி விடுகிறார் (மிகமெல்ல “வே நான் தொட்டு பாக்கட்டா?”என்றார் அப்பா . “எனக்க செல்லத்தை ஒருதடவை தொட்டு பாத்துக்கிடுதேன் வே”)
இந்த கதை மனிதர்களின் அன்பை பற்றி மட்டும் பேசவில்லை, மொத்த உயிரினங்களையும் அன்பால் இணைக்கிறது.
என்ன மாதிரி மனுஷன்யா நீர்? எத்தனை நல்ல வாழ்க்கையை எங்களை வாழ வைக்கிறீர்கள். எத்தனை அற்புதமான மனிதர்களை உங்கள் மூலம் சந்திக்கிறோம். ரொம்ப நன்றி சார்.
பா. சரவணகுமார்
நாகர்கோயில்
***