அன்பின் ஜெமோ
தங்கள் வாசகர்களுக்கும் தங்களுக்கும் வணக்கம்! வாழி நலம்!
“திராவிட வேதம்” பற்றியான தொடர் இடுகைகள் அனைத்தும் கண்டேன்! கோவை சோமசுந்தரம் அவர்களுக்கு தாங்கள் அளித்த பதில், தங்கள் நுட்பமான வாசிப்பை மட்டும் காட்டவில்லை! அதையும் தாண்டி, சமயங்களும் தத்துவங்களும் ஒரே பரிமாணத்துக்குள் முடங்கி விடாமல், ஞான மரபிலே ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு, தத்துவப் பரிமாற்ற வழங்கியல்களும் நிகழ்த்த வேணும் என்ற தங்கள் அவாவினையும் காட்டுகிறது! வாழ்த்துக்கள்!
//நம் சூழலில் சைவர்களுக்கு வைணவம் பற்றியும் வைணவர்களுக்கு சைவம் பற்றியும் எந்த அளவுக்கு தெரியாமல் இருக்கிறதென்பதற்கு உங்கள் வினா ஓர் உதாரணம்//
மிக்க உண்மையே! இது அண்மையில் ஏற்பட்ட ஒரு போக்கா? ஏன் கேட்கிறேன் என்றால், அந்தந்த தத்துவச் சான்றோர்களின் தொன் நூல்களில், இப்படியான போக்கு இல்லை!
அத்வைதம் (அல்லிருமை) பற்றி முழுக்க அறிந்து வைத்துக் கொண்டே, விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூல்களில், அவற்றைச் சான்று காட்டி, எங்கெங்கே தங்களுக்கு முரண் என்று விளக்கப் போந்தார்கள்! பூர்வபக்ஷம் என்றே பெயர்! எதிர் அணியினரின் கருத்தை, அப்படியே தங்களின் நூலிலும் எழுதி வைக்க, எத்துணை தத்துவத் துணிவு இருக்க வேண்டும்?
சூத்திரம்-பொருள்-பூர்வ பட்சம்-சித்தாந்தம் என்று நான்கு பகுதிகளாக எழுதப்படும் உரைகளில், பூர்வபட்சத்தைப் படித்தே கூட, அந்தத் தத்துவத்தை அறிந்து விடலாம் போல் அல்லவா இருக்கு? :)
இப்படியான சமதள-இரு தரப்பு தத்துவ விசாரணை உத்திகள், பிற்காலச் சமய நூல்களில் ஏன் நின்று விட்டது என்று தான் தெரியவில்லை!
//சைவத்திலோ வைணவத்திலோ உள்ள வேறு எந்த நூலும் அவற்றின் அடியார்களால் வேதத்துக்கு நிகரானதாகக் சொல்லப்பட்டதில்லை//
ஜெமோ கூறியது மிகவும் உண்மையே! தாங்கள் சொன்னதற்கான மேலதிகத் தரவுகள் கீழே:
திராவிட வேதம்/ தமிழ் வேதம் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழியை மட்டும் ஏன் சிறப்பித்துச் சொல்ல வேண்டும்? இவ்வாறு சொன்னது வைணவர்கள் மட்டுமல்ல! சிவநெறிச் செல்வரான இடைக்காட்டுச் சித்தரும் கூட!
ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை – தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து – (இடைக்காடர்)
“திராவிட வேதம்” என்று சொல்லாட்சி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்து விட்டது (ஒன்பதாம் நூற்றாண்டு)
பக்தாம்ருதம் விஸ்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் “திராவிட வேத” சாகரம் (நாதமுனிகள்)
இப்படி, “வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்” என்ற கருத்தாட்சியும், சொல்லாட்சியும் ஆயிரம் ஆண்டுகளாக நிலவி, ஆலயங்களிலும் புறப்பாட்டில் தமிழ் வேதத்தையே இறைவனுக்கும் முன்னால் ஓதிச் செல்கிறார்கள்! தமிழ் வேதங்களுக்குப் பின்னால் தான், இறைவனின் பின்புறமாக, வடமொழி வேதங்கள் சொல்லப்பட்டு வருகின்றன!
வேதம் தமிழ் செய்தது என்றால், வேதத்தின் நேரடி (literal) மொழி பெயர்ப்பு என்ற பொருளில்லை! வேதக் கருத்துக்களின் தொகுப்பைத் தமிழிலே பெய்து வைத்தது என்றே பொருள்!
திருவாய்மொழியின் துவக்கப் பகுதிகள் “பொது மறையாகவே” இருக்கும்! “நாரணன்” என்ற பெயரெல்லாம் தேடினாலும் கிடைக்காது! தத்துவம் எல்லாம் சொல்லி முடித்து, சங்கத் தமிழ் அகப்பாடல்களாக வரும் போது தான், அது வைணவ நூல் என்றே தெரிய வரும்!
மேலும், வடமொழி வேதங்கள், முதல் மூன்று வருணத்தார் மட்டுமே ஓதலாம், பெண்கள் ஓதக் கூடாது என்றெல்லாம் அதிகாரி நியமம்-கால நியமம் செய்து வைக்கப்பட்டு இருந்தது! அதை மீறி, அனைவருக்கும் வேத/உபநிடதக் கருத்துக்கள், பொதுவில்/தமிழில் கிட்டும் வண்ணம் ஆக்கிய “நோக்கத்துக்காகத்” தான் “திராவிட வேதம்” என்று பெயரே தவிர, அது ஒரு சிறப்புப் பெயரோ, சமய அந்தஸ்தைக் காட்டும் சொல்லாட்சியோ அல்ல என்று உணர்ந்தால், இவ்வாறான ஐயம் எழாது!
இதனால் தான், ஆலயங்களில் கூட, இன்றளவும் ஒரு தமிழ் நூலைத் தனியாக வாழ்த்திப் பாடுவது மரபு!
அடியார்கள் வாழ, அரங்க நகர்வாழ
சடகோபன் தண் தமிழ்நூல் வாழ
…
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
அதே போல், வேதம் தமிழ் செய்த நான்காம் வருணத்தவரான மாறனை (நம்மாழ்வாரை), “முதல் தாய்” என்றும் போற்றுதல் மரபு! = ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்!
பிற்பாடு, பல சமய நூல்கள் எழுந்தாலும், வைணவ நூல்களே எழுந்தாலும் கூட, அவற்றைத் “திராவிட வேதம்” என்று அடைமொழியால் சுட்டவில்லை! அனைவருக்கும் கிட்டும் வண்ணம் முதலில், வேதம் தமிழ் செய்த நோக்கத்தால் மட்டுமே, திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது!
ஆனால் திராவிட “வேதம்” என்பதை, ஏதோ ஒரு அந்தஸ்துப் பெயராகப் பார்க்கத் தலைப்படும் போது தான், “அப்படீன்னா அது வேதம் இல்லையா, இது வேதம் இல்லையா” என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது! ஆனால் சமய நோக்கம் கடந்த தத்துவச் சித்தரான இடைக்காடருக்கு அப்படித் தோன்றவில்லை!
Regards,
krs
http://madhavipanthal.blogspot.com