வான்கீழ் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஒரு கதாசிரியனுக்கு கதை எங்கிருந்தெல்லாம் வரும் என்பதற்கு உதாரணம் வான்கீழ். ஏற்கனவே உங்கள்மேல் சிலர் ஒரு குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் சாமானிய மக்களைப்பற்றி எழுதவில்லை- புராணம் எழுதுகிறீர்கள் என்று. இந்தக்கதைகளை அனுப்பினேன். இவற்றையும் அவர்கள் படிக்கவில்லை. படிக்கமாட்டார்கள் என்று தெரியும்
மக்களின் வாழ்க்கையிலிருந்து எழும் கதை. அந்த தொழிற்சூழலைப்பற்றி விரிவாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் உள்ளே போய் வாழ்ந்த அனுபவம். என்னைப்போல இதேபோன்ற தொழிற்சூழலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் இது புரியும் குமரேசனுக்கு நம்பர்போடும் வேலை அளிக்கப்படுகிறது. ஆனால் அதுதான் இந்த வேலையின் தொடக்கம். நம்பர்போட்டு இந்த கருவிகளின் அமைப்பும் வரிசையும் பிடிகிடைத்துவிட்டால் அதற்குப்பிறகு வேலை எளிதாக தொடங்கிவிடும்
டீ மேலே கொண்டுசெல்லுதல். தின்னரில் கை கழுவுதல். செக்யூரிட்டியின் அன்றாட வாழ்க்கை என்று அந்தச் சூழல் அற்புதமான ரியாலிட்டி. அதில் ஒரு அழகான காதல் கதை. அந்தப்பெண் எளிமையானவள். அவள் மேலே செல்ல வழியே இல்லை. முதல்முறையாக அனைத்துக்கும் மேலே சென்றுவிடுகிறாள். அங்கே நின்று அவள் உலகை பார்க்கிறாள். அங்கே அவளைக் கொண்டு வந்தவனைத்தானே அவள் விரும்பமுடியும்?
செந்தில்குமார்
***
அன்புள்ள ஜெ வணக்கம்…
உங்கள் புனைவுகளில் மறக்கமுடியாத, அழகான பல காதல் இணைகளை உருவாக்கியுள்ளீர்கள், அதில் குமரேசனும் ராஜம்மையும் முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள், தங்கள் எளிமையால் ,தமிழ்நாட்டின் எந்த தெருவிலும் கான சாத்தியப்படும் தன்மை கொண்டவர்களென்பதால்.
கதை படிக்க படிக்க பாரம் கூடிக்கொண்டே போனது எனக்கு, குமரேசனின் காதல் வெற்றியடைய வேண்டும் என்பதை விடவும், நல்லபடியாக உச்சிக்கு சென்று விடவேண்டும் என்ற பதபதைப்பினால்.
(நல்லபடியாக இருவரும் கீழே இறங்கி விட வேண்டும், என்னும் தவிப்பு இன்னும் உள்ளது)
இனிய காதலை தவிரவும் நிறைய கவித்துவமான இடங்கள் இக்கதையில் உண்டு,
“இரும்புமாடன்”என்ற சொல்லாட்சி. 1100 அடி டவரை , தெய்வ வடிவாக உருவகித்துள்ளீர்கள், ஒவ்வொரு கல்லாக சுமந்து தான் நாம் கோவில்களை கோபுரங்களை கட்டுகிறோம், ஒவ்வொரு துண்டு இரும்பாக இணைத்து முழுமையாக கட்டி எழுப்பப்பட்ட பின் டவர் இரும்பு மாடன் ஆகிவிடுகிறது, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாலம் ஆகிவிடுகிறது.
“ஒவ்வொருத்தன் சோறிலயும் ஒரு மணம் உண்டு, வேலைக்க மணமுள்ள சோறு கடவுளுக்க ஆசிர்வாதம் உள்ளதாகக்கும்”
இந்த பூமியில் எத்தனை எத்தனை தொழில்கள் எத்தனை எத்தனை வாசனைகள் நிரம்பிய உணவுகள்.
“மலைக்க மேலே மரம் ,ஆனை முதுகிலே முடி மாதிரி “
முழுவதும் விண்வெளியில் நடக்கும் ஒரு கதையை நீங்கள் எழுதினாலும் அதிலும் யானை எப்படியும் வந்து விடும் :)
நான் எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லவில்லை, 13 வயதில் இருந்து பல்வேறு உடலுழைப்பு சார்ந்த பணிகளில் , திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற் கூடங்களில் வேலை செய்துள்ளேன், ஐசக்குகள் இல்லாத இடமே இல்லை ,ராஜம்மைகள் இல்லாத இடமும் இல்லை, முதலாளிகள், மேனேஜர்கள், சூப்பர்வைசர்கள், என ஒவ்வொரு பனியன் கம்பெனியிலும் ஒரு அதிகார அடுக்கு இருக்கும், பெண்கள் இதுபோன்ற உடலுழைப்பு சார்ந்த இடங்களில் பண்டங்கள் தான்.
உடற் குறைபாடு உடையவர்களை இப்போது போல் மாற்று திறனாளிகள் என்றழைப்பது எல்லாம் நான் பார்த்ததே இல்லை, நொண்டி, செவிடு, குருடு தான், பலரின் இயற்பெயரே யாருக்கும் தெரியாது அவர்களின் குறைபாடே அவர்களின் அடையாளம்.
குமரேசனின் வாழ்வில் இதுவரையில் அவனுடைய பலவீனமான காலைத்தான் அனைவருமே பார்த்தார்கள், அதையே அவனும் நம்பத் தொடங்கி விட்டான்,ராஜம்மை மேல் அவன் கொண்ட காதலும்,
(முன்தினமே அவனை பீடி குடிக்காதே என்கிறாள், காலையில் கண்டிப்பாக வருவாள் என்பது இவனுக்கு உறுதியாகத் தெரிகிறது,ராஜம்மைக்கு தன்மேல் விருப்பம் உள்ளது என்பதை எப்படியோ யூகித்துனர்ந்து விட்டான்)அவளின் காதலும், இவனின் நன்றாக இருக்கும் இன்னொரு காலையும் பலமான கைகளையும் , முதல்முறையாக பயன்படுத்த வைக்கிறது உச்சிக்கு செல்கிறார்கள், எவ்வித பேதமும் மற்ற வானிற்கு அருகில் ஒருவரை ஒருவர் உணர்கிறார்கள்…
வானின் கீழே அனைவரும் சமம் தானே…
மு.கதிர் முருகன்
கோவை
***
அனலுக்குமேல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஒரு டாக்குமெண்டரியில் ‘மேல்பக்கம் சற்றே குளிர்ந்துவிட்ட இந்த லாவாக் குமிழியின்மேல் இருக்கும் உயிர்ப்படலம்’ என்று இங்கே உள்ள இயற்கையைப் பற்றி டேவிட் அட்டன்பரோ சொன்னார். அப்போது மனதை உலுக்கிய வரி அது. அனலுக்கு மேல் சிறுகதை அதைத்தான் நினைவூட்டியது.
மனம் என்னும் பூமிக்குள் அவ்வளவு பெரிய அனல் உள்ளது. அதற்குமேல் தான் வாழ்க்கையை வாழ்ந்து, வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி நடித்து, நடித்ததை மறுபடி மீம் பண்ணி மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காமம் சலிக்கிறது. கூடவே வன்முறையும் சலிக்கிறது. அதை மீண்டும் வைல்ட் ஆக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.
இலக்கியமே ஒரு கார்கோ கல்ட்தானே என்ற வரி பதற்றம் அளிக்கச் செய்தது. உண்மைதானா? வானத்தை நோக்கி வாழ்க்கையை மீம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் இலக்கியமா? ஆனால் இந்த வாழ்க்கை இப்படித்தான்.சப்போஸ் ஒரு சின்ன தீவில் முழுக்க கைவிடப்பட்ட நிலையில் கார்கோ வரும் என்று மீம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்று வைப்போம். நமக்கு வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அது மட்டும்தானே?
சரவணக்குமார்
***
வணக்கம் ஜெ.
அனலுக்கு மேல் சிறுகதையை வாசித்தேன். அனைத்தும் பட்டவர்தனமாகிவிட்ட உலகில் இன்னும் அதி உயர் மர்மம் தேவைபடுகிறது. அந்த மர்மத்துக்காக புனைந்துகொள்ளும் பாவனைத்தான் கதை. ஒருகணம் அது நிஜமென்று மயக்கச்செய்தது. எண்ணுவதற்கேற்ப உருமாறும் விந்தையான தருணம் கொண்ட கதை.
அரவின்குமார்
***