நகைமுகன், பூனை -கடிதங்கள்

 

நகைமுகன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

ஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின் மிகச்சரியான அடையாளம்.

 

அந்தக்கதை முழுக்க ஓடும் பகடி, உரையாடல்கள் வழியாக மிக எளிமையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவு வேடிக்கை. கெட்டவார்த்தையை வேண்டுமென்றால் பேங்கில் டெபாசிட் போடுகிறேன் என்பதில் ஆரம்பித்து ‘அவன் டீயிலே எச்சில் துப்பி கொண்டுவருவான்’ என்று அந்த சோகத்திலும் ஆறுமுகம் சொல்வது வரை

 

கடைசியில்  ‘மிரிகன்’ மொத்த நவநாகரீகத்திற்கே ஆப்பு வைத்துவிட்டு அப்பாவியாக சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். அந்த இடத்தில் அவன் அவ்வளவு பொறுமையாக, சீரியஸாக அந்த 320 நம்பருக்கும் ஆப்பு வைக்கும் காட்சியை நினைத்து சிரித்து கொப்பளித்துவிட்டேன்

 

சிவராமன்

 

அன்புள்ள சிவராமன்

 

சிரிக்கும்பூதங்கள் இந்து சிற்பமரபின் முக்கியமான அடையாளங்கள். எல்லா கோயில்களிலும் காணலாம். நகைமுகன் என்றால் அந்த பூதத்தையே குறிக்கிறது.

அவை மானுடனை நோக்கி சிரிப்பவை. எனேன்றால் மானுடன் அத்தனை எளியவன் சிறியவன். ஆனால் அவை நன்மை தருபவை, அருள்பவை. நம் மரபில் கொடூரமான பூதம் கிடையாது.  சதுக்கப்பூதம் சங்ககாலம் முதல் வழிபடப்படுகிறது

குமரிநிலம் பூதங்களுக்குரியது. பூதத்தான் என்று இங்கே நிறைய பெயர்களே உண்டு. பூதலிங்க சாமி அமர்ந்திருக்கும் நிலம். இங்கே பல்லாயிரக்கணக்கான பூதத்தான் கோயில்கள் உள்ளன. உருவம் இல்லாத திண்டுகளாக இருக்கும். சைவப் படையல். சில இடங்களில் சிலைகள் இருக்கும்

சிரிக்கும்பூதங்கள் கிரேக்க – ரோமானிய மரபில் உண்டு. சீன மரபில் உண்டு. அவை மங்கலத்தின் அடையாளங்கள். வளம் தருபவை. நோயை அகற்றுபவை

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

‘முருகன் வைத்த ஆப்பு’ என்ற ஒரு சொலவடையையே உருவாக்கிக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த ஒருநாளிலேயே என் மூளைக்குள் ஒரு ஐம்பது அறுபது சர்க்யூட்களில் அப்படி எவராவது ஆப்பு வைத்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கிவிட்டேன். சமூகவலைத்தளங்கள் செய்திச்சானல்களில் உழன்று மண்டை வீங்கிப்போய் அமர்ந்திருக்கிறேன். புத்தாண்டிலாவது கொஞ்சம் ஆப்புகள் வைக்கவேண்டும். ‘மிரிகன்’ அருள் தேவை

 

அந்த டெலெபோன் எக்ஸேஞ்சை மனம் என்று உருவகிக்கிறீர்கள். அது தனித்தனியாகவும் சேர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது. வெளியே உலகம் கூச்சலிட்டு கொப்பளிக்கிறது. இந்த மனம் அதனுடன் இணைணந்து அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. அதர்குத்தானே முருகன் ஆப்பு வைக்கிறான். அது ஒரு யோக நிலை. மனம் அடங்கும் நிலை.

 

எல்லா சர்க்யூட்டுகளுக்கும் ஆப்புவைத்து மூளையை அமைதியடையச் செய்கிறான் முருகன். குளிரக்குளிர மழைபெய்து எல்லா முகமும் முருகன் முகம்போலவே ஆகிவிடுகிறது

 

ராஜசேகர்

பூனை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பூனை கதையை நான் மீண்டும் சென்று வாசித்தேன். இங்கே முருகன் ஆப்பு வைத்த கதையை வாசித்த பிறகு அங்கே சென்றேன். அங்கேயும் நத்தானியேல் முருகன் போல இருக்கிறான். ஆனால் அவன் புலியை பார்த்துவிடுகிறான். அந்த பயத்துக்குத்தான் முருகன் பதில் சொல்கிறான். ஆப்பை வைடா, அது பூனையாக ஆகிவிடும்

 

ஜெ சில கதைகளில் இருந்து அற்புதமான ஒன்லைன் கிடைக்கிறது. ‘நாம என்னத்துக்கு இன்னொருத்தருக்க பூனையை புலியாக்கணும்?” என்ற வரி ஒரு அபாரமான பழமொழி போல இருக்கிறது

 

செந்தில்வேல்

 

அன்பின் ஜெ வணக்கம்.

பூனை கதையை வாசித்தேன். நத்தானியல் தான் அடையும் உளச்சீண்டலைக் கடக்கவே பூனையைப் புள்ளிப்புலி ஆக்கியிருக்கிறான். சிறியதைப் பெரிதாகவும் பெரியதைச் சிறிதாகவும் பொம்மையை உண்மையாகவும் எண்ணும் குழந்தைகளுக்கே உரிய மனநிலையின் வெளிபாடுதான் இந்தக் கதை.

 

அரவின் குமார்

 

 

முந்தைய கட்டுரைதங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொற்கொன்றை – கடிதங்கள்