தங்கத்தின் மணம் [சிறுகதை]
அன்புள்ள ஜெமோ
தங்கத்தின் மணம் என் வாழ்க்கையில் ஒரு அம்சமாக இருந்த ஒன்றைப்பற்றியது. என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நுழைவுபோல ஒரு நாகம் நுழைந்தது. அந்த நாகத்தின் வட்டத்திற்குள் இருந்தபோது வாழ்க்கையே பொன்னிறமகாத்தான் இருந்தது. என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் அடைந்த நாற்றம் எனக்கு தெரியவில்லை. ஒழுக்கம் எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அந்த காலம் ஒரு கனவு மாதிரி
அதன்பின் அந்த நாகத்திலிருந்து வெளியே வந்தேன். இன்றைக்கும் என் மனசின் அழுக்குக்குழிக்குள் அதை போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் இழந்த நாட்கள் இழந்ததுதான். இன்றைக்கு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் படித்திருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டு
இப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது, அது நாகநஞ்சகாவே இருந்தாலும்கூட இனிமையான ஒரு கனவு என்று. பொன்தான் அது என்று. அதிலிருந்து மீண்டாலும் வாழ்க்கையில் ஒரு நல்ல கனவுதேவைதான் இல்லையா
எஸ்
வணக்கம் ஜெ.
தங்கத்தின் மணம் சிறுகதையை வாசித்தேன். சிறந்த மாய யதார்த்தவாத கதை.சிறுவர்களின் உலகில் இருக்கும் தெரிந்து கொள்க வேண்டிய விழைவும் இயல்பான அச்சமும் நன்கு புலப்பட்டிருக்கிறது. நாகத்தில் நஞ்சு முத்தாகத் திரள்கிறது. மனிதனில் இருக்கும் கீழ்மைகளும் சிறுமைகளும் மெல்ல கனிந்து அருமணிகளாக மாறக்கூடும்.
அரவின் குமார்
குருவி [சிறுகதை]
அன்புள்ள ஜெ.
குருவி படித்து முடித்த கையோடு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஃபைபர் கேபிள் நெட்வொர்க் தொடர்பான பிராஜக்ட் நிர்வகித்துள்ளதால் கதை எனக்கு மிக அணுக்கமானதாய் இருந்தது.
பல அலுவலகங்களில் மாடன் பிள்ளை போன்று பிரச்சனைகள் இருப்பினும் குறிப்பிட்ட சிறப்புத் திறன்களுக்காகவே ஒரு சிலரை வைத்துக் கொண்டிருப்பதுண்டு. பிறவித்திறன், பயிற்சியால் மேலும் மெருகேரிய கைத்திறன் இருந்தும் போதுமான அங்கீகாரம் கிடைக்காதவர்களின் குரலாக மாடன் பிள்ளையின் குரல் ஒலிக்கிறது. இறுதியில் அவனது இறுமாப்பு நொறுங்கி அவன் நெகிழும் இடம் உன்னதம்.
இயற்கை,பறவைகள், விலங்குகள் மனிதனை தொடர்ச்சியாகப் பண் படுத்தியபடியே உள்ளன. இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் அமைந்த கதை.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
குருவி கதையில் அந்த குருவிக்கூடு பற்றி முன்னர் ஒருமுறை பேசும்போது சொன்னீர்கள். மலைப்பாம்பு இன்ஸிடெண்டும் சொல்லியிருக்கிறீர்கள். மலைப்பாம்பு வந்ததுமே குருவிக்கூடும் வ்ந்துவிடும் என்று நினைத்தேன்.
அந்தக்குருவிக்கூடு ஓர் அடையாளம். உண்மையிலேயே தூக்கணாம்குருவிக்கூடு போல ஒரு இயற்கை அற்புதம் வேறு கிடையாது. அது ஒரு சின்ன கயிற்றில் தொங்கிக்கிடக்கும். வலுவான காற்றில்கூட போகாது. ஓக்கிபுயலிலேயே தூக்கணாம்குருவிக்கூடு அப்படியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்
எல்லா கலையும் இயற்கையை மைம் செய்வதுதான். இயற்கையின் ஒரு அம்சமாக மனிதன் மாறிவிடுவதுதான்
ஸ்ரீனிவாஸ்