பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

நான் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சரண் “ஏம்பா சிரிக்கிறீங்க?” என்று கேட்டான்.

“இருடா” என்றேன். படித்துக் கொண்டிருந்த வரிகள் என்னை அறியாமலேயே முகத்தை மலரச் செய்துவிட்டிருந்தன

“ஏம்பா?” என்றபடி பாப்பா வந்து என் தொடையை பிடித்துக்கொண்டாள் .

“ஏய் இருன்னு சொன்னேன்ல?”

“என்னப்பா? ஏன் சிரிக்கிறே?” என்றான் சரண்.

”சுமம இருடா… ஒரு அஞ்சு நிமிஷம்.”

“என்ன அங்க?” என்று ஜானகி கேட்டாள்

“ஒரு கதை…” என்றேன் “அதை படிச்சு முடிச்சிடலாம்னா வந்து இழுக்கிறாங்க.”

“ஏன்னு தெரியலியா உங்களுக்கு? உங்க மூஞ்சியிலே சிரிப்பை அவங்க எங்க பாத்திருக்காங்க? அதெப்டி, மூஞ்சியையே பாக்கிறதில்லியே? காலம்பற எந்திரிச்சு போனா அவங்க தூங்கின பிறகுதான் வர்ரது.”

நான் அவளை பொருட்படுத்தாமல் கதையை வாசித்து அதன் முடிவில் நிகழ்ந்ததை எண்ணி சிரித்தபடி செல்பேசியை அணைத்தேன்.

“ஏம்பா?”என்றான் சரண். அவன் முகமும் மலர்ந்திருந்தது.

பாப்பா “ஏம்பா? ஏம்பா?” என்றாள். “ஏம்பா ? அப்பா ஏம்பா?”

“ஏன் உனக்க ஒண்ணும் கேக்க தெரியாதா? அவன் எதாவது கேட்டா அதை நீ ரெண்டுவாட்டி கேட்டுடறது” என்றேன்.

“ரெண்டு வாட்டி கேக்கலை” என்றாள் பாப்பா. சுட்டுவிரலை காட்டி “மூணு மூணுவாட்டி” என்றாள்.

நான் ஹெட்போனையும் மூக்குக் கண்ணாடியையும் கழற்றி பாப்பாவின் கை எட்டா தொலைவில் வைத்தபின் அவளை தூக்கி மடியில் அமரச்செய்து முத்தமிட்டேன். அவள் அந்த மூக்குக்கண்ணாடியையும் ஹெட்ஃபோனையும் எவ்வகையிலேனும் எடுக்க முடியுமா என ஓரக்கண்ணால் ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.

“என்னோட செல்லூட்டி பாப்பா அழகா இருக்குல்ல? அதான் சிரித்தேன்”

“பாப்பா அளகு” என்று அவள் மார்பில் கைவைத்தாள். இரு கன்னங்களிலும் கைவைத்து தலையை சரித்து “இவ்ளூண்டு அளகு” என்றாள். அது ஏதோ நடிகை எங்கோ செய்தது.

“அப்பா நீ ஏன் ஆபீஸ் போகலை.” என்றான் சரண்

“அப்பா ஏன் போகலே?” என்றாள் பாப்பா ”அப்பா போகலியே”

“அப்பாக்கு ஆபீஸ் கெடையாதே” என்றேன்.

“ஏன்னு நான் சொல்றேன்… நான் சொல்றேன்” என்று சரண் முண்டியடித்தான். “கொரோனோ! கொரோனோன்னு ஒரு கிருமி!”

“கீர்மி!” என்றாள் பாப்பா “கீர்மீன்னு சொல்றான்.” என்று சரணை சுட்டிக்காட்டினாள்.

“கிருமின்னா புகை மாதிரி இருக்கும். கைய வச்சா ஒட்டிரும்… அப்றம் மூக்கிலே பட்டு….” என்று சரண் விளக்கினான். “அதனாலே மூக்கிலே கையை வைக்கப்படாது….சோசியலா இருக்கணும்”

நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “அப்பாவுக்கு லீவு பாப்பா… அதனாலே வீட்டிலே இருக்கேன்.” என்றேன்

“பாப்பாக்கும் லீவு!” என்றாள் பாப்பா.

“போடி… அப்பா இவளுக்கு ஸ்கூலே கெடையாது… இவ லீவு விட்டிருக்குன்னு சொல்றா.”

“விட்டிருக்கு!” என்றாள் பாப்பா உதட்டை சுழித்தபடி.

“போடி போடி போடி உனக்கு லீவு கெடையாது. எங்க ஸ்கூலுதான் லீவு.”

“எங்க ஸ்கூலும் லீவு” என்றபோது பாப்பாவின் கண்கள் நிறைந்தன. தலையை போ என்பதுபோல அசைத்தாள்

“போடி உனக்கு ஸ்கூலே கெடையாது.”

“ஸ்கூலே கெடையாதுன்னு சொல்றான்” என்று சரணை சுட்டிக்காட்டி பாப்பா அழத்தொடங்கினாள்.

நான் அவளை அப்படியே தூக்கி குலுக்கி முத்தமிட்டு “யாரு சொன்னா? அவனுக்கு தெரியாம சொல்றான்… பாப்பாக்கு ஸ்கூல் இருக்கு… ஆனால் தேனேமும் லீவு… சரியா… ஹை! பாப்பாக்கு லீவு! பாப்பாக்கு லீவு!”

“பாப்பாக்கு லீவு!”என்று அவள் மகிழ்ந்தாள்

“அப்பா அவளுக்கு ஸ்கூல் கெடையாதுல்ல?”

நான் அவனைப் பார்த்து கண்ணடித்தேன். அவன் அதைக் கண்டு இரண்டு கண்களையும் கொட்டி ரகசியமாக புன்னகைத்தான்.

“யப்பா இப்பதான் ரெண்டு பிள்ளைங்க இருக்கிறதே கண்ணுக்கு தெரியுது.தூக்கிக் கொஞ்சவாச்சும் தெரிஞ்சிருக்கே” என்றாள் ஜானகி.

அப்பா அவருடைய அறையிலிருந்து வெளியே வந்து “அதென்னடா கதை? சிரிச்சிட்டே இருந்தே?” என்றார்.

அம்மா அவர் பின்னால் வந்தபடி “ஆமா, இவன் மூஞ்சியிலே சிரிப்பைப் பாத்தே ரொம்பநாள் ஆகுது” என்றாள். “தங்கச்செப்பாட்டம் பொண்ணு இருக்கு. ஒருநாளைக்கு ஒரு அஞ்சு நிமிஷமாச்சும் அவளை கொஞ்சுடான்னு சொன்னா கேக்கமாட்டான்…”

“அவ முழிச்சிட்டிருக்கிறப்ப அவன் வீட்லே இருந்தாத்தானே?”

 “சரிதான், இப்ப இருக்கேன்ல?” என்றேன்

“அந்தக் கதை எங்க?”

“அது பத்திரிகையிலே இல்லை… இண்டர்நெட்டிலே.”

“உங்க ஆபீஸ்லே குடுத்தாங்களா?”

“ஆமா குடுக்கிறாங்க… நான் சிரிச்சுட்டேன்னு தெரிஞ்சா எங்க மேனேஜர் மேலே ரெண்டு வேலைய தலையிலே கட்டுவார்… இது வேற… இண்டர்நெட் மேகஸீன்லே வந்த கதை…”

“கம்ப்யூட்டர்ல எல்லாம் நம்மால படிச்சுக்கிட முடியாது” என்றார் அப்பா.

“என்ன கதைடா?”என்றபடி அம்மா மோடாவில் அமர்ந்தாள். அவளுக்கு மூட்டுவலி, எப்போதுமே மோடாதான்.

“இது என்னோட ஃபேவரைட் ரைட்டர் எழுதினது. அவரோட சின்னவயசு ஞாபகம் மாதிரி எழுதியிருக்கார். ஒரு அப்பாவி யானை கொப்பரைக்கு ஆசைப்பட்டு ஒரு வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுது.”

“அய்யோ…”

“சின்ன வீடு. ஆனா ரொம்ப பழசு. ஸ்ட்ராங்கா மரத்திலே கட்டியிருக்காங்க. அது அப்டியே ஜாம் ஆயிடுச்சு… ஊரே கூடி அதை வெளியே எடுக்க டிரை பண்றாங்க… என்னென்னமோ யோசனைகள்… ஊருக்குள்ள இருக்கிற அத்தனை மடத்தனமும் புத்திசாலித்தனமும் வெளியே வருது.” என்றேன் “நம்ம ரைட்டர் குடைய மாதிரி அப்டியே மடிச்சு எடுத்திரலாம்னு சொல்றார்”

“வேடிக்கையா இருக்கு” என்று அப்பா சொன்னார். “யானை போயி மாட்டிக்கிடறதுன்னா?”

“அப்றம் அதை எப்டி எடுத்தாங்களாம்?” என்று அம்மா கேட்டாள்.

“அதான் கதை…”

ஜானகி வந்து “ஏண்டி, டீ ஃபில்டரை எடுத்தியாடி?”என்றாள்.

பாப்பா அப்படியே உறைந்தாள். வாய் மட்டும் திறந்திருந்தது. கண்கள் விழித்து நோக்கின.

 “சொல்லுடி… எடுத்தியா இல்லியா?”

“அவ எதுக்கு டீ ஃபில்டரை எடுக்கணும்?” என்றேன்

“மிக்ஸி மூடிய எடுத்து எங்க வச்சிருந்தா தெரியுமா? வாஷிங்மிஷினுக்கு பின்னாடி… காலையிலே அரைமணிநேரம் வெறிபிடிச்சு தேடியாச்சு… அப்றம் கிடைச்சுது… வீட்டுக்குள்ள எலி மாதிரி சுத்திட்டே இருக்கவேண்டியது. எதையாவது எடுத்து எங்கியாம் கொண்டுபோயி பதுக்க வேண்டியது… சொல்லுடி எங்க வச்சே”

“அப்டி கேட்டா எப்டி? குழந்தை பதறிப்போச்சுல்ல?”

“ஆமா பதறுது…. கல்லுளிமங்கி மாதிரி நிப்பா…. இப்ப நான் ஃபில்டருக்கு எங்க போக?”

“சேலை முந்தானையாலே வடிகட்டலாமே?” என்றேன்.

“சும்மாருங்க டீயை தூக்கி ஸிங்கிலே விட்டிருவேன்… லீவு விட்டாலும் விட்டாங்க அடுக்களையிலே கிடந்து சாகிறது நான்”

“இப்ப உனக்கு என்ன வேணும்? டீ ஃபில்டர்தானே? டேய் அதை தேடி எடுத்து குடுரா.”

“இவதான், இங்கே அலைஞ்சுகிட்டு இருந்தா” என்று சரண் மூக்கைச் சுளித்து சுற்றுமுற்றும் பார்த்தான்.

“என்னது டீஃபில்டரையா மோப்பம் புடிச்சு பாக்கிறான்?” என்றார் அப்பா.

அவன் “இவ இங்க வந்திருக்கா…” என்று வீட்டுக்குள் சென்றான். “இங்க வந்திருக்கா இதோ ஜட்டி கிடக்கு..”  அப்பால் சென்று “இங்க டம்ப்ளர் தண்ணியை கொட்டியிருக்கா” என்றான். “இங்க டீத்தூள் கிடக்கு” அங்கே பார்த்தான். “அம்மா இந்தா ஃபில்டர்.”

“பாத்தியா, பாம்பறியும் பாம்பின்கால்.”

“இதெல்லாம் விரியன் பாம்புக்குஞ்சுகள்.”

“என்னை ஏதாவது சொல்றதா இருந்தா நேரிலே சொல்லு.”

“உங்களை சொல்லல… மண்ணுள்ளிப்பாம்பு குஞ்சுன்னா சொன்னேன்?”

“அப்ப என்னை சொன்னியோ?” என்றார் அப்பா.

“நான் யாரையுமே சொல்லல சாமி.”

அம்மா “அஹ் அஹ்” என்று சிரித்தாள்.

“பாட்டி காத்து ப்யூஸ் ஆவுது” என்றான் சரண்.

பாப்பா உறைநிலையில் இருந்து மீண்டு “நீ கெட்டவ” என்றாள்.

“ஆமாடி, நீ எடுத்து எடுத்து சேத்துவைக்கிறேல்ல… ரொம்ப நல்லவ”

“உங்கூட சண்டை”

“சண்டைன்னா போ” என்றாள் ஜானகி.

“பாப்பா ஊருக்கு போயிடும்” என்றாள் பாப்பா.

“போடி… ஊருக்குத்தானே? அங்க யாரு இருக்கா உனக்கு.. பாட்டி தாத்தால்லாம் இங்கல்லா இருக்காங்க?”

“அங்க ஆனை இருக்கு… பெரிய ஆனை… அது ஒரு வீட்டிலே மாட்டிட்டு அளுவுது.”

“அய்யோ இது கேட்டிட்டு இருந்திருக்கு” என்றாள் அம்மா.

“அது காதிலே ஒரு வார்த்தை தப்பாது. நான் ராகவன் கிட்ட பேசுறப்ப கேட்டுட்டு நின்னுட்டிருந்தது… அப்றம் பாத்தா ரீயிம்பர்ஸ்மெண்ட் செட்டில்மெண்டுன்னு என்னமோ சொல்லுது…” அப்பா சொன்னார்.

பாப்பா “செட்டிமென்” என்றாள். சமையலறைப்பக்கம் போய் ஜானகியை பாத்து “நீதான் செட்டிமென்” என்றாள்

”போடி” என்றாள் ஜானகி

‘நீதான் போடி, வவ்வவ்வே!”

“இங்க பாருங்க அறைஞ்சிருவேன் இவள… நான் இருக்கிற இருப்புக்கு”

நான் “பாப்பா நாம நாடகம் போடலாமா?” என்றேன்.

”போடலாம்!” என்று சரண் ஓடிவந்தான் “நாடகம் போடலாம்! நாடகம்!”

“பாப்பா நாடம் போட்டு… நாடம் போட்டு… அப்றமா நாடம்  சாப்பிடும்.”

“அய்யே பக்கி… நாடகம்னா தின்பண்டம் இல்லை. நெஜம்மா நடக்கிற மாதிரி நடிக்கணும்… இப்ப கதையை நான் சொல்றேன். இதோ இதான் சின்ன வீடு.”

“துக்ளியோண்டு வீடு” என்று பாப்பா சொன்னாள். “இவ்ளூண்டு” சுட்டுவிரலைக் காட்டி அதை மேலும் சின்னதாக்கினாள்.

“அதிலே யானை மாட்டிக்கிடுதாம்” என்றேன். “நான்தான் யானை.”

“ஓகே” என்று சரண் துள்ளினான்.

“பாப்பா யானை! பாப்பா யானை!”

“இருடி… பாப்பா நீதான் யானைக்காரன் ராமன்நாயர்.”

“மாமன் நாயி!”

“சரி மாமன்” என்றேன். “அப்பா நீங்கதான் கரடிநாயர்… அம்மா நீங்கதான் சந்திரி”

“அம்மா, அம்மா?” என்றான் சரண்

“எனக்கு இங்க வேலை இருக்கு” என்றள் ஜானகி

“நான் யாரு? அப்பா நான் யாரு?”

“நீதான் மந்திரவாதி மலையன்..”

“மந்திரவாதி மலையன்…” என்று அவன் கனவுடன் சொன்னான். “மாண்ட்ரேக் மாதிரியா?”

“சேச்சே, இவன் கிராமத்துப் பூசாரி மாதிரி… “

“அப்பா மேக்கப்பு?”

“மேக்கப்பு? சரி ரொம்ப வேண்டாம். சும்மா ஏதாவது செஞ்சுக்க”

“அப்பா பாப்பா ஹேங்கரை எடுக்கிறா”

“ஏண்டி ஹேங்கரை எடுக்கிறே?”

“ஆனேக்காரன்! ஆனேக்காரன் ஆனையை அடிக்கணும்…”

“அதுக்குள்ள கம்ப எடுத்தாச்சு… வளந்தா போலீஸ்காரியா ஆவா போல” என்று அம்மா சொன்னாள்.

“ஏய் கீழ போடு.. இந்த ஆனை ரொம்ப நல்ல ஆனை… அடிக்கக்கூடாது.” என்றேன். “நல்ல ஆனையை அடிச்சா அது அளுவும்ல?”

“நல்ல ஆனை” என்று பாப்பா சொன்னாள் “நல்ல ஆனைக்கு பிஸ்கட்டு குடுக்கணும்.”

“ஆமா, பிஸ்கட் குடுக்கணும்.”

“சரி ஒவ்வொருத்தருக்கும் என்னென்ன ரோல்னு சொல்லிடறேன்… இதான் கதை.”

கதையைச் சொன்னதும் அப்பா சிரித்து “என்னடாது வேடிக்கையா இருக்கு.”

“அதான் சொல்றாங்களே தோளுக்குமேலே தொண்ணூத்தொன்பது தொடைச்சுப்பாத்தா ஒண்ணூமில்லேன்னு… அதான். நாம சாமியக்கூட சின்னப்புள்ளையா மாத்தித்தானே வச்சிருக்கோம்” என்று அம்மா சொன்னாள். “குருவாயூர் போனா புடிச்சு மடியிலே குப்புத்து போட்டு குண்டியிலே ஒரு தட்டு தட்டணும்னு தோணிடுதுல்ல?”

“ஆனா அந்த லைன் நல்லாருக்கு, ஒரு ஆனையக்கூட மானம் மரியாதையா வாழ விடமாட்டீங்களாடா?” என்றார் அப்பா

“அது உங்களுக்கான டைலாக்.”

“நல்லாருக்கு” என்றார் அப்பா. “அன்னிக்கு ஒரு கோயிலிலே யானைமேலே என்னமோ விளம்பரம் எழுதி வச்சிருந்தான்… பிளாக்போர்டு மாதிரி நின்னுட்டிருந்தது…. பாவமா இருந்தது.”

நான் எழுந்து சென்று போர்வையை தலைமேல் போட்டு முகப்பை சுருட்டி தும்பிக்கையாக ஆக்கினேன். அதை ரிப்பன் போட்டு கட்டினேன். நான்குகாலில் துதிக்கையை ஆட்டிக்கொண்டே வந்தேன். ப்ரீ என்று பிளிறினேன்.

பாப்பா பதறி பின்னால் விலகினாள் “ஆனை போ! போ!” என்றாள். உண்மையாகவே பதறிவிட்டாள்.

நான் முகத்தை விலக்கிக் காட்டி “பாப்பா நான் ஆனையில்லை, அப்பா, அப்பா பாருடி!” என்றேன்.

“அப்பா” என்று சின்ன உதடுகளால் ரகசியமாகச் சொன்னாள்.

மீண்டும் தலையை மாட்டிக்கொண்டு பிளிறலோசை எழுப்பியபடி அவளை முட்டப்போனேன். அவள் கிரீச்சிட்டு அலறி ஓடி சோபா மேல் ஏறிக்கொண்டாள்.

நான் திரும்பி கரடி நாயரையும் சந்திரியையும் முட்டினேன். அதற்குள் பாப்பா இறங்கி “ஆனை! ஓடு ஆனை!” என்று என்னை துரத்தினாள். அவளை மீண்டும் முட்டினேன். அவள் சிரித்தபடி ஓடி மல்லாந்து விழுந்து கூச்சலிட்டபடி உருண்டு சோபாவுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

யானை அவளை பிடிக்க முயன்றது அவள் “ஆனை போ! ஆனை போ!” என்று கூச்சலிட்டாள்.

யானை வீட்டுக்குள் நுழைய முயன்றது. “கொப்பரை கொண்டா! கொப்பரை கொண்டா!”

“கொப்பரையும் கெடையாது ஒண்ணும் கெடையாது! போ”என்றாள் சந்திரி.

யானை உள்ளே நுழைய முயன்று மாட்டிக்கொண்டது. “அய்யய்யோ யானை மாட்டியாச்சே… வீட்டுலே யானை மாட்டியாச்சே” என்று சந்திரி கூச்சலிட்டாள். “ஆனைக்காரா ஆனைக்காரா உன்னோட ஆனையை கூட்டிட்டுப்போ”

யானைக்காரன் ராமன் நாயர் திகைத்து வாய் பிளந்து நின்றார்.

“ஆனைக்காரா என்ன செய்யுறே? யானையை கூப்பிடு… வீட்டை இடிச்சிரும் போல இருக்கே.”

கரடிநாயர் “என்ன நடந்தது? பாதி யானைதான் இருக்கு? மிச்சம் எங்கே” என்றார்.

“மிச்சம் உள்ள இருக்கு… யானை மாட்டியிருக்கு” என்றாள் சந்திரி.

“ஏய் ஆனைக்காரா அங்கே என்ன செய்றே? யானையை வெளியே எடுடா” என்றார் கரடி நாயர்

“ஆனை… ஆனைக்கு பிஸ்கட்டு வேணுமாம்” என்றார் ராமன் நாயர். கையை விரித்து “நெறைய பிஸ்கட்!” என்றார்

“ஆனைக்கு வேணுமா ஆனைக்காரனுக்கு வேணுமா?”

“ஆனைக்காரனுக்கு, ஆனைக்காரனுக்கு சாக்லேட்!”

“வெளங்கீரும்… முதல்ல இப்ப ஆனைக்காரனையில்ல வெளியே எடுக்கணும்போல இருக்கு”

“ஆனை பாவம்… அதுக்கு வலிக்கும்” என்றார் ராமன் நாயர்.

“யானை மெல்ல வெளியே வந்திரு… வெளியே வா”

யானை வெளியே வர முயன்று முடியாமல் உறுமியது.

“ஆனை அளுவுது… அதுக்கு சாக்லேட் குடுக்கணும்” என்று ராமன்நாயர் சொன்னார்.

“அய்யய்யொ, என்னடா இது, ஒரு யானையை மானம் மரியாதையோட வாழ விடமாட்டீங்களா?”

சந்திரி “யானை பயத்திலே பெரிசா ஆயிட்டுது… அதான் வெளியே வரமுடியலை” என்றாள்.

“ஆனைக்கு நெறைய சாக்லேட் குடுக்கணும்” என்று ராமன் நாயர் கருத்து தெரிவித்தார் “அது ரொம்ப பாவமான குட்டி ஆனை!”

“இப்ப என்ன செய்ய? யானையை இழுத்துப் பார்ப்போம்”

கரடிநாயர் யானையின் பின்பக்கத்தை பிடித்து இழுத்தார்.

“அய்யய்யோ என் வீடு உடையுதே… என்னோட சட்டி பானையெல்லாம் உடையுதே”

“சும்மா இரு… எனக்கு ஒரு மந்திரவாதியை தெரியும்…அவனை கூட்டிட்டு வாரேன்… ஏய் மந்திரவாதி! மந்திரவாதீ! ஓடிவா!”

“மந்திரவாதில்லாம் கெட்டவன் தெரியுமா?” என்றார் ராமன் நாயர்.

மந்திரவாதி ஜானகியின் சிவப்பு காட்டன் புடவையை முண்டாசாகக் கட்டியிருந்தான். கண்மையால் கரியால் பெரிய மீசை வரைந்து லிப்ஸ்டிக்கை முகத்தில் பூசி கொடூரமாக தெரிந்தான். யானை குபீரென்று சிரித்ததில் மேஜை அதிர்ந்தது.

பாப்பா திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மலையன் மந்திரவாதி “ஆஆஆ!” என்று கூச்சலிட்டுக்கொண்டு கையில் டார்ச்லைட்டை வைத்து சுழற்றி அடித்தபடி ஓடிவந்தபோது கதறி அழுதபடி பாய்ந்து சோபா மேல் ஏறிக்கொண்டாள்.

ஜானகி சமையலறை வாசலில் வந்து நின்று வாய்பொத்தி சிரித்தாள்.

“நாந்தான் மலையன் மந்திரவாதி! ஆஆஆஆ!” என்று மலையன் குட்டிக்கரணம் அடித்தான். “நான் எல்லாத்தையும் சின்னதா ஆக்கிடுவேன்… இந்தா இந்த கரடிநாயரை சின்னதா ஆக்கட்டுமா? இந்த வீட்டை சின்னதா ஆக்கட்டுமா?”

“மந்திரவாதி எப்டியாவது யானையை வெளியே எடுத்திடு” என்றார் கரடிநாயர்.

“அது, அது, அது கெட்ட மந்திரவாதி!” என்றார் ராமன்நாயர்.

“ஆமா மந்திரவாதி என்னோட சட்டிபானையெல்லாம் உடைஞ்சு போச்சு” என்றாள் சந்திரி.

“ஆனையை வெளியே எடுக்குறேன்… ஆனா நீங்கள்லாம் என்னைய கும்பிடணும்.”

“கும்பிடறோம் கும்பிடறோம்” என்றார் கரடிநாயர்.

“காலிலே விழுந்து கும்பிடணும்.”

“கும்பிடுறோம்… கும்பிடுறோம்.”

கரடிநாயரும் சந்திரியும் மந்திரவாதியை கும்பிட்டனர்.

“இந்த ஆனைப்பாகன் கும்பிடலை….ம்ம்ம்ம்ம் ஆனைப்பாகா என்னைய கும்பிடு.”

“போடா.”

“போடான்னு சொன்னா இந்த மந்திரக்குச்சியாலே உன்னை ஓணானா மாத்திடுவேன்.” என்றார் மலையன் “இந்த குச்சியோட லைட் பட்டா நீ ஓணானா ஆயிடுவே…”

“நீ கெட்டவன்!”

“நாந்தான் மேட் ஐ மூடி… ஹஹஹஹ!”

“போடா போடா போடா!”

“ஏய் கும்பிடுறியா இல்ல ஓணானா ஆகிறியா?”

“ஆஆ! ஓணானா மாத்துவேன் சொல்றான்!”

“பாப்பா சும்மா சொல்றான்” என்றார் கரடிநாயர்.

“சும்மா சொல்லலை, நிஜம்மா மாத்திருவேன்.”

“பாப்பா நீ இப்ப பாப்பா இல்லை, பெரிய ஆனைப்பாகன்.. கும்பிடு.”

“கும்பிட மாட்டேன்.”

“சரிப்பா மலையன் பூசாரி… அந்த ஆனைப்பாகன் கும்பிட மாட்டாராம். அதனாலே நாங்க ரெண்டுபேரும் தோப்புக்கரணம் போட்டுக்கறோம்”

“சரீ சரீ! தோப்புக்கரணம் போடுங்க! தோப்புக்கரணம் போடுங்க!”

இருவரும் தோப்புக்கரணம் போட்டார்கள்.

“மந்திரவாதியே கும்பிட்டா அவன் ஓணானா ஆக்கிருவான்” என்றார் ராமன் நாயர்.

“என் கையிலே இருக்குது மந்திரக்கோல்… இதிலே இருந்து வர்ர லைட்டை வச்சு இந்த ஆனையை ஆனைக்குட்டியா ஆக்கிருவேன்… சின்ன குட்டியா ஆக்கிடுவேன்… வேணுமானா ரொம்பச் சின்னக்குட்டியா ஆக்கிடறேன்” என்றான் மலையன் “ஒரு தவளை மாதிரி ஆக்கிடறேன்… இப்ப சொல்லுங்க சின்ன வண்டு மாதிரி ஆக்கிடறேன்… ஒரு டப்பாவிலே போட்டு குடுத்திடறேன்.”

“அய்யோ வேணாம்… பாவம் யானை.”

“சின்ன வண்டா மாத்தி டப்பாவிலே குடுத்திரவா? டப்பாவிலே போட்டு குடுத்திரவா?”

“வேண்டாம் மந்திரவாதி நாய் தூக்கிட்டுப்போனா யானை அழுதிரும்ல? சின்னக்குட்டியா மாத்தி வெளியே கொண்டுவந்திரு, போரும்” என்றார் கரடிநாயர்.

மந்திரவாதி யானையின்மேல் மந்திரக்கோலை சுழற்றி வெளிச்சம் போட்டார் ‘ஓம் கிரீம்! ஓம் கிரீம்! யானை குட்டியா மாறிடு! குட்டியா மாறிடு யானை! ஓம் கிரீம்! ஓக் கிரீம்!

யானை “ரீ” என்று கத்தியது. “அய்யோ நான் குட்டியா மாறிட்டேனே குட்டியா மாறிட்டேனே.”

“யானையையெல்லாம் அப்டி செய்யக்கூடாது” என்று ராமன் நாயர் பரிதாபப்பட்டார். “அது ரொம்ப பாவமான யானை!”

யானை குட்டியானையாக மாறி உருண்டு வெளியே வந்தது. குண்டியை ஆட்டியபடி சுற்றி வந்தது. “அய்யோ குட்டியா மாறிட்டேன்… குவா குவா குவா!” என்று மல்லாந்து படுத்து காலை ஆட்டியது

மலையன் “ஆ! யானையை குட்டியா மாத்தியாச்சு! நான் வாறேன்!” என்றபடி உள்ளே சென்றான்.

“ஆனைக்கு சாக்லேட் குடுக்கணும்… அது பாவமான யானை” என்றார் ராமன் நாயர் சோபாவின் மேல் பத்திரமாக நின்றபடி.

யானை பாப்பாவை முட்டப்போக அவள் சோபாவிலேயே துள்ளி குதித்து கூச்சலிட்டாள். யானை கரடிநாயர் அருகே செல்ல அவர் அதன் மத்தகத்தில் தடவிக்கொடுத்தார். சந்திரி அதன் மண்டையில் சுருட்டிய இந்துபேப்பரால் அடித்தாள்.

“அவ்ளவுதான் நாடகம் முடிஞ்சுபோச்சு!” என்றபடி நான் என் யானைத்தும்பிக்கையை கழற்றி அப்பால் போட்டேன். நாற்காலியில் அமர்ந்தேன்

சரண் முகத்தில் கரித்தீற்றலுடன் வந்தான்.

“அய்யே சாயம்… போயி சோப்புபோட்டு கழுவு” என்றாள் அம்மா.

“இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு” என்று அப்பா சொன்னார்.

“யானையை அப்டியே விட்டிருக்கணும்… மாட்டிட்டு கொஞ்சநாள் முழிக்கட்டுமேன்னு” என்று ஜானகி சொன்னாள்.

“எல்லா யானைகளும் மாட்டிக்கிட்டு முழிக்கிற ஒரு வீடு உண்டு!” என்றேன் “பிலாசஃபி!”

“ஆமா, பிலாசஃபி. ப்பூ!” என்றாள் ஜானகி.

“இவ என்னடா பண்றா?” என்றார் அப்பா.

பாப்பா அந்த பென்டார்ச்சை எடுத்துக்கொண்டுவந்து என் மேல் வெளிச்சத்தை அடித்தாள்.

“என்னடி பண்றே?” என்றாள் அம்மா.

“என்ன பாப்பா?”என்றேன்.

“என்னமோ மொணமொணன்னு சொல்றா” என்று அப்பா சொன்னார்.

“அப்பா அவ மந்திரம் போடுறா” என்றான் முகம் கழுவி வந்த சரண் “அவ உன்மேலே மந்திரம் போடுறா அப்பா.”

“அய்யோ என் செல்லக்குட்டி இப்ப மலையன் மந்திரவாதியா மாறியாச்சே.”

“டீ வேணுமா?” என்று ஜானகி கேட்டாள்.

“கொஞ்சம் குடு…” என்றேன் “அப்பாவுக்கு வேணும்னா.”

“எனக்கு கொஞ்சம்… அரை டம்ளர்” என்றார் அப்பா.

“காலம்பற இது மூணாவது டீ… ராத்திரி தூக்கம் போயிடப்போகுது” என்று அம்மா சொன்னாள்

“ராத்திரிதானே?” என்றார் அப்பா

சரண் “அப்பா பாப்பா உன்னை துக்குளிக்கூண்டா மாத்தியிருக்கா… இந்தா இந்த டப்பிக்குள்ள போட்டுட்டாளாம்”

நான் திரும்பி பாப்பாவைப் பார்த்தேன். “எதுக்கு பாப்பா அப்பாவை துக்குளிக்கூண்டா மாத்துறே?”

“ஆனையை, ஆனையை, ஆனையை!” என்றாள் பாப்பா “ஆனையை சின்னதா ஆக்கி…” சுட்டுவிரல் அந்தரத்தில் நீட்டி நிற்க “அது ரொம்ப நல்ல யானை” என்றாள்.

“யப்பா என்ன திமிரு பாத்தியா? இத்துனூண்டு இருக்கு. யானையை வண்டா மாத்தி டப்பியிலே போட்டு கையிலே வச்சிருக்கு”என்று அம்மா சொன்னாள்.

பாப்பா தலையை பாசத்துடன் அசைத்து “பாவமான ஆனை…” என்றாள் “அதுக்கு சாக்லேட் குடுக்கணும்”

ஜானகி டீ கொண்டுவந்து தந்தாள். அம்மா “எனக்கும் ஒரு வாய் குடுடீ” என்றாள் “ஒரு வாய் போரும்.”

“இதிலேயே எடு” என்றார் அப்பா.

“அவங்களுக்கு சீனி போடக்கூடாதே.” என்றாள் ஜானகி

“சரி ஒரு வாய்தானே? நாடகம் வேற நடிச்சிருக்கா” என்று அப்பா சொன்னார்.

அம்மா “வேணும்னு தோணலை. ஆனா அந்த மணம் குடிக்கச்சொல்லுது”

“நீ முதல்ல வாயைக் கட்டு”

“ஆமா நான் ஒரு பேச்சுக்காவது வேணாம்னு சொல்றேன்”

சரண் “அப்பா பாப்பா அந்த டப்பிய கொண்டுபோயி எங்கியோ ஒளிச்சு வைச்சிட்டா” என்றான்.

நான் திரும்பிப் பார்த்தேன். பாப்பா ஒருபக்கமாக நெளிந்தபடி சுவர் அருகே நின்றாள். பாவாடை நுனியை தூக்கி வாயில் வைத்து கடித்திருந்தாள். “வாடி இங்கே” என்றேன்.

அவள் போ என தலையாட்டினாள்.

“என் செல்லக்குட்டியில்ல? இங்க வா” என்றேன். “அப்பா உனக்கு முத்தா குடுப்பேன்”

அவள் நெளிந்தபடி அருகே வந்தாள். அவளை இடைசுற்றி வளைத்து தூக்கி மடியில் வைத்து “எங்கடி வச்சிருக்கே?” என்றேன்

அவள் “சொல்லமாட்டேன்” என்றாள்.

“அப்பாட்ட மட்டும் சொல்லு… ”

“மாட்டேன்”

“சரி அப்பா காதிலே சொல்லு…மொள்ளமா காதிலே சொல்லு.. ஆனைய எங்க வச்சிருக்கே?”

அவள் என் தலையை அணைத்து காதில் உதடுகளின் ஈரம் பட நெருங்கி “சொல்லமாட்டேன்” என்றாள்.

“அப்பா இப்ப ,அஞ்சு நிமிஷம் ,கண்டுபிடிச்சு குடுக்கறேன்” என்றான் சரண்.

“வேண்டாம் அது அங்கியே இருக்கட்டும்” என்றேன். “பத்திரமா அங்கியே வச்சுக்கோ பாப்பா. வெளியவே விடாதே, என்ன?”

பாப்பா “அது பாவமான ஆனை” என்றாள்.

***

முந்தைய கட்டுரைஎழுகதிர்,லூப்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–36