ஆட்டக்கதை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
‘ஆட்டக்கதை’ என்றால் கதைகளிக்கான நாடகவடிவம்- சரிதானே? விக்கியில் சிலவிஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்.
ஒரு முழுநாவலுக்கான கதை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுக்கால முழுவாழ்க்கை. அதிலுள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும் எல்லா சரிவுகளும் மகிழ்ச்சிகளும் பதிவாகியிருக்கின்றன. கூடவே கதகளி என்ற கலையின் மறுபிறப்பும், அதன் உள்விவகாரங்களும். ஒரு கதைக்குள் இத்தனை விரிவான வாழ்க்கை என்பது ஆச்சரியம்தான்
இரட்டைப்பெண்களில் ஒருத்தியை மணந்தவனின் அலைக்கழிப்பு என்பது ஆச்சரியமான கரு. இதுவரை தமிழில் எவரும் இந்தவகையில்கூட ஒரு கதை எழுதியதில்லை என நினைக்கிறேன் [இந்த வரிசையில் வந்துகொண்டிருக்கும் கதைகளில் அனேகமாக எல்லாமே புத்தம்புதிய கருக்கள்தான்]
அவன் அவளை வெறும் உடலாக பார்க்கிறான். ஆகவேதான் அதேபோன்ற இன்னொரு உடல் அப்படி அலைக்கழியச் செய்கிறது. ஆனால் அவள் ஒரு பெர்ஸனாலிட்டியாக மாறியதுமே அந்த அலைக்கழிப்பு இல்லாமலாகிவிடுகிறது. அவளை unique ஆக மாற்றிக்கொள்கிறான். அவள் வேறு யாருமல்ல, அவளேதான். அவளுக்கு சமானமாக யாருமில்லை
ஆனால் அந்த கிளைமாக்ஸ்தான் அபாரம். அவளுடைய பழைய படங்களைப் பார்க்கையில் அந்த unique அம்சம் என்பது போய் கன்னித்தன்மை என்ற கள்ளமில்லாத விஷயத்தின் வடிவங்களாக ஆகிவிடுகிறார்கள்
ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ,
’ஆட்டக்கதை’ வாசித்தேன். நுட்பங்கள் அடர்ந்த கதை. நுட்பங்களை நோக்கும்போது கதையின் முழுமை கிடைப்பதில்லை. முழுமையை அப்ஸ்டிராக்ட் செய்து எடுக்கப்போனால் நுட்பங்கள் மாயமாகிவிடுகின்றன.
கதையின் மைய இழையின் snapshot தான் சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி இருவரின் புகைப்படம் என்று நான் நினைக்கிறேன். அந்த புகைப்படத்தில் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயருக்கு இருவரும் ஒன்றாகத் தெரிகிறார்கள். முதலில் ஒன்றாக தெரியும் ஒரு கோடு ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து சிறிது தூரம் தனித்தனியாக ஓடி மீண்டும் ஒன்றுடன் ஒன்று இணைவது போன்ற ஒரு வடிவம் கதையில் உள்ளது. கோடு முதலில் பிரியும்போது அவரின் வாழ்க்கையில் ஒரு கடந்துசெல்லல் நிகழ்கிறது. மீண்டும் இணையும்போது இன்னொரு கடந்துசெல்லல்.
எஸ் ஆர் என்னின் இளவயது பகற்கனவுகள் கலையும்போது சரஸ்வதி-லக்ஷ்மி ஒற்றைப்பிம்பம் இரண்டாகிறது. சரஸ்வதியின் தனித்தன்மைகள் தெரிகின்றன. காதல் ரசம்தான். ஆனால் அவர் மனம் அப்போதும் ஒருபுறம் எடையேற்றப்பட்ட தராசு தட்டு போலத்தான் உள்ளது. இன்னொரு தட்டில் அவர் எடைவைப்பது லக்ஷ்மியின் மீதான் வெறுப்பு. அருவருப்பு. பீபத்ஸம். தன் முதியவயதில் மீண்டும் அதையும் கடக்கும்போது இன்னொரு ஆழமான equilibrium நோக்கிச் செல்கிறார். நிறப்பிரிகை அடைந்த கதிர்கள் முப்பட்டகம் வழியே பின்னோக்கிச்சென்று மீண்டும் ஒளியாவது போல ஒரு பிரகாசமான equilibrium அவரின் வாழ்கையிலும் நிகழ்கிறது. கதகளியின் முழுமையும் கலைஞனின் வாழ்க்கையின் முழுமையும் ஒன்றைஒன்று பிரதிபலிப்பது போல உள்ளது.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ‘குரங்காட்டம்’ என்ற சொன்ன ஆணவக்காரியான சரஸ்வது ‘குரு சாபம்’ என்று சொல்லி அவரை காப்பது எப்படி நிகழ்கிறது? இப்படி சரஸ்வதியின் கேரக்டர் ஆர்க் ஏன் அவளின் மொத்த வாழ்க்கையையே ஒரு சிலவரிகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. வெறிகொண்ட அன்னையாக இருந்த சரஸ்வதி மீண்டும் அவரிடம் வந்துச் சேரும் சித்திரமும் அவளுள் நிகழும் அக மாற்றங்களும் இவ்வளவுதான் மனித வாழ்க்கையா என்று அதிரச்செய்கிறது.
கடைசியில் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயர் வெறுமையில் இருந்து மலர்வுக்கு செல்வது அபாரமான காட்சி. சலங்கையைக் கட்டி மெல்ல தட்டிப்பார்க்கும் காட்சி. அது ஒரு பிரம்மாண்டமான குளோசப் காட்சி. அந்தக் காலும் கேட்கும் சலங்கை ஒலியும். உதிர்வதற்கு முன் நிகழும் மென்மையான அசைவு. முத்தாய்ப்பு. முழுமை. கலைஞனின் முழுமை கலையின் முழுமையும் கூடத்தானே!
எத்தனை சொன்னாலும் கதையறியாமல் ஆட்டத்தைப் பார்க்கும் தத்தளிப்புதான். நெடு நாட்கள் கூடவே வரப்போகிற உங்களின் இன்னொரு கதை.
அன்புடன்,
ராஜா.
குருவி [சிறுகதை]
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு
வணக்கம். நேற்றிரவு வாசித்த குருவி சிறுகதையின் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மாடன் பிள்ளை அவர்களின் கதாபாத்திரம் மனதில் இருந்து நீங்க முடியாத அளவிற்கு அருமையாக உள்ளது.
பஸ்சை மறியல் செய்யும், போலீஸின் மீது துப்பும், தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும், போலீஸ் அடித்தால் கிக் ஏறும் , தண்ணி அடித்தால் மட்டுமே நிதானத்திற்கு வரும், மற்றவர்களின் அறிவுரைகளை கேட்டு கோபப்படும், உயர் அதிகாரியை மன்னிப்பு கேட்க வைக்க விரும்பும், அனைத்திற்கும் மேல் தன்னை ஆர்ட்டிஸ்டாக கருதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரம்.
கலைநயம் மிக்க வேலையை செய்வதற்காக மாவட்ட நிர்வாகமே தேடக்கூடிய ஒரு நபராக மாடன்பிள்ளையின் செய்நேர்த்தி உள்ளது.
மீதமான வயர்களை கொண்டு ஒரு தூக்கணாங்குருவி கட்டிய கூட்டை பார்த்த பின்பு, டி.இ. மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை எனக்கூறி தன்னுடைய பணி நோக்கி செல்லும் கணத்திலேயே உண்மையான ஆர்டிஸ்ட் மாடன்பிள்ளை பிறக்கிறான் என உணர்கிறேன்.
எப்பொழுது நம் விருப்பத்தினை நோக்கிய வலுவான பயணம், உண்மையான பயணம் தொடங்குகிறதோ அப்பொழுதே நம் மனம் சமநிலையை பெறுகிறோம் என நினைக்கிறேன்.
நன்றிகளுடன்
தே குமரன்.
தர்மபுரி.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களது ‘கொரோனா ‘ சிறப்பு சிறுகதைகள் ஒவ்வொன்றையும், மிக ஆழ்ந்த அமைதியுடனும் நிம்மதியுடனும் படித்து வருகிறேன். இந்த கதை சிறந்தது, அந்த கதை சிறந்தது என்ற சிறுபிள்ளைத்தனத்திற்கெல்லாம் போகமாட்டேன். உங்களால் உலக தரமான தலைசிறந்த கதைகளை தவிர வேறு எதையும் எழுத முடியாது. உங்களை புகழ்வதற்காக எழுதப்பட்ட வரிகள் அல்ல இவை . கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தங்களது படைப்புகளையும், இணைய தளத்தையும் படித்துவருபவன் என்ற முறையிலும், தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை ஓரளவேனும் படித்தவன் என்ற முறையிலும், தகுதியிலுமே இவ்வாறு கூறுகிறேன்.
இன்று (11.04.2020) வெளியாகியுள்ள ‘குருவி ‘ ஒரு அற்புதமான கதை. மனிதனுக்கும் ஆர்டிஸ்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி மாடன் பிள்ளையின் உளறல்கள் அல்லது தத்துவங்கள் மிக அருமை. அப்பேர்ப்பட்ட ஆர்டிஸ்டு, DE பப்ளிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டிசன் வைக்கிறான். ஆனால் குருவி ஆர்டிஸ்டு முன்னாள் தான் ஒன்றுமே அல்ல என்று உணர்கிறான். தன்னுடைய ஆர்டிஸ்டிக் ஒர்க் டிவியில் வருவதை விட, அந்த தூக்கணாங்குருவி கூடு மெட்ராஸிலே ராஜீவ்காந்தி செண்டரிலே வைக்கணும் என்று கோரிக்கை வைக்கிறான், அகம்பாவமற்ற உண்மையான “ஆர்டிஸ்டு “.
தங்களது கதைகள்தான் இன்றைய வீட்டிற்குள் அடைந்து கிடைக்கும் சூழலில் என்னை உணர்வுபூர்வமாகவும் உயிர்ப்புடனும் வைத்துள்ளன. மலைபாம்பிற்கு இல்லாத உரிமையா காட்டின் மேல் மனிதனுக்கு உள்ளது. துவரன்களும், கூட்டுக்களும் பொரியல்களும் பிரதமன்களும், குழம்புகளும் என் கனவில் வருகின்றன.
நீங்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் (இது கூட தங்கள் தீவிர வாசகர்களின் ஒரு வித சுயநலம் தான் )
மிகுந்த வணக்கங்களுடன்
பா . சரவணகுமார்
நாகர்கோவில்