வான்கீழ் [சிறுகதை]
நள்ளிரவில்தான் வந்து இறங்கினார்கள், ஆகவே அப்போது பார்க்கவில்லை. காலையில் பிந்தி எழுந்து திண்ணையில் நின்று முகம் கழுவிக்கொண்டிருந்த போது குமரேசன் அண்ணாந்து பார்த்து ஒரு கணம் வியந்தார். சற்று நேரம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. கைகளில் செம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அதை மெல்ல பெஞ்சில் வைத்துவிட்டு முற்றத்தில் இறங்கி நின்றார். வானம் காலையின் ஒளியுடன் இருந்தமையால் கண்கள் கூசி நீர் வழிந்தது. மூச்சுத்திணறுவது போலிருந்தது. இழுத்து பெருமூச்சுகளாக விட்டார்.
ராஜம்மா உள்ளிருந்து வந்து வாசலில் நின்று “சாயை எடுக்கட்டா?” என்றாள்.
குமரேசன் “இஞ்ச வாடி” என்றார்.
“என்ன? அங்க அடுக்களையிலே சோலி கெடக்கு” என்றாள் ராஜம்மா.
“வான்னு சொன்னேன்லா?”
“என்ன?” என்று அவள் இறங்கி வந்தாள். “நல்ல மாமரமாக்கும். ஆனால் இப்ப காய்ச்சு நாலஞ்சு வருசமாச்சுன்னு சொல்லுதா….”
“அது என்ன பாத்தியா?”
அவள் அவர் சுட்டிய திசையை பார்த்துவிட்டு “என்னது?” என்றாள்.
“ஏட்டி அது என்னது, சொல்லு?”
“என்னன்னு சொல்லுதிய? எனக்கு என்ன தெரியும்?”
“ஏட்டி, அந்த டெலிபோன் டவர் நான் கெட்டினதாக்கும்.”
“ஆமா, நீங்க கெட்டினிய…” என்றபோதே அவளுக்கு நினைவு மீண்டுவிட்டது. “ஆமா, அதுக்க மேலே போயிருக்கோம்ல?”
“ஞாபகம் வச்சிருக்கே…”
“எம்பிடு வருசம் இருக்கும்?”
“வருசமா? நான் அதுக்கு அடுத்த வருசமாக்கும் மஸ்தூராட்டு மஸ்டர்ரோலிலே சேந்தது… அப்ப அது ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எம்பத்தெட்டு……. முப்பத்திரெண்டு வருசமாச்சு.”
“யம்மா!” என்றாள் “காலம் போற போக்கு.”
“இது இந்தியாவிலே எரக்ட் பண்ணின ரெண்டாவது செட் டவர்லே ஒண்ணாக்கும்… அதுக்குப்பிறகு ஆயிரக்கணக்கிலே வந்தாச்சு… இப்ப சும்மா வீட்டுக்கு மேலேயே செல்போன் டவர் நின்னுட்டிருக்கு.”
“எவ்ளவு பெரிசாட்டு இருக்கு” என்றாள். “பெரிசுன்னு தெரியும்… ஆனா இம்பிடு பெரிசா இருக்கும்னு நினைக்கவே இல்லை… சொப்பனத்திலேகூட வந்திருக்கு….”
“எனக்க சொப்பனத்திலயும் வந்திருக்கு…” என்றார் குமரேசன். “இரும்பு மாடன்னு சொல்லுவாங்க… அப்ப உள்ள ஆராவது இப்ப சர்வீஸிலே இருக்காங்களான்னு தெரியல்லை.”
“அதெப்டி இருப்பாவ? நீங்கள்லா அப்ப வயசிலே குறைவு?”
“ஆமா, சூப்பரிண்டெண்டுகள்லாம் மேலே போயாச்சு… ஐசக் அண்ணன் கிட்ட மட்டும் கொஞ்சநாள் பேசிட்டிருந்தேன். அவரு ரிட்டயர்ட் ஆகி நாலுவருசமாகுது. இப்ப மும்பையிலோ எங்கயோ இருக்காரு… கண்ணப்பனும் லாரன்சும் சேந்தே இருப்பாங்க. கண்ணப்பன் எட்டுவருசம் முன்னாலே போய்ட்டார். லாரன்ஸ் கேரளாவிலே இருக்காரு.”
“எல்லா முகமும் மறந்துபோனது மாதிரி இருக்கு” என்றாள் ராஜம்மா.
குமரேசன் புன்னகைத்து “ஏசையா சார் சொல்லுகதுண்டு. ஏலே காலம் ஒரு கேரம்போர்டுக்க ஸ்டிரைக்கர மாதிரியாக்கும். சட்டுன்னு ஒரு அடி… ஒண்ணு குளியிலே விளுந்து அவுட் ஆயிடும். மிச்சமெல்லாம் செதறிப்போயிரும்னு… தெரியும்லா? அருணாச்சலம் சார் செத்த மறுநாள் மைக்ரோவேவ் ஸ்டேஷன்லே கேரம்ஸ் வெளையாடிட்டிருந்தோம். அப்பல்லாம் கேரம்ஸ்னா ஒரு வெறி மாதிரி… நான் நாலஞ்சு தடவை ஸ்டேட் லெவலிலே சாம்பியனாக்கும்.”
“உங்க ஆபீஸுக்குள்ளதானே?” என்றாள் ராஜம்மா.
“ஆமா, எங்க ரிக்ரியேஷன் கிளப்புகளுக்குள்ளதான். ஆனா அப்ப எவ்ளவு ஸ்டாஃபுன்னு நினைக்கே? ஒரு டிஸ்டிரிக்டிலே மட்டும் ரெண்டாயிரம்பேரு வரை இருப்போம்… இந்த டிஸ்டிரிக்டிலே மட்டுமே நாப்பத்தேளு ரிக்ரியேஷன் கிளப்பு. எல்லாவனும் கேரம்ஸ் மாஸ்டர்ஸாக்கும். ரிக்ரியேஷன் கிளப்புகளிலே நாலஞ்சு போர்டுகள் இருக்கும். விடாம ஆடுவானுக… விடிய விடிய ஆடுகதெல்லாம் கூட உண்டு. பிறவுதான் மகாதேவன் சார் ஜிஎம் ஆனாரு… ராத்திரி பத்துமணியோட ரிக்ரியேஷன் கிளப்பை மூடணும்னு ஆர்டர் போட்டாரு… அதெல்லாம் ஒரு காலம்!”
“வந்து சாயையைக் குடியுங்க.”
குமரேசன் அவளைத் தொடர்ந்து மேலேறிச் சென்றார். ராஜம்மையின் தங்கை கோலம்மையின் மகன் மணிவண்ணனின் வீடு அது. அவன் தலையைக் கோதியபடி வந்து “பெரியப்பா சாயை குடிக்கல்ல இல்லா?” என்றான். கொட்டாவி விட்டுக்கொண்டு “நல்லா விடிஞ்சுபோட்டு” என்றான்.
“குடிக்கேண்டே” என்றார் குமரேசன். “முற்றத்திலே நின்னப்ப டெலிபோன் டவர் தெரிஞ்சுது… அதப் பாத்திட்டிருந்தேன். நாங்க கட்டினதாக்கும். எம்பத்தெட்டிலே.”
“ஓ… ஆமால்ல? அப்ப பாட்டிக்க சாயைக்கடை அதுக்கு பக்கத்திலேதானே இருந்திச்சு?”
“டெலிஃபோன் எக்ஸேஞ்சுக்க நேர் எதிரிலே… அங்கதான் இவளை நான் பாத்தேன்…”
“அய்யோ உள்ளதா?” என்றான் மணி.
“பின்ன? லவ் ஸ்டோரில்லா?” என்றார் குமரேசன்.
“ஒண்ணும் வேண்டாம்… இப்ப எதுக்கு அதெல்லாம்?” என்றாள் ராஜம்மா.
“சொல்லுங்க பெரியப்பா” என்றான் மணி. அவனுடைய மகள் லதாவும் வந்து எட்டிப்பார்த்தாள். மனைவியும் வந்துவிட்டாள்.
“அய்யோ என்ன இது? பிள்ளைக நடுவிலே பேசுத பேச்சா?” என்றாள் ராஜம்மா.
“நாம என்ன திருட்டா கொலையா செய்தோம்? லவ்வுதானே?”
“அய்யே வெக்கமில்லை.”
“சொல்லுங்க தாத்தா” என்றாள் லதா.
“அப்ப நான் டெலிகாம்லே சேந்து ரெண்டு வருசம் இருக்கும். எனக்க வீடு நாகருகோயில் எறச்சகுளம் பக்கமாக்கும். அம்மையும் அப்பனும் இல்லை. சந்தைமுக்கு மாணிக்கநாடார் கடையிலே சோலி செய்தேன். என்னால கடையிலே நிக்கமுடியல்ல… ஒத்தக்காலுல்லா? அவரு செவுளிலே அடிச்சு எறங்கிப் போலேன்னு எறக்கிவிட்டிட்டாரு. தெருவிலே நின்னேன். நாலுநாளா பட்டினி… பிச்சை எடுக்கவும் கை வரேல்ல. அப்ப ஏசையா அங்க பீடி வாங்க வந்தாரு… சாயை குடிக்க பைசா குடுங்கன்னு கேட்டப்ப கண்ணீரு விட்டுட்டேன். அவரு என்னலேன்னு கேட்டாரு. சங்கதிய சொன்னப்ப வாலே எங்கூடன்னு கூட்டிட்டு போயி அவருக்க ஒப்பரம் வச்சுகிட்டாரு…”
குமரேசனின் கண்கள் கலங்கின. உதட்டை மடித்துக் கண்ணீரை அடக்கி சற்றுநேரம் இருந்து பெருமூச்சுடன் இடறியகுரலில் “கடவுள் உண்டு… ஆனா அவரு மனுசனாட்டுதான் கண்ணிலே படுவாரு… நெனைக்காத நாளில்ல எனக்க கண்கண்ட தெய்வத்தை” என்றார்.
லதா கண்களில் கண்ணீருடன் அவர் அருகே வந்து நின்றாள்.
“குட்டிக்கு இதெல்லாம் புதிசாட்டு இருக்கும்” என்றார் குமரேசன். கண்ணீரை துடைத்து புன்னகைத்து “என்னைய ஏசையா நொண்டின்னுதான் விளிப்பாரு. அடிப்பாரு. குடிச்சா கெட்ட வார்த்தையாலே குளிப்பாட்டுவாரு. ஆனா தொளில் சொல்லிக் குடுத்தாரு. முதல்ல இருந்தே டவர்லேதான் வேலை” என்றார் “ஏம்டி, நீ சாம் பிட்ரோடான்னு கேட்டிட்டுண்டா?”
“இல்லை” என்றாள்.
“நீ என்ன படிக்கே?”
“கம்யூட்டர் சயன்ஸ்.”
“ஏன் படிக்கே? கம்ப்யூட்டர்ல சோலி கிட்டும்னுதானே?”
“ஆமா.”
“அந்த சோலிகள் முழுக்க உண்டு பண்ணினவரு சாம் பிட்ரோடாவாக்கும். சாம் பிட்ரோடா இந்தியாக்காரரு, ஆனால் அமெரிக்காவிலே போயி அங்க செட்டில் ஆனாரு. டெலிகாம் தொளிலிலே பெரிய கம்பெனிய உண்டாக்கினாரு. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தொண்ணிலே அவரு இந்தியா வந்தப்ப இங்க அப்பவும் கம்பிவளியாத்தான் டெலிபோன் போய்ட்டிருந்தது… அவரு இந்திராகாந்தி கிட்ட பேசி டெலிகாம் சிஸ்டம் எவ்ளவு முக்கியம்னு சொல்லி புரியவைச்சாரு. பிறவு ராஜீவ் காந்திக்க காலத்திலே அவரை முழுப்பொறுப்பா போட்டாங்க… அப்டித்தான் இங்க ஒரு டெலிகாம் புரட்சியே வந்திச்சு… இவ்ளவு டவர் உலகத்திலே எங்கையும் இல்லை. அதுவும் இவ்ளவு குறுகின காலத்திலே… அதனாலேதான் இங்க அடுத்தகட்டமா கம்யூட்டர்லே இவ்ளவு வளர்ச்சி வந்தது… லெச்சக்கணக்கானவனுகளுக்கு வேலை கிடைச்சுது. இப்பல்லாம் யாருக்குமே அவருபேரு தெரியறதில்லை.”
“நீங்க லவ் ஸ்டோரியச் சொல்லுங்க பெரியப்பா.”
“அதாண்டே சொல்லிட்டிருக்கேன்… சாம் பிட்ரோடா ஒரு வார்த்தை அப்ப சொன்னார். We are the weavers of the sky. நாமதான் வானத்தை நெசவு பண்றோம் அப்டீன்னு… எங்களையெல்லாம் அப்டியே வெறியேத்தின வரி அது… வானத்தையே பாத்துட்டு முப்பது வருசம் வாழ்ந்திருக்கோம்.”
“அப்பதான் பெரியம்மாவை பாத்தீங்க?”
“ஆமா, இங்க டவர் எரக்சனுக்காக வந்தப்ப இவதான் டீ கொண்டு வருவா. அப்பல்லாம் அப்டி அளகாட்டு இருப்பா.. கருப்பா பளபளன்னு. எருமைக்குட்டீன்னு சொல்லுவோம்.”
“சும்மா கெடையுங்க” என்றாள் ராஜம்மா.
“நீ போடி… நான் எனக்க பிள்ளைகள்ட்ட பேசுதேன்.”
“சொல்லுங்க தாத்தா” என்றாள் லதா.
“அப்ப நாம யாரு? சோலி பெர்மனண்ட் ஆகல்ல. ஒரு காலும் இல்ல. சொந்தம்னு ஆருமில்லை. பிச்சக்காரன் கெடையாது, அம்பிடுதான்… இவ மேலே அம்பிடு பயக்களுக்கும் ஒரு கண்ணு.”
“அப்ப ஐட்டத்த எப்டி அடிச்சு எடுத்தீங்க?” என்றாள் லதா.
“ஏய் என்ன பேச்சு? வாய மூடு” என்றாள் மணியின் மனைவி.
“போம்மா, சொல்லுங்க தாத்தா.”
“ஒண்ணும் பண்ணல்லடீ… ஒருநாள் சாயங்காலம் வந்தா. இவளுக்க சாவி தொலைஞ்சு போச்சு… எடுத்து குடுத்தேன். டவரை பாத்து எம்பிடு உயரம்னு சொன்னா… வாறியா மேலே கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்… கூட்டிட்டுப் போனேன்.”
“மேலேயா?”
“பின்ன?”
“ஆனா இவரு அதுக்கு முன்னாலே மேலே போனதே இல்ல… எனக்கே அது ஒரு வருசம் களிஞ்சுதான் தெரியும்” என்றாள் ராஜம்மா.
“அதையெல்லாம் சொல்லுவோமா? கல்யாணத்தை பண்ணின பிறவுதானே சொல்லுவோம்” என்று குமரேசன் சிரித்தார்.
“பிறவு?”
“மேலே போயி வானத்துக்கு கீளே நின்னா… அப்டியே பறக்குத மாதிரி..”
“அப்பதான் சொன்னீகளோ?” என்றாள் லதா.
“சொல்லல்ல.. சொல்லாமே தெரிஞ்சுப் போச்சு”
“அய்யோ சூப்பர் லவ் ஸ்டோரி” என்றாள் லதா. “காமிராவா டிரோன்ல வச்சு அப்டியே மேலே தூக்கணும்.”
“பெரியப்பா அப்பல்லாம் மேலே போக லிஃப்ட் இல்லியா?” என்று மணி கேட்டான்.
“இல்ல ஆபீசர்கள் போறதுக்கு ஸ்பெஷலா ஒரு மோட்டார் வைப்பாங்க… உடனே எடுத்திருவாங்க…”
“அதுக்குப்பிறகு இங்க வரவே இல்லியா?”
“இங்க டவர் எரக்சன் முடிஞ்சதுமே எனக்கு மஸ்டர் ரோல் நம்பர் வந்திட்டுது. உடனே வந்து இவ அம்மாகிட்ட பொண்ணு கேட்டேன். தரமாட்டேன்னு சொன்னா. ஆனா இவ அளுது அடம்பிடிச்சா. வேற வளியில்லைன்னு பொண்ண குடுத்தா. குமாரகோயிலிலே கல்யாணம்… நேரா பாபநாசம் போய்ட்டோம். அப்ப அங்கதான் வேலை.. அப்றம் தேனி. போடிநாயக்கனூர், ஓசூர்… அப்டியே தமிள்நாடு முளுக்க போயாச்சு. கடைசியிலே ஏளுவருசம் திருச்சி… அப்டியே ரிட்டயர் ஆயாச்சு…”
“கடைசியிலே என்னவா இருந்தீங்க தாத்தா?”
“சூப்பர்வைசர்தான்… ஏசையா மாதிரி… நான்லாம் அப்டி ஆவேன்னு நினைச்சே பாத்ததில்ல. நமக்கு படிப்பு ஆறாம் கிளாஸாக்கும்.”
“ஆறாம் கிளாஸ் ஃபெயிலு” என்றாள் ராஜம்மா.
“நீ போடி… நீ எட்டாம்கிளாஸுதானே?”
“எட்டாம்கிளாஸு கூடுதலுதானே? ரெண்டுகிளாஸு கூடுதல்.”
“செரி… பெரிய படிப்பாளிதான்.. விடு” என்றார் குமரேசன். “உனக்க அம்மைக்கு கல்யாணம் ஆகிறது வரை உங்க பாட்டி டீக்கடை நடத்திட்டிருந்தா. அப்ப அடிக்கடி வாறதுண்டு. தொண்ணூத்தி மூணிலே அவ இங்க கடைய மூடிட்டு உங்க அம்மா கூட பேச்சிப்பாறை போயிட்டா… உங்க அப்பாவுக்கு அங்க அணைக்கட்டிலே வேலை… அதுக்கு பிறவு இப்பதான் இந்த ஊருக்கு வாறேன்.”
“ஆமா அம்மா சொல்லீட்டுண்டு… நான் இங்க வந்ததே இல்லை” என்றான் மணி.
“அப்பா நீங்க தெரிஞ்சா இங்க வந்தீங்க?” என்று லதா கேட்டாள்.
“சேச்சே, இங்க டிரான்ஸ்பர் வந்திச்சு… இனிமே ஒரு பத்து வருசம் இந்த ஏரியாதான்… உனக்க காலேஜும் இங்கதான்… இந்த வீடு எங்க ஜேஇ ஒருத்தர் கட்டினது. அவர் மகனோட அமெரிக்கா போனாரு. சகாய வெலைக்கு வந்தது… சட்டுன்னு வாங்கியாச்சு.”
“இஎம்ஐ எம்பிடு வரும்?”
“மாசம் இருபதாயிரம் வரும்.”
“கனம்தான்.”
“அம்மை இருந்திருந்தா வாங்க விட்டிருக்கமாட்டா… கடன் வாங்கப்பிடாதுன்னு சொல்லிட்டே இருப்பா” என்று மணி சொன்னான்.
“அவளுக்கு என்ன தெரியும்?” என்றார் குமரேசன். “கை அறியாம கடன் அடைஞ்சிரும்… வீடு நம்ம கையிலே இருக்கும். இல்லேன்னா அந்த பைசா செலவாயில்லா போவும்.”
“நீங்க திருச்சி வீட்டுக்கு எவ்ளவு இஎம்ஐ கட்டினீக?” என்றான் மணி.
“அது இருக்கும் ஒரு ஆறாயிரம்… ஆமா, கடைசியா ஆறாயிரம் கட்டினதா ஞாபகம்… கார்த்திக் அமெரிக்காவிலே இருக்கான். அவனுக்கு இங்க வீடு வேண்டாம். பிரியாவும் இங்க வரப்போறதில்லை, பாம்பேதான்… நாங்க இருக்கிற வரைக்கும் இருக்கட்டும். பிறவு அவங்க வித்துக்கட்டும்…” என்றார் குமரேசன். “நினைச்சா ஒருமாதிரி பக்குன்னு இருக்கு… நான்லாம் ஒரு வீட்டை சொந்தமா கெட்டுவேன்னு நினைச்சே பாத்ததில்லை.”
“பல்லுதேய்ங்க… தோசை விடுதேன்” என்றாள் மணியின் மனைவி.
குமரேசன் பல்தேய்த்துக் கொண்டிருந்தபோது ராஜம்மா அருகே வாளியில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள். அவர் நுரையை துப்பிவிட்டு “ஏம்டீ, நாம ஒருக்கா போயி அந்த டவரைப் பாத்தா என்னட்டி?” என்றார்.
“அய்யோ, அதையா?”
“ஆமா, ஏன்?”
“நான் இல்ல… சர்க்காராப்பீஸாக்கும்.”
“நானும் சர்க்கார் ஆளுதான்.”
“ரிட்டயர் ஆயாச்சுல்லா? சும்மா கெடயுங்க… டவரைப் போயி பாக்குதாராம்.”
“நீ வரவேண்டாம்டீ நான் போறேன்… நான் கெட்டினதாக்கும்.”
“சொன்னா கேளுங்க.”
“நீ போடி நாயே… உன்னையக் கூப்பிட்ட என்னைய செருப்பாலே அடிக்கணும் சனியன்.”
“எதுக்கு காலம்பற கெடந்து கீறுதீக?”
“உனக்க அப்பன் கீறுதான்… அடிச்சேன்னா.”
“அடியுங்க பாப்பம்.”
குமரேசன் திரும்பிக்கொண்டு பல் தேய்த்தார்.
“எப்ப்ப பாத்தாலும் இதேதான் அடி பிடி… காலும் கையும் ஒளுங்கா இருந்திருந்தா செயில்களிதான் தின்னிருப்பீக.”
“நொண்டீங்குதே?”
“ஆமா, என்ன அதுக்கு?”
“த்தூ போடி.”
அவள் உள்ளே போனாள். அவர் பல்லைத் தேய்த்துவிட்டு வந்து தோசை சாப்பிட்டார். சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார்.
“எங்க போறீக?” என்றான் மணி.
“தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு… பாத்துட்டு வாறேன்.”
அவர் பர்ஸை எடுத்துக் கொண்டிருக்கும்போது கையில் தண்ணீருடன் ராஜம்மா வந்தாள்.
“எங்க போறீக?”
“உனக்கென்ன அதிலே?”
“அத பாக்கவா?”
“இல்ல.”
“நானும் வாறேன்.”
“நீ வரவேண்டாம்.”
“வாறேன்.”
“போடி!”
“வாறேன்னு சொல்லுதேன்ல…”
“வேண்டாம்.”
“ரொம்ப கோவம்தான்… நான் இந்தா வந்திருதேன்.”
அவர் திண்ணையில் காத்து நின்றார்.
“என்ன பெரியப்பா?”
“உங்க பெரியம்மா வாறாளாம்.”
“ஓ, பளைய ஆளுகளா?” என்றான் “இங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?”
“அந்த போனாப்பிஸ் பக்கம்தான்.”
“நேரா போனா ரோடு… அங்க ஆட்டோ கிட்டும்.”
“சரி.”
புதிதாக உருவான காலனி. சாலை செம்மண்ணால் ஆனதாக இருந்தது. எல்லா வீடுகளும் புதியவை. எல்லா வீடுகளிலும் ஏதேனும் ஒரு வண்டி நின்றது.
“இந்த ஊரிலே இவ்ளவு புதிய வீடு, நினைச்சே பாக்கமுடியல்லை” என்றாள் ராஜம்மா.
“எல்லாம் அந்த ஒரு மனுசனாலே… சாம் பிட்ரோடா இல்லேன்னா ஐடி துறை இல்லை. அமெரிக்கப் பணம் இல்லை… ஆனா அவரை மறந்துட்டாங்க.”
“கொஞ்சம் சும்மா வாறியளா? அதே பேச்சு.”
“ஏட்டி நீ போட்டிருக்க கம்மலு செயினும் எல்லாம் அவரு போட்ட பிச்சையாக்கும்.”
“வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க… கண்டவன் போட்ட பிச்சைன்னுட்டு.”
“டெலிஃபோன் எக்சேஞ்ச் இங்கதானே?”
“இப்டி வளையணும்… இது ஆறாலுமூடு சங்சன்… இந்தா இதான்…” என்று ராஜம்மா சொன்னாள் .
“இந்த ரோடே பெரிசா போச்சே.”
“எல்லாரும் வண்டி வாங்கியாச்சு… நாமளே கார் வச்சிருக்கோம்.”
சாலையில் கார்களும் பஸ்களும் இடைவிடாமல் சென்று கொண்டிருந்தன. ஓசையும் புகையும் நிறைந்திருந்தது.
“கிராஸ் பண்ணி போகவே முடியாது போலிருக்கே… திருச்சியிலே கூட இந்த அளவுக்கு நெரிசல் இல்லை.”
“இன்னைக்கு ஞாயித்துக்கெளமை வேற.”
ஒரு சிறிய கூட்டம் சாலையை கடந்தது. “வா வா அவங்க கூடவே போயிடலாம்” என்றார் குமரேசன்.
அவர்கள் சாலையை கடந்ததும் ராஜம்மா திரும்பி பார்த்து “யப்பா… இவ்ளவு டிராஃபிக்கா? என்னது இதுன்னு இருக்கு.”
“இங்கதானே உங்க கடை இருந்திச்சு?”
“ஆமா ஞானம் நாடாருக்க தோட்டத்திலே… ஆமா, வித்துட்டாரு போல. இவ்ளவு பெரிய கடையில இங்க ஆரு சாமான் வாங்குவா?”
“ஏன் இவ்ளவு கார் போகுது, எல்லாரும் வாங்குவாங்க.”
“இஞ்சேருங்க எப்டி உள்ள போறது?
“சொல்லிப் பாப்போம்… சும்மா பக்கத்திலே போறதுக்குத்தானே.”
அவர் பர்ஸை எடுத்தார். “ஏட்டி, பளைய சூப்பர்வைசர் ஐடி கார்டு இருக்கு.”
“ரெண்டு வருசம் பளசுல்லா அது?”
“ஆமா சும்மா காட்டிப்பாப்பம். இந்த செக்யூரிட்டில்லாம் இப்ப சும்மா சாதாரண ஆளுக. அப்பல்லாம் ரிட்டயர்ட் மிலிட்டரிகாரங்கள மட்டும்தான் வைப்பாங்க. இப்ப ஏஜென்ஸிக்கு ஏலத்திலே விட்டுடறாங்க. அவன் ரெண்டாயிரம் மூணாயிரம் சம்பளத்திலே எந்திரிச்சு நடக்கமுடியாத குடிகாரப் பயக்களை கொண்டுவந்து உக்காரவைக்கான். பாதிப்பேருக்கு எளுதப் படிக்கக்கூட தெரியாது.”
மைக்ரோவேவ் நிலையம் ஓய்ந்து கிடந்தது. அதே பழைய கட்டிடம்தான். முன்னால் ஒரு வண்டிகூட இல்லை.
“இப்ப டெலிஃபோன் எக்ஸேஞ்சை இடம் மாத்திட்டான்போல… எங்கியுமே ஸ்டாஃப் இல்லை. இங்க எவனுமே இருக்க வாய்ப்பில்லை.”
காவல்மாடத்தில் இருந்தவர் அறுபது வயதான குடிகாரர். அப்போதும் போதையில்தான் இருந்தார். குமரேசன் தன் அடையாள அட்டையைக் காட்டினார். அதை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே போகலாம் என்று கைகாட்டினார்.
“பாத்தியா சொன்னேன்ல? உண்மையிலே ஒரு மினிட் புக்லே எழுதி கையெழுத்து வாங்கணும்… சிசிடிவிய நம்பி அப்டியே விட்டுடறான்.”
“ஆருமே இல்ல போலிருக்கே… கூட்டிப் பெருக்கிறதுகூட இல்லைன்னு நினைக்கிறேன்.”
“பாதி சாவடிச்சுட்டாங்க” என்றார் குமரேசன்.
எங்கு பார்த்தாலும் கம்பிகளும் உடைந்த இரும்புப் பொருட்களும் சிதறிக்கிடந்தன. அவற்றினூடாக சருகுகள். படர்ந்த கொடிகள்.
“ஞாபகம் வருதாடி?”
“ம்.”
“என்ன ஞாபகம்?”
“அப்பல்லாம் நான் தினம் அம்பதுகுடம் தண்ணி எடுப்பேன்.”
“அதான் ஞாபகமாக்கும்?”
“பின்ன?”
“சரிதான்.”
அவர்கள் டவர் அருகே சென்றனர். அதைச்சூழ்ந்து கைவிடப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள், ஏராளமான கம்பிச்சுருள்கள், உடைந்த தூண்கள், அடுக்கி வைக்கப்பட்ட துத்தநாகப் பூச்சுகொண்ட டெலிபோன் தூண்கள்.
“போல்லாம் அப்டியே போட்டாச்சு… ஒரு காலத்திலே போலுக்கு அடிச்சுகிடுவாங்க.”
“முள்ளு இருக்கு” என்றாள் ராஜம்மா.
“பக்கத்திலே போலாமா?”
“வழியே இல்ல போலிருக்கே” என்றாள் ராஜம்மா.
“இருக்கு… வா.”
அவர் மெல்ல உள்ளே சென்றார். அவள் பின்னால் வந்தாள்.
“யாராச்சும் பாத்துரப் போறாங்க.”
“யாரும் இல்ல இங்க… ஞாயித்துக்கிழமை வேற.”
கீழே ஒரு பேனல் ஆண்டனா இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் இரும்பு வடம் துவண்டு வளைந்து மேலேறிச் சென்றது.
குமரேசன் அண்ணாந்து பார்த்தார். வானம் ஒளியுடன் இருந்தது. கண்கூசி கண்ணீர் வழிந்தது. வடம் வானில் துளைத்து ஊடுருவி மேலே சென்றுவிட்டது போல தோன்றியது.
“ஏதோ ரிப்பேர் பாத்திருக்காங்க…”
“அப்டியே போட்டுட்டு போயிருக்காங்க?”
“ஞாயித்துக்கிழமைல்ல? எல்லாம் காண்டிராக்ட் லேபர்தான் இப்ப.”
அவள் டவரை தொட்டுப் பார்த்தாள். அண்ணாந்து பார்த்து கண்கூச குனிந்து கொண்டாள்.
“தஞ்சாவூர் கோபுரம் மாதிரி இருக்கு” என்றாள்.
“ஆனா இதுக்கு லைஃப் நூறுவருசம், கூடிப்போனா.”
“அப்றம்?”
“டிஸ்மாண்டில் பண்ணிருவாங்க… அதுக்குள்ள வேற டெக்னாலஜி வந்திரும்… டவரே தேவையிருக்காது.”
“அப்பவும் தஞ்சாவூர் கோபுரம் இருந்திட்டிருக்கும்.”
“ஆமா, அதுக்கு பிரயோசனம்னு ஒண்ணு இல்லைல்லா? இதுக்கு பிரயோசனம் இருக்கும். பிரயோசனம் இல்லாம ஆகிறப்ப தேவையில்லாம ஆயிடும்.”
“என்ன உளறிட்டிருக்கீங்க?”
“ஏட்டி, மேல போலாமா?”
“வெளையாட்டா? வயசு என்ன ஆகுது?”
“மேலே போய் நின்னமே, அந்த நாள் அப்டியே இருக்கு. இப்ப நடந்தது மாதிரி…”
“அதுக்கென்ன இப்ப?”
“வானத்திலே நின்னோமே!”
“போரும்… இப்ப எதுக்கு அது?”
“ஒருவாட்டி மேலே போக முடியுமாடி?”
“ஏன் போகணும்? சும்மா இருங்க.”
“ஒரே ஒருவாட்டி மேலே போகமுடியுமா? இனிமே நமக்கு அந்த சான்ஸ் உண்டா?”
“கிளவனும் கிளவியும் ஆயாச்சு… சும்மா கெடயுங்க.”
“கண்ண மூடிட்டு ஏறிருவோமா?”
“வேண்டாம்.. பிரஷர் இருக்கு… நல்லகாலிலேதான் நரம்பு தேய்ஞ்சிருக்கு… பத்து படி ஏறமுடியாது. என்னாலயும் ஏறிகிட முடியாது.”
“ஆமா” என்று குமரேசன் சொன்னார்.
“அன்னைக்குகூட ஏறினது ஏறிட்டோம். எறங்கிறப்ப கஷ்டப்பட்டிட்டோம்…”
“ஆமா, இப்ப கனவுதான் காணமுடியும்… மேலே போறது, அங்க வானத்துக்கு கீழே நிக்கிறது… தேவர்கள் கந்தர்வர்கள் மாதிரி மேகங்கள் நடுவிலே பறக்கிறது.”
“போரும் சும்மா போட்டு அனத்திக்கிட்டு.”
“அங்க போனா எந்த மாற்றமும் இருக்காது… நாம முப்பது வருசத்துக்கு முன்னாடி அங்க நின்னப்ப எப்டி இருந்துதோ அப்டியேதான் இருக்கும்.”
“ஏன்?”
“கீழ பூமிதானே மாறிட்டிருக்கு? வானம் அப்பவே இருந்து அப்டியேதான் இருக்கு… அந்த இடம் வானத்திலே இருக்கு. அங்க டைமே இல்லை. அப்டியே மாறாம இருக்கும்.”
“என்ன பேசுறியன்னே தெரியல்ல.”
“அங்கே நின்னுட்டிருந்திருந்தா நாம ரெண்டுபேருமே சின்ன வயசாவே இருந்திட்டிருப்போம் இல்லியா?”
“வயசானா புத்தி கழண்டு போயிரும் போல… போலாமா?” என்றாள் ராஜம்மா.
“இருடி, இப்பதானே வந்திருக்கோம்.”
“இந்த குப்ப நடுவிலே நின்னுட்டு என்ன பண்றது?”
“ஏய் உண்மையாகவே ஒண்ணு கேக்குதேன்… உனக்கு துக்கமா இல்லியா?”
“என்ன துக்கம்?”
“இல்லை, லைஃப் அவ்ளவுதானாங்கிற துக்கம்? இனிமே ஒண்ணுமே இல்லியான்னு தோணலையா?”
“இல்ல.”
“அப்ப மேலே நிக்கிறப்ப எல்லாமே கண்ணு முன்னால இருந்தது… முழு வாழ்க்கையே மிச்சமிருந்தது. இப்ப எல்லாம் தீர்ந்துபோச்சு. வெறும் ஞாபகங்கள்தான். எதிர்பார்க்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை.”
“இதெல்லாம் என்ன பேச்சு? இப்டியெல்லாம் யோசிச்சா அது பெரிய பாவம். நமக்கு என்ன குறை? வீடு கார் எல்லாம் இருக்கு. பென்ஷன் இருக்கு. பிள்ளைங்க நல்லா இருக்குதுங்க… இதுக்கு மேலே என்ன?”
“எனக்கு பத்தலை… எனக்கு லைஃப் இன்னும் வேணும்னு இருக்கு.”
“அடுத்த ஜென்மத்தை கேளுங்க. குடுப்பாரு.”
“அப்பல்லாம் எவ்ளவு மடையனா இருந்தேன். படிப்பு இல்லை. பணம் இல்லை. ஒண்ணுமே இல்லை. ஆனா என்னமோ இருந்தது. என்னன்னு சொல்ல? முழு லைஃபும் இருந்தது. செலவு பண்றதுக்கு முப்பது வருசம் கையிலே இருந்தது. அது பெரிய அஸெட். அது அப்ப தெரியல்லை. இப்ப என்ன தோணுதுன்னா, கையிலே வாழ்க்கையை வச்சிருக்கிறவன்தான் பணக்காரன்… எனக்கு இனிமே டைமே இல்லை.”
“போலாம், கிறுக்கு பிடிச்சு உளற ஆரம்பிச்சாச்சு.”
“இல்லடி, இதெல்லாம் எனக்கு எப்பவுமே மனசிலே ஓடுற நினைப்புகள்தான்.”
“இதெல்லாம் எப்ப ஆரம்பிச்சுது? எப்ப ரிட்டயர் ஆனீங்களோ அப்ப. வீட்டுலே வெட்டியா உக்காந்து உக்காந்து.. நெனைச்சு நெனைச்சு ஏங்கி…”
“ஆமா, அதுவும் உண்மைதான். எனக்கெல்லாம் லைஃபே வேலைதான். ஓய்வுநேரம்னாலும் ஆபீஸ்தான்… இப்ப வீட்டிலேயே உக்காந்திட்டிருக்கேன்.”
“சரி போலாமா, பாத்தாச்சுல்ல?”
“கொஞ்சம் மேலே ஏறுவோம்.”
“வேண்டாம்.”
“ஒரு தட்டு.”
“வேண்டாம். முடியாது… எறங்கவே முடியாது.”
“சரி, இந்த கீழே இருக்கிற தட்டு வரை… எட்டே எட்டு படிதான்.. வாடி, ப்ளீஸ்.”
“எதுக்கு?”
“அங்க நின்னு மேலே போய்ட்டதா கற்பனை செய்யலாம்… வா… ப்ளீஸ்.”
“அய்யோ உங்களோட…”
இரும்புப் படிகளில் ஏறுவதற்குள் மூச்சுவாங்கியது. எலும்புகள் ஓசையிட்டன. அவளுக்கும் மூச்சிரைத்தது.
அந்த சிறிய பீடத்தில் நின்று சுற்றிலும் பார்த்தார். “இதோ இங்கதான் அப்ப ஸ்டோர் யார்டு… நான் போட்டிருந்த கூடாரம்கூட அங்கதான்… அப்ப அங்க ஒரு மரம் இருந்தது. ராத்திரி ஏதோ ஒரு பறவை வந்து உப்பு உப்புன்னு ஒரே சத்தம்.”
“எங்க?”
அவள் திரும்பியபோது அந்த பீடம் திடுக்கிட்டது.
“அய்யோ” என்றாள்.
“என்ன பண்ணினே?”
“நான் ஒண்ணும் பண்ணல்லியே.”
அது ர்ர்ர்ர் என மேலேறிச்செல்ல தொடங்கியது.
“அய்யோ மேலே போகுது.”
“ஆமா இது லிஃப்டு…” என்றார் “நீ சுவிட்ச தொட்டுட்டே.”
“லிப்ட் உங்களுக்குத்தெரியாதா?”
“இது புதுமாதிரி…”
“நிப்பாட்டுங்க… சுவிட்ச் எங்க?”
“இருடி, மேலே போவம்.”
“அய்யோ…”
“இங்கபார், நாம மேலே போய் நிக்கணும்னு இருந்திருக்கு. இல்லேன்னா இப்டி லிஃப்ட் ரெடியா இருந்திருக்குமா?”
“எனக்கு பயமா இருக்கு.”
“நீ மேலே போனதுமே சின்னப்பொண்ணா ஆயிடுவே… பழைய எருமைக்கண்ணுக்குட்டி மாதிரி.”
அவள் சிரித்து முகம் சிவந்து உதடுகளை அழுத்திக் கொண்டாள்.
“அய்ய இப்பமே வெக்கம் வருதே.”
“ச்சீ…”
லிஃப்ட் மேலேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக கீழே சென்றன. சுருங்கிச் சுருங்கி இல்லாதவை என ஆயின. வெண்மையான ஒளிமுகில்கள் நிறைந்த வானம் அவர்க்ளை சூழ்ந்துகொண்டது. அவர்களின் ஆடைகளும் தலைமயிரும் காற்றில் பறந்து படபடக்கத் தொடங்கின.
***