வான்கீழ் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
வான்கீழ் கதை ஓர் அழகான காதல்கதை. சாமானியனின் காதல். காதல் ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. சாமானியனை ஆற்றல் கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. அந்த மாபெரும் கோபுரம் இந்தச் சமூகம்தான். அது கதையிலேயே குறிப்புணர்த்தப்படுகிறது – டி.இ அறை அங்கே இருக்கிறது. அதைவிட மேலாக எழுந்து நிற்கிறது கோபுரம். அதில் ஒவ்வொருவரும் சரியாக ஓர் இடத்தில்தான் பொருந்த முடியும்.
அதில் உடல் ஊனமுற்ற கதாநாயகனால் ஏறமுடியாது. ஏறலாம் என அவன் நினைத்ததே அவளால்தான். அவன் அவளை மேலே கொண்டு செல்லவில்லை, அவள்தான் அவனை மேலே கொண்டு செல்கிறாள். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தூண்டிக் கொள்கிறார்கள். அவன் மேலே செல்வது அவளுக்காக. ஆனால் மேலே செல்வதனால் மீட்சி அடைவது அவன். இப்படித்தான் நல்ல காதல் நிகழ முடியும்.
அவர்கள் ஏறி ஏறிச்சென்று வானத்தின் கீழே நிற்கும் காட்சி பெரிய மன எழுச்சியை அளித்தது. துல்லியமான கதை. ஒரு சொல் மிகையில்லாமல் கூர்மையாக எழுதப்பட்டது. எல்லா சொற்களுமே அர்த்தமுள்ளவையாக, எங்கெங்கோ கொண்டு செல்பவையாக இருந்தது
மகேஷ்
***
அன்புள்ள ஜெ,
அவள் பறவை. சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி. சிறகு விரித்துப்பறக்க அவளை அழைத்துச் செல்பவன், நேராக நடக்க இயலாமல் கோணலாக நடப்பதால் டிஸ்கோ என்று விளிக்கப்படும் காலாரோக்கியக்குறைவு உடையவன். என்ன ஒரு அழகிய முரண்பாடு.
மற்றவர்கள் எல்லாம் ஏக்கர் நிலமும், நல்ல வேலையும் அமைந்து மண்ணில் இறுக்கமாக பரவியவர்கள். அவளுக்கு அவர்கள் மேலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை. வான் நோக்கி நீட்டியிருக்கும் அந்த ஏணியில் ஏறி ஏறி இறங்கியிருந்தாலும் அவர்கள் கண்ணாடிக் கிண்ணியாய் தலைமீது கவிழ்ந்திருக்கும் வானத்தைப் பார்த்திருக்கவில்லை. அவள் சிறகுவிரித்து வானை அளக்க அவர்களால் உதவ முடியாது. அவளோ இரும்புமாடன்மீது ஏறி பின்னும் அங்கிருந்து சொர்க்கத்திற்கும் போகமுடியுமா என்று யோசிப்பவள்.
மற்றவர்களுக்கு அவள் எருமைக்கண்ணு மாதிரிதான் தெரிகிறாள். ‘மண்ணில பொரளுத குட்டி’-யாக. அப்படித்தானே நினைக்கமுடியும், மண்ணில் காலூன்றி நிற்பவர்களுக்கு. எருமைக்க மடியும், காம்பும், கொம்பும் உடம்பும் கருமையாக இருப்பதுமட்டும்தான் தெரிகிறது. கண்டுபிடிப்பது அதனாலேயே கடினமாக இருக்கிறது.
ஆனால் அவளிடம் இருக்கும் வெள்ளை டிஸ்கோவின் கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. அவள் எருமை அல்ல, சிட்டுக்குருவி என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இரும்புமாடன் அருளால், அந்த மாடன் உடம்பில் அங்கங்கே இளைப்பாறி, அந்த சிட்டுக்குருவியை வான்நோக்கி அழைத்துச்செல்ல முடிகிறது.
யானை பிளிறியதுபோல சங்கு முழங்கியதும் அவள் எழுந்தருளுவது உச்ச தருணம் என்று எனக்குப்படுகிறது. அதிகாலையில் அடுப்பேற்றினால் அம்மா விழித்துக் கொள்வாள் என்று பயந்தவள் காகிதத்தை எரித்து, தான் குடிக்காமல் இவனுக்கென டீ போட்டுக் கொண்டுவரும் கரிசனம். விருந்தின் நெய்துளி போல ‘நீ எதுக்கு பீடி பிடிக்கே, நாத்தம்‘ என்று ஓரிரு சொற்களில் அக்கறை காட்டுபவள் அல்லவா
மாடன்கால்தொட்டு வணங்கி அவன் மேலாக ஏற ஆரம்பித்ததும் அவள் மேலேறி இவனை வா வா என்று கூப்பிடுகிறாள். உச்சிக்கு ஏறி தமக்குக்கீழே பறக்கும் பறவைகளையும், யானையாகவும் அதன் முடிகளாகவும் மலைகளையும் அதன் மரங்களையும், பூமியில் சிறுத்தும் ஊர்ந்தும் தெரிபவற்றையும் பல்லாயிரம் பொற்கரங்களை நீட்டி நீட்டித்தொட்டுத் துலங்கவைத்து இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் அந்த சூரியனையும் தரிசிக்கும்போது கரைந்து கண்ணீரோடு தன்னை அவ்வளவு உயரம் கூட்டிச் சென்றவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ளாமல் என்ன செய்ய முடியும் ?
உருமாறிக்கொண்டே இருக்கும் இரவு, சீவிடுகளின் ரீங்காரம், வடக்கிலிருந்து வந்த லேசான குளிர்க்காற்று, பின் நேரெதிரிலிருந்து வந்த மெல்லிய வெங்காற்று, நடுங்கின, இடம் மாறின நட்சத்திரங்கள் … சங்க இலக்கிய இயற்கை வர்ணனைகள் போல இருந்தன அனைத்துமே.
மிக்க அன்புடன்
பொன்.முத்துக்குமார்
***
குருவி [சிறுகதை]
வணக்கம் ஜெ
குருவி சிறுகதையை வாசித்தேன். ஒவ்வொருவரும் தன் துறையில் பயின்று முயன்று உச்சத்தை அடையலாம். ஆனால், கலைஞனாக ஆக அதையும் தாண்டிய ஒருமையும் நுட்பமும் தேவைப்படுகிறது. அந்த நுண்மையான இடம் வயரைக் கொண்டு செய்யப்பட்டிருந்த தூக்கணாங்குருவியின் கூட்டை மாடன் பிள்ளை விம்மலோடு பார்த்தப்போது துலங்கியது. மனதில் எண்ணக்கூடியவற்றுடன் பிறிதொன்றிலாமை ஆகும் அந்த அற்புதத் தருணம் உடையவன் மாடன் பிள்ளை.
அரவின் குமார்
***
அன்புள்ள ஜெ
குருவி சிறுகதையை ஒரு கலைஞன் தன் எல்லையை உணர்ந்த இடம் என்று வாசிக்கலாம். ஆனால் ஒரு கலைஞன் தான் எவ்வளவு பெரியவன் என்று உணர்ந்த இடம் என்றுதான் நான் வாசித்தேன். அவன் தன்னை உலகம் முழுக்க விரிந்திருக்கும் ஒரு மாபெரும் கிரியேட்டிவிட்டியின் ஒரு துளி என்று கண்டுகொள்ளும் இடம்தானே அந்தக்கதை
எல்லா ஆபீஸிலும் இந்தவகையான ஒருசிலர் இருபபர்க்ள். அவர்களுக்கு ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கும். ஆனால் ஒரு தொழில்துறையில் அவர்களின் கிரியேட்டிவிட்டிக்கு இடமிருக்காது. பலசமயம் அது தேவையில்லாத உபத்திரவமாக இருக்கும். டிலே ஆகும். ஆகவே அவனை அத்தனைபேரும் சேர்ந்து கிறுக்கனாக ஆக்கிவிடுவார்கள்
இதை நானே பார்த்திருக்கிறேன். செல்லமாக கிண்டல் செய்வார்கள். அல்லது உன் நன்மைக்காத்தான் சொல்றேன் என்று உபதேசம் செய்வார்கள். இரண்டுமே அவனை தங்களைவிட கீழே வைக்கும் முயற்சி. அவன் தங்களை விட மேல் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். இந்தக்கதையிலும் அதுதான் நடக்கிறது
இந்தமாதிரி சூழல்களில் மாடன் மாதிரியானவர்கள் ஒன்று குடிகாரர்களாக உடைந்துவிடுவார்கள். அல்லது கடுமையான தனிமைக்குள் போய் உள்வாங்கிவிடுவார்கள். அவர்கள் அப்படியே ஒதுங்கி இல்லாமலாகிவிடுவார்கள். மாடனுக்கு ஒரு செல்ஃப் அஸெஸ்மெண்ட் இருக்கிறது. நான் ஆர்டிஸ்ட் என்று சொல்கிறான். அதுதான் அவனுடைய சக்தி. ஆகவேதான் அவனால் தெனாவெட்டாக இருக்கமுடிகிறது. பெரிய ஆஃபர்களை வேண்டம என்று சொல்லமுடிகிறது. போடா என்று எல்லாரையும் நையாண்டிசெய்ய முடிகிறது. அந்த சுதந்திரமும் செல்ஃப் எஸ்டீமும்தான் குருவியைக் கண்டதும் தானும் ஒரு குருவி என்று உணர வைக்கிறது
எஸ்.மகாலிங்கம்
***