கதைகள், கடிதங்கள்

பொற்கொன்றை!

அன்பிற்கினிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டு மஞ்சள் பூத்து நிறைந்த உங்களின் பொற்கொன்றை மலரிலே உதயமானது. நோயச்சம் மட்டுமே சூழ்ந்திருக்கும் இச்சயமத்தில் எத்தனை நேர்மறையாக இருந்தாலும் ஒரு சிறு எதிர்மறையான வார்த்தை கூட மன அழுத்தத்தை அதிகமாக்கிவிடுகிறது. இது வரை அழைத்து பேசாத நண்பர்கள் எல்லாம் அழைத்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களும் அவர்களின் அச்சத்தை சேர்த்துவிட்டு முடிக்கிறார்கள். யாரைப்பார்த்தாலும் நோய், இறப்பு, மருத்துவமனை,  பொருளாதாரா வீழ்ச்சி இதைத் தவிர அவர்களுடைய மனது கடக்க இயலாமல் உழன்றுகொண்டே இருக்கிறது.

வாழ்வு மிக அழகானது. நிதானமானது. எப்படிபட்ட சூழலிலும்  மனதை மகிழ்ச்சியோடும், நிறைவோடும் வைத்திருக்க முடியும் என்பதை இத்தருணத்தில் நிதர்சனமாக உணருகிறேன். ஏதோ ஒருவகையில் உங்களின் எழுததுக்களின் வழியே நாங்கள் கண்ட தரிசனங்களும், காந்தியமும், வாழ்வு நிறைவு நோக்கி பயணிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்திய செயற்பாட்டாளர்களின் அற்பணிப்பும், புத்தகங்களும்,  எந்த வித சலிப்பும் இல்லாமல் வாழ்வை  ஆரோக்கயமான மனநிலையில் வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் எங்களை இச்சூழலில் இருந்து காத்தருள்கிறது என்றே நம்புகிறேன்.

என் மனது இந்த நிலையை நோக்கி பயணிப்பதால் குடும்பத்தையும் குடும்ப உறவுகளையும் இவ்வச்ச சூழலில்இருந்து மீட்டெடுக்க முயற்சிக்க முடிகிறது.  ஜெ.சைத்தன்யாவின் சிந்தனை மரபில் கூறியதுபோல, என் மகள் புவியாழை அவ்வளவு உள்வாங்குகிறேன். எங்கள் இருவருக்கும் அத்தனை உரையாடல், அத்தனை கதைகள் தினமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சிறுக சிறுக நிறைய பண்புகளை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தும் அவளிடமிருந்தும்  கற்றுக் கொண்டிருக்கிறேன்.

பொற்கொன்றை மலரின் புத்தாண்டு வாழ்த்தை என் நண்பர்கள்வட்டம் அனைவரிடமும் பகிர்ந்திருந்தேன். அதை படித்து விட்டு நெருக்கமாக இருக்கும் வாசிப்பனுபவமே இல்லாத சில  நண்பர்கள்  ஆசுவாசத்துடன் அழைத்துப் பேசி மகிழ்ந்தார்கள். இந்த காலகட்டத்தில் மனைவிக்கும் நேரத்தை ஒதுக்கி கொடுக்க முடிந்து, அவளும் வாசிப்பை தொடங்குகிறாள். இருவரும் மலையாள திரைப்படத்தை முதன் முதலாக பார்த்து அக்கதையை பற்றி உரையாடினோம் இன்று. குடும்பம், வேலை, கனவு மற்றும் உறவுச்சிக்கல் அல்லாது ஒரு திரைப்படத்தின் கதை பற்றி முதல் முதலாக இருவரும் உரையாடினோம் நேற்று.

நேற்றைய தினம் மிகவும் அழகாய் மாறிப்போனது. இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த புத்தணாடில் கிடைத்திருக்கிறது.

குடும்பத்தோடும் இனிப்புகளோடும் நிறைவாக ஆரம்பமானது இந்த புத்தாண்டு. உகளுக்கும் உங்களது எழுத்திற்கும் வாழ்வின் என்றென்றைக்குமான நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன்…

சிவகுருநாதன்.சி

www.nurpu.in.

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நீண்ட நாட்கள் ஆகிவிட்டது சிறுகதைகள் வாசித்து,செந்தில் ஜெகந்நாதன் அண்ணாவிடம் கடந்த வாரம் பேசியபோது ,உங்களின் அங்கி கதையை நிச்சயம் படிக்க சொன்னார்.அதே நேரம் வாசிக்க  மனம் செல்ல வில்லை.இணையத்தில் உங்களின் பல கட்டுரைகளையும் கடிதங்களையும்  வாசித்து வந்தேன்.

இன்று இந்த கதையை வாசித்து விட உர்கார்ந்தேன் ,மனம் சிறிது நேரத்தில் இது இந்த நாளுக்கான கதை என்பதை வெகுவாக உணர்ந்து கொண்டது.என்னோட மனசக்கு எப்பவும் ஒரு தொடர்பு அல்லது காரணம் தேவை அது இல்லாமல் பிடித்தம் வராது.காலையில் எழுந்தவுடன் காலண்டர் பார்ப்பேன் இன்று என்ன முக்கியமான நாள் குரு பூர்ணிமா,காந்தி நினைவு நாள்,வள்ளலார் ஜீவசமாதியான தினம்,தேவமாதா கருவுற்ற தினம்,காமராஜர் பிறந்த நாள்,சமணர் கழுவிலேற்றபட்ட தினம் இப்படி ஏதாவது ஒன்று இருக்கும்.அப்படி இல்லையெனில் நானே வலிந்து தேடுவேன் லட்சுமண அய்யா பிறந்த நாள்,சுவாமி.நிகமானந்தா உண்ணாவிரதம் துவங்கிய தினம்,சிவராத்ரி,ஆடி அம்மாவாசை,ஆடிப்பட்டம்,தண்டி யாத்திரை தொடங்கிய தினம்,கட்டி மாமா இறந்த நாள் எப்படியும் ஒன்னு கிடைச்சுடும் .

இதற்கு இணையான ஏதோ ஒரு தகவல் செய்தி ,தகவல்,தொலைபேசி அழைப்பு,பேருந்தில் செல்லும் போது அந்த ஊர் பெயரை பார்ப்பது,குறைந்த பட்சம் குக்கூ அப்படின்னு வர்ற மாதிரி பாட்டுன்னாலும் கேட்டுட்டா மனசு நிறைஞ்சுடும். ஓ எல்லாம் சரியாதான் போகுது அப்படின்னு நானே நிறைவாய்க்குவேன்.போன மாசத்துல ஒரு நாள் அதிகாலையில  எழுந்து அப்படியே அலமாரியில் கைவிட்டு எடுத்தா அசோகமித்ரன் அவரோட 18வது அட்சரேகைக்கொடு புத்தகம் கைல வந்து இருக்கு(மேல இருக்க பிளாஸ்டிக்கவர் கூட பிரிக்கலை,சிவராஜ் அண்ணா பரிசா வாங்கி கொடுத்தது ) .11மணி இருக்கும் fbல பார்த்தா  செந்தில் ஜெகந்நாதன் போஸ்ட் போட்டுருக்கார் அசோக மித்ரன் நினைவு நாள் அப்படின்னு மனசு குளிர்ந்து வாசிக்க சிரமமா இருந்தாலும் அதை முழுசாக வாசித்தேன் ,அந்த புத்தகத்தில் கடைசியா காந்தி வந்தது ரொம்ப சந்தோசம் .

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மனம் இயேசுவை சுற்றியே இருந்தது.அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் .இந்துக்குடும்பத்தில் இருந்தாலும்,சின்ன வயசில் இருந்து இயேசுவின் மேலும் அவரின் தியாகம் மற்றும் பைபிளின் வாசகங்கள் மனதில் எப்போதும் இருக்கும்.ஞாயிற்றுகிழமை பிரார்த்தனை பொதிகையில் பார்த்த அவரின் வாழ்க்கை ,பள்ளியில் நடக்கும் நவநாள் கொண்டாட்டங்கள் ,வளர்ந்த பிறகு கிடைத்த தீவிர கிறிஸ்த்துவத்தை பின்பற்றும் அண்ணன்கள்,நட்புகள் எல்லாம் சேர்த்து ஒரு கலவையாக உள்ளது. அலுப்பு முறிக்கும் போது வரும் ‘முருகா’ போயி ’ஏசப்பா’  அப்படின்னு சொல்றேன்.

இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளில் இந்த அங்கி கதையும் அதில் இருக்கும் வாசகங்களும் மனசை இந்த நாளுடன் மிகவும் பொருந்தி போக செய்கிறது. எப்பவோ படித்த தேவாலயங்கள் பத்தின கட்டுரைகளை மீண்டும் தேடிப்படித்தேன்.

https://www.jeyamohan.in/5280#.XpNG6MgzbIU

சிலுவையில் அறையறது,பாவமன்னிப்பு,தியாகம்,மீண்டும் உயிர்த்து எழுவது இதெல்லாம் பார்க்குறப்ப,மனசு நிகமானந்தா பத்தி மட்டும் தான் நினைக்குது.மாத்ரி சதன் குரு.சிவானந்  ’நிகமானந்தா’ அப்படிங்கிற வார்த்தை சொன்னாலேயே கலங்கிபோயிடுறாரு.இன்னும் சில நாட்கள் `இயேவின் ரத்தம் ஜெயம்’ எனும் இந்த வாசகங்கள் மனசை விட்டு எங்கும் போகாது.

அப்புறம் ‘ஆட்டக்கதை’ படிச்சேன்.மனசுக்குள் சில பகுதிகள் படிக்கும்போது இது எனக்கே எழுதுன மாதிரியும் ரொம்ப நாளா உறுத்திகிட்டு இருக்க கேள்விக்கு விடை கிடைச்சும் இருக்கு.மனசுக்குள் மீண்டும் ஒரு முறை இந்த கதைகளை வாசிக்க தோணுகிறது.

ஸ்டாலின்

கள்ளிப்பட்டி

***

முந்தைய கட்டுரைஜெயமோகன், ஆனந்த சந்திரிகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதுளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்