இடம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
நான் இடம் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். முன்பு நான் என் சின்னக் கிராமத்திற்குச் சென்று கொஞ்சநாள் இருந்தேன். எனக்கு ஒரு ரூரல் பிராஜக்ட் இருந்தது. அதற்கு என் சொந்த ஊரையே தேர்வு செய்திருந்தேன். அப்போது அந்த ஊரைப்பற்றி பெரிய ஒரு கேள்வி இருந்தது. பிறகு அதை என் கைடிடம் கேட்டேன். அவர்கள் ஒரு பதில் சொன்னார்கள்.
அதாவது கிராமம் ஒரு ஆர்கானிக் ஸ்ட்ரக்சர். ஆனால் நகரம் ஒரு மெக்கானிக்கல் ஸ்ட்ரக்சர். நகரத்தில் எதையும் பொருத்தலாம். வடிவ ரீதியாக அது ஒத்துப்போய் அந்த ஆப்பரேஷனில் சேர்ந்துகொண்டால் போதும். ஆனால் கிராமத்திலே அப்படி அல்ல. அதன் உயிர் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அது ஸ்குரூ போட்டு இறுக்குவதுபோலவோ பற்றவைப்பது போலவோ அல்ல.அது செடிகளில் டாப்பிங் பண்ணுவதுபோல.
அந்தச் செடி அந்த புதிய உயிரை எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மரத்திலே ஆணியடிப்பதைப்போல. மரம் ஒரு பொருக்காக அதை சூழ்ந்துகொண்டிருக்கும். ஆகவேதான் கிராமத்தில் ஒரு இடம் அப்படி முக்கியமாகிறது. தேனீக்கூட்டில் புதிய தேனீ வந்ததுபோல ஊரே அல்லோலக் கல்லோலப்படுகிறது. அந்தக் கிராமத்திற்குரிய இடத்தை குரங்கு கண்டுபிடித்ததும் எல்லாம் சரியாகிவிடுகிறது.
எஸ்.சந்திரகுமார்
***
வணக்கம் ஜெ
இடம் சிறுகதையை வாசித்தேன். படிக்குந்தோறும் சிரிக்க வைக்கும் கதை. வீடுகளில் நுழையும் எலிகள் முதலில் ஒருவித ஒவ்வாமையை அளிக்கின்றன. அதனைப் பிடிப்பதற்கும் விரட்டுவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அதன் இருப்பு மறந்து இருக்கும் சூழல் வீடுகளில் இப்பொழுதும் நிகழ்வதுண்டு. அம்மாதிரியான கதை. இதில் ஒருபடி மேலே சென்று கருங்குரங்கு சாராயத்தைக் குடித்துச் சலம்பித்திரியாத குறையாக உள்ளது.
அரவின் குமார்
***
வேட்டு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வேட்டு சிறுகதை உள்ளத்தை குழப்பிக்கொண்டே இருக்கிறது. வாழ்க்கையை ஒரு சர்க்கஸ் என்று எடுத்துக்கொண்டால் ஆண்கள் அதில் வித்தையைக் காட்டுபவர்கள். பெண்கள் அதற்கு இலக்காக நிற்பவர்கள். ஆனால் இருவருக்குமே அவரவருக்கான தந்திரங்கள் உள்ளன. அவரவருக்கான வழிகளும் நியாயங்களும் உள்ளன. கடைசியில் பெண்கள்தான் சர்வைவ் ஆகிறார்கள். ஆண்களின் வித்தைகளைவிட பெரிய வித்தை அவர்களிடம் உள்ளது
ஆர். வருண்
***
அன்புள்ள ஜெ,
எனது பெயர் பாலாஜி, வயது 26 கணினி பொறியாளர். உங்களது சிறு கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். யாதேவி தொகுப்பு, பூனை மற்றும் வேட்டு. அனைத்தும் ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்கியது. இதில் வேட்டு பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.
வேட்டு – இக்கதையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பீஃப் வறுவல் வருவதை உணர்ந்தேன். எதற்காக இது குறிப்பிடப்படுகிறது என்று மெதுவாகவே புலப்பட்டது. பார்வதியின் இந்த பீஃப் வறுவல் சுவை வேலாயுதனிடம் இருந்து வந்திருக்க வேண்டும். வேலாயுதனின் இறப்பிற்கு காரணம் பார்வதி என்றாலும் அவனிடம் கற்ற சமையற்கலை தான் அவளுக்கு பிற்காலத்தில் உதவுகிறது. நற்பண்புகள், நல்ல கலைகளை கற்பதற்கு அனைவரிடமும் சாத்தியக்கூறுகள் உள்ளதை ஆணித்தனமாக உறுதி செய்துள்ளீர்கள்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அடுத்த கட்டத்திற்கு மனிதன் செல்லும் போது குணமும் மனமும் எவ்வாறாக மாறுபடுகிறது என மிக துல்லியமாக தெரிகிறது. பார்வதியும், ஜானுவும் உணவு கிடைத்தால் போதும் என்று இருந்து, நாட்கள் செல்லச் செல்ல உடல் தேவை மற்றும் பண தேவையை அடைகிறது. பிறகு அதே மனநிலை நிம்மதிக்காக பாஸ்கரனை கொல்லவும் துணிந்து கிடைத்த மொத்த பணத்தையும் வைத்து சொந்த ஊரில் பிழைக்கிறார்கள். இறுதியில் நிம்மதி வெல்கிறது.
இக்கதையில் பார்வதி, ஜானு, பாஸ்கரன் மற்றும் வேலாயுதன் இவர்களுக்குள் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லையா? அனைத்தையும் நியாயப்படுத்துவதன் மூலமும் கடந்து செல்வது மூலமும் குற்ற உணர்ச்சியை கடந்து விட முடியுமா?
கேள்வி – இந்த நால்வரில் ஏதேனும் ஒரு பாத்திரமாக நான் இருந்தால் மீள முடியுமா என தெரியவில்லை மனதின் குற்ற உணர்ச்சியை கடக்க எவ்வாறு தயார் செய்து?
நன்றிகள் பல,
மு. பாலாஜி
***