ஏகம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏகம் இந்தவரிசைக் கதைகளில் இன்னொரு பாணி. நீங்கள் உண்மையான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக வைத்து எழுதிய கதைகளில் ஒன்று இது. இதை நீங்கள் எழுதிய இரு கலைஞர்கள் கதையின் வரிசையில் வைக்கலாம் என நினைக்கிறேன்.
நேரடியான கதை. கதையில் முதலில் எழும் கேள்வி இரண்டு மனிதர்கள்- ஆணானாலும் பெண்ணானாலும்- நடுவே ஒரு அந்தரங்கமான இணைப்பு நிஜம்மாகவே சாத்தியம்தானா? அது ஒரு லௌகீகமான கேள்வி. லௌகீகத்தில் அதற்கான பதில் சாத்தியமே இல்லை என்பதுதான். ஆனால் கலையில் ஆன்மிகத்தில் சாத்தியம்தான். அதைத்தான் ஜேகே, புல்லாங்குழல் மணி இருவர் நடுவே நடக்கும் அந்த ஆழமான அந்தரங்க உரையாடல் காட்டுகிறது. அந்த பதில்தான் கதை. அந்தக்கருத்தை முன்வைக்கும் கதை, கருத்து கதையாக எப்படி மாறுகிறது என்பதையும் கதைக்குள்ளேயே சொல்லிவிடுகிறது.
ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெயமோகன்,
ஏகம் ஒரு அழகான சிறுகதை. அதன் அளவு சிறியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது. காரில் திருமணத்திற்கு செல்லும் ஒரு சிறு எழுத்தாளர் கூட்டத்தின் உரையாடலிலிருந்து கதை தொடங்குகிறது. ஜே.கே மீது அவர்களுக்கு ஒரு aversion உள்ளது. ‘கருத்துநிலை கதைகள்’ என்று கோபாலன் சொல்கிறான்.
அவர்கள் வேறொரு உலகில் வாழ்கிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் மனநிலை, உரையாடல் ஆகியவற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.கே – திருமணம் – பெருமாள் என இவர்கள் உரையாடல் நீடிக்கிறது.
இவர்கள் தான் புல்லாங்குழல் வாசிக்கும் மணியை சற்று நேரத்தில் கவனிக்கிறார்கள். சுற்றி உள்ள பொன்வண்டுகளுக்கும் பட்டுவேட்டிகளுக்கும் அவ்விசை ஒரு பொருட்டே அல்ல.
ஆனால் ஜே.கே வந்த உடனே அந்த இசையை அடையாளம் காண்கிறார். யானையின் வழித்தடம் உருவாகி , அனலென அமர்கிறார். ‘கருத்துநிலை எழுத்தாளரும்’ புல்லாங்குழல் இசைஞனும் சந்தித்து, உரையாடி, விடைபெருவது ஒரு கவித்துவ நிகழ்வு.
அந்நிகழ்வு கூட சுற்றியுள்ள கூட்டத்திற்கு புரிய வில்லை. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்கள். வண்டிகளின் கிரீச்சிடல்கள். முட்டல்கள்,மோதல்கள். ஒலித்திரள். காட்சித்திரள்.
இவற்றின் நடுவே ஒருசொல் இன்றி சென்றுகொண்டிருந்தது அவர்கள்தான், அந்த ஐந்து பேர்.
தங்கள்,
கிஷோர் குமார்.
அன்பின் ஜெ,
ஏதேதோ மன உளைச்சல்கள் மூளையை, மனதை குடைந்தது. கொரோனா கதைகளிடம் சரணடைந்தேன். எப்போதும் போலவே, உங்கள் கதைகளில் வந்த மனிதர்கள் என்னை உயிர்ப்பிக்க தவறவில்லை. சில பாத்திரங்களும் அவர்களது இடியோஸினசிரசி, அவர்களது எண்ண ஓட்டங்கள் பல இடங்களில் வெடித்து சிரித்துவிட்டேன். அதுவும் ஆறுமுகம் (நகைமுகன்) வரும் தருணங்களும், அவரது இம்ப்ரொவிஷஷன், இயலாமை அதனால் வரும் சிக்கல்களும் அருமை. உங்களது humour sense நிகர் யவருமில்லை.
பொதுவாக நகைச்சுவை என்று நாம் இனம்கண்டு வகுத்திருப்பது ஒன்று ஸெல்ப்-டேப்ரெக்காடிங் ,அல்லது இன்னொருவரது உடல், நிறம் வைத்து நக்கலடிப்பது என்று பெரும்பாலும் எண்ணுகிறார்கள் தவறாக. நீங்கள் எழுதும் ஹுமாயூர் தான் பெஸ்ட் நான் தமிழில் படித்ததில். இன்னும் படித்து விரிவாக எழுதுகிறேன் !
நீங்களும், உங்களது அன்பிற்கு உரியவர்களும் – உடல், மன நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.
பேரன்புடன்
கோபி
அன்புள்ள ஜெ எம்
பகடியும் நகைச்சுவையும் நக்கலுமாக இரு கதைகளும் சிரிப்பை வரவழைத்தன .
ஆனால், லூப் முடிவில் என்னைக் கொஞ்சம் அழ வைத்தது. மறைந்து போன ரிசெர்வ் காடு. நான் பிறந்து வளர்ந்த நெல்லையிலும் இப்படி ஒரு காணாமற் போன அழகு உண்டு. கோரி கோபுரம் தாண்டினால் கொக்கிரகுளம் வரும் வரை சில இடங்களில் இருபுறமும் சில இடங்களில் இடது புறமும் ஆக பசுமையான வயல்கள்.வண்ணாரப்பேட்டை வளைவினுள் தேசிகர் மண்டபம் தாண்டினால் இருபுறமும் மாமரங்களும் புளிய மரங்களுமாக ஒரு சோலைதான். மாலை ஆறு மணிக்கு அப்புறம் குயில்களும் கிளிகளும் எழுப்பும் இன்னிசை. எல்லாம் மறைந்து விட்டன. கடைகளும் ஹோட்டல்களும் மருத்துவ மனைகளும் என. ஒவ்வொரு முறையும் பார்க்கும் தோறும், இயற்கைக்கு மனிதன் செய்து விட்ட பாவம் துரோகம் என மனதுள் உறுத்துகிறது.
அன்புடன்
சிவா சக்திவேல்