சூழ்திரு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
ஒன்றன்மேல் ஒன்றாக கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. சூழ்திரு கதை அதில் ஓர் உச்சம். ஒரு சுவைக்கொண்டாட்டம் அந்தக் கதை. கரடிநாயரின் சுவை என்பது நுட்பங்களை தேடுவது. இந்தக்கதையிலேயே அத்தனை நுட்பங்கள் உள்ளன. அவர் நளபாகம் சமைப்பவர். ஆகவேதான் பச்சடியை சோதனைசெய்து பார்க்கிறார். அவருக்கு ரொம்ப கொஞ்சமகத்தான் ரசிகர்கள் அமைய முடியும். அவர்களில் ஒருவர் கரடிநாயர். ஆகவேதான் அவர் இவரை தேடுகிறார்
அந்தச் சுவையறிதலில் உள்ள நுட்பங்களை யோசிக்கயோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர் மேளம் கேட்க தஞ்சாவூர் சீவல் வேண்டும் என்று ஒரு பெண் நினைக்கிறாள். அவளுக்கு கரசிநாயரின் சுவையும் தெரிந்திருக்கிறது. அவளை அவர் நண்பர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
நாக்குச்சுவை செவிச்சுவை எல்லாம் சுவைதான். ஆனால் தங்கையாநாடார் கணக்கின் சுவையை கண்டுபிடிக்கிறார். அதையும் ரசிக்கிரார்கள். கடைசியில் பந்தல்போடுபவரை பார்க்கச் செல்லும்போதுதான் கதை நிறைவை அடைகிறது
சாரங்கன்
***
அன்புள்ள ஜெ.
சூழ்திரு கதை சற்றே பூடகமாக அமைந்திருந்தது..
அனைவருக்குமே குறிப்பிட்ட செல்வங்கள் அருளப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக இந்த கதையில் வரும் பையன் ஆனந்தனுக்கு சரஸ்வதி கடாட்சம் வாய்த்துள்ளது (லச்சுமி கடாச்சம் உண்டா?””அப்டி இல்லை. ஆனா அம்மைய மாதிரி கவிதை வாசிப்பு உண்டு…”லச்சுமியும் சரஸ்வதியும் ஒண்ணுல்லா)
இவனது உயரங்களை தந்தை அடையமுடியாமல்கூட போகலாம். அது தேவையுமன்று
அவர் தன்னை அறிந்தவர். தன் வாழ்க்கையை ஒரு அரசர் போல வாழ்கிறார். தனக்கு கிடைக்கவிருக்கும் நல்லனுபவம் தன் தோழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவரை திருமணத்துக்கு அழைத்தவருடன் பெரிய நட்பு இல்லை என்றாலும் அழைத்தவர் உட்பட அனைவருமே அவரை உயர்வான இடத்தில்வைத்துப் பார்க்கின்றனர்;
தானும் தந்தைபோல உயர்ரசனைகளை பேண விரும்பும் பையன் ஸ்டைலான சட்டை அணிகிறான். சமையலில் எதைப்பாராட்ட வேண்டும் என தந்தைக்கு பாடமெடுக்க முயல்கிறான்
தான் தனது தந்தை கிடையாது. அவர் வேறு என்ற புரிதல் அவனை என்ன செய்திருக்கும் என யோசிக்க வைத்தது கதை. அவன் தனது சுயத்தை கண்டறிய இது ஒரு துவக்கமாக அமைந்திருக்கக்கூடும்.. இந்த திறப்பு நிகழக்கூடிய நுண்ணுணர்வு அவனிடம் உண்டு என்பதைத்தான், தந்தை சமையல்காரரிடம் தவறாக பேசிவிடக்கூடாது என பதைபதைப்பு காட்டுகிறது. அது அவன்,வாழ்வின் ஒரு உச்சதருணம்
சிலர் தம்மை இலக்கியவாதிகள் என நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருப்பார்கள். அனைவருக்குமே அது வெறும் பாவனை என தெரிந்து கேலியுடன் பார்ப்பார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியாது
அவரை சூழ்ந்துள்ள செல்வம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பேச்சாற்றல், நிர்வாகத்திறன், வியாபாரம், பொதுச்சேவை என அவர்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் தருணம் எடைமிக்கது. அப்படி ஒரு தருணத்தை இந்த கதையில் அந்த பையன் பார்வையில் காண முடிந்தது
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
எழுகதிர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
எழுகதிர் கதையை சமீபத்தில் எந்தக்கதையுடன் ஒப்பிடமுடியாது. அப்படி ஒரு வாசிப்பு வேகம். இன்றைய எழுத்தின் இயல்புகளில் ஒன்று இது. நாம் மாஜிக்கல் ரியலிசம் என்கிறோம். ஆனால் லோஸா எழுதிய கதைகளில் உள்ள வாசிப்புவேகம் எந்தக்கதையிலும் இருக்காது. அப்படி ஒரு வாசிப்புவேகம்
ரியலிஸ்டிக்காக பலவற்றை விளக்கிவிட்டமையால் எழுகதிர் ஒரு ரியலிஸ கதைமாதிரி இருக்கிறது. ஆனால் ஆரம்பம் முதலே அது ஒரு ஃபேண்டஸி – மாஜிக்கல் ரியலிச கதைதான். மிகமிக யதார்த்தமாகத் தொடங்கி முதிர்ந்து கடைசியில் சரியான ஃபாண்டஸியிலே முடிகிறது. அவன் செத்திருக்கலாம். அவன் செத்தபின்னர் சென்றுகொண்டே இருக்கிறான். அவனுடன் அந்தக்கல்லின் ஒளியும் சென்றுகொண்டே இருக்கிறது. கல்மட்டும்தான் இவர்களின் கையில் சிக்குகிறது
அதாவது அந்தக்கல்லில் இல்லை ஒளி. அவனிடம்தான் இருக்கிறது. அவனைத்தான் அது கிழக்குநோக்கி கொண்டுசெல்கிறது. ஒரு அபாரமான மாஜிக்கல் ரியலிச முடிவு. அவன் சென்றுகொண்டே இருக்கிறான் என்பதை நினைக்கையில் ஒரு பெரிய மனவிரிவு உருவாகிறது
ராஜேஷ் எஸ்
***
அன்புள்ள ஜெ
எழுகதிர் கதையின் மையமான ஒரு முடிச்சு கதைசொல்லிக்கும் அவன் அப்பாவுக்குமான உறவு. அந்த மாய நிமிடத்திலே என்ன நடக்கிறது. அவன் அவரைக்கொல்ல கல்லை எடுக்கிறான். அவர் எந்த பயமும் இல்லாமல், எதையுமே எண்ணமால் கைகூப்பி கிடக்கிறார். அவர் கெஞ்சவில்லை. மன்றாடவில்லை. அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. தெய்வத்திடம் பிரார்த்தனை செய்கிறார்
அவன் ஏன் கல்லை கீழே போட்டான். ஏன் தன்னையே வெறுத்து காறிக்காறி துப்பிக்கொண்டான். ஏன் அலைந்தான். கடைசிவரை ஏன் குற்றவுணர்ச்சியை அடைந்தான்? ஏனென்றால் அவர் கடவுளிடம் வேண்டியது அவனுடைய நன்மைக்காக. தந்தையை கொலைசெய்த பழி அவனுக்கு வரக்கூடாது என்பதற்காக. ஆகவேதான் பெருவட்டரின் மகனாக பிறந்ததே என் மீட்சி என்று அவன் சொல்கிறான். அவர் ஏசுவைப்போல கடவுளே இவனை மன்னியும் என்று சொல்லியிருக்கிறார்
அந்தக் குற்றவுணர்ச்சியால் சிறைப்பட்டு இருப்பவனுக்கு முழுக்க முழுக்க சுதந்திரமானவனாகிய ஸ்ரீகண்டன் ஒரு பெரிய ரட்சகனாகவே தோன்றியிருப்பான். அவன் இங்கே எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டான். அதன்பிறகு உலகிலிருந்தே விடுபட்டு சூரியனை நோக்கிச் செல்கிறான்
அருண்குமார்
***