“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆனையில்லா ஒர் அற்புதமான சிறுகதை. அந்தச் சிறுகதை இதற்குள்ளாகவே எங்கள் குடும்ப வாட்ஸப்குழுமத்தில் ஒரு தொன்மக்கதை போல புழங்க ஆரம்பித்துவிட்டது 82 வயதான என் அத்தை அதை குழந்தைக்கதை போல சிரிக்கச் சிரிக்க குழந்தைகளுக்குச் சொன்னார்கள். அதை அப்படியே பதிவுசெய்து சுற்றவிட்டிருக்கிறார்கள்.
எவ்வளவு அற்புதமான கதை என்று அந்த பலவகையான வடிவங்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதை ஒரு குட்டி நாடகமாக நானே எழுதினேன். [அதாவது ரெக்கார்ட் செய்தேன்] நான் ஆனையாக மேஜைக்கு அடியில் மாட்டிக்கொண்டேன். என் பிள்ளைகளும் அக்கா பிள்ளைகளும் சேர்ந்து என்னை வெளியே எடுக்க முயன்றார்கள். கடைசியில் என் மகள் பூசாரியாக நடித்து என்னை ‘ஆனைக்குட்டி’ ஆக மாற்றி வெளியே எடுத்தாள். சிரிப்பு என்றால் அப்படி ஒரு சிரிப்பு
நன்றி ஜெ
அருண்குமார் பத்மநாபன்
அன்பின் ஜெ,
எப்படி இருக்கிறீர்கள்.இந்த நாட்களில் நீங்கள் எழுதும் சிறுகதைகள் அத்தனையும் அற்புதமான வை.சூழ்ந்திருக்கும் செய்திகளுக்கு நடுவில் உங்கள் எழுத்துகளை மட்டுமே வாசிக்கின்றேன்.இந்நாட்களில் நீங்கள் ஆரம்பத்திலேயே எழுதியதை பின்பற்றியே வாசிப்பு எழுத்து இசை திரைப்படங்கள் என்று என் முறைமைகளை வகுத்து பின்பற்றுகிறேன்.இல்லையென்றால் நானும் இந்த எதிர்மறைகளில் கரைந்திருப்பேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறுகதை என்பதே எத்தனை பெரியது.நினைக்கும்போதே பிரம்மிப்பாய் இருக்கிறது.உங்கள் எழுதுதுகளே உங்கள் பலம்.இத்தனை உயிர்ப்பான சிறுகதைகள் எனக்கு மிகுந்த நிறைவளிக்கின்றன.தினமும் அதிகாலையில் முதலில் வாசித்து விடுகிறேன்.அதைப்பற்றி எழுதுவதற்கே எனக்கு சோம்பல்.அதனால் தான் உங்கள் எழுத்து வேகத்தை பார்த்து ஆச்சரியம் கொள்கிறேன்.
ஆனையில்லா மிகச்சிறந்த சிறுகதை.மரவீட்டில் ஆனை நுழைவது என்பதே ஒரு பதற்றமான குதூகலம் தான்.அதனச்சுற்றி நிகழும் ஒவ்வொரு வார்த்தையாடல்களும் பகடிகளும் உயிரோட்டமானவை.யானக்கு கிரீஸ் தடவுவதை யெல்லாம் சிரித்து சிரித்து வாசித்தேன்.என் பிள்ளைகளும் மிகவும் ரசித்தார்கள்.வீட்டில் மூன்று பேருக்கும் கதைகளை சொல்லி விடுவேன்.என் சிறு வயதில் இது போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து நாங்கள் கூடி நின்று பார்த்ததையெல்லாம் நினைத்தேன்.
அனைத்து சிறுகதைகளையும் மீண்டும் முழுமையாக வாசித்து விட்டு விரிவாக எழுத வேண்டும்.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை உற்சாகமாக கடந்து செல்ல உங்கள் எழுத்துக்களே காரணம்.மிக அற்புதமான சிறுகதைகளுக்கு
நன்றி ஜெ.
அன்புடன்
மோனிகா மாறன்.
ஏகம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏகம்- அதுதான் எங்கும் இருக்கிறது. பலவாக இங்கே பெருகி நீ நான் என்றெல்லாம் நிறைந்திருப்பது ஒன்றே. ‘அந்த ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம்’ கதையும் அதைத்தான் சொல்கிறது
ஆனால் ‘யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி’ நிற்பதும் அவனே. ஆகவேதான் மனிதன் எப்படியானாலும் தனிமையானவன், ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் நுழையவே முடியாது என்றெல்லாம் பேச்சு வருகிறது. அந்த ஆணவம் அறிவிலிருந்து வருவது .அதை அறிவை அழிக்கும் இசை மிக இயல்பாக கடந்துசெல்கிறது. ஒருவர் இருவராகலாம். இருவர் பல்லாயிரம் ஆகலாம். ஒருவர் கிடந்து இருவர் அமர்ந்து மூவர் நின்றால் அனைவரையும் ஒன்றாக்கும் நாலாவது அங்கே வந்துவிடுகிறது
சிவக்குமார் செல்வராஜா
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
புத்தாண்டு வாழ்த்துக்கள். அத்துடன் நன்றி. பெரும் புயலில் மலையை குடையெனத் தூக்கி நின்ற கண்ணன் நினைவுக்கு வருகிறான். எழுத்தின் ஆற்றலை வாசிப்பின் பயனை மீண்டும் நீருபிக்கக் கூடிய இச்சிறுகதைகள். உவகையுடன் கூறுவேன் ஆம் அவ்வாறே. ஜேகேவின் கதைகள் “கருத்துநிலை கதைகள்” என்கிறார் கோபாலன். அதற்கு எதிராக சொல்லப்படும் ”கருத்துக்களை எப்டி சொல்லியிருக்குங்கிறதுதான் இலக்கியத்தோட அளவுகோல்” என்பதன்படி நல்லதொரு கதைக்கு உதாரணமாகவும் ஏகம் சிறுகதை விளங்குகிறது.
இலக்கியம் கலை ஆன்மிகம் எல்லாமே தனிமையைப் போக்கத்தான் என்று கூறும் ராகவன் ஜேகேவுடன் மணிக்கு வாய்த்த தனிமை கண்டு ஏங்கி கண்ணீர் கொள்கிறார். கொல்லைபுறமான நுழைவல்ல தாங்கும் நிலமே அவை தாமென்று சொல்லாமல் சொல்கிறது ஏகம். ஜேகேவும் மணியும் இறைவனும் பக்தனும் அல்லது குருவும் சீடனும். எது தனிமை? எது நேச்சுரல் அன்நேச்சுரல்? என்று கேள்விகள் தோற்றுவிக்கிறது. தனிமை அருளப்பட்டவருக்கே உண்மையான தனித்தன்மையும் மெய்மையென்னும் பொதுமையும் அமைகிறது என்று காட்டுகிறது ஜேகேவின் பாத்திரம்.
அன்புடன்
விக்ரம்
கோவை