ஆட்டக்கதை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆட்டக்கதை போன்ற ஒரு சிறுகதை ஓர் இணையதளத்தில் வந்தால் குறைந்தது 15 நாட்கள் கடந்துதான் அடுத்த கதை வரவேண்டும். ஆனால் அடுத்தடுத்த கதைகளாக வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு களம். இத்தனை மாறுபட்ட களங்களில் கதைகள் வந்து குவியும்போது வாசிப்பது மட்டுமல்ல நினைவில் வைத்துக்கொள்வதும் உள்வாங்கிக்கொள்வதும் பெரிய சவாலாக ஆகிவிடுகிறது.
ஆட்டக்கதையை நான் இன்னொரு முறை படித்த பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக்கதையை என்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து புரிந்துகொள்கிறேன். அந்த இரட்டைப் பெண்கள் என் வாழ்க்கையில் இல்லை. ஆனால் ஒரு பெண் என் வாழ்க்கையில் வந்தாள். இன்னொருத்தியின் இடத்தில் இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் கலந்த ஒரு கற்பனைப்பெண் இருந்தாள். இவள் கையில் கிடைத்தாள், அவள் கிடைக்கவில்லை. இரண்டுபெண்களுக்கும் நடுவே அலைக்கழிந்தேன்
இந்தக்கதையில் அந்த கதைசொல்லி அந்தப்பெண்ணை படிப்படியாக அறிந்துகொண்டே செல்லும் ஒரு பரிணாமம் இருக்கிறது. முதல்நாளில் உடலாக, காமமாக அறிகிறார். அதன்பிறகு முதல் சண்டை. அதில் அவளுடைய நஞ்சு என்ன என்று தெரிந்துகொள்கிறார். அவர்களின் இடங்கள், கடக்கக்கூடாத கோடுகள் தெளிவாகின்றன. அடுத்து அவளுடைய ஸ்பிரிச்சுவல் ஸ்ட்ரெங்த் அல்லது மாரல் ஸ்டிரெங்த் பிடிகிடைக்கிறது. அதோடு அவள் முழுமையாக மனைவி ஆகிறாள். அவள் மடியில் கிடந்து அழும்போது அந்த பரிணாமம் முழுமை ஆகிறது
ஆனால் அதன்பின் அவளுடைய மரணம். அந்த மரணத்தை உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் அவளுடைய இளமைக்கால படம். அதில் அவள் திருமணத்திற்கு முந்தைய நிலையில் இருக்கிறாள். இந்தக்கதையின் மிக ஆர்ட்டிஸ்டிக்கான இடம், மிகமிக நுட்பமான இடம் இது. உண்மையில் நான் இதுவரை வாசித்த கதைகளிலேயே மிக அணுக்கமாக உணர்ந்த ஒரு இடம். இந்த இடத்தில் ஒரே கணத்தில் அவள் மொத்த தாம்பத்திய வாழ்க்கையையும் கடந்து ரிவர்ஸில் சென்றுவிடுகிறாள். அவர் பெண்பார்க்கச் செல்வதற்கு முந்தைய இடத்தை அடைந்துவிடுகிறாள். அதன்பிறகுதான் அவருக்கு விடுதலை. அவர் நிறைவடைகிறார்
அவள் ஓர் இடத்திலிருந்து முளைத்து எழுந்து பெரிதாகி பின்னர் அப்படியே சுருங்கி மீண்டும் பழைய புள்ளிக்குச் சென்று முடிகிறாள். ஆச்சரியமான ஒரு கர்வ் இது. இந்தக்கதையை பலமுறை படிக்கவேண்டும். இதன் ஒட்டுமொத்த வடிவத்தை உள்வாங்கிக்கொள்ளவேண்டும்
எஸ்.ஆர்.ஸ்ரீதர்
***
வணக்கம் ஜெ.
ஆட்டக்கதை சிறுகதையை வாசித்தேன். கதகளியை முன்னர் பார்த்த அனுபவமோ அதனை உள்வாங்கும் பயிற்சியும் எனக்கு இல்லை. இருப்பினும், இந்தக் கதையில் ‘பலசமயம் பதம் நாலுவரிதான் இருக்கும் சொல்லியாட்டம் நான்கு மணிநேரம் ஓடும். இது ஒரு சொல்லியாட்டம்…” என வரும் வரிகளே முக்கியமானவை. கதகளியினைப் பற்றிய முதற்திறப்பாக இருக்கிறது.
அதுபோலவே ராஜசேகரன் நாயருக்குத் திருமணத்துக்கு முன்னால் ஏற்படும் ஐய உணர்வு மெல்ல இரச மாற்றம் அடைந்து வாழ்நாளெல்லாம் பல ஆட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. கருவுறுதல் வரையில் நான் என்ற சுயம் அழியாமல் இருக்கிறது. அதன் பின் ஆண் பெண் இருவருமே தம் சுயத்தை மெல்ல விட்டொழியத் தொடங்குகின்றனர். இந்தக் கதையின் சொல்லியாட்டம் அங்கிருந்தே தொடங்குகிறது.
அரவின் குமார்
***
எழுகதிர் [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன்,
எழுகதிர் ஒரு மாபெரும் கேன்வாஸில் நிகழும் கதை.
கதாநாயகனின் நண்பன் வழியாக கதை சொல்லப்படுவதால் ஒரு சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது. ஸ்ரீ யின் பார்வையில் நிகழ்ந்தால் எத்தனை சாகசங்கள், எத்தனை ததள்ளிப்புகள், எத்தனை அழைகளைப்புகள். அது ஒரு நாவலின் களமாக விரிய கூடியது. ஸ்ரீ யின் பார்வையில் நினைக்கவே திகிலாக உள்ளது. {பின்தொடரும் நிழல் வீரபத்ரனை போல்!}
வாசிக்கும் போதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முற்படும் போது கதையில் ஒரு திருப்பம் வருகிறது. ஸ்ரீ இடம் உள்ள அருண பிந்துவை பறித்து கொள்கிறார்கள், அது வெறும் கூழாங்கல்லாக உள்ளது(அர்ஜுனன் எடுத்த அஸ்வத்தாமனின் நுதல் மணி போல்). ஸ்ரீ யே அம்மணியாக மாறி கிழக்கே சென்று கொண்டே இருக்கிறான்.
கதையின் முடிவு ஒரு உச்சம். அவன் மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்று சென்று கொண்டே இருக்கிறான்.கிழக்கே அருணனை நோக்கி! (ஏழு எட்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகார்த்தாவில் தென்படுகிறான். ஒருவேளை அது இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றாக இருக்குமோ??!!)
தங்கள்,
கிஷோர் குமார்.
***
ஜெ. வணக்கம் நலம்தானே
“எழுகதிர்” படித்தேன். ஒரு திரைப்படமாக எடுக்கக்கூடிய எல்லாவித சாத்தியமும் இக்கதையில் உள்ளது. கொள்ளயடித்தவர்கள் யாரென்று தெரிவித்தபின் கதையை நகர்த்திக்கொண்டுபோவது ஒரு பெரிய கலை.தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஸ்ரீகண்டனும் கதைசொல்லியும் போன பாதையை ஒரு வரைபடமாக்கினால் மிகச் சரியாக இருக்கும். அதுவே கதையின் நம்பகத்தன்மை யைக் கூட்டுகிறது.ஸ்ரீகண்டனிடம் இருக்கின்ற பாதுகாப்புணர்வு, தப்பிக்கும் வழிகள் எல்லாம் பிரமிக்கவைக்கின்றன. ஒரு கைதேர்ந்த கள்ளனைப் படம்பிடித்துக் காட்டி உள்ளீர்கள்.
ஒரு பத்திரிகைச் செய்தி என்று கூறி அதன் அடிப்படையில் ஒரு கதையை எழுதி வாசகரை அதனுள்ளே இழுப்பது மிகப்பெரும் சவால்.எல்லாரும் கொள்ளையைக் கதையாக எழுதிக் கள்ளர்கள் பிடிபடும்போது கதையைச் சுபம் என முடித்து விடுவார்கள்.
ஒரு கட்டத்தில் கதைசொல்லிக்கு வெறுப்பு வந்து ஸ்ரீகண்டனைத் தாக்குவது யதார்த்தம். ஏனெனில் இது அவனுக்குப் பழக்கமில்லாத வழி.எனவே அச்சம் வருகிறது
அந்தத் தாக்குதல் மூலம்தான் அவன் தன்னால் தனியாகப் போகமுடியாது என்று உணரமுடிகிறது. எந்தத் திருட்டிலும் அல்லது கொலையிலும் ஈடுபடுபவர்கள் ஏதேனும் ஒரு தடயத்தைத் தாங்கள் அறியாமல் விட்டுவிடுவார்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் தங்கிய அறையில் ஒரு காசைவிட்டுவிட்டு வந்ததால் பிடிபடுவது காட்டப்படுகிறது. ஆனாலும் மீண்டும் ஸ்ரீகண்டன் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறான் என்றால் அவன்தான் எழுகதிரா? மீண்டும் பிரகாசமாகிப் பெரும் கொள்ளைக்குத் திட்டமிடுகிறானா. இல்லை சமூகத்தில்பெரிய் அந்தஸ்த்தில் இருந்துகொண்டு உயர்நிலைக்கு எழும் கதிரா என் வாசகருக்குப் பல கதவுகளைத் திறக்கும் அற்புதமான கதை இது.
வளவ துரையன்
***