எழுகதிர்,லூப்- கடிதங்கள்

எழுகதிர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எழுகதிர் கதையை வாசிக்கையில் ஒரு ஒப்பீடு மனசிலே ஓடிக்கொண்டிருந்தது. கதையைச் சொல்பவனுக்கும் ஸ்ரீகண்டன் நாயருக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே சமம்தானா? இல்லை. ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. கதையைச் சொல்பவன் bonded அவன் குற்றவுணர்ச்சியால் சிறைப்பட்டவன். வாழ்க்கை முழுக்க அவனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவன் காறித்துப்பியபடியே ஊரைவிட்டுச் செல்கிறான். தன்னைத்தானேதான் துப்பிக்கொள்கிறான். கடைசிவரை துப்பிக்கொண்டேதான் இருக்கிறான்.

ஆனால் ஸ்ரீகண்டன் முழுக்கமுழுக்க சுதந்திரமானவன். ஆகவே அவனுக்கு சொந்தமாக ஒரு முகமோ அடையாளமோகூட இல்லை. முழுமையான கிரிமினல். அந்த வகையான புறவிடுதலை அமைந்ததுமே அகமும் விடுதலை அடைய ஆரம்பிக்கிறது. ஒளியை நோக்கி கிளம்பிவிடுகிறான். வான்மீகி முதல் இன்றுவரை பல மாமுனிவர்கள் கிரிமினல்கள்தான். அந்த சுதந்திரத்தைக் கண்டுதான் இவன் அவன்மேல் பித்துகொண்டிருக்கிறான். அவனுக்கு அடிமை மாதிரி இருக்கிறான்

மகாதேவன்

***

அன்பிற்குரிய உங்களுக்கு,

வணக்கம் .”எழுகதிர்கதை ஒரு உச்சம். பல சாத்தியங்களைக் கொண்ட ரகசியப் பாதை ஒன்றினை அடையாளம் காட்டி நிற்கும் கதை போல, அது உருப்பெற்றிருக்கிறது. என்னுடைய அன்பு.ஏன் உங்களிடம் மயங்கி நிற்கிறோமென்றால் இதற்காகத் தான் .

கதையின் விரைவு, பெருங்குற்றவாளிகளுக்கே திறக்கும் அபாரமான மொழி .மனம் மயங்கினேன் என்பதே சரி. ஸ்ரீ கண்டன் இந்திரனேதான் இல்லையா? இந்திரனால் ஆகத் தகுந்த காரியங்கள் ,இந்திரன் அல்லாது பிற யாரால் முடியும்?

அன்புடன் ,

லக்ஷ்மி மணிவண்ணன்

***

லூப் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நுட்பமான கதை லூப். அடிவயிற்றிலிருந்து ஒரு கேள்வியை அது முன்வைக்கிறது. உலகமெங்கும் டெக்னாலஜியை நிறைத்து வைக்கிறீர்களே, கொஞ்சம் இயற்கையென்னும் அம்சத்தையும் சேர்த்து லூப் உருவாக்கினால் என்ன? ஆமலே அதையும் சேத்துத்தான் எங்க டெக்னாலஜி என்று சொல்கிறார் ஞானம்.

ஆனால் அது ஒரு குரல். புனித ஜானின் குரல் மாதிரி காட்டில் ஒலித்த குரல். அதை எவரும் கேட்காமலேயே போய்விடுகிறார்கள். ஞானம் சாரின் அந்த ஈஸியான சுபாவம் அபாரமான ஒரு சித்தரிப்பு. ஏசுவே நேரில் வந்தால்கூட மனிதர்என்னவே நல்லா இருக்கேரா?”என்றுதான் கேட்பார் என நினைக்கிறேன்

சாம் ஆசீர்

***

அன்புள்ள ஜெ,

லூப் கதையின் ஞானம், ஆரோக்கியம் போன்ற செய்யும் வேலையிலும் இயற்கையை அதன் போக்கில் விட்டு மீதமுள்ள இடத்தில் செய்தால் போதும் என்ற சிந்தனை உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை படிக்கும் போதே மனம் விம்மிதம் கொள்கிறது.

வேலையில் எவ்வளவு கருத்துடன் இருந்திருக்கிறார்கள். வேலை நேரம் முடிந்த பின்னரும், இரவில் காட்டில் தடையைக் கண்டுபிடிக்கச் செல்லும் அக்கறை அவர்களின் தொழில் மேல் கொண்ட காதலைக் காட்டுகிறது.

பாம்பைக் குழந்தை என்பதும் அதைக் கொல்ல நினைப்பவனை எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எதிர்க்கும் துணிவும், நிமிர்வும் ஞானத்தின் மேல் பெருமதிப்பை உண்டாக்குகின்றன. அந்த இடத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது இவ்வளவு அழித்து விட்டோமே என்ற பயம் மேலோங்குகிறது.

காணிக்காரர்கள் வேட்டையாடினாலும் காட்டை அழிக்கவில்லை, நாம் வேட்டையாடமலேயே காட்டை அழித்துவிட்டோம். மிகச் சிறந்த கதை ஜெ. நன்றி.

நாரா.சிதம்பரம்

***

முந்தைய கட்டுரைதுளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]