ஆழி [சிறுகதை]

Rene Sandberg

 

“எங்காவது” என்று அவன்தான் சொன்னான்.

அவள் “ரொம்ப தூரம்லாம் வேண்டாம்…”என்றாள் “அதோட..”

“சொல்லு”

“நைட் தங்கமுடியாது”

அவன் புண்பட்டான். “நான் அதுக்கு திட்டம்போடலை”

“நான் அப்டி சொல்லலை”

“சரி ,எப்டிச் சொன்னாலும் அது இல்லை… சும்மா ஒரு அவுட்டிங். அவ்ளவு தான்”

“சரி ,நான் நேரடியாச் சொல்லிடறேனே. நாம நெருக்கமால்லாம் இருந்திருக்கோம்தான். ஆனால் மனசு விலகினபிறகு, இனிமே ரிலேஷன் இல்லேன்னு ஆனபிறகு, நீ எனக்கு யாரோதான். அப்டித்தான் நினைக்க தோணுது”

“கற்பு பத்தி ஜாக்ரதை வந்திட்டுது”

“ஸீ, உங்கிட்ட எனக்கு பிடிக்காத முதல்விஷயமே இந்த சினிஸிஸம்தான். பெரிய இண்டெலக்சுவல் மாதிரி… ”

“பிடிக்காத முதல்விஷயம் அப்டி நெறைய இருக்கு” என்று அவன் சொன்னான். அவனில் அவள் வெறுக்கும் அந்த கண்கள் இடுங்கிய  கோணல் சிரிப்பு. “அரசியல் பேசுறது, ஊர்ச்சண்டைகளிலே ஈடுபடுறது, ஃப்ரண்ட்ஸோட சுத்துறது, நிரந்தரமா ஒரே வேலையிலே இல்லாம இருக்கிறது…”

“ஸீ மறுபடி டிவிஸ்ட் பண்றே. நீ வேலைய மாத்துறத நான் குத்தம் சொல்லலை. நான் சொன்னது ஆம்பிஷனே இல்லாம இருக்கிறத…”

“அதாவது ஏறிட்டே இருக்கணும்… நீ அட்வைஸ் சொல்றப்பல்லாம் எனக்கு ஒரு கெட்ட சொப்பனம் வரும். ஒரு பெரிய டவர், அதுக்கு முடிவே இல்லை, மேலே போய்ட்டே இருக்கு. அதுலே ஸ்பைரல் ஸ்டெப்ஸ். நான் ஏறி ஏறி ஏறி போய்ட்டே இருக்கேன்”

“நாம இப்ப மறுபடியும் சண்டைய ஆரம்பிக்கவேண்டாம். அதான் எல்லாம் போதுமான அளவு போட்டாசே”

“சரி, இப்ப போலாமா வேண்டாமா?”

“போலாம்னுதானே சொன்னேன்?”

“எங்க போலாம்?”

“ஏதாவது கடற்கரை”

“கடற்கரையிலேதான் முதல்ல சந்திச்சோம்… அந்த செண்டிமெண்டா?”

“சேச்சே, எனக்கு கடற்கரைதான் புடிக்கும்… அதோட இங்கேருந்து கிட்டக்க இருக்கிறதெல்லாம் கடற்கரைதான்”

“கன்யாகுமரி?”

“சே, கூட்டமா இருக்கும்?”

“ஒரு ஐடியா, இங்க மணப்பாடு இருக்கு..”

“கடற்கரையா? கேள்விப்பட்டதே இல்ல?”

“அருமையான ஊரு…ஒரு அம்பது வருசம் முன்னாடி பணக்கார மீனவ ஊரா இருந்திருக்கு. இப்ப பணக்காரங்களோட வீடுகள் மட்டும்தான் இருக்கு. ரெண்டு பெரிய சர்ச்சு…”

“மணிரத்னத்தோட கடல் படம் அங்கியா ஷூட் பண்ணினாங்க?”

“சொல்லுவேன்னு நினைச்சேன்…”

“ரைட் போலாம்”

பைக்கில் அவன் கிளம்பும்போதே காலை மணி எட்டு. “கெளம்பட்டுமா?” என்று அவளிடம் பலமுறை கேட்டான்

“தோ, இப்பதான் வந்தேன். நைட் ஷிஃப்ட்… குளிச்சிட்டிருக்கேன்”

மறுபடியும் “ஆர் யூ ரெடி?”

“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்”

அவன் பொறுமையிழந்து காத்திருந்தான். அவளுடைய குறுஞ்செய்தி. “கம்”

அவன் கிளம்பி அவளுடைய ஹாஸ்டல் முகப்புக்குச் சென்று நின்று ஆரன் அடித்தான்

அவள் முகம் சுளித்தபடி வந்தாள்.  “ஏன் லேட்டு?”

“லேட்டா? நீ சொன்னதுமே கிளம்பினேன்…”

“இங்க நின்னா ஒருமாதிரி பாக்குறாங்க. அதான் உள்ள போய்ட்டேன் மறுபடி”

“நீ சொன்னதும் கெளம்பி சொன்ன நேரத்துக்கு வந்திட்டேன்”

“இங்க ஒரே எதிர்வெயிலு”

“நீ சொன்ன நேரத்துக்கு வந்திருக்கேன்.. சரியா”

“நான் இல்லேன்னு சொன்னேனா?”

“பின்ன,நான் என்னமோ பெரிய தப்பு பண்ணினமாதிரி சொன்னே?”

“நீ தப்பு பண்ணலை, நான்தான் தப்பு பண்ணினேன்… போருமா? பெரிய தப்பு. ரொம்ப பெரிய தப்பு”

“இப்ப எதுக்கு கத்துறே?”

“நீதான் கத்துறே”

“நான் கத்தலை… எனக்கு யார் கூடயும் எங்கயும் போகணும்னு இல்லை. யூ மே கோ”

அவள் திரும்பி நடந்தாள்

“ஓக்கே கெட் லாஸ்ட்”

அவன் பைக்கை திருப்பி ஒருகணம் தயங்கினான். அவளும் திரும்பி பார்த்தாள்

“எனிவே, திஸ் இஸ் த லாஸ்ட் ஒன்”

“ஆமா”

அவள் வந்து பைக்கில் ஏறிக்கொண்டாள். நெடுநேரம் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மணப்பாடு தொலைவிலேயே ஒரு பெரிய மணல்குன்றாகத் தெரியத்தொடங்கும்.

“அங்கயா கடற்கரை இருக்கு?” என்றாள்

“ஆமா”

“கடல்தெரியலையே”

“இந்த மணல்மேடு மறைக்குது… அந்தப்பக்கம் இருக்கு கடல்”

பைக் சுழன்று மேலேறியபோது இடதுபக்கம் மிகப்பெரிய வளைவாக கடல் தெரிந்தது. கடல் மேலேறி பின்னர் வழிந்து பின்னகர்ந்தமையால் விடப்பட்ட நீர்ப்பரப்பு தனியாக ஒரு ஏரிபோல கடலோரமாக தெரிந்தது. ஒரு பிரம்மாண்டமான நீலவண்ண பிரஷ்தீற்றல்.

அலைகளின் மேல் பின்காலை வெயில் கண்கூசும்படி தளதளத்தது. அலைவிளிம்பின் வெண்ணுரை விசிறிகள் போல, கொக்கிறகுகள் போல கரைமேல் வளைந்து வளைந்து பரவிக்கொண்டிருந்தது

“அய்யோ”! என்றாள்

“என்ன?”

“ஒரு பெரிய வெள்ளிக்கொலுசு மாதிரி இருக்கு”

“ஓ”

“என்ன?”

“இல்ல நான் ஒரு பெரிய வாள்மாதிரின்னு இப்பதான் நினைச்சேன்” அவன் வேண்டுமென்றேதான் அதைச் சொன்னான்

அவள் உதட்டைச் சுழித்து “ச்சே!” என்றாள் “என்ன அழகு…!”

“இது ஒரு குடா”

“குடான்னா?”

“பே, வளைகுடா, உட்கடல்னும் சொல்லுவாங்க”

அங்கே நூற்றுக்கணக்கான படகுகள் மணலோரமாக வரிசையாக பாதி புதைந்தவைபோல அமைந்திருந்தன. ஒரு ஊற்றுக்கிணறு இருந்தது. அங்கிருந்து பெண்கள் குடங்களில் தண்ணீர் கொண்டுசென்றனர்

“இப்ப மீன்பிடிக்க மாட்டாங்களா?”

“இவங்க ராத்திரியிலே பிடிக்கிறவங்களா இருப்பாங்க… காலையிலே திரும்பி வந்திருவாங்க”

சாலையின் இருபக்கமும் அலையலையாக மணல் விரிந்துகிடந்தது. மணற்குன்றின் சரிவிலேயே போடப்பட்ட சாலையின்மேல் கடற்காற்றில் மணல் சிறிய அலைகளாக பரவி அவ்வப்போது சுழித்துக்கொண்டிருந்தது

நேர் எதிரே இரண்டு பெரிய சர்ச்சுகளின் கோபுரங்கள் தெரிந்தன. ஒன்று இரட்டை கூம்புக்கோபுரங்கள் கொண்டது. இன்னொன்று கும்மட்டக்கோபுரம் கொண்டது

“ரெண்டு சர்ச்சா? இவ்ளவு பெரிசா இருக்கு?”

”ரெண்டு வெவ்வேறு பணக்காரங்க கட்டினது…”

“சட்டுன்னு ஐரோப்பாவிலே ஏதோ ஊருக்குள்ள வந்தது மாதிரி இருக்கு” என்றாள் “இவ்ளவு சின்ன ஊரிலே எவ்ளவு பெரிய சர்ச்சு”

“உண்மையிலேயே ரொம்ப போர்ச்சுக்கல் சாயல் உள்ள ஊர் இது. பழைய வீடுகள்லாமே அப்டித்தான் செங்கல் வைச்சு உயரமா கட்டியிருப்பாங்க.. பெரிய விண்டோஸ் இருக்கும். போன நூறுவருசத்திலே ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டி அந்த பீரியட் லுக்கை அழிச்சிட்டாங்க… அப்டியே மெயிண்டெய்ன் பண்ணியிருந்தா இந்தியாவிலேயே மிக அழகான டூரிஸ்ட் ஸ்பாட்டா இருந்திருக்கும்”

“இந்தியாவிலே அப்டி எந்த எடத்தையும் மெயிண்டெயின் பண்றதில்லை. பாண்டிச்சேரி கோவா எல்லாம் ஒரு காலத்திலே ரொம்ப பீரியட் லுக்கோட இருந்திருக்கு” என்றாள்

“ஐநூறு வருஷம் முன்னாடி ஒரு போர்ச்சுக்கீசிய கப்பல் இங்க கரையொதுங்கியிருக்கு. புயலிலே சிக்கி வழி தவறி வந்திட்டாங்க. அந்த காப்டன் இங்க ஒரு சிலுவையை நட்டார். அதான் தொடக்கம்… அதோ அந்த சிலுவைதான்”

மணற்குன்றின்மேல் நின்றிருந்த பெரிய மரச்சிலுவையை அவள் பார்க்கும்பொருட்டு அவன் பைக்கை நிறுத்தினான்

பின்னர் பைக்கை எடுத்துக்கொண்டு “புனிதசேவியர் இங்க வந்திருக்காருன்னு சொல்றாங்க. கடலோரமா அவர் தங்கியிருந்த சின்ன குகை இருக்கு”

“ஆனா கூட்டமே இல்லியே”

“அது அப்டித்தான். வெள்ளி ஞாயிறு மட்டும்தான் கூட்டம் இருக்கும்”

மிகப்பெரிய ஊசிக்கோபுரங்கள் எழுந்து நின்ற சர்ச்சைச் சுற்றி ஓட்டுக்கட்டிடங்கள் வரிசையாக இருந்தன. அவற்றின் முகப்புகளில் வேப்பமரங்கள் சிலுசிலுத்தன. ‘ஹோலி ஸ்பிரிட் சர்ச்” என்றான்.

இரண்டு கூம்புக்கோபுரங்களும் அருகே செல்லச்செல்ல பெரிதாகி தலைக்குமேல் சென்றுவிட்டன. அவற்றிலிருந்த புனிதர்களின் சிலைகள் மேகங்களுக்குமேல் திகழ்ந்தன

சர்ச்சுக்குள் எவருமில்லை. வண்ண ஓடு பதிக்கப்பட்ட தரை. மூன்று முகப்புகள் கொண்ட ஆல்டர் வண்ணக்கண்ணாடிகளில் இருந்து எழுந்த ஒளியில் ரகசியமான ஓர் அமைதியுடன் இருந்தது. தேவதூதர்களின் நடுவே ஏசுவின் பறந்தெழுந்த சிலை

அங்கே ஒரு தம்பூரா முழக்கம் இருப்பதுபோல தோன்றியது

“இங்க யாருமில்ல?”

“ஆமா”

அங்கே மெல்லிய குரலில் பேசினால்கூட முழக்கமாக ஒலித்தது

“கேண்டில்ஸ் கிடைக்குமா?”

“இரு பார்க்கிறேன்”

மறுபக்கம் ஒரு பெண் மெழுகுவர்த்திகள் விற்றுக்கொண்டிருந்தாள். அவர்கள் வந்ததை அவள் பொருட்படுத்தவில்லை

அவன் மூன்று வண்ணங்களில் மூன்று மெழுகுவர்த்திகள் வாங்கிக்கொண்டுவந்தான். அவள் நிமிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்

“இந்தா”

அவள் அவற்றை கேண்டில் ஸ்டேண்டில் பொருத்தி வைத்தாள்

“பிரே பண்ணலாமா?”

“ம்…”

அவள் கைகளைக் கோத்து கண்மூடி நின்றாள். அவன் அவள் முகத்தை பக்கவாட்டில் பார்த்தான். அந்த மிதமான ஒளியில் கன்னங்களும் கழுத்தும் மிகமென்மையானவையாக தெரிந்தன. அவன் உள்ளம் பொங்கி எழுந்தது. பார்வையை விலக்கிக் கொண்டான்

அவள் நீண்ட பெருமூச்சுடன் கண்விழித்து “போலாம்” என்றாள்

முன்பென்றால் அவள் என்ன வேண்டிக்கொண்டாள் என்று கேட்கலாம். சீண்டலாம். ஆனால் இப்போது அது எல்லைமீறல்.

மணல் மேட்டின் உச்சியில் ஹோலிகிராஸ் சர்ச் இருந்தது. சற்றே புதிய சர்ச். அதற்குள் ஓரிருவர் இருந்தனர்.

“கடற்கரைக்குப் போலாமா? இன்னொரு சர்ச்சு இருக்கு… செயிண்ட் ஜேம்ஸ் சர்ச். அதுக்கு திரும்புறப்ப போகலாம்”

“அந்த டோம் உள்ள சர்ச்சா?’

“ஆமா”

அவள் தலையசைத்தாள். பேச விரும்பாதவள் போல இருந்தாள்.

சர்ச்சின் பின்பக்கம் வழியாக சுழன்று சென்றபாதை கடலைநோக்கி இறங்கியது. தனிமையான கடற்கரை. ஒருவர் கூட இல்லை. மணல் காலடிகளே படாமல் அலையலையாக விரிந்துகிடந்தது.

கீழிறங்கி நடந்தனர். கடலின் ஓசை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

“இங்க கடலிலே குளிக்கலாமா?”

“சாந்தமான கடல்தான்… பாறையும் இல்லை. குளிக்கலாம்னு நினைக்கிறேன்”

புனித சேவியரின் குகை கடலோரச் சேற்றுப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டது. ஒரு குடைவரைக் கோயில் போலிருந்தது

“இங்கயா இருந்தார்?”

“ஆமா ஒருவருஷம் இங்க தங்கியிருந்திருக்கார்”

“ரொம்பச் சின்ன எடம்”

உள்ளே சென்று சிலுவையை வணங்கிவிட்டு வெளியே வந்தனர்.

“இங்க உக்காரலாம், வெயில் இல்லை” என்றான்

“ஆமா நினைச்சேன். ரொம்ப அழகான இடம்”

பின்பக்கம் பாறை மறைத்தது. நேர் எதிரில் ஒளிர்ந்த கடல். அவர்கள் அமர்ந்துகொண்டனர். அவளுடைய கூந்தல் எழுந்து பறந்தது. அதைச் சுழற்றி கொண்டையாக கட்டிக்கொண்டாள்.

“நைஸ் பிளேஸ்” என்றாள்

“முன்னாடியே ஒருதடவை வந்திருக்கலாம்” என்று அவன் சொன்னான்

“ஏன்?”

“இல்ல, நாம பிளசண்டா இருந்தப்ப”

“ஓ”

அவன் சிரித்து “ஆனா அப்பயும் சண்டைதான் பிடிச்சிருப்போம். நாம சண்டை போடாம எங்கயுமே போனதில்லை”

“ஆமா” என்று அவள் உதட்டை சற்றே கோணியபடி சொன்னாள். அவள் முகம் அழகில்லாமல் ஆவது அந்த கோணலின்போதுதான்.

“சொல்லப்போனா சண்டைக்குப்பிறகு ஒரு செக்ஸ்… அதனாலத்தான் மூணுவருஷம் இந்த ரிலேஷன் ஓடிச்சு… இல்லேன்னா…”

“சொல்லு”

“நிஜம்மா அப்பப்ப யோசிக்கிறதுண்டு. நமக்குள்ள ஒண்ணுமே காமனா இல்லை. ரசனை, மனநிலை, அபிப்பிராயங்கள். எதுவுமே… எப்டி ஒருத்தருக்கொருத்தர் டாலரேட் பண்ணிக்கிட்டோம்”

“ஆமா, ஆச்சரியம்தான். நான் என் ஃப்ரண்ட் கூட பேசிட்டிருந்தப்ப அவளே கேட்டா, எப்டிடி ஒத்துபோச்சுன்னு?”

“ஒத்துப்போகலை, அதானே பிரியறதா முடிவுபண்ணியிருக்கோம்?”

“ஆமா ஆனா எப்டி அட்ராக்ட் ஆனோம்?”

அது ஜஸ்ட் எ ஃபேண்டஸி… நீ அழகா இருந்தே. வெறும் லஸ்ட், அவ்ளவுதான்”

“இருக்கலாம்”

அவர்கள் சற்றுநேரம் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நல்லவேளை கல்யாணம் பண்ணிக்கலை. அதுக்குள்ளே ரெண்டுபேருக்கும் தெளிவு வந்திட்டுது” என்றாள்

“ஆமா” என்றான். “அதுக்கு காரணம் செக்ஸ்… ரெண்டுபேரும் வேண்டிய அளவுக்கு செக்ஸ் வைச்சுகிட்டோம்…ஸோ, நோ இல்யூஷன்ஸ். அதிலே இன்ஹிபிஷன்ஸ் வச்சிருக்கிறவங்கதான் ஹனிமூனுக்குப் பிறகு வருத்தப்படுறவங்க”

“ஆமா” என்றாள் “எவ்ளவு சீக்கிரம் விலகிடறோமோ அவ்ளவு நல்லதுன்னு எனக்கே ஒருவருஷமா தோண ஆரம்பிச்சிருச்சு”

“உண்மைதான். இல்லேன்னா நிறைய கமிட்மெண்ட் ஆயிடும்”

“அதைவிட மெமரீஸ்…மெமரீஸ் ஜாஸ்தியா ஆக ஆக அதுவே பெரிய கைவிலங்கு கால்விலங்கு மாதிரி ஆயிடும்”

“கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க பாதிபேரு சேந்திருக்கிறது அதனாலத்தான்”

“எஸ், எங்க அப்பாம்மா அப்டித்தான்… தெனம் சண்டைதான். இவ்ளவுக்கும் ரெண்டுபேரும் லவ் மேரியேஜ்”

“லவ் மேரியேஜிலேதான் சண்டை அதிகம்” என்றான். பின்னர் சிரித்து “அப்பாகிட்ட ஒருவாட்டி கேட்டேன். நீங்க எப்டிப்பா அம்மாகூட சேந்து இருக்கிறீங்கன்னு? ரெண்டுபேருக்கும் நடுவிலே ஒரு ஒற்றுமையும் இல்ல. ஒரு நல்ல ஃபீலிங்கும் இல்லை…”

“என்ன சொன்னார்?”

“ரெண்டுபேரும் பிரிஞ்சிரணும்…. அதான் நேச்சுரலான ஒரே வழி. கல்யாணமான ஆறே மாசத்திலே தெரிஞ்சுகிட்டது அது. ரெண்டுபேரும் பிரியறதுக்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கு. ஒவ்வொரு நாளும் நூறு புதுக்காரணம் வந்திட்டிருக்கு. ஆனா சேந்து இருக்கோம். அதுக்கான காரணம் ஒண்ணே ஒண்ணுதான், விதி அப்டீன்னார்”

“விதி… யாரைக்கேட்டாலும் அதை ஈஸியா சொல்லிடுவாங்க” என்றள்

“தெரியல்லைன்னு சொல்றதுக்கு பதிலா அந்த வார்த்தையை பயன்படுத்தறாங்க… அப்பா சொன்னப்ப நான் நினைச்சுகிட்டேன். ஒருநாளுக்கு ஆயிரம் கை அவங்களை பிடிச்சு விலக்குது. ஒரே ஒரு பெரிய கை பிடிச்சு ஒண்ணச் சேக்குது… அந்தப் பெரிய கையை கண்ணாலே பாக்கமுடியலை”

“நானும் இதையே நினைச்சுகிடறது உண்டு. உன்னை பாக்க வர்ரப்ப இன்னிக்கு சண்டைபோடக்கூடாது, பிளசண்டா பிரியணும்னு சொல்லிட்டே இருப்பேன்… அதுக்காக எல்லா மெண்டல் பிரிப்பரேஷனும் பண்ணிப்பேன். ஆனா சண்டைபோட்டு கண்ணீரோடத்தான் பிரிவோம்… ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு ஃபோர்ஸா மாறி நம்மளை பிடிச்சு பிரிச்சு ரெண்டுபக்கமா தள்ளுற மாதிரி”

“சரி ,அதை ஏன் திருப்பித்திருப்பி பேசிக்கணும்? மூணுமாசம் மாத்தி மாத்தி பேசியாச்சு. ஒருவழியா முடிவெடுத்தாச்சு…நீ யூஎஸ் போறே… நான் திருவனந்தபுரம்… மறுபடி ஒரு அஞ்சாறு வருஷம் சந்திக்கப்போறதில்லை…” என்று அவன் சொன்னான்.

“எனக்கு உண்மையை சொன்னா இந்த கடைசிச் சந்திப்பே ஒரு தப்பான ஐடியாவான்னு டவுட்டா இருக்கு…”

“பிரியறபோது கடைசியாச் சொல்லிக்கிடற வார்த்தைகள் விதைகள் மாதிரி. நினைவிலேயே இருக்கும், காலப்போகிலே வளரும். லைஃப் முழுக்க கூடவே வரும்… அதை கொஞ்சம் ஸ்மூத்தா ஸ்வீட்டா பண்ணிட்டா ஈஸியா வெளியேபோயிடலாம்னு ஜான் சொன்னான். லிஸியும் அவனும் பிரியறப்ப மானந்தவாடியிலே ஒரு பார்ட்டி குடுத்தாங்க. அவங்க ரெண்டுபேரும் இப்ப ஃப்ரண்ட்ஸா ஸ்மூத்தா இருக்காங்க”

“அது பார்ட்டி… பலபேரு இருந்தாங்க”

“ஓ, இப்ப மறுபடியும் கற்பு பத்தி சந்தேகம்… நான் உன்னை தொடக்கூட மாட்டேன், ஓக்கேயா?”

“சும்மா சும்மா எரிச்சல மூட்டாதே” என்று அவள் சொன்னாள்

“இதோபார் ஸ்மூத்தா போகணும், நான் உத்தேசிக்கிறது என்னன்னா….”

“நீ இப்பல்லாம் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை ஸ்மூத். உன் மைண்டிலயோ பேச்சிலயோ நடத்தையிலயோ இல்லாதது அது”

“மறுபடி சண்டைபோட்டு பிரியணுமா? அப்ப ஸ்மூத்தா போக இன்னொரு சந்திப்பு வேண்டியிருக்கும்… தேவையா?”

அவள் சிரித்துவிட்டாள். முடி அவிழ்ந்து தோளில் விழ மீண்டும் கொண்டைபோட்டாள்

“நைஸ் பிளேஸ்” என்றாள்

“ஆமா, இங்க கடல் அரபிக்கடல்மாதிரி நீலமா இருக்காது. ஒருமாதிரி ஆலிவ் கிரீன்”

“கடலை நினைச்சா சாதாரணமா இருக்கு. நேர்ல பாத்தா மனசு மலைச்சுடுது… எவ்ளவு பெரிசு… கற்பனையே செய்யமுடியாது. அதோட வைச்சுப்பாக்கிறப்ப மண்ணு ரொம்ப கொஞ்சம். அதிலயும் மனுஷன் வாழுற இடம் ரொம்ப கம்மி….”

“ஆமா நம்ம சந்தர் இருக்கானே, பைலட், அவன்கிட்ட ஒருவாட்டி கேட்டேன். நீ கீழே பாக்கிற லேண்ட்ஸ்கேப்பிலே எது அழகானதுன்னு. அவன் சிரிச்சுட்டான். மாப்பிளை எல்லா பைலட்டும் சொல்றதுதான் இது. இந்த பூமி ஒரு பெரிய தண்ணிச்சொட்டுமாதிரி. இதுக்குமேலே முழுக்கமுழுக்க கடல்தான்… அங்கங்க கொஞ்சம் மண்ணு ஒட்டிக்கிட்டிருக்கு”

“சோ பிக்!” என்றாள். “பூமியை அப்டியே சுத்தி கட்டிப்பிடிச்சு வச்சிருக்கு” கைகளை விரித்து “அப்டியே மேலே பறந்திரணும் போல இருக்கு”

“நீந்தலாமா?”

“இங்கயா?”

“ஆமா”

“இங்க யாருமில்லியே”

“அதனாலத்தான் கேட்டேன். ஃபர்ஸ்ட் டைம் கோவாவிலே நீந்தினோம்”

“ஃபர்ஸ்ட் டைமா” என்று அவள் மீண்டும் முகத்தை சுளித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் செக்ஸ் வச்சுக்கிட்டப்ப” என்றான் அவன்

“எஸ்” அவள் எழுந்து “நான் உள்ள ஷிமீஸ் போட்டிருக்கேன். போதும்ல?”

“அதுகூட தேவையில்லை”

அவள் சற்றே புன்னகைத்தாள்.

ஆடைகளை கழற்றிவிட்டு அவர்கள் கடற்கரை அருகே சென்றார்கள். அலைவிளிம்பு வெண்ணிற துப்பட்டா போல நெளிந்துகொண்டிருந்தது

“கடல் பூமிய உள்ளங்கையிலே வச்சு பாத்திட்டிருக்குன்னு தோணுது” என்றாள். “ஸப்போஸ் அதுக்கு மைண்ட் இருந்தா என்ன நினைக்கும்?” என்று அவள் கேட்டாள்.

’எதப்பத்தி?”

“பூமியப்பத்தி, நம்மளப்பத்தி?”

“நாம ஸோ இன்சிக்னிஃபிகெண்ட்…. நம்மள அது பாக்கவே பாக்காது” என்றான்.

“நோ” என்றாள். “இட் இஸ் ஸோ பிக்…. அதனாலே அதோட மனசும் பிரம்மாண்டமானது. அதனாலே எல்லாத்தையும் பாக்கமுடியும்… இதோ பறக்குற ஒவ்வொரு பறவையையும் அதுக்கு தெரியும்”

“இனஃப் ஃபிலாசஃபி….” என்றான்.  “அந்த அலைமேலே…. கமான், ஜம்ப்”

அவன் முதலில் அலைமேல் ஏறிக்கொண்டு அப்பால் சென்றான். அவள் அந்த அலையிலேயே ஒரு கணம் கழித்து தொற்றிக்கொண்டாள். இருவரையும் தூக்கி மேலேகொண்டுசென்று அப்படியே அழுத்தி வளைத்து மீண்டும் மேலெழுப்பி அகற்றிக்கொண்டுசென்றது அலை

“பிரம்மாதமான அலை, இல்ல?” என்று அவன் கூவினான்

“யா!” என்றாள்

அவளுடைய பற்கள் அலைகளின் தெறிப்புகளுக்குள் மின்னி தெரிந்தன. “கம் ஆன்”

அவள் கைவீசி அவனை நெருங்க முயன்றாள். ஓர் அலைவந்து அவளை தூக்கி விலக்கியது. அவள் கூந்தல் முகத்தில் படிந்தது. கூவிச் சிரித்தபடி அதை அள்ளி விலக்கிவிட்டு மீண்டும் அவனை நோக்கிச் சென்றாள். ஓர் அலை அவனை தூக்கிக் கொண்டுசென்றது.

அவன் எழுந்து கைவீசி “அந்த அலைமேலே ஏறிடு… கம் ஆன்!” என்று கூவினான்.

அவள் சிரித்து “எல்லா அலையும் தூக்கி விலக்குது” என்றாள்

“அலை இந்தப்பக்கமா வர்ரப்ப அதுமேலே தொத்திக்க!”

அடுத்த அலைமேல் அவள் ஏறினாள். அது அவளை முன்னால் கொண்டு சென்றது. ஆனால் அதன் இன்னொரு பகுதி அவனை அப்பால் தூக்கியது. அவன் கைவீசிக்கொண்டே பறந்து செல்பவனைப்போல அகன்றான்

சட்டென்று அவளுக்கு ஒரு வெறி வந்தது. அவனை பிடித்தே விடுவது என்று எண்ணி காலால் நீரை உதைத்து பாய்ந்து எழுந்தாள். அலை வளைந்து வர அதன்மேல் தாவி ஏறி மேலும் எழுந்து பறந்து விழுபவளைப்போல் சென்றாள். அவன் அவள் தொட்டுவிடும்படி அருகே அலைகளில் ஆடினான். “வா” என்று கைவீசினான்.

ஆனால் அவள் மீண்டும் பாய்ந்தபோது அவன் நீர்வளைவொன்றின் மேலேறும் விசையில் சறுக்குபவன் போலச் சென்றான். கீழிருந்து மேலே ஒரு நீலப்பாறையின்மேல் இருப்பவன் போல தெரிந்தான்

வா என்று அவள் கைகாட்டினாள். அவன் அப்பால் விழுந்து மறைய அவள் மேலெழுந்தாள். நீலப்பாறையின் உச்சியில் இருந்து சுற்றிலும் நீர் பளிங்கு அலைகள் என விரிந்திருப்பதைக் கண்டாள். அவன் மிக அப்பால் கைவீசி கொண்டிருந்தான். அவளை நோக்கி சிரித்து வா வா என்று கைவீசினான்

அவள் தாவி இறங்கி மீண்டும் எழுந்தபோது அவன் மிக அருகிலிருந்தான். அவன் இமையில் சொட்டிய நீர்த்துளிகளைப் பார்க்கும் அளவுக்கு. அவன் பற்களின் நடுவே ஈறுகள் தெரியும் அண்மையில். அவள் பாய்ந்து அவனை நோக்கிச் செல்ல அவனை ஒரு தூண்டிலில் மாட்டி சுண்டித் தூக்கி அப்பால் எடுத்தது நீர்

அவள் மூச்சிளைத்தாள். கண்களை மூடி மல்லாந்து படுத்து சற்று ஓய்வெடுத்தாள். அருகே அவன் குரல் “ஏய் என்ன பண்றே?”

அவள் புரண்டு கைவீசி நீந்தி எழுந்து “வா போதும்… போயிடுவோம்” என்றாள்

“சரி” என்று அவன் அவளை நோக்கி வந்தான்

“நீ விலகிப்போறே” என்றாள்

“இல்லை, நான் வரத்தான் டிரை பண்ணினேன்”

“கமான்” என்று அவள் திரும்பி கரைநோக்கி நீந்தினாள். அவளுக்கு சற்று முன்னால் அவன் கரைநோக்கிச் சென்றான். அவனுடைய இளநீலநிற ஜட்டி நீரில் மின்னி மின்னித் தெரிந்தது

ஓர் அலை எழுந்து அவனை அள்ளி மேலே தூக்கியது. அவளுடைய தலைக்கு மிக மேலே. அவள் அந்த அலை தன்னை அணுகுவதற்குள் விலகினாள். ஆனால் இன்னொரு சுழற்சி அவளை எடுத்துக்கொண்டது. அவள் மேலே சென்று நோக்கியபோது மிக அப்பால் அவன் சென்றுவிட்டிருந்தான்

அவள் கைவீசி அவனை கரைக்கு வரும்படி அழைத்தாள். அவன் வருகிறேன் என்று கை காட்டினான்

ஆனால் இன்னொரு அலை அவனை அடித்து சுழற்றி தூக்கி அப்பால் வீசியது.

அவள் “இங்க அலை பக்கவாட்டிலேயும் போகுது… நீ அதிலே இருக்கே” என்று கூவினாள். “அதை எதிர்க்காதே… அதோட போக்கிலேயேபோய் அங்க போயி கரையேறு”

“சரி, நீ இங்க ஏறிரு” என்றான்

அவள் கரைநோக்கி தன்னை உந்தி செலுத்திக்கொண்டாள். நீரை மிதித்து ஏறி அப்பால் பார்த்தாள். அவனை இன்னொரு அலை அறைந்து மேலும் கொண்டு சென்றது. அவன் அவ்வாறு விலகி குடாவின் வளைவு நோக்கிச் செல்வதே சிறந்தவழி

அவள் கரைநோக்கிச் சென்றாள். காலில் மணல் தட்டுபட்டது. தொடையை அறைந்த அலைகளில் தள்ளாடி நின்றபடி அவனை பார்த்தாள். அவன் தலை நெற்று போல அப்பால் அலைகளில் ஆடியது

ஆனால் இப்போது அலை திசைமாறியிருந்தது. அங்கே மூன்று திசைகளிலிருந்தும் அலைகள் வந்து ஒன்றோடொன்று அறைந்து நுரைசுழித்தன

“வா! வா!”என அவள் கைகாட்டினாள். அவன் கைகளை வீசி அவளை நோக்கி வருவதைக் கண்டாள். சற்று பயந்துவிட்டிருந்தான் என முகத்தின் வெறிப்பு காட்டியது. வெறியுடன் நீந்தி வந்தான். “வா வா!” என்று அவள் கைவீசி குதித்தாள்

அவனுக்குப் பின்னாலிருந்து பெரிய அலையொன்று வந்து அவனை தூக்கி மேலெடுத்து அவளை நோக்கிக் கொண்டுவந்தது. நீராலான யானை போல என்று அவள் அகம் நடுங்கியது. ஆனால் அந்த அலை அப்படியே சுருண்டு இழுபட்டு பக்கவாட்டில் ஒழுக இன்னொரு அலை அவனை அள்ளி தூக்கிக் கொண்டுசென்றது.

விசைமிக்க ஆற்றில் செல்பவன்போல அவன் சென்றுகொண்டிருந்தான். அவள் திகைத்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னொரு அலை அவனை அறைந்து அப்பால் கொண்டுசென்றது. இன்னொரு அலை. மீண்டும் ஒர் அலை. கால்பந்தை தட்டிச்செல்லும் கால்கள் போல

அவன் உருவம் மிகச்சிறிதாக ஆகி மிக அப்பால் சென்றுவிட்டது

அவள் நெஞ்சு உடைந்துவிடுவதுபோன்ற பீதியுடன் அவனை நீர்ப்பரப்பெங்கும் தேடினாள். அலைகள்தான் கொந்தளித்துக்கொண்டிருந்தன. மேலே அமர்ந்திருந்தபோது அத்தனை கொந்தளிப்பு இருக்கவில்லை. காற்றே இல்லை போலிருந்தது, ஆனால் அலைகள் சீற்றம் கொண்டிருந்தன. சீற்றமடைவது தெரியாமலேயே அவை நிலைமாறிவிட்டிருந்தன

அவள் எம்பிக்குதித்து நீர்வெளியை பார்த்தாள். விழிதொடும் தொலைவெங்கும் அவன் இல்லை.

ஒருகணம் எண்ணியபின் அவள் நீரில் பாய்ந்தாள். கைகளை வீசி வீசி கால்களால் உந்தி எழுந்து விழுந்து வாயால் மூச்சுவிட்டபடி அலைகள் மேல் எழுந்து அமிழ்ந்து கடலுக்குள் சென்றாள். இரண்டு முறை அவளை அலை தூக்கி இறக்கியபோதே கரை மிக அப்பால் அலையடிக்கும் செந்நிறக் கோடாக மாறிவிட்டிருந்தது.

அவள் தன்னை நோக்கி வந்த அலையை கண்டாள். அது அருகணைந்ததும் அதில் மிதித்து ஏறி மேலெழுந்து அதன் உச்சியில் ஒருகணம் இருந்தபோது சுற்றிலும் நோக்கினாள். எங்கும் அவன் இல்லை.

அவள் தனக்குள் அலறினாள். அவள் கைகளும் கால்களும் வலிப்பெழுந்ததுபோல் இழுத்துக்கொண்டு அதிர்ந்தன. உடல் எடைகொண்டதுபோல நீரில் இறங்கி சென்றது

ஆழத்திலிருந்து ஒரு குமிழி என எழுந்து வெடித்த தன்னுணர்வு அவளை உயிர்கொள்ளச் செய்தது. நீரை உந்தி மிதித்து மேலேறி ஒளியாலானதாக அலையடித்த நீர்ப்பரப்பை தலையால் மோதி உடைத்து வெளியே எழுந்து வாய் திறந்து மூச்சை இழுத்து உடலை நிறைத்துக்கொண்டாள்.

இன்னொரு அலையை கைகளால் பற்றிக்கொண்டு மேலேறி மீண்டுமொரு உந்தலில் அதற்கு அப்பால் விழுந்து மீண்டும் ஏறி கரைநோக்கிச் சென்றாள்.

இன்னொரு அலை அவளை தூக்கி கொண்டுசென்றது. அது திரும்பி வந்தபோது உந்தி எழுந்து அதைக் கடந்தாள். அடுத்த அலை நெடுந்தொலைவு கொண்டுசென்றது. கரை அவள் மேல் அறைவதுபோல அணுகி வந்தது

அவள் உள்ளம் வெறுமை கொண்டிருந்தது. எந்த எண்ணமும் இல்லை. ஏன் அப்படி இருக்கிறது என்னும் வியப்பும் உள்ளே சற்று இருந்தது. அவள் கைகால்கள் சோர்ந்தன. ஆழ்ந்த தூக்கத்தில் புதைந்து புதைந்து செல்வதுபோல. இமைகள் கூட தழைந்து மூடின. அவள் நீரில் மூழ்கினாள். கரையிலிருந்து சுருண்டு வந்த அலையால் அவள் தூக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டாள். தன் உடல் ஒரு மரத்தடி போல அலையில் செல்வதை அவள் உணர்ந்தாள்.

ஆனால் கடலில் இருந்து பேரலை ஒன்று எழுந்து வந்தது. அத்தகைய அலைகளுக்குமுன் முதலில் மொத்தக் கடல்நீரும் முன்னால் உந்திச்செலுத்தப்படும். பின்னர் உறிஞ்சி இழுக்கப்படுவதுபோல பின்னால் செல்லும். அடிவளைவில் அவள் தூக்கப்பட்டாள். அலை அவளை அறைந்தபோது அவள் தன்மேல் ஏதோ முட்டிக்கொண்டதை உணர்ந்தாள். உடலே அதை உணர்ந்தது. அவன் அவள் அவனை அள்ளிப் பற்றிக்கொண்டாள். அவனும் அவளை பிடித்துக்கொண்டான். இருவரும் தூக்கி கரைமேல் அறையப்பட்டனர். கீழிருக்கும் மணல்மேல் உடல்கள் பட்டன.

அவள் காலை மணலில் ஊன்றி ஒரே உந்தலில் மேலும் முன்னகர்ந்தாள். பின்வாங்கும் அலையின் நீர் அவர்களின் உடல்களால் கிழிக்கப்பட்டு அகன்றது. அவள் இன்னொரு முறை காலால் உந்தி மேலெழுந்து மணலில் விழுந்தாள். இருவரும் உடல்பிரிந்து மணல்சரிவில் மூச்சுவாங்கியபடி மல்லாந்தனர்.

வானம் கண்கூசும் ஒளியுடன் இருந்தது. அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. முதலில் மணல்போல நெஞ்சுக்குள் நிறைந்து எலும்புகளை வலிக்கச்செய்த மூச்சு இழுத்துவிட விட மெல்லக் கரைந்தது. அவள் ஒருக்களித்து கையூன்றி எழுந்தாள். உடலெங்கும் மணல். நின்றபோது உடலுக்குள் நிறைந்திருந்த குருதியில் கடலின் அலைதளும்பல் எஞ்சியிருந்தமையால் கால்கள் தள்ளாடின. அவன் எழுந்து கால்களை மடித்து அமர்ந்திருந்தான்.

அவள் “வா” என்று கைநீட்டினாள்

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் மயக்கத்தில் இருப்பவை போலிருந்தன. அவளை புதிய எவரோ என்று பார்ப்பதுபோல வெறித்தான்

அவள் மீண்டும் “வா ” என்றாள்

அவன் கையை நீட்டி அவள் கையை பற்றிக்கொண்டான். உடலை உந்தி எழுந்தான். உடனே தலைசுற்றி முழங்காலில் கையை ஊன்றி முன்னால் குனிந்து இருமினான். விக்கலோசையுடன் முனகி பின்னர் ஓங்கரித்து வாந்தியெடுத்தான். வெறும் கடல்நீர்

மூச்சிரைத்து கண்களை மூடிக்கொண்டு அப்படியே குனிந்து நின்றான்

“குனிஞ்சே நில்லு… சரியாயிடும்” என்றாள்

அவன் இன்னொருமுறை இருமி நீரை வாந்தியெடுத்தான். மூக்கிலிருந்தும் நீர் வழிந்தது.

“வா” என்று அவள் அவன் தோளைத் தொட்டாள். அவன் அவள் தோளைப் பிடித்துக்கொண்டான்

மணலில் தள்ளாடியபடி நடக்கையில் அவன் பலமாக தும்மினான். நீர் தெறித்தது. மீண்டும் மீண்டும் தும்மல்கள் எழுந்தன

ஆனால் தும்மல்கள் முடிந்ததும் அவன் நன்றாகவே தெளிவடைந்துவிட்டான். அவளை நோக்கி புன்னகைத்து “நல்லவேளை!” என்றான்

“ஆமா, பயந்துட்டேன்” என்றாள்

”நான் செத்தாச்சுன்னே நினைச்சேன். எப்டி கரைக்கு வந்தேன்னே தெரியலை”

மேலேறிச்சென்று ஆடைகளை அணிந்துகொண்டனர். கைகால்களில் இருந்த மணலை தட்டி உதிர்த்தனர். வெயிலும் காற்றும் கலந்து சற்று நேரத்திலேயே தலைமுடி பறக்க ஆரம்பித்தது

”போலாம்” என்று அவள் சொன்னாள். ‘இன்னொரு சர்ச் இருக்குல்ல? அங்க போய்ட்டு போலாம்”

அவன் “சரி” என்றான்

அவள் திரும்பி கடலைப்பார்த்தாள். அவன் அவள் என்ன பார்க்கிறாள் என்று பார்த்தபின் தானும் கடலைப் பார்த்தான். அவள் அவன் கையை இயல்பாக பற்றிக்கொண்டாள்.

பெருமூச்சு போன்ற ஒலியில் “போவோம்” என்று அவன் சொன்னான்

=============================================

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள்-விவாதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–41